நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம் - 18
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; - 20
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே!
…………… இவண் தள்ளா தோரே! - 30 - புறநானூறு 18 (18-30)

இறுதிப் பொருள் : அதனால் வேந்தே! சிறிதும் புறம் தள்ளாது; நிலத்தில் பயிர்கள் செழித்து வளர நீர்ப்பெருக்கு இருக்க வேண்டும். எனவே நீர்நிலை பெருகுமாறு குளங்கள் போன்றவற்றை தோண்டி அமைப்பாயாக. இவ்வாறு செய்பவனே புகழ்பெற்ற மன்னனாக விளங்குவார்கள். பாடியவர் : புலவர் குட புலவியனார், பாடப்பெற்றவர் : தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

“வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோன் உயரும்” - ‘வரப்புயர’ - ஒளவையார் - பொருள்

“நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய என ஆளும் வேந்தே” - புறநானூறு 58:10

water crisis 300மனித உடலானது 55% முதல் 78% வரையில் நீரால் ஆனது. இரத்தத்தில் 90% நீர் தான் உள்ளது. ஆண்கள் நாளொன்றுக்குக் குறைந்தது 2 லிட்டர் நீரும், பெண்கள் 2.7 லிட்டர் நீரும் குடிப்பது அவசியமானது. ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ் நேஷனல் ரிஸேர்ச் கவுன்சில்’ 3.7 லிட்டர் நீரைப் பரிந்துரைக்கிறது. ‘ஒரு நாளில் ஒரு மனிதன் குடிக்க, துவைக்க, சமைக்க மற்றும் உடல்நலன் பேண என குறைந்தது 50 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறான்’ என்று ‘ஐக்கிய நாடுகள் சபை’ குறிக்கிறது.

தாவர வேர்த்தூவிகள் வேர் மற்றும் மண்ணிற்கு இடையே அயனிகளின் செறிவு வேறுபாட்டைத் தோற்றுவிக்கின்றன. இச்செறிவு வேறுபாட்டை நீக்க நீரானது மண்ணிலிருந்து வேருக்குள் செல்கிறது. இன்னொரு வகையாக செல்களில் நீர்மூலக் கூறுகள் ஆவியாதலினால் உருவாகும் ஓர் இழுவிசை வேர்களின் சைலத்திலிருந்து நீரை மிக உயரத்திற்கு மேலேற்றுகிறது. நீராவிப் போக்கானது வேரிலிருந்து நீர் மற்றும் கனிமப் பொருட்களை உறிஞ்சுவதற்கும், அவற்றினை இலைகள் வரை மேல்நோக்கிக் கடத்துவதற்கும் உதவுகிறது. வெப்பநிலையைச் சீராக்கிக்கொள்ள, கழிவை வெளியேற்ற, ஆற்றலை உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்ல மனித உயிர்களும், மரம் செடி கொடிகளும் நீரை உட்கொள்ளவும், உறிஞ்சவும் செய்கின்றன. நீர் உடலிலிருந்து மலம், சிறுநீர், வியர்வை, மூச்சுக்காற்று இவற்றின் மூலமாக வெளியேறுகிறது. ஒரு மனிதனால் தண்ணீர் இல்லாமல் 7 நாட்கள் வரை மட்டுமே உயிரோடு இருக்க முடியும். உணவுப் பொருட்களில் பால் 87 சதவீதம், உருளைக்கிழங்கு 75 சதவீதம், முட்டை 73 சதவீதம் என எல்லாமும் ஒரு குறிப்பிட்ட சதவீத நீரைத் தன்னுள்ளாக கொண்டுள்ளன.

‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனம், சரத்து - 25’-ன் படி “ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவனது குடும்பத்தின் சுகாதாரமான வாழ்க்கை மேம்படவும் அடிப்படையான ஒரே தேவை - சுத்தமான தண்ணீர். இது உலகெங்கிலும் உள்ள மக்களின் அடிப்படை உரிமையாகும்”. ‘ஆசிய மனித உரிமைகள் சாசனம் - 1998, பிரிவு 7:1’-ன் படி “ஒவ்வொரு தனி மனிதரும் வாழ்க்கைக்கான அடிப்படை தேவையைப் பெறுவதற்கும், சுரண்டல் மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு பெறவும் உரிமை உடையவர்கள். கல்வி அறிவு பெறவும், உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் வீடு ஆகியன பெறவும், நலமான இருத்தலுக்கான மருத்துவ உதவி பெறவும் உரிமை உண்டு. தொழில்நுட்பம் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எல்லாத் தனி மனிதர்களுக்கும், மனித குழுக்களுக்கும் உரிமை உண்டு”. ‘இந்திய அரசியலமைப்பின்’படி “தண்ணீர் பொதுச்சொத்து. சாதி, மத, பொருளாதார, இனப் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் அதைப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது”. ‘ஐ.நா சபையின் முன்னால் தலைவர் கோபி அன்னன்’ அளித்த செய்தி ஒன்றில் “தண்ணீரைப் பயன்படுத்துவோர் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படும்போது, காசு இல்லை என்ற காரணத்தால் ஒருவன் தாகத்தால் தவித்துச் சாக வேண்டிய துர்பாக்கியம் நேர்ந்துவிடக் கூடாது. ஆனால், இன்றைய உலகச் சூழ்நிலை அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகக்குறைந்த வருமானமுள்ள மக்கள் தான் தண்ணீருக்கு அதிக விலை தர வேண்டி உள்ளது”.

வனமாக விளங்கும் மலைகளில் சருகுகள் நிறைந்து காணப்படும். சருகுகள் பெய்யும் மழையை உள்வாங்கி சிறிது சிறிதாகக் கசிகிறது. இந்த சொட்டுக்கள் ஒன்று சேர்ந்து நீரோடையாகி அவை இணைந்து அருவியாய் சமவெளியை அடைந்து நதியாகிறது. மேலும் நதிகள் பனி உருகுவதாலும் பிறக்கின்றன. சரிவை ஒட்டி ஓடும் வேகம் இருக்கிறது. நீரில் கார்பன்-டை-ஆக்ஸைடு கரைவதால் ஏற்படும் சிறிய அளவு கார்பானிக் அமிலம் பாறைகளையும் கரைக்கும் திறன் உடையது. ஓடும் பாதையில் இருக்கும் மணலையும், பாறைகளையும் அரித்துவிடுவதால் படுகைகள் பிறக்கின்றன. நீரின் தன்மை மட்டத்தில் பரவி இருப்பது, நிலத்தின் சிறு கீறல் கூட நாளடைவில் ஆற்றின் வழித்தடமாக மாற்றம் பெறலாம்.

நாடாளுமன்ற (2006) செய்திக் குறிப்பில் “இந்தியாவில் நீரியல் சுழ‌ற்சி மூலம் கிடைக்கும் மொத்த மழை அளவு 4 இலட்சம் கோடி கனமீட்டராகும். அதில் 1,12,300 கோடி கனமீட்டர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்கிறது. ‘தமிழக பொதுப்பணித்துறை’ செய்திக் குறிப்பில் “மழை மூலம் பெறப்படும் நீரில் 170 டி.எம்.சி. (1 டி.எம்.சி = ஆயிரம் மில்லியன் கன அடி நீர்) தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது” என்கிறது. தமிழக அரசு 2009- ல் முன்வைத்த ‘வெள்ள நீர் கால்வாய்த் திட்டத்தின்’ செய்திக் குறிப்பில் “மழைக் காலங்களில் தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது” என்று குறித்து இருக்கிறது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, ‘சொட்டு சொட்டாக நீர் சிந்துமானால் அதன் அளவு ஒரு நாளைக்கு 60 லிட்டர் என்ற அளவில் இருக்கும்’ என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

‘இரண்டு கி.மீட்டர் பரப்பளவில் 6 குளங்கள் வெட்டிவிட்டேன்; இனி அதற்குள்ளாக விழும் அவ்வளவு தண்ணீரையும் சேர்க்கப்போகிறேன்’ என்று சொல்லுவது எவ்வளவு அபத்தமானதோ அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். தமிழகத்தைப் பொருத்தவரையில் இனி நதிநீரை நம்பி இருப்பது பயன் தராதது; அதற்கு மாற்றான வளம் தான் மழை வளம்.

நீரில் கொதித்தல் செயல் நீர் முழுமையாக நிகழ்வதாகவும், ஆவியாதல் என்பது நீரின் மேற்பரப்பில் மட்டுமே நிகழ்வதாகவும் இருக்கிறது. மழை நீர் ஆங்காங்கு குட்டைகளாகத் தேங்கிவிடுவதால் ஏற்படும் அதிகப்படியான ஆவியாகும் பரப்பைக் குறைக்க வேண்டும். நீர்பரப்பு குறையும்போது வெப்ப ஏற்பின் அளவு குறைந்து ஆவியாதலும் குறைகிறது. குழியான மற்றும் பரந்த பரப்பில் என இருநிலைகளிலும் வைக்கப்பட்ட சம அளவிலான நீரில் முதலில் ஆவியாவது பரந்த பரப்பிலான நீராகவே இருக்கும். இனி மழை நீருக்கு என்று தனியாக ஒரு வழித்தடத்தை உருவாக்க முடியாது. இருக்கும் ஒரே இணைப்பு சாக்கடைகள் தான். சாக்கடைத் தடங்களை மழை நீருக்குப் பயன்படுத்த முடிவு செய்து சாக்கடைகளை சாலையில் விட்டுவிடவும் முடியாது. ஒரு புது முயற்சி ‘இரண்டையும் இணைத்து நிலத்தடி நீராக மாற்றிப் பயன்படுத்தப் பார்ப்போம்’.

இயல்பான தட்ப வெப்ப நிலையில் நீரானது சுவையற்ற, மணமற்றதொரு திரவமாகும். குறைந்த அளவுகளில் நீர் நிறமற்றுத் தோன்றினாலும், நீரும் பனிக்கட்டியும் உள்ளார்ந்த வெளிர் நீல நிறத்தை உடையவை. நீர் பலவிதமான பொருட்களைக் கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது. உப்புக்கள், சர்க்கரைகள், அமிலங்கள், காரங்கள், வாயுக்களில் ஆக்சிஜன் மற்றும் கரியமில வாயு மற்றும் புரதங்கள், டி.என்.ஏ, கூட்டுச்சர்க்கரைகள் (பாலிசேக்கரைடுகள்) என செல்களின் அனைத்து கூறுகளும் நீரில் எளிதில் கரையும் தன்மையுடையனவாக இருக்கின்றன. நீர் ஒரு மிகச்சிறந்த கரைப்பான்; கரைக்கப்படும் பொருள் எதுவாயினும் நீர் முழுமைக்குமாக கரைகிறது. கரைக்கப்படும் பொருளின் அளவுக்கு ஏற்ப கரைக்கும் பொருள் ஆதிக்கத்தை இழக்கிறது. கடலில் கரைத்த பெருங்காயம் என்பது அதன் பரப்பின் வலிமையைப் பறைசாற்றுவதே. சாக்கடைகளை மட்டும் சேர்க்க போவதில்லை, அதோடு மழை நீரை அதிகமாக சேர்க்கப்போகிறோம். கூவம் நதியைக் கரைபுரண்டு ஓடச்செய்தால் அது ‘சாக்கடை’ என்ற பெயரை இழந்துவிடும். சமைத்ததில் உப்பு கொஞ்சம் அதிகமாய் போனால் உணவென்ன குப்பைக்கா போகிற‌து? அளவைக் குறைக்க கூடுதல் தண்ணீர்; அவ்வளவு தான். மழை நீர் சேகரிப்பு அமைப்புகளில் நிரம்பிய நீர் போக உபரி நீரும் சாக்கடைகள் வாயிலாக அருகில் உள்ள நீர்நிலைகளில் சேர்க்கப்பட வேண்டும். குடிநீருக்கு, விவசாயத்திற்கு, பிற தேவைகளுக்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நீர்நிலைகள் பிரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்துள்ளன. அதே போன்றதொரு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீரை உறிஞ்சுவதில் ஒரு காய்ந்த மற்றும் ஈரமான பஞ்சுக்கு இடையேயான வித்தியாசம் உணர்த்திவிடும், இன்று மேற்கொள்ளும் பல முறைகள் நிரந்தரத் தீர்வாகாது என்பதற்கு. இந்த வித்தியாசம் இல்லாமல் இருந்துவிடுமானால், என்றைக்கும் ஏரி குளங்கள் வற்றியே இருக்கும். எந்த ஒரு பருப்பொருளும் தனக்கென தனித்த நீர் ஏற்புத்திறனைக் கொண்டிருக்கும். பூமியிலிருந்து எடுக்கப்படும்போது தான் அதில் நிரப்பப்படுவதற்கு இடம் கிடைக்கும். நிலத்துக்குக் கீழே 250 அடி ஆழத்தில் நீர் கிடைத்தாலும் ஊற்றும் நீரையெல்லாம் பூமி உடனே உறிஞ்சி விடாது. கடற்கரையை ஒட்டிய பகுதிகளைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை சென்று நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவது என்பது மிகச் சரியான அணுகுமுறை.

பொதுவாகவே பூமியின் மேற்பரப்பு மேடு பள்ளங்கள் நிரம்பியது. அடிப்படையில் பாதுகாப்பானதும், எளிமையானதும் என்பதால் பள்ளமான பகுதிகள் கண்டறியப்பட்டு அவைகள் நீர்நிலைகளாக மாற்றப்பட வேண்டும்.

“அறையும் பொறையும் மணந்த தலைய
எண்ணான் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர் சிறுகுளம்………” - புறநானூறு 118 : 1-3 வரிகள்
பொருள் : பள்ளமான பகுதிகளே அன்றி அறைகளையும், பொறைகளையும் இடையிடையே கரையாக பிறை வடிவில் குளம் அமைத்துள்ள பாங்கு.

“கான்யாற்(று) அடைகரை ஊர் இனி(து)…......” - இனியவை நாற்பது - 4
பொருள் : ஆற்றுநீர் அடைகரைக்கண் உள்ள ஊர் வாழ்வதற்கு இனிது.

“குளந்தொட்டு வளம்பெருக்கிப்” - 284 - பட்டினப்பாலை
பொருள் : தூர்ந்துபோன குளங்களைத் தூர்வாறி நீர்வளம் பெருக்கி நாட்டின் செல்வ வளத்தைப் பெருக செய்தான். பாடியவர் : கடியலூர் உருத்திரங்கண்ணனார், பாடப்பட்டதன் பொருள் : சோழன் செய்த சிறப்பு.

நீர்நிலைகளின் கரைகளைக் கான்கிரிட் கொண்டு பலப்படுத்துவதை விடவும் வண்டல் மண், மணல் மற்றும் களிமண் (1:3:2) என்ற விகிதத்தில் அமைப்பதும்; அதன் உச்சியை அகலப்படுத்தி மரம், செடிகளை வளர்ப்பதும் கரையைப் பலமுள்ளதாகவும், வேகமாக நிலத்தடி நீராக மாற வாய்ப்புள்ளதுமான முறையாகும்.

முதல் நிலை சுத்திகரிப்பில் சிறியது பெரியதான மூன்றடுக்கு சல்லடைப் பரப்பில் கழிவுநீரை ஓடவிட்டு அதன் கடைசியில் சிறிய அளவிலான வலைப்பின்னலை 450 குறுக்காக அமைத்து அதில் எஞ்சியவை நீர்நிலைக்கு வெளியே சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்த வேண்டும். வண்டல் மண்ணில் 10-40 சதவீதம் வரை நுண்துளைகள் உள்ளன. சராசரியாக 100 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் உள்ள மணல்பரப்பானது தனக்குள் சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் திறன் கொண்டது. களிமண் பரப்பில் நீர் கசிவது மெதுவாக இருக்கும். குப்பைக் கூள‌ங்களோ, பாசிகளோ அல்லது நீர்த் தாவரங்களோ மேற்பரப்பை மூடி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தெளிந்த வண்ணம் இருக்கும்போது நீர்த் தாவரங்கள் சூரிய ஒளியைப் பெற்று நீருக்குள்ளேயே வாழ முடிகிறது. ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் என எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்று நிரம்பும்போது அதன் உபரி நீர் மற்றொன்றை அடைய வழி ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைக்கான வழித்தடங்களைச் சென்டிமீட்டர் சென்டிமீட்டராக ஆழப்படுத்திக்கொண்டே போக வேண்டும் என்று அறிவுரையெல்லாம் சொல்லப்போவதில்லை. இயற்கை அதை ஏற்கனவே நேர்த்தியாக செய்துவிட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீர்நிலைகளைச் சென்று அடைவதில் செயற்கையாக தடைசெய்த வழிகளைக் களைந்துவிட்டால் போதும்.

நீர்நிலைகளை ஒட்டி ஆழ்துளைக் கிணறு அமைத்து அதிலிருந்து நீர் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். தரிசாக விடப்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயம் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். மரம், செடி, கொடிகள் மண்ணை இலகாக்குகின்றன. அதனால் மேல்மட்ட நீர் எளிதாக உரிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது. ஆறுகளிலிருந்து மணல் அள்ளுவதற்கு மாற்றாக கடலிலிருந்து அள்ளுவதும், ஆற்றின் கழிமுகங்களை ஒட்டி அள்ளுவதும் சரியானதாக இருக்கும். பிரம்மாண்டமான அளவுக்கு ஆழப்படுத்தப்படுவதால் அதனை நீர்வழிப்பாதைகளாகவும் பயன்படுத்த முடியும். நதிகளுக்கு குறுக்காக தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். திடக்கழிவுகளைப் பெருக்கி குவிப்பதற்கு மாற்றாக பொறுக்கி எடுத்து மறுசுழ‌ற்சிக்கு உற்படுத்த வேண்டும். திறந்த முறை சாக்கடை என்பது பாதாள சாக்கடைகளை விட கையாள சரியானது.

பெட்டாஷ் படிகாரமும், சுண்ணாம்பும் சேர்க்கப்படும்போது அவை நீரில் உள்ள மாசுப்பொருட்களைத் திரித்துவிடுகின்றன. இதனால் கசடுகள் ஒன்று சேர்ந்து துகள்களாகி நீர்க்கலனின் அடியில் படிந்துவிடுகின்றன. தேத்தாங்கொட்டை கன உலோகங்களை (காட்மீயம், காரியம்) பிரிக்கிறது மற்றும் அவசியமில்லாத தாதுக்களை நீக்குகிறது. வண்டல் படிமமானது துரு மற்றும் கால்சியம் கார்பனேட் உள்ளிட்ட துகள்களை நீக்குகிறது. கழிவு நீரில் இருக்கும் உப்பை வேலிக்காத்தான் முள் பிரித்தெடுக்கிறது. ரோகுக்கெண்டை, மிர்கால்கெண்டை மற்றும் கட்லாகெண்டை வகையான மீன்கள் கழிவு நீரில் உள்ள கசடுகளை உண்டு வளர்கின்றன. வாழைப்பழ தோல் உலோக நச்சுப் பொருட்களைத் தன்னகத்தே உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதாக்கதிர்கள் பாக்டீரியா, ஈகோலி வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் தன்மை கொண்டது. திலேப்பியா மொசாம்பிகா, கம்பூசியா, சன்னா ஸ்ட்ரையேட்டஸ் வகையான மீன்கள் மனிதர்களுக்கு நோய் பரப்பும் நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன. வாத்துகள் நீர்நிலைகளில் மீன் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் பூச்சி மற்றும் நத்தையினங்களை உட்கொள்கின்றன.

குடிநீரில் 1 பார்ட் பெர் மில்லியன் (PPM) என்ற அளவிலும், மற்ற பயன்பாடுகளில் 1-2 பார்ட் பெர் மில்லியன் (PPM) என்ற அளவிலும் பயன்படுத்தப்படும் குளோரின் நோய் ஏற்படுத்தும் உயிரிகளைக் கொல்கிறது. முருங்கை விதை நீரில் உள்ள தேவையற்ற பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்ற நுண்ணியிர்களையும் மற்றும் வேதிப்பொருட்களை அழிக்கிறது. உமியின் சாம்பல் (Activated Carbon) நோய் உண்டாக்கும் கிரிமிகளை அழித்து நீரைத் தூய்மைப்படுத்துகிறது. அவரை விதை நீரின் கலங்கல் தன்மையை நீக்குகிறது. ஒரு கார்பன் (கரி) வடிகட்டி கரிம வேதிப்பொருட்களை மற்றும் குளோரினை நீக்குகிறது. வெட்டி வேர் நீரில் உள்ள துர்நாற்றத்தை நீக்குகிறது. கரி (குறிப்பாக சவுக்கு) நீரில் உள்ள நச்சு வாயுக்களை மற்றும் துர்நாற்றத்தை உறிஞ்சுவதுடன் மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. பசுவின் சாணம் துர்நாற்றத்தைப் போக்குகிறது. தண்ணீரில் காணப்படும் நோய்பரப்பும் பாக்டீரியா கிருமிகளை தெளிவாக வடிகட்டி தண்ணீரைச் சுத்தப்படுத்தும் திறன் மணலுக்கு உண்டு. ஒரு இடத்தில் தேக்கி வைக்கப்படும் மணலின் அளவுக்கேற்ப அந்த இடத்தில் காணப்படும் தண்ணீர் மிகவும் தெளிவாகவும், நோய் தொற்று கிருமிகள் நீங்கியும் காணப்படும். வேம்பு வயிற்றுப் பூச்சியை நீக்குகிறது மற்றும் மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது.

‘மலம்’ என்பது செரிக்கப்படாத உணவே. ‘கழிவு’ என்று சொல்வதும் கூட ‘எஞ்சியது’ என்ற பொருளையே தரும். செரிமான‌ம் என்பது மூலக்கூறுகளைப் பிரித்து தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளும் உயிரியல் செயலே. ‘அசுத்தம்’ என்று சொல்வதெல்லாம் ‘சுத்தம்’ என்று சொல்லியதிலிருந்து வந்தது. ‘மலம்’ என்பது நேற்று சாப்பிட்டதன் ‘எச்சம்’; அது எப்படி அசுத்தமாகும்? மலமும், அழுகிய உடலும் உணவே என்பதை ஏற்க மனிதர்கள் வேண்டுமானால் மறுக்கலாம். மலத்தில் வாழும் புழுக்களும், வேறு சில உயிர்களும் அதனை அருவறுப்பு என்று ஒதுங்கி நிற்பதில்லை. தன் கழிவைத் தானே உண்பதில் பலனில்லை. காரணம் அந்த குறித்த உயிரைப் பொருத்தவரையில் மட்டும் அது வெறும் சக்கை. அதில் கிரகிக்க வேறு சில சத்துக்களும் இருக்கிறன. அதனால் தான் மற்ற உயிர்கள் அதை எடுத்துக்கொள்கின்றன. கழித்த உயிரினுக்கே அது வாசனையானால்; ஈர்க்கும் என்பதால் தான் ஒதுக்கும் நாற்றம் என்றாகி இருக்கிறது. ஒதுக்கப்படுவதும் ஏற்கப்படுவதும் கூட கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்தது. தான் உணவாக ஏற்றுக்கொண்ட ஒன்று கிடைக்காமல் போனது என்றானபின் வேறு ஏதோ ஒன்றைத் தன் உணவுப்பட்டியலில் எடுத்துக்கொள்கிறது உயிர். கொஞ்சம் தத்துவார்த்தமாக சொல்வதானால் அழகில்லை, அருவருப்பு, அசுத்தம் இப்படிப்பட்ட வார்த்தைகள் படைப்பில் இல்லை. கழிவுகள் எல்லாமே உணவாகிப்போகும் எனும்போது; ஏன் நீரில் கலந்திருக்கும் கழிவுகளை அவற்றை உண்ணும், உறிஞ்சும் உயிரினங்களை வளர்த்து நீக்கக்கூடாது? இயற்கை மிக மிக நேர்த்தியாக தன்னைக் கட்டமைத்து இருக்கிறது. கழிவுகளை இயற்கையின் வசம் விட்டு மறுசுழற்சி செய்வது தான் சரியான அணுகுமுறையே தவிர அதைத் தனிமைப்படுத்தி சேர்த்து வைப்பதெல்லாம் மடத்தனமே.

நடைமுறை கழிவு மேலாண்மை முறைகளில் ‘நிலத்தில் நிரப்புதல்’ (Land Fills) என்பது இராணுவம் தொடர்பான இடர்பாடுகளைத் தரும் கழிவுகளும், கதிர்வீச்சுக் கழிவுகளும் பாதுகாப்பாக பூமிக்கு அடியில் சேமிக்கப்படுவதாகும். நிலத்தடியில் உள்ள மிகவும் ஆழமான குழிகளுக்குள் பல்வேறு வேதிப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து குறுக்கு வினையில் ஈடுபடவிடாமல் மிக அதிக அளவில் கதிர்வீசும் திறன்கொண்ட கழிவுகள் தனித்தனியே சேமிக்கப்படுகின்றன. பின்னர் இக்குழிகள் காற்றும் நீரும் புகமுடியாத படிக்கு களிமண் கொண்டு மூடப்படுகின்றன. குழியினுள் ஏதாவது கசிவு ஏற்பட்டால் அதைச் சீர்செய்வதற்குக் கால்வாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து இக்குழிகள் கண்காணிக்கப்படுகிறது. ‘ஆழ்க்கிணறு பாய்ச்சல்’ (Deep Well Injection) முறையில் துகள்கள், துளைகள் கொண்ட மண்பரப்புடைய பூமியின் மிக ஆழத்துள், நிலத்தடி நீருக்கும் கீழே ஆழக்கிணறுகள் தோண்டப்பட்டு இடர்பாடுகள் தரும் திரவக்கழிவுகள் செலுத்தப்படுகின்றன. இவை மண்ணிலுள்ள துகள்கள் மற்றும் துளைகட்குள் நுழைந்து காலம் காலமாகத் தனிமைப் படுத்தப்பட்டு அப்படியே இருக்கும். ‘மேற்பரப்பில் மூடிவைத்தல்’ (Surface Impoundments) முறையில் தரையில் சிறுகுளங்கள் வெட்டப்பட்டு அவற்றினுள் சிறிதளவே வேதியக் கழிவுகளைக் கொண்ட ஏராளமான திரவக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. குளத்தின் தரைப்பகுதி நீர்க்கசிவு ஏற்படாவண்ணம் நன்கு பூசப்பட்டுவிடுவதால், நீர்க்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படும்போது, நீர் ஆவியாகிவிடும்; திடக்கழிவுகள் தரைப்பரப்பில் தொடர்ந்து படிந்துவிடும்.

lake 600

‘எரித்து சாம்பலாக்கல்’ (Incineration) முறையில் மனித உடல் கழிவுகள், தூக்கி எறியப்படும் மருந்துகள், நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள், இரத்தம், சீழ், விலங்குகளின் கழிவுகள், நுண்ணுயிரியல் மற்றும் உயிரிய தொழில்நுட்பக் கழிவுகள் போன்ற இடர்ப்பாடு தரும் உயிரிய மருத்துவக் கழிவுகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. ‘உயிரியத் தீர்வு (Bioremediation) முறையில் இயற்கையிலேயே காணப்படும் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள், கன உலோகங்கள் போன்ற கழிவுகளைச் சிதைக்கவோ அல்லது உறிஞ்சிக்கொள்ளவோ அல்லது அதன் நச்சுத்தன்மையைக் குறைக்கவோ செய்கின்றன. தாவரத்தீர்வு முறையாக பல தாவரங்கள் மாசுக்களை ஒற்றி எடுத்துக்கொள்ள/ உறிஞ்சிக்கொள்ள பயன்படுகின்றன. மரபுப் பொறியியல் முறை மூலம் தூண்டப்படும் நுண்ணுயிரிகள் (Genetically Engineered Micro Organism) ஏராளமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு தீங்குதரும் அணுக்கதிர்களையும், பாதரசம், குரோமியம், காட்மியம் போன்ற கன உலோகங்களையும் நீக்க பயன்படுத்தப்படுகின்றன. ஜிப்ரல்லா பியூசேரியம் (Gibberella Fusarium) என்ற தாவரத்தின் மூலம் சயனைடுகள் சிதைக்கப்பட்டு தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன. சூப்பர் பக் (Super Bug) என்று அழைக்கப்படும் சூடோமோனாஸ் (Pseudomonas) பாக்டீரியா பல்வேறு தீங்கு தரும் கூட்டுப்பொருட்களையும், எண்ணெய்க் கழிவுகளையும் சிதைக்கின்றன.

உயிரினங்கள் தனக்குத் தேவையான புரதம், நியூக்ளிக் அமிலத்தைத் தயாரிக்கத் தேவையான முக்கிய தனிமம் நைட்ரஜன். வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் இருந்தாலும் அவை அம்மோனியா, அமினோ அமிலங்கள் அல்லது நைட்ரேட்டுகளாக மாற்றப்படாதவரை உயிர்கள் நேரிடையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. ‘நைட்ரஜன் நிலைநிறுத்தப்படுதலில்’ அஸோட்டோபாக்டர், ரைசோபியம் (வேர்முண்டு பாக்டீரியா), நீலப்பச்சைப் பாசிகளான ஆசிலட்டோலரியா, அனபீனா, நாஸ்டாக் வகை உயிரினங்களும்; ‘அம்மோனியாவை நிறுத்துவதில்’ பாசில்லஸ், ரமோஸஸ் வகை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற உயிரினங்களும்; ‘நைட்ரேட்டாதலில்’ நைட்ரோசோமோனாஸ், நைட்ரோபாக்டர் வகையான உயிர்களும்; ‘நைட்ரஜன் வெளியேற்றலில்’ சூடோமோனாஸ் என்ற உயிரினமும் பங்கெடுக்கிறன. மேலும் பாக்டீரியாக்கள் கார்பன், ஆக்சிஜன், மற்றும் சல்பர் போன்ற தனிமங்களின் சுழற்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இறந்த தாவர மற்றும் விலங்குகளின் உடலில் உள்ள சிக்கலான புரதங்களை அம்மோனியா, நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகளாக மாற்றுகின்றன. பாக்டீரியாக்கள் உயிரியல் துப்புரவாளர்களாகச் செயல்பட்டு கரிமச் சேர்மங்களை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது கார்பன் மூலக்கூறுகள், கரியமில வாயுவாக மாற்றம் அடைவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. விண்வெளிப் பயணங்களில் வெளியிடப்படும் கரியமில வாயு, பிற கழிவுகளை நீக்கவும் மற்றும் சிறுநீரை சிதைக்கவும் குளோரெல்லா பைரெனோய்டோஸோ எனும் பாசி பயன்படுத்தப்படுகிறது.

ஸ்டெப்ரோமைசிஸ் கிரேசியஸ், பேசில்லஸ் சப்டிலிஸ் பாக்டீரியாக்கள் ‘ஸ்டெப்ரோ மைசின் பாசிட்ராசின்’ என்ற எதிர்மருந்தின் உற்பத்தியிலும்; பெனிசிலியம் நொட்டேட்டம், பெனிசிலியம் கிரைசோஜீனம் பாக்டீரியாக்கள் ‘பெனிசிலின்’ என்ற எதிர்மருந்தின் உற்பத்தியில் பயன்படுகிறது. பாசில்லஸ் மெகாதீரியம் என்ற பாக்டீரியா தேயிலை, புகையிலை, காப்பிக் கொட்டைகள், கோக்கோ ஆகியவற்றிற்கு ‘நொதித்தலின் மூலம் நறுமணத்தைக்’ கொடுக்கிறது. பேசில்லஸ் லேக்டிஸ் என்ற லாக்டிக் அமில பாக்டீரியா ‘பாலைத் தயிராக’ மாற்றுகிறது. ஆசட்டோபாக்டர் அசெட்டி என்ற பாக்டீரியா நொதித்தல் செயலால் ‘சர்க்கரைக் கரைசலிலிருந்து வினிகரைத்’ தயாரிக்கிறது. கிலாஸ்டிரிடியம் அசட்டோ பூட்டிலிக்கம் என்ற பாக்டீரியா ‘சர்க்கரை பாகிலிருந்து ஆல்கஹால் மற்றும் மீத்தைல் ஆல்கஹால்’ உற்பத்தி செய்கிறது. ஆஸ்பெர்ஜில்லஸ் நைகர் என்ற பூஞ்சை ‘நொதித்தலின் மூலம் ஆக்சாலிக் அமிலத்தை’ உற்பத்தி செய்கிறது. சாக்கடலுக்கு அடியில் உப்பை உணவாக உட்கொள்ளும் ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம், ட்யூனாலைலா எனும் நுண்ணுயிர்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளைத் தாமாக உற்பத்தி செய்து உணவைப் பெறுகின்றன. ஈஸ்ட், பாக்டீரியா மற்றும் சில நுண்ணுயிர்கள் ஆக்சிஜன் அற்ற நிலையில் எடுத்துக்கொள்ளும் உணவிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன.

ஒரு உயிரின் வாழ்க்கைச் சூழல் இமயமலையின் உச்சியில் இருக்கிறதா? தார் பாலைவனத்தின் மேற்பரப்பில் இருக்கிறதா? இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் இருக்கிறதா? எங்கு இருந்தாலும்; இயற்கை சூழலுக்கு ஏற்ப உயிர்களை தகவமைத்துக்கொள்ள அனுமதித்து இருக்கிறது. கற்பனைக்கும் எட்டாத அளவிலும், வகையிலும் நுண்ணுயிர்கள் பூமியில் வாழ்கின்றன. படைப்பில் அவசியமற்றது என்று எதுவுமே இல்லை. பரிணாமத்தின் தொடக்க கால உயிரினங்களாக இருப்பதால், அவை தான் பரிணாமத்தின் அடுத்த நிலை உயிர்களுக்கு உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கின்றன.

நீரை மின்னாற்பகுத்தலின் மூலம் 20000 சென்டிகிரேடு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தும்போது தனித்தனி தனிமங்களாக பிரிந்துவிடுகிறது என்கிறது அறிவியல். மரங்களும் சுவாசத்திற்கு ஆக்சிஜனையே எடுத்துக்கொள்கின்றன. மரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதாக இருந்தால் அது காற்று வெளியிலிருந்து பெற முயலாது. ஒன்று தேவையானது என்றான போதே பரிணாம‌ம் நாளடைவில் அதை சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய தகவமைப்பை உருவாக்கியிருக்கும். மரங்கள் தன் உணவு உற்பத்திக்குத் தேவையான ஹைட்ரஜனை நீரிலிருந்து எடுத்துக்கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றிலிருந்து கார்பனை எடுத்துக்கொண்டு எஞ்சிய ஆக்சிஜனை வெளியிட்டு விடுகிறது. மரம் எவ்வளவு வெப்பத்தை செலவிடுகிறது, நீரிலிருந்து ஹைட்ரஜனை, கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றிலிருந்து கார்பனை பிரித்து எடுத்துக்கொள்ள?

நீர்வாழ் உயிரினங்கள் நீரில் உள்ள ஆக்சிஸனை எடுத்துக்கொண்டு எஞ்சிய ஹைட்ரஜனைக் காற்றுக்குமிழ்களாக வெளியிடுகிறன. கடல்வாழ் உயிரினங்கள் எவ்வளவு வெப்பத்தை செலவிடுகின்றன, நீரிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து எடுத்துக்கொள்ள? சிறுவயதில் மீன்தொட்டியில் ஒவ்வொரு முறை தண்ணீர் மாற்றும் போதும் நீர் காய்ந்து போன கண்ணாடியின் ஓரங்களைக் கடுப்புடன் தேய்த்தெடுத்த ஞாபகம் இன்னும் அழியாமல் இருக்கிறது. அவ்வளவு வேகத்தில் நீர் புற வெப்பநிலையால் ஆவியாகிப் போய்விடுவதற்கு வாய்ப்பே இல்லை. நீர் மூலக்கூறுகளுக்கிடையேயே சர்க்கரை மூலக்கூறு அளவில் மாற்றமேயில்லாமல் கலக்கக்கூடியதாகும் எனும்போது வாயு நிலையில் அதன் இடைவெளிகளை மேலும் பல மூலக்கூறுகள் நிரப்பவே செய்யும். இயற்கையான ஒரு சூழலில், ஒரு சேர்மத்தின் மூலக்கூறு சமன்பாடு அதை நீர்மமாக செயல்பட வைக்கும்போது; அந்த நீர்மமானது வாயுநிலையை ஏற்கும்போது கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும். மாற்றத்தைக் கொண்டிருக்கக் கூடியதான ஒன்று மாற்றமேயில்லாமல் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட ஒன்றாக மாறி நிற்காது. அது இவ்விதம் மாறாத போது, இது அவ்விதம் ஆகாது. எந்த ஒரு தனிமமும் இன்னொரு தனிமமாக மாறக் கூடியதாக கூட இயற்கை தன்னைக் கட்டமைத்துக்கொண்டு இருக்கலாம். நிரூபிக்கப்படவில்லை என்பதற்காக அது நிஜமாக இருக்காது என்று மறுக்க முடியாது.

வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயு உயிரின உலகத்திற்கு அதாவது பசுந்தாவரங்களுக்குள் ஒளிச்சேர்க்கை மூலம் கார்போஹைட்ரேட்டுகள் (உணவு) தயாரிப்பதற்காக நுழைகிறது. தாவர உண்ணிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் சிறிய, பெரிய ஊன் உண்ணிகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு உணவூட்ட நிலையிலும் சுவாசச் செயல்பாடுகள் கரியமில வாயுவை வளிமண்டலத்திற்குத் திருப்பி அனுப்புகின்றன. இறந்த கரிமப்பொருள்களின் சிதைவு, படிம எரிபொருள்கள் எரிதல் மூலமாகவும் கரியமில வாயு வளிமண்டலத்திற்குத் திரும்புகிறது. எல்லா உயிரினங்களும் கார்பன் அணுக்களால் கட்டமைப்பு ஆனவையாக இருக்கிறது. இயற்கையின் எந்த ஒரு கூறும் சுழ‌ற்சிக்கு உட்படாமல் அப்படியே இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. இங்கு எதுவுமே தீர்ந்து போகாது; காரணம் எதுவும் செலவாகாது. ஒரு துளி நீரும் கூட இந்தப் பிரபஞ்சத்தில் புதிதாக வெளியிருந்து வந்து சேர்வதில்லை/ பிறப்பதில்லை. அக்காலத்திலும் நீர் நிலைகள் இருந்தன; மக்கள் தங்களின் தேவைகளுக்கு அவைகளைத் தான் நாடினர். நீரியல் சுழற்சி என்பது பிரபஞ்ச விதிகளுள் ஒன்றானது என்றானபோதே, என்றோ ஒருவர் வாய் கொப்பளித்த நீர் ஒருநாள் குடிநீராகும் என்ற உண்மை விளங்கும். இந்த பூமி உயிர் தோற்றத்திலிருந்து எண்ணிடங்காத கோடி உயிர்களை தன் கருவில் சுமந்து இருக்கிறது. அவைகள் உண்டதில் எஞ்சியதும், உருமாறி மலமானதும் இங்கே தான் இரண்டறக் கலந்திருக்க வேண்டும். வீழும் மழைத்துளி தரையில் விழும் முன்னே பிடித்து வைக்கப்படுவதில்லை. கோடான கோடி உயிர்களுக்கு இந்த பூமி வாழ்விடமாக இருக்கிறது. 11 நவம்பர் 2013 அன்று பாண்டிச்சேரியில் அந்த குறித்த மாமரத்தில் காய்த்த மாங்காய் தான் கடைசி; அதோடு தீர்ந்துவிட்டது என்று ஏதும் கணக்கு கிடையாது. பிறந்த எல்லா உயிர்க்கும் இங்கு இடமுண்டு, உணவும் உண்டு.

“ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
…………… வாழ உலகினில் பெய்திடாய்” - திருப்பாவை - 4
பொருள் : கடல் நீர் முழவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம்.

“கடல் நீர் முகந்த கமஞ்சூல் எழிலி………” - கார்நாற்பது - 33
பொருள் : கடல்நீரை மேகம் உட்கொள்கிறது.

“கார்என்று பேர்படைத்தாய் ககனத்(து) உறும்போது;
நீர் என்று பேர்படைத்தாய் நீன்நிலத்தில் உற்றதன்பின்;” - காலமேகப் புலவர்
பொருள் : ஆகாயத்தில் இருக்கும்போது இதற்கு மேகம் என்று பெயர். மழையாக பூமியில் விழுந்த பிறகு இதற்கு நீர் என்று பெயர்.

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று” - திருக்குறள் : வான்சிறப்பு - குறள் - 11
பொருள்:மழையால் உலகம் நிலைபெற்று வருவதால் மழையே அமிழ்தம் என்றுணர வேண்டும்.

பார்க்கும் அளவிற்கே பிரச்சனை பூதாகரமானதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை அப்படியே பூதாகரமானதாக இருந்துவிட்டாலும் அதற்குத் தீர்வும் அதே அளவில் இருக்க வேண்டும் என்று இல்லை. தண்ணீர் வியாபாரமாக்கப்பட்டுவிட்டது; தண்ணீர் அரசியலாக்கப்பட்டுவிட்டது; இவையாவும் அதன் உண்மைத் தன்மையை மறைத்துவிட்டன. இந்த தேசம் நீருக்காக அடித்துக்கொண்டு சாகக்கூடாது. தேவையே இயக்கத்தைத் தூண்டி விடுகிறது; ஆதனால் இயக்கம் தேவையை நோக்கியதாக இருக்கிறது. உயிர்த் தோற்றத்தையும், பரிணாமத்தையும் தொடங்கி வைத்தது மற்றவற்றிலிருந்து மாறுபட்டு செயல்பட்ட ஒன்றாகத் தான் இருக்கும். ‘இப்போது புலி புல்லைத் தின்னப்போகிறதா’ இல்லை ‘எனக்கான உணவு இல்லை’ என்று சொல்லி மடியப்போகிறதா? புலி நிச்சயமாகப் புல்லைத் தின்னும்; காரணம் அதைத் தான் இன்று பரிணாமம் என்ற பெயரில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஓர் இடத்தில் உயிர் வாழ்க்கை இருக்கிறது எனும்போதே வாழும் அவ்வுயிர் ஏதோ வளம் ஒன்றைப் பற்றி வாழ்கிறது என்பதையே குறிக்கிறது. இயற்கையை உணரும்போது நடப்பவை எல்லாம் சரியாக நடக்கிறது என்ற நம்பிக்கைப் பிறக்கிறது. இயற்கையை எல்லைக்குள் வைத்து மதிப்பிடாதீர்கள். நியதி என்பதும், எல்லை என்பதும் அடிப்படையில் வித்தியாசம் உள்ளது. இயற்கை நியதிக்கு உட்பட்டதாக இருக்கிறது; ஆனால் எல்லைக்குட்பட்டதாக இல்லை. நீ எவ்வளவு பெரிய முட்டாளாகவும் இரு, அதற்கு ஈடாக எந்த முட்டாள்தனத்தையும் கூட செய்துவிட்டுப் போ. இயற்கை தன் நிலையில் அதை சரிசெய்துவிடும். ஒன்றை அதன் இயல்பிலிருந்து மாற்றுவதற்குத் தான் முயற்சி தேவையே தவிர மீண்டும் அது தன் இயல்பிற்குத் திரும்ப முயற்சி தேவையில்லை. இயற்கையின் எந்தவொரு கூறையும் வரையறைக்குள் கொண்டு வந்து விட்டாலும் அதற்கு அடங்காததாக ஒன்றும் அதில் அடங்கி இருக்கிறது.

மேற்கோள் நூல்கள் : சமச்சீர் கல்வி புத்தகங்கள் : 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை மற்றும் 11 & 12.

- மு.நாகேந்திர பிரபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It