ஜெயமோகன் என்ன எழுதினாலும் அது பெரும் சர்ச்சை ஆகிவிடுகிறது. அவரும் பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், இடதுசாரிகள் என்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு சுழற்றி அடிக்கிறார். அவரை மறுக்க ஒரு பெருங்கூட்டம் புறப்படுகிறது. சில நாட்கள் பின்பு இன்னொரு கட்டுரை, இன்னொறு மறுப்பு.

ஓர் எழுத்தாளர் சமூகப்பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளியிடுவது அவரது உரிமை. ஆனால் ஜெயமோகனின் கருத்துக்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், அவை தமிழின் முதன்மையான எழுத்தாளரால் வெளியிடப்படுகிறது என்ற பிரச்சாரத்தால்தான்.

 ஜெயமோகன் எப்போதிருந்து தமிழிலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கிறார்? எப்படி அந்த இடத்தைப் பிடித்தார்? எதனடிப்படையில் அவர் அங்கே இருப்பதாகக் கருதப்படுகிறது? அவரை அந்த அளவுக்கு வாசகர்கள் மதிக்கிறார்களா? அல்லது அது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பமா? என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். அதற்காக அவரது நூல்கள் எவ்வளவு விற்றுள்ளன என்று ஒரு சிறிய சர்வே எடுத்து பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

நாம் பட்டியலிடுகிற விபரங்களில் லைப்ரரி ஆர்டர் எனப்படும் நூலகங்களுக்கான பதிப்புகளும் அடங்கும். கூடவே இப்போதெல்லாம் ஒரு பதிப்பு என்பது 1000 பிரதிகள் என்றில்லை. அவரவர் வசதிக்கு தகுந்தபடி 300, 500 என புத்தகங்கள் போட்டுக் கொள்கிறார்கள். அதன்படி ஜெயமோகனின் நூல்கள் 1000 வீதமா, 500 வீதமா, 300 வீதமா என்று யாருக்கும் தெரியாது. எப்படி இருந்தாலும் அவரது எந்த நூலும் விற்பனையில் சாதனை படைக்கவே இல்லை என்பதைத்தான் எனது தேடலில் கண்டறிய முடிந்தது.  அவரது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் உடைவதால் ஒரு சின்ன வருத்தம் கூட ஏற்பட்டது.

எண் நூலின் பெயர் வெளிவந்த ஆண்டு பதிப்பு
1 விஷ்ணுபுரம் 1997 5 (19 வருடங்களில்)
2 பின்தொடரும் நிழலின் குரல் 1999 4 (17 வருடங்களில்)
3 கொற்றவை 2005 3 (11 வருடங்களில்)
4 காடு 2003 2 (13 வருடங்களில்)
5 ஏழாம் உலகம் 2000 2 (16 வருடங்களில்)
6 ரப்பர் 1990

2 (26 வருடங்களில்)

7 கன்னியாகுமரி 2000 2 (16 வருடங்களில்)
8 வெள்ளையானை 2013 2

 

இந்த நூல்கள் எல்லாம் முதலில் நற்றிணை பதிப்பகத்தில் வந்தன. சென்ற ஆண்டு ஏதோ பிரச்சினையில் நூல்கள் விற்றுத் தீராத நிலையிலேயே கிழக்கு பதிப்பகத்துக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டன. எனவே இன்னொரு பதிப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளிவிபரங்களின்படி பார்த்தால்,

 • jayamohanஇவருக்கு ஆன்ம வெளிச்சம் பாய்ச்சிய 'விஷ்ணுபுரம்' நாவல் வெளிவந்த ஆண்டு 1997. கடந்த 20 வருடத்தில் அந்த நாவல் 5 பதிப்புகளைக்கூட தாண்டவில்லை. அந்த நாவலின் பெயரில் வருடா வருடம் விருது வேறு கொடுக்கிறார்கள்.
 • புதுக்காப்பியம் என்கிற பெயரில் இவர் 2௦௦5-இல் எழுதிய 'கொற்றவை' கடந்த 12 வருடங்களில் இதுவரை கண்ட பதிப்புகள் மொத்தம் 3 மட்டுமே.
 • 1999-இல் வெளிவந்த 'பின் தொடரும் நிழலின் குரல்' 18 ஆண்டுகளாகியும் 4-வது பதிப்போடு திணறிக் கொண்டிருக்கிறது.
 • 'ரப்பர்', 'காடு', 'ஏழாம் உலகம்', 'கன்னியாகுமரி', 'வெள்ளை யானை' என பத்துக்கும் மேற்பட்ட நாவல்களின் பதிப்பு பராக்கிரமங்களும் இதே அளவுதான்.
 • இதில் சிறுகதை தொகுப்புகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். பாரிவேந்தர் பச்சைமுத்து கையில் விருது வாங்கியும் கூட 'அறம்' 6 பதிப்புகள்தான்.
 • அதைத்தவிர 'திசைகளின் நடுவே'யிலிருந்து 'வெண்கடல்' வரை ஒன்றிரண்டு பதிப்புகள்தான்.
 • இவர் ஆன்மிகம், தத்துவம், அரசியல், பண்பாடு, வரலாறு என்று அதாவது இந்து ஞான மரபிற்கும், இன்றைய காந்திக்கும், கண்ணகிக்கும் என பக்கம் பக்கமாக எழுதிக் குவித்த நூல்கள் அதன் பக்கங்களின் எண்ணிக்கை அளவிற்கு கூட விற்றிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
 • இவைத்தவிர தனது அனுபவம், இலக்கிய விமர்சனங்கள், அறிமுக நூல்கள் என வெளியிட்ட வெளியீடுகளுக்கும் இதே கதிதான்.
 • நாடகம், சிறுவர் இலக்கியம், தற்காலம், இன்றைய காலம், சமகாலம் என்ற தலைப்பில் ஜெயமோகன் மொழிபெயர்த்தவை, எழுதியவை பதிப்புகளாக வந்திருப்பது பற்றி அவரின் தீவிர விசிறிகளுக்குக்கூட தெரியவில்லை. விசாரித்தால் ‘என் தலைவன் எழுதாதை எழுதியதாகக் கூறி அவதூறு செய்ய வேண்டாம்’ என சட்டென்று நம் முகத்தில் அறைந்தார்போல பேசுகிறார்கள். அப்படியானால் எவ்வளவு விற்றிருக்கும் என நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
 • இதேபோல இந்துமதம் சில விவாதங்கள் என்ற நூலுக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட தமிழ்ஹிந்து.காமில் (http://www.tamilhindu.com/) வரவேற்பு விமர்சனம் வந்தும்கூட இப்போது அந்த நூலை மறுபதிப்பு போட யாருக்கும் துணிச்சலில்லை.

இத்தனைக்கும் சினிமா வசனகர்த்தா என்ற 'புகழும்' ஜெயமோகனுக்கு இருக்கிறது.

இங்கே நாம் தமிழில் பத்து பதிப்புகளைக் கடந்த மற்ற எழுத்தாளர்களின் நாவல்களை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தமிழில் எழுதினால் வரவேற்பே கிடைப்பதில்லை என்ற இவர்களின் உள்நோக்கம் கொண்ட காரியவாத புலம்பலை நாம் புரிந்து கொள்ள முடியும்.

 • சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை', 'ஜேஜே சில குறிப்புகள்' நாவல்கள் பல பதிப்புகளைக் கண்டுள்ளன. இதில் புளிய மரத்தின் கதை மலிவுப் பதிப்பாக பல்லாயிரம் வெளியிடப்பட்டு அதன் பின்பு இன்னமும் விற்றுக் கொண்டிருக்கிறது.
 • ப.சிங்கரத்தின் 'புயலிலே ஒரு தோணி'யும் அப்படித்தான்.
 • 'வாடிவாசல்' நாவல் 26000 பிரதிகள் வரை போயுள்ளது.
 • இன்றையச் சூழலை கணக்கில் கொண்டால், 2004ம் ஆண்டு வெளிவந்த ச.பாலமுருகனின் 'சோளகர் தொட்டி' 10 பதிப்புக்கும் மேல் சென்று விட்டது.
 • 2007ம் ஆண்டு வெளிவந்த, மொழிபெயர்ப்பு நாவலான பி.எச்.டேனியலின் 'எரியும் பனிக்காடு' 10வது பதிப்பு வெளிவந்து விட்டது.

தவிர தரம், வணிக இதழ் பிரபலம் என்றெல்லாம் பேச வாய்ப்பிருக்கிறது என்பதால் ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் எழுத்துக்களைச் சேர்க்கவில்லை. கி.ரா போன்றவர்களின் நூல் பற்றிய தகவல்களை இப்போதைக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்மையில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற நாவல்களைப் பார்த்தால்,

1. 'பார்த்தீனியம்', 'நஞ்சுண்ட காடு' நாவல்கள் வெளிவந்த உடனே இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது. இந்நாவலாசிரியர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இல்லை என்றாலும் இந்நூல்களுக்கு ஏராளமான விமர்சனக் கூட்டங்களும், விமர்சனங்களும் வெளிவந்துள்ளன.

2. நக்கீரனின் 'காடோடி' நாவலுக்கு இரண்டு ஆண்டுகளில் 30 கூட்டங்களுக்கு மேல் நடந்துள்ளன. சுற்றுச் சூழல் அரங்கில் மிக முக்கியமான நாவலாக காடோடி பேசப்படுகிறது.

3. இவர் புதுக்காப்பியம் என்று கண்ணகியை வைத்து எழுதிய 'கொற்றவை'யுடன் ஒப்பிடும்போது 2014-இல் வெளியான சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பிற்கு உட்படுத்திய இரா.முருகவேளின் 'மிளிர்கல்' மூன்றே ஆண்டுகளில் 1000 வீதம் 5 பதிப்புகளைக் கண்டுள்ளது.

  ஜெயமோகனை விட அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியல் முழுமையானது அல்ல. இன்னும் ஏராளமான எழுத்தாளர்களின் நூல்கள் இருக்கிறார்கள். உதாரணம் தொ.பரமசிவன். அவரது ‘பண்பாட்டு அசைவுகள்’ இதுவரை 14 பதிப்புகள் கண்டு, 15,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளது.

தனது ஆக்கங்கள் பெரிய அளவில் வாசகர்களிடம் கவனம் பெறாத நிலையில், அவர் “எழுதும் கலை” என்கிற தலைப்பில் ஒரு வழிகாட்டி நூலை எழுதியிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை.

ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி, ஒரு மாணவர், மகளிர், மீனவர், தலித், பழங்குடி, மத்தியதர வர்க்கம் என சமூகத்தின் எந்தப் பிரிவினராலும் அல்லது அப்பிரிவினர்களின் முன்னோடிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல், பெரும்பாலும் பார்ப்பனர்களின் ஒரு பிரிவு மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் தனது நூல்களின் நாலைந்து பதிப்புகளை வைத்துக்கொண்டு தமிழின் முதல்தர எழுத்தாளன் தான்தான் என தனக்குத்தானே கூறிக்கொள்ள ஒருவரால் முடியுமென்றால் அது ஜெயமோகனால் மட்டுமேதான் முடியும்.

திராவிட எதிர்ப்பு, பெண்ணிய எதிர்ப்பு, சிறுபான்மை எதிர்ப்பு, இந்துத்துவ ஆதரவு ஆகியவற்றை வெளிப்படையாகப் பேச ஆளில்லாத காரணத்தால் இவரை அந்தப் பிரிவு உயர்த்திப் பிடித்தது. ஆனால் ஜெயமோகனால் தன்னை அதற்கு ஏற்றாற்போல வளர்த்துக் கொள்ள முடியவில்லை. நவீன சமூகம் பற்றி அவரால் எழுத முடியவில்லை. சமூகத்தை அவதானிப்பதற்கு ஏற்ற சமூக அறிவு இல்லை. சமூகத்துக்குச் சொல்ல எதுவும் இல்லை. எனவேதான் வெண்முரசில் இறங்கிவிட்டார்.

தனது ஆக்கங்கள் பெரும்பாலானவர்களை சென்று சேரவில்லையென வெளிப்படையாகவே பேசுகிற சாருவிடம் கூட ஒரு நேர்மை இருக்கும். ஆனால் ஜெயமோகன் தனிரகம். ஒன்றுமே இல்லாத மோடியை ஊடகங்கள் காசு வாங்கிக் கொண்டு ஊதிப் பெருக்கியதே… அதே கதைதான் இவருடையதும். மோடிக்கு ஊடகங்கள் இருக்கிறது. இவரோ “தனக்குத் தானே திட்டம்” மூலம் அதை செயல்படுத்தி வருகிறார்.

தான் உன்னதமான, கூர்மையான, ஆழமான எழுத்தை எழுதுவதாக தனக்குத்தானே கூறிக்கொள்ளும் இவரை இன்றுவரை தமிழக வாசகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே மேலே உள்ள விபரங்கள் உணர்த்துகின்றன.

 இவர் கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், சுஜாதா போல பெஸ்ட் செல்லரும் கிடையாது. புதுமைபித்தன் போல சமகால அல்லது கடந்தகால தமிழ்ச் சமூகத்தை அதன் காலத்தை, இடத்தை, அப்போதைய சமூக, அரசியல், பொருளாதார சூழல்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் புனைவாசிரியரும் கிடையாது.

‘நானும் ரௌடி, நானும் ரௌடி’ என்று இவர் கூவிக் கொண்டிருக்கும் காலத்திலேயேதான் பலரின் நாவல்கள், மொழிபெயர்ப்புகள், தத்துவ - அரசியல் நூல்கள் ஆயிரக்கணக்கில் பல பதிப்புகளைத் தாண்டி விற்றுத் தீர்ந்திருக்கிறது.

  இவர் ஊடக பிரமை என்றும், குருவிமண்டை என்றும் அருந்ததிராயைச் சொன்னாலும், அது ஜெயமோகனுக்கே அதிகம் பொருந்துகிறது. இப்போது இந்த விபரங்களை பரிசீலிக்கிற எல்லோருக்கும் ஜெயமோகன் ஒரு நல்ல எழுத்தாளர் இல்லையென்பது விளங்கி விடுகிறது. நல்ல ஆக்கங்களை கொடுத்து வாசகர்களிடம் பிரபலமாக முடியாத அவரது இயலாமை சமூகப் பிரச்சினைகள் குறித்து விதண்டாவாத கருத்து சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தவும், அதன்மூலம் பிரபலமடையவும் தூண்டுகிறது.

தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருந்த மற்றவர்களுக்கு வாசகர்கள் கொடுத்திருந்த மதிப்பைப் பார்க்கும் போது ஜெயமோகன் ஒன்றுமே இல்லை. அவர் முதலிடத்திலும் இல்லை என்பதே தெளிவாகிறது. எத்தனை குழந்தைகளுக்கு ஜெயகாந்தன் என்று பெயர்? ஜெயகாந்தன் வருகிறார் என்றால், விடிய விடிய காத்திருந்த கூட்டம்... இத்தனைக்கும் அவர் தெருமுனைகளிலும், கிராமங்களிலும் உழைக்கும் மக்கள் நடுவே பேசினார்.

அண்மையில் ஜெயமோகன் தான் வழக்கமாகச் செல்லும் வங்கியின் ஊழியர்களுக்குத் தன்னைத் தெரிவதில்லை என்று சொல்லியிருந்தார். அதே இடத்தில் சுஜாதாவையோ, பாலகுமாரனையோ வைத்துப் பாருங்கள். மேனேஜர் ஓடி வந்திருப்பார் அல்லவா? இன்றுவரை தங்கள் வீட்டிலும் கடைகளிலும் மு.வ. படத்தை வைத்திருக்கும் அவரது வாசகர்களை நினைத்துப் பாருங்கள்.

மத்தியதர வர்க்கமோ வேறு எந்த வர்க்கமோ அதற்காக ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார்? அவர்கள் ஏன் இவரைக் கொண்டாட வேண்டும்? வாசகர்கள் எல்லோரையும் வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறார்கள்.

ஆக அறிவுஜீவிகள்தான் பிம்பங்களைப் பார்த்து குழம்பிப் போய், இவரைத் திட்டி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்குறிப்பு: “எழுதியவனைக் கண்டுபிடித்தல்” என்கிற தலைப்பில் ஜெயமோகன் ஒரு நூலை எழுதி இருக்கிறார். கூடிய விரைவில் அது சாத்தியமாகும்.

- பாவெல் சக்தி

Pin It