bumblebeeதேனீக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக ஓய்வின்றி வேலை செய்யும். அவை ஒரு சிறந்த Pollinators. நமது பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் வழக்கமாக சொல்லும் ஒரு வழக்காடல் உண்டு. அது, "தேனீக்கள் போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்". அந்தத் தேனீக்கள் தற்போது புவி வெப்பமடைதலால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை.

தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டு தாவரங்கள் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை பம்பிள் தேனீக்களின் (bumble bees) எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வகை தேனீக்களின் முகம் குண்டாகவும் இறக்கைகள் நீளமாகவும் பார்ப்பதற்கு வண்டுகள் போலக் காட்சியளிக்கும். இவை பெரும்பாலும் குளிர்ப் பிரதேசத்தில் அதிகம் வசிக்கக் கூடியவை. மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் பிற பூச்சி வகைகளை (Pollinators) விட பம்பிள் தேனீக்கள் வேகமாக பறந்துச் செல்லக் கூடியது.

கடந்த வாரம் 'Science Journal' இதழில் வெளிவந்த அறிக்கையில் தொடர் காலநிலை மாற்றம் மற்றும் அதிகப்படியான வெப்பநிலை உயர்வுதான் இவற்றின் எண்ணிக்கை குறையக் காரணம் என்கிறது.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் ஒருவரான ஒட்டாவா பல்கலைக்கழக (University of Ottawa) தாவரவியல் வல்லுனர் Peter Soroye அவரின் கருத்தின்படி "எந்தப் பகுதிகளில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்ததோ, அங்கு பம்பிள் தேனீக்கள் முன்பு இருந்ததைவிட அதிகமாக அழிந்து விட்டன. இவை காட்டுப் பகுதிகளிலும், விளைநிலங்களிலும் மகரந்தச் சேர்க்கைக்கு (Pollinators) உதவியாக இருந்து காய்கறிகள், பெர்ரி போன்ற பழங்கள் உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுகின்றன. நாம் வாழும் காலத்திலேயே தேனீக்கள் இல்லாமல் போவது எதிர்காலம் குறித்த எச்சரிக்கை மணியை அடிப்பதாக இருக்கிறது" என்கிறார் அவர்.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் இதற்கு முன்பு இரண்டு முறை பம்பிள் தேனீக்கள் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன. 1901 - 1974 மற்றும் 2000 - 2014 காலகட்டத்தில் நடைபெற்ற ஆய்வுகளைக் கொண்டு பார்க்கும் போது, தற்போது வெப்பநிலை உயர்வால் பம்பிள் தேனீக்களின் இனப்பெருக்கம் அதிகமாகக் குறைந்துள்ளது. இந்த மாற்றங்களை 'climate chaos' என்று அழைக்கிறார்கள் வல்லுநர்கள்.

மேலும் இந்த ஆய்வில் வட அமெரிக்கா கண்டத்தில் மட்டும் 1974 ஆம் ஆண்டுக்குப் பிறகு பூச்சிகளின் (insects) அளவு வழக்கத்தை விட குறைந்துள்ளதாகவும், அதில் பம்பிள் தேனீக்கள் எண்ணிக்கை மட்டும் 50%க்கும் கீழே குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனீக்கள் போன்ற குணாதிசயங்கள் கொண்ட பூச்சிகள் (Species) எந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பட்டதோ, அந்தப் பகுதியில் அவை பெரிதும் காணாமல் போய்விட்டது. உதாரணமாக கனடாவின் ஒன்டாரியோ (Canada's Ontario) பகுதியில் இந்த வகை பம்பிள் தேனீக்கள் (Bumblebees) முற்றிலுமாக மறைந்து விட்டது.

இந்த பம்பிள் தேனீக்கள் பற்றிய சுவாரசியமான தகவல் என்னவென்றால், ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து போகும் போது, இந்த வகை பம்பிள் தேனீக்களையும், பிற பூச்சிகளையும் கூடவே அழைத்துச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்: https://insideclimatenews.org/news/05022020/bumblebee-climate-change-heat-decline-migration?utm

- பாண்டி

Pin It