மழை பெய்வதாகக் கூறி
சிதறி ஓடுகின்றார்கள்
வீடு திரும்பும் பள்ளிக்குழந்தைகள்

தூறல் ஆரம்பித்துவிட்டதாக
நான்
தப்பி வெளியேறிக் கொண்டிருக்கிறேன்

விருப்பப் பாடலை
ஒலிபரப்பும்
பண்பலை தொகுப்பாளினி
வடக்கே கன மழை பெய்வதாக
சொல்லிக்கொண்டிருக்கிறாள்

ஆயிரம் துளிகள்
விழுகின்றன
பல்லாயிரம் துளிகள்
விழுகின்றன
என் வீட்டிற்குச் செல்லும்
சாலையை அடைவதற்குள்
லட்சம் துளிகள்
விழுந்து தெறிக்கின்றன

“அடர்த்தியான மழை” என்ற
பத்திரிக்கைச் சொல்
நினைவுக்கு வருகிறது

ஒரே ஒரு துளியை மட்டும்
உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு
பாதுகாப்பாக என் வீட்டிற்குள்
அடைந்து கொள்கிறேன்.

இனி என் தனிமை தீர
பேசிக்கொண்டிருப்பேன்
அந்த ஒரு துளியோடு.


என் புதிய அறையின் சித்திரம்

வேற்றுமையாக இருந்த
இந்தப் புதிய அறையில்
ஒரு சித்திரம் இருக்கிறது

அந்த சித்திரத்தில்
ஒரு பெரிய மரம் இருக்கிறது

நான் தேநீர் தயாரிக்கும் பொழுதில்
புதிய சங்கீதத்தை மீட்டியபடி
நூற்றுக்கணக்கான பறவைகள்
வந்தமர்கின்றன

அந்தச் சித்திரத்தில்
ஒரு ஓய்விருக்கை இருக்கிறது
அதிலொரு ஆணும், பெண்னும்
வேறொரு புதிய முத்தத்தை
எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

இரு பக்கமும் பூச்செடிகள் நிறைந்த
ஒரு பசுமையான சாலை இருக்கிறது
அதில் முதியவர்களும், இளைஞர்களும்
நடை பயணம் மேற்கொள்கிறார்கள்

ஒரு சிறிய மைதானமிருக்கிறது
சிறுவர்கள் கால் பந்து விளையாடுகிறார்கள்
சிறுமிகள் ஸ்கேட்டிங் பழகுகிறார்கள்
இரு பெண்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்

திடீரென மழை வருகிறது
ஒரு குழந்தை வெயில் தவழ்ந்து செல்கிறது

இப்போதெல்லாம்
தொலைகாட்சி பெட்டியை இயக்குவதே இல்லை
இந்தச் சித்திரம்
செய்திகளைத் தருகிறது

புத்தகங்களை வாசிப்பதே இல்லை
இந்தச் சித்திரம்
அனுபவங்களைத் தருகிறது

நாளெல்லாம் வினை செய்து
களைப்புற்ற உடம்பை
தூங்கக் கிடத்திவிட்டு
இரவில் நிறம் மாறும்
இந்தச் சித்திரத்தை
பார்த்தபடியே அமர்ந்திருக்கிறேன்.

- மண்குதிரை