மழைநீர்
சொட்டும் பாத்திரங்களை
நகர்த்தி வைக்கிறான்..

துணி மூட்டையை
வெளியே தள்ளி
ஓலையால் மூடுகிறான்..

விளையாட்டு சைக்கிளை
சுத்தமாகட்டுமே
எனும் சாக்கில்
நனைய விடுகிறான்..

மல்லாக்கப் படுத்துறங்கும்
தகப்பனை
ஒருக்களிக்கப் பணித்துவிட்டு
தாயையும் தங்கையையும்
நகரச் செய்கிறான்..

இனி வரவேற்கலாம் -
எனும் ஆசுவாசத்தில் !!
புத்தகப் பையை
வாரிக் கட்டிக் கொண்டு
குத்த வைத்த
அவன் –

அந்தத் தெருநாய்க்கும்
அதன் குட்டிகளுக்குமான
பரப்பை
ஃப்ளக்ஸ் கூரையின் கீழ்
உருவாக்கித் தருகையிலே…

மனிதத்திற்காக
காத்திருந்தது போலவே
மழையின் நடனமோ
துள்ளலெடுக்கிறது !!

- த.கமல் யாழி

Pin It