வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மைப் பற்றி தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பப்பட்டு வந்தாலும் தேர்தல் ஆணையம் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் டிஜிட்டல் இந்தியா என்பதை உலகிற்கு காட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தியே தேர்தலை ஏறக்குறைய நடத்தி முடித்திருக்கின்றது.
ஆனால் பெரும் நோய்த் தொற்று காலத்தில் மக்களை பெருந்திரளாக கூட்டி தேர்தல் பரப்புரையை நடத்த அனுமதித்ததன் மூலம் உலகில் மிக மோசமான பிற்போக்கு சிந்தனை கொண்ட அமைப்பாக இந்திய தேர்தல் ஆணையம் மாறி இருக்கின்றது.
ஜனநாயகத்தை காப்பாற்றுகின்றேன் என்ற பெயரில் கொத்துக் கொத்தாக மக்களுக்கு கொரோனோ நோய்த் தொற்றை பரப்பி விட்டிருக்கின்றது. தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதையே தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் எந்த தைரியத்தில் அரசியல் கட்சிகள் கூட்டும் கூட்டத்தால் கொரோனோ பரவாது என நம்பி அனுமதி கொடுத்தது என்பது மில்லியன் டாலர் கேள்வி.
உண்மையில் இந்த தேர்தல்கள் அதிகார வர்க்கத்தின் பசியைத் தீர்க்க மட்டுமே நடத்தப் படுகின்றதே ஒழிய சாமானிய மக்களின் பசியை தீர்க்க அல்ல. நாம் நம்பிக் கொண்டிருப்பது போல மக்களின் நன்மையின் பொருட்டு இங்கே எந்த அரசியல் கட்சியும் கட்சி நடத்திக் கொண்டிருக்கவில்லை. அப்படி இருந்தால் ஒரு கட்சியாவது மக்களை கூட்டி பரப்புரை செய்வதற்குப் பதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திப் பரப்புரை செய்ய மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கும்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரை செய்ய வரும்போது லாரிகளிலும், மினி ஆட்டோக்களிலும், பஸ்களிலும் தலைக்கு நூறு இருநூறு என பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்தும், சிறு நகரங்களில் இருந்தும் பெருவழிச்சாலையின் நெடுக குவிக்கப் பட்டனர். எந்தவித சமூக இடைவெளியோ, முகக் கவசங்களோ இன்றி கால் கடுக்க பல நேரம் காத்திருந்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக கையாட்டிச் சென்றார்கள் மக்கள்.
பரப்புரை செய்ய வந்த எந்த தலைவனுக்கும் தனது தொண்டன் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் தனக்காகப் பல மணி நேரம் சாலைகளில் நிற்பதைப் பற்றியோ இதன் மூலம் நோய்த் தொற்றுப் பரவும் என்பதைப் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லை. பரப்புரை செய்ய வந்த மாபெரும் தலைவர்களில் இருந்து அவர்களின் அடிப்பொடிகள் வரை ஒரு மகாராஜாவைப் போலவே வலம் வந்தார்கள்.
மகாராஜாக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அப்போலா இருக்க சாமானிய மக்கள் இன்று அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல், தடுப்பூசி இல்லாமல், ஆச்சிஜன் இல்லாமல் மரணத்தை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் தங்களின் சுய நலத்திற்காக இந்தியா முழுவதும் கொரோனோ நோய்ப் பரவலை விரைவுப் படுத்தியது ஒருபுறம் இருக்க மத்திய பாஜக அரசு தனியார் மருந்து தயாரிப்புத் தொழிற் சாலைகள் கொள்ளை லாபம் ஈட்ட இந்த கொரோனோ நோய்த் தொற்றைப் பயன்படுத்தி வருகின்றது.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பலர் உயிரிழந்ததோடு ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றார்கள்.
டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை, குரு தேஜ்பகதூர் மருத்துவமனை லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயன் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள ஆக்சிஜன் தீரும் நிலையில் உள்ளது என ஊரறிய புலம்பிய பின்னால்தான் கடைசிக் கட்டத்தில் அந்த மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப் பட்டன.
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, பிணவறைகள் நிரம்பி வழிகின்றன, சுடுகாடுகள் நிரம்பி வழிகின்றன. எரிப்பதற்கு இடமில்லாமல் சாலை ஓரங்களையே சுடுகாடாக மாற்றிப் பிணங்கள் எரிக்கப் படுகின்றன.
இந்தியாவின் தேசிய கீதமே மரண ஓலமாக மாறிக் கொண்டு இருக்கின்றது. இந்தியா மூச்சுவிட திணறிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் சங்கிக் கும்பல் வழக்கம் போல பிணவாடையை முகர்ந்து கிளர்ச்சி அடைந்து மேற்கு வங்கத்தில் நடக்கும் அடுத்த கட்ட தேர்தலுக்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றது.
கொரோனோ நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள மூன்று கட்டத் தோ்தல்களையும் சோ்த்து ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வைத்த கோரிக்கையை தோ்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
மேற்கு வங்கத்தை கைப்பற்ற துடிக்கும் பிஜேபிக்காக சில ஆயிரம் பேர் இறந்தால் அதனால் ஒன்றும் பாவமில்லை என்ற எண்ணத்திலேயே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகின்றது.
உள்நாட்டில் மக்கள் கொரோனோவால் செத்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்தியாவில் இருந்து கொரோனோ நோயாளிகளுக்குத் தரப்படும் ரெம்டெசிவிர் மருந்தும், ஆக்சிஜனும், கொரோனோ தடுப்பு மருந்துகளும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ரெம்டெசிவிர் மருந்து இந்தியாவில் பற்றாக்குறை ஏற்பட்டு கள்ளச் சந்தையில் பல மடங்கு விலை வைத்து விற்று மருந்து விற்பனை மாஃபியாக்கள் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் நிலை வந்த பின்னரே மத்திய அரசு அதன் ஏற்றுமதிக்குத் தடைவிதித்தது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்த மோடி அரசு 3 முதல் 4 கோடி இந்தியர்களுக்கே தடுப்பூசி போடப் பட்டது என்பதும், 2019-2020 நிதி ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 4,514 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆக்சிஜனின் அளவை 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரை 9,301 மெட்ரிக் டன்னாக உயர்த்தியதும் மோடி தன் சொந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அக்கறை எப்படிப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இந்தியா மிக மோசமான பேரழிவுக் காலத்தில் நுழைந்திருக்கின்றது. அந்த பேரழிவின் வாயிற்படிக்கு இந்திய மக்களை வலுக் கட்டாயமாக தள்ளிய கும்பல்கள் தங்களை ஜனநாயகத்தை காக்க வந்த கடவுள்களாக பிரகடனம் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் இருக்கும் மிக மோசமான, மக்களின் நலனில் துளியும் அக்கறையற்ற பிற்போக்கு, கார்ப்ரேட் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடு மட்டுமே இன்று இந்த கொரோனோ இரண்டாவது அலையை தோற்றுவிக்க மூல காரணமாகும்.
இன்று ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால் ஊரடங்கை கடுமையாக்குவோம் என மக்களை மிரட்டும் அரசும், சாலையில் வருவோர் போவோரை எல்லாம் முகக் கவசம் போடவில்லை என்று அடித்து உதைத்து பணம் பறிக்கும் அரசாங்கமும் தேர்தல் முடியும் வரை என்ன செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
சில நூறு முதல் ஆயிரம் வரை கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிய உத்தமர்கள் பாதுகாப்பாக ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வாங்கிய பணத்தை சாராயக் கடையில் கொடுத்து விட்டு வரப் போகும் கேடு காலத்தை நினைத்து மக்கள் அச்சத்தோடு தங்களின் வாழ்வை நகர்த்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
மக்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த கேடு காலம் மிகத் தொலைவில் இல்லை என்பதும் அது மோடி வடிவிலும் இன்னும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மூலமும் மிக அருகில் இருக்கின்றது என்பது தான் கசப்பான உண்மையாக இருக்கின்றது.
- செ.கார்கி