நாட்டின் ஜனநாயகத் திருவிழாவான தேர்தலை நடத்துவதிலும் அதற்கான முன், பின் செயல்பாடுகளிலும் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வராத தன்னாட்சி பெற்ற நிறுவனம் இந்தியத் தேர்தல் ஆணையம். குடியரசுத் தலைவரில் தொடங்கி குடியரசு துணைத் தலைவர்,பிரதமர், எம்.பி., எம்எல்ஏக்கள் வரையிலான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் அனைத்துக்கும் தலைமைத் தேர்தல் ஆணையமே பொறுப்பு.

election commission 616ஆனால் இத்தகைய வலிமை வாய்ந்த சுயாட்சி அமைப்பு பிரதமர் மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டது என்பதைத் தான் தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் உணர்த்தியுள்ளது.

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் மாநிலத்தில் காவல்துறை, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் கட்சி சார்பு அதிகாரிகள், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிர்வாகிகள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால் இந்த முறை அது மாதிரியான இடமாற்றம் சொல்லிக்கொள்ளும்படி நடக்கவில்லை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறை தொடங்கிய நாள் முதல் வாக்குப் பதிவு முடியும் வரையிலும் ஆளும் அதிமுகவிற்குச் சாதகமாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்தன.

பறக்கும் படைச் சோதனைக்குப் பயந்து பொது மக்களும் வணிகர்களும் சாமானியர்களும் தங்கள் பணத்தைக் கொண்டு செல்ல முடியாமல்  சிரமத்திற்குள்ளாயினர் ஆனால் ஆளும் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் காவல்துறை துணையோடு பணப்பட்டுவாடாவை கனகச்சிதமாக செய்தன. இதனைக் கடைசி வரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை.

தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கப்படும் மற்றொரு முக்கியக் குற்றச்சாட்டு, எதிர்க்கட்சியினர் வீடுகளில் மட்டும் நடத்தப்பட்ட வருமான வரித்துறைச் சோதனை. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எந்த ரெய்டையும் நடத்தவில்லை. ஆனால், காங்கிரஸ் மற்றும் கூட்டணி வைக்காத மாநிலக் கட்சிகளின் வீடுகளில் சோதனை நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. வேலூரில் துரைமுருகன் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தியதோடு தேர்தலையும் ரத்து செய்த தேர்தல் ஆணையம், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தேனியில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பண விநியோகம் செய்ததற்கு ஆதாரமாகப் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையிலும் திமுக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதன் ஒரு பக்கச்சார்பைத்தானே காட்டுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு 2 ஆயிரம் கொடுக்கிறார். கேட்டால் வாழைப்பழம் வாங்கியதற்குப் பணம் கொடுத்தேன் என்கிறார் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் . ஒரு சீப்பு வாழைப்பழம் இரண்டாயிரம் ரூபாயா? இதுதொடர்பாகத் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புகார் கொடுத்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கரூர் காங்கிரஸ் வேட்பாளரான ஜோதி மணி வேட்பு மனுத் தாக்கலில் தொடங்கி இறுதிக் கட்டப் பரப்புரை வரை தேர்தல் அதிகாரிகளோடே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றால் இந்த தேர்தல் ஆணையம் எந்த அளவு ஆளும் தரப்பிற்குச் சாதகமாக நடந்து கொண்டது என்பது புரியும்.

இறுதிக் கட்டப் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் தூத்துக்குடித் திமுகழக வேட்பாளர் கவிஞர். கனிமொழி வீட்டில் ஐடி ரெய்டு நடத்தியதால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை பொதுமக்களே கடுமையாக விமர்சித்ததைப் பார்க்க முடிந்தது.

ஆனால் மறுபக்கம் தேர்தல் பரப்புரையில் வாக்குச் சாவடிகளைக் கைபற்றுவோம் என்று அன்புமணி பேசிய வீடியோ காட்சிகளை வைத்துத் தேர்தல் ஆணையரிடம் திமுகவினர் புகார் மனு அளித்தும் அதைக் கண்டு கொள்ளவில்லை தேர்தல் ஆணையம் . ஆனால் அன்புமணி சொல்லியபடி தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொம்மிடி பகுதியில் உள்ள 10 வாக்குசாவடிகளை கைப்பற்றிய பாமகவினர் கள்ள ஓட்டுப் போட்டதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளிலும் ஆணையம் மெத்தனம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பெரும் ஆவலோடு சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவிருந்த வாக்காளர்களுக்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்கத் தவறிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடும் அங்கே வெள்ளம் போல் கூடிய மக்களைத் தடியடி நடத்திக் கலைத்த காவல்துறையின் அராஜகமும் கடும் கண்டனத்துக்குரியன. இதனாலேயே பல இடங்களில் சென்ற தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

பொதுமக்கள் 100% வாக்களிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் தேர்தல் ஆணையம் 100% அல்ல அதில் பாதி அளவாவது நேர்மையாக நடந்ததா என்பது கேள்விக்குறியே!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையச் செயல்பாடுகள் நியாயமற்றவை என்பதை உணர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ராணுவத் தளபதிகள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் மோடியின் கைப்பாவையாகச் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தேர்தல் அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறை, பாரபட்சமான நிலைப்பாடு, இயந்திரக் கோளாறு, வாக்குப்பதிவில் குளறுபடி, வாக்குச்சாவடிகளில் வசதிக் குறைவு, என முற்றிலுமாகத் தோற்றுப் போயுள்ள இந்த தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. ஆனால் ஆணையமோ மோடியின் கட்டுப்பாட்டில் அல்லவா உள்ளது.

Pin It