மரணச்சுனை

பசிமிகுந்த உயிரைப் போலவோ
காமம் கொண்ட மிருகம் போலவோ
விரைந்துகொண்டு இருக்கிறது
அந்த உடல்

நிலம் அதிர்கிறது
மரங்களும் உயிரினங்களும்
பின்னோக்கிச் செல்கின்றன
புழுதி கொதித்து
வெளியெங்கும் படர்கிறது
இரை சிக்காமல்
நழுவிக்கொண்டே இருக்கிறது

 *

அந்தச் சுனையில்
தேன் ஊறுகிறது
பட்டாம்பூச்சிகள் சுற்றுகின்றன
எறும்புகளும்
இன்னும் பிற உயிரினங்களும்
சுவைத்துச் சரிகின்றன
மயக்கத்தில்

மயக்கத்தில்
அளவுக்கு மீறிக் குடித்த
ஆண் எழும்புகிறான்

 *

அது
பாய்ந்துகொண்டிருக்கிறது
பறந்துகொண்டிருக்கிறது
ஊர்ந்துகொண்டிருக்கிறது
தேடித்தேடி அருந்திக் கொண்டிருக்கிறது


மரணம்
அத்தனை ருசியாக இருக்கின்றது.


பரிபாலனம்

என் மரணத்தை
எப்படி எதிர் கொள்வாயெனத் தெரியாது

முதல் மரணத்தைக் கண்டது
போலத் துடிப்பாயோ
மேலும்
உன்
இன்னுயிரைச் சுமையாய்த்தான்
உணர்வாயோ

அல்லது
என்னைப் போலவே
அல்லது
என்
சவத்தைப் போலவே
இதழ்களில் புன்னகையை உதிர்ப்பாயோ

மரணம்
சந்தித்தே ஆக வேண்டிய கடவுள்

உன்
கண்களில் வழியும்
வாதையை
உணரும் நிலையில் இல்லை
என்பதையுணர்ந்து

மகிழ்வாய் இரு
என்பதே
என் வேண்டுகோள்

 *

முகங்களை
மாற்றிமாற்றி
என்னை
வதைத்தவர்களை விட்டு
பிரிகிற
மகிழ்ச்சி எனக்கு

துரோகத்தின்
நிழல்களிலிருந்து
விடைபெற்ற மகிழ்ச்சி

எதிர்பார்ப்புகளை மட்டுமே
தாங்கி வந்த
உறவுகளைப் பிரிந்த மகிழ்ச்சி

மரணம்
என்மீது கவிவது குறித்து
நான் உணர்வது
சிறகடித்துப் பறத்தலை.

*

நீ
காத்திரு

மரணம்
உன்னை
என்னிடத்தில் சேர்க்கும்வரை

அதுவரை
என்
முகமுடியை அணிந்து
உன்
ராஜ்ஜியத்தை நடத்து.

 *

மரணத்தின் ஒத்திகை

அவள் உறங்கட்டும்.

தூக்கம் என்பது
உறக்கம் மட்டுமா
அது
மரணத்தின் ஒத்திகை

மரணம் என்பது
தூக்கத்தின் தொடர்ச்சி

உறங்கு
விழித்து உறங்கு
மரணத்தில் வரும் கனவென

கனவென்பது
உறக்கத்தில் மட்டும் வருவதன்று
என்பது
மரணம் தீண்டும்போது புரியும்

மரணத்தின் ருசி அறியாதவர்களுக்கு
உறக்கத்தைப்பற்றித் தெரியாது
துயில்வது விடுதலைக்கான பயணம்
மரணம் என்பது நீள்துயில்.

அவள் உறங்கட்டும்
அறிந்திராத
அடையமுடியாத வெளியில்
பயணம் செய்துகொண்டிருப்பாள்.


உயிர்த்திருக்கும் மரணம்

இன்று உன் முகம்
உன் முகம் மாதிரியே இல்லை
இந்த மங்கிய ஒளியில்

உன் கண்கள்
நிலவைப்போல் ஒளிர்ந்து
கொண்டிருக்கின்றன

இதோ இந்தக் காற்று
நம்மை இணைத்துக் கொண்டிருக்கின்றது

காற்று உயிர்களை இணைப்பதற்கு
எத்தனை காலம் ஆகும்
எனத் தெரியவில்லை

உன் மூக்கின் வலது பக்கத்தில்
ஒளிரும் வைரக்கற்கள்
என்னைப் போ போவெனச் சொல்கின்றது

உன் கரங்களில் மின்னும்
சிகரெட் துண்டின் கங்கு
வா வா என்றழைக்கின்றது

உனது மூச்சுக் காற்றாய் மாறி
வெகு நாட்களாயிற்று என்று நீ சொன்னது
அறியாது
வானில் பறந்து கொண்டிருக்கும் நான்

மரணத்தை அடையும் வேளையில்
அன்பை நீ உயிர்ப்பிக்கலாம்
வாழ்க கவிதை
வாழ்க வாழ்கவே மரணம்.

- சுதீர் செந்தில்

Pin It