முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அய்.நா.வின் தலையீட்டுக்குப் பிறகும் இலங்கை அரசு தமிழர் உரிமைக்கான எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை. இப்போது என்ன நடக்கிறது என்பதை விளக்கி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை:

இந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இதுபற்றி முறையிடப் போவதாகவும் சொன்னது. அதே சர்வதேச சட்டவிதிகள் மீறப் பட்டே ஈழத்து இசைப்பிரியாக்களும் பாலசந்திரன் களும் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தன்னாட்டு வீரர்கள் பொருட்டு ஜெனீவா மன்றத்தில் முறையிடப் போவதாக சொல்லும் இந்திய அரசு, ஈழத் தமிழர் களின் பொருட்டோ குற்றமிழைத்த இலங்கையை ஆதரித்து நிற்கிறது. அபிநந்தன் வர்த்தமான்களுக்கு ஒரு நீதி? பாலசந்திரன்களுக்கு ஒரு நீதியா?

ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கூட்டத் தொடர் பிப்ரவரி 25 இல் தொடங்கியது, மார்ச் 25 வரை நடக்க இருந்தது. மார்ச் 20 அன்று இலங்கை மீதான விவாதம் நடக்க இருந்தது. 2015 அக்டோபரில் அமெரிக்கா வுடனும் பிற நாடுகளுடனும் சேர்ந்து சிறிலங்கா கூட்டாக முன்மொழிந்த தீர்மானம் (30/1) மனித உரிமை அமைப்பில் ஒருமனதாக நிறை வேறியது. அத்தீர்மானம் காமன்வெல்த் உள்ளிட்ட பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடன் கூடிய சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது. பின்னர், 2017 மார்ச் மாதம் 34/1 தீர்மானத்தில் சிறிலங்காவிற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதுவும் நிறைவடைந்துவிட்டது. 

2019 பிப்ரவரி 18ஆம் நாள் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே பின்வருமாறு பேசினார்:  “மனிதவுரிமை தொடர்பான குற்றம் புரிந்தவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க வழிவகை செய்யும்படியான உண்மை மற்றும் மீளிணக்க ஆணையம் அமைக்க சிறிலங்கா பணியாற்றி வருவதாகவும், தமிழர்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும்” என்றும் கூறினார்.

மார்ச் 6 அன்று அதிபர் சிறிசேனா, “பழைய புண்களைத் நோண்ட தாம் விரும்பவில்லை” என்று சொல்லி இத்தீர்மானத்தை ஒரே அடியாக ஊற்றி மூடும் நோக்கில் காலநீட்டிப்பைக்கூட எதிர்த்துப் பேசியுள்ளார்.

வெளியுறவு அமைச்சகம் கால நீட்புக்கான தீர்மானத்தை தாம் முன்மொழியப் போவதாகவும் கடந்த காலத்தில் அப்படி முன்மொழிந்ததன் பயனாகத்தான் வெளிநாடுகளில் அமைதி காப்புப் பணிகளில் சிறிலங்கா படையினர் ஈடுபட முடிந்தது என்று படை வீரர்களின் பாதுகாப்பைத் தாமே உறுதி படுத்தியுள்ளோம் என்று சொல்கிறது. மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரானப் போர்க்குற்றங்கள், மானுட விரோதக் குற்றங்களுக்கானப் பொறுப்புகூறலில் இருந்து படைவீரர்களைப் பாதுகாப்பதில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் சிங்களப் பேரினவாத ஆற்றல்களான இராசபக்சே முகாமுக்கும் இரணில் முகாமுக்கும் இடையே நடந்துவரும் போட்டியாக இருக்கிறது

போர்க் குற்றங்களுக்காகவோ அன்றி மானுட விரோதக் குற்றங்களுக்காகவோ படைவீரர்களில் ஒருவர்கூட புலனாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக பொறுப்பேற்க வேண்டியவர்கள் எல்லாம் பதவி, பட்டங்கள் (சரத் பொன்சேகா, மேஜர் ஜெனரல் சவேந்திர செல்வா) பரிசளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர். தமிழ்ப் பகுதிகளில் இருந்து சிங்களப் படை விலக்கிக் கொள்ளப்பட வில்லை. ஆறு தமிழர்களுக்கு ஒரு சிங்களப் படை வீரர் என்ற தகவைப்  பேணி வருகின்றது சிறிலங்கா அரசு. கண் துடைப்புக்காக காணாமற்போனோர் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது சிறிலங்கா அரசு. செம்மணிப் புதைக்குழி போல் மன்னாரிலும் ஒரு கூட்டப் புதைக்குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்படி கண்டுபிடிக்கப்படும் புதைக்குழிகளுக்கு எவரும் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. எலும்புக்கூடுகள்கூட உரிய வகையில் பாதுகாக்கப்படவும் இல்லை. உண்மை மற்றும் நீதித் திட்டக் குழுவினர் (ITJP) அளித்த அறிக்கை தமிழ்ப் பெண்களைக் கொண்டு சிறிலங்காப் படை நடத்திய “வல்லுறவு முகாம்கள்” பற்றிய தரவுகளை 2017 பிப்ரவரி வெளியிட்டது. நாட்கணக்கில், மாதக்கணக்கில் தமிழ் மக்கள் நடத்தியப் போராட்டங்களின் அழுத்தத்தால் சிலவிடங்களில் பறிக்கப்பட்ட நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன.  

ஏற்கெனவே வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் உருண்டோடிவிட்டது. பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதில் ஓரங்குலம்கூட முன்னேறாத நிலையில் மீண்டுமொரு ஈராண்டு கால அவகாசம் என்பது எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. இங்கு சிக்கல் காலம் போதவில்லை என்பதல்ல, நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிடம் அரசியல் மனத்திட்பம் இல்லை என்பதே.  எனவே, இலங்கைக்கு கால நீட்டிப்பு தருவதென்பது 2009 க்குப் பின்பு இலங்கை செய்துவரும் கட்டமைப்பு ரீதியான தமிழின அழிப்புக்குத் துணை செய்வதே,

இந்திய அரசின் தொடர் துரோகம்

1) 2009 க்கு முன்பு இன அழிப்புப் போருக்கு துணைநின்றது இந்திய அரசு. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு அடுத்தபடியாக விரும்பிய முதல் அரசு இந்திய அரசே

2) 2009 இல் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிய சுவிட்சர்லாந்து முன்மொழிவை முடக்கியதில் முதன்மைப் பங்கு வகித்தது இந்தியா. இலங்கையைப் பாராட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அகமகிழ்ந்தது.

3) 2012 இல் கற்றப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பில் வேண்டுகோள்விடப்பட்ட போது இலங்கை அரசின் அனுமதியுடன் மட்டுமே ஐ.நா. அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டுமென அதில் இலங்கைக்கு ஆதரவாக மாற்றம் கொண்டு வந்தது இந்தியா.

4) 2013 இல் பன்னாட்டு மனித உரிமை சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசே தற்சார்புள்ள நம்பகமான புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது ஐ.நா. அதிகாரிகள் இலங்கைக்கு செல்ல கட்டுப்பாடற்ற அனுமதி, இலங்கை அரசின் மீதான அதிருப்தி வாசகங்கள் உள்ளிட்டவைகளை தீர்மானத்தில் இருந்து நீக்க வைத்தது இந்தியா. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பு செப்டம்பர் 2013 இல் இலங்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை மார்ச் 2014 என மாற்றியது இந்தியா.

5) 2014 இல் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீது ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணைய அலுவலகத் தலைமையில் ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை மாற்றி உள்நாட்டு விசாரணை என திருத்தம் கொண்டுவர முனைந்தது இந்தியா. இறுதியில் பன்னாட்டுப் புலனாய்வு கோரிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

6)  2015 அக்டோபரில் 30/1 தீர்மானத்தையும் 2017 மார்ச் 34/1 தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்து வாக்களித்தது.

2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மாணவர் போராட்டத்தின் எழுச்சியின் பயனாய் பன்னாட்டுப் புலனாய்வுக் கோரியும் அரசியல் தீர்வுக்கு ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய அரசு எள்முனையளவும் மதிக்கவில்லை. இதில் தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதித்து வருகிறது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியின்றி அது சாத்தியமில்லை. அத்தகைய எழுச்சிதான் பதவி அரசியல் கட்சிகளை நீதிக்கான நிலையெடுப்பில் நேர்க்கோட்டில் கொண்டு வரும். போராட்ட நெருப்பு மட்டுமே இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும் என்பதைக் கடந்தகால பட்டறிவும் சமகால கையறு நிலையும் நமக்கு காட்டி நிற்கிறது.

இப்போது கனடா, ஜெர்மனி, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகளடங்கிய சிறிலங்கா தொடர்பான முதன்மைக் குழு சிறிலங்காவுக்கு மீண்டுமொருமுறை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பிப்ரவரி 13ஆம் நாள் நிலையெடுத்து அறிவித்துள்ளது. மார்ச் 1 அன்று மேலும் ஈராண்டு காலம் நீட்டிப்புக் கொடுக்கும் பிரித்தானியாவின் தீர்மான வரைவு வெளிவந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையும் கால அவகாசம் தருவதற்கு பரிந்துரைத்துள்ளது. இத்தகைய கால நீட்டிப்பை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஏற்கவில்லை.

Pin It