கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இதமான சிலுசிலு காற்று வீசத் தொடங்கி இருக்கும், மரத்தின் இலைகளின் நிறம் மாறிக் காட்சியளிக்கும், சிறிது காலத்தில் நிறம் மாறிய இலைகள் கீழே விழத் தொடங்கும். இவ்வறிகுறிகள் எல்லாம் குளிர்காலத்தை நோக்கிய பயணம். பூமி சூரியனை விட்டு விலகி சுற்றும் என்பதைக் காட்டும்.
இலையுதிர் காலத்தில் அனைத்து மரங்களின் இலைகளும் நிறம் மாறி உதிர்ந்து கீழே விழும் என்பதல்ல, இதில் சில மரங்கள் மட்டும் விதிவிலக்கு. ஆம், "சைப்ரஸ் மரங்களில் பாடும் பறவை என்னிடம் சொன்னது ஐ லவ் யூ" என்று ஜீன்ஸ் படத்தில் வரும் கவிப்பேரரசுவின் வரிகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால், உங்களுக்கு ஒரு சல்யூட்.
Conifer வகையைச் சேர்ந்த மரங்களின் இலைகள் (ஊசி இலைகள்) இவைகளின் நிறம் மாறுவதில்லை அதேபோல் உதிர்ந்து கீழே விழுவதும் இல்லை. Pine tree, cedar, cypress trees, fire, junipers, kauris, larches, redwoods, spruces, yews இவ்வகை மரங்கள் எல்லாம் gymnosperm என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது.
நமது வழக்காடு மொழியில் அவைகள் எல்லாம் கிறிஸ்துமஸ் மரங்கள். பொதுவாக இந்த மரங்கள் எல்லாம் கூம்பு வடிவில் விதைகளைக் கொடுக்கும். டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அதற்கு உணவாக இவ்வகை மரங்கள் இருந்துள்ளது. இவ்வகை மரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.
சூரிய ஒளி இல்லாத காலத்திலும், மிகக் கடுமையான குளிர் பிரதேசங்களில் இவ்வகையான மரங்கள் தங்களின் இலைகளை அப்படியே பாதுகாத்துக் கொள்கிறது. அதன் வடிவமைப்பு கூட்டாக ஊசியை போல் அமைந்திருப்பதே அதற்குக் காரணம்.
குளிர் காலத்தில் இதன் metabolism குறைவாக மற்ற மரங்களைப் போலவே இதற்கும் இருக்கிறது. வெண்பனியின் மேல் விழுந்து வரும் அதிகப்படியான சூரியக் கதிர்வீச்சால், இது தனது சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. அதாவது நேரடியான சூரிய ஒளி தேவையில்லை, வெளிச்சம் இருந்தாலே அதற்குப் போதுமானது. (https://academic.oup.com/bioscience/article/54/1/41/234579)
இலைகளின் நிறம் மாறுதல் மற்றும் இலைகள் உதிர்தலை 'deciduous trees' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். உதாரணமாக நம்மூரில் காணப்படும் அரச மரம், ஆலமரம், வேப்பம் மரம், போன்ற மரங்களை குறிப்பிடலாம். வட,தென் துருவ நாடுகளில் அதிகம் காணப்படும் Oak trees, Elm trees, Maple trees, போன்று இவைகளைக் குறிப்பிடலாம்.
இலைகளின் நிற மாற்றம்:
பூமி சூரியனை விட்டு விலகி செல்வதால் நமக்கு பகல் பொழுது குறைவாகவும் வெப்பநிலையும் குறையும், இரவு பொழுது நீண்டும் காணப்படும். எதிர்வரும் குளிர் காலத்தை நோக்கி சில விலங்குகள் தனக்கான உணவை ஆயத்தப்படுத்திக் கொள்ளும். குளிர்காலம் முடியும் வரை விலங்குகள் வெளியே வராது இதனை ஆங்கிலத்தில் hibernate என்கிறோம். இது போன்ற நிகழ்வு தான் மரங்களிலும் நிகழ்கிறது. மரங்களும் குளிர் காலத்தை நோக்கி ஆயத்தம் ஆகின்றன.
மரம் உயிர் வாழ சூரிய ஒளி தண்ணீர் கார்பன் டை ஆக்சைடு இவை அனைத்தும் தேவை என நாம் சிறுவயதில் பாடப் புத்தகத்தில் படித்து இருக்கிறோம். இதை 'Photosynthesis' என்று அழைப்பார்கள். இலையுதிர் காலத்தில் சூரிய ஒளி குறைவாக கிடைக்கப் பெறுகிறது. அதாவது சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் சக்தி குறைவாக கிடைப்பதால், photosynthesis நிகழ்வை குறைத்துக் கொள்கின்றன.
இதனாலேயே இலைகளின் நிறங்கள் மாறத் தொடங்குகின்றன. மரங்கள் எல்லாம் ஏதாவது ஒரு வழியில் சூரிய ஒளியை தேடும். அது அவற்றின் இலைகளின் வழியே நடைபெறும். இலைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வேலை செய்யும் இதை 'Pigments inside the leaves' நிற மானிகள் எனலாம். அதாவது இலைகளின் நிற மானிகள் சூரிய ஒளியைப் பெற முயற்சிக்கும்.
இலைகளுக்குள் பலவகையான நிற மானிகள் அடங்கி இருக்கும் சூரிய வெளி கிடைப்பதைப் பொறுத்து இலைகளின் நிறம் மாறத் தொடங்குகின்றன. குளிர்காலத்தில் பசியுடன் அவ்வகை மரங்கள் வாழும் என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம்.
சரி முதலில் பச்சை நிறம் எவ்வாறு வருகிறது என்பதை பார்ப்போம். மரங்கள் அதிகப்படியான சூரிய ஒளியைப் பெறும் போது இலைகளில் உள்ள Chlorophyll பச்சையம் (பச்சை நிறம்) அதிகமாக வெளிப்படும். இது கோடைகாலம் தொடங்கி இலையுதிர் காலம் வரை அதிக அளவில் சூரிய ஒளி கிடைப்பதால் இலைகள் பச்சையாகவே காணப்படுகிறது.
இந்த பச்சை Chlorophyll தான் இலைகளின் Pigmentsல் அதிகம் காணப்படுகிறது முறையே இது தான் photosynthesis சுழற்சிக்கு உதவியாக இருக்கிறது. பருவநிலை மாற்றம் நிகழும் போது 'Environmental cues' இந்த நிற மாற்றம் நிகழ்கிறது. Cues என்றால் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல். குறைவான சூரிய ஒளி மற்றும் குளிர்ந்த வெப்பநிலை இதை மாற்றுகிறது.
இலைகள் நிற மாற்றத்தின் முதல் வடிவம் Pigment Carotenoids இளம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம். பச்சை தன்மையுடைய Chlorophyll இழக்கும் போது, மஞ்சள் நிறமுடைய Carotenoids வரத் தொடங்கும். சிறிது காலம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும். பின்னர் இலைகள் தனது அடுத்த கட்ட நிலையான anthocyanins நிலைக்கு மாறிவிடும். இது தான் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் இலைகள் தோற்றமளிக்கக் காரணம்.
இந்த Pigment -ன் நிறம் மாற்ற நிகழ்வுகள் முடிந்த பின்னர் இலைகள் தாமாகவே உதிர்ந்து விடும். தமக்குள் சேமித்து வைத்திருந்த சக்திகள் எல்லாம் முடிவுக்கு வந்தது run out of the pigments. ஆனால், மரம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.
ஏன் இவ்வாறு இலைகளின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன என்பதை நாம் முன்னரே பார்த்ததுபோல, குளிர்காலத்தில் தனக்குத் தேவையான ஆற்றலை சேமித்து கொள்ளவே இவ்வாறு தனக்குள் நடைபெறுகிறது.
இலையுதிர் காலத்தை முன் வைத்தே பல நாடுகளில் சுற்றுலா நிகழ்சிகள் மிகவும் சிறப்பாக செயல்படும். 'Fall colours வந்து இருக்கிறது பார்த்தீர்களா' என்று நண்பர் செய்தி அனுப்பி இருந்தார். வானொலியில் இலையுதிர் காலத்தில் மரங்களின் நிறம் ஏன் மாறி காட்சியளிக்கிறது என்ற தொகுப்பு ஒலித்துக் கொண்டிருந்தது.
சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு இருபுறங்களிலும் மரங்களின் நிறங்கள் மாறி காட்சி அளித்ததை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆங்காங்கே பழுத்த இலைகள் கீழே விழுந்து கிடந்தன.
வாருங்கள் நண்பர்களே நாமும் சமூக வலைத்தளங்களை சற்று ஒதுக்கிவிட்டு, இலையுதிர் காலத்தில் மரங்களின் பழுத்த இலைத் தழைகளை கண் குளிர பார்த்து ரசிப்போம.
(நன்றி: https://www.npr.org/2020/10/21/926278247/micro-wave-why-do-leaves-change-color-during-fall)
- பாண்டி
- விவரங்கள்
- வி.களத்தூர் பாரூக்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தேனீ மாதிரி உழைக்கணும் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். ஓய்வில்லா உழைப்பிற்கு அடையாளமாக விளங்குகிறது தேனீ. உழைப்பதில் மட்டுமல்ல சுறுசுறுப்பு, தலைமைக்குக் கட்டுப்படுதல், கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கும் தேனீயே அடையாளமாக இருக்கின்றது.
ஸ்லோவினியா நாட்டில் 'தேனியைப் பார்த்து படி' என்ற பழமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி மேற்கண்ட காரணத்திற்காகத்தான் வழங்கப்பட்டிருக்க கூடும். வரும் முன் காப்பதில் திட்டமிட்டு செயல்படுவது தேனீயின் குணமாக இருக்கின்றது.
பூக்கள் பூக்காத காலங்களிலும், தங்களுக்குத் தேவையான உணவைச் சேமித்துக் கொள்கிறது தேனீ. அதைத்தான் நாம் தேன்கூடு என்கிறோம். ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. அதனால் உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடி எனவும் அது அழைக்கப்படுகிறது.
தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஸ்பெயின் நாட்டில் தேன் சேகரிக்கும் நபரின் உருவம் பொறித்த குகை ஓவியம் காணப்படுகிறது. இது எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பானதாகும்.
தேனீக்கள் ஆறு கால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை ஈ பேரினத்தில் ஒரு வகை. ஈ பேரினத்தில் சுமார் 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவையாகும்.
மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும் தன்மையுடையது. ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களின் மூன்று வகை உண்டு. முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களின் மிகப் பெரியது. அந்த கூட்டங்களுக்கு தலைமை வகிக்கும். இதன் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இதன் வேலை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது ஆகும்.
இரண்டாவது வகை ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, இராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. மூன்றாவது வகை வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்து பணிகளையும் இதுதான் செய்யும். இதன் ஆயுட்காலம் இரண்டு மாதங்கள் ஆகும்.
தேனீக்கள் பூவுக்குப் பூ சென்று மகரந்தத்தை சேகரிக்கும்போது அவற்றை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு கடத்துவதால், பூக்களிடையே கருவுற நிலை ஏற்படுகிறது. பிறகு மரச் செடிகள் காய்ந்து விதையிட்டு இனம் பெருக்குகிறது. இதைத்தான் மகரந்தச் சேர்க்கை என்று நாம் சொல்கிறோம். இதனால் நிறைய வனப்பரப்பு உருவாகிறது.
தேனீக்களின் மகரந்த சேர்க்கை நடைபெறவில்லையென்றால் பல பயிர்கள் அழிந்துபோகும். இதனால்தான் தேனீக்கள் அழிந்தால் விரைவில் மனிதகுலமும் அழிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளிலும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை சூழலியலாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்து, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. நெருப்பு மூட்டி தேன் எடுப்பதாலும் தேனீக்கள் மடிந்து வருகின்றன. இதற்கு மாற்றமான பல வழிகள் இருந்தாலும் அதற்கு யாரும் கவனம் கொடுப்பதில்லை.
தேனீக்கள் நேரிடையாக மிகச்சிறந்த இயற்கை மருத்துவப் பொருளான தேனை நமக்கு வழங்குகிறது. அதேபோல் மறைமுகமாக அயல் மகரந்தச் சேர்க்கையால் பயிர்களை செழிக்க வைக்கிறது. இப்பேற்பட்ட தேனீக்கள் அழிவதை கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல. தேனீக்களை காப்பதில் அனைவரும் அக்கறை செலுத்திட வேண்டும்.
- வி.களத்தூர் பாரூக்
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வாழ்விற்கானப் போராட்டம் சாதாரணமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. கடற் படுகைக்கு அடியில் 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஆக்ஸிஜனோடு தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்த நுண்ணுயிரிகளை அறிவியலாளர்கள் தற்போது கண்டு பிடித்திருக்கின்றனர். இவை இறைச்சி உண்ணும் டினோசார்களான ஸ்பினோசாரஸ் உலகில் சுற்றித் திரிந்த நாட்களுக்கு முன்பே உருவானவை.
இவை கடலுக்கு அடியில் புதையுண்டதற்க்குப்பின் இந்த உலகில் கண்டங்கள் இடம் விட்டு இடம் நகர்ந்திருக்கின்றன; கடல் மட்டங்கள் மேலெழும்பி தாழ்ந்திருக்கின்றன; மனிதக் குரங்குகள் தோன்றியிருக்கின்றன; பின்னர் மனிதனும் தோன்றியிருக்கிறான். இத்தனை காலங்களையும் கடந்து அவை இப்போது விழித்தெழுந்திருக்கின்றன.
உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனும், உணவும் கிடைப்பது மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் உயிர்கள் எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்கின்றன என்பதைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு அறிவியல் குழு முனைந்திருக்கிறது.
ஜப்பானின் கடல்சார் புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை (Japanese Agency for Marine - Earth Science and Technology - JAMSTEC) அய் சேர்ந்த புவிசார் நுண்ணுயிரி ஆய்வாளர் (geo-mirobiologist) யூகி மொரோனோ (Yuki Morono), ரோட் ஐலான்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவென் டி ஹான்ட் (Steven D’Hondt) என்ற அறிவியல் அறிஞர்கள் தலைமையில், அமெரிக்காவின் யூ.ஆர்.ஐ கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஓஷனோகிராபி (URI Graduate School of Oceanography), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் இண்டஸ்ட்ரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, (National Institute of Advanced Industrial Science and Technology), ஜப்பானைச் சேர்ந்த கொச்சி பல்கலைக்கழகம் (Kochi University), ஜப்பானின் கடல்சார் ஆய்வு நிறுவனம் (Marine Works - Japan) ஆகியவை இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன. JOIDES Resolution என்ற ஒரு துளையிடும் கப்பலை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
அவர்கள் ஆய்விற்காக மேற்கொண்ட பகுதி ஆஸ்திரேலியாவிற்கு கிழக்குப் பக்கமாக உள்ள தென் பசிபிக் சுழல் (South Pacific Gyre) என்று அழைக்கப்படும், பெரும்பாலான கடல் நீரோட்டங்கள் ஒன்றாக இணையும் ஒரு பகுதி. அது கடலின் பாலைவனம் என அழைக்கப்படுகிறது. அதாவது அங்கு உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் கனிமப் பொருட்கள் குறைந்த அளவிலேயே கிடைக்கக் கூடிய பகுதி. எனவே உயிர்கள் வாழத் தகுதியற்ற கடுமையான சூழ்நிலையில் உயிர் நிலைத்திருக்கக் கூடிய தன்மையை ஆராய சரியான இடம் இதுவேயாகும் என்பது அவர்களது கணிப்பு.
10 வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் இருந்து பிரித்து அறியப்பட்ட பாக்டீரியாக்களை ஆய்வு செய்து நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்னும் ஆய்வு-இணையதளத்தில் 2020 ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஆய்வு கட்டுரையினை இந்த ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.
களிமண்ணும், மண்ணின் வீழ்படிவுகளும் இணைந்த இந்த மண் மாதிரிகள் கடல் நீர் மட்டத்திலிருந்து 5700 மீட்டர் அடியில், கடல் படுகைக்கு கீழே 74.5 மீட்டர் தூரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறன. வழக்கமாக ஒரு கன சதுர சென்டி மீட்டர் அளவுள்ள இந்த மண் மாதிரிகளில் ஒரு லட்சம் செல்களைக் காணக்கூடிய இடத்தில், இவர்கள் எடுத்த மண் மாதிரியில் ஆயிரம் பாக்டீரியாக்களைக் கூட காண முடியவில்லை.
இந்த நுண்ணுயிரிகள், ஏறக்குறைய தங்களது செயல்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு நிறுத்தி விட்டு இருந்தன. ஆனால் அவற்றுக்கு ஊட்டச்சத்தும், உயிர் வாழத் தேவையானவற்றையும் அளித்தபோது அவை மீண்டும் செயல்படத் துவங்கின.
இந்த பேக்டீரியாக்களை 557 நாட்கள் அடைகாத்தலில் (Incubation) வைத்திருந்து அதற்கு உணவாக அம்மோனியா, அசிட்டேட், அமினோ ஆசிட் ஆகியவற்றை வழங்கியிருக்கின்றனர். செயலற்று இருந்த அவை வளர்ந்து, இனப்பெருக்கம் செய்திருக்கின்றன. அவை மிகுந்த அளவில் நைட்ரஜனையும் கார்பனையும் உட்கொண்டு 6,986 என்ற எண்ணிக்கையில் இருந்தது 68 நாட்களில் நான்கு மடங்காக அதிகரித்தன.
முதலில் ஆய்வாளர்களுக்கு நம்ப முடியாததாக தோன்றினாலும், அவர்கள் கண்டறிந்ததில் முக்கியமானது 99.1 சதவீதம் பாக்டீரியாக்கள் 101.5 மில்லியன் வருடங்களுக்கு முன்பு (சுமார் 10 கோடி ஆண்டுகள்) இந்த மண் படிவுகளில் புதையுண்டதுதான். ஆய்வுகளில், இந்த நுண்ணுயிரிகள் மிக மெதுவாக தனது செயல்படுகளைக் கொண்டிருந்து, அவை இவ்வளவு காலம் உயிரோடு இருந்ததற்கு முக்கிய காரணமாக அறியப்படுவது கடலுக்கு அடியில் ஏற்பட்ட வீழ்படிவு மிக மெதுவாக அதாவது கிட்டத்தட்ட ஒவ்வொரு மில்லியன் வருடங்களுக்கு இரண்டு மீட்டர் அளவு நிகழ்ந்ததுதான். இது அங்கு ஆக்ஸிஜன் சிறிதளவு எப்போதும் கிடைக்க ஏதுவாக இருந்திருக்கிறது.
ஆய்வுக் குழு, இந்த மண் மாதிரிகளில் கண்டறிந்ததில் 10 வகையான பரவலாக அறியப்பட்ட பாக்டீரியாக்களும் மற்றவை அந்த அளவுக்கு அதிகமாக அறியப்படாத சிறிய வகை பாக்டீரியாக்களும் அடங்கும். இதில் காணப்பட்டப் பாக்டீரியாக்கள் பெரும்பாலும் உப்பு நீரில் காணப்படும் பாக்டீரியாக்களான ஏரோபிக் வகை என அறியப்படுபவை. அதாவது அவை வாழ்வதற்கு ஆக்சிஜன் மிக அவசியத் தேவையாகும். சாதாரணமாக புதையுண்டு இருக்கும் காலத்தில், பாக்டீரியாக்கள் செயலற்ற (dormant) நிலைக்குத் தங்களை மாற்றிக் கொண்டு தங்களைச் சுற்றி விதை உறையினை (spores) உருவாக்கிக் கொள்ளும். ஆனால் இவை அப்படிப்பட்ட விதை உறைகளை உருவாக்கவில்லை.
ஆய்வின்போது ஒருவேளை பயன்படுத்தும் கருவிகளில் இருந்து ஏதேனும் இந்த மாதிரிகளில் சமீபத்திய பாக்டீரியாக்கள் கலந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களையும், மிக பாதுகாக்கப்பட்ட சூழலையும் கொண்டு இவை ஆய்வு செய்யப்பட்டன.
கடலுக்கு அடியில் கடற்ப் படுகையில் உயிரினங்கள் 15 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றன என்பது ஆய்வாளர்கள் அறிந்ததுதான். ஆனாலும் யூகி மொரோனோ கடுமையான சூழ்நிலைகளில் அத்தகைய உயிரினங்களின் வாழ்க்கைச் சூழலில் அவற்றின் தாக்குப்பிடிக்கும் திறனை, காலத்தை அறிய முயற்சித்தார்.
இந்த ஆய்வுகள் புவியியலின் காலத்தோடு ஒப்பிடும் போது அவற்றை மிக நீண்ட நாட்களுக்கு முன்தள்ளி இருக்கின்றன. ஏற்கனவே 2000ஆம் வருடத்தில் நடத்தப்பட்ட ஒரு முந்தைய ஆய்வில், டெக்ஸாஸில் கண்டுபிடிக்கப்பட்ட உப்பு படிகங்களில் உள்ள பாக்டீரியாக்கள் 250 மில்லியன் பழமையானது எனக் கூறப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.
இந்த ஆய்வின் முடிவுகள் நுண்ணுயிரிகள் எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் உயிர் வாழத் தகுதியானவை என்பதையே காட்டுகின்றது. இதுவே பரிணாமத்தில் மிக முன்னதாக தோன்றிய நுண்ணுயிர்கள், சாதகமற்ற சூழ்நிலையில் அவற்றுக்கே உரித்தான முறையில் உயிர் வாழ்வதற்கான அவசியமான காரணியாகும்.
அதேபோல சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலோ அல்லது இந்த பிரபஞ்சத்தின் ஏதாவது ஒரு பகுதியிலோ உயிர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன. நாம் காணும் கோள்களில் மேற்பகுதியில் உயிர் இல்லாவிட்டாலும் அதன் உட்புற பகுதிகளில் உயிர் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
(நன்றி: livescience.com, bbc.com, theprint.in, in.reuters.com, sciencedaily.com, sciencemag.org இணைய தளங்கள்)
- இரா.ஆறுமுகம்
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கொரோனா வைரஸ்கள் உட்பட பலவிதமான வைரஸ்களை வௌவால்கள் கொண்டுள்ளன. உண்மையில், கொரோனா வகை வைரஸ்களால் ஏற்படும் சார்ஸ், மெர்ஸ் மற்றும் கோவிட் -19, இவையனைத்தும் வெளவால்களிடமிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்த நோய்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை; ஆனால் வெளவால்கள் அவற்றால் பாதிக்கப் படுவதில்லை.
அனைத்து விலங்கினங்களையும் போலவே, வெளவால்களும் அவற்றுக்கேயுரிய அளவிலான வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க் கிருமிகளைக் கொண்டுள்ளன. அனைத்து உயிரினங்களும் பிற உயிரினங்களோடு இணைக்கப்பட்டு, அவை மற்ற உயிரினங்களை சுரண்டுவதற்கும், அதேபோல், தான் சுரண்டப் படுவதற்குமாக உருவாகியுள்ளன. ஆகவே வௌவால்கள் ஒரு வகை வைரஸ்களை தனக்குள் வைத்துக் கொண்டு, தங்களையும் பாதித்துக் கொண்டு, தொடர்ந்து வௌவால் கூட்டத்திற்குள் அவற்றை சுழற்சி செய்தும் வருகின்றன.
COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2, வைரஸ் கொரோனவைரிடே(coronoaviridae) (கொரோனா வைரஸ்கள்) எனப்படும் வைரஸ்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகும். கொரோனா வைரஸ்கள், அல்லது “CoVக்கள்”, பல்வேறு வகையான விலங்குகளை பாதிக்கின்றன. மனித நோய்த்தொற்றுகளான எச்.சி.ஓ.வி -229 இ (HCoV-229E) முதல் ஆரம்பித்து, சில வகை ஜலதோஷத்திலிருந்து, 30% வரை இறப்பு விகிதம் கொண்ட மெர்ஸ்-கோவி (MERS - CoV) வரை உருவாக்குகின்றன .
2002 ஆம் ஆண்டில், முதல் SARS-CoV பரவியதிலிருந்து, SARS-CoV உடன் நெருங்கிய தொடர்புடைய கொரோனா வைரஸ்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெளவால்களில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் 2013 ஆம் ஆண்டில் சீன குதிரைகுளம்பு வெளவால்களைப் (horse shoe bats) பற்றி ஆய்வு செய்யும்போது, தற்போதைய SARS-CoV-2 உயிரணுக்களுடன் பிணைக்கக் காரணமான அதே ACE2 ஏற்பியைப் (ACE2 - Receptor) பயன்படுத்தும் பல SARS போன்ற CoV-களை அடையாளம் கண்டனர். இந்த வைரஸ்கள் SARS-CoV ஐப் போலவே இருந்ததால், அவை “SARS போன்ற கொரோனா வைரஸ்கள்” என்று அழைக்கப்பட்டன. அன்றிலிருந்து இந்த குழுவில் புதிய வைரஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே வெளவால்களில் புழக்கத்தில் இருக்கும் கொரோனா வைரஸ்களில் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை உள்ளது. இது இந்த வைரஸ்களில் ஒன்று ஜூனோடிக் (zoonotic) தொற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது - வேறுவிதமாகக் கூறினால், அவை விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் தாவும் தன்மையைப் பெற வாய்ப்புள்ளது.
வௌவால்கள் பொதுவாக வைரஸ்களுக்கு சிறந்த ஓம்புயிரிகள். கொரோனா வைரஸ்கள் ஒரு குழுவாக வெளவால்களுக்குள் தொற்று ஏற்படுத்துவதிலும் மற்றும் பல்வகையாகப் பிரிவதிலும் வெற்றிகரமாக செயல்படுகின்றன. பல வௌவால் இனங்களில் நிலவும் சமூக இயல்புத் தன்மை, வெளவால்களுக்கு இடையில் வைரஸ் நோய்க்கிருமிகளின் தொடர்ச்சியான பரிமாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. மேலும் அவற்றுக்கிடையே வைரஸ்கள் பல்வகைப்படுதலையும் அதிகரிக்கின்றது.
பாலூட்டிகளிடையே தனித்துவமானது வௌவால்கள்
ஆபத்தான பல வைரஸ்கள் வௌவால்களில் பரவி வந்தாலும், இந்த தொடர்ச்சியான நோய்த்தொற்றுகளினால் அவை ஏன் சாவதில்லை? வெளவால்களுக்கு ஒரு வைரஸ் தொற்றுநோயை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கும், மற்ற வைரஸ் பாதிக்கும் உயிரினங்களை கொல்லக்கூடிய அதிகப்படியான அழற்சி எதிர்வினைக்கும் (inflammatory response) இடையில் ஒரு சமநிலையை பராமரிக்கக்கூடிய தன்மை இருக்கிறது. இதற்கான விடை பாலூட்டிகளிடையே அவற்றின் தனித்துவமான அம்சத்தில் இருக்கலாம் - அதுதான் அவற்றின் பறக்கும் தன்மை (flight).
பறக்கும் தன்மைக்கான உடலியல் தேவைகள், வைரஸின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அவற்றுள் உருவாக்குகின்றன. பறக்கும் தன்மை, வெளவால்கள் உயர்ந்த வளர்சிதை மாற்றங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்வதற்க்கும், அவற்றின் உள்ளார்ந்த உடல் வெப்பநிலையை 38 டிகிரி செல்சியஸ் ஆக உயர்த்துவதற்கும் காரணமாக இருக்கின்றது. இதன் பொருள், வெளவால்கள் பெரும்பாலும் மனிதர்களுக்கு காய்ச்சலாகக் கருதப்படும் வெப்ப நிலையிலேயே உள்ளன. வைரஸ் தொற்றுநோய்களில் இருந்து வெளவால்கள் தப்பிக்க உதவும் ஒரு பொறியமைவாக இது இருக்கலாம் என்று இங்கிலாந்தின் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைரஸ் தொற்றுகள் ஓம்புயிரிக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பகுதியாக, “சைட்டோகைன் புயல்” (cytokine storm) என்று அழைக்கப்படும் கட்டுப்படுத்தவியலாத அழற்சி எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இது COVID-19 உட்பட பல சுவாச நோய்களில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலைக்கு கொண்டு செல்லலாம். பறக்கும் தன்மைக்கு வெளவால்கள் தகவமைத்துக் கொண்டது, அவை அதிக உடல் வெப்பநிலையை சிறப்பாக தாங்கிக் கொள்ள முடிவதென்பது ஆகியவை மற்ற பாலூட்டிகளை விட அழற்சி எதிர்வினையின் சில தீங்கு விளைவிக்கும் விளைவுகளை அவை பொறுத்துக் கொள்ள முடியும் என்றே அர்த்தமாகும்.
வெளவால்கள் அதிக உடல் வெப்பநிலையை பொறுத்துக் கொள்ள அனுமதிக்கும் பண்புகளுக்கு மேலதிகமாக, அவற்றின் நோயெதிர்ப்பு மண்டலம் மற்ற பாலூட்டிகளிடையேயிருந்து விலகிய அசாதாரணமான, தனித்துவமான தகவமைப்புகளையும் கொண்டிருக்கலாம்.
இன்டர்ஃபெரான் மரபணுக்களை தூண்டக்கூடிய மரபணு பிறழ்வு (Stimulator of Interferon genes - STING)
2018 ஆம் ஆண்டில், சீனா மற்றும் சிங்கப்பூர் விஞ்ஞானிகள் வௌவால்களின் ஒரு மரபணுவில் ஒரு பிறழ்வைக் (Mutation) கண்டுபிடித்தனர். அது வைரஸ் தொற்றுநோய்களின் போது வெளவால்களில் வைரஸின் தாக்கத்திற்கு எதிர்வினையாற்றக் கூடியதாக இருந்தது. இந்தப் பிறழ்வு இன்டர்ஃபெரான் மரபணுக்களை தூண்டக்கூடிய (Stimulator of Interferon genes - STING) ஒரு மரபணுவில் ஏற்பட்டிருந்தது. இது அனைத்து பாலூட்டிகளுக்கும் பொதுவானதுதான். வைரஸ் தொற்றுநோய்களின் போது ஒரு உயிரினத்தின் அழற்சி எதிர்வினையை தூண்டுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
வௌவால்களில் அடையாளம் காணப்பட்ட மரபணு பிறழ்வு, வைரஸ் தொற்றுநோய்களின் போது இன்டர்ஃபெரான்ஸ் எனப்படும் குறிப்பிட்ட அழற்சியினை ஏற்படுத்தும் புரதங்களின் உற்பத்தியைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு வைரஸ் தடுப்புக் கூறுகளின் உற்பத்தியைக் குறைப்பது ஓம்புயிரிக்கு சிறந்ததாக இருக்கும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகத் தோன்றலாம். ஆனால் அழற்சி எதிர்வினையை குறைப்பது என்பது வெளவால்களிடம் அதிகப்படியான நோயெதிர்ப்பு எதிர்வினையினால் ஏற்படும், (ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட) “சைட்டோகைன் புயல்” சேதத்தைத் தவிர்க்க உதவும் என்று தோன்றுகிறது.
பறக்கும் தன்மை மற்றும் STING இல் ஏற்படும் மரபணு பிறழ்வு இந்த அழற்சியை கட்டுப்படுத்தவும், பொறுத்துக் கொள்ளவும் வௌவால்களுக்கு உதவுகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள், மற்ற இனங்களில் இல்லாத வகையில் தொடர்ச்சியான வைரஸ் தொற்றுநோய்களுக்கு அவை தகவமைத்துக் கொண்ட பல காரணங்களின் ஒரு பகுதியே ஆகும்.
வெளவால்கள் புதிய வைரஸ்களின் பலம் வாய்ந்த மூலகாரணமாக இருப்பதை நாம் நீண்ட காலமாக அறிந்திருந்தாலும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சி அறிவியலின் மிக முன்னேறிய நிலையில் இருக்கிறது. புதிய ஆராய்ச்சிகளும் உருவாகி வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும், தரவுகளும் வெளவால்கள் மற்றும் வைரஸ்கள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதோடு நமது சொந்த நோயெதிர்ப்பு அமைப்புகள் பற்றிய நுண்ணறிவுகளையும் நமக்கு வழங்கும்.
மூலம்: கீத் கிரேஹன், லீட்ஸ் பல்கலைக் கழகம்; theconversation.com ஜூலை 8, 2020)
மொழிபெயர்ப்பு: இரா.ஆறுமுகம்
- வேடந்தாங்கல் எல்லைக் குறைப்பு - நமக்கு நாமே வைக்கும் கொள்ளி
- ஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்
- மாறிவிட்ட யானையின் வலசைத் தடங்கள்!
- புவி வெப்பமடைதலால் அழிந்து வரும் பம்பிள் தேனீக்கள்
- அழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்
- காட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க கால்நடைகளைப் பயன்படுத்தும் கலிபோர்னியா
- பாம்புக்கு நடுங்க வேண்டுமா?
- புயலையும் தாங்கி நிற்கும் பனை மரம்
- அரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...
- தேரியில் குடியிருக்கும் ஒரு கொல்லாமரத்தின் தாகம்
- பசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை
- விலங்குகளில் செயற்கை முறை கருவூட்டல்
- இன்றைய வணிகக் கோழி உருவான அறிவியல்
- சீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்?
- திசைகாட்டி தாவரம் தெரியும்?
- வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?
- மரத்தை வெட்டு எனும் முழக்கம் ஏன்?
- தூக்கணாங்குருவியின் சமூக வாழ்க்கை
- நம் உயிராதரங்களான காடுகளைப் பாதுகாக்க வாருங்கள்!