இந்தியாவில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான வேடந்தாங்கலின் மொத்தப் பரப்பளவை சுருக்கப் போவதாக சர்ச்சைகள் நாளுக்கு நாள் கிளம்புகின்றன.1936 -ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல் தான் இந்தியாவிலே பறவைகளுக்கென அறிவிக்கப்பட்ட முதல் சரணாலயமாகும்.
மனிதன் ஒரு பக்கம் மானுட விடுதலையை நோக்கி நகர்ந்தாலும், அதனூடாகவே தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை அழித்துக் கொண்டு நகர்வதும் வேதனையைத் தருகிறது. மானுட விடுதலை என்பது இயற்கை சூழலின் விடுதலையையும் சேர்ந்தே தான் நகர வேண்டும். தனியார் மருந்து நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு உட்பகுதியில் கட்டிடம் கட்டியுள்ளது. இந்தத் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக, தமிழக அரசின் வனத்துறை கடந்த மார்ச் 19 ம் தேதி அன்று வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தின் ஐந்து கிலோ மீட்டர் எல்லையை இரண்டு கிலோ மீட்டராகச் சுருக்கி வரையறை செய்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்காக, தமிழக அரசானது தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அளித்திருக்கும் விண்ணப்பம் இன்று வரை நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. தேசிய வனவிலங்கு வாரியம் இந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது தமிழக அரசு விண்ணப்பத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
இந்தச் சரணாலயம் 80 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியை 50 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியாக வணிகத்திற்கும் தொழிற்சாலை கட்டுமானங்களுக்கும் பயன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இவ்வாறு ஏற்படுமாயின் மிகப் பெரிய சீரழிவுகளும் இயற்கை சமநிலையின்மையும் உண்டாகும்.
இதற்கு முக்கிய காரணம் தொழில் மயமாக்கல் மற்றும் இயற்கை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையேயாகும். இவ்வாறு ஏற்படுத்தும் தொழிற்புரட்சி தேவையற்றதாகும். இங்கு அழிக்கப்படுவது நீர்நிலைகள் மற்றும் வேடந்தாங்கல் சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதரம் மற்றும் பல்லுயிரிய மையம் போன்றவை ஒரு சமூகமே அழிவதற்கு ஒப்பானது.
18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் மற்றும் தனவான்கள். பொழுது போக்கிற்காக பறவைகளை வேட்டையாடினார்கள். அன்று "வேடர்கள் கிராமம்" பின்பு வேடர்கள் தங்க ஆரம்பித்ததால் வேடந்தாங்கலானது.1797 ஆம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார். அந்தப் பத்திரத்தில் உள்ள நிலப்பரப்பு இன்று மிகவும் சுருங்கி விட்டது. அடிக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளே இதற்குக் காரணம்.
வேடந்தாங்கலுக்கு ஐரோப்பா மற்றும் இதர நாடுகளிலிருந்து வரும் பறவைகளாக கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, பச்சைக்காலி, பவளக்காலி எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அதோடு உள்நாட்டுப் பறவைகள் சிறிய நீர்காகம், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, மடையான், வக்கா என்று அழகான நிறங்களில் ஏறத்தாழ 30000 பறவைகள் ஆண்டுதோறும் வந்து தங்கி, இயற்கை சமன்நிலையில் பங்கெடுத்துச் செல்லும் அழகை வார்த்தையால் சொல்லி விட முடியாது.
இங்கு 500 பேரன்ட்டோனியா மரங்கள் மற்றும் 1000 இதர மரங்கள் காணப்படுவதும் பறவைகள் அதில் வந்தமர்ந்து, தன் எச்சங்களை இடும் நீர் நிலை அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தில் பாய்ந்து, முன்பெல்லாம் அதிக மகசூலைத் தந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏராளமான பறவைகள் ஐரோப்பாவிலிருந்து வலசை வந்து செல்கின்றன. ஆர்ட்டிக் டேன் என்னும் பறவை, 30000 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து பறந்து வந்து செல்கின்றன.
பறவைகள் தொலைதூரம் பறந்து செல்லும் ஆற்றலைவிட வலசை வரும் பாதைகளைத் தன் புலன்களைக் கொண்டு அறிந்து கொள்கின்றன. ஐந்தறிவுதான் என்றாலும் கூடுதலான பார்வை மற்றும் நுண் அறிவால் எளிதாக வேடந்தாங்கலை வெளிநாட்டு பறவைகள் வந்தடைகின்றன. வலசை செல்லும் இந்த நுண்திறன் அதன் மரபனுவில் பொதிந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.
இந்த வலசைப் பயணங்கள் ஒளி வேறுபாடு, சூரியன் உதிக்கும் திசை மற்றும் ஒரு கூட்டு ஆற்றலை உருவாக்கித் தன் ஆற்றலைச் சேமித்து, பறக்கத் தொடங்குகிறது. 'V' ஷேப்பில் முதல் பறவையின் மூலம் அதாவது 'V'-யின் கூர் முனையில் பறக்கும் முதல் பறவை ஆற்றலை பிற பறவைகளுக்குத் தந்து பறக்கிறது. சுழற்சி முறையில் 'V' வடிவப் பறத்தல் தொடர்ந்து நடைபெறுவது ஆச்சரியம். இப்படியெல்லாம் பறவைகள் எதற்காக வேடந்தாங்கலை வந்தடைய வேண்டும்?
இப்பறவைகள் பூச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது. இதனால் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடுகள் குறைந்து மனிதன் தன் சராசரி வாழ்நாளை வாழ்கிறான். பிறகு அந்தப் பறவைகள் பறத்தலுக்குப் பின்னால் தமது எச்சத்தில் விதைகளைத் தூவிக் கொண்டே வருகிறது. அதன் மூலம் மரங்கள் பெருகி தூய்மையான காற்று மற்றும் மழை பெய்யத் தொடங்குகிறது, நீர்நிலைகள் மேம்படுகிறது. தண்ணீர்த் தட்டுபாடுகள் குறைகிறது. உணவுப் பயிர்கள் நல்ல சூழலில் பயிரிடப்படுகிறது. பூமியின் வெப்பசூழலை சீராக வைத்திருக்கிறது. இப்படி ஒட்டுமொத்த இயற்கை சுழற்சியில் பறவைகளின் பங்களிப்பைத் தவிர்த்து விட்டால் பூமி விரைவில் செயலற்ற கோளாக மாறிவிடும்.
பறவைகளுக்கு நாம் கொடுத்த அச்சுறுத்தலால் பத்தாயிரம் பறவை இனங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவை இனங்கள் அழிந்து விட்டன. இது போன்ற நில அளவை சுருக்குவது போன்ற காரியங்கள் இயற்கைக்கு நாம் செய்யும் மிகப் பெரிய துரோகம். இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திய மனிதனின் இன்றைய நிலையைவிட மிகுந்த துயரங்களைச் சந்திக்கும் மனிதர்களின் எதிர்காலச் சந்ததி.
வளர்ச்சி என்கிற பெயரில் மனிதன் பறவைகளுக்கும் தன் அச்சுறுத்தலை உருவாக்கித் தந்துள்ளான். தொடர்ந்து உருவாக்கியும் வருகிறான். அதனால் ஏராளமான பறவைகள் தினம் தன் சிறகுகளை உதிர்ந்து தன் வாழ்வை முடித்துக் கொள்கின்றன.
பறந்து வரும் விமானங்களில் மோதி இறக்கின்றன. கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளில் மோதி இறக்கின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகள், உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள், மரங்களை அழித்தல் போன்றவற்றின் மூலம் தினந்தோறும் அழிந்து வருகின்றன பறவவைகள்.
பறவையின் வீட்டை இடிப்பதற்கு எந்த உரிமையும் எவருக்கும் இல்லை. புலம் பெயரும் பறவைகளைப் பாதுகாப்பது நம் கடமை. தேசம் தாண்டி வரும் பறவைகளுக்கும் நமது உள்ளூர் பறவைகளுக்கும் நாம் செய்யும் துரோகத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகள் காரணமாக வேடந்தாங்கல் மாசுபட்டு, நீர்நிலையும் மாசுபட்டு, பறவைகள் அழிந்து கொண்டிருப்பது உயிர்நேயமற்ற செயலாகும். இவற்றை எல்லாம் தாண்டி அந்த நீரை நம்பி இருக்கும் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
பறவைகளின் சிறகசைப்பு இருந்தால் தான் இனிவரும் காலம் வசந்தமாகவும், இந்தப் பூமி உயிர்ப்புடனும் இருக்கும்.பறவைகள் தன் சிறகுகள் மூலம் பெரிய எச்சரிச்கைகளை சமிக்ஞைகளாக வெளியிட்டாலும், நுண் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மனிதன் கடவுளைத் தேடுவதெல்லாம் வீண்தான். இந்தப் பறவைகளின் சிறகசைப்பில் நம் வாழ்வு நகர்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. சுருக்க வேண்டியது வேடந்தாங்கலின் பரப்பளவை அல்ல, அதிகார வெறியையும், பணம் குறித்த அழிவுகளையும்தான்.
இணைய வழியில் கலந்து கொண்ட சர்வதேச தெற்கு ஆசிய சதுப்பு நில அமைப்பின் இயக்குநர் முனைவர் ரித்தீஷ் குமார், ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகள் 2017-ன்படி மாநில அரசின் ஈர நிலங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை முன்னிலைப் படுத்தியுள்ளார். மேலும் ''ஈர நிலங்களில் ஏற்படுத்தப்படும் பாதகமான மாற்றங்களால் அந்தப் பகுதி முழுவதற்குமான சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்" என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. இதை அரசு ஏற்று தனியார் நலனுக்காக இயற்கையை அழிக்காமல், பொது நலன் கருதி இயற்கையை அதன் போக்கில் விடுவதுதான் மனிதன் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும்.நம் வருங்காலத் தலைமுறைக்காக பறவைகளை விட்டு வைப்பது மிக அவசியமானது.
- ப.தனஞ்ஜெயன்