இறந்தகாலம் நிகழ்காலம் இரண்டிலும்
எண்ணிப் பார்க்கிறேன் என் தாத்தாவை..
புஜங்கள் இரண்டும் புடைத்த வண்ணம்
முறுக்கு மீசையில் பெருமை கொண்டவர்
அகவை பறித்தக் குழியில் அமர்ந்து விட்டார்
செம்மேனிக்கு சொந்தக்காரர் தேகமெங்கும் சுருக்கக் குறியீடுகள்
கைத்தடியும் கண்ணாடியும்
மற்றுமிரு கண்கள்
பொழுதுபோனது எப்படியோ அவருக்கு
பொதிகைத் தொலைக்காட்சியில் வயலும் வாழ்வுமாய்
அன்றொரு நாள் அழையா விருந்தாளியாய்
வாதமும் வந்தது
மாறுகையும் மாறுகாலும்
முடங்கிப் போனது முற்றிலுமாய்..
கழிவறை செல்லும் போதும்
காற்றாட உலாவிக் கதைகளை
சொல்லும் போதும்
கைத்தடியே காலானது
தாத்தாவின் வருடல் தொடுதலில்
செல்லக்காதலியானது கைத்தடி
திடீரென ஒருநாள் கதிரவன் தோன்றல்
நிகழ்வில் காலாவதியானது
தாத்தாவின் கைத்தடி ஓசையும்
கனைப்புச் சத்தமும்
காதிலே விழவில்லை
கட்டிலருகே சென்று கைவைத்துப்பார்த்த போது
ஒருக்கனித்து படுத்தவாறே ஒதுங்கியிருந்தார்
தாத்தா காலனின் கைகளுக்குள்ளே..
முற்றத்தில் உலாவி வந்த
முதிர் குழந்தை ஒன்று மூர்ச்சையாகிப் போனது
நடுச்சாம வேளையில் ஒருநாள் நான் கண்ட கனவில்
நட்சத்திரங்களின் நடுவே
முகம் மலர சிரித்தார் தாத்தா
மூக்குக் கண்ணாடியுடன்...
கண்களை கீழ்நோக்கினேன்
அவர் கரங்களின் இடையே
கண்ணை சிமிட்டியபடி
இறுமாப்பாய் சிரித்தது
தாத்தாவின் கைத்தடி...
- எஸ்தர்