விஞ்ஞானம் என்பது என்ன? விஞ்ஞான அறிவு எவ்வாறு பெறப்படுகின்றது? என்பது விஞ்ஞானத்தின் மீதும் விஞ்ஞான தத்துவத்தின் மீதும் கேட்கப்படும் அடிப்படையான கேள்விகளாகும். விஞ்ஞான அறிவு என்பது விவரங்களிலிருந்தும், தரவுகளிலிருந்தும், பொருண்மைகளிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் பெறப்படும் அறிவாகும். விஞ்ஞானம் என்பது அனுபவ உண்மைகளிலிருந்து பெறப்படும் அறிவாகும் என்பது அறிவியல் தத்துவம் குறித்த பொதுவாக எல்லோராலும் கோட்பாடாகும். இது விஞ்ஞான துறையைச் சார்ந்த அறிஞர்களும் கூட இவ்வாறுதான் விளக்கம் கொடுப்பார்கள்.

நாம் புற உலகத்தை கண்ணால் பார்க்கின்றோம்; காதால் கேட்கின்றோம்; வாயால் சுவைக்கின்றோம்; மூக்கால் நுகர்கின்றோம்; உடலால் உணர்கின்றோம். இந்த அனைத்தும், பொருட்கள் புலன்களைப் பாதித்து நமது மூளையால் உணரும் அனுபவங்களாகும். ஆக புறவுலக பொருட்கள் குறித்த அறிவைப் பெறவேண்டுமானால் அவற்றின் நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நாம் உணரவேண்டும். அவ்வாறின்றி பொருட்கள் குறித்த அறிவைப் பெறவியலாது என்பதைதான் மேற்குறித்த விஞ்ஞான கண்ணோட்டம் உணர்த்துகின்றது. நேரடியாக பார்ப்பது, கேட்பது, தொடுவது போன்ற அனுபவங்களை மட்டும் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் கற்பனைகளையும், யூகங்களையும் விஞ்ஞானம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஆக விஞ்ஞான அறிவு என்பது பொருட்கள் குறித்த பொருண்மைகள், நிகழ்வுகள், அனுபவங்கள் மீது கட்டப்படும் கட்டிடம் ஆகும். இன்றளவும் இத்தகையக் கோட்பாடுதான் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆனால் பண்டைய கால விஞ்ஞானத்தின் அணுகுமுறை, கோட்பாடு என்பவை முற்றிலும் வேறானவையாக இருந்தது.

பண்டைய விஞ்ஞானத்தின் அடிப்படை

கிரேக்கர்கள் தங்களது சிந்தனைக்கான‌ வடிவமைப்புகளை சில அடிப்படையாக கோட்பாடுகளிலிருந்தோ அல்லது கொள்கைகளிலிருந்தோ பகுத்தாராய்வதன் மூலம் பெற்றார்கள்; தொகுத்தாராயும் முறை என்பது அவர்களுக்கு அறியாத ஒன்றாக இருந்தது எனலாம். பகுத்தாராய்வதும், தர்க்கஅறிவும் கொண்டதுதான் கிரேக்கத் தத்துவத்தின் சாரமாகத் திகழ்ந்தன‌.

இத்தகைய‌ பகுத்தாய்வு முறைமைக்கு வித்திட்டவர் பண்டைய‌ கிரேக்க விஞ்ஞானியும் தத்துவ அறிஞருமான‌ அரிஸ்டாடில் ஆவர். இவரது காலம் தொட்டு 17 ஆம் நூற்றாண்டுவரை பகுத்தாய்வு முறைமைதான் அனைத்து விஞ்ஞான துறைகளிலும் பெரும் செல்வாக்குச் செலுத்திவந்தன. பண்டைய விஞ்ஞானம் என்பது பகுப்பாய்வு முறையின் மீது எழுப்பப்பட்டது என்றால் அது மிகையாகாது.

மரபு விஞ்ஞானத்தின் அடிப்படைகள்

பருப்பொருட்களுக்கிடையே செயல்படும் விசையைப் பற்றிய துல்லியமான வரையறை செய்தவர் நியூட்டன் ஆவர். இந்த விசையானது, இருபொருட்களுக்கும் இடையே உள்ள தூரத்திற்கும் அவற்றின் நிறைக்கும் உள்ள சமன்பாடாகும். அதுதான் ஈர்ப்புவிசை எனப்படுகின்றது.

பெளதீக நிகழ்வுகள் அனைத்தும், பொருட்களின் பரஸ்பர ஈர்ப்பினால் இயங்குகின்ற இயக்கமாக சுருக்கப்பட்டன. அதாவது ஈர்ப்பு விசையினால் நிறைப்புள்ளி மீதான விசையின் விளைவை துல்லியமான கணிதவியல் வடிவத்தில் வடிக்கும் பொருட்டு, நியூட்டன் முற்றிலும் புதிய கருத்தாக்கங்களையும் கணிதவியல் நுட்பங்களையும் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. அவை வகைநுண் கணிதம் எனப்பட்டது.

பருப்பொருட்களும் அவற்றிற்கிடையில் செயல்படும் விசையும் இறைவனால் உருவாக்கப்பட்டதாக கருதப்பட்டன. நியூட்டனும் இவ்வாறே நம்பினார். முதல் முடுக்கம் பெற்றப்பின் ஒழுங்குமுறையில் பிரபஞ்சம் இயங்கும். இத்தகைய ஒழுங்குமுறைக்குட்பட்ட இயக்கம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதே நியூட்டனின் பிரபஞ்சம் பற்றிய கருத்துரையாகும்.

நியூட்டனின் இயந்திரவியல் கொள்கை

துவக்கத்தில் பிரபஞ்சமானது இயக்கம் ஏதுமின்றி ஓய்வுநிலையில் இருந்தது. எல்லாப் பொருட்களும் இயக்கமற்றுதான் இருந்தன. முதல் முடுக்கம் பெற்றப்பின் பிரபஞ்சம் தானே சுயமாக இயங்கத் துவங்கியது. அதன் பிறகு எந்த தலையீடும் தேவையில்லை. இந்த‌ நியூட்டனின் இயந்திரவியல் கொள்கைதான் மரபுவழி இயற்பியலுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் வரைக்கும் இயற்கையியல் தத்துவங்களுக்கு ஓர் உறுதியான அடிப்படையைத் தந்தது.

நியூட்டனின் கருத்துப்படி, கடவுள் முதலில் பருப்பொருட்களையும் அவற்றிற்கிடையேயான விசைகளையும் அடிப்படை இயக்க விதிகளையும் படைத்தார். பிறகு, ஒட்டுமொத்த பிரபஞ்சமும், ஓர் இயந்திரம்போல, மாறாத‌ விதிகளால் தீர்மானிக்கப்பட்டு, இயங்கப்பட்டது. இன்னமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றது.

இயற்கை பற்றிய இயந்திரவியல் கண்ணோட்டத்தின்படி, இயற்கையின் இயக்கம் என்பது காரணகாரிய உடையதாகவும், கறாராகத் தீர்மானிக்கக் கூடிய தன்மையாக இருந்தது. இந்த வகையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரியுமானால் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை முழுமையான உறுதியுடன் முன்கூட்டியே சொல்லிவிடலாம் என்று முழுமையாக நம்பப்பட்டது.

நியூட்டனின் கொள்கைப்படி வெளியானது (Space) எப்பொழுதும் மாற்றமில்லாதது; நிரந்தரமானது. காலம் (Time) என்பது சார்பற்றது; சுயேச்சையானது. அவை இயற்கையோடும் உலகத்தோடும் எத்தகைய சார்பையோ அல்லது ஒட்டுறவையோ பெற்றிருக்கவில்லை என்பது இவரது தீர்மானகரமானக் கருத்து.

நியூட்டனின் இயந்திரவியல் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தது. பிரபஞ்சம் என்பதே நியூட்டனின் இயக்கவிதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிவருகின்றது என்று முழுமையாக நம்பப்பட்டது. இதையே முடிவான கொள்கைகளாகக் கொள்ளப்பட்டன. நியூட்டனின் இயக்கவியல் சமன்பாடுகள் மரபு வழி இயந்திரவியலுக்கு ஆதாரமானவை. அவை நிலைநிறுத்தப்பட்ட விதிகளாக கருதப்பட்டன.

நியூட்டனிய உலகக் கண்ணோட்டத்தின் பிரதான கருத்தாக்க‌ங்களாக விளங்கியவை: 1.சார்பற்ற வெளியும் காலமும், 2. அழிக்கவொண்ணா சிறிய திடமான துகள்கள், 3. கடுமையான காரண காரியங்களுடன் கூடிய இயற்கை நிகழ்வுகள், 4.இயற்கையை ஆய்வதற்கான புறநிலையான‌ அணுகுமுறை ஆகியனவாகும்.

மைக்கேல் பாரடே தாமிரக் கம்பிச் சுருளுக்கருகில் காந்தத் துண்டை நகரச் செய்தார். இதன்மூலம் மின்னோட்டத்தை ஏற்படுத்தினார். காந்த துண்டை நகரசெய்வது என்ற‌ இயந்திரவியல் வேலையை மின்னாற்றாலாக மாற்றிய செயல் விஞ்ஞானத்திலும் தொழிற்நுட்பத்திலும் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய‌து. இந்நிலையில் மின்சாரம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகளை நியூட்டனின் கொள்கைகளால் விளக்க முடியாமல் போனது.

மைக்கேல் பாரடே மின்சாரம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகளை நடைமுறையில் ஆராய்ந்து கொண்டிருந்த அதேவேளையில், இவருக்கு துணையாகவும் இணையாகவும் கோட்பாட்டு ரீதியில் ஒரேதிசையில் பயணித்தவர் கிளார்க் மாக்ஸ்வெல் ஆவர். இவரது கொள்கை அடிப்படையாக வைத்து, இறுதியில் முழுமையான மின்காந்தவியல் கொள்கை உருவாக்கப்பட்டது.

நியூட்டனின் கண்ணோட்டத்தில் விசைகள் தாம் செயல்படுகின்ற பொருட்களோடு மட்டுமே தொடர்பு கொண்டனவாக இருந்தன. தற்போது ‘விசை’ என்கிற கருத்தாக்கம் இருந்த இடத்தில் ‘விசைப்புலம்’ என்ற ஆழமான கருத்தாக்கம் இடம் பிடித்துக்கொண்டது. இக்கொள்கையின் வளர்ச்சிதான் ‘மின்சார இயக்கவியல்’ எனப்பட்டது. அதன்படி ஒளி என்பது விரைவாக மாறிக் கொண்டிருக்கின்ற, அலைவடிவங்களில் பயணிக்கின்ற ஒரு மின்காந்தப் புலம் மட்டுமே என்று உணர்ந்தறியப் பட்டது. இதன் மூலம் இவர்கள் நியூட்டனின் இயற்பியலைக் கடந்து சென்றனர்.

ஆனாலும் நியூட்டனின் இயந்திரவியல், இயற்பியலின் ஆதாரம் என்கிற தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டது என்பதையும் மறுக்க வியலாது. மேக்ஸ்வெல் தன்னுடைய முடிவுகளை இயந்திரவியல் வழியே விளக்குவதற்கு முற்பட்டார் என்பது உண்மைதான். இருந்த போதிலும் தன்னுடைய கொள்கையின் அடிப்படைக் கூறுகள் புலங்கள்தாம் என்பதையும் இயந்திரவியல் அமைப்புகள் அல்ல என்பதையும் உள்ளுணர்வாகக் கொண்டிருந்தார். இந்த‌ உண்மையை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐன்ஸ்டீன் தெளிவாகக் கண்டறிந்தார்.

நவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட‌ மாற்றங்களும்

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூட்டனின் இயற்பியல் உலகம் ஆட்டம் காணத் தொடங்கியது என்று கூறலாம். இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் இயற்பியல் ஒட்டுமொத்தமாக தீவிரமான மாற்றத்திற்குள்ளானது. நியூட்டனிய உலகக் கண்ணோட்டத்தின் பிரதான கருத்தாக்க‌ங்களான சார்பற்ற வெளியும் காலமும், அடிப்படைத் துகள்கள், கடுமையான காரண காரியங்களுடன் கூடிய இயற்கை நிகழ்வுகள், இயற்கையை ஆய்வதற்கான புறநிலையான‌ அணுகுமுறை போன்ற அனைத்து கோட்பாடுகளையும் தகர்த்தன என்று கூறப்படுகின்றது. இன்றைய விஞ்ஞானத் தத்துவமானது, குவாண்டம் சார்பியலின் தத்துவ அடித்தளத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்டது என்றால் அது மிகையாது.

இயற்கையின் உட்பொதிந்த ஒழுக்கமைப்பின்பால் ஐன்ஸ்டீன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இயற்பியலுக்கு ஒருங்கிணைந்த அடித்தளம் ஒன்றைக் கண்டுபிடிப்பதே அவருடைய அறிவியல் வாழ்க்கை முழுவதிலும் ஆழ்ந்ததோர் அக்கறையாக இருந்தது. மரபுவழி இயற்பியலில் இரண்டு தனித்தனிக் கொள்கைகளாக மின் இயக்கவியலும் இயந்திரவியலும் இருந்து வந்தன. இவற்றிற்கிடையே ஒரு பொதுவானதொரு ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். இந்தக் கட்டமைப்புதான் சார்பியல் சிறப்புக் கொள்கை என்றழைக்கப் படுகின்றது. இது மரபு வழி இயற்பியலின் வடிவமைப்பினை ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தியது எனலாம். அதே சமயத்தில், வெளி, காலம் பற்றிய மரபுவழி கருத்தாங்களுக்கும் ஒரு தீர்க்கமான மாற்றத்தினை ஏற்படுத்தினார்.

1905 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் வெளியிட்ட இரு கட்டுரைகள், அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தின. ஒன்று அவருடைய சார்பியல் சிறப்புக் கொள்கைகளாகும்; மற்றொன்று மின்காந்தக் கதிர்களைப் புதியதொரு கோணத்தில் ஆய்வதற்கு வழிவகுத்தது. அதுவே பின்னர், அணுவியல் நிகழ்வுகளை விள‌க்கும் கொள்கையான குவாண்டம் கொள்கையின் சிறப்பம்சமாக ஆனது என்று கூறுவது மிகப் பொருத்தமாக அமையும்.

1915 இல் ஐன்ஸ்டீன் சார்பியல் பொதுக் கொள்கைகளை முன்மொழிந்தார். இதை அவருடைய சிறப்புக் கொள்கையின் கட்டமைப்பு ஈர்ப்பு சக்தியை, பருப்பொருள் தம்மை பரஸ்பரம் ஈர்த்துக் கொள்ளும் சக்தியை, உள்ள‌டக்கும்படி விரிவாக்கப்பட்டது. சிறப்பு கொள்கைகள் எண்ணற்ற பரிசோதனைகளால் உறுதிப் படுத்தப்பட்ட போதிலும் பொதுகொள்கை தீர்மானகரமாக உறுதிபடுத்தப் படவில்லை என்றே சொல்லலாம்.

சார்பியல் கொள்கைப்படி வெளி என்பது முப்பரிமாணம் கொண்டதாகவோ காலம் தனித்துவமான ஒன்றாகவோ இல்லை. இவை இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட 'வெளி - காலம்' என்னும் நாற்பரிமாணத் தொடர் அமைப்பாகும். சார்பியல் கொள்கையின்படி காலத்தைத் தொடர்பு படுத்தாமல் வெளியைப் பற்றியோ, வெளியைத் தொடர்புபடுத்தாமல் காலத்தைப் பற்றியோ இயலாது.

பார்க்கக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்துகொண்டிருக்கும் வெவ்வேறு பார்வையாளர்கள் அந்நிகழ்வுகளை வெவ்வேறு காலக் கிரமப்படி வரிசைப் படுத்துவார்கள். ஒரே சமயத்தில் நிகழ்ந்தனவாக ஒரு பார்வையாள‌ரின் கண்களுக்குட் பட்ட இரு நிகழ்வுகள் வேறு பார்வையாளர்களுக்கு வெவ்வேறு காலக் கிரமங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளாகத் தோன்றலாம்.

பொருண்மை என்பது ஆற்றலின் வடிவம் மட்டுமே என்பது உணரப்பட்டது. ஆற்றலுக்கும் பொருண்மையின் நிறைக்கும் உள்ள தொடர்பு E=mc2 என்கிற புகழ்பெற்ற சூத்திரத்தில் வரையறுக்கப்படுகிறது. இங்கு ஒளியின் வேகம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒளியின் வேகத்தை ஒட்டிய திசை வேகத்தைக் கொண்ட இயற்கை நிகழ்வுகளை விவரிக்க வேண்டுமானால் சார்பியல் கொள்கையின் துணையுடன் தான் செய்யவேண்டும்.

பருப்பொருளின் இரட்டைப் பண்பு

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொதுவாக இரண்டு நிலைகளில் உள்ளன. 1) பொருள் 2) ஆற்றல் ஆகியனவாகும். பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது. ஒரு பொருளைப் பிளந்து கொண்டே சென்றால் கடைசியில் மிஞ்சக் கூடியது அணு மட்டுமே. அணுவைப் பிளக்க முடியாது என்று முதலில் அறிவியல் கண்டுபிடித்தது.

அணுவையும் பிளக்க முடியும். அதனுள்ளே உள்ள நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவைதாம் கடைசியான துகள்கள் என்று அந்த விதி மற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டது. நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவை எல்லாம் சரிதான். ஆனால் அவையும் இறுதியான‌ துகள்கள் அல்ல. அவற்றுக்குள்ளும் நுண் துகள்கள் உள்ளன என்று அந்த விதி மேலும் வளர்க்கப்பட்டு செழுமைப் படுத்தப்பட்டது.

இந்த விதியும் குவாண்டம் கொள்கையால் மேலும் மேம்படுத்தப்பட்டது. அதாவது குவாண்டம் கொள்கையானது ஒளியை, அலைப்பண்புடைய துகள்களாக, பொருளாக விளக்குகின்றது. குவாண்டம் கொள்கையின்படி மிகச்சிறிய துகள்கள் எனப்படுபவை திடப்பொருட்களாக இருக்கவில்லை. பருப்பொருளின் நுண்ணணுவியல் அலகுகள் மிகவும் சூக்குமமான அமைப்புகளாகவும் இரட்டைத் தன்மை கொண்டனவாகவும் உள்ளன. நாம் அவற்றை பார்க்கின்ற பார்வையைப் பொறுத்து சில சமயங்களில் துகள்களாகவும் சில சமயங்களில் அலைகளாகவும் தோன்றுகின்றன. இதே இரட்டைத்தன்மை மின்காந்த அலைகளாகவும் துகள்களாகவும் வடிவெடுக்கின்ற ஒளியினாலும் வெளிக்காட்டப் படுகின்றது.

பருப்பொருளின் இந்த இரட்டைப் பண்பு இதுவரை இயற்பியல் அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே ஒரே சமயத்தில் துகள்களாகவும் அலைகளாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும் ஒன்றாக இருப்பது இயற்பியல் துறைக்கு புதுமையாக இருந்தது. இந்த முரண்பாடுகள் கொவான் போன்ற புதிர்கள் எழுவதற்கு வழிவகுத்தன. இறுதியாக குவாண்டம் கொள்கையை வடிவமைப்பதில் நிறைவுற்றன. இது மேக்ஸ் பிளான்க் என்கிற விஞ்ஞானியின் கண்டுபிடிப்பால் சாத்தியமானது. அவர் வெப்ப ஆற்றல் தொடர்ச்சியாக வெளிப்படுவதில்லை என்றும் ஆற்றல் பொட்டலங்களாகவே வெளிப்படுகின்றன என்றும் கண்டறிந்தார். இத்தகைய ஆற்றல் பொட்டலங்களையே குவாண்டங்கள் என்றழைக்கப்பட்டன.

பருப்பொருள் ஒரு சமயத்தில் துகள்களாகவும், அலைகளாகவும் மாறிமாறி இயங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கு பருப்பொருள் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கின்றது என்ற பாரம்பரிய நம்பிக்கை கேள்விகுறியானது. இது ஒரு நிச்சயமற்ற தன்மையைக் காட்டியது. அவ்வாறு பருப்பொருளானது துகள்களாக இருப்பதற்கும் அலைகளாக இருப்பதற்கும் சாத்தியக்கூறுகள் மட்டுமே இருந்தன. ஆகவேதான் அவை ஒரே சமயத்தில் அலைகளாகவும் துகள்களாகவும் இருக்கின்றன. இவை கணித நிகழ்திறன் என்ற விதியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கின்றன என்று உணரப்பட்டன‌.

விஞ்ஞானத்தின் புதிய கருத்தோட்டங்கள்:

1. மரபுவழி இயந்திரவியல் விஞ்ஞானக் கருத்தோட்டத்தின்படி, முழுமையைப் பற்றிய‌ இயக்கவியல் அமைப்பினைப் புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், அத‌ன் பகுதிகளின் பண்புகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பகுதிகளைப் பற்றிய‌ அடிப்படைப் பண்புகள், அவை செயல்படக்கூடிய யுக்திகள் பற்றி தெரிந்து கொண்டால் முழுமையின் இயக்கவியலை வகுத்துவிடலாம் என்பது அதன் கருத்தாகும்.

புதிய கருத்தோட்டத்தின்படி முழுமையின் இயக்கவியல் மூலமாகத்தான் பகுதிகளின் பண்புகளை முழுமையையாகப் புரிந்து கொள்ள இயலும். முழுமையினுடைய இயக்கவியலைப் புரிந்து கொண்டுவிட்டால் பின்னர் அதன் பகுதிகளின் பண்புகளையும் செயல்பாட்டு படிவங்களையும் வகுக்க இயலும். முழுமைக்கும் அங்கங்களுக்கும் இடையே விஞ்ஞன ரீதியான இந்த உறவுமுறையில் ஏற்பட்ட‌ மாற்றமானது இயற்பியலில் குவாண்டம் கொள்கை உருவானபோது ஏற்பட்டதாகும்.

2. மரபு இயற்பியலின்படி பேரண்டமானது ஓர் இயந்திரமாக உருவகம் செய்து வந்ததுள்ளதைப் பார்த்தோம். இத்தகைய இயந்திரக் கண்ணோட்டமானது, பேரண்டத்தினை பகுதிகளாகப் பிரிக்கின்றது. பகுதிகளை தனிப்பட்ட முறையில் வரையறுக்கின்றது. அதன் இயக்கத்தை தனிமைப்படுத்திவிடுகின்றது. பேரண்ட‌ முழுமையின் உள்ளார்ந்து இணைக்கப்பட்டுள்ள உறவுகளைத் துண்டிக்கின்றது. இத்தகைய பகுதிகளைத்தான் பருப்பொருட்கள் என்று கருதிக் கொள்கிறோம்.

ஆனால் புதிய இயற்பியலானது இந்தக் கண்ணோட்டத்தை மாற்றி யமைத்தது. இதன்படி பிரபஞ்சம் என்பது உள்ளார்ந்து இணைக்கப்பட்டதோர் இயக்கபூர்வமான முழுமை என்கிற உருவகமாகக் காணப்படுகிறது. அதனுடைய அங்கங்கள் எல்லாம் உள்ளார்ந்த சார்புதன்மை கொண்டவையாகும் என புதிய இயற்பியல் கொள்கைக் கூறுகின்றது.

3. பழைய கருத்தோட்டத்தின்படி அடிப்படையான வடிவமைப்புகள் இருப்பதை கருதி அவை தமக்குள் செயல்படுவதற்கான விசைகளும் யுக்திகளும் வகுத்து அதன் வழி செயல்முறை என்கிற கருத்தாக்கம் எழுந்தது. புதிய கருத்தோட்டத்தின்படி செயல்முறை தலையாயது என்றும் ஒவ்வொரு வடிவமைப்பும் உள்ளார்ந்ததொரு செயல்முறையின் வெளிப்பாடே என்றும் எண்ணுகிறோம்.

விஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை

விஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை; பலமுறை மாறியுள்ளது; தலையாய விஞ்ஞானப் புரட்சிகள் நிகழ்ந்த போதெல்லாம் விஞ்ஞானத்தின் அடித்தளம் சரிந்து வந்துள்ளது. விஞ்ஞான வரலாறு முழுமையுமே மீண்டும் மீண்டும் அறிவினுடைய அடித்தளம் மாறிக்கொண்டே வந்துள்ளது. சில சமயங்களில் முற்றாக நொறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தின் தற்போதைய புதிய கருத்தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அத்தகையதொரு உணர்வையே ஏற்படுத்துகின்றது.

இயற்கையானது மனிதப் பார்வையாளனையும் ஒருங்கிணைந்ததோர் உட்கூறாக உள்ளடக்கிய உள்ளார்ந்த இணைப்புக் கொண்ட உறவுகளின் இயக்கப் பூர்வமான வலைப் பின்னல் என்று கருதப்படுகிறது. இந்த வலைப்பின்னலின் ஒவ்வொரு அங்கமும் ஏனைய அங்கங்களைப் போலவே உறுதியான வடிவங்கள்; இக்கருத்தின்படி இயற்கை நிகழ்வுகள் எந்த ஓர் அங்கத்திற்கும் ஏனைய அங்கங்களைக் காட்டிலும் அடிப்படையானது என்கிற கருத்திற்கு இடமளிக்காத வகையில் கருத்தாக்கங்களின் வலைப்பின்னல் என்கிற அடிப்படையில் விவரிக்கப்படுகின்ற‌ன.

விஞ்ஞானத்தின் முற்றமுடிந்த உண்மை என்று ஒன்று உண்டா?

விஞ்ஞானத்தில் முற்றும் முடிந்த உண்மை என்று எதுவும் இல்லை. விஞ்ஞான விதிகள் எல்லாம் குறைபாடுடையனவாகவும், தோராயமானவையாகவுமே இருக்கின்றன. இத்தகைய தோராயமான விளக்கங்கள் அடுத்தடுத்த முயற்சிகளில் காணப்படும் அடுத்தடுத்த முன்னேற்றங்களால் செழுமைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் அந்த மாதிரி முன்னேற்றங்கள் பாரதூரமான மாற்றங்களைக் கொண்டுவருவதில்லை.

ஒவ்வொரு புதிய கொள்கையும் முந்தைய கொள்கையோடு நன்கு வரையறுக்கப்பட்ட விதத்தில்தான் தொடர்புறுத்தப்படுகின்றது. புதிய கொள்கை பழையக் கொள்கையை முற்றிலும் மறுத்தலிப்பதில்லை. அதில் நிலவும் தோராயத்தன்மைச் சற்றே செழுமைப் படுத்தப்படுகின்றது. அவ்வளவுதான். எடுத்துக்காட்டாக குவாண்டம் இயந்திரவியல், நியூட்டனின் இயந்திரவியலை முழுமையாகத் தவறென்று நிரூபித்துவிடவில்லை. நியூட்டன் கால இயற்பியலோர் எல்லைக்குட்பட்டது என்று மட்டுமே நிறுவியுள்ளது.

நியூட்டனின் கண்டுபிடிப்பு பேரண்டத்தின் சீரான ஒழுங்கமைப்பைப் பற்றி கூறுகின்றது. இந்த அடிப்படையைக் குவாண்டம் இயந்திரவியலிலோ சார்பியல் கொள்கையிலோ மறுதலித்து விடவில்லை. மாறாக உறுதிப்படுத்தப் பட்டு புதிய கொள்கைகளாக வளர்த்தெடுக்கப்படுகின்றன.

பேரண்டத்தின் அடிப்படையான ஒற்றை நிலை மற்றும் உள்ளார்ந்த சார்புத் தன்மை, அதனுடைய இயற்கை நிகழ்வுகளின் உள்ளார்ந்த இயக்கப் பூர்வமானதன்மை ஆகிய நவீன இயற்பியலின் இவ்விரு மாபெரும் மையக் கருத்துக்கள் எதிர்கால ஆய்வுகளால் என்றுமே மறுத்தலிக்கப்பட மாட்டா.

திடப்பொருள் குறித்த மரபுரீதியான கருத்தாக்கம் உடைந்ததா?

குவாண்டம் கொள்கையானது திடப்பொருள் குறித்த மரபுரீதியான கருத்தாக்கங்களை உடைத்தெறிந்தது. மரபுவழியான இயற்பியல் 'திடமான பருப்பொருள்' என்ற தீர்மானகரமான கொள்கையை வரையறுத்தது. ஆனால் நவீன இயற்பியல் 'சாத்தியக் கூறுகளுள்ள அலை' போன்ற கொள்கையை உருவாக்கியுள்ளது. உலகம் என்பது தனித்துவமான 'அடிப்படைக் கட்டுமானக் கற்'களால் ஆனது என்பதை இது மறுக்கின்றது.

அணுகருவிற்குள் செய்யப்பட்ட பரிசோதனைகளின் விளைவாக ஏராளமான நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது அணுவின் அடிப்படைத்துகள் என்ற கொள்கையை நீர்த்துப் போகவைத்தது. இதை தொடர்ந்து அணுக்கரு நிகழ்வுகளை ஆராய குவாண்டம் கொள்கை போதுமானதாக இல்லை என்று உணர்ந்த விஞ்ஞானிகள், சார்பியல் கொள்கையை துணைக்கழைத்தனர்.

குவாண்டம் கொள்கையானது அணுக்கருவின் வடிவமைப்பைப் பற்றியும் அணுக்கருவிலுள்ள துகள்களுக்கிடையேயான உள்வினைகள் குறித்து ஆராயப் பயன்பட்டது. அதே போல அணுக்கரு விசையின் தன்மையைப் பற்றியும் அதன் சிக்கல் மிகுந்த வடிவத்தைப் பற்றியும் ஆராய சார்பியல் கொள்கை பயன்பட்டது. இவ்வாறாக குவாண்டம் கொள்கையும் சார்பியல் கொள்கையும் சேர்ந்து துகள்கள் குறித்து ஒரு முழுமையான கொள்கையாக உருவாக்கப்பட்டுள்ளன.

பிரபஞ்சம் முழுமையுமே பிரிக்க வோண்ணா ஆற்றல் படிவங்களாலான இயக்க பூர்வமானதொரு வலைபோல காட்சியளிக்கிறது. அவை அனைத்தும் பருப்பொருளின் அடிப்படையான ஒற்றை நிலையையும் உள்ளார்ந்த இயக்கவியல் பண்பையும் பிரபலிக்கின்றன. எனவே துகள்களை தனித்துவமான தொரு அமைப்பாக காணமுடியாது. முழுமையோடு ஒருங்கிணக்கப் பட்டதொரு பகுதியாகவே புரிந்து கொள்ளக் கூடும்.

இயற்கையை புறநிலையாக மட்டும் விளக்குவது இனி சாத்தியமா?

புறநிலையில் நிகழும் ஒரு நிகழ்வை அல்லது இருக்கும் பொருளை நோக்கும் வேறுபட்ட தனிநபர்கள் வெவ்வேறாகப் பார்க்கின்றோம், உணர்கின்றோம். புறநிலை என்பது ஒன்றுதான். புறநிகழ்வு என்பது ஒன்றுதான். ஆனால் அதை உற்று நோக்கும் எல்லோரும் ஒரே மாதிரியாக அந்த ஒன்றாக அப்படியே உணர்வதில்லை. உள்வாங்கிக் கொள்வதில்லை. இதற்கான காரணம் என்னவென்றால் அவர்களின் நோக்கம், விருப்பம், கவனம், திறன் ஆகிய அகநிலை அம்சங்கள் வேறுபட்டிருப்பதுதான். ஆக வேறுபட்ட அகநிலை அம்சங்கள் உடைய மனிதர்கள் புறநிலையை ஒரே மாதிரியாக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதிலிருந்து புலனாகின்றது.

அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் சில நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். ஒருவரது உணர்ந்தறியும் தன்மையானது அப்பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நாம் அனைவரும் வெவ்வேறு வகையில் நம்பிக்கைகள் கொண்டிருப்பதால் நமக்கு இவையாவும் வெவ்வேறாக உணர்ந்தறியப் படுகின்றன. சான்றாக, கற்கால மனிதன் ஒரு மரத்தைப் பார்ப்பதாக கற்பனைச் செய்துகொள்வோம்; அவரோடு உங்களது உணர்வை ஒப்பிட்டுப் பாருங்கள்; மேலும் ஒரு பயிற்சி பெற்ற தாவரவியல் அல்லது உயிரியல் விஞ்ஞானி உணர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும்.

நிச்சயமாக, இம்மூன்று நபர்களும் மூன்று விதமாக விவரிப்பதை எளிதில் அறியமுடியும். இத்தகைய வேறுபாடுகள் ஒருவேளை உணர்தலில் உள்ள வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றன; ஒருவரின் உணர்வுகள் அவர் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கையின் பாற்பட்டதாகும். அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பின்னணியில் அவரது உணர்வுகள் வடிவமைக்கப்படுகின்றன என்றால் அது மிகையாகாது. ஆக, அனைவரது உணர்வுகள் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய கருத்துரையானது, புறநிலையாக நின்று ஆராயும் அறிவியல் அணுகுமுறையை முற்றிலும் புறந்தள்ளிவிடுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

குவாண்டம் இயற்பியலின்படி பார்ப்போனையும் பார்க்கப்படும் பொருளையும் பிரிக்கமுடியாது; இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆக குவாண்டம் இயற்பியலானது அகநிலையும் புறநிலையும் இணைத்து விடுகின்றது. இவ்வாறாக‌ ஆய்வாளன் என்பவன் ஆராய்ச்சிச் செயல்முறைகள் என்கிற சங்கிலித் தொடரிலிருந்து பிரித்தெடுக்க இயலாவண்ணம் இறுதிப் பிணைப்பாக இணைந்துவிடுகின்றான்.

இயற்கையை புறநிலையில் மட்டும் நின்று விவரிப்பதும் விளக்குவதும் இனி இயலாத காரியமாகிவிட்டது. இதுவரை ஆராய்ச்சியாளனுக்கும் ஆராயப்படுகிற உலகினுக்கும் இடையே ஒரு இணைக்கமுடியாத பிரிவினையைக் கடைபிடிக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை குவாண்டம் அணுவியல் ஆய்வுகளில் இனி கையாளவியலாது என்று கூறப்படுகின்றது. இவ்வாறாக விஞ்ஞான ஆராய்ச்சியில் அகநிலையும் புறநிலையும் இணைந்து நிற்கின்றன.

Pin It