இது தன்வரலாற்று பாணியிலான புதினமா - ஆமாம்... இல்லை இல்லை. இது ஒரு வரலாற்றுப் புதினமா - இருக்கக்கூடும். அல்லது இது ஒரு சாகச உயிர்வாழ்தல் (adventurous survival) வகை நாவலா - அப்படியும் இருக்கலாம். ஒருவேளை அரசியல் நையாண்டி வகைப் படைப்பா - சொல்லலாம். யதார்த்த பாணி நாவலா? மாய யதார்த்த வகைப் புனைவா? உண்மையில் சல்மான் ருஷ்தீயின் 'நள்ளிரவின் குழந்தைகள்' மேற்சொன்ன எல்லாவற்றோடும் விளங்குகிறது - இன்னும் சொல்லாத வகைகளாகவும் விரிந்து வளர்கிறது. பக்கம்தோறும் இயல்தோறும் (ருஷ்தீயின் வார்த்தைகளில் - ஒவ்வொரு ஊறுகாய் பாட்டில்களிலும்) தன்னைப் பல்கிப் பெருக்கியபடியே இருக்கிறது பிரதி.
இப்பிரதியின் கதைசொல்லி சலீம் சினாய். இவனது கதையே மையச்சரடாய் இவன் பிறப்பதற்கு முந்தைய பூர்விகத்தில் தொடங்கிப் புதினமெங்கும் நீண்டு வளர்கிறது. அவன் பிறப்பது சரியாக 1947 ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவு 00.00 மணிக்கு..! அவனோடு இதுவரை இல்லவே இல்லாத முற்றிலும் கற்பனையான 'இந்திய' என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய தேசமும் பிறக்கிறது. எல்லா தேசிய இனங்களும் பகிர்ந்து கொண்ட வெகுஜனப் புனைவு. ஒரு புதிய தொன்மம். ஆம்... சலீம் சினாய் நள்ளிரவின் குழந்தை - இந்தியா நள்ளிரவின் தேசம்.
ஆனால், இது ஒரு தன்வரலாற்றுக் கதையாக இருந்திருந்தால், இங்கிருந்துதான் புதினமானது தொடங்கியிருக்க முடியும். ஆனால், சலீம் சினாயின் பிறப்புக்கு 32 ஆண்டுகளுக்கு முன் 1915-ல் அவன் தாய்வழித் தாத்தா ஆதம் அசீஸின் மூக்கு காஷ்மீர் ஸ்ரீநகரில் அடிபட்டதிலிருந்து தொடங்கி - காஷ்மீர், பிரிட்டிஷ் இந்தியாவின் ஆக்ரா, டெல்லி, பம்பாய், சுதந்திர இந்தியா, மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம், நேரு, இந்திரா, அவசரநிலைப் பிரகடனம் என ஒரு வரலாற்றுப் புனைவுக்கான இணை வெளியையும் கைக்கொள்கிறது.
காஷ்மீரின் தனித்துவ அடையாளம் கொண்ட வம்சாவளியில் வந்து 1947-ல் சுதந்திர இந்தியாவுடன் பிறந்து இந்துப் புராணீகங்கள், தொன்மங்கள், பிரிட்டிஷ் மேல்தட்டு சிந்தனைகள், கிறித்துவ நம்பிக்கைகள் ஆகியவற்றோடு வளர்ந்து, திடீரென மேற்கு பாகிஸ்தானுக்குப் புலம்பெயர நேர்ந்து, அங்கிருந்து மூளைச்சலவை செய்யப்பட்ட ஓர் இராணுவ மோப்ப நாயாகக் கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசத்துக்கு) சென்று, மீண்டும் அவசரநிலை காலத்திற்கு முன் இந்தியா திரும்பி வாழ நேரும் ஓர் இஸ்லாமியத் தன்னிலையின் நனவிலி மனக்குறிப்புகள் எனக் கொள்ளவும் பிரதியில் இடமுண்டு.
பிரதியின் மிக முக்கியமான ஓர் அம்சமாக நான் கருதுவது - 'அடையாளங்களின் திரிபு'. பிரதி முழுக்கக் கதைசொல்லி தன்னை 'சலீம் சினாய்' என்று சொல்லியபடியே இருந்தாலும், அவன் 'வீ வில்லி விங்கி - வனிதா' தம்பதிக்குப் பிறந்த குழந்தை. இவனது பெற்றோர்களாகச் சொல்லப்படுகிற 'ஆமினா சினாய் - அகமது சினாய்'க்குப் பிறந்த குழந்தையையும் இவனையும் (இருவருமே ஒரே நேரத்தில் - 1947 ஆகஸ்ட் 15 - நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தவர்கள்) செவிலியான மேரி தனது காதல் தோல்வி மன உளைச்சலில் மாற்றி விடுகிறாள். அசல் 'சலீம் சினாய்' இந்து 'சிவா'வாக வறுமையில் வேறோர் இடத்திலும், கதைசொல்லி 'சலீம் சினாய்' சினாய் குடும்பத்தின் மேல்தட்டு டம்பத்திலும் வளர்கிறார்கள். அதிலும் ஒரு திருப்பம். இந்தக் குழந்தையை வனிதா தனது கணவன் விங்கிக்குப் பெற்றெடுக்கவில்லை - பம்பாய் எஸ்டேட் பகுதி ஒன்றின் சொந்தக்காரரான பிரிட்டிஷ் பணக்காரக் கனவான் வில்லியம் மெத்வோல்டுக்குப் பெற்றெடுக்கிறாள். குற்றவுணர்ச்சியால் பீடிக்கப்பட்ட மேரியால் வளர்க்கப்படுகிறான். இங்கு எல்லா மத - வர்க்க - பிரதேச அடையாளங்களும் முயங்கி, தனித்த சுத்த சுயம்புத்தன அடையாளம் ஏதுமற்ற தன்னிலையாகவே 'சலீம் சினாய்' இருக்கிறான். புதினத்தின் மிக முக்கியமான பலமும் அதுவே.
1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 முதல் 1 மணி வரை இந்தியப் பிரதேசத்தில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் ஓர் அபூர்வ சக்தி உள்ளது. சலீம் சினாய்க்கு அது இன்னொருவர் மனதில் நுழைந்து அவர்களது எண்ணங்களைப் படிக்கும் சக்தியாக (டெலிபதி) இருக்கிறது. ஒரு சைக்கிள் விபத்தில் அவனால் உணரப்படும் இந்த சக்தி, சைனஸுக்கான அறுவை சிகிச்சைக்குப் பின் காணாமல் போய், உணர்வுகளை முகரும் சக்தி கிடைக்கிறது. ஒருவருடைய மகிழ்ச்சி, வஞ்சம், துக்கம் போன்றவற்றைத் தனது விநோதமான மூக்கின் வழியே அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்தியா - பாகிஸ்தான் போர்க்காலத்தில் தலையில் அடிபட்டு நினைவுகள் ஏதுமற்றுப் போகிறான். பின்னர் மீண்டும் பாம்புக் கடியால் வங்கதேசத்தில் நினைவு திரும்புகிறான். ஜாலக்காரர்களின் மந்திரங்களின் (குறிப்பாக நள்ளிரவுக் குழந்தைகளில் ஒருத்தியான சூனியக்காரி பார்வதி) உதவியோடு இந்தியா வருகிறான். இவனோடு பிறந்து மாற்றி வைக்கப்பட்ட இன்னொரு குழந்தையான சிவா ரவுடித்தனமாக வளர்ந்து, பின்னர் இந்திரா காந்தியின் இராணுவத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறான். இப்படியான விஷயங்களைப் பேசும் கட்டங்களில் பிரதியானது மாய யதார்த்தப் புனைவாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறது.
நினைவற்றுப் போய் மேற்குப் பாகிஸ்தான் இராணுவத்தில் ஒரு மோப்ப நாயாகப் பணியாற்றும்போதும், வழிதவறி வங்கதேசத்தில் சுந்தரவனக் காடுகளில் தொலைந்து போகும்போதும், அதிலிருந்து தப்பி இந்திய இராணுவத்துடன் வந்திருந்த மாயஜாலக்காரர்களுடன் யாருக்கும் தெரியாமல் இந்தியாவுக்குப் பயணிக்கும் காலகட்டங்களிலும் பிரதி தன்னை ஒரு சாகச வாழ்வுப் புனைவாகக் கட்டமைத்துக் கொள்கிறது.
நிகழ்வுகளின் தற்செயல்தன்மை, முன்நிகழ்ந்த நிகழ்வுகள் தொடர்பான நினைவுகள், நடக்கப்போகும் நிகழ்வுகள் தொடர்பாக முன்னறிவிக்கப்பட்ட வாக்குகள் - குறிகள், அவற்றின் இணைவு, முற்செயல்களின் பின்விளைவுகளும் அவற்றுக்கிடையிலான தொடர்பும் பிரதியைக் கூட்டுத் தொன்ம நினைவுக் குறிப்புகளாகவும் மாற்றிக் கொள்ள வகை செய்கிறது.
காஷ்மீர இஸ்லாமிய சமூகத்தில் மேற்கத்திய கல்வியறிவின் தாக்கம், அதன் விளைவான இடம்பெயர்தல், ஜாலியன்வாலா பாக் படுகொலை, பிரிட்டிஷ் இந்தியாவிலேயே அதிகார வர்க்கத்திடையே நிலைபெற்றிருந்த ஊழல், டெல்லியில் 1940-களில் உருவாகியிருந்த இந்து - முஸ்லிம் வெறுப்பரசியல், சுதந்திரத்தின்போது இங்கிருந்து கிளம்ப நிர்ப்பந்திக்கப்பட்ட ஆங்கிலேயரின் சொத்துகளைக் குறைந்த விலைக்குக் கபளீகரம் செய்த இந்திய சுதேசி மேட்டுக்குடி வர்க்கம், மொழிவாரி மாகாண உருவாக்கம், அதற்கான போராட்டங்கள், நேரு மற்றும் இந்திராவின் ஜோதிடப் பித்து, கம்யூனிஸ்டுகளின் பல்வேறு பிரிவுகள், பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடிகள், வங்கதேசப் பிரிவினை, சஞ்சய் காந்தி, மேனகா காந்தியின் போலி குடிசை ஒழிப்பு - வறுமை ஒழிப்பு இயக்கமும் கருத்தடை இயக்கமும், இந்திராவின் அவசரநிலைப் பிரகடனம் எனப் பிரதி முழுக்க வரலாற்று நிகழ்வுகள் இணைப்பிரதியாக உருப்பெறுகின்றன. அதில் உள்ள சில நேர/நாள்/மாதக் குழப்பங்கள், மயக்கங்கள் பிரதியினை ஆவணநிலைப்படுத்தலிலிருந்து காப்பாற்றிப் புனைவின் வெளியில் அலைந்து திரியச் செய்கின்றன.
சல்மான் ருஷ்தீயின் பகடியும் சுயஎள்ளலும் கொண்ட கதைமொழி பிரதிக்கு வாசிப்பின் களிப்பைத் துய்க்க (Pleasure of text) பெரிதும் துணை செய்கிறது. சகட்டுமேனிக்கு எல்லாமும் ருஷ்தீயின் எழுத்தில் ஒரு வகையான அடங்கிய தொனியில் நையாண்டி செய்யப்படுகிறது - மதமாகட்டும், மூடநம்பிக்கைகளாகட்டும், அரசுகளாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும், தலைவர்களாகட்டும், மேல்தட்டு வாழ்க்கை முறையாகட்டும் எதுவும் அவரிடமிருந்து தப்பவில்லை. இது இப்பிரதியை ஒரு வகையில் அதிகாரத்திற்கு எதிரானதாக நிலைநிறுத்திக் கொள்ள வழிசெய்கிறது.
1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் புதிய இந்தியாவுடன் பிறந்த பல்வேறு அபூர்வ சக்திகளைக் கொண்ட 'நள்ளிரவுக் குழந்தைகள்' யாவரும் தேடித் தேடிச் சிறைப்பிடிக்கப்பட்டு (அவர்களைப் பிடிப்பதற்கும் சலீம் சினாயே காரணமாகிறான்) கொல்லப்படுகின்றனர் - இந்திராவின் ஆட்சியில்..! சலீம் சினாயின் பிறப்புக்கு முன்னரே அவன் தாய் ஆமினா சினாய்க்குக் குறிசொல்லிய ஜோசியன் ராம்ராம் சேட்டால் முன்னறிவிக்கப்பட்ட புதியதொரு வீரியமிக்க சக்தி உடையவனாக 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் புதிய இந்தியாவுடன் பிறந்த நம் கதைசொல்லி 'சலீம் சினாய்' 1976-ல் தனது 30-வது வயதில் காயடிக்கப்பட்டான் - உருவகமாகவும் நேரடியாகவும்..! இதுவே நம் தாய்களின் தந்தைகளின் கதையாக இருக்கலாம்.
1981-ல் வெளிவந்த இந்தப் புதினத்தை - பிரதியின் ஊடாக ஓரிடத்தில் சலீம் சினாய் உதிர்க்கும் கீழ்க்கண்ட வரிகளைக் கொண்டே மதிப்பிடுவது இன்னும் சரியாக இருக்கக்கூடும்: '...வரலாற்றைத் துவையல் செய்தலின் சாத்தியம் இது. காலத்தை ஊறுகாய் போட முடியும் என்ற மகத்தான நம்பிக்கை...'
இந்திராவின் அவசரநிலை நெருக்கடிப் பிரகடனம் முடிவடையும் காலத்தில் சலீம் சினாய் தனது கதைசொல்லலை நிறுத்திக் கொள்கிறான். அப்போதே நான் பிறக்கிறேன் - புதியதொரு புனைவு உருக்கொள்கிறது..!
நள்ளிரவின் குழந்தைகள் - புதினம் - சல்மான் ருஷ்தீ - தமிழில்: க. பூரணச்சந்திரன் - எதிர் வெளியீடு - வலைத்தளம்: https://ethirveliyeedu.com
தொடர்புக்கு:
- அன்புச்செல்வன்