எனக்குப் பிடிக்கிறது மௌனம்
எனது இயக்கம்
உன்னைச் சுற்றியுள்ள போது
வந்த பொழுதும் வராத நாளும்
ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.
வரவேற்பறையில் பேசியவற்றை
படுக்கை அனுமதிப்பதில்லை
எனக்கான வேலைகளில்
சில கணங்கள் மறுக்கிறேன் மௌனத்தை
பழகிய வார்த்தைகளின் முரணில்
மௌனம் கனத்து விடுகிறது.
எனக்குப் பிடிக்கவில்லை
ரணமான நிகழ்வுகளை எழுத
நீ பிடிவாதமாய்
முற்றத்தின் காற்றசைவில்
அடம் பிடிக்கிறாய்,
சாத்தப்பட்ட அறைக்குள்
எரிகின்ற நெருப்பில்
மீதமிருக்கிற ஏக்கங்களை அறியாமல்.
ஒவ்வொரு முறையும்
கண்விழிக்கிறேன் வேறுவழி தெரியாது
குரூரச் சிரிப்பில் மரணித்த மௌனத்தைத் தேடி