கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகில் மிகப் பெரிய உயிரினம் எது? நீலத் திமிங்கலமா? இல்லவே இல்லை. அது ஒரு காளான். அமெரிக்காவில் ஆரிகான் தேசியப் பூங்காவில் மனி நதியில் 8.8 சதுர கிலோமீட்டர் பரவியிருக்கும் ஹனி பூஞ்சை அல்லது ஆர்மிலேரியா ரெஸ்டியின் நுண் உயிரிகளின் வலையமைப்பே அது. அங்கு மரத்தில் வளரும் நாய்க்குடைகளைக் காணலாம். மண்ணில் வாழும் பூஞ்சைகள் சுற்றுப்புறம், வயல்வெளி, வனங்களில் உள்ள உயிரிக் கழிவுகளை மக்கவைத்து மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன.
90% மரம் செடி கொடிகள்
இயற்கையில் 90% மரம் செடிகள் பூஞ்சைகளுடன் பரஸ்பர தொடர்புடையவை. மண்ணின் அடியில் மைக்ரோரைஸா பூஞ்சைகள் நுண் உயிரினங்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி, தங்கள் வாழிடப் பரப்பை அதிகரிக்கின்றன. செடிகள் ஒளிச்சேர்க்கை நடத்தி உருவாக்கும் கார்போஹைடிரேட்டை உணவாக்கும் பூஞ்சைகள் பதிலிற்கு செடிகளின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகள், மூலகங்களை மண்ணில் இருந்து உறிஞ்சி அளிக்கின்றன.
காடுகளின் வலையமைப்பு
இத்தொடர்பு மர வலை (wood wide web)/காடுகளின் வலையமைப்பு (Internet of forests) எனப்படுகிறது. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் தோன்றினான். ஆனால் பூஞ்சைகள் (fungus) பூமியில் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானவை. மண்ணிற்கு அடியில் வாழும் இவை இனப்பெருக்கம் செய்யும்போது உருவாகும் புதிய தலைமுறையே நாம் காணும் நாய்க்குடைகள். இவை திடீரென்று தோன்றுபவை. ஒரு இடி இடித்து மழை பெய்தால் அடுத்த நாள் இவை தென்படுகின்றன.மண்ணில் இருந்து உயிர்த்தெழும் உயிரினம்
இயல்பாக எதிர்பாராதவிதமாக மண்ணில் இருந்து உயிர்த்தெழும் இந்நிகழ்வே mushrooming என்ற சொல் பிறக்கக் காரணம். சுற்றுப்புற வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவை இவற்றின் இனப்பெருக்கத்தை நிர்ணயிக்கும் அம்சங்கள். இதனால் காலநிலை மாற்றம், புவி வெப்ப உயர்வு இவற்றைப் பாதிக்கிறது. மனிதனின் உணவுமுறை, கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய இவை பாரம்பரிய நாட்டறிவுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
கலாச்சாரத் தொடர்புகள்
சைபீரியாவில் இவை சாமூக் சடங்குகளில் முக்கிய பங்கு வகித்தன என்று 1690களில் அந்நாட்டில் கைதியாக இருந்த பொலிஷ் குடிமகன் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் குளிரில் அமானிட்டா மஸ்காரியா என்ற அறிவியல் பெயரில் அறியப்படும் ப்ளை அபாரிக் நாய்க்குடைகளில் இருந்து திரவப் பொருட்களை சைபீரியா மக்கள் உருவாக்கி பயன்படுத்தி வந்தனர். இதில் அடங்கியிருந்த ரசாயனப் பொருட்கள் போதையூட்டுபவை.
ரிக் வேதத்தில் தேவர்கள் உண்டாக்கிய சோமரசத்தில் இவை இருந்தன என்று கூறப்படுகிறது. இவ்வகை உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் பற்றி கூறும் அறிவியல் பிரிவு தொல் மைக்காலஜி (ethano mycology). உலகளவில் சீனா மற்றும் மெக்சிகோ இவற்றின் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கின்றன. சீனாவில் 51 இனங்கள் உள்ளன. இதில் 23 இனங்களில் இருந்து 1020 வகை காளான் உணவுகள் உருவாக்கப்படுகின்றன.
புராதன காலத்தில் இருந்தே சீனாவில் இவை நாட்டு சிகிச்சையில் பயன்படுகின்றன. 2018 புள்ளிவிவரங்களின்படி இவற்றின் உலக உற்பத்தியில் 75% சீனாவில் இருந்தே வருகிறது. இந்தியாவில் இருந்து இது வெறும் 2% மட்டுமே. ஆண்டுதோறும் இவற்றின் ஏற்றுமதி மூலம் சீனா 100 இலட்சம் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுகிறது. இதில் கும்மிங், நார்ப்புவா ஆகிய பிரதேசங்கள் முதலிடம் பிடிக்கின்றன.
உலகில் விலையுயர்ந்த காளான்கள்
மாக்சி டாக்கி, டபில்கள் உலகில் விலையுயர்ந்த வகைகளாகக் கருதப்படுகின்றன. மாக்சிடாக்கி ஒன்றின் விலை $80. டபில்கள் மண்ணில் அடியில் வளர்பவை. சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் மூலமே இவை கண்டறியப்படுகின்றன. லகோட்டோ ரொமோனியோலோ என்ற இனத்தின் விலை $3000 முதல் 5000 வரை. ஒரு கிலோ டபிலின் விலை $80 முதல் 4000. மிதமிஞ்சிய சுரண்டலால் சீனாவில் 1990 முதல் இந்த இரு இனங்கள் அச்சுறுத்தலை சந்திக்கின்றன.
சீனாவின் முன்மாதிரித் திட்டம்
இப்பிரச்சனையை நேரிட சீனா வன மறுசீரமைப்பு கொள்கை (Forest ownership reformation) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. தனி நபருக்கு நிலத்தை சொந்தமாக்காத நாட்டில் இயற்கை வளங்கள் பாதுகாப்பில் பங்காளிகளாக இவற்றைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு சட்டரீதியான உரிமை கொடுக்கப்பட்டது. அங்கு மட்டுமே வளரும் இனங்கள் பற்றி அறிய சோதனைரீதியில் காப்பு வனங்கள், தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
மெக்சிகோவில்
மெக்சிகோ உயிர்ப் பன்மயத்தன்மை செழுமை மிக்க ஒரு நாடு. 32 மாகாணங்கள் உள்ள இங்கு ஆதிவாசிகள் அதிகம் வாழ்கின்றனர். காளான்கள் பற்றிய அறிவு இவர்களிடையில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. 480 காளான் உணவுவகைகள் இங்கு உருவாக்கப் படுகின்றன. பன்னாட்டு அளவில் 120 வகை காளான் பொருட்கள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியாவில் சந்தை படுத்தப்படுகின்றன. மைக்கோ கேஸ்ட்ரானமி (Mico gastronomy) என்பது உணவு, கலை மற்றும் அறிவியல்ரீதியாக இவற்றை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் குறித்த கல்விப் பிரிவு.
சிவப்புப் புத்தகத்தில்
1948ல் ஐநாவால் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு யூனியன் (IUCN) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு 160 நாடுகளில் செயல்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது, தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அழியும் நிலையில் இருக்கும் காளான் வகைகளை சிவப்புப் புத்தகத்தில் வெளியிடுகிறது. உலகில் முதல்முதலாக 1984ல் தேசிய அளவில் அழியும் இனங்களை ஜெர்மனி சிவப்புப் புத்தகத்தில் வெளியிட்டது.
இன்று சிவப்புப் புத்தகத்தில் உள்ள 1,41,000 உயிரினங்களில் இன அழிவை சந்திக்கும் காளான்கள் 285. ஐம்பது இலட்சம் வகைகள் இருப்பதாகக் கருதப்படும் இவற்றில் 285 என்பது 1 சதவிகிதத்திற்கும் குறைவு.
பூஞ்சைகளுக்கும் வேண்டும் அங்கீகாரம்
2022 டிசம்பரில் கனடா மாண்ட்ரீலில் நடக்கவிருக்கும் ஐநா காப் 15 உயிர்ப் பன்மயத்தன்மை உச்சிமாநாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவர மற்றும் விலங்குகள் போல இவற்றையும் தனிப்பெரும் வளமாக என்று வகைப்படுத்த வேண்டும் என்று பூஞ்சையியல் விஞ்ஞானிகள் வலியுறுத்தவுள்ளனர்.
பூஞ்சைகளை அங்கீகரித்த முதல் உலக நாடு
2012ல் உலகில் முதல்முறையாக இந்த உயிரினங்களுக்கு தேசிய அளவில் சட்டப் பாதுகாப்பை தென்னமெரிக்கா சிலி அளித்தது. அணைக்கட்டுகள், சாலைகள், வீடுகள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றை அமைப்பது பூஞ்சைகளின் வாழிடம், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே நடக்கிறது. டாக்டர் ஜூலியானா கொச்சி என்ற இளம் சிலி பூஞ்சையியல் விஞ்ஞானியின் இடைவிடா முயற்சியால் இது சாத்தியமானது.
இந்த அதிசய உயிரினங்களின் உலகை அறியும் ஆர்வத்தில் 1999ல் அவர் தனது 20வது வயதில் பூஞ்சைக்கான தன்னார்வ அறக்கட்டளையை (Fungi Foundation) நிறுவினார்.
இந்தியாவில்
இந்தியாவிலும் பல மருத்துவ குணங்கள் உடைய பூஞ்சைகள் உள்ளன. அதில் ஒன்று கேரளா பாலக்காடு பகுதியில் காணப்படும் இள மாங்காய். இது ஒரு நாய்க்குடை இனம். இது நாட்டு வைத்தியத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
பூஞ்சை உணவுச் சுற்றுலா
இந்த உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பாதுகாக்க கேரள உயிர்ப் பன்மயத்தன்மை பாதுகாப்பு வாரியம் (Kerala Biodiversity Board) முதுகலை படிப்பு முடித்தவர்களுக்கு பூஞ்சை நாய்க்குடைகள் பற்றி சான்றிதழ் படிப்பு ஒன்றைத் தொடங்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்று விருப்பமுள்ளவர்களுடன் இணைந்து இவை வளரும் வாழிடங்களுக்கு நேரில் சென்று, அவற்றைக் கண்டு, ஆரோக்கியமான உணவு சமைத்துக் கொடுக்கும் மைக்கோ சுற்றுலாவிற்கான திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. மிதமிஞ்சிய பயன்பாட்டினால் இந்த அதிசய உயிரினங்கள் அழியாமல் பாதுகாப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பூக்கள்தோறும் பாடி நடந்து, பூமி முழுவதைம் வர்ண ஜாலமாக்கும் வண்ணத்துப் பூச்சிகளை விரும்பாதவர்களாக இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கவிஞர்களும், இலக்கியவாதிகளும் பாடிப் பாடி, இந்த வண்ண அழகுகளை நம் தோழர்களாக மாற்றியுள்ளனர். பல வண்ணங்களிலும், அளவுகளிலும் வாழும் இவை பூச்சிகள் என்று சொல்லப்படுகின்றன. என்றாலும் இறக்கைகளில் காணப்படும் பலவித வண்ணங்கள், அவை அமைக்கப்பட்டுள்ள விதம் போன்றவை என்றுமே நம்மைக் கவர்வன.
இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பூமியில் வண்ணத்துப் பூச்சிகள் தோன்றியதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் ப்ளோரிசன் ஏரிக்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட லிம்பாலிடே வண்ணத்துப் பூச்சியின் படிவம் “fossil” 4 கோடி வருடங்களுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. 1973ல் பிரான்சில் கண்டெடுத்த புதைபடிவப் பொருள்களின் ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. இவை, ஆர்த்ரோபோடா என்ற வகையைச் சேர்ந்தவை. உயிரினங்களின் வகைப்பாட்டில், அதிக உயிரினங்கள் அடங்கிய பிரிவு இது. ஆர்த்ரோபோடா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் பல பகுதிகள் இணைந்து உருவான காலுள்ள உயிரினங்கள். இவை அடங்கியுள்ள பூச்சிகள் (insectae ) பிரிவில்தான் பிராணிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை பூச்சிகள் (insects). 29 பிரிவுகளில் 627 குடும்பங்கள் இதில் உள்ளன. இதில் லெப்பிடோட் டிரா குடும்பத்தில் வண்ணத்துப் பூச்சிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.
1735ல் கார்ல் லினயஸ் இப்பெயரை வழங்கினார். வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வில் நான்கு நிலைகள் உள்ளன. முட்டை, லார்வா, பியூப்பா, வண்ணத்துப் பூச்சி. இணை சேர்ந்ததற்குப் பிறகு, பெண் வண்ணத்துப் பூச்சிகள் முட்டை இடுவதுடன் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி ஆரம்பிக்கிறது. நான்காவது நிலையில் வண்ணத்துப் பூச்சி வெளியே வருகிறது. வண்ணத்துப் பூச்சிகளில் ஆண், பெண் வேறுபாட்டை அறிந்து கொள்வது கடினம். பியூப்பாவில் இருந்து வெளிவந்தவுடன் இணை சேரும் வண்ணத்துப் பூச்சிகளும் உள்ளன.முட்டையில் இருந்து வெளியே வரும் லார்வாக்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். இவற்றின் முதல் உணவு முட்டையின் ஓடு. பின், தொடர்ச்சியாக இலைகளைத் தின்னத் தொடங்குகிறது. வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் இவை தோலை உரித்துவிடும். அதனால் எது ஆண், எது பெண் என்று கண்டுபிடிப்பது கடினம். சிலந்திகள், குளவிகள், பிராணிகள், ஓணான்கள் போன்றவை இவற்றின் லார்வாக்களை உண்ணும் முக்கிய எதிரிகள். இவைகள் உணவு உண்ணும் வேட்கையுடன் லார்வாக்களின் அருகில் வரும். சில லார்வாக்கள் சிக்கிக் கொள்ளும். வேறு சில தந்திரமாகத் தப்பித்துக் கொள்வதும் உண்டு. சில லார்வாக்கள், சிறிய பாம்பு போல தங்களின் சுபாவத்தை மாற்றிக் கொள்ளும்போது, வேறு சில பறவைகளின் எச்சத்தைப் போல நடிக்கும். துர் நாற்றம் வீசி எதிரிகளை அருகில் நெருங்க விடாமல் செய்யும் லார்வாக்களும் உண்டு. ஆனால், இவை தோற்றுப் போவது மனிதரிடம்தான். விளைந்ததை எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கூட்டம் கூட்டமாகத் தின்னும் புழுக்களைத் துரத்த மனிதன் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கிறான். வண்ணத்துப் பூச்சிகளாக மாறி, மகரந்தச் சேர்க்கை செய்து இவை நம்மை வாழ வைக்கின்றன. இவற்றின் அழிவு நமக்கே ஆபத்தை விளைவிக்கிறது.
வண்ணத்துப் பூச்சியின் வாழ்வில், ஒவ்வொரு நிலையும் அதிசயமானது. இலைகளிலும், பூக்களிலும், செடிகளின் தண்டுகளிலும் இவைகள் முட்டை இடுகின்றன. சில பல முட்டைகள் முதல் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுகின்ற வண்ணத்துப் பூச்சிகள் வரை உண்டு. பியூப்பாவில் இருந்து வெளிவந்தவுடன், இவை முட்டை இடுவதற்கான செடிகளைக் கண்டுபிடிக்கின்றன. மற்ற உயிரினங்கள் முட்டை இடாத துளிர் இலைகள்தான் இவற்றுக்குப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவ்வாறு செய்வதால், பியூப்பாவிற்குத் தேவையான உணவு கிடைக்கும். துளிர் இலை முதிர்ச்சியடைய, உதிர்ந்து போக பல நாட்கள் ஆகும். ஆள் அரவம் இல்லாத இடமாக இருப்பதால் எதிரிகளின் நடமாட்டத்தைத் தவிர்க்கலாம். மற்றொரு அதிசயம் வண்ணத்துப் பூச்சிகள் எறும்புப் புற்றுகளிலும் முட்டையிடும். இது ஒன்றுக்கொன்று உதவும் செயல். முட்டையை எறும்புகள் பாதுகாத்துப் பராமரிக்கும். பியூப்பா விரிந்து வரும்போது பியூப்பாவின் வெளியில் இருக்கும் இனிப்புத் திரவம் எறும்புகளுக்கு உணவாகும்.
வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பத்தில் மிகவும் பெரியது அட்லஸ் மவுத் என்ற வண்ணத்துப் பூச்சி. இந்தியக் காடுகளில் மிக அரிதாகக் காணப்படும் இவற்றின் இறக்கை அளவு 30 செ.மீ. குவின் அலெக்சான்டர்ஸ் பேர்டு விங் (Queen Alexandras Birdwing ) உலகில் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி. இதன் இறக்கையின் அளவு சுமார் 250 மி.மீ. இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி சர்தர்ன் பேர்டுவிங் (Southern Birdwing). இதன் இறக்கை அளவு 140 முதல் 200 மி.மீ வரை. பாப்பிலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த ப்ளூ மார்மோன், ரெட் ஹெலன் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய வண்ணத்துப் பூச்சிகள்.
வண்ணத்துப் பூச்சிகளைப் போலவே பட்டாம்பூச்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இரவில் மட்டுமே வெளியே வருகின்றன. என்றாலும் அபூர்வமாக பகலிலும் இவை வெளியே வருவதுண்டு. வண்ணத்துப் பூச்சிகளைக் காட்டிலும் அற்புதங்கள் நிறைந்தது இவற்றின் உலகம். நம் வீட்டிலும் வண்ணமயமான இந்த அதிசய உயிரினங்கள் விஜயம் செய்ய வேண்டும் என்றால் நம் வீட்டையே ஒரு வண்ணத்துப் பூச்சிகளின் நந்தவனமாக நம்மால் மாற்ற முடியும். அவற்றிற்கு அவசியமான செடிகளை நம் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்க வேண்டும். புல்லினத்தைச் சேர்ந்த செடிகள், எலுமிச்சை, கொய்யா, நெல்லி, ஏலம், மல்பெரி, அகத்தி போன்றவை வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் செடிகள். ஈரத்தன்மை உள்ள சூழல், நல்ல சுற்றுப்புறம் ஆகியவை இருந்தால், நம் வீட்டுத் தோட்டம் வண்ணத்துப் பூச்சிகளின் சொர்க்கமாக மாறும்.
வலசை செல்லும் பறவைகளைப் போல வலசை போகும் வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு. 3000 கிலோமீட்டருக்கும் கூடுதலாக, இவர்களின் ஆகாயப் பயணம் அமைகிறது. மொனார்க் பிரிவைச் சேர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் இதில் திறமையானவை. வேனில்காலத்தில் வடஅமெரிக்காவில் காணப்படும் இவை, குளிர்காலத்தில் தென்னமெரிக்காவை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கின்றன. கலிபோர்னியா, மெக்சிகோ, க்யூபா ஆகிய இடங்களில் அடைக்கலம் தேடும் இவற்றைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இந்த இடங்களுக்கு வருகை தருகிறார்கள். வயிறு நிரம்ப தேன் சாப்பிட்டால் சராசரி 1000 கி.மீ வரை இவற்றால் பறந்து செல்ல முடியும். ஓய்விற்குப்பின் மறுபடியும் பயணம் தொடரும். அமெரிக்காவில் மொனார்க்குகள் போல ஐரோப்பாவில் பெயின்ட்டெட் லேடி பிரபலமானவை. குளிர்காலம் ஆகும்போது வட ஆப்பிரிக்காவிற்கு கூட்டத்துடன் இவை பறந்து செல்லும். பறந்து சென்று அடையும் இடங்களில் முட்டையிடும். வேறொரு பருவ காலத்தில் இவற்றின் புதிய தலைமுறை, மற்றொரு வலசைப் பயணத்தை மேற்கொள்வதும் உண்டு. ஒரே நிறத்தில், இலட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும் காட்சி, அற்புதமான ஒன்று. ஒன்றரை நூற்றாண்டிற்கு முன்பு ஒரு சூடான் பயணி தன் வண்ணத்துப் பூச்சி அனுபவங்களைப் பின்வருமாறு வர்ணித்துள்ளார்.
“நான் சூடான் வழியாக ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். கடுமையான வெப்பத்தால் என்னையும் அறியாமல் லேசாகக் கண் அயர்ந்தேன். கண் திறந்து பார்த்தபோது எட்டிப் பிடிக்கும் தூரத்தில் எனக்கு முன்னால் ஏதோ ஒரு இனம் புரியாத காட்சி என் கண் முன்னால் விரிவதை உணர்ந்தேன். வேகமாக ஒட்டகத்தில் இருந்து இறங்கிப் பார்த்தபோது பியூப்பாவில் இருந்து வெளியே வந்த இலட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறந்து விண்ணை நோக்கி உயர்ந்து செல்வதை நான் கண்டேன். வெறும் அரை மணிநேரத்திற்குள் அவை எல்லாம் கண் பார்வையில் இருந்து மறைந்து போயின”.
தென்னிந்தியாவில், பொதுவாக 5 வகை வண்ணத்துப் பூச்சிகள் காணப்படுகின்றன. குறிப்பாக இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கேரளாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. வீடு, வயல்வெளிகள், வனப்பிரதேசங்கள், நிழல் பிரதேசங்கள், நகரங்களின் எல்லைப் பகுதிகள் போன்றவை இவற்றின் சூழல் மண்டலங்கள். பின் இறக்கைகளில் சிறு வால்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு. இந்தியாவில், மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி இனமான கருட வண்ணத்துப் பூச்சி இனம் இன்ரு அழியும் அபாயத்தில் உள்ளது. பல வண்ணத்துப் பூச்சிகள் அடங்கிய ஒரு குடும்பம் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பம். மஞ்சள், வெள்ளை நிறங்களில் இவை காணப்படுகின்றன. உலகில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பங்களும் உள்ளன. இத்தகையவை தென்னிந்தியாவில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. முன்கால்கள் மிகவும் சிறியதாக அமைந்த, தூரிகையின் நார்கள் போன்ற உரோமங்களால் மூடப்பட்டவை உரோமக்காலுள்ள வண்ணத்துப் பூச்சிகள். வாசனையை நுகர்வதற்கும், தேனுள்ள செடிகளை அறிந்து கொள்வதற்கும் இவற்றின் கால்கள் உதவுகின்றன. தவிட்டு நிறம், கறுப்பு நிறம், ஆரஞ்சு தவிட்டு நிறம் கலந்த வண்ணத்துப் பூச்சிகள் துள்ளிச் செல்லும் இயல்புடையவை. அளவில் சிறியவையான இவை, சுறுசுறுப்புடன் துள்ளித் துள்ளிச் செல்லும்.
சூழல் நலம்பெற, வண்ணத்துப் பூச்சிகள் நலமுடன் வாழ்வது அவசியம். வண்ணத்துப் பூச்சிகளுக்கான கிராமங்களை உருவாக்கி, அவற்றிற்குரிய சூழல் மண்டலங்களை அமைத்து, வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்பவர்கள், இயற்கையின் இந்த அற்புதப் படைப்புகள் பூமியிலிருந்து அழிந்து விடாமல் பாதுகாக்க முயற்சி செய்து வருகிறார்கள். மும்பையில் உள்ள பாம்பே இயற்கை வரலாறு அறக்கட்டளை (BNHS), கோழிக்கோடு இயற்கை வரலாற்றுச் சங்கம், திருவிதாங்கூர் இயற்கை வரலாற்றுச் சங்கம், போன்ற பல அமைப்புகள் வண்ணத்துப் பூச்சிகள் உலா வர உதவி செய்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளைத் தேடிய நம் பயணங்கள் நிச்சயம் இதற்கு உதவும். பூக்களே இறக்கை முளைத்து செடிகளிலிருந்து உயர எழும்பிப் பறப்பதைப்போலப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைக் குழந்தைகளுக்குக் காட்டிக் கொடுத்து, இவை பற்றிய ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் உருவாக்குவோம். இனி வாழ்வில் ஒவ்வொரு நாளும், இவற்றின் எழில்மிகு தோற்றத்துடன் நம் பொழுதுகள் விடியட்டும். எல்லாமுமாக விரிந்து பரந்திருக்கும் இயற்கை அன்னையின் நேசப்பிணைப்பில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிகளுடன், வாருங்கள் நாமும் ஒவ்வொரு நாளும் பயணிப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடல் கடந்து புகழ்பெற்ற ஜார்ஜ்
இந்த கேரளத்துப் புலியின் கதை நமக்குத் தெரியாவிட்டாலும் பிரான்சில் இவன் குழந்தைகளிடம் மிகப் பிரபலமானவன். பிரெஞ்சு எழுத்தாளரும், நடனக் கலைஞருமான லெயர் ல் மிஷேல் என்ற பெண்மணிதான் தன் சிறுகதைகள் மூலம் ஜார்ஜ் என்ற புலியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த 2021 டிசம்பரில் ஜார்ஜ் மரணத்திற்குக் கீழ்படிந்தான் என்றாலும் கதைகளின் வழியாக அவன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
மிஷேலிற்குக் கிடைத்த ஜார்ஜின் தோழமை
இயற்கைக்கும் விலங்குகளுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பற்றி ஆராய்வதற்காக ஒரு சில ஆண்டுகளுக்கு முன் மிஷேல் பிரெஞ்சு கலாச்சார மையமான அலியோன்சிஸ் பிரான்சிஸின் விருந்தாளியாக கேரளாவிற்கு வந்தார். ஆய்வுகளின் ஒரு பகுதியாக அவர் மிருகக்காட்சி சாலையில் டாக்டர் ஜேக்கப் அலெக்சாண்டரைச் சந்தித்தார்.
எழுத்தின் தொடக்கம்
அப்போது முதல் மிஷேல் தன் அனுபவங்களை எழுதத் தொடங்கினார். அமைதியாக கூண்டிற்குள் வாழ்ந்து கொண்டிருந்த ஜார்ஜ் என்ற புலியுடன் நேசம் மிக்க தோழமை ஆரம்பித்தது. நாட்டிற்குத் திரும்பியவுடன் “The story of George” என்ற பெயரில் ப்ளாக் (blog) மற்றும் வானொலித் தொடராக இந்தப் புலியின் கதைகள் பிறந்தன. கருத்தும் கற்பனையும் கலந்த ஜார்ஜின் கதைகள் ஜன ரஞ்சகமாயின. மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் இதில் கதாபாத்திரங்களாயினர்.குழந்தைகள் மனதில் என்றும் வாழும் ஜார்ஜ்
இதுவரை ஜார்ஜின் கதை 38 அத்தியாயங்களாக வெளிவந்துள்ளது. சனிக்கிழமைகள்தோறும் பிரான்சில் பிராத்தனேயு டவுனில் நடக்கும் வாசிப்பு இரவுகளில் (reading nights) ஜார்ஜின் கதைகளைக் கேட்க பலர் ஒன்று திரண்டனர். மிஷேல் ஷூட் செய்திருந்த ஜார்ஜின் காணொளிகள் கதை சொல்லலை மேலும் அழகானதாக்கியது. ஜார்ஜுடன் தொடர்புடைய கதைகள், சம்பவங்கள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து பிரார்த்தனேயு டவுன் ஒரு இணையப் பக்கத்தையும் (webpage)ஆரம்பித்துள்ளது.
ஓவியமாக மாறிய புலி
கதை கேட்க வருபவர்களில் குழந்தைகள் ஏராளமாக இருந்தனர். அவர்கள் வரைந்த ஜார்ஜின் 23 ஓவியங்களை ஜனவரி 2022ல் திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஓவியங்களைப் பார்த்தபோதுதான் ஜார்ஜிற்கு பிரான்சில் இவ்வளவு இரசிகர்கள் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோ
இதற்கிடையில் ஜார்ஜ் கடந்த டிசம்பர் 2021ல் மரணமடைந்தான். இது மிஷேலையும், இரசிகர்களையும் சோகக்கடலில் ஆழ்த்தியது. புலிகள் சாதாரணமாக 16 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும். ஆனால் ஜார்ஜ் இந்த பூமியை விட்டு மறைந்தது அவனுடைய 22வது வயதில். 2015ல் இவன் காட்டில் இருந்து நாட்டிற்குள் நுழைந்தான்.
முப்பதிற்கும் அதிகமான வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடினான். மலையோர கிராமங்களை ஏழு நாட்கள் நடுங்க வைத்தான். இறுதியில் பிடிக்கப்பட்டான்.
திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரும்போது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. மூக்கின் நுனியும் உடைந்திருந்தது. சிறந்த பராமரிப்பினால் உடல் நலம் தேறினான். அந்த ஆண்டு பிரபலமான பிரேமம் என்ற மலையாளத் திரைப்படத்தின் கதாநாயகனின் பெயரும் கிடைத்தது. விலங்குகளை கூண்டிற்குள் அடைத்து வைத்து காட்சிப்படுத்தும் முறைக்கு எதிராக இருந்த மிஷேல் ஜார்ஜைப் பார்த்த பிறகு, அவனுக்குக் கிடைத்த பாசம் மிக்க பராமரிப்பைக் கண்டபிறகு தன் மனதை மாற்றிக் கொண்டார்.
என்றும் வாழும் ஜார்ஜ்
இயற்கையின் படைப்பில் காக்கா குருவி முதல் அணைத்து உயிரினங்களும் அன்பிற்கு அடிமை என்பதையே ஜார்ஜின் கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அன்பு காட்டினால் பூமரம் முதல் யானை புலி வரை எல்லா உயிரினங்களும் என்றும் நம் நினைவில் வாழும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பது போல, ஏழைகளின் மரம் என்ற பெருமைக்குரியது மூங்கில். புல் இனத்தைச் சேர்ந்த இந்தத் தாவரம் அண்டார்டிகா, ஐரோப்பா தவிர உலகம் எங்கும் காணப்படுகின்றது. பூமியில் 190 வகைகளில் 1600 இனங்கள் உள்ளன. இதில் 138 இனங்கள் இந்தியாவில் உள்ளன. அதிவேகமாக வளரும் இவை எடை குறைவு, உறுதித்தன்மை, மினுமினுப்பு போன்ற பண்புகளால் கட்டுமான செயல்களுக்கு உகந்தவையாக உள்ளன.
கூட்டமாக வளர்தல், வலுவான கணுக்கள், நார்ப்படலம் போன்ற பண்புகள் சூழல் பாதுகாப்பிற்கு மூங்கில் மரங்களை உகந்தவையாக மாற்றுகின்றன. குன்றின் சரிவுகள், வயலோரங்கள், மலைகளில் குறைந்த பராமரிப்புடன் வேகமாக வளர்வதால் இந்த மரங்களை ஒரு விளைபயிராகவும் விவசாயிகள் வளர்க்கின்றனர். நல்ல விலை, மரத்திற்கு மாற்றாக பல வேலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதால் இது பரவலாக வளர்க்கப்படுகிறது.
2 செமீ மட்டுமே அளவுள்ள ராடியெல்லா ரமன்சே என்ற பிரேசிலியன் இனம் முதல் 50 மீ உயரம் வரை நம் நாட்டில் வளரும் டெண்ட்ரோகிளாமஸ் ஜைஜான்ண்டிஸ் என்ற பிரம்மாண்ட இனம் வரை இவை பல தரத்தில் உள்ளன. ஒற்றை மூங்கில், சீன மூங்கில், தோட்ட மூங்கில், அலங்கார மூங்கில் என்று பல வகைகள் உள்ளன. திருவனந்தபுரம் பாலோடு என்ற இடத்தில் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலப் பயிர்களுக்கான பூங்காவில் (JNTBGRI) மூங்கில் பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன.தோட்டப் பயிர்களுக்கான ரகங்கள் திசு வளர்ப்பு முறையில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதற்காக இங்கு 20 ஏக்கர் பரப்பில் 63 இனங்கள், 45 கலப்பினங்கள் அடங்கிய 1200 மூங்கில் மரக்கூட்டங்களின் தோட்டம் (மூங்கில் சிப்பம்) உள்ளது. மூங்கில்கள் மண் இடிந்து விழுதல், மண் சரிவு, மண் அரிப்பு, நதிக்கரை பாதுகாப்பு, சூழல் மீட்பு (eco restoration), பாறைகள் உருண்டு விழுதல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களைத் தடுக்க உதவுகின்றன.
காற்று மண்டலத்தில் வெளியிடப்படும் கார்பனின் அளவைக் குறைக்க, இதன் மூலம் வாயு மாசின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இவற்றிற்கு நீர்மாசுக்களை உறிஞ்சி எடுக்கும் ஆற்றல் உண்டு. நட்டது முதல் உயிருள்ளவரை வெட்ட வெட்ட கிளைகள் மீண்டும் மீண்டும் வளர்வதால் இவற்றை மறுஜென்மம் எடுக்கும் மரங்கள் என்று சொல்லலாம். இவை இனத்திற்கு ஏற்ப 20 முதல் 120 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஒரு வித்திலைத் தாவரங்களான இவை ஆயுள் முடியும்போது ஒன்றுசேர்ந்து பூக்களை மலரச் செய்கின்றன.
விதை உற்பத்தி செய்தபிறகு மண்ணுடன் மண்ணாக மறைந்து போகின்றன. குறைந்த நீர்த்தேவை, பராமரிப்பு, பன்மயத்தன்மை, குறைவான முதலீடு போன்றவற்றால் இவை தாய்த்தாவரங்களின் மரம் என்று அழைக்கப்படுகின்றன.
கைவினைப் பொருட்கள், ஆயுதங்கள், மருந்துகள், வீட்டு உபகரணங்கள், இருக்கைகள், வேளாண் கருவிகள், சமூகப் பயன்பாட்டிற்குரிய உபகரணங்கள், வீட்டு கட்டுமானங்கள் போன்றவற்றிற்கு நீடித்த மூலப் பொருளாக மூங்கில் பயன்படுகிறது. மூங்கில் வீடுகள் சூழலுக்கு நட்புடையவை, குறைந்த செலவிலானவை. மூங்கிலின் அரிசி, பூ மொட்டுகள் உணவாகப் பயன்படுகின்றன. இதன் தடி ஒரு எரிபொருள், நீர் சுத்திகரிப்பான்.
பல உயிரினங்களின் உணவாகவும், வாழிடமாகவும் உள்ளன. பெரிய பாண்டா, சிவப்பு பாண்டா, வௌவால்கள், மூங்கில் எலி போன்றவை சில எடுத்துக்காட்டுகள். 2009 முதல் செப்டம்பர் 18 உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.
காடுகளில் வனவிலங்குகள் சாலைகளைக் கடக்கும்போது விரைந்து செல்லும் வாகனங்களின் மோதி உயிரிழப்பதைத் தடுக்க மூங்கில்கள் கொண்டு அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் பயன்படுகின்றன. இந்த பாலங்கள் கோவை அருகில் உள்ள ஆனைக்கட்டி, கேரளா, உத்ராகண் போன்ற இடங்களில் எண்ணற்ற வன உயிரினங்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
புல்லாங்குழல் தரும் மூங்கில்கள் உள்ளுக்குள் எதையும் மறைத்து வைத்துக் கொள்வதில்லை. உள்ளீடற்ற அப்பகுதி வெறும் சூன்யமே! வெட்ட வெட்ட வளர்ந்து பயன் தருகிறது. உயிருள்ளவரை மற்றவர்களுக்காக வாழ்கிறது. மரணத்திலும் பூ பூத்து மகிழ்ச்சிப் புன்னகையுடன் மறைகிறது. மூங்கில் போல வாழ்வோம். நம் வாழ்வையும் மகத்துவமாக்குவோம். அவற்றில் இருந்தும் சில இராகங்களை மீட்டெடுத்து நமக்குள் இசைப்போம். மனோகர இராகங்கள் அவற்றில் இருந்து உயரட்டும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஆகாய வயலில் இருந்து ஓர் அற்புத அறுவடை
- ஆண்டீஸ் மலையில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு
- அண்டார்க்டிகாவில் அழியும் எம்பரெர் பெங்குயின்கள்
- சூழல் காக்க உதவும் நீர்நாய்கள்
- தப்பிப் பிழைத்தன திமிங்கலங்கள்!
- வாழ வழியில்லாமல் தெருவில் அலையும் வனவிலங்குகள்
- புலி உள்ள காடே வளமான காடு
- 'காவலன்' புலி
- இலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்
- தேனீ எனும் தோழன்!
- பத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்
- வெளவால்கள் பலவிதமான வைரஸ்களுக்கு ஓம்புயிரிகளாக இருந்தும் அவை நோய்வாய்ப்படுவதில்லை - ஏன்?
- வேடந்தாங்கல் எல்லைக் குறைப்பு - நமக்கு நாமே வைக்கும் கொள்ளி
- ஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்
- மாறிவிட்ட யானையின் வலசைத் தடங்கள்!
- புவி வெப்பமடைதலால் அழிந்து வரும் பம்பிள் தேனீக்கள்
- அழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்
- காட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க கால்நடைகளைப் பயன்படுத்தும் கலிபோர்னியா
- பாம்புக்கு நடுங்க வேண்டுமா?
- புயலையும் தாங்கி நிற்கும் பனை மரம்