2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக - கொத்தடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரைப் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளத்தில் தேர்தல் விளக்கக் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையமோ இந்தத் தொகுதியில் போட்டியிடும் 'திமுக கூட்டணி வேட்பாளரிடம் அனுமதிக் கடிதம் பெற்றுத் தரவில்லை என்றும், இதனால் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கை பராமரிக்க இயலாது என்பதாலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளது.

modi on stageஒவ்வொரு தேர்தலிலும் யாருக்கு வாக்களிக்கலாம்? யாருக்கு வாக்களிக்கக் கூடாது? வாக்களிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்? என்று வாக்களிக்கும் மக்களிடம் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இது ஒரு அடிப்படை சனநாயக உரிமை.

மக்களிடம் இத்தகைய விழிப்புணர்வை செய்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை. 100 சதவீத வாக்குப் பதிவு, நோட்டா, வாக்கு விற்பனை இவை குறித்தெல்லாம் தேர்தல் ஆணையம் உட்பட பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்(NGO's), ஊடகங்களும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

அதைப் போலவே, மக்கள் நலனை முன்னிருத்தி பாசிச பாஜக - கொத்தடிமை அதிமுகவின் பிடியிலிருந்து நாட்டையும் குறைந்தபட்ச சனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற புஇமுவின் இந்தத் தேர்தல் பரப்புரைக்கு எதற்காக வேட்பாளரிடம் அனுமதி வாங்க வேண்டும்?

சாதாரண மக்கள் கூட தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம், நண்பர்களிடம், உறவினர்களிடம் யாருக்கு ஓட்டு போடலாம் என்பது குறித்துப் பேசுகிறார்கள். அதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டுமா?

ஆர்எஸ்எஸ் கூட 'தேசிய வாக்காளர் பேரவை' என்ற பெயரிலும், இன்னும் பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் பாஜகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறது. இதற்கெல்லாம் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கியுள்ளார்களா?

தேர்தல் ஆணையத்தின் விதிமுறையிலேயே இல்லாத ஒன்றை நம் மீது திணிப்பதன் மூலம் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மக்கள் நலனையும் நாட்டு நலனையும் முன்னிறுத்தி செயல்படும் சிறு சிறு அமைப்புகள் - இயக்கங்களின் குரல்வளையை நெறிப்பதன் மூலம் பாசிச பாஜகவை பாதுகாக்க முனைகின்றன ஆளும் அதிகார அமைப்புகள். இதில் தேர்தல் ஆணையமும் விதிவிலக்கல்ல. நேர்மையாக செயல்படுவதாக பீற்றிக் கொள்ளும் தேர்தல் ஆணையம் அதன் விதிமுறையிலேயே இல்லாத ஒன்றை நம் மீது திணிப்பதன் மூலம் பாஜக கூட்டணிக்கு எதிரான கருத்துக்கள் மக்களிடம் சென்றுவிடாமல் தடுக்கப் பார்க்கிறது.

பாஜகவினரின் ஆதிக்கம் அதிகம் உள்ள கோவை, காங்கேயம் பகுதிகளில் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி தெருமுனைக் கூட்டங்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். கோவையில் 'மத்திய அரசையும், மாநில அரசையும் கடுமையாகத் தாக்கிப் பேச வாய்ப்புள்ளதாக' அனுமதி மறுப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதென்ன 'கடுமையாக தாக்கிப் பேசுவது?' அப்படியெனில் 'மென்மையாக தாக்கிப் பேசுவது எப்படி' என்று தேர்தல் ஆணையம் தான் அரசியல் கட்சிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

காங்கேயத்தில் 'புஇமு மீது ஏற்கனவே பாஜகவினர் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால்' அனுமதியளிக்க மறுத்துள்ளனர். இதற்கு என்ன பொருள்? தேர்தல் ஆணையத்தை பாஜகவினர்தான் வழிநடத்துகிறார்கள் என்பதுதான்.

சமீபத்தில் பாரதி புத்தகாலயம் சார்பாக மோடியின் ரபேல் ஊழல் பற்றிய நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அனுமதி மறுத்ததோடு நூல்களையும் பறிமுதல் செய்தது. ரபேல் ஊழலால் ஊரே நாறிக் கொண்டிருக்கும் வேளையில் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயலுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததோடு, 4000 பேர் படிக்க வேண்டிய இந்த நூலை 4 லட்சம் பேர் படிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுவிட்டது. இதனால் என்ன செய்வது என்று விழிபிதுங்கிய தேர்தல் ஆணையம் நாங்கள் இந்த நூலுக்குத் தடைவிதிக்கவில்லை என அந்தர் பல்டி அடித்து நூல்களையும் திரும்ப ஒப்படைத்துவிட்டது.

இப்படி தேர்தல் ஆணையம் மோடிக்கு பிரச்சார பீரங்கியாக செயல்படுவதற்கு ஆயிரம் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

(இவர்களின் இந்த அயோக்கியத்தனத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் 66 மூத்த உயர் அதிகாரிகள் குடியரசுத் தலைவரிடம் புகார் தெரிவித்து தேர்தல் ஆணையத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டனர்.)

மொத்தத்தில் ஜனநாயகம் என்றால் அது மோடிநாயகம் தான். பேசுவது என்றால் மோடியை ஆதரித்துதான் பேச வேண்டும். சிந்திப்பது என்றால் மோடியைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும். கூட்டம் நடத்தினால் மோடியை ஆதரித்துதான் கூட்டம் நடத்த வேண்டும். இந்த மோடிநாயகத்தைதான் தேர்தல் ஆணையம் சனநாயகம் என்ற பெயரில் செயல்படுத்துகிறது.

இது ஜனநாயகம் இல்லை பாசிசம் என்று சொல்கிறோம் நாம். குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைக்கூட மக்களிடமிருந்து பறித்துவிட வேண்டும்; அதுதான் பாசிஸ்டுகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக இருந்து கொண்டு அவர்களின் உத்தரவுகளை வேகமாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் எனக் கருதுகிறார்கள்.

பாசிஸ்டுகளின் இந்நோக்கத்தை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது. மக்களின் துணைகொண்டு இதனை முறியடித்தே ஆக வேண்டும்.

- புரட்சிகர இளைஞர் முன்னணி

Pin It