மோடியின் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பனிய சர்வாதிகாரத்தையே கட்டவிழ்த்துவிட்டது. மீண்டும் வேதகாலம் திரும்பி விட்டதாகவே பார்ப்பனியம் பூரித்தது. தமிழ்நாட்டில் பெரியார் இயக்கமும் - அதன் வழி வந்த ‘திராவிட அரசியலும்’ உருவாக்கிய உரிமைகள் அனைத்தும் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. தமிழ்நாடா? வடநாடா? என்று வியக்க வைக்கும் நிலைக்கு அனைத்து துறைகளிலும் வடநாட்டார் குவிக்கப்பட்டனர். ஆளுநர் அதிகாரம் பெற்றவர்களாக்கப்பட்டனர். பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசக் கூடிய துணிவைப் பார்ப்பனர்கள் பெற்றனர்.
நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, வாழ்வுரிமையைக் குலைக்கும் நச்சுத் திட்டங்கள் திணிப்பு என்று அடுக்கடுக்கான படையெடுப்புகள் நடந்தன. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசின் அதிகாரத்தை பா.ஜ.க. தனது பொம்மலாட்ட ‘வலையத்துக்குள்’ கொண்டு வந்தது. ஆளும் கட்சியை உடைப்பது; இணைப்பது; மிரட்டுவது என அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தியது.
கருத்துரிமைகள் நசுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் சமூக செயல்பாட்டாளர்கள் மக்கள் பிரச்சினைக்காக மதவெறி சக்திகளை எதிர்த்துப் போராடிய இயக்கங்கள் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டன. தேசியப் பாதுகாப்புச் சட்டங்களும் குண்டர் சட்டங்களும் பாய்ந்தன. தூத்துக்குடியில் நச்சு கக்கும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று போராடிய அப்பாவி மக்கள், காவல்துறையின் துப்பாக்கிச் சூடு என்ற பெயரில் குறி வைத்துக் கொல்லப்பட்டனர்.
எட்டு வழிச் சாலைக்காக நிலத்தைப் பறிகொடுக்க மறுத்த மக்களும் நெடுவாசல், கதிராமங்கலத்தில் நச்சுத் திட்டங்களை எதிர்த்துப் போராடிய மக்களும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். பெரியார் சிலை, காந்தி சிலைக்கு மாலை போடுவதுகூட குற்றம் என்று அரசு வழக்கு தொடர்ந்தது. இராமரதம் என்ற பெயரில் அரசியல் யாத்திரைக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளித்தது. இப்படி ஏராளமாகப் பட்டியலிட முடியும்.
இந்த அடக்குமுறைகள் உரிமை பறிப்புகளுக்கு நீதி கேட்கும் ஒரு வாய்ப்பே இந்தத் தேர்தல் களம். கடந்த அய்ந்து ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ச்சியாக முன்னெடுத்த பரப்புரை இயக்கங்களின் தொடர்ச்சியாகவே இந்தத் தேர்தல் களமும் வந்து சேர்ந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் ஈடுபடாத மக்கள் இயக்கங்கள் சந்தித்த அடக்குமுறைகளுக்கும் கொடுத்த விலைக்கும் நீதி கேட்கும் நேரம் இது.
பா.ஜ.க. ஆட்சியையும் அதன் சுட்டுவிரல் அசைவுக்கு ஆடிக் கொண்டிருக்கும் தமிழக இறையாண்மையை அடகு வைத்துவிட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கும் மக்கள் சக்தியின் வலிமையை வாக்குகள் வழியாக உணர்த்திக் காட்ட வேண்டிய தருணம் இது!
அந்தப் பார்வையில் இந்த ‘நிமிர்வோம்’ இதழை தேர்தல் சிறப்பிதழாகக் கொண்டு வந்திருக்கிறோம்! வாசகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்!