தமிழறிஞரும் வரலாற்றாய்வாளருமான மயிலை சீனி. வேங்கடசாமியின் 'கிறித்துவமும் தமிழும்', 'பௌத்தமும் தமிழும்', 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்', 'சங்க காலத்துப் பிராமி கல்வெட்டெழுத்துகள்' போன்ற நூல்களை எழுதிய ஆய்வாளர் என்றுதான் அறிந்து வைத்திருந்தேன். மேலும் அவர் ஈ. வெ. ரா. பெரியாரின் சுயமரியாதை இயக்க ஈடுபாடும் பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவராகவும் தெரிந்து வைத்திருந்தேன்.

unavu noolஉணவு நூல் ஒன்றை எழுதி, அதில் ஒவ்வொரு உணவுப்பொருள் குறித்தும் அறிவியல் ரீதியாகவும் மரபு வைத்திய முறையான சித்த மருத்துவ வழியிலும் அவற்றின் தன்மைகளை ஆய்ந்து அனுபவ வழியாகவும் உணர்ந்து, உணவின் வழி நோய் வராமல் தடுக்கவும் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அதில் குறிப்புகள் பல எழுதி வெளியிட்டுள்ளார் என்பது வியப்பை ஏற்படுத்தியது.

1965-இல் ஒரு சிறு நூலாக 'உணவுநூல்' மணிவாசகர் பதிப்பகம் வழி வெளியிடப்பட்டுள்ளது என்பது மயிலையாரின் முகவுரை மூலம் தெரியவருகிறது. பேலியோ டயட், சமச்சீர் உணவு முறை (Balanced Diet), கார்போஹைட்ரேட், வைட்டமின், மினரல்ஸ், புரோட்டீன் முதலிய அறிவியல் ஆராய்ச்சிகள் வழி கண்டறியப்பட்ட உயிர்ச்சத்துகளை முறையாக எந்தெந்த உணவு வகைகள் வழியாக அடையலாம் என்பது தொடர்பாகத் தற்காலத்தில் நிகழ்ந்து வரும் உரையாடல்களின் (மரு. அருண்குமார், மரு. கு. சிவராமன், மரு. கு. கணேசன் முதலியோர் தற்போது முன்னெடுத்து வரும் கருதுகோள்களுக்கு முன்னோடியாக) முகவுரையாகவே இந்தச் சிறுநூலான 'உணவு நூலை'க் கருதலாம். அதற்கான எல்லாத் தகுதிகளும் நூலுக்கு உள்ளன.

தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழவகைகள், கிழங்குகள், கீரைகள், இறைச்சி வகைகள், எண்ணெய்கள், புரோட்டீன், கொழுப்பு, மாவுப்பொருள், வைட்டமின், உப்பு, உலோகங்கள் என்று 17 வகையான தலைப்புகளில் நூல் விரித்தெழுதப்பட்டுள்ளது.

இவற்றில் 'உணவும் உடம்பும்', 'உணவு எப்படி அமைய வேண்டும்?', 'சமையல் செய்யும் விதம்', 'உண்ணும் விதம்' போன்ற ஆய்வுநோக்கிலான தலைப்புகளும் சர்பத், பானகம், முரப்பா (ஊறல்) வகை செய்முறைகளுக்கான ஒரு தலைப்பும்கூட உள்ளது.

தனது தந்தை மற்றும் சகோதரர் சித்த மருத்துவர்களாக இருந்த காரணத்தினால், குடும்பச் சூழலில் சித்த மருத்துவம் குறித்த உரையாடல்களும் அது குறித்த பழங்கால நூல்களும் மருந்து செய்முறைகளும் மருத்துவக் குறிப்புகளும் மயிலையாருக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் என்பதை மறுக்கவியலாது.

வெறுமனே பழைய நூல்களில் உள்ள விவரங்களை மறுஆக்கம் செய்து இந்நூலினை உருவாக்காமல், தனது ஆய்வு மனப்போக்கினால் அக்காலத்திய அறிவியல் வழியான (அலோபதி கூறுகள் கொண்ட மருத்துவ முறையையும் பயன்படுத்தி) ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும் நூலினை விரித்துச் செல்கிறார்.

அதுமட்டுமின்றி இது உணவு நூல்தான் எனும்போதிலும் அதிலும் தன் அரசியல் பார்வையை நுட்பமாகப் பதிவு செய்யவும் மயிலையார் தவறவில்லை. உளுத்தம்பருப்பு குறித்த பகுதியில் மாமிசத்திற்கு அடுத்தபடியாகத் தசை வளர்க்கும் சத்து மிகுந்திருப்பது உளுத்தம்பருப்பு என்று கூறிவிட்டு அதற்கு ஆதாரமாகக் கூறுகிறார் — 'பிராமணர், இறந்தவர் நினைவு நாட்களாகிய 'சிராத்தம்' எனும் 'திவச' நாட்களில் உளுந்து வடை முதலியவற்றை உளுத்தம்பருப்பினால் செய்வது வழக்கம். ஏனென்றால், உளுந்து இறைச்சிக்கு அடுத்தபடியாகத் தசைகளுக்கு உரம் தருகிற உணவுப் பொருளாகும். பண்டைக்காலத்தில் பிராமணர்கள் மாமிச உணவுகளைச் சாப்பிட்டார்கள். சிராத்த நாட்களில் பலவகையான இறைச்சிகளைச் சமைத்துச் சாப்பிட்டார்கள். சமண சமயமும் பௌத்த மதமும் செல்வாக்குப் பெற்று, மாமிச உணவு உண்பது இழிவானது என்னும் கருத்துப் பரவியபோது பிராமணர் இறைச்சி உண்பதை நிறுத்தி 'மரக்கறி' உணவை மட்டும் உண்ணத் தொடங்கினார்கள். இறைச்சி உணவை விட்ட பிறகு, அதற்குச் சமமான வேறு மரக்கறி உணவு உளுத்தம்பருப்புதான் என்பதைக் கண்டறிந்து அதை அதிகமாகச் சாப்பிடத் தொடங்கினார்கள்' என்று கூறிச் செல்கிறார். இங்கு வெறுமனே உளுத்தம்பருப்பு இறைச்சிக்கு அடுத்தபடியாக அதிக சத்து மிக்கது என்று மட்டும் சொல்லிச் சென்றிருக்கலாம். ஆனால், சமூக அறிவியல் வரலாற்றுப் பார்வையை வெளிப்படுத்த இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

அதுபோல அகத்திக்கீரை குறித்த பகுதியில் 'நமது நாட்டில் சாவு நேர்ந்த வீடுகளின் அடுத்த நாளும் வைகுண்ட ஏகாதசி இரவுக்கு அடுத்த நாளும் அகத்திக்கீரை சாம்பார்/குழம்பு செய்வது வழக்கம். ஏனென்றால், சாவு வீட்டில் உள்ளவர்கள் பிணம் அடக்கம் செய்யும் வரை, சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் உடல் சூடுகொள்வதோடு இறந்தவரை நினைத்து வருத்தப்பட்டு இரத்தக்கொதிப்பும் ஏற்படும். அதே போல் வைகுண்ட ஏகாதசியில் விழித்திருப்பதால் உடல் சூடுகொள்ளும். உடல் சூட்டையும் இரத்தக்கொதிப்பையும் ஆற்றும் பொருட்டே அடுத்த நாள் அகத்திக்கீரை சாம்பார்/குழம்பு செய்து உண்கின்றனர்' என்று எடுத்துக்காட்டுடன் நமது சடங்குக்கான அறிவியல் தரப்பு விளக்கத்தையும் கூறுகிறார்.

அதே போல் இறைச்சி வகை குறித்த பகுதியில் இவ்வாறு கூறுகிறார் — 'இறைச்சி உண்ணும் மக்கள் உடல்கட்டுடன் உரமாக இருப்பதையும் மரக்கறிகளை மட்டும் உண்போர் சற்று உடல் உரம் தளர்ந்து இருப்பதையும் கண்கூடாகக் காண்கிறோம். இப்படிக் கூறுவதனாலே, மாமிச உணவு உண்ணாதவர், இறைச்சி உணவை உண்ணவேண்டும் என்று வற்புறுத்துவதாகக் கருதக்கூடாது. உணவை உண்பது அவரவர் விருப்பத்தையும் பழக்கத்தையும் பொறுத்தது. ஆகவே, வைத்தியரைத் தவிர மற்றவர்கள், இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உணவை உண்ணக்கூடாது என்று சொல்லத் தகுதியற்றவர்கள்' என்று 1965-லேயே சொல்கிறார். இது இன்றைய தேதி உணவு அரசியலில் முக்கிய கருதுகோளாகும்.

புனிதமான மாட்டின் இறைச்சியைச் சாப்பிட்டதால்தான் வயநாட்டில் பேரிடர் அழிவு நேர்ந்துள்ளது என்று அபத்தமாகப் பழி கூறும் வைதீக மடச்சாம்பிராணிகள், ஆளும் அதிகாரத் தரப்பில் உள்ள அவலச் சூழ்நிலையில் வாழ்ந்து வரும் நமக்கு, மயிலையார் போன்ற நமது மூத்தவர்களின் இத்தகைய கருத்து ஆதார அறிவைக் கொண்டு எதிர்க்கருத்தியலைக் கட்டமைக்கலாம். இத்தகைய கருத்துகள்தான் மற்ற உணவு தொடர்பான நூல்களிலிருந்து மயிலையாரின் நூலை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

அதுமட்டுமின்றி, அறிவியல்பூர்வமான நிறைய விஷயங்களை நூல் நெடுக அடுக்கிச் செல்கிறார். மாவுச்சத்தின் தன்மை, கோதுமையை நெய் மற்றும் வெண்ணெய் சேர்த்துச் சமைக்க வேண்டும், வைட்டமின் டி கிடைக்கச் சூரிய வெளிச்சம் உதவும், கீரைகள், காய்கறிகள், பருப்பினை வேகவைத்த நீரை உணவுக்குப் பயன்படுத்த வேண்டும், சோற்றை வடிப்பதையும் பல முறை அரிசியை நீரினால் கழுவுவதையும் தவிர்க்க வேண்டும், கிழங்குகளைத் தோலோடுதான் வேகவைத்து பின்னரே தோல் நீக்க வேண்டும், சோடா உப்பு சேர்த்துச் சமைத்தால் உயிர்ச்சத்துகள் போய்விடும், பி வைட்டமின் சூடு தாங்கும், ஏ வைட்டமின் சற்று சூடு தாங்கும் அதிக சூட்டில் அழிந்துவிடும், சி வைட்டமின் சுத்தமாகச் சூடு தாங்காது என்பது போன்ற இன்னும் பல தகவல்கள் நூல் நெடுக உள்ளன.

இதைத்தான் இப்போது எல்லா அலோபதி, சித்த மருத்துவர்களும் பல்வேறு தளங்களில் எடுத்துரைக்கின்றனரே என்று நூலைப் புறந்தள்ளிவிட வேண்டாம். நூல் வெளியான ஆண்டு 1965 என்பதைக் கவனத்தில் கொண்டு அதில் தொழிற்பட்டுள்ள அப்போதைய அறிவியல்பூர்வமான ஆய்வறிவைத் தகுந்த காலத்தில் வெளியிட்டு மக்களிடம் பரவலாக்கிய பணிக்காக மயிலை சீனி. வேங்கடசாமியார் என்றென்றும் நினைவுகூரத்தக்கவர்.

மொழி, இனம், சமயம், பண்பாடு சார்ந்த பல்வேறு ஆய்வுநூல்களுடன், இந்த உணவு குறித்த சிறுநூலையும் வெளியிட்டதன் வழி பாவேந்தர் பாரதிதாசன் இவரைப் பற்றிப் பாடியதற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்றும் உணர முடிகிறது.

'தமிழையே வணிகமாக்கித்

தன்வீடும் மக்கள் சுற்றம்

தமிழிலே பிழைப்பதற்கும்

தலைமுறை தலைமுறைக்குத்

தமிழ் முதலாக்கிக் கொண்ட

பல்கலைத் தலைவன் எல்லாம்

தமிழ்ச் சீனி வேங்கடத்தின்

கால்தூசும் பெறாதார்

என்பேன்'

நூலில் அடிக்கடி மயிலையார் மேற்கோள் காட்டும் தேரையரின் நோயணுகா விதிகளில் முதன்மையான 'ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்' என்பதையும் திருவள்ளுவரின் கீழ்க்கண்ட குறளையும் உணவு குறித்த நம் சிந்தையில் எப்போதும் இருத்துவோம்.

'அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.'

இறுதியாக உணவு செய்முறைப் பகுதியில் அவர் கூறும் 'தயிர் கதலி' எனும் தயிரில் வாழைப்பழம் பிசைந்து சாப்பிடும் முறையானது சிறுவயதில் எனது குடும்பத்தில் இருந்துள்ளது என்பதையும், சோற்றில் தயிர் ஊற்றி எங்கள் ஊரான நாராயணத்தேவன்பட்டியில் விளைந்த பச்சை வாழைப்பழத்தைப் பிசைந்து சாப்பிட்டது அமுதமேதான் என்ற தகவலையும் வாயில் எச்சிலூற நினைவுகூர்கிறேன்.

உணவு நூல் - மயிலை சீனி. வேங்கடசாமி - தடாகம் வெளியீடு, 112, திருவள்ளுவர் சாலை, சென்னை - 600 041 - விலை ரூ.100.00 - தொடர்புக்கு: 8939967179, வலைத்தளம்: www.thadagam.com

- அன்புச்செல்வன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.