கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பவித்ரா பாலகணேஷ்
- பிரிவு: புவி அறிவியல்
நமது அன்றாட பேச்சுவழக்கிலும் உரையாடலிலும் mass எனப்படும் நிறையையும், weight எனப்படும் எடையையும் ஒரே அர்த்தம் உள்ளவை என நினைத்து மாற்றி பயன்படுத்தி வருகிறோம்.
அப்படியானால் நிறைக்கும் எடைக்கும் என்ன வித்தியாசம்?
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் (matter) அளவைக் குறிக்கும். அதே வேளையில் எடை என்பது நிறையின் மீது புவியீர்ப்பு விசையானது செயல்படும் வீதத்தைப் பொருத்தது . ஆகவே எடையின் அளவு புவியீர்ப்பு விசையைப் பொருத்து மாறுபடும். ஆனால் நிறையின் அளவு புவியீர்ப்பு விசையின் தாக்கத்தால் மாறுபடாது.
எடை = நிறை × ஈர்ப்புவிசை .
எடையையும் நிறையையும் ஒப்பிடுதல்
இந்த பூமியில் ஒரே இடத்தில் இருந்துகொண்டு நாம் எடையையும் நிறையையும் ஒப்பிட்டால் நிறை மற்றும் எடையின் மதிப்புகள் ஒன்றுதான். ஆனால் நாம் இருக்கும் இடத்தை மாற்றி ஈர்ப்பு விசையின் அளவு மாறுபடும் இடங்களில் இச்சோதனையை செய்து பார்த்தால் நிறையும் எடையும் ஒன்றல்ல என்பது தெரியவரும்.
எடுத்துக்காட்டாக பூமியில் இருப்பதைப் போலவே நிலாவிலும், நமது உடலின் நிறை இருக்கும். ஆனால் நிலாவில் நமது உடலின் எடையின் அளவு பூமியில் உள்ளவாறு இருக்காது. அதற்கு காரணம் ஈர்ப்பு விசை.
ஆக பூமியில் ஒரு கிலோ எடை என்பது நிலாவில் ஒரு கிலோவாக இருக்காது. ஏனெனில் நிலாவில் ஈர்ப்பு விசையின் அளவு பூமியிலிருந்து மாறுபட்டது.
ஒரு பொருளின் நிறை எங்கேயும் எப்போதும் மாறாது. ஈர்ப்பு விசை கூடும்போதும் குறையும்போதும் அதற்கேற்றார்போல் எடையானது கூடும் அல்லது குறையும்.
நிறையின் மதிப்பு ஒருபோதும் பூஜ்ஜியம் ஆக இருக்காது. ஆனால் ஒரு பொருளின் மீது எவ்வித ஈர்ப்பு விசையும் செயல்படாமல் போனால், அதாவது அவ்விடத்தில் ஈர்ப்புவிசை இல்லாமல் போனால் எடையின் அளவு பூஜ்ஜியம் ஆகும். அந்தப் பொருளுக்கு எடை இருக்காது. அதாவது அதன் எடையின் தாக்கம் இருக்காது. விண்வெளியில் பொருட்கள் மிதப்பதைப் போன்று அப்பொருள் தரையைத் தொடாமல் மிதக்கும்.
நிறையானது எண்மதிப்பு மட்டுமே உடைய scalar அளவு. எடையானது எண்மதிப்பும் திசையும் கொண்டது. அதாவது எடையானது இயற்பியல் கூற்றுப்படி vector அளவு. எடையானது பூமியை நோக்கிய திசை உடையதாக இருக்கும்.
மற்ற கோள்களில் உங்களின் எடை என்ன?
பூமியை விட மற்ற கோள்கள் வெவ்வேறான ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக சூரியனில் நமது எடை பூமியில் உள்ளதைவிட 27.90 மடங்கு அதிகமாக இருக்கும். நிலாவில் மிகக் குறைந்த அளவாக 0.165 ஆல் நமது உடல் எடையைப் பெருக்கி வரும் அளவே இருக்கும். மேலும் பூமியிலிருந்து சிறிது வேறுபட்டு சனிக் கோளில் 1.139 மடங்காக நமது உடல் எடை இருக்கும். இப்போது சொல்லுங்கள் நிலாவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் எடை என்ன?
- பவித்ரா பாலகணேஷ், மாதவன்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம்
- விவரங்கள்
- வெ.சீனிவாசன்
- பிரிவு: புவி அறிவியல்
இப்பொழுது எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் நடைமுறையில் உள்ளது என்று உங்களைக் கேட்டால் உங்களால் கண்டிப்பாகக் கூற முடியாது. மேலும் ஒவ்வொன்றையும் உங்களால் விளக்கவும் முடியாது. அறிவியல் கோட்பாடு என்பது நடைமுறையில் நிருபிக்கப்பட்ட ஒன்று. இதில் வேறொரு வகையும் உண்டு. அது தான் "சதியாலோசனைக் கோட்பாடுகள்" (conspiracy theories). இதிலும் நிறைய கோட்பாடுகள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் நடைமுறையில் நிரூபிக்கப்படாதவை அல்லது நிரூபிக்க இயலாதவை. தட்டை பூமி கோட்பாடு, வேற்றுகிரக வாசிகள் கோட்பாடு என நீண்டு கொண்டு போகும். அதனில் சுவாரசியமான ஒன்றை இங்கு காண்போம்…
அமெரிக்கர்கள் என்றாலே சதியாலோசனை மிக்கவர்கள் என்று பொருள் கொள்ளலாம். ஏனெனில் நீங்கள் கேள்விப்பட்ட ஏலியன் வருகைகள் பாதிக்கும் மேல் அமெரிக்கர்களால் கூறப்பட்டவை. அப்படி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சதியாலோசனைக் கோட்பாடுகளில் ஒன்று தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பம் தொடர்பான கால பயணக் கோட்பாடு. அது என்ன என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்…
1890ம் வருடம் பிரபல அமெரிக்க எழுத்தாளர் இங்கர்சால் லாக்வூட் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறார். அந்தப் புத்தகத்திற்கு இவ்வாறு பெயரிடுகிறார் "Baron Trump: Marvellous Underground Journey". இதில் என்ன ஆச்சரியம் என்றால் டொனால்ட் ட்ரம்பின் மகனின் பெயர் பரோன் டிரம்ப் என்பதாகும். சரி இப்பொழுது அவர் அந்தப் பெயரை சூட்டி இருக்கலாம் எனக் கொண்டால், அந்தப் புத்தகத்தில் Baron தான் ரஷ்யாவில் இருப்பதாகவும், அங்கு மிக துன்பத்தை சந்தித்தாகவும் கூறுவதாக இருக்கும். இப்பொழுது ஆச்சர்யம் என்னவெனில் ட்ரும்பின் மனைவி ரஷ்யாவைப் பூர்விகமாகக் கொண்டவர்.
மேலும் அதே எழுத்தாளர் 1896ம் ஆண்டு இன்னொரு புத்தகத்தை வெளியிடுகிறார். அதன் பெயர் "1900; Or, The Last President". இந்தப் புத்தகத்தில் அவர் அதிபர் தேர்தலில் வெளியில் இருந்து குடியேறிய ஒருவர் (டிரம்ப் குடும்பம் ரெண்டு தலைமுறைகளுக்கு முன் அதாவது 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள்) அதீத எதிர்ப்பை சம்பாதித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்ந்து எடுக்கப்படுவார். அவரை சில தீவிரவாதக் குழுக்கள் முற்றுகையிடும் என்று கூறி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார், "The story begins with a scene from a panicked New York City in early November, describing a “state of uproar” after the election of an enormously opposed outsider candidate. The Fifth Avenue Hotel will be the first to feel the fury of the mob.”
இதில் ஒற்றுமை என்று பார்த்தால் ட்ரம்பிற்குச் சொந்தமான "டிரம்ப் டவர்ஸ்" நியூயார்க் 5th அவன்யூவில் தான் உள்ளது. மேலும் அதனில் அவர் ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார். அது பின்வருமாறு: விவசாயத் துறை அமைச்சர் Lafe Pence, தற்போதைய துணை அதிபர் பெயர் Mike Pence.
இப்பொழுது இவை அனைத்தையும் தள்ளி வையுங்கள். இந்தப் பெயரை கொஞ்ச நேரத்திற்கு மனதில் வைத்துக் கொள்ளுங்கள் "சான் G டிரம்ப் ". இவர் டொனால்ட் ட்ரம்பின் பெரியப்பா ஆவார். இவர் 1907ஆம் ஆண்டு பிறந்தார். மேலும் பல விசயங்களை விக்கிபீடியாவில் தெரிந்து கொள்ளுங்கள் (https://en.wikipedia.org/wiki/John_G._Trump). அவர் அக்காலத்திய சிறந்த மின்னணுப் பொறியாளர்களுள் ஒருவர். இவருக்கும் நான் மேலே விவரித்தவற்றுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பீர்கள். ஆனால், இதோ அதற்கான விடை, மிகச் சிறந்த பொறியாளரான நிகோலா டெஸ்லா 1943ம் ஆண்டு சனவரி 7ம் திகதி இறக்கிறார். அதைத் தொடர்ந்து சான் G டிரம்ப் சனவரி 9ம் திகதி நிகோலா டெஸ்லாவின் ஆய்வுக் கூடத்தை பரிசோதனை செய்ய அரசாங்கம் நியமிக்கிறது.
அமெரிக்காவின் Alien Property Custodian என்னும் அமைப்பின் கீழ் சான் G டிரம்ப் பரிசோதனை செய்கிறார். அதிலிருந்து மூன்று நாள் கழித்து அதாவது சனவரி 12ம் திகதி அவரது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறார். அதில் "நிகோலா டெஸ்லாவின் ஆய்வகத்தில் அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடிய எந்த ஒன்றும் இங்கு இல்லை" என முடிவுரை எழுதுகிறார். ஏன் இங்கு நான் நிகோலா டெஸ்லாவை உள்ளே சேர்த்தேன் என்றால், அவர் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், தான் காலப்பயண இயந்திரத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும், மேலும் எனது குறிக்கோள் உலகில் உள்ள அனைவருக்கும் இலவச கம்பி இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே ஆகும் என அறிவிக்கிறார்.
நாம் மேல் பார்த்த பத்தி உண்மையில் நடந்த ஒரு விடயம்.
இப்பொழுது நாம் முன் பார்த்த சதியாலோசனையைத் தொடர்வோம்...
சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் என்ன கூறுகிறார்கள் எனில் அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டு சான் G டிரம்ப் என்பவரை நிகோலா டெஸ்லாவின் காலப்பயண இயந்திரத்தைக் கண்டறிய நியமித்ததாகவும், ஆனால் சான் G டிரம்ப் அதனைக் கண்டறிந்து தன்னிடமே வைத்துக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். அதன் விளைவே டிரம்ப் குடும்பம் காலப் பயணம் செய்து உள்ளார்கள் எனவும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ இந்த சதியாலோசனைக் கோட்பாடுகள் என்பவை எப்பொழுதும் ஆதாரம் அற்றவை எனினும், எளிதில் அனைவராலும் நம்பத் தகுந்தவை. இன்னும் சில கோட்பாடுகளைப் பின் வரும் கட்டுரைகளில் காண்போம்.
நான் முதலில் கூறிய இரண்டு புத்தகங்களும் archive.org எனும் இணையத்தில் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான "Library of Congress" பதிவேற்றி உள்ளது. நீங்கள் இலவசமாக மென்பொருள் வடிவில் படித்துக் கொள்ளலாம். அதற்கான இணைய முகவரிகள் கீழே உள்ளன:
https://archive.org/details/barontrumpsmarve00lock/page/n8
https://archive.org/details/1900orlastpresid00lock/page/n8
- வெ.சீனிவாசன்
- விவரங்கள்
- அப்சர் சையத்
- பிரிவு: புவி அறிவியல்
ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு தற்போது சீராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது.
ஓசோன் படலம் எனப்படுவது யாதெனில் நாம் உயிர்வாழ மிக முக்கியமான நம் சுவாச வாயுவான ஆக்சிஜனின் மற்றொரு வடிவம் தான் ஓசோன். மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஓர் ஓசோன் துகள் ஆகும். சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் - நம் கண்ணுக்குத் தெரியாத - மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்ட புறஊதாக் கதிர்களிலிருந்து பூமி வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதும், இக்கதிர் பூமியை வந்து அடையாவண்ணம் பார்த்துக் கொள்வதும் தான் ஓசோன் படலத்தின் முக்கிய பணி ஆகும். 1930-ம் ஆண்டு சிட்னிசாப்மேன் என்பவர் ஓசோன் என்னும் ஒரு படலம் இது போன்றதோர் உன்னதப் பணியை செய்து கொண்டிருப்பதைக் கண்டறிந்தார்.
ஆனால் 1970-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு முதன்முதலாக ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன் என்பவர் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதைக் கண்டறிந்தார். சிஎஃப்சி என்று கூறப்படும் குளோரோ புளூரோ கார்பன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதியியல் புகைகளால் ஓசோன் படலம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது. தொழிற்சாலைகளின் ஒரு சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. அதாவது, குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் சிஎஃப்சி வாயுகளே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
பின்னர், ஒசோன் படலத்தைக் காக்கும் நோக்கோடு இதுபோன்ற தீங்கை ஏற்படுத்தும் கருவிகளை மாற்றி வடிவமைத்து தற்போது இவ்வகை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால், புவியின் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு தற்போது சீராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், அண்டார்டிகா வான்பகுதியில் ஏற்பட்ட துளை படிப்படியாக சுருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு வேகமாக சீராகி வருவதால், 2030 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்து விடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நமக்கு ஒரு விடயம் தெளிவாக விளங்குகின்றது, பருவ நிலைக்கு உகந்த, சுற்றுச்சூழலுக்கேற்ப தொழில்நுட்பங்களை இவ் அரசுகளும் அதற்கேற்ப மக்களாகிய நாமும் முன்னெடுத்தால், நிச்சயம் நாமும் அடுத்து அடுத்து வரும் தலைமுறையும் எவ்விதப் பாதிப்பின்றி இவ்வுலகில் வாழலாம்.
- அப்சர் சையத், சுற்றுச்சூழல் ஆர்வலர், சென்னை
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: புவி அறிவியல்
பெரு வெளியே
பிரபஞ்சம்! - அங்கு
அனைத்து அணுக்களும்
ஆவி மற்றும் தூசு நிலையே! - அதுவே
ஹைட்ரஜன், ஹீலியம், கார்பன்
போன்றவை.
அணுவை
ஆக்கவோ, அழிக்கவோ முடியாது!
அணு வளர்ச்சியுராது, நகலெடுக்காது!
தன்னை தானே சீர்செய்யவும் மாட்டாது!
ஆனால்
அணுக்கள் ஒன்றிணைந்து
மூலக்கூறுகளையும்,
மூலக்கூறுகள் ஒன்றிணைந்து
பருப்பொருளையும்
பருப்பொருள்கள் ஒன்றிணைந்து
பிரபஞ்சத்தையும் உண்டுபண்ணும்
இவையாவும் நடந்திடுமே
இயற்வேதியியல் கோட்பாட்டிற்குட்ப்பட்டு!
அணு
நிலையில்லாதது! - தொடர்
இயக்கத்தி லிருப்பது! - தொடர்ந்து
வினைபுரிவது - விளைவு
விசை உண்டாவது!
அது பெருகி - பெரும் புயலாகி
அணுக்கள் கூட்டம் கூட்டமாக
சுற்றி சுழலுவதே
பால்வளித் திரள் - வானவெளியிலே!
இப்படி
நாளொரு வண்ணமும்
பொழுதொரு மேனியுமாக
சுழலும் அணுத்திரளின்
மையமே சுட்டெரிக்கும்
சூரியன்! - அது உமிழ்வதே
உயர் ஆற்றல் கொண்ட
கதிர்வீச்சு!
சுழலும் அணுத்திரளின்
புறத்தினின்று சிதறிய சில்களே
புதன், சுக்ரன், பூமி
செவ்வாய், குரு, சனி மற்றும் யூரேனஸ்
போன்ற கோள்கள்!
இவ்வாறு
சூரியனும் - அதிலிருந்து
சிதறுண்ட கோள்களும்
எரி கற்களும், வால்மீன்களும்
கொண்ட கூட்டு குடும்பமே
சூரிய குடும்பமாகும்!
சூரியனுக்கும் அதைச் சுற்றும் கோள்களுக்கும்
உள்ள தூரத்தை பொறுத்தமைவதே
கோள்களின் வெப்பநிலை!
அந்த வெப்பத்தை பொறுத்தமைவதே
கோள்களின் பௌதீக நிலை!
வாயு, திரவ, திட மென்றும்!
வெப்பம், குளிரென்றும்!
மழை, வெயிலென்றும்!
இப்படி உருவானதே
கோளுக்கொரு பருவநிலை
எட்டு கோள்களுக்கும்!
அன்னை பூமி என்பது
இவ்வெட்டில் ஒன்றே!
ஆச்சரியம் என்னவென்றால்
இப்பூமியில் மட்டும்தான்
சாதகங்கள் பலப்பல - உயிர்கள்
தோன்றவும், வளரவும், விருத்தியடையவும்!
உயிரென்றால் என்ன?
பருபொருள் உயிர் கொண்டதெப்படி?
உயிரென்றால் இயக்கமா?
ஆறு கூட இயங்குகிறதே!
உயிரென்றால் வளர்ச்சியா?
மலை கூட வளர்கிறதே!
உயிரென்றால் சத்தமிடுவதா?
இடி கூட முழங்குகிறதே!
உயிரென்றால் தன்னை போன்றே
ஒன்றை தருவதா?
பாறை கூட ஒன்று இரண்டாகிறதே!
உயிரென்றால் என்ன?
உயிரை காண முடியுமா?
கண்டால் தொட்டு உணர முடியுமா?
தொட்டால் நுகர முடியுமா?
நுகர்ந்தால் சுவைக்க முடியுமா?
சுவைத்தால் செரிக்க முடியுமா?
உயிரென்றால் என்ன?
உயிரென்பது யாதெனின் - அது
பருப்பொருளின் பண்புத் தொகையே!
அவையாவன
வளர்ச்சியுருதல், நகலெடுத்தல், சீர்செய்தல்!
சிறு செடி வளர்ந்து மரமாகிறது
காய்த்து கனிந்த மரம் விதை மூலம் தன்னை நகலெடுக்கிறது
வெட்டுண்ட கிளைகள் தன்னைத்தானே சீர்செய்து பூத்து சிரிக்கின்றது
எனவே தாவரம் என்ற பருப்பொருளுக்கு உயிருண்டு!
எனவே
உயிரென்பது செயலிலிருப்பது!
உயிரென்பது இயக்கத்திலிருப்பது!
இப்படி
ஓர் அணு ஈரணுவாகவும்
ஈரணு பலவணுவாகவும்
பலவணு மூலக்கூறுகளாகவும்
உருப்பெற்றதே பருப்பொருள்!
பருப்பொருள் தக்க சமயத்தில்
பண்புத்தொகை பெற்று
தரித்ததே மரபணு! - அதுவே
உயிரணு!
மரபணு
அது வளர்ச்சியுறும் - தன்னைத்தானே
நகலெடுக்கும்!
பழுதுப்பட்டால் சீர்செய்யும்!
இதுவே
அணு மரபணுவான கதை!
இதுவே
பருப்பொருள் உயிர்ப்பண்பு பெற்ற கதை!
இதுவே
ஓரணு உயிரணுவான கதை!
- செந்தமிழ்ச் செல்வன்
- ஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம்
- வெள்ள பாதுகாப்பு
- முதலாளித்துவ சக்திகளின் கட்டுப்பாட்டில் அறிவியல்
- ஆறாவது பேரழிவு
- இந்தியாவில் மழைப்பொழிவு
- நீர்வள மேலாண்மை
- மனித நாகரிகத்தின் முழுமையான அழிவைத் தவிர்ப்பது கடினமே
- இயற்கையின் ஆக்கமும், அழித்தலும் - எரிமலைகள்
- பரிணாம மையப்புள்ளி இடம்பெயர்கிறது !?
- நிலவை ரசிக்கலாம் வாங்க....
- RGO, GMT, UT, UTC என்றால் என்ன?
- நவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களும்
- மனிதம் - மாபெரும் குடும்பம்
- உலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித இரத்தமும்
- புவி அமைப்பின் சில உச்சங்கள்
- கடல் - புவியின் தோல்!
- கண்டம் வாரியாக உயர்ந்த பகுதிகள்
- உலகின் ஆழமான ஏரிகள், குகைகள், எரிமலைகள்
- உலகின் முக்கிய கடல்கள்
- உலகின் முக்கிய சிகரங்கள்