சங்க இலக்கியங்கள் வழியே சிந்து வெளி நாகரிகத்தில் தென்படும் தமிழ்ச்சுவடுகளை 'அகழாய்வு' செய்யும் பணியை ஆர்.பாலகிருஷ்ணன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கீழடி உள்ளிட்ட தொல்லாராய்ச்சி முடிவுகளின்/சான்றுகளின் அடிப்படையில் சங்கத் தமிழ் இலக்கியம் காட்டும் வாழ்வியல்/சமூகவியல் சித்திரங்களின் துணை கொண்டு சிந்துவெளி நாகரிகத்திற்கும் பழந்தமிழ் நாகரிகத்திற்கும் ஆன ஒப்புமையை தனது ஆய்வுப்புலத்தின் வழி எடுத்துரைக்கிறார். இந்நூலும் அப்பணியின் ஒரு தொடர் நிகழ்வே.
முன்னுரையில் ஆய்வறிஞர் பக்தவத்சல பாரதி குறிப்பிடுவது போல - முற்றிலும் சுதேசித் தன்மையிலான அச்சு அசலான ஆய்வுமுறை ஆர்.பாலகிருஷ்ணனுடையது. இவரது ஆய்வு முறைக்கு 'இலக்கியத் தொல்லியல்' என்று பக்தவத்சல பாரதி பெயர் சூட்டியிருப்பது சாலப் பொருத்தமானதாகும்.
நூலானது பாடுபொருள்களின் அடிப்படையில் பத்து பகுதிகளாகப் (இயல்களாகப்) பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் இயலின் தலைப்பே நூலின் தலைப்பாக அமைந்துள்ளது - 'ஓர் ஏர் உழவன்'. பண்டைத் தமிழ் வாழ்வில் வேளாண்மையின் பங்கு குறித்து குறுந்தொகை, புறநானூறு வழியே பேசும் இப்பகுதி கூடவே இந்தியத் துணைக் கண்டத்தின் மற்றொரு மரபான 'மனு ஸ்மிருதி' மரபானது, வேளாண்மையைப் பற்றிக் கூறும் கருத்தியல்களையும் எடுத்துரைத்து, இரண்டையும் ஒப்பு நோக்கி மனு ஸ்மிருதி எவ்வாறு வேளாண்மையை மேட்டிமைத்தனத்துடன் அணுகுகிறது என்பதை எடுத்து வைக்கிறது. வரகுக்கடன் வாங்கி சுற்றத்தாருக்கு விருந்து வைத்த சீறூர்த் தலைவனைச் சங்க இலக்கியத்தில் காண முடியுமே தவிர கடன் வாங்கிக் கொடையளித்த பேரரசன் குறித்தோ பெரு வணிகன் குறித்தோ பதிவில்லை என்று அறுதியிட்டுக் கூறுவதன் மூலம் சங்க இலக்கியமானது அரசர்களைப் பற்றிய பாடல்களாக இருப்பினும் அதன் ஊடாக நிறைந்திருப்பது சிறுகுடிகளின் அறஞ்சார் வாழ்முறையே என்பதைத் தன் புரிதலாக முன்வைக்கிறார்.
'கூர் உளி குயின்ற கோடு' என்ற இரண்டாம் பகுதியில், அகழாய்வில் பானை ஓடுகளில் கீறப்பட்ட தமிழி எழுத்துகள், நடுகல்லில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள், பாறைகளில் செதுக்கப்பட்ட பெயர்கள், பணைத்தோள் குறுமகள் வனமுலை எழுதிய தொய்யில் (Tattoos), பண்டைய காலத்துப் பண்டப் பொதிகளிலும் அரசு கடிதங்களிலும் வரையப்பட்ட கண்ணெழுத்துகள் பற்றியெல்லாம் அகழ்ந்துரைத்து, தமிழ்ச் சமூகம் அவ்வாறு எண்ணையும் எழுத்தையும் கண்ணெனக் கருதிய மரபின் தொடர்ச்சியே இப்போதும் தமிழ் ஒருங்குறி (Unicode) எழுத்துருப் பயன்பாட்டுக்குத் தமிழ் இளையோர் காட்டும் ஆர்வம் என ஆய்ந்துரைக்கிறார்.
கடல் ஒட்டிய கழிமுகத்தில் காணப்படும் உயர் அலைகளால் உண்டாகும் 'ஓதம்' எனும் வெள்ளம் மதுரை நகரின் வைகை நதியில் உண்டானதாகக் கலித்தொகை, பரிபாடலின் வழியே பதிவானது எவ்வாறு என்பதை மதுரை நகரின் இடவியல் நோக்கில் அறிவியல்பூர்வமான விளக்கத்தோடு அம்முரணை விளக்கிச் செல்கிறார் - 'ஓதம் சுற்றியது ஊர்' என்ற மூன்றாம் இயலில். மனித உடலின் நீர்வீக்கத்தையும் (அதற்கும் ஓதம் என்றே பெயர்) மதுரையின் வைகை ஓதத்தையும் ஒப்புமைப்படுத்திய விதம் அருமை.
'பறை' என்ற தொல்தமிழ்ப் பண்ணிசைக் கருவி கழைக்கூத்தாடும் போது கழைக்கூத்தாடிகளால் பயன்படுத்தப்பட்டதை 'ஆரியர் கயிறாடு பறை' என்று குறுந்தொகைப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்படுவது ஏன் என்ற கேள்வியுடன் தொடங்கும் நான்காம் இயல், ஆரியர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் எவ்வாறு எங்கெங்கு பயின்று வருகிறது என்று தொடங்கி, ஆரியம் மீதான சங்கப் பாடல்களின் வேற்றுமைப் பண்பு (அதாவது நாம்xமற்றவர் என்ற வேற்றுமை இருமை) பறை என்ற திராவிட மொழிக் குடும்பச் சொல் ஆரியக் கூத்தொன்றில் கலந்த விதம் பற்றிப் பேசி தமிழ் புழங்கு தளத்தின் பரப்பளவின் பெருக்கத்தைக் குறிப்பதோடு, ஐந்திணையிலும் முழங்கிய பறையை நெய்தலின் உரிப்பொருளான 'இரங்கலில்' மட்டும் இசைக்கச் செய்தது எது என்ற கேள்வியையும் கேட்டு அமைகிறது.
சிந்து வெளிப் பண்பாட்டில் கிடைக்கப்பெற்ற மொகஞ்சதாரோ காளை முத்திரையும் 'நின்னுகுத்தி' மாடு பற்றிய முத்திரைச் சித்திரமும், பாண்டி நாட்டு ஏறுதழுவலைப் பாடும் கலித்தொகை பாடல்களையும், நடப்புக்கால ஜல்லிக்கட்டுப் போட்டி வர்ணனைகளையும் இணைப்புப் புள்ளிகளாக்கி ஏறு தழுவுதலின் தமிழ்த் தொன்மையையும், இலக்கியம், திரையாக்கம் எனப் பல்துறைகளிலும் ஏற்பட்ட அதன் வீச்சையும் விரிவாகப் பதிவு செய்கிறது 'எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு' எனும் ஐந்தாம் பகுதி.
'ஒருவர் செய்த நன்றியை மறப்போர்க்கு வாழ்வில் ஈடேறுகை இல்லை' என்ற அறம் சார் நெறியானது தமிழ் மரபின் தனித்துவ நெறியாகச் சுட்டுவதோடு, வால்மீகி ராமாயணத்திலும், மனு ஸ்மிருதியிலும் அச்செயலுக்குக் கழுவாய் (பரிகாரம்) இருப்பதென்பதைக் குறிப்பிடும் வழியே - தமிழ் மரபானது மனச்சான்றின் பேரிலான அறநெறியையே வலியுறுத்துகிறது - சனாதன நெறிமுறை போல செய்வதை எல்லாம் செய்துவிட்டு அதற்கொரு பரிகாரம் செய்து சரிக்கட்டிக் கொள்ளும் நடைமுறை போலல்ல என்பதையும் சுட்டிச் செல்கிறது 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' எனும் ஆறாம் இயல்.
'அண்ணல்' யானைக்கும் (யானைக் கூட்டத்தில் உள்ள முதன்மையான பெரிய ஆண் யானை 'அண்ணல்' எனக் குறிப்பிடப்படுகிறது) அழகு தமிழுக்கும் உள்ள பாரிய தொடர்பை, காதல், போர் எனத் தமிழ் வாழ்வின் சகல கூறுகளிலும் யானையைக் கொண்டு பாடப்பட்ட சங்கப் பாடல்களின் வழி எடுத்துரைக்கிறார் ஆசிரியர் 'பெரும் கை யானை' என்ற ஏழாம் இயலில். தும்பிக்கை என்ற வார்த்தை எங்கேயும் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை, எழுத்து வடித்த நடுகல் யானையின் சொரசொரப்பான தோலிற்கு உவமையாவது, யானையின் பாதத்திற்கு பறை உவமையாவது, யானைத் தந்தம் தானியம் குத்த பண்டைத் தமிழ்ச்சமூகத்திலும் புகையிலை இடிக்க ஆப்ரிக்கச் சமூகத்திலும் பயன்படுத்தப்பட்டது போன்ற ஆய்வுத் தரவுகள் வாசிப்பில் சுவை கூட்டுகின்றன.
'ஓங்குபுகழ் கானமர் செல்வி' எனும் எட்டாம் இயலானது தமிழ்த் தாய்த் தெய்வ வழிபாடு குறித்துப் பேசுகிறது. குடவாயில் கீரத்தனார் பாடிய அகநானூற்றுப் பாடலில் 'ஏழிற்குன்றம்' என்ற இடத்தில் உறைந்த 'கானமர் செல்வி' என்ற தாய்த்தெய்வம் குறிப்பிடப்படுகிறது. மேற்படி இடமானது நன்னன் ஆண்ட 'ஏழிற்குன்றமே' என்றும் அது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது என்றும் அங்கு விந்தியாசானி என்ற பெண் தெய்வ வழிபாடு உள்ளதையும் ஆய்ந்து சொல்வதோடு, பழையோள் - கிழவோள் - காடுகிழாள் என்று ஆதித் தாய்த்தெய்வம் போர்க்காலத்தில் கொற்றவையாகவும் பெருந்தெய்வ வழிபாட்டில் மலைமகளாகவும் மாற்றப்பட்ட தொடர் வரலாற்றையும் முன்வைக்கிறார் ஆசிரியர். மேலும் ஆசிரியர்க்கே உரிய ஆய்வுமுறையியலில், சிந்து வெளி தாய்த்தெய்வமானது குஜராத்தின் காடுகளின் வழியே காலில் சிலம்பணிந்து நடந்து தமிழ்நாடு, கேரளா, இலங்கையில் கண்ணகியாகும் நுட்பத்தைப் பதிவு செய்கிறார்.
சான்றோர் எல்லாம் சான்றோர் பக்கமும், சால்பில்லார் எல்லாம் சால்பில்லார் பக்கமும் நிற்பவது உலகியல்பு என்று கூறும் கண்ணகனார் பாடிய புறநானூற்றுப் பாடலின் வழி, நட்பு குறித்து பண்டையத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த கருத்தோட்டத்தை கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார் ஆகியோரின் 'வரலாறு என்னும் கதை' மூலமாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர் - 'சாலார் சாலார் பாலர்' என்ற ஒன்பதாம் பகுதியில். 'வடக்கிருத்தலை'யும் சமணர்களின் 'ஸல்லேக்கானா'வையும் ஒப்பிட்டுப் பேசும் பகுதி குறிப்பிடத்தக்கது.
கடமையும் உரிமையும் அரச பரிபாலனத்தில் என்னவாக இருந்தது - அதில் தமிழ் அரசமைப்பு எப்படித் திகழந்தது - 'நீதி' என்பதில் இருந்து 'அறம்' எங்கு வேறுபடுகிறது - தமிழ்க்குடிகளின் சீறூர்த் தலைவன் எவ்வாறு 'அறம் பிறழாது' ஆட்சி செய்தான் - என்ற விபரங்களை எல்லாம் சொல்வதோடு மக்களின் பக்கம் நிற்பதே அரசின் இறையாண்மையாக இருந்தது - அதுவே இன்று வரை முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதையும் 'அரசு முறை செய்க' என்ற இறுதி இயலில் இயம்புகிறார் ஆசிரியர்.
நூல் முழுக்க விரவியிருக்கும் சங்கப்பாடல்களின் வழி ஒரு குறிப்பிட்ட நடைமுறையை அறிய முடிகிறது - காதல் பாடலாக இருந்தாலும் அதில் அரசு குறித்தும் அறம் குறித்துப் பாடுவதும் - வேளாண் முறை குறித்துப் பேசுவதும் - போர்த்திறம் குறித்துப் பாடுவதும் - இயற்கை அழகு, கானுயிர், பல்லுயிர் வாழ்வியல் பற்றிக் குறிப்பதும் சங்க இலக்கியத்தில் இயல்பான செய்முறையாகத் திகழ்கிறது. இது பழந்தமிழர் வாழ்வியலில் அறமும் நிலமும் காதலும் பின்னிப் பிணைந்திருந்த நிலையை உணர்த்துவதாக உள்ளது.
நூலாசிரியர் 'ஓர் ஏர் உழவன்' என்ற முதல் பகுதியின் ஓரிடத்தில் 'சங்க இலக்கியத்தை ஒர் தொடர் பட்டறிவின் தொகுப்பாகவே பார்க்கிறேன்' என்று குறிப்பிடுவது போல, இத்தொகுப்பையும் ஆர்.பாலகிருஷ்ணனின் 'இலக்கிய அகழாய்வு' வழியே தமிழ்ப் பண்பாட்டை இந்தியத் துணைக் கண்டத்தின் பாரிய பரப்பில் ஒப்பு நோக்கும் தொடர் ஆய்வறிவின் இணைப்புக் கண்ணியாகவே பார்க்கலாம்.
நூல் வடிவமைப்பைப் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். கெட்டி அட்டையில், ட்ராட்ஸ்கி மருதுவின் சிறப்பான அட்டைப் படம் உள்ளிட்ட இயல்களின் ஊடான விளக்கப் படங்களும், இயலின் கருத்தியல் பற்றிய சுருக்க விபரப் படங்களும் நிறைந்தும் சங்கப் பாடல்களுக்குத் தனி எழுத்துரு கொண்டு தனித்துக் காட்டியும் - ஓர் ஆய்வு நூலுக்கு ஏற்ற வடிவத்தில் நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. உசாத்துணை நூற்பட்டியல் ஒவ்வோர் பகுதிக்கும் தனித்தனியே அட்டவணைப் படுத்தியிருந்தால் நூல் மேலும் முழுமை அடைந்திருக்கும்.
நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள், தரவுகள், ஆய்வு முடிவுகள் குறித்தெல்லாம் துறை வல்லுநர்களும் அறிஞர்களும் ஆய்ந்து தத்தம் கருதுகோள்களை எடுத்து வைக்கட்டும். என்னைப் பொருத்தமட்டில், வெறும் உத்தேசங்களாகவோ ஊகங்களாகவோ அன்றி, வரலாற்றியல், மொழியியல், சமூகவியல், மார்க்சீயம் போன்ற பல்வேறு அறிவியல்சார் ஆய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்ட பன்முகப் பார்வைகளின் குவியமாகவும், சங்க இலக்கியத்தில் உள்ள சாமானியத்தனத்தை 'அகழ்ந்தெடுத்து' நடப்பு வாழ்வியலோடு உரிய பொருத்தப்பாட்டை தமிழ் அறத்தொடு கண்டறியும் தனித்த முறையியலுக்குமான சிறந்த எடுத்துக்காட்டாக இத்தொகுப்பு விளங்குகிறது என்பதே எனது அவதானிப்பு.
ஓர் ஏர் உழவன் (சங்கச்சுரங்கம் - மூன்றாம் பத்து) - ஆர்.பாலகிருஷ்ணன் - பாரதி புத்தகாலயம் - வலைத்தளம்: www.thamizhbooks.com தொடர்புக்கு:
- அன்புச்செல்வன்