kasirajan 450வரலாற்றில் மனித வாழ்க்கை ஓயாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயங்கு வதோடு மாறிக்கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கிறது. கலை, இலக்கிய, பண்பாட்டு வடிவங்கள் வாயிலாக அவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. மனித வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சியில் அதன் மாறுபட்ட தனித்தன்மைகளை இனம் காண முடிகிறது. காடுகளில் விலங்குகளைப் போல சிதறுண்டு பரவலாக வாழத் தொடங்கிய மனித இனம் படிப்படியாக வளர்ந்து இன்று வியக்கத்தகுந்த வகையில் ஓர் உலக சமுதாயமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி மனிதர்கள் ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழ வேண்டிய சூழல்களின் காரணமாகத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியையும் தீர்மானிப்பதில் கலை இலக்கிய வடிவங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. வாழ்க்கையிலிருந்து புதிய வடிவம் பெறுவதும், புதிய வடிவத்தி லிருந்து வாழ்க்கை வளர்வதும் தவிர்க்க முடியாதவை. அவை, ஏதேனும் ஒருவிதத¢தில் வாழ்க்கையை அடையாளப்படுத்துகின்றன. அந்த அடையாளம் வாழ்க்கையினூடே தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதோடு புதிய அடையாளத்தையும் காட்டுகிறது.

அந்த வகையில், உலக நாடுகள் முழுவதிலும் கலை, இலக்கிய, பண்பாட்டு, நாகரிக அடை யாளங்கள் தனித்தன்மைகளோடு தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித வரலாற்றில் இந்த வாழ்வியல் இயக்கம் தொடர்ந்து நிலை பெற்று இயங்கி வருகிறது. நிறம், இனம், உருவம், மொழி, நடைமுறைச் செயல்கள், மனித உறவுகள் போன்றவற்றில் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது இயற்கை சார்ந்த வாழ்க்கை பொருளுற்பத்தி முறையும், பங்கீடும், அவற்றின் காரணமாக நிலை பெறும் உற்பத்தி உறவுகளும் அடங்கியவை. பழைய உற்பத்தி முறையிலிருந்து புதிய உற்பத்தி முறைக்கு மனித சமுதாயம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதை வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

ஒவ்வொரு சமுதாய அமைப்பிலும் உற்பத்தி முறை சிறப்பாக நடைபெற ஒழுங்கான ஓர் ஒருங் கிணைப்பு இருக்க வேண்டும். அந்த ஒருங் கிணைப்பை வரலாறு நெடுகிலும் நிகழ்த்தி வருவது அறம் சார்ந்த கலை, கலாச்சாரப் பண்பாட்டு அடிப் படைகளே. அவையே பொருளுற்பத்திச் சமுதாயத்தை பாதுகாப்பவையாக உள்ளன. மனித உறவுகளை வளர்த்துச் செழுமைப்படுத்துகின்றன. இந்த அடிப் படையில்தான் உலகக் காப்பியங்கள் தோன்றிப படிப்படியாக வளர்ந்து மனித வாழ்க்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன.

ஓர் எடுத்துக்காட்டாக, முதலில் மகாபாரதத் தையும், இராமாயணத்தையும் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால் இந்த வரலாற்று இயக்கம் பற்றிய புரிதல் கூடுதலாகும். பலவகையான வேறுபாடு களையும், ஏற்றத்தாழ்வுகளையும், வாழ்க்கை முறை களையும் உள்ளடக்கியுள்ள இந்திய சமுதாயத்தை ஒழுங்கிணைப்பதில் இந்தியக் காப்பியங்கள் முக்கிய மான பங்கு வகிக்கின்றன. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை ஒருங்கிணைப்பதில் இவை நன்மை, தீமைகளை அடையாளப்படுத்தி அறத்தை இனம் காட்டுகின்றன. அறத்தின் அடிப்படையிலான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை இலட்சியக் கண்ணோட்டத்தோடு இவை முன் வைத்தவை 'செவ்வியல்' இலக்கியங்கள். முன் வைத்த இலட்சியக் கண்ணோட்டத்திற்கு மாறாக அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் எதார்த்த இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தமை இருவகையான போக்குகளுமே மனித வாழ்க்கையில் அறவியல் நிலைநிறுத்தவே முனைந்தன.

இதுபோன்ற ஓர் அறவியல் கண்ணோட்டம் உலக இலக்கியங்கள் முழுவதுமே தொடர்ந்து வெளிப் படுத்துகின்றன. ஒவ்வொரு நாட்டுக்கும் அவற்றிற்கே உரிய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட காப்பியங்கள் தோன்றி வளர்ந்தன. இந்த அடிப்படைக் கண்ணோட்டத்தில் உலக மொழிகளிலெல்லாம் காப்பியங்கள் தோன்றின. அவை தோன்றிய வரலாற்றுப் பின்னணியையும், வாழ்க்கையையும் அடையாளம் கண்டு வரலாற்று வளர்ச்சிக்கு உகந்த விதத்தில் கலை இலக்கியங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இது, மனித சமுதாயத்தின் வளர்ச்சியை இன்று வரை இனம் கண்டு கொள்ள உதவுகிறது.

இந்த அடிப்படையை உணர்த்தும் விதத்தில் இரா.காசிராசன் தன்னுடைய 'உலகக் காப்பியங்கள்' என்ற ஆய்வு நூலை வடிவமைத்திருக்கிறார். இது வரை, காணக்கிடைத்த உலகக் காப்பியங்களை அவைகளின் உள்ளடக்க அடிப்படையில் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்துகிறார்.  இது குறித்த தன்னுடைய முதன்மையான நோக்கத்தை இவர் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.

'தமிழ்க் காப்பிய ஆய்வாளர்களுக்கு ஒப்பீட்டுக் கல்விக்குப் பயன்படும் வகையில் ஓரளவு உலகக் காப்பியங்களைத் தொகுத்தளிக்கும் முயற்சியே இந்நூல். இதனை, 'உலகக் காப்பிய இலக்கிய வரலாறு' எனல் பொருந்தும். இருபத்து நான்கு உள் தலைப்புக்களில் அமையும் இந்நூலில் முதல் மூன்று தலைப்புக்களில் காப்பியத்தின் தன்மை, தோற்றம், வளர்ச்சி, வகை முதலானவை இடம் பெறுகின்றன. எஞ்சியவை அவ்வந்நாட்டு அல்லது மொழியில் எழுந்துள்ள காப்பியங்களின் தொகுப்புரையே. இங்குச் சில உலகச் சிறப்புமிக்க காப்பியங்களின் கதைப் பகுதியும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. காப்பியம் எழுந்துள்ள காலச்சூழல், ஆண்டு, ஆசிரியர் தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றிய விவரங்கள் காப்பியத்தின் முக்கிய நோக்கம் முதலானவும் இடம் பெறும்.'

'இந்நூல், காப்பிய காலச் சிந்தனைப் போக்கு உலகக் காப்பியங்கள் அனைத்திற்கும் பொது என்ற உணர்வை வாசகர்கட்குத் தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கை உடையேன்.'

தொடக்கத்திலேயே இவர் காப்பியக் கொள்கை குறித்த இவருடைய தெளிவை முன்வைத்துத் தனது கருத்துக்களை வெளியிடுகிறார்.

'காப்பியத்தைக் குறிக்கும் 'எபிக்' (Epic) என்ற சொல் 'எபோஸ்' (Epics) என்ற கிரேக்கச் சொல்லி லிருந்து ஆக்கப்பட்டது. இக்கிரேக்கச் சொல்லின் பொருள் 'சொல்' அல்லது 'பாடல்' என்பதாகும். காலப்போக்கில் இதன் பொருள் விரிவடைந்து வீரயுகப் பண்பினைக் கருவாகக் கொண்ட நீண்ட கூற்றுவகைப் பாடலைக் குறிக்கப் பயன்பட்டது.

இவருடைய இந்தக் கருத்து, உலக இலக்கியங் களில் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதை இந்த ஆய்வு நூல் மிகுந்த அக்கறை யோடும், ஈடுபாட்டோடும் ஆழமாக விளக்கிக் காட்டித் தெளிவுபடுத்துகிறது.

காப்பியங்கள் வரலாற்றினூடாக எப்படிப் பலவிதத்திலும் மாறுபட்டு வளர்ந்துள்ளன என்பதை திறனாய்வாளர்களான சாட்விக், லூயிஸ், ஏ.எஸ். மெகன்ஸி, டி.ஏ.சிங்லர், எம். வின்டர்னிட்ஸ், சர்.ஜான்கிளர்க், சி.எம்.பௌரா போன்றவர்களின் மதிப்பீடுகளை முன்வைத்து காப்பியங்களின் தனித் தன்மைகளையும், பொதுத்தன்மைகளையும் விளக்கு கிறார்: 'தொல்லிலக்கிய வகையில் காப்பியம் தனிச்சிறப்புமிக்கது. உலக மொழிகள் அனைத்திலும் ஆதி இலக்கியம் காப்பியங்களாக அமையக் காணலாம். இவை பழங்கால மக்களின் நாகரிக பண்பாட்டுக் கருவூலமாக இன்றும் கருதப்பட்டு வருகின்றன. கற்பனை வளமும், சிந்தனைத் திறமை, சுவை உணர்வும், இலக்கிய நயமு¤ம் மிக்க ஓர் உன்னதப் படைப்பே காப்பியம். மனித சமுதாயமும், மனித வாழ்க்கையுமே இதன் அடிப்படை.'

உலக அளவில், வரலாறு நெடுகிலும் முக்கிய மான மொழிகளில் தோன்றிய காப்பியங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவைகளைப் பற்றிய தனிச் சிறப்புக்களை விலாவாரியாக விளக்குகிறார். பாபிலோனிய சுமேரிய காப்பியம் முதலாக, பினீசியா, கிரேக்கம், கீப்ரு, இலத்தீன், ஆங்கிலம், அராபி, பாரசீகம், செர்மன் பிரஞ்சு, ஸ்காண்டிநேவியா, இத்தாலி, நெதர்லாந்து, ருசிய, ஸ்பானிய, போர்ச்சுக் கீசியம், தமிழ், வடமொழி, செர்பியா சுவிஸ், சீனம், சப்பானிய மொழிகளில் தோன்றிய மிகச் சிறந்த காப்பியங் களைப் பற்றிச் சுருக்கமாகவும், தெளிவாகவும், ஆழமாகவும் விளக்குவது இவரின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் அக்கறையையும் காட்டுகிறது.

காப்பியத்தின் தோற்றத்தை ஜான் கிளார்க் என்ற ஆய்வாளரின் கருத்தை முன்வைத்து இவர் கடவுளின் தோற்றத்தை விளக்குகிறார். 'காப்பிய இலக்கியங்கள் இனமரபுக் குழுவினரின் கடவுள் வழிபாட்டிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும்' என்கிறார் அவர். இதனை அவர் மேலும் விளக்குவதைக் குறிப்பிடுகிறார், இவர். 'மேலும், அவர் காப்பியம் என்பது தனிமனிதனின் மேன்மையைப் பற்றிப் புகழ்ந்து பாடும் ஒருவகை நாட்டுப்புறப் பாடலே' என்கிறார். இதனை அவர் மேலும் விளக்கிச் சொல்லுகிறார். 'முற்கால மனிதன் ஒரு தனி மனிதனின் சின்னம் அல்ல. அவன் ஒரு குழுவினரின் ஒரு சிறிய அங்கம். அவன் சொல்லும், செயலும், எண்ணமும் அவனைச் சார்ந்தவர்களோடு இணைந்தே அமைந்தன. அவன் தன் இனத்திற்காகவும், இனத்தாரின் எதிர்காலத்திற் காகவும் அவர்தம் உயர்வுக்காகவுமே வாழ்ந்தான். தனிக்குழுவினரின் முன்னோன் என்ற நிலையில் அவ்வினத்தாரின் பாதுகாவலனாகவும், பிரதிநிதி யாகவும், வாழ்ந்தான். அதன் மேன்மைக்காகவும் அவன் அரும்பாடுபட்டான். இப்படிப்பட்ட ஒருவிதத் தலைவனே நாகரிகத் தொடக்க கால இனமரபுக் குழுவினரின் வழிபடு கடவுளாகக் காலப்போக்கில் கருதப்பட்டான்.'

மனித வாழ்க்கையில் கடவுளர்களின் தோற்றங்கள் குறித்துத் தனது கருத்தை முன்வைத்த இவர் பழைய கிறிஸ்துவ காப்பியம் பற்றிய கருத்தையும் தெளிவு படுத்துகிறார். 'மனித ஆன்மா பற்றிய முழுநிலை விளக்கமாக உலகச் சிறப்புடைய ஐந்து இலக்கியங் களில் ஒன்று 'யோபு'. இக்காப்பியம் கீப்ரு மொழியில் எழுதப்பட்டுள்ளது. மனித ஆன்மாவின் போராட்டங் களை எடுத்தியம்புவதால் இது அகவாழ்வியல் காப்பியமாக எண்ணப்படுகிறது.'

'கி.மு.4-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்துள்ள இக்காப்பியம் முற்பட்ட காலப் பாடல்கள் பலவற்றை ஒழுங்கு திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது. 'பழைய ஏற்பாட்டில்' எகிப்திலிருந்து இஸ்ரேலியர் தொடர்ந்த பயணத்தைக் குறிக்கும் பகுதியே இக்காப்பியத்தின் கதைப் பொருள்.'

காலம் தோறும் சமுதாயத்தின் தேவைக்குத் தகுந்தபடி காப்பியத்தின் முதல் வடிவம் படிப்படி யாகச் செழுமைப்படுத்தப்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது என்ற கருத்து இதிலிருந்து புலனாகிறது.

அடுத்து அரேபிய, பாரசீகக் காப்பியம் குறித்து விளக்கும்போது அதன் தனித்தன்மையை இனம் காட்டுகிறார். பாலைவனத்திலும் காப்பியம் தோன்றிய வரலாற்று உண்மையை விளக்குகிறார்.

'கரை காண முடியாத பாலை நிலத்தைக் கடக்கும் வணிகர் கூட்டம் தங்கள் ஒட்டகங்களில் சென்று கொண்டிருக்கும் போது வழித்துயர் நீங்கப் பல சிறுசிறு பாடல்களைப் பாடினர். இவர்களே அரேபிய மக்களுக்குப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தவர்கள். இப்பாலைவன வழிப்போக்கர்களால் பாடப்பட்ட பாடல்கள் மிகச் சிறியனவாக அமைந்ததால் இவை காப்பிய நிலையையும், தன்மையையும் பெறாது போயின. இப்பழங்காலப் பாடல்கள் இன்று அரேபியர்களிடம் இல்லை.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டில், சிரியா நாட்டு மக்கள் அரேபியர்கட்கு எழுத்துக்களைக் கற்றுக் கொடுத்த பின்னர்தான் அவர்தம் பாடல்கள் எழுத்து வடிவம் பெற்றன. இக்காலக் கவிஞர்கள் ஞானிகளாகவும் மந்திர வாதிகளாகவும் மக்களால் கருதப்பட்டனர். இவர்தம் மந்திர உச்சரிப்புகள் எதிரிகளைத் தோற்கடிப்பதாக நம்பினர்.'

'மிகப் பழங்காலத்து. முற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள் தங்கமையினால் எழுதப்பட்டு அவை 'மெக்கா' விலுள்ள 'காபா' வில் பூட்டி வைக்கப் பட்டதாகக் கருதப்படுகின்றன. இப்பாடல்கள் 'முத்துத் தொங்கல்' என அரேபியர்களால் அழைக்கப்படுகின்றன.' இதுபோன்ற வியக்கத்தக்க செய்திகளை இனம் கண்டு தனது ஆய்வை இவர் நிகழ்த்தியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

இதைப் போலவே, 'அமெரிக்கக் காவியம்' பற்றிய தனது ஆய்வு அடிப்படையிலான கருத்துக்களை முன்வைத்து அதன் தனித்தன்மையைப் புலப்படுத்துகிறார் இவர்.

'ஐரோப்பியர்கள் அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்கு முன்னர் அக்கண்டத்தில் பலதரப்பட்ட இந்திய மரபினர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஏறத்தாழ 600 வகை வேறுபட்ட மொழி அல்லது வட்டார வழக்கு மொழிகளைப் பேசி வந்தனர். ஆதிகால அமெரிக்கர் தம் சமயம், மரபு முதலானவற்றை அறிய முடியவில்லை. இவர்களிடையே வளமான நாட்டுப் பாடல் மரபு வளர்ந்து இயற்கை பற்றிய புராணக் கதைகளும், வீரர் பற்றிய கதைகளும் மரபு வழியாக ஒருவர்பின் ஒருவராக வாய்மொழியாகவே கூறப்பட்டு வந்துள்ளன. இவர்கள் பலதரப்பட்ட ஆதிக்குடிகளாகக் காணப் பட்டனர். இக்குடிகள் பண்பாடு, நாகரிகமற்ற நிலையில் விலங்குத் தன்மையுடையவர்களாக வாழ்ந்தனர். எனவே, இவர்தம் புராணக் கதைப் பாடல்களும், நாட்டுப் பாடல்களும் இத்தன்மை யதாகவே அமைந்தன.'

ஒப்பீட்டுக் கண்ணோட்ட ஆய்வு முறையில் இவர் சைன, சப்பானியக் காப்பியங்களை மதிப்பிடு கிறார். மேற்கத்திய நாட்டுக் காப்பியங்களை முன் வைத்து அவற்றுடன் இவைகளை ஒப்பிடுகிறார்.

'ஐரோப்பிய நாடுகளில் காணப்படுவது போன¢று சிறந்த காப்பியங்கள் சைன, சப்பானிய இலக்கியங்களில் காணப்படவில்லை. இதற்குப் பதிலாக முல்லை நிலத்து ஆயர் வாழ்வு பற்றிய பாடல்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. Ôஒயிட் ஆஷ்டர்' அல்லது கடமையுணர்வுடைய Ôநங்கை சிரகிகுவின் கதை' என்னும் காதல் பாடல் இவ்விரு மொழி இலக்கியங்களிலும் காப்பியச் சிறப்பைப் பெற்றுள்ளது. பேராசிரியர் ஐனோவ் இதனைச் சைன மொழியில் கவிதை நடையில் எழுதினார். இதனைத் தழுவி நாபுமி ஒச்சியே என்பவர் சப்பான் மொழியில் எழுதியுள்ளார்.

தொடர்ந்து 'இந்தியக் காப்பியம்' குறித்த எனது ஆய்வை முன்வைத்து விரிவாகவும், தெளிவாகவும், ஆழமாகவும் விளக்குகிறார். குறிப்பாக, 'வட மொழிக் காப்பியமே இந்தியக் காப்பியத்தின் அடிப்படை' என்பதை இவர் நிறுவுகிறார்.

'இந்திய மொழிகளில் காலத்தால் முற்பட்டதும் இலக்கிய வளம் நிறைந்த மொழியும் சமஸ்கிருதமே. இந்தியப் பொது இதிகாசங்களும் 'பதினெண் புராணங் களும் முதன் முதல் எழுதப்பட்டது வடமொழியிலே தான்'. பல இந்தியக் காப்பியங்களும் இம் மொழியின் இதிகாச, புராண, மகா காவியங்களில் தழுவல்களாகவே அமைகின்றன. தமிழில் உள்ள பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம், குண்டல கேசி, அரிச்சந்திரபுராணம் முதலானவும் வடமொழித் தழுவலாக அமைவனவே.

தமிழ், மலையாளம், கன்னடம் முதலான மொழி களைத் தாய்மொழியாக உடைய பண்டிதர்களும் வடமொழி கற்று அம்மொழியில் பல எண்ணற்ற காப்பியங்களைப் படைத்துள்ளனர். இது இம் மொழிக்கமைந்தது ஒரு தனிச் சிறப்பாகும். இதிகாசங்கள், புராணங்கள், மகாகாவியங்கள், சம்பு, சந்தேச காவியங்கள் பிறமொழிகளில் எழ, வட மொழியே மூலமாக அமைந்துள்ளது. இக்காப்பியங் களின் இலக்கிய நூலும் முதல்முதல் வடமொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. இராமாயணமும், பாரதமும் இதிகாசங்களாக அமையினும் காப்பிய வகையில் அடங்குவனவே. மேனாட்டார் பகுப்பு முறைப்படி, இவை முன்முறைக் காப்பியங்களாக அமைவன. இவற்றில் காலத்தால் முற்பட்டது இராமாயணமே.'

தொடர்ந்து இவர் வரலாற்றுக் காவியங்கள் பற்றியும் குறிப்பிடுகிறார். 'இதிகாச புராணங்களி லிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும் வளர்ந்தனவே வரலாற்றுக் காப்பியங்கள். வரலாற்று வேந்தர்களின் வரலாறு சிலவும், தென்னாட்டு வேந்தர்களால் விஜயநகர வேந்தர், தஞ்சை நாயக்க, மகாராஷ்டிர மன்னர்கள் ஆகியவர் தம் வரலாறும் பல வடமொழிக் காப்பியப் பொருளாக அமைந்துள்ளன.'

வரலாற்றுக் காப்பியங்களுக்குத் தகுந்த எடுத்துக் காட்டுகளாக விளங்குபவை 'ஹர்ஸசரிதம்', 'கௌடவதம்', 'விக்கிரமாங்க தேவ சரிதம்', இராஜதரங்கிணி, விஜயநகர வரலாறு, தஞ்சை வரலாறு போன்றவற்றைக் குறிப்பிட்டு அவற்றில் மாறுபட்ட தன்மைகளையும் இவர் தெளிவுபடுத்துகிறார்.

தொடர்ந்து, அஸ்ஸாம், இந்தி, உருது, ஒரியா, காஷ்மீரி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி, வங்காளி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற இந்திய மொழிகளில் காணப்படும் காப்பியங் களையும் அவற்றின் தனித்தன்மைகளையும் இவர் அடையாளப்படுத்துகிறார்.

'தமிழ்க் காப்பியங்கள்' குறித்துத் தனது மதிப்பீடுகளை முன்வைத்து அவற்றின் வகையினங்களை விவரிக்கிறார்.

'தமிழில் காப்பியங்களை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், காப்பியம், கதைப் பாடல், சிற்றிலக்கியம் என வகைப்படுத்தலாம். இவற்றிடையே சில சிறுசிறு வேறுபாடுகள் காணப்படினும் இவற்றைக் காப்பியங்கள் என்றே கொள்கின்றனர். வடமொழியில கவியால் எழுதப்படும் அனைத் தையும் 'காவியம்' என்ற சொல்லால் குறிக்கின்றனர்.'

தமிழில் எழுதப்பட்டுள்ள தற்காலக் காப்பியங்களையும் இனம் கண்டு அவற்றைக் குறித்த தனது தெளிவான கருத்தை முன்வைக்கிறார்.

'தற்காலக் காப்பியங்கள் பெரும்பான்மையும் கதைப்பாடல்களே. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், கவிமணி, முடியரசன், புலவர் குழந்தை, கவியோகி சுத்தானந்த பாரதியார் முதலானோர் தற்காலக் கதை, காப்பியங்கள் பாடியுள்ளனர். 'காவியம்' என்ற பெயரில் இவர்தம் கதைப் பாடல்கள் குறிக்கப்படுகின்றன.

இவற்றிற்கு முன்மாதிரியாகத் தமிழில் விளங்கி வந்த காப்பியங்களையும் இவர் குறிப்பிட்டு அவை குறித்த தனது கருத்துக்களை வலியுறுத்துகிறார். அவற்றில் பெருங்கதை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, உதயண குமார காவியம் போன்றவை அடங்கும்.

அதே சமயம் மறைந்து போன தமிழ் காவியங் களைக் குறித்தும் தனது கருத்துக்களை முன் வைக்கிறார்.

'தமிழ் இலக்கிய வரலாற்றில் எண்ணற்ற நூற்கள் பெயரளவில் மட்டுமே நின்று நிலைபெறக் காண்கிறோம். உரையாசிரியர்களின் உரைக் குறிப்புக் களால் இவற்றை அறிகிறோம். அவர்களே சில நூல் களிலிருந்து பாடல்களை எடுத்து மேற்கோள் காட்டு கின்றபோது தாங்கள் பாடல்களை எடுத்தாண்ட நூலின் பெயரைக் காட்டாது விட்டு விடுகின்ற இடங் களும் உண்டு. இங்ஙனம் எடுத்தாண்ட பாடல்கள் பல இன்னும் எந்தெந்த நூற்களுக்கு உரியன என்று இன்றும் அறிய முடியாதவாறு இருந்து வருகின்றன. காப்பிய இலக்கியங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பழைய நூற்களின் அழிவிற்குப் பல காரணங்கள் உண்டு. புதுவருடப் பிறப்பின் போது பழைய பொருட்களை ஆற்றில் வீசி எறியும் வழக்கத்தால் பல ஏடுகள் அழிந்ததாக மு.அருணாசலம் குறிப்பிடுவார். அதோடு சமயப் போராட்டங்களும், மக்களின் கவனக் குறைவும் இதற்கு அடிப்படைக் காரணம் எனலாம். இன்று கிடைத்துள்ள இலக்கியங்களினும் அழிந்துபட்ட நூற்களே மிகுதி. இன்றும் கூடப் பல நூற்கள் ஏட்டளவில் நின்று பதிப்பிக்கப்படாது அழிந்து கொண்டு வருகின்றன. இப்பகுதியில் பெயரளவில் அறியப்படும் காப்பியங்களையும், சில பாடல்கள் மட்டும் கிடைத்துள்ள காப்பியங்களையும் காணலாம்.'

ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், கடுமையான உழைப் புடனும் செயல்பட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல் தனது கருத்துக்களை தெளிவாகவும், துணிவாகவும் இரா.காசிராசன் விளக்கியுள்ளார். ஓர் ஆய்வு நூலை எழுதுவதற்கு இது ஒரு முன்மாதிரியாக அமைந் துள்ளது என்று பெருமைப்படும் விதத்தில் இந்த நூல் அமைந்துள்ளது.

கலை, இலக்கியம், வரலாறு, நாகரிகம், பண்பாடு குறித்த வரலாற்று உண்மைகளையும், வளர்ச்சியையும் தெரிந்து கொள்ள விரும்புவோர் கவனத்திற்கு உள்ளாக வேண்டிய ஓர் அருமையான ஆய்வுநூல் என்று இதைக் குறிப்பிடுவது மிகுதியல்ல.

உலகக் காப்பியங்கள்

இரா.காசிராசன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

விலை : ` 360/-