தமிழ் அறிவுலகச் சூழலில் நான் மிகவும் மதிக்கத்தக்கவரும், தனது சிந்தனை, படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் மூலமாக எல்லா வகை அதிகாரங்களையும் எதிர்த்து குரல் எழுப்புபவராகவும், அனைத்துப் புனிதங்களையும் தொடர்ந்து கட்டுடைத்து வருபவராகவும், பாசிசம் எந்த உருவத்தில் உருவானாலும் அதனை உலகுக்குத் தோலுரித்துக் காட்டித் தருபவர்களில் முக்கியமானவருமான தோழர் அ.மார்க்ஸின் பெரும்பாலான நூல்களை வாசித்துள்ளேன். இந்நூலானது, தற்போது அச்சில் இல்லாத அவருடைய முக்கிய கட்டுரைகளைத் தேர்வு செய்து, தற்போது புதிதாக எழுதப்பட்ட பொருத்தமான கட்டுரைகளை அவற்றுடன் இணைத்து முதற்கட்டமாகக் கொண்டுவரவுள்ள பத்து நூல்களில் முதல் தொகுப்பாகும். இத்தொகுப்பில் பல்வேறு வகையான 16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ஒரு சிலவற்றை ஏற்கனவே வாசித்திருந்தாலும், கருத்தியல் ரீதியில் அக்கட்டுரைகளின் முக்கியத்துவம் இன்னும் நீடிக்கிறதால் அனைத்துமே முக்கியத்துவம் பெறுகின்றன.
முதல் கட்டுரையை கன்னியாகுமரியில் வானவில் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கில் வாசித்தபோது நேரில் கேட்ட நினைவிருக்கிறது. உலக அளவிலும், இந்திய அளவிலும், தமிழ்நாட்டளவிலும் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த அரசியல், கருத்தியல் ரீதியிலான மாற்றங்களைத் தக்க நிகழ்வுகளை முன்னிருத்தி விரிவாக எடுத்துரைக்கிறது இக்கட்டுரை. இருபதாம் நூற்றாண்டு தொடர்பான முழுமையான அறிதலுக்கு நல்லதொரு முகவுரையாக இக்கட்டுரை திகழ்கிறது.
பிரமிளின் படைப்புகளில் வெளிப்படும் பிராமண எதிர்ப்பும் சிரமண மரபையும் அடையாளப்படுத்தும் கட்டுரையில், பிரமிளின் படைப்புகள் எவ்வாறு முழுமையான மாய எதார்த்தவாத உத்தியாகப் பரிணமிக்காமல் ஆன்மீகக் கற்பனாதீத புனைவாக மாறுகின்றன என்றும், அதிலும் வெற்று ஆன்மீகக் கதைகளாக நின்றுவிடாமல், வரலாற்றில், மண்ணில், சமூகத்தில் கால் பதித்திருப்பதன் வழி அதனினும் உயரிய பரிமாணம் எவ்வாறு கொள்கிறது என்பதையும் 'பிரஸன்னம்', 'அசரீரி', 'லங்காபுரி ராஜா', 'அங்குலிமாலா', 'ஆலா', 'கோடரி' கதைகளின் வழி சொல்லும்போதே, அவரது வரலாற்றுப் பிழைகளும் (பாப்ரி ராம் தொடர்பான அசரீரி கதை) சுட்டிக்காட்டப்படுவது கவனிக்கத்தக்கது.
இடாலோ கால்வினோ குறித்த கட்டுரையில், கட்டமைக்கப்பட்ட மனதின் வழி கெட்டிதட்டிப்போன வாசிப்பு முறையை உலுக்கி புதிய கட்டற்ற வாசிப்பு முறையை ஏற்படுத்துவதையும், வாசகனே எழுத்தாளனாக மாறும் கதைகளாகவும் இடாலோவின் கதைகள் இருப்பதையும், ஏற்கனவே தெரிந்தவற்றையே மீண்டும் தெரிந்துகொள்ளும் அபத்தத்திலிருந்து கால்வினோவின் கதைகள் எவ்வாறு நம்மைக் காப்பாற்றுகின்றன என்றும் புனைவுகளில் இருந்து எடுத்துக்காட்டுகள் மூலமாக விரித்துரைக்கப்படுகிறது.
திருக்குறளின் சமணச் சார்பு குறித்தும், அதன் ஆசிரியர் திருவள்ளுவர் சமண மரபில் ஆச்சார்ய சிரீ குந்த குந்தர் என்ற பெயரில் ஓர் ஆச்சாரியராக வணங்கப்படும் மாற்று வரலாற்றைப் பேசுவதோடு, அதற்கு ஆதாரமாக 'கவிராஜ பண்டித உரை', 'திருக்குறள் ஜைன உரை' போன்றவற்றை முன்வைக்கிறார்.
சிறுதெய்வங்களும் சீர்திருத்தவாதிகளும் என்ற கட்டுரையில், அய்யன்காளி, நாராயண குரு, அய்யா வைகுண்டர், வள்ளலார் ஆகிய இந்து சமய சீர்திருத்தவாதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. புலையர்களின் விடுதலை குறித்து தீவிரமாகப் பேசினாலும், அய்யன்காளி அதனை இந்து மதக் குறியீடுகளுக்குள்ளேயே நின்று பேசினார் என்பதையும், புலையர்கள் எக்காரணங்கொண்டும் கிறித்துவம், இசுலாம் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார் என்பதையும், ஈழவ மக்களின் விடுதலையை முன்னெடுத்த நாராயண குரு எவ்வாறு மதமாற்றத்திற்கு எதிராக இருந்தார் என்பதோடு, அவர் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் பி.பரமேஸ்வரன் "இந்து மதத்திற்கு உண்மையான அத்வைத மதத்தின் உயிரை அளித்து மீண்டும் உயிருட்டியவர்" என்று புகழ்ந்ததையும், அன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட தீண்டத்தகாதவர்களாகவே கருதப்பட்ட சாணார்களின் மத்தியில் சுயமரியாதை உருவாகக் காரணமாக இருந்தவரும், சிலை வழிபாட்டையும் பார்ப்பன மேன்மையை மறுத்தவருமான அய்யா வைகுண்டரும் இந்து மத எல்லைக்குள் நின்றுதான் அதனை மேற்கொண்டார் என்பதையும், வள்ளலார் தமிழ் மரபில் நின்று சனாதனக் கோட்பாடுகளையும் வைதீக மரபுகளையும், வைதீகத்தின் அடிப்படையான வேள்வியின் முக்கிய நோக்கமான உயிர்ப்பலிக்கு மாற்றாக உயிர் கொல்லாமையை முன்னெடுத்தார் என்பதையும், உயிர்கொல்லாமையை மேல் நோக்கிய நகர்வு என்ற அடிப்படையில் அன்றி வைதீக சனாதன எதிர்ப்பு என்ற வகையிலேயே முன்னெடுத்தார் என்பதையும் விரிவாக முன்வைக்கிறது இக்கட்டுரை. மேலும், இவர்கள் அனைவரையும் இன்று எவ்வாறு இந்துத்துவம் உள்ளிழுத்துக்கொண்டு அவர்களையும் சனாதனச் சிமிழுக்குள் அடைக்க முயல்கிறது என்பதையும், அதற்கு சீர்திருத்தவாதிகளின் செயல்திட்டங்களே எவ்வாறு காரணமாகிப் போனது என்பதையும் குறிப்பிடுகிறது இக்கட்டுரை.
இராமர் சேது பாலம் குறித்த இந்துத்துவவாதிகளின் கட்டுக்கதைகளை முறியடிக்கும் விதமாக, இராமர் பாலம் குறித்த பிரச்சினை முகிழ்த்திராத காலகட்டத்தில், அது குறித்த ஓர்மையின்றி 1940-ல் கூ.பரமசிவ அய்யர் என்பவர் எழுதிய ஆங்கில நூலான ‘Ramayana And Lanka’ என்ற நூலை முன்வைத்து எழுதிய கட்டுரை இன்றைய சூழலில் முக்கியமானதாகும். இத்தனைக்கும் பரமசிவ அய்யர் ஒரு நாத்திகரல்லர்; தீவிர பக்தர். ராமாயணத்தை ஆழமாகப் பயின்றவர். புவியியல் நுண் விளக்க வரைபடத்தாள்களைப் புரிந்துகொள்ளும் அடிப்படைப் பயிற்சி பெற்றவர். வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படும் அயோத்தியில் இருந்து லங்கா வரை ராமர் நடந்த பாதையைத் துல்லியமாகக் கண்டறிந்து ஆய்வு ரீதியாக நிறுவுகிறார். அதில், வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படும் லங்காவும் இன்றைய சிலோனும் ஒன்றல்ல என்பதையும், அந்த லங்காவானது கிரண் நதி சுற்றி ஓடும் இந்த்ரான மலை என்ற திரிகூட மலையாகும் என்றும் ஆய்வு பூர்வமாக ஆதாரங்களுடன் நிறுவியிருப்பதோடு, எவ்வாறு ராமாயண லங்கா இன்றைய சிலோனில் உள்ளதாக இடைச்செருகப்பட்டதென்றும் விளக்கியுள்ளாரென்பதையும், ராமன் சண்டையிட்ட ராட்சசர்களாக அப்பகுதி பழங்குடியினரான திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழி பேசும் கோண்டுகளும், ராமனுக்கு உதவிய வானரர்களாக முண்டா மொழி பேசும் கோர்க்கர்கள் (குறவர்கள்) என்பதையும் பரமசிவ அய்யர் பல்வேறு ஆதாரங்களுடன் விவரித்துள்ளதை இக்கட்டுரை குறிப்பிடுகிறது. இது இன்றைய அரசியல் சூழலில் மிக முக்கியமான கட்டுரையாகும்.
ஆத்திசூடிக்கு மகாவித்வான் ரா.இராகவையங்கார் எழுதிய உரையை முன்வைத்து 'தையற் சொற்கேளேல்', 'தேயத்தோடு ஒத்துவாழ்', 'மெல்லினல்லாள் தோள்சேர்', 'மைவிழியார் மனையகல்', 'சக்கர நெறி நில்', 'தெய்வ மிகழேல்', 'சித்திரம் பேசேல்' போன்ற ஆத்திசூடிகளுக்கு உரையாசிரியர் எவ்வாறு வழமையான பார்வையைத் தவிர்த்து மாற்று உரையை முன்வைக்கிறார் என்பதையும், அத்தகைய மாற்றுப் பார்வையும் அவைதீக மரபிலும் பெண்ணியப் பார்வையிலும் தோய்ந்துள்ளதையும் இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
மதச்சார்பின்மை குறித்து இந்திய வரலாற்றறிஞர் சஞ்சய் சுப்பிரமணியத்தின் கூற்றை முன்னிருத்தி, மேலைச் சூழலில் குறிப்பிடப்படும் மதச்சார்பின்மையை அப்படியே இங்கு அதன் அளவுகோலோடு (மதத்தை அரசிலிருந்து பிரிப்பது) மதிப்பிடுவது தவறு என்றும், இங்கு மதச்சார்பின்மை என்பது பல்வேறு சமூகப் பிரிவுகளிடையே சமரசம் செய்வது என்றும் சஞ்சயின் வரலாறு, புலப்பெயர்வு, மதச்சார்பின்மை குறித்த கருத்தாக்கங்கள் (இந்து நாளிதழுக்கு அவர் கொடுத்த நேர்காணல்) வழி இக்கட்டுரை சொல்லிச் செல்கிறது.
தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுடன் காலின் மெக்கன்சி தொகுத்துள்ள சுவடிகள் குறித்த தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு நூலில் உள்ள '...(சய்யிது) தான் துலுக்க சாதியாயிருந்தும் கற்ணாட்டச் சாதி கோவில் தேவடியாளான மொஹனா என்ற தாசியை கெடுத்துப் போட்டு அவளைத் தன் வீட்டிலே கொண்டு போய் வைத்துக் கொண்டான்...' என்ற சையித் என்ற முஸ்லீம் தளபதியைப் பற்றி இந்து மராட்டிய பேஷ்வா ஆட்சியில் அறம் தவிர்த்து சாதி மதம் பார்த்து விதிகள் சட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது என்பதை ஒரு கட்டுரை பேசுகிறது.
தேவதாசி முறையும் பரத நாட்டியமும் என்ற கட்டுரை, எவ்வாறு தேவதாசியரால் காப்பாற்றப்பட்டுவந்த தமிழ் நாட்டிய மரபான சதிர் பின்னாளில் பரத நாட்டியமாக உருமாற்றப்பட்டு அதற்கு பார்ப்பனீய முலாமும் 'பெருமையும்' பூசப்பட்டது என்பதை எடுத்துரைப்பதோடு, இந்த நாட்டிய வடிவத்தை அமைத்துத் தந்தவர்கள் தஞ்சை நால்வர் என்ற இசை வேளாளர் குல மரபினர் என்பதையும் சொல்கிறது.
யாழ் அசீமின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையான 'தேசம், அகதி, மனிதம்', இன்றைய தேச அரசுகளின் (Nation States) உருவாக்கத்தில் இறையாண்மையுடைய குடிமக்கள் (Sovereign People) மட்டுமே வாழத் தகுதி படைத்தவர்கள் என்ற கருத்து உருவாகி, மனிதர்கள்/குடிமக்கள் என்ற அரசியல் பிளவு ஏற்படுகிறது என்றும், தேச அரசியலில் 'மனிதர்களுக்கு' 'மனித உரிமைகளுக்கு' இடமில்லை என்றாகி விடுகிறது என்பதைப் பேசுகிறது. தேச எல்லைக்குள் பிறந்தவர் (Native) என்பதாலேயே அவர் குடிமக்கள் என்ற தகுதியை (Nationality) கொண்டிருப்பதாகிவிடாது என்றும் தேச அரசியல் உருவாக்கம் ஏற்படுத்தியது. பிறப்புக்கு அப்பால், மொழி, இனம், மதம் முதலான வேறு ஒன்று தகுதியாக்கப்பட்டது. இந்து தேசியவாதிகள் வரையறுத்த இந்து தேசமானது இன்னும் ஒரு படி தாண்டி புண்யபூமி என்ற கருத்தாக்கத்தையும் முன்வைத்தது. அது போல சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டு போராட்டத்தால் முன்னெடுக்கப்பட்டு 1990களில் உருவான ஈழத் தமிழத் தேச அரசானது மதத்தை ஒரு அடிப்படைத் தகுதியாக்கி வடக்கு முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதும் கூட அகதி உருவாக்கச் செயல்பாடுதான் என முன்வைக்கிறது இக்கட்டுரை.
'தமிழகத்தில் சத்திரியர்கள்: ஒரு குறிப்பு' என்ற கட்டுரை, எவ்வாறு பார்ப்பனீய நால்வருண முறை தமிழகத்திற்கு வந்தபோது அப்படியே இங்கு பொருந்தியிராமல் போனதால், இந்து மரபில் சத்திரியர்கள் என்ற சிறப்புரிமைகளைத் தமதாக்கிக் கொள்ள பல சாதியனரும் (வன்னியர்கள், நாடார்கள், வேளாளர்கள், முக்குலத்தோர் போன்றோர்) முனைந்ததைக் குறிப்பிடுவதோடு, தங்களை ஆண்ட பரம்பரையாகக் காட்டிக்கொள்ள இந்தப் சத்திரியப் பட்டங்கள் துணை நிற்பதையும் நிகழ் அரசியலில் சுட்டிச் செல்கிறது. இதற்கு மாற்றாக இந்து அல்லது தமிழ் அடையாளங்கள் முன்வைக்கப்படுவதும், அவையும் உயர் சாதி இந்து/தமிழ் அடையாளங்களாக எவ்வாறு மாறிப்போகிறது என்பதையும், வெறும் பெயர்களில் மேல்நிலையாக்கம் காட்டுவதால் இங்கு சாதி/தீண்டாமை ஒழித்துவிட இயலாது என்பதையும் கட்டுரை பேசுகிறது.
கி.ராவின் பாலியல் கதைகளை முன்வைத்து உடைபடும் மவுனங்கள் என்ற கட்டுரை மிக விரிவாக எவ்வாறு குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய நிறுவனங்களின் தோற்றங்களோடு அதிகாரக் குவிமையம் சமூக ஒழுங்கமைப்பை நிறுவுகிறது, கருத்தியல் ரீதியாக சமூகம் என்ன பேசவேண்டும், என்ன எழுதவேண்டும், என்ன வணங்கவேண்டும் முதலிய ஒழுக்க சட்டதிட்டங்களை ஏற்படுத்துகிறது என்பதையும், எழுத்து என்பது அதிகாரத்துடன் நேரடியாக எப்படித் தொடர்பில் உள்ளது என்றும், இந்த ஒழுங்கமைப்பை மக்கள் திரள் எவ்வாறு மீறுகிறது (நாட்டார் கலைகள், வாய்மொழிக் கதைகள், நாட்டார் பாடல்கள் முதலியவை) என்றும், அத்தகைய மீறலின் ஒரு வடிவமே கி.ராவின் பாலியல் கதைத் தொகுதி என்றும் விரிவாகச் சுட்டுகிறது.
மதத்திற்கு அப்பாலான ஆன்மீகம் (Spiritual but not religious) என்கிற கட்டுரை, புத்தர், வள்ளலார், காந்தி ஆகியோரது அணுகுமுறைகளின் வாயிலாகவும் செயல்பாடுகளின் வழியாகவும் எவ்வாறு இறுக்கமான மத அமைப்புகள், வழமையான சடங்கு சம்பிரதாயங்களினின்றும் விலகி நின்றவர்களாகவும் பக்தி முதலான இந்திய வைதீகக் கருத்துகளைக் கட்டுடைத்தனர் என்பதையும் எடுத்தியம்புகிறது. வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் மாற்றாக பவுத்தம் முன்வைக்கும் அநிச்ச, துக்க, அனாத்மன், உனக்கு நீயே ஒளி ஆகிய கருத்தாக்கங்கள், வள்ளலாரின் வேதம், உபநிடதம், இறைவாக்குகள், பக்திக்கு எதிராக முன்வைக்கும் சுய விசாரணை, சுய முயற்சி, முழுமையான சிந்தனை, கருத்தொருமிப்பு ஆகிய பார்வை, காந்தியாரின் வழமையான மதத்திற்கு எதிரான ஏழை மக்களின் மீதான கருணை, மக்களின் ரொட்டிக்கு முன்னால் தனது தெய்வ ஆராய்ச்சி வீண் முதலிய சிந்தனைகள் இக்கட்டுரையின் ஆதாரங்களாக எடுத்தாளப்பட்டுள்ளது.
மேற்குறித்த கட்டுரைகள் தவிர்த்து, 'புத்த நெறியும் பக்தி நெறியும்', 'அயோத்திதாசர், கர்னல் ஆல்காட், தர்மபாலா, லட்சுமி நரசு - ஒரு சிறு குறிப்பு', 'பவுத்தம்: இரண்டு குறிப்புகள்', 'கெய்ல் ஓம்வெத் பார்வையில் இந்திய பௌத்தம்' ஆகிய கட்டுரைகள் பவுத்தம் குறித்த விரிவான புரிதலுக்கும் தேடலுக்கும் உதவும் கட்டுரைகளாகும். வைதீக சனாதன மதத்திலிருந்து பவுத்தம் எந்தெந்த இடங்களில் மாறுபடுகிறது, மேலும் பவுத்தம் எவ்வாறு வெகுமக்கள் பண்பாட்டோடும் வாழ்வோடும் இயைந்திருந்தது, மக்கள் மொழியில் பேசியது, பக்தி மார்க்கத்தை மறுதலித்து மனிதனை சுதந்திர தன்னிலைகளாக மாற்றியது, ஆன்மாவை மறுத்து அனாத்மன் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தது என்ற விபரங்களை இக்கட்டுரைகள் விரிவாகப் பேசுவதோடு, இந்தியாவில் பவுத்தம் உருவான வரலாறு அது பார்ப்பனீயத்தாலும் இந்துத்துவத்தாலும் வீழ்த்தப்பட்ட வரலாறு மட்டுமல்லாது, பிற்கால பவுத்தமானது விகாரைகளுக்குள் முடங்கியது, சாதாரண மக்களிடமிருந்து விலகிவிட்டது ஆகியவற்றையும் விளக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பின் முக்கிய கட்டுரைகளாவன.
அ.மார்க்சின் இக்கட்டுரைத் தொகுப்பானது வழமையான பார்வைகளை மிக நுணுக்கமாக விமர்சிப்பதோடு பல்வேறு வகையிலான கருத்தியல்கள், ஆய்வுகள் வழி புதிய சிந்தனைத் திறப்புகளை உள்ளடக்கியதாகவும், அயோத்திதாசர், லட்சுமி நரசு, பெரியார், பாவ்லோ பிரெய்ரே, ரொமிலா தாப்பர், ஜார்ஜியோ அகம்பன், பக்தின், கெயில் ஓம்வெத் போன்ற அறிஞர்களின் ஆய்வுத் தரவுகளையும் கட்டுரைகளின் தன்மைக்கேற்ப சரியான இடங்களில் ஆய்வுமுறையில் இணைத்து பொருள்தந்திருப்பது ஆசிரியரின் விரிந்த வாசிப்பையும் ஆய்வு முனைப்பையும் வெளிப்படுத்துகிறது. தமிழின் மாற்று சிந்தனை குறித்த தேடல் உள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.
அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
அ.மார்க்ஸ்
எழுத்து பிரசுரம் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்)
55(7), R பிளாக், 6வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை 600040
தொடர்புக்கு: 8925061999 - விலை: ரூ.270/-
- அன்புச்செல்வன்