thoookkanagkuruvi 600

கூடுகட்டி வாழும் பறவையினங்களில், வித்தியாசமான கூட்டமைப்பை உடைய தூக்கணாங்குருவி பறவைகள், கிராமப்பகுதிகளில் காணப்படும் கிணறுகளிலும், உயர்ந்த மரங்களிலும் கிளைகளோடு பின்னிப் பினணந்து இக்கூட்டினை உருவாக்குகின்றன.

thoookkanagkuruvi maleஇப்பறவைகள் வாழிடத்தின் அருகில் உள்ள வயல் விளைகளில் விளைந்து வரும் தானியங்களையும் புழுப் பூச்சிகளையும் தின்று உயிர் வாழ்ந்து வருகின்றன. இப்பறவைகளின் வித்தியாசமான கூட்டமைப்பே இப் பறவைகளுக்கு பெரும் ஆபத்தாகி விடுகின்றன. ஆம்! இக் கூட்டின் அமைப்பை இரசிப்பதற்காகவே சிறுவர்களால் இக்கூடுகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. கூட்டினை எடுக்கும்போது அக்கூட்டில் உள்ள முட்டைகளும் உடைக்கப்படுகின்றன. இதனால் குருவியினம் படிப்படியாக அழிவினை நோக்கி செல்லுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளால், பயிர்க்குச் சேதம் விளைவிப்பதாகக் கருதி அப்பறவையினங்கள் அழிக்கப்படுகின்றன.

இப்பறவையினங்களால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைவிட, புழுக்கள், வெட்டுப்பூச்சிகள் ஆகியவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் அதிகம் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இப்பறவைகள் தானியங்களை உண்பதைவிட தானியங்களில் காணப்படும் புழுப்பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் உணவாக உட்கொண்டு, பயிர்களைச் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றது என்ற உண்மையை விவசாயிகள் உணர்ந்து கொண்டால் இப் பறவையினங்கள் அழிவிலிருந்து மீளும் என்பது உண்மை.

தூக்கணாங்குருவியின் இன வேறுபாடு அறிதல்:

தூக்கணாங்குருவியின் தலையில் காணப்படும் வெளி்ர் மஞ்சள் நிறத்தைக் கொண்டு ஆண், பெண் வேறுபாட்டினை அறியலாம். ஆண் பறவையின் தலையில் வெளிர்மஞ்சள் நிறம் இருக்கிறது. பெண் பறவைக்கு தலையில் வெளிர் நிற முடிகள் இல்லை.

தூக்கணாங்குருவியின் கூடு அமைப்பு :

thoookkanagkuruvi femaleஎந்த பொறியியல் கல்லூரியில் பயின்றன இப் பறவைகள்? என்ற வினா எழுப்பும் விதமாக பொறியியல் தொழில் நுட்பக் கலைஞர்களின் அறிவுத்திறனை உள்ளடக்கியது போல் இப் பறவைகளின் கூடுகள் அமைந்துள்ளன.

நுழைவு வாயில் :

முட்டைகள் இடுவதற்கு தனிப்பகுதி, பறவைகள் அமர்வதற்கு குறுக்குச் சட்டகம், கூட்டின் உள் பகுதியில் களிமண் பூசப்பட்டுள்ளது போன்ற அமைப்பு காணப்படுகின்றன. மேலும் இப் பறவையின் கூடுகள், சிறு நீண்ட புல், ஓலை நார்கள் போன்றவற்றால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இ்க் கூட்டினை ஆண்பறவைகளே கட்டி முடிக்கின்றன என்ற சிறப்புச் செய்தியும் இங்கு குறிப்பிடத்தகுந்தது.

கூடுகள் அமைவிடம்:

இக்கூடுகள் பெரும்பாலும் கிணற்றின் உட்புறச் சுவர்களில் வளர்ந்துள்ள மரம் மற்றும் செடிகளின் காம்புப்பகுதிகளிலும், தென்னை மரங்களின் ஓலைப்பகுதிகளிலுமே பெரும்பாலும் கூடுகள் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. இதற்கான காரணம் பெரும்பாலும் கூடுகளை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றுதற்காக இவ்வாறு கிணற்றுச் சுவர் மரங்ளிலும், மிக உயரமான தென்னை மரங்களிலும், முள் மரங்களிலும். கூடுகட்டுவதை அறிய முடிகிறது.

கூட்டம் கூட்டமாய் வாழும் சமூக முறையை இப்பறவைகள் பின்பற்றுகின்றன.

விவசாயிகளுக்கு நன்மை :

thoookkanagkuruvi 333தானியப் பயிர்களை சிறிதளவே உண்டாலும், பயிர்களுக்குப் பெரும் சேதம் விளைவிக்கும் புழுப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளுவதால், தானியப் பயிர்கள் புழுப் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கின்றன. இதன் மூலம் மறைமுகமாக விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பறவையாக தூக்கணாங்குருவி பறவைகள் காணப்படுகின்றன.

தூக்கணாங்குருவியினை பாதுகாப்போம்

இப்பறவைக்கூட்டின் அழகிற்காகவும், விவசாயிகளின் தவறான எண்ணங்களினாலும் இப் பறவை தொடர்ந்து அழிவுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால், வருங்காலத்தில் இப்பறவைகள் அழிந்து விடும். நம் வருங்கால சந்ததியினருக்கு இப்பறவையின் செயல்பாடும் தொழில் நுட்பம் வாய்ந்த கூட்டமைப்பும் தெரியாவண்ணம் போய் விடும். விவசாயிகள் இப்பறவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பறவையினத்தினை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு முன் வரவேண்டும்.

- இரா.முத்துசாமி எம்.,ஏ.,பி.எட்.,பி.எச்.டி., தமிழாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கடையநல்லூர்

Pin It