தமிழ்நாட்டில் ஏப்ரல் 19, 2024 அன்று அடுத்த ஒன்றிய அரசை யார் கைப்பற்றுவது என்பதைத் தீர்மானிக்கும் போட்டி நடைபெறவுள்ளது. ஜூன் 4 இல் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடும். அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கைகளும் வியூகங்களுமே முடிவுகளைத் தீர்மானிக்கும் துப்பாக்கித் தோட்டாக்கள். தேசிய அளவில் தேர்தல் நடந்தாலும் மாநிலக் கட்சிகளே முடிவுகளைத் தீர்மானிப்பதில் முதன்மையானப் பங்கு வகிக்கின்றன.

இரு தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டுச் சேரவே தீவிர முயற்சிகள் எடுக்கின்றன. மாநிலக் கட்சிகளோ தங்கள் கட்சி மற்றும் தலைமையின் நலனை முன் வைத்தே தேசியக் கூட்டணிகளை நோக்கிச் செல்கின்றன. இந்தத் தேர்தல் களக் காட்சிகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இதில் ஒவ்வொரு கட்சிகளும் தனக்கேயுரிய தன்மைகளோடும் வியூகங்களோடும் தேர்தல் போரில் குதித்துள்ளன.rahul mamta sonia and malligarjunaபாரதிய ஜனதா கட்சி

பாஜக எப்போதும் தந்திரங்களையே தன் அரசியல் வியூகங்களாகக் கொண்டுள்ளது. மக்கள் பிரச்சினைகள் அதற்கு இரண்டாம் பட்சமே. பாஜகவின் அரசியல் தந்திரங்களைப் பின்வருமாறு தொகுத்துக் காணலாம்.

1) மாநிலக் கட்சிகளைப் பிளவு படுத்துவது, அக் கட்சிகளுக்குள் இருக்கும் உள் முரண்பாடுகளை சரியாகப் பயன்படுத்தி அதன் ஓரு பிரிவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது 

2) சாதி, மதம், இனம், பிரதேசம் போன்ற சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகளை கூர்மைப்படுத்தி பிளவுகளைப் பெரிதாக்கி அதில் ஒரு பிரிவினரின் வாக்குகளைப் பெறுவது.

3) சாதி, மத, இனம் போன்ற ஏதேனும் அடிப்படையில் பெயருக்கு சிறு கட்சி நடத்தும் நபர்களை ஒன்று சேர்த்து தன் பக்கம் கொண்டு வருவது.

4). வாய்ப்பு உள்ள இடங்களில் சமூக முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்திக் கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெறுவது.

5) கடவுள் மதம் புனிதம் போன்ற போர்வையில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது, இதன் அடிப்படையில் சமூகங்களுக்கிடையிலான வெறுப்பை உருவாக்குவது.

6) அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளைப் பணிய வைப்பது.

பாஜக எதிர்ப்பு அரசியல்

பாஜக எதிர்ப்பு அரசியல் இன்று இந்தியாவின் முதன்மையான அரசியலாக உள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஜனநாயக அமைப்புகளும் சமூக சிந்தனை

யாளர்களும் மிகக் கடுமையாக இதனை எதிர்த்து வருகின்றனர். பாஜக எதிர்ப்பு அரசியல் அமைப்புக்கள் மற்றும் கட்சிகள் கீழ்க்கண்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி வருகின்றனர் 

1. மாநில உரிமைகளைப் பறிப்பது மட்டுமின்றி காஷ்மீர் மாநில சிறப்பு நிலையை ஒழித்துக் கட்டியது. ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சியினர் ஆளும் மாநில அரசை செயல்பட விடாமல் முட்டுக் கட்டை போடுதல்.

2. ஒரே நாடு ஒரே தேர்தல்,ஒன்றிய அரசுத் திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது, போன்ற நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைப்பது.

3. நீட் தேர்வு மற்றும் புதியக் கல்விக்கொள்கை போன்றவை மூலம் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் வளர்ச்சியைத் தடுத்தல்.

4. பொதுத் துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பது, பெரும் பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி மற்றும் வரித் தள்ளுபடி அளித்தல். மேலும் பெரும் பண முதலைகள் பெருந்தொகையான கடனை வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோட உதவுதல்.

5. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சுங்கச்சாவடி முதலியவற்றின் விலை மற்றும் கட்டணங்களை அடிக்கடி உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழி வகுத்தல்.

6. குற்றவியல் சட்டங்களை மாற்றி அவற்றுக்கு இந்தி பெயர் வைத்தது. தொழிலாளர் சட்டங்களை திருத்தி நாசப்படுத்தியது மட்டுமின்றி குடியுரிமை சட்டத்தை தனது அரசியல் லாபங்களுக்காக மாற்றியது.

இவ்வாறு மக்கள் விரோத மனப்பான்மையுடன் இந்தியாவின் பன்முகத்தன்மை, சமூகநீதி, சமத்துவம் முதலிய அடிப்படை ஜனநாயகக் கொள்கைகளை பாஜக அரசு அழித்து வருவதால் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பரவலாக உருவானது.

இந்தியா கூட்டணி

காங்கிரஸ் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இக் கூட்டணி பலமான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. எனினும் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் சற்று சல சலப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டணிக்கு முழுமையான ஆதரவைத் தரவில்லை. ஏனெனில் மேற்கு வங்கத்தில் இவருக்கு போட்டி காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளே. இந்தக் கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளவையே.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. மேலும் பல்வேறு உள் முரண்பாடுகளைக் கொண்டுள்ளக் காரணத்தால் இந்தியா கூட்டணி தன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. பாஜக இதனை ஒரு பவவீனமாக சுட்டிக்காட்டி பரப்புரை செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் தேர்தல் களம்

தமிழ் நாட்டில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக ஆதரவு - பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமைய வேண்டிய போட்டியானது பல உள் முரண்களின் குழப்ப அரசியலாக மாறியுள்ளது.

இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் நீண்ட கால அரசியல் ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளன. பாஜகவை வீழ்த்துவது, மாநில உரிமை மற்றும் சமூகநீதி ஆகிய அடிப்படைகளை முன்வைத்து இக் கூட்டணி ஆக்கபூர்வமாக செயல்பட்டு வருகிறது.

அதேவேளை பாஜகவால் ஊட்டி வளர்க்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பெரும்பாலும் திமுகவின் கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டது. எனினும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பாஜக சொன்னதையெல்லாம் செய்தது. மேலும் , அகில இந்திய அளவில் நடைபெறும் இத் தேர்தலில் ஒன்றிய அரசு அமைக்க யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை வெளிப்படையாகக் கூறவில்லை. வெற்றி பெற்றால் பாஜகவுக்கே அதிமுக ஆதரவளிக்கும் என்கிற கருத்தை முழுமையாக மறுத்துவிட முடியாது.

இக் கூட்டணியில் உள்ள சிறு சிறு கட்சிகளுக்கு கொள்கை எதுவும் இல்லை. அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தலைமையின் சொந்த நலனுக்காகப் பேசி வருபவை. இவை ஒரு நகராட்சி கவுன்சிலர் இடத்தைக் கூடத் தனித்து நின்று பெற முடியாதவை. எனினும் மிகவும் பலவீனமான தலைமையைக் கொண்டுள்ள நிலையில் அதிமுக பல கட்சிகளுடன் பலமான கூட்டணி அமைத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்ட இச் சிறு கட்சிகளை இணைத்துக் கொண்டுள்ளது.

பாஜக கூட்டணியானது தமிழ்நாட்டில் ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தே உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்தால் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்பதால் தனது தலைமையில் ஒரு கூட்டணியை பாஜக உருவாக்கியுள்ளது. இக் கூட்டணியில் வாக்கு வங்கி உள்ள ஒரே கட்சி பாமக மட்டுமே. பாஜக உள்ளிட்ட மற்றக் கட்சிகளுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இல்லை.

இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தே பாமக இக் கூட்டணியில் இணைந்துள்ளது. அடுத்து பாஜக ஆட்சி அமைந்தால் டாக்டர் அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினராக்கி ஒன்றிய அமைச்சர் பதவி பெற முயற்சி செய்யலாம் என்பதே பாமகவின் ஒரே நோக்கம்.

ஓ. பன்னீர்செல்வத்தை ஆரம்பம் முதலே பலவீனப்படுத்தி எடப்பாடியை வளர்த்தது பாஜக. ஆனால் இப்போது எடப்பாடி பாஜகவுடன் இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியின் தலைவராக இருக்கிறார். ஆனால் ஓ. பன்னீர்செல்வமோ பாஜகவிடம் ஒரே ஒரு இடம் வாங்கியிருக்கிறார். இது தற்செயல் நிகழ்வு அல்ல. இது பாஜகவின் அரசியல் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியே.

பாஜக தமிழ்நாட்டில் ஒரு பிரமாண்டமான அரசியல் நடத்துவது போன்ற ஒரு நாடகத்தை நீண்ட காலமாகவே நடத்தி வருகிறது.

திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலினுக்கு எதிராக ஒரு வலிமையான அரசியல் தலைமை இல்லாத நிலையை மிகத் தந்திரமாக பாஜக பயன்படுத்தி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மூலம் சீமான் ஓரு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் காரணமாக இன்று தமிழ் நாடு பெற்றுள்ள நிலையைக் கண்டு வெறுப்படைந்துள்ள சக்திகளால் நாம் தமிழர் கட்சி வளர்கிறது. தொடக்கத்தில் ஈழம் இதன் களமாக இருந்தது. எதிர்காலத்தில் திராவிட இயக்கங்களுக்கு எதிரான ஒரு சக்தியாக உருவெடுக்கும் நோக்குடன் இது பயணித்துக் கொண்டுள்ளது.

இலக்கங்களே இலக்கு 

நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ அந்த இலக்கங்களே அனைவரின் இலக்கு என்றால் அது மிகையாகாது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியும் இந்தியா கூட்டணியும் சம பலத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது. இந்தி பேசும் வட மாநிலங்களில் இன்னும் பாஜகவுக்கு ஆதரவு இருப்பது போன்ற தோற்றமே உள்ளது. எனினும் தெற்கு, மேற்கு, கிழக்கு என்று பிற பகுதிகளில் பாஜகவின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது. தென் மாநிலங்களில் பாஜக படு தோல்வியை சந்திக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம்.

அதே வேளை இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சிகளில் சில உறுதியாக இல்லை. ஒரு பொது நோக்கில் ஒன்றிணையும் போது சில சொந்த நலன்களை விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்தப் போக்கை காண முடியவில்லை.

மம்தா பானர்ஜி மற்றும் கெஜரிவால் போன்றவர்கள் காங்கிரசின் தலைமையை முழுமையாக ஏற்கவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு புதிய அரசியல் சூழலுக்கு மாறத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து மத்தியில் ஒரு பலமான சக்தியாக வரும் நோக்கில் தமிழ் நாட்டுக்கு வெளியே பல மாநிலங்களில் போட்டியிடுகிறது. பிற மாநிலங்களில் உள்ள தலித் மக்களை இணைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தக் காய் நகர்த்தப்படுகிறது.

நிறைவாக...

இந்தியா ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை எதிர் நோக்கி நிற்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலமே அது சாத்தியமாகும். மிக மோசமான, அதேவேளை ஜனநாயக விரோதமான பாஜக அரசின் கடந்த பத்தாண்டு கால ஆட்சிக்கு ஒரு முடிவை மக்கள் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

- வழக்கறிஞர் தமிழகன்

Pin It