உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இந்தியாவில் மக்களாட்சியின் மாண்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கப் போகும் இரண்டு திட்டங்களை அமல்படுத்தும் முனைப்பில் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. “ஒரே நாடு ஒரே தேர்தல்” மற்றும் “மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மாற்றியமைப்பு” என்ற இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டால் ஒற்றை ஆட்சி முறையை நோக்கி இந்தியா நகர்த்தப்படும். அதற்காகவே பாசிச பா.ஜ.க இந்த திட்டங்களைச் செயல்படுத்தத் துடிக்கிறது. இதற்குத் தக்கதொரு எதிர்வினையாக நாட்டிலேயே முதன்முறையாகத் தமிழ்நாடு சட்டமன்றம் இந்த திட்டங்களை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறது.

பிரதமர் மோடி இரண்டாம் முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்றவுடனேயே “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க 19.06.2019 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட 41 கட்சிகளில், 19 கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அக்கூட்டத்தைப் புறக்கணித்த கட்சிகளின் எண்ணிக்கையை வைத்தே இத்திட்டத்திற்கான எதிர்ப்பை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. அப்போதும் தி.மு.க இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தது. ஆயினும் பா.ஜ.க அரசு இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்தது.mk stalin in assembly 720“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது புதிய திட்டமன்று. 1952, 1957, 1962 மற்றும் 1967 பொதுத் தேர்தல்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தான் நடைபெற்றது. அதன் பின்னர் சில மாநிலங்களில் ஆட்சிக் காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப் பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த முடியவில்லை. அதேபோல் ஆறாவது, ஏழாவது, ஒன்பதாவது, பதினோறாவது, பன்னிரென்டாவது மற்றும் பதின்மூன்றாவது மக்களவை முன்கூட்டியே கலைக்கப் பட்டதால் தொடர்ந்து ஒரே நேரத்தில் நாடாளு மன்றத்திற்கும், சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடத்த முடியாமல் போனது. ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டி இருந்தால் மாநிலங்களில் ஆட்சியை கலைக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு செய்வது ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காகக் கலைக்கப்படலாம் என்று எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு விரோதமானதாகும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1950 பிரிவுகள் 83, 85, 172, 174 மற்றும் 356 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஆகியவை திருத்தப்பட வேண்டும். அதற்கான அவசியம் இப்போது எழவில்லை.

அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமை அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல் நடைபெறும். அதே ஆண்டில் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதிக்குள்ளான எதாவது ஒரு நாளில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைத் தேர்தல் நடைபெறும். பொருளாதாரத்தில் பலம் பெற்ற அமெரிக்காவில் கூட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இயவில்லை என்பதுதான் யதார்த்தம். அப்படி இருக்கையில் தேர்தல் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை என்று கூறுவது உண்மையல்ல. 610 கட்சிகளின் சார்பில் 10,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட 2019 நாடாளுமன்ற தேர்தல் செலவு ரூ. 60,000 கோடி. நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தலை நடத்த இதைவிடக் கூடுதல் செலவாகிறது. எனவே இரண்டையும் இணைத்து நடத்தினால் செலவைக் குறைக்கலாம் என்பதை ஆராய்ந்தால் அவ்வாறு மிச்சப்படுத்த முடியாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் நாடெங்கும் உள்ள பத்து லட்சம் வாக்குச் சாவடிகளில் அரசுப் பணியாளர்கள், காவலர்கள், துணை இராணுவப் படையினர், பிற பணியாளர்கள் என ஏறத்தாழ ஒரு கோடி பேரை ஒரே நேரத்தில் தேர்தல் பணியாற்ற வைக்க வேண்டிய சூழலில் செலவு கூடுமே தவிர குறையாது. மொத்தத்தில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது அதிபர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான முதற்படியாகவே அமையும்.

“மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மாற்றியமைப்பு” என்பது, பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப் படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தண்டனையாகவே அமையும். குறிப்பாக 1971 காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் பீகார் மக்கள் தொகை ஒரே அளவில் இருந்ததால் ஏறக்குறைய சமபங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகையை விட பீகார் மக்கள்தொகை ஒன்றரை மடங்கு அதிகம் என்பதால் கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு கிடைப்பார்கள். நாடாளு மன்றத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 84 ஆவது திருத்தத்தின் படி 2026 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மக்களாட்சியைக் காத்திட தெற்கில் இருந்து எழுந்திருக்கும் இந்த உரிமைக் குரல் ஒன்றியம் முழுவதிலும் எதிரொலிக்கட்டும். இந்தியாவின் ஜனநாயக நடைமுறைக்கு எதிராக இது போன்ற திட்டங்களை முன்னெடுக்கும் பாசிச பா.ஜ.க மற்றும் அதன் நிழல் கூட்டாளியான அ.இ.அ.தி.மு.க வை எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தி மக்களாட்சியின் மாண்பைக் காப்போம்.

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It