வைத்தியலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட பிரபஞ்சன் புதுவையில் 27-04-1945-இல் பிறந்தவர். வைத்தியலிங்கம் என்ற பெயர், சிறந்த மருத்துவரைக் குறிப்பதாகும். ஆனால், அவர் பின்னாளில் தம் பெயரைப் பிரபஞ்சனாக மாற்றிக் கொண்டார். மக்களின் மனத்தை எழுத்துகளால் வெளுக்க வேண்டி பிரபஞ்சனாக மாறினார் போலும்! பிரபஞ்சனோடு பழகியவர்களுக்கு உடனடியாகத் தெரிவது அவரது கள்ளம் கபடமற்ற அன்பேயாகும். அவரது அடையாளமே அன்புதான். அந்த அன்பு சொல்லிலும் தெரியும்; முகத்திலும் தெரியும். அவரது முழு உடலே அந்த அன்பை வெளிகாட்டும். வயது வேற்றுமை கருதாது எல்லோரிடமும் அன்பு காட்டுபவர்தான் அவர். அதில் தலைமுறை இடைவெளியையே காண முடியாது.

அவரது வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள், அவமானங்கள்; போதாமைகள்,  கஷ்டங்கள்; நஷ்டங்கள், இவற்றிற்கிடையே அவ்வப்போது மதிப்புகளும், மரியாதைகளும், பாராட்டுகளும் அவருக்கு வந்த வண்ணம்தான் இருந்தன; எனினும் கஷ்டங்களே மிகுதி. தன் கஷ்டங்களையும் போதாமைகளையும் எவரிடமும் கூறிப் புலம்பியதில்லை; நண்பர்கள் கேட்டாலும் கூறியதில்லை. அப்போதும் புன்னகையையே விடை யாக அளிப்பார். எந்தப் பேரலையையும் தாங்கும் கற்பாறை போல் அவர் எதனையும் தாங்கி நின்றார். அதுதான் அவரது முழுபலம். பாரதியாரை அவ்வப் போது பெருமைப் படுத்திக் கூறும் அவர், பாரதியார் கூறியதற்கிணங்க

'விண்ணின் இடிமுன் விழுந்தாலும்

பான்மை தவறி நடுங்காதே

பயத்தா லேதும் பயனில்லை'

என்ற கவிதைக்கேற்ப நம்முன் வாழ்ந்தவர், அவரோடு பழகியவர், அவரைப் பார்த்தோர்யாரும், அவரை எளிதாக மறக்க முடியாது. அவரது உருவத்தை மறக்க முடியாது. ஆம், அவர் அப்படிப்பட்ட அழகிய தோற்றம்.

prabhajan 600நீண்ட உயரம், சிவந்தமேனி; அகன்ற நெற்றி; கூரிய கண்கள்; பெரிய மூக்கு; பரந்த முகம்; சிரித்த பார்வை; நீண்ட பெரிய ஜிப்பா; தோளில் ஜோல்னாபை இவைதான் அவரது அடையாளம். இந்த அடையாளத்துடன் அவரைப் பார்க்கும் எவரும், அவரொரு முக்கியமான மனிதர் என்பதை உணர்ந்து விடுவர். அவர் தனது ஜிப்பாவைப் பெரும்பாலும் தரமான துணியில் அழகான வண்ணத்தில்தான் அணிந்திருப்பார். அந்த வண்ணமும் கடுவண்ண மாகவே (Thick and fast colour) இருக்கும். அவர் சுவையான காப்பியிலும், இசையிலும் எவ்வாறு மோகம் கொண்டிருந்தாரோ அப்படித்தான் ஆடையின் வண்ணத்திலும் பற்றுக் கொண்டிருந்தார். எப்போதும் பளிச்சென்று காட்சியளிப்பார். பெரும் பாலும் வெளியே கையில் சிகரெட்டுடன் இருப்பார். பலவற்றிலும் நேர்த்தியைக் கடைப்பிடித்த அவர், இந்தச் சிகரெட்டில் எப்படிக் கடைப்பிடிக்காது போனார் என்பது புரியவில்லை; இந்தப் புகைதான் அவருக்குப் பகையானது. அந்தப் புகைதான் அவரது உயிரைப் பறித்து நம்மிடையே இருந்து பிரித்து விட்டது. இது எல்லோர்க்கும் ஓர் எச்சரிக்கையாய் உள்ளது. எதிலும் சமரசத்திற்கு உட்படாதவர், சிகரெட்டுடன் சமரசமானதுதான் விந்தை.

பிரபஞ்சன் எதிலும் வெளிப்படையானவர். அதிகாரத்திற்கோ ஆசைக்கோ அடிபணியாதவர்; எதிலும் நிமிர்ந்து நின்றவர். எவர் முன்பும் குறுகி அடங்கிப் போகாதவர். நீதியில்லாத நியாயமில்லாத கருத்தை எந்நிலையிலும் ஏற்க மாட்டார். எத்துணைப் பெரியவரிடத்திலும் தம் நியாயத்தை அஞ்சாது கூறும் இயல்புடையவர். ஓர் உண்மையான எழுத்தாளர் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருந்தவர் அவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், தினமணியில் 'கலைஞர் காண வேண்டிய களங்கள்' எனுந் தலைப்பில் ஓர் அரிய கட்டுரையை வரைந்திருந்தார். அதில் கலைஞர் வருங்காலத்தில் செய்ய வேண்டியன எவை எவை என்பதை வெளிப்படையாக நயமாக, ஆனால் உறுதியாக எழுதியிருந்தார். அதில் தம் அஞ்சாமையை நியாயத்தைப் புலப்படுத்தி இருந்தார். இதனைக் கலைஞர் ரசித்து வரவேற்றதாகக் கேள்வி.

பிரபஞ்சனுக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு;  அவற்றில் ஒன்றை இங்குக் குறிப்பிடுவது முக்கியம். பண்டிதர்களுக்குப் படைப் பிலக்கியம் படைக்க வராது என்பது ஒரு கூற்று. உலக அளவிலும் அது உண்மைதான்; பண்டிதர்கள் பெரிதும் ஆராய்ச்சியில் இறங்கி விடுவதால் படைப்பதில் அவர்களுக்கு ஆர்வமும் முயற்சியும் குன்றிவிடுகின்றன. அதனால் அவர்களால் படைக்க முடிவதில்லை. வயது முதிர முதிர அழகு குன்றி விடுவது போல், ஆராய்ச்சி பெருகப் பெருகக் கற்பனை குன்றிவிடும் என்பார் மு.வ. இது பெரிதும் உண்மையேயாகும். உலக அளவில் டி.எஸ்.எலியட் போன்ற சிலரே ஆராய்ச்சியிலும், புதிதாகப் படைப்பதிலும் வல்லவராக இருந்துள்ளனர்.

இந்தியாவைப் பொருத்தவரை கன்னட உலகில் முனைவர் பைரவப்பா, சிவராம் காரந்து போன் றோரையே குறிப்பிட முடியும். தமிழ் உலகில் மு.வ.வும், நா.பார்த்தசாரதியும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வரிசையில் காத்திரமாக விளங்குபவர் பிரபஞ்சன். அவர் தமிழை முறையாகக் கற்றவர்; கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பெரும்புலவர்களிடம் பாடங்கேட்டுப் புலவர் பட்டம் பெற்றவர். பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் தாக்கத்தால் தொடக்கத்தில் கவிதையில் ஆர்வம் இருந்திருந்தாலும், பத்திரிகைத் தொழிலாலும், வேறுசில காரணங்களாலும் கட்டுரை, சிறுகதை நாவல் எழுதுவதில் ஆர்வம் கொண்டு தனித்தடம் பதிக்கலானார்.

பிரபஞ்சன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர்; முற்போக்குப் படைப்பாளர். அவரது எழுத்து பெரிதும் அடித்தட்டு மக்களைப் பற்றி பெண் மக்களைப் பற்றியதாகவே இருந்தன. பெண்களின் முன்னேற்றத்தில் பேரீடுபாடு கொண்டவர். உண்மையைக் கூற வேண்டுமென்றால் அதில்

அவர் தலையாயவர். இதனைப் போன்றே சக எழுத்தாளர்களின் எழுத்துத் திறத்தை மனம் திறந்து பாராட்டுபவர். இதில், அவருக்குத் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடே கிடையாது. பத்திரிகையில் வரும் நல்ல கதைகளைக் கண்டால் உடனே தேடிப்பிடித்துப் பாராட்டுவார். அவர் எல்லோரையும் நேசித்தார். உண்மையைக் கூற வேண்டுமெனின் அவர் நல்லவர்களின் நல்லவர். அநியாயத்துக்கு நல்லவர்; சூதுவாது அற்ற நல்லவர்.

அவருடைய நல்ல குணத்திற்கு ஒரு நிகழ்வைச் சுட்டிக் காட்டுவது ஏற்றது. ஒருமுறை ஓர் இலக்கிய நிகழ்வுக்கு அவரை அழைத்திருந்தனர். இவரும் சென்றார். அங்குப் பேசினார். அவரைப் பாராட்டி பெரிய வாழ்த்து மடலையும் தந்தனர். இரவு நேரம் அதிகமாகி விட்டதால் விழா முடிந்ததும் வீட்டிற்குப் புறப்பட்டார். ஏற்பாடு செய்தவர்கள் அவரைத் திரும்ப அனுப்பப் போக்குவரத்து வசதியைச் செய்யாததுடன், போக்குவரத்துக்கான பணத்தையும் அளிக்கவில்லை. அவரும் அவர்களிடம் எதனையும் கேட்கவில்லை. வீட்டிற்குப் புறப்பட்ட போதுதான் அவருக்கு ஒன்று தெரிய வந்தது. அதாவது, அவர் வீட்டிலிருந்து புறப்படும்போது பணத்தை எடுத்துவர மறந்துவிட்டார். அதனால், அந்த இரவில் அந்தப் பெரிய வாழ்த்து மடலை வரும் வழியில் ஒரு மரத்தின் மீது சார்த்திவிட்டுக் கால்நடையாகவே நடந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்.

இலக¢கியப் பேச்சு இப்போது பெரும் வணிகமாகி விட்டது. கள்ள வணிகமாகிவிட்டது. இலக்கிய வாணர்கள் அறவிலை வணிகர்களாக வலம் வருகிறார்கள். இதனை நினைக்கும்போது தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு சமயம் இந்நாட்டு மக்களை எண்ணி 'ஐயோ தமிழ்நாடே! உனக்கொரு ஐயோ!' என்றார். பிரபஞ்சனை ஐயோவென்று விட்டவர் களை நோக்கி 'ஐயோ மக்களே' என்றுதான் கூற வேண்டி உள்ளது. உண்மையான மனிதரை இம் மக்கள் எப்போதுதான் அறியப் போகிறார்களோ! யாம் அறியோம் பராபரமே!

நல்ல எழுத்தாளர்கள் சிறந்த பேச்சாளர்களாக இருப்பதில்லை. சிறந்த பேச்சாளர்கள் நல்ல எழுத்தாளர்களாக இருப்பதில்லை. பிரபஞ்சன் நல்ல எழுத்தாளர் என்பது ஊரறிந்த உண்மை; ஆனால் அவர் பேச்சின் மகத்துவத்தைப் பலர் அறியார். அவர் தனித்தன்மை வாய்ந்த பேச்சாளர். பிரபஞ்சனின் பேச்சில் அலங்காரம் இருக்காது; அடுக்குமொழி இருக்காது; ஆர்ப்பரிப்பு இருக்காது. அறிவு இருக்கும்; அழகு இருக்கும்; அனுபவம் அமைதியாகப் பவனி வரும்; ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் அனுபவம் எப்படி அறிவுக்கதிராக அமைதிச் சுடராக வெளிவரும் என்பதற்கு அவரின் பேச்சுத்தான் சான்று.

எல்லாவற்றைக் காட்டிலும், அவர் பேச்சில் உள்ள உடல்மொழி மகத்தானது. அதுதான் அவரது தனித்திறன். இதனை முன்னிட்டுத் தான் அவர் பேச்சை யாராலும் பேச முடியாது என்றேன். தோழர் ஜீவாவின் பேச்சிலும் உடல் மொழி உண்டு; எம்பி எம்பிப் பேசுவார். இரு பக்கமும் திரும்பித் திரும்பிப் பேசுவார். கைகளைத் தூக்கித் தூக்கிப் பேசுவார். அவரது பேச்சு எரிமலை போன்றது. கேட்போரைக் கிறங்கடிக்கும். அவரது ஆவேச உடல்மொழி தீமைகளைக் கொன்றழிப்பது போல் காட்சி தரும். அவர் உடல்மொழி ஊழிக் கூத்துப் போன்றது; பிரபஞ்சனின் உடல் மொழி நளினமானது; தென்றல் போன்றது. அவர், சொல்லில் புலப்படுத்துவதை அவரது முகமும், கைகளும், அசைவும் கூடுதலாகப் புலப்படுத்தும். இசைக்குப் பக்க வாத்தியம் போல், அவரது பேச்சுக்கு உடல் மொழி பலம் தரும். அந்த உடல் மொழி, கேட்போரின் உள்ளங்களில் பசுமரத்து ஆணி போல் பதியும். ஓர் எழுத்தாளரின் கதையை அதே எழுத்தாளர் கூறுவதைக் காட்டிலும் பிரபஞ்சன் கூறுவது சுகமாக இருக்கும். காரணம், பேச்சுடன் உடல்மொழி இணைவதுதான்.

கொடிய நோய் கடைசி நாட்களில் அவரது குரலை நிறுத்தியது; பேச்சை ஒடுக்கியது. புதுவையிலுள்ள மணற்குள விநாயகர் மருத்துவமனையின் மூன்றாம் மாடியிலுள்ள தனியறையில் 20-12-2018 அன்று காலை 11.45 மணிக்கு அவரைக் காணச் சென்றேன். A1 - அறையில் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது உடல் படுக்கையுடன் ஒட்டியிருந்தது. உடல் என்று சொல்வதற்கு ஏது மில்லாமல் அக்கொடிய நோய் அவரைச் சூறையாடி இருந்தது. அந்நிலையிலும், என்னைப் பார்த்ததும் வாங்க வாங்க எனும் தோரணையில் தலையை அசைத்தார். ஏதும் பேச அவரால் முடியவில்லை.

அவருடைய மூத்தமகன் கௌதம் அருகில் இருந்தார். ஆக¢ஸிஜன் பொருத்தப்பட்டு இருந்தும் மூன்று முறை இருமினார். சத்தம் இல்லாத சத்தம். சிறிது நேரம் இருந்துவிட்டு, கௌதமனுக்கு ஆறுதல் கூறி, பிரபஞ்சனைக் கையெடுத்துக் கும்பிட்டுப் பிரியா விடை பெற்றேன்; என் நெஞ்சம் கனத்தது; விம்மியது. ஒரு நல்ல மனிதருக்கா இந்த நிலை? அய்யோ! இயற்கையே என்று விம்மினேன். மறுநாள் 21-12-2018 அன்று பகல் 12.30 மணிக்கு என் நண்பர் என்னைத் தொடர்பு கொண்டார். எழுத்தாளர் பிரபஞ்சன் காலை 11.30 மணிக்குக் காலமானதாகக் கூறினார். 'இன்னாது அம்ம இவ்வுலகம்' என்ற சங்கப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

பிரபஞ்சன் ஏழை எளியவர்களுக்காக ஒடுக்கப் பட்ட மக்களுக்காக பெண்களுக்காக எழுதினார். பெண்ணியவாதிகள் பெண்ணியம் பேசுவதற்கு முன்பே, தம் கதைகளில் பெரியாரின் பெண்ணியத்தைப் பேசியவர். தம் கதைகளில் பெண்களுக்கு முக்கிய இடத்தை அளித்து அவர்களைப் பெருமைப்படுத்தியவர். ஒரு கதையில் சுமதி எனும் கதைமாந்தர். இவர் அரசு அலுவலராக இருந்தார். சேரிகளைத் தொலைதூரத்தில் அப்புறப்படுத்த வேண்டுமென்று பைல் வருகிறது. அதில் ஏழை மக்களைத் தொலை தூரத்திற்குத் துரத்துவது மனித நேயமாகாது என்று கூறிச் சில காரணங்களைக் குறிப்பிடுகிறார்.  அதனைக் கண்ட மேலதிகாரி 'இப்படியெல்லாம் கம்யூனிஸ்ட் தனமாக குறிப்பு எழுதக் கூடாதெனக் கடிந்து எழுது கிறார். அதனைக் கண்டு சுமதி எழுதியுள்ள குறிப்பு முக்கியமானது.

“கம்யூனிஸ்டாக இருப்பது ஏதோ சமூக விரோதியாக இருப்பது போன்று தாங்கள் கருதினால் அது தவறு; நான் கம்யூனிஸ்ட் இல்லை. என்னைப் போன்ற ஜனங்கள் துயரப்படுகையில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும், உதவுவதும், அவர்களின் போராட்டங்களில் ஆத்மார்த்தமான பங்களிப்புச் செய்வதும் கம்யூனிசம் என்றால் அந்த அர்த்தத்தில் கம்யூனிஸ்ட் என்றே ஒப்புக்கொள்கிறேன்."

இந்தக் குறிப்பிலிருந்து பிரபஞ்சனின் நோக்கு நிலையை நன்குணரலாம். பிரபஞ்சனின் கதைகளின் உள்ளடக்கம் மட்டுமன்றிக் கதைகளின் தலைப்பு களும் அழகானவை; அற்புதமானவை. பல தலைப்புகள் பாரதியின் வைர வரிகளாகும். 'கனவு மெய்ப்பட வேண்டும்', 'மானுடம் வெல்லும்', 'வானம் வசப்படும்' என்பவை அவற்றில் சில. கதைகளுக்கு இத்தலைப்புகள் மணிமுடிகளாக விளங்குகின்றன. பிரபஞ்சனைப் போலவே அவரது கதைகளும் கதைகளின் தலைப்புகளும் வசீகரமானவை. இந்த வசீகரம் பலரைக் கவர்ந்தது. அவர்களில் மூவர் மிக மிகப் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள். அம்மூவர் யார்? ஒருவர் நடிகர் சிவகுமார்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியளித்தவர், இரண்டாமவர் டாக்டர் சுப்பிரமணியன். இவர் மணற்குள விநாயகர் மருத்துவமனையில் மருத்துவராக இருந்து பிரபஞ்சனின் மருத்துவத்துக்கு உதவியர். மூன்றாமவர் புதுவை முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி ஆவார். பிரபஞ்சனுக்கு 2017-இல் புதுவை அரசின் சார்பில், சிறந்த இலக்கிய ஆளுமைக்காக ரூ.10 லட்சம் வழங்கிச் சிறப்பித்ததுடன், பிரபஞ்சன் காலமான வுடன் அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார். இது பெரிதும் போற்றத்தக்கது. பிரபஞ்சன் எழுதியது போல மானுடம் வென்றிருக்கிறது. அவரின் கதை, கட்டுரைகளின் வாயிலாக மக்களின் கனவுகள் மெய்ப்படட்டும். வானம் வசப்படட்டும். பிரபஞ்சத்தின் சக்தி பெரிது அன்றோ! பிரபஞ்சனின் சக்தியும் அத்தகையதே! வாழ்க பிரபஞ்சனின் எழுத்துகள்.

Pin It