இன்று அடிப்படைத் தேவைகளான நீர், மின்சாரம், ஆரோக்கியமான காற்று என எல்லாம் அழிந்து மழைக்கூட பருவக் காலங்களில் பெய்யாது நோய்களின் கூடராங்களாக மக்கள் வாழ்நிலை மாறியுள்ளது. இதற்கு அடிப்படை காரணங்கள் நம் இயற்கை வளங்களான காடுகளும், மலைகளும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளால் சூறையாடப்படுவதுதான். 67 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் உலகின் வறுமை பிரதேசம் என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்கா கண்டத்தைக் காட்டிலும், இந்தியாவில் தங்கள் சொந்த இடங்களை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகம். இதில் நம் இயற்கை வளங்களை காலம்காலமாக பாதுகாத்துவரும் பழங்குடிமக்களே அதிகம்.

forest 400காடுகளும் பழங்குடி மக்களும் பிரிக்க இயலாத உயிரோட்டமான உறவுமுறை கொண்டவர்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் காடுகளை பாதுகாக்க பழங்குடி மக்கள் நடத்திய 105 போர்களில் 75 போர்கள் ஆங்கியேர்களால் வெற்றிக் கொள்ள இயலவில்லை. காடுகளை சுரண்ட மக்களின் எதிர்ப்பை மீறி பிரிட்டஷ் காலத்தில் சட்டரீதியாக 1855ல் வனத்துறை கொண்டுவரப்பட்டது. அத்துடன் வனங்களின் அழிவும் ஆரம்பித்தது. வனங்களைப் பாதுகாக்கும் மக்களின் போராட்டமும் தீவிரமடைந்தது. இன்றும் இந்தியா முழக்க இருக்கும் காடுகளை பாதுகாக்க பன்னாட்டு சுரண்டலுக்கும் அவர்களுக்கு துணைப்போகும் இந்திய அரசுக்கும் எதிராக மிகப் பெரும் உள்நாட்டுப் போரே மாவோயிஸ்ட் தலைமையில் நடத்தி வருகிறார்கள். ஏனென்றால் நம் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான காடுகளும், மலைகளும் அவர்களுக்கு தெய்வங்கள், அதை ஒருபோதும் அழிக்கவும் மாட்டார்கள், அழிக்கவும் விடமாட்டார்கள்.

காடுகளில் உள்ள விலைமதிப்பு மிக்க பாக்சைட் போன்ற கனிம வளங்களை சூறையாட தடையாக இருக்கும் பழங்குடி மக்களையே காடுகளை சூறையாடுபவர்களாக முன்நிறுத்துகிறது அரசும், கார்ப்பரேட் என்.ஜி.ஓ க்களும். ஆனால் பெரும்பாலான காடுகளையும், காட்டு விலங்குகளையும் அழித்தவர்கள் ஆங்கிலேயர்களும், ஜமீன்தார்களும் தான் என்பது அப்பட்டமான உண்மை. யானைகளையும், புலிகளையும், காண்டா மிருகங்களையும் கொன்று ஜம்பமாக அதன் மீது கால்வைத்து எடுத்திருக்கும் புகைப்படங்களே இதற்கான, கண்கூடான சாட்சிகள்.

காடுகளை அழிக்கும் திட்டங்களும், காகிதத்தில் மட்டுமே இருக்கும் வன உரிமைச்சட்டமும்

காடுகளில் இருந்து காட்டின் பாதுகாவலர்களான பழங்குடி மக்களை வெளியேற்ற வனவிலங்கு சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகம், கார்பன் டிரேடிங் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வனவிலங்குகளைப் பாதுகாப்பதாகவும், பழங்குடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதாகவும், சுற்று சூழலைப் பாதுகாப்பதாகவும் கூறுகிறார்கள் மத்திய மாநில அரசுகளும், பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும். ஆனால் இந்தியாவில் அதிகமாக புலிகள் பாதுகாப்பிற்கு செலவு செய்யபட்ட இராஜஸ்தான் சரிஸ்கா புலகள் சரணாலயத்தில் ஒரு புலிக் கூட இல்லை என்பது தான் இவர்கள் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் லட்சணம். புலிகள் காப்பகமும் கார்ப்பரேட் என்.ஜி.ஒ க்களும் என்ற புத்தகத்தில் எழுத்தாளர் முருகவேள் காட்டைக் கொள்ளை அடிக்கும் திட்டமே புலிகள் காப்பகம் என்பதை விரிவாக ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். பழங்குடி மக்களின் போராட்டங்களும், பல்வேறுப் பட்ட அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியினாலும் 2006 வன உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் வனமும், வனம் சார்ந்தவையும் பழங்குடி மக்களுக்கே சொந்தம், எந்த ஒரு திட்டமும் அவர்களின் கிராம சமை ஒப்புதல் இல்லாமல் காடுகளில் நடைப் பெறக் கூடாது என்கிறது. மேலும் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், மீள்குடியேற்றம் செய்ய வேண்டும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும் என்கிறது.

ஆனால் தமிழகத்தின் இயற்கை ஆதாரங்களான மேற்குத் தொடர்ச்சி மலையையும், கிழக்கு குன்றுகளையும் வாழ்வாதாரமாகக் கொண்டு தமிழகத்தில் ஏழு லட்சத்திற்கு மேற்பட்ட 36 பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு கூட இதுவரை பட்டா வழங்கவில்லை, கிராம சபைகள் அமைக்கப்படவில்லை, அவர்களின் நலனிற்காக ஒதுக்கப்பட்ட பண்டைய பழங்குடி நிதி இதுவரை இவர்களுக்கு செலவு செய்யப்படவில்லை என்பது தான் வன உரிமைச்சட்டத்தின் நடை முறை.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனக்கிராமங்கள் பேருராட்சியின் கீழ் தள்ளப்பட்டியிருக்கின்றனர். இதனால் அவர்களின் வன உரிமைகள் ஒட்டு மொத்தமாக துண்டிக்கப்பட்டு எந்த வாழ்வாதரமும் இல்லாது இருக்கின்றனர்.

பழங்குடிகளை வெளியேற்ற வனவிலங்குகளை காரணம் காட்டும் அரசு

தமிழகத்தின் மலையோரக் கிராமங்களில் வனவிலங்குத் தாக்கப்பட்டு 100க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். பல்வேறு விளைச்சல் நிலங்கள் வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் வாழ்வாதரங்களை பழங்குடி மக்கள் அழிப்பதால் அவைகள் வெளியேறி இப்படிப்பட்ட செயல்களில் ஈடுப்படுகின்றது என்கிறார்கள் அரசுத் தரப்பும், கார்ப்பரேட் என்.ஜி.ஓ க்களும். ஆனால் வனவிலங்குகளின் வழித்தடங்களையும், பழங்குடிகளின் வாழ்வாதாரங்களையும் ஆக்கிரமித்து உள்ள ஈஷா யோகா, வேதாந்த மகரிஷியின் அறிவுத்திருக் கோவில், தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராமகிருண்ணா , காருண்யா, பி.எஸ்.ஜி, அமிர்தமாயி போன்ற கல்வி நிறுவனங்கள் மேலும் பல்வேறு ரெசாட்டுகள் இவைகளுக்கு எதிராக அரசும், கார்ப்பரேட் அறிவு ஜீவிகளும சிறு குரலையும் எழுப்புவதில்லை. ஈஷா யோகா மையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு. ஆனால் 24 மணி நேரமும் மின்சார வசதியும், குடிநீரையும் வழங்கிறது இந்த அரசு.

கடந்த மாதம் நீலகிரியில் தேயிலைத் தோட்ட தொழிலாளிப் பெண் ஒருவரை புலி அடித்துக் கொன்றது. இதைக் கண்டுக் கொள்ளாத வனத்துறையைக் கண்டித்து நடந்தப் போராட்டத்தில் வனத்துறை அலுவலகம் சூறையாடப்பட்டது. இதை ஒட்டிப்பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். மாவோயிஸ்ட் தேடுதல் என்றப் பெயரில் அதிரடிப்படையினர் 4 பேர் கூடலூரில் கணவனுடன் வந்த பெண்ணைக் கற்பழிக்க முயற்சி செய்து அவரது கணவரையும் அடித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் வனத்துறை மற்றும் அதிரடிப்படையினால் தங்கள் வாழ்வியல்பை இழந்து பயத்தோடே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எல்லாக் குற்றங்களும் பழங்குடி மக்கள் மீதே சொல்லப்படுகிறது.

போராடும் மக்கள் மற்றும் சனநாயகவாதிகள் கைது நடவடிக்கையும்

பொள்ளாச்சி ஜே.ஜே. நகர் பழங்குடி மக்கள் 20 வருடங்களுக்கு முன்பு காடுகளைவிட்டு வெளியேற்றப் பட்டு இன்றுவரை எந்த அடிப்படை வசதியும் இல்லாது வாழ்ந்துவருகின்றனர். பல வருடப் போராட்டங்கள் அரசின் செவியில் விழாததால் காடுப்புகும் போராட்டத்தை நடத்தினர். 10 நாட்களில் தீர்வு சொல்வதாகக் கூறி பழங்குடி மக்களை அனுப்பிவைத்த வனத்துறை ,பழங்குடி மக்கள் உட்பட 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சனநாயக இயக்கத் தோழர்கள 3பேர் கைது செய்யப்பட்டனர். இதேப்போல் நாடு முழுக்க பழங்குடி மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

நாட்டை விற்கும் அவசரச் சட்டங்கள்

மத்தியில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக அவசரச் சட்டங்களாகக் கொண்டுவரப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர் சட்டத் திருத்தம், அணு ஆயுத ஓப்பந்தம் இது மட்டும் அல்லாது வன உரிமைச் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர முயற்சித்து வருகிறார்கள். வனம் சார்ந்த திட்டங்களுக்கு கிராமசபை ஒப்புதல் இல்லாது நடத்த முடியாது என்பதே வன உரிமைச் சட்டம் பழங்குடி மக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமை. ஓரிசாவில் நியாம்கிரி மலையில் வேதாந்தாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பழங்குடி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை ஒட்டிய வழக்கில் உச்ச நீதிமன்றம் பழங்குடி மக்கள் உள்ள அந்தப்பகுதியின் கிராமசபை ஒப்புதல் இல்லாது இந்த திட்டத்தை நடத்த முடியாது என்று தீர்ப்பு வழங்கி
யுள்ளது. இப்படிப்பட்ட கிராமசபையின் உரிமையை திருத்தம் செய்வதே வன உரிமைச்சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரும் நடவடிக்கை.

பழங்குடி மக்கள் இல்லாது காடுகள் இல்லை

நம் நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சி என்றப் பெயரில் சூறையாடப்படுகிறது. பெரும்பாலான உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதைத்தான் வளர்ச்சி என்கிறார்கள். இதுநாள் வரை காடுகளையும், மலைகளையும் தங்கள் தெய்வங்களாகக் கருதிப் பாதுகாத்து வந்த பழங்குடி மக்களை வெளியேற்றாமல் காடுகளை அழிப்பது என்பது சாத்தியமில்லை. இதை அறிந்து கொண்டே பழங்குடி மக்களுக்கான நிதியில் 57 சதவீதம் குறைத்துள்ளது மத்திய அரசு. காடுகளின் உயிர் கண்ணியில் ஒருவர்களான இவர்களை வறுமையிலும், நாட்டின் வளர்ச்சியென்றும் வெளியேற்றுவது மனித உரிமை மீறல் என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது. ஆனால் இங்கு சாமானியர்களுக்கான சட்டங்களும், திட்டங்களும் போராடாமல் நடைமுறைக்கு வராது என்பதே யதார்த்தமாக உள்ளது. நம் நீர் ஆதாரங்களையும், இயற்கை சூழல்களையும் பாதுகாக்காக வேண்டுமென்றால் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுப்பதை தாண்டி வேறுவழியில்லை. இந்த மக்கள் விரோத்தைத் தடுக்க துணியாவிட்டால் நம் வருங்கால சந்ததியருக்கு நாம் விட்டுவைப்பது வெறும் சுடுகாடுகள்தான்.

மத்திய அரசே ! மாநில அரசே !

வன உரிமைச்சட்டத்தில் உள்ளதைப் போல பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் கிராமசபைகளும், வன உரிமைக் குழுக்களும் உருவாக்கு!

அனைத்து பழங்குடி மக்களுக்கும்; பட்டா வழங்கு!

வனங்களை ஆக்கிரமித்துள்ள மத நிறுவனங்களையும், தனியார் நிறுவனங்களையும், ரியல் எஸ்டேட்காரர்களையும் உடனடியாக வெளியேற்று!

பேரூராட்சியின் கீழ் உள்ள வனக் கிராமங்களை, கிராம பஞ்சாயத்திற்கு மாற்று!

பழங்குடி மக்களுக்கு விரோதமான புலிகள் காப்பகத்திட்டத்தைக் கைவிடு!

மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை என்றப் பெயரில் வனத்துறை மற்றும் அதிரடிப்படைகளின் அட்டூழியங்களை நிறுத்து!

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் வன உரிமைச் சட்டத்தில் மக்கள் விரோத திருத்தங்களைக் கொண்டுவராதே!

உழைக்கும் மக்களே ! சனநாயக சக்திகளே !

பழங்குடி மக்களின் நியாமான வன உரிமைக்காக குரல் கொடுப்போம்!

காடுகளை சூறையாடும் சட்டங்களையும், திட்டங்களையும் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்துவோம்!

நம் இயற்கை வளங்களை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளிடம் இருந்து மீட்டெடுப்போம்!

- தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு

Pin It