2006-ல் 'வெண்ணிலை' சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு வெளிவந்துள்ளது. 20 ஆண்டுகள் கழித்து வாசிக்கும் போதும் அதன் நவீனத்துவமும், கதைத் தளங்களும், பேசும் பொருளும் இப்போதும் புதியதாக அமைந்திருக்கின்றன. எந்த இதழிலும் வெளியாகாத முற்றிலும் புதிய கதைகளைக் கொண்டதாக இத்தொகுப்பு உருவாகியதாக அறியவந்த போது அதுவும் வியப்பளித்தது.
உலகமயமாக்கல், தாராளப் பொருளாதாரக் கொள்கை, சூழல் திரிபு நிலையால் உருவான காலநிலை மாற்றம் போன்றவற்றால் நெருக்கடிக்குள்ளான வேளாண் குடிகள் மற்றும் வேளாண் சார் தொழில் செய்யும் பாட்டாளி வர்க்கம் நசிவுக்குள்ளாவதையும் நெருக்கடிக்குள்ளாவதையும் தனது பெரும்பான்மையான கதைகளின் களமாகக் கொண்டுள்ளார் சு.வேணுகோபால்.
அந்த நெருக்கடியை வெறுமனே தட்டையான மொழிதலாலும், 'உள்ளதை உள்ளபடி' சொல்லுதல் என்ற வெறும் யதார்த்தபாணி கதைசொல்லலாலும் மட்டும் முன்னெடுக்காமல், தனது கதாமாந்தர்களின் உளவியல் ரீதியான பாதிப்பை நுட்பமான வகையில் எடுத்துக்கூறுவதன் மூலமாகவும், வாழ்வின் நுண்ணிய கணங்களைச் செறிவாக - விரிவான விவரணைகளோடு கதையாடுதலின் வழியாகவும் - அவரது சிறுகதைகள் தன்னளவில் ஓரிடத்தில் ஒரு கவித்துவ வெளியில் - உணர்வில் உருவாகி நிறைவதை வாசகரால் உணர முடியும். அதுவே சு.வேணுகோபாலின் தனித்துவமாகவும் கருதுகிறேன்.
கோகோ கோலா கம்பெனி வருகையினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போவதை 'உயிர்ச்சுனை' கதை பேசுகிறது.
தன்னிலை உரையாடல் வழியாகவே முழுக்கதையும் சொல்லப்படும் 'தீராக்குறை'யில் வாழ்வியல் நெருக்கடிகளால் கைவிடப்படும் முதிய பெண்களின் குமுறல் வெளிப்படுகிறது.
மதுரை - உசிலம்பட்டி வட்டாரத்தில் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் - எல்லா உயிர்களிடத்தும் - வெளிப்படுத்தப்படும் பெண் சிசு ஒவ்வாமை உணர்வும், அதன் நீட்சியான பெண் சிசுக் கொலை பற்றியும் முற்றிலும் வேறொரு தளத்தில் வேறொரு உணர்வில் சொல்லப்படுகிறது 'புற்று' கதையில்.
எல்லாக் கிராமங்களிலும் நாம் காண நேரிடும் 'கேணை உடையாளி' போன்ற புறக்கணிக்கப்பட்ட கடின உழைப்பாளியைப் பற்றியும் அவனது பிறழ்ந்த குடும்ப உறவுகள் பற்றியுமான கதையைக் கூறுகிறது 'கூருகெட்டவன்'. ஏறக்குறைய இதே கதையில் வரும் உடையாளியைப் போன்ற பாத்திர உருவாக்கமான பொம்மையாவின் வெள்ளந்தி மனநிலையைப் பேசுகிறது 'வயிற்றுப் புருசன்' கதையும்.
'நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை; ஞாயிற்றுக்கிழமையும் பெண்ணுக்கில்லை' என்ற கந்தர்வனின் கவிதை வரிகளுக்கான சிறுகதை வடிவமாக அமைந்திருக்கிறது 'கிடந்த கோலம்' கதை. வேலைக்குச் செல்வதால் விடுமுறை நாளிலும் வீட்டில் படுத்தே கிடக்கும் கணவனையும், வேலைக்குச் சென்றாலும் விடுமுறை நாளிலும் சமையல், குழந்தை பராமரிப்பு, தண்ணீர் பிடித்தல், துணி துவைத்தல் என்று தொடர் வேலைகளால் சலிப்பும் கோபமும் நிறைந்த மனத்துடன் மதியம் சற்றுத் தலைசாய்க்கும் வனிதாவிடம் கலவி விருப்புடன் வரும் கணவன் மீதான வெறுப்பானது, சிரிப்பாக மாறி அவனை அவமானப்படுத்துவது கதையின் உளவியல் சித்தரிப்புக்கான எடுத்துக்காட்டுப் பகுதி.
யதார்த்த மொழியால் கதை சொன்னாலும் ஒரு பூடகத்தன்மையை தன்னகத்தே கொண்டு கால்நடைகளுக்கு மருந்து கொடுத்துச் சிறுசிறு வைத்தியம் செய்யும் வெளியூர்த் தாத்தாவுக்கும் ஊர்க்குழந்தைகளுக்குமான மாய ஈர்ப்புப் பிணைப்பைக் காட்சிப்படுத்துகிறது 'குதிரை மசால் தாத்தா' கதை. இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் - குழந்தைமை, குழந்தைகளின் பேச்சு, நடவடிக்கைகள் குறித்த விவரிப்புகள், இத்தொகுப்பில் உள்ள பல கதைகளில் மிக இயல்பாகவும் துல்லியமாகவும் வெளிப்படுகின்றன. இதுவும் சு.வேணுகோபாலின் பலமெனக் கொள்ளலாம்.
கடும் பஞ்ச காலத்தில் ஒரு வாய் தட்டையின்றித் தவிக்கும் கால்நடைக்காகத் திருடி மாட்டிக்கொள்ளும் கோபாலுக்குப் பிறக்கும் பெண் குழந்தையை நம்பிக்கையின் கீற்றாக ஏந்தும் கிராமத்து மனிதர்களின் உளவியலைப் பேசுகிறது 'புத்துயிர்ப்பு' கதை. கோபால் உணரும் வெக்கையையும் பஞ்சத்தையும் வாசிக்கும் நம்மையும் உணரச் செய்கிறது வேணுகோபாலின் எழுத்து. மேலும் யதார்த்தக் கதைசொல்லலின் வழியே செல்லும் கதையானது ஒரு கட்டத்தில் புதியதொரு கவிதானுபவத்தை ஏற்படுத்திக் கதையின் பரிமாணத்தை வெகுவாக உயர்த்தி நிற்கிறது. தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக இக்கதைக்கு நிச்சயம் ஓரிடமுண்டு.
குடும்ப அமைப்பு ஏற்படுத்திய கடமைகளால் புறக்கணிக்கப்பட்ட தனிநபர் உணர்வுகளை நுட்பமாகக் காட்டியதோடு, நகரத்தின் பொருளீட்டும் அவசர வாழ்சூழலும் நெருக்கடியும் அதுகாறும் நிறுவப்பட்டு வந்த புனிதங்களையும் விழுமியங்களையும் - தன்னலம் மற்றும் தேவை சார்ந்து - உடைத்து நொறுக்கியபடி விலங்கின் உணர்நிலைக்கு மனிதனைத் தள்ளிச் செல்லும் அவலத்தை விவரிக்கிறது 'உள்ளிருந்து உடற்றும் பசி' கதை.
கொண்டாட்டமும் குதூகலமும் கேலியும் எதிர்பால் ஈர்ப்பு நாடகமுமாய் இருந்தாலும் இளம் தலைமுறையிடம் தெரியும் நல்லுணர்ச்சியைக் காட்டுகிறது 'வெண்ணிலை' கதை. கிட்டத்தட்ட இதைப் போலவே குடி, அலப்பறை, ஜாலி எனத் திரியும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்தர்ப்பம் வாய்த்தால் பொதுவெளியில் இளம் பெண்ணுக்கு நேரிடும் மானபங்கத்தை எப்படித் தடுக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் கதை 'சந்தர்ப்பம்'.
இரண்டு பெண்களைப் பெற்று அதில் ஒருத்திக்கு மணமாகிப் பிள்ளைப்பேறுக்கு வந்திருந்த போதும் தன்னலங்காரம், அழகுணர்ச்சி, தன் அழகின் மீதான மெலிய கர்வம் என்று தாயின் உணர்வை அதே அழகுணர்ச்சியுடன் சொல்கிறது 'பேரிளம்பெண்' கதை.
நவதாராளவாத பொருளாதார மாற்றம் ஏற்படுத்திய விளைவுகள், ஒரு கிராமத்து/சிறுநகரத்துக் குடும்பத்தில் உண்டாக்கிய பாதிப்புகள், சிறுதொழில் செய்வோரை நசித்தல் போன்றவற்றை ரமேஷ் என்ற பாத்திரத்தின் மன உணர்வுகள் வழியே பேசும் கதை 'வாழும் கலை'. கதையின் ஊடாகவே, மன நிம்மதி வழங்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும் வழி போன்றவற்றை கற்றுத் தரும் கார்ப்பரேட் ஆன்மிக வியாபாரிகளின் 'சேவைகள்' எல்லாம் பணம் படைத்தவர்களுக்குத்தான் என்ற பகடியும் வெளிப்படுகிறது.
குடிகாரக் கணவன் மீதான வெறுப்பும் வாழ்வின் எந்த நற்பேறும் சுகமும் கண்டிராத ஒரு வறட்சியான வாழ்சூழல் ஏற்படுத்தும் சலிப்பையும் வெறுப்பையும் மாமனாரின் ஒயிலாட்ட அடவுகள் புரட்டிப் போட்டு, ஈர்க்கச் செய்யும் மாற்றத்தை 'வாணி' பாத்திரம் வழியே சொல்கிறது 'கொடிகொம்பு' கதை.
'மெய்ப்பொருள் காண்பதறிவு' கதை, தான் நன்றாகப் படித்தும், தனது சூழல் காரணமாகப் படிக்காமல் போய்விட்டதால், தனது மக்களுக்கு இடையூறில்லாத படிப்பு வேண்டும் என்பதற்காக மதுரை பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் மூத்த மகனைக் கொண்டுவிட்டாலும் - அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வருவதற்குக்கூட வக்கற்ற பண்ணையாள் பரமசிவத்தின் கையறு நிலையையும், முதலில் அதை உணராது கோபமுறும் மகன் தன்னைப் பார்க்க வந்த தந்தையிடம் மீள ஊருக்குச் செல்லப் பேருந்துக்குக் கூடக் காசில்லாத நிலையை உணர்வதும், கதையின் உளவியல் ரீதியிலான விவரிப்புக்கு உச்சகட்டமாக அமைந்து பெரும்பாரத்தை நம்மீது இறக்கி வைக்கிறது.
தனது வழமையான யதார்த்த பாணி கதைசொல்லும் முறையிலிருந்து சற்று விலகி மாய யதார்த்த வகைமைக்குள் நுழைய முன்னெடுக்கிறது 'அவதாரம்' கதை.
மனநலம் பிறழ்ந்த ஓர் இளம் பெண்ணுக்கு யார் மூலமோ உண்டான கரு குழந்தையாகி உலகில் ஜனிக்க, அதை ஒரு மானுட உயிர் என்ற ஓர்மையின்றி, ஆனால் அது தன் குழந்தை என்று பொம்மையைப் போன்று அதைக் கையாளும் அந்தப் பெண், குழந்தையைச் சாகடித்துவிட, பொறுக்காத பெற்றோரே பாலிடாயின் மருந்தை அவள் குடிக்கும் மாட்டுக் கொட்டக் குளுதாணிக் கஞ்சியில் கலந்து கொல்ல நேரும் அவலத்தை - வாசிப்போர் குற்ற உணர்வும் கையறு நிலையும் உணர்ந்து நடுக்குறும் வகையில் - கதையாடுகிறது 'தொப்புள் கொடி'.
'உள்ளிருந்து உடற்றும் பசி', 'கொடிகொம்பு', 'பேரிளம்பெண்', 'பேதை' போன்ற கதைகளில் காட்டப்படும் பிறழ் உறவுகளானது - தனது நுட்பமான உளவியல் சித்தரிப்பின் வழியே தனிநபர் ஒழுக்க மாறுபாடு, வக்கிர உணர்வு என்ற காரணங்களைக் கடந்து - வாழ்ச்சூழல், சமூக யதார்த்தம், பொருளாதார நெருக்கடி போன்ற புறக்காரணிகளையும் முதன்மைப்படுத்தும் நோக்கு கவனிக்கத்தக்கது.
மேலும், 'கூருகெட்டவன்', 'நிரூபணம்', 'குதிரை மசால் தாத்தா', 'வயிற்றுப் புருசன்', 'தொப்புள் கொடி' போன்ற கதைகளில் காணப்படும் - சமூக நிலையில் புறக்கணிக்கப்பட்ட, பொதுப் புழங்கு வெளியில் நிபந்தனைகளோடு விளிம்பில் நிற்க வைக்கப்பட்ட, அருவருப்பான, அசூயையான மனிதர்களின் இருப்பும் அவர்களின் உணர்வும் வலியும் வெகு நேர்த்தியாகவும் இயல்பாகவும் உருக்கொண்டுள்ளன.
அதேபோல், 'புற்று', 'புத்துயிர்ப்பு', 'கிடந்த கோலம்', 'தொப்புள் கொடி', 'மெய்ப்பொருள் காண்பது அறிவு', 'குதிரை மசால் தாத்தா' போன்ற கதைகள் தொகுப்பின் சிறந்த கதைகளாக யதார்த்த வெளியிலிருந்து தனக்கேயுரிய அழகியலோடு கவித்துவ மொழிதலுக்குள் நுழைந்து பரிணமிக்கின்றன.
ஆனால், 'நிரூபணம்', 'தாய்மை', 'பாரம் சுமக்கிறவள்', 'பேதை', 'விழிப்புணர்வு', 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' போன்ற சாதாரணமாகத் தொடங்கி சாதாரணமாக முடியும் - சில இடங்களில் நாடகீயத்தனமான திருப்பங்களுடன் கூடிய கதைகளும் தொகுப்பில் உள்ளன.
தொகுப்பு முழுதும் வேறுபட்ட மாந்தர்களின் மனவோட்டங்கள் - அதன்வழி வெளிப்படும் உளவியல் மாறுபாடுகள் - சமூக அவலங்கள் - பிறழ் உறவுகள் என விரிந்த திரைச்சீலையில் வரையப்பட்ட பல்வகை மாதிரிகளை - உருவங்களைக் கொண்டதாக விரிகிறது 'வெண்ணிலை' தொகுப்பு.
இவை எல்லாவற்றையும் சேர்த்து மற்றொரு காரணம் ஒன்றும் இத்தொகுப்பினை மனசுக்கு அணுக்கமாக எனக்கு உணர வைத்தது. அது பெரும்பாலான கதைகள் நடக்கும் கதைப் பரப்பு - இடம் - பகுதி - ஊர். நான் எனது பால்யத்திலும் பதின்மங்களிலும் விளையாடி, அலைந்து திரிந்த தேனி மாவட்ட ஊரகப் பகுதிகள், போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்கள், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் என்று கதைகள் நிகழும் பகுதியின் விவரிப்பும் சித்தரிப்பும் கதைகள் எனக்குள் மேலும் நெருக்கமாகணர்வதற்கு்க் காரணமாய் அமைந்தது.
'வெண்ணிலை' தொகுப்பில் உள்ள சில கதைகள் தமிழ்ச் சிறுகதையின் ஒட்டுமொத்தப் பரப்பில் குறிப்பிடத்தகுந்தவையாக இருப்பதைச் சொல்லியே ஆக வேண்டும். சு.வேணுகோபாலின் படைப்பு வரிசையிலும் இத்தொகுப்பு முதன்மையானதொரு இடத்தைப் பிடிக்கும் என்றும் உறுதிபடக் கூறலாம்.
வெண்ணிலை - சிறுகதைகள் - சு.வேணுகோபால் - தமிழினி வெளியீடு - மின்னஞ்சல்:
- அன்புச்செல்வன்