ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு தற்போது சீராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது.
ஓசோன் படலம் எனப்படுவது யாதெனில் நாம் உயிர்வாழ மிக முக்கியமான நம் சுவாச வாயுவான ஆக்சிஜனின் மற்றொரு வடிவம் தான் ஓசோன். மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஓர் ஓசோன் துகள் ஆகும். சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் - நம் கண்ணுக்குத் தெரியாத - மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்ட புறஊதாக் கதிர்களிலிருந்து பூமி வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதும், இக்கதிர் பூமியை வந்து அடையாவண்ணம் பார்த்துக் கொள்வதும் தான் ஓசோன் படலத்தின் முக்கிய பணி ஆகும். 1930-ம் ஆண்டு சிட்னிசாப்மேன் என்பவர் ஓசோன் என்னும் ஒரு படலம் இது போன்றதோர் உன்னதப் பணியை செய்து கொண்டிருப்பதைக் கண்டறிந்தார்.
ஆனால் 1970-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு முதன்முதலாக ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன் என்பவர் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதைக் கண்டறிந்தார். சிஎஃப்சி என்று கூறப்படும் குளோரோ புளூரோ கார்பன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதியியல் புகைகளால் ஓசோன் படலம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது. தொழிற்சாலைகளின் ஒரு சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. அதாவது, குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் சிஎஃப்சி வாயுகளே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
பின்னர், ஒசோன் படலத்தைக் காக்கும் நோக்கோடு இதுபோன்ற தீங்கை ஏற்படுத்தும் கருவிகளை மாற்றி வடிவமைத்து தற்போது இவ்வகை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால், புவியின் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு தற்போது சீராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், அண்டார்டிகா வான்பகுதியில் ஏற்பட்ட துளை படிப்படியாக சுருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு வேகமாக சீராகி வருவதால், 2030 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்து விடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நமக்கு ஒரு விடயம் தெளிவாக விளங்குகின்றது, பருவ நிலைக்கு உகந்த, சுற்றுச்சூழலுக்கேற்ப தொழில்நுட்பங்களை இவ் அரசுகளும் அதற்கேற்ப மக்களாகிய நாமும் முன்னெடுத்தால், நிச்சயம் நாமும் அடுத்து அடுத்து வரும் தலைமுறையும் எவ்விதப் பாதிப்பின்றி இவ்வுலகில் வாழலாம்.
- அப்சர் சையத், சுற்றுச்சூழல் ஆர்வலர், சென்னை