அதிகாலைத் தொட்டே 

இடைவிடாத சத்தம் 

திசைகள் ஒவ்வொன்றிலிருந்து 

வெவ்வேறு விதமாய் எழுந்து 

காதோரம் வந்து சேர்கையில் 

ஒவ்வொன்றின் அசைவும் 

அவைகள் பற்றிய பிரக்ஞையும் 

கூடவேத் தொடர்ந்து 

சுவற்றில் தழுவும் கொடிபோல 

படர்ந்து பற்றிக் கொள்கின்றன. 

வேலியில் கிரீச்சிடும் 

அணில்களின் குதியாட்டமும் 

சரசரசெனப் பாய்ந்தோடும் 

ஓணான்களின் சலசலப்பும் 

சறுகுகளினூடே ஊர்ந்து செல்லும் 

பாம்புகளின் குறுகுறுப்பும் 

மரக்கிளையிலமர்ந்து கூவும் 

மைனாக்களின் பேசுமொழியும் 

வீட்டுக்குள் அடிக்கடி வந்து போகும் 

அழியாமல் மீதமுள்ள 

சிட்டுக்குருவியின் சிறகசைப்பும் 

மூலை முடுக்குகளில் ஒளிந்தபடி 

எலிகளின் தொடர்பு ஓட்டமும் 

கரப்பான், பல்லிகளின் சிறுசிறு அசைவுகளும் 

எங்கோ தன் தாய்மையைத் தேடி 

கத்துகின்ற கன்றுக்குட்டியின் அலறலும் 

வேறு பகுதி நாய் வரவையெதிர்த்து 

சதா ஓலமிட்டுக் கொண்டிருக்கும் 

பெருத்த நாய்களின் கூட்டமும் 

உணவிற்காய் முட்டிமோதி 

எங்கோ ஏரிக்கரையோரம் 

உறுமிக் கிடக்கும் பன்றிகள்... 

என இவைகள் அனைத்தும் கடந்து 

உள்ளுக்குள் சதா எந்நேரமும் 

ஓடிக் கொண்டிருக்கும் 

இடைவிடாத மனபிம்பத்தின் 

இரைச்சலின் ஊடே 

ஒற்றையில் உறங்கிக் கிடக்கிறது 

இன்றைய தினம் 

நாலு சுவர்களின் மத்தியில் 

எவரும் அறியாதபடி 

யாவரும் உணராதபடி 

மௌன சாட்சியாய் 

இருள் சூழ்ந்தபடி. 

Pin It