கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- வி.சீனிவாசன்
- பிரிவு: புவி அறிவியல்
இன்று திரையரங்குகளில் நாம் பெரும்பாலும் இரண்டு பரிமாணத்தில் திரைப்படம் காண்கிறோம். சில திரைப்படங்கள் முப்பரிமாணத்தில் வெளியாகின்றன. இன்னும் முன்னேறி, நாம் அதிகபட்சம் ஏழு பரிமாணத் திரைப்படங்களை சில நாடுகளில் பார்க்கிறோம்.
ஆனால் உண்மையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு முப்பரிமாணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?
இதையும் தாண்டி இன்று அறிவியல் உலகில் ஐந்து பரிமாணம் வரை விவரிக்கின்றனர். இதைத் தான் இன்டெர்ஸ்டெல்லர் படத்தினில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்கள் சொல்லி இருப்பார். அந்த ஐந்து பரிமாணங்கள் என்பவை யாவை, அவை எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன போன்ற கேள்விகளுக்கு இங்கு விடைகளைக் காண்போம்
நீங்கள் இன்டெர்ஸ்டெல்லர் படம் பார்த்திருப்பீர்களானால், அதில் ஆங்காங்கே, எதிர்கால மனிதர்கள் ஐந்து பரிமாணம் மூலம் அந்தக் குழுவை தொடர்பு கொள்வதாய் வரும். அப்படத்தின் உச்சகட்ட காட்சியில் Cooper மற்றும் ரோபோட் TARS உடன் gargantua கருந்துளையினுள் விழுந்து விடுவார். அதன் பின் அவர் ஒரு ஐந்து பரிமாணப் பகுதிக்குள் கண் விழிப்பார். அந்த ஐந்து பரிமாணம் மூலம் இறந்த காலத்தில் உள்ள தன்னையும், தன மகளையும் காண்பார் மற்றும் தன மகளுடன் ஈர்ப்பு விசையின் மூலம் தொடர்பு கொள்வார். இது எப்படி சாத்தியம் என உங்களுக்குத் தோன்றினால் தொடர்ந்து படியுங்கள்.
பரிமாணங்களைப் பற்றி நாம் கலந்துரையாடுவதற்கு முன்பு நாம் இந்தப் பிரபஞ்சத்தின் பிரதான அளவான "புள்ளியை" எடுத்துக் கொள்வோம். ஓர் ஒற்றைப் புள்ளி பற்றிய கோட்பாடுகளை நாம் நம் பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். அதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
பரிமாணம் 1 :
ஒரு கோட்டினை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஏதோ ஒரு கோடு, நேரானது அல்லது சற்று கோணலானது . இரு புள்ளிகளை இணைக்கும் ஒரு கோடு. ஆனால் அந்த கோட்டிற்கு அகலம் கிடையாது. எளிதாகச் சொல்வதென்றால் அப்படியொரு உருவம் அல்லது பொருள் உண்மையில் இருக்க இயலாது. ஏனெனில் நாம் இந்த உலகத்தை காணும் விதத்தில் ஒரு பரிமாணப் பொருட்களை காண இயலாது. மேலும் நாம் காணும் எந்த ஒரு பொருளும் கண்டிப்பாக நீளம் மற்றும் அகலத்தைக் கொண்டிருக்கும்.
பரிமாணம் 2:
இது ஒரு குறிப்புச் சட்டகத்தைக் குறிக்கும் (datum reference frame). அதாவது நாம் எந்த ஒரு பொருளையும் நேர்கோட்டில் காண்போமானால் இந்த சட்டகத்தைப் பெறலாம். உதாரணமாக, திரை, தொலைக்காட்சிப் பெட்டி , தரை, தளம், மேஜை மேற்பகுதி மற்றும் பல .. மேலும் அகலமே இல்லாத ஒரு கோட்டினை கற்பனை செய்வதை விட இது மிக சுலபமே. இருந்தாலும் இப்படிப்பட்ட குறிப்புச் சட்டகமும் உண்மையில் இருப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. அதாவது முன் கூறியது போல் இதனையும் நம்மால் காண இயலாது என எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இவ்வுலகில் நாம் காணும் எதுவும் சிறிதளவாவது ஆழத்தினைக் கொண்டிருக்கும்.
பரிமாணம் 3:
ஒரு கோட்டிற்கு அகலத்தை அளித்தால் அது ஒரு குறிப்புச் சட்டகமாக மாறும். அதேபோல் ஒரு குறிப்புச் சட்டகத்தை ஓர் ஆழத்திற்கு அல்லது ஓர் உயரத்திற்கு மேம்படுத்தும் போது, அது நாம் அதிகமாகப் பார்த்து பழகிய ஒரு பொருளாக மாறுகிறது. இங்கு நீங்கள் இன்னும் சில இயற்பியல் அளவீடுகளைக் கூறலாம். அனால் அவை நான்காம் பரிமாணத்தில் விவரிக்கப்படும்.
பரிமாணம் 4:
இங்கு நான்காம் பரிமாணம் என்பது நேரம். ஆம் அது நேரம் தான். நான் முன் கூறியது போல் இந்தப் பூமியில் நீளம், அகலம், மற்றும் உயரம் அல்லது ஆழம் உள்ளது போல் நேரமும் உள்ளது. ஆனால் இந்த பூமியினுள் நீங்கள் இருக்கும் வரை உங்களால் நான்காம் பரிமாணத்தை உணர முடியாது அல்லது அது மிகக் கடினம். ஏனெனில் உங்களால் இங்கு நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இதனைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம் கூறுகிறேன்.
நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். அதற்கு முதலில் நீங்கள் அவருக்கு இதனை தெரியப்படுத்த வேண்டும். அடுத்து எங்கு எப்பொழுது சந்திக்கப் போகிறீர்கள் என தெரியப்படுத்த வேண்டும். அதாவது இடம் அல்லது வெளி உதாரணமாக வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு உணவகத்தில் சந்திப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களால் உங்கள் நண்பரை முழு நேரமும் அங்கு காண முடியாது. ஆகையினால் நீங்கள் ஒரு நேரத்தை முடிவு செய்து உங்கள் நண்பரை அதே நேரத்திற்கு வரச் செய்து சந்திப்பீர்கள் அல்லவா... இங்கு நீங்கள் உங்களையே அறியாமல் மூன்றாம் பரிமாணத்துடன் நேரத்தை நான்காம் பரிமாணமாக சேர்க்கிறீர்கள். ஆனால் உங்களால் இந்த நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அதாவது உங்களால் மற்ற பொருட்களின் நீளம், அகலம் மற்றும் உயரத்தைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும் ஆனால் நேரம் அதுவாகவே ஒரு முன்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
தற்பொழுது அந்த உதாரணத்திற்குச் செல்லுங்கள்... நீங்கள் வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை மாலை 4 மணிக்குச் செல்கிறீர்கள்... தற்போது உங்கள் நண்பர் அங்கு இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் வெள்ளிக்கிழமை மாலை காத்திருந்து விட்டு சென்று இருப்பார். இப்பொழுது உங்களால் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என கற்பனை செய்து கொள்வோம், நீங்கள் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இருக்கிறீர்கள். உங்கள் நண்பர் அங்கு இல்லை. ஆனால் உங்களுக்கு அவரை எங்கு சென்று பார்க்க வேண்டும் எனத் தெரியும். ஆகையினால் நீங்கள் உங்களது நேரத்தை மாற்றியமைத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குச் சென்று உங்கள் நண்பரை சந்திக்கிறீர்கள். அறிவியல் ரீதியாக இது இன்னும் சாத்தியமில்லை எனினும் இது கற்பனையே.
பரிமாணம் 5:
இங்கு நாம் ஈர்ப்பு விசையைப் பற்றி பேசப் போகிறோம். இதனைப் புரிந்து கொள்ள இதுவரை நீங்கள் படித்த நான்கு பரிமாணங்களை சிறிது நேரம் ஒதுக்கி வையுங்கள்.
இது நேரம் பன்மடங்காக்கப்பட்ட ஒரு பரிமாணம் எனலாம். ஏனெனில் இதில் உங்களால் ஒரே நேரத்தில் உங்கள் வாழ்க்கையின் பல கட்டங்களைச் சேர்ந்த பதிவுகளை ஒரே நேரத்தில் காண இயலும்.
முன் கூறப்பட்ட உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்கவில்லை. ஏனெனில் நீங்கள் ஒரு நாள் கழித்துச் சென்று இருக்குறீர்கள். ஆனால் உங்களுக்கும் அவருக்கும் ஒரு புரிதல் உள்ளது. அதாவது குறிப்பிட்ட நேரம் மற்றும் நாள் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். ஆகையினால் உங்களால் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று ஈர்ப்பு விசையின் மூலம் அவருக்கு நாள் மற்றும் நேரத்தை மாற்றிக் கூற முடியும் அல்லது உங்களை சரியான நேரத்திற்குச் செல்லும்படி எச்சரிக்கை செய்ய இயலும் .
இந்த யுக்தியையே இன்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தினில் கூப்பர் அந்த ஐந்து பரிமாணக் கட்டமைப்பில் செய்து கொண்டு இருப்பார். அதாவது அனைத்தும் கையை விட்டுப் போன பிறகு அவருக்கு மட்டுமே தெரியும், எப்பொழுது அவரது மகளுடன் தொடர்பு கொண்டால் அவரால் அந்தக் கட்டமைப்பினுள் உள்ள கற்றை இயங்கியல் தகவல்களைப் பரிமாற இயலும் என்று. அந்தத் தகவல்கள் ஐந்தாம் பரிமாணமான ஈர்ப்பு விசையின் மூலம் மோர்ஸ் கோட் வழியாக பரிமாறப்படும். அந்தத் தகவல்கள் மூலம் மனிதர்கள் சனி கிரகத்தைச் சுற்றி ஒரு காலனியை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
வரும் கட்டுரைகளில் இன்டெர்ஸ்டெல்லர் படத்தினில் வரும் இன்னும் பல கோட்பாடுகளை விரிவாகக் காண்போம். மேலும் இது பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.
- வி.சீனிவாசன்
- விவரங்கள்
- செல்வம்
- பிரிவு: புவி அறிவியல்
கடலூரில், சென்னையில் தொடர்மழை, மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு, வெள்ளப்பெருக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு மேல் பலி, முதலமைச்சர் இரங்கல், பிரதமர் மக்களுடன் துணையாய் நிற்கும் என உறுதி இவை நாம் வருடாவருடம் இந்தியாவில் ஏதோ ஓர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொழுது கூறும் அதே புளித்துப்போன ஆறுதல்... பொதுவாகவே இந்தியாவில் எந்த விட இயற்கை பேரிடர்களுக்கு அதை எதிர் கொள்ளுவது பற்றிய அறிவு மிகவும் குறைவு.
எடுத்துக்காட்டிற்கு மலைப்பிரதேசங்களான ஊட்டி,நிலகிரி போன்ற பகுதிகளில் வருடா வருடம் சில மாதங்களில் மலைச்சரிவு நடந்தே தீரும். அதை எதிர்கொள்ள எவ்வாறு மக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள்.. Disaster Management System மக்களிடம் சென்றடைந்துள்ளதா இல்லை அதிகார மட்டத்திற்கு இதைப்பற்றிய முழு அறிவு உள்ளதா? மண் சரிவை தடுக்க சுவர் எழுப்பதலுடன் முடிந்துவிட்டது இவர்கள் பணி .. மாறாக போலியான நிலச்சரிவு நடைபெறுவது போன்று ஒத்திகை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? மண் சரிவில் சிக்கியவர்களை விரைவில் மீட்பது? மண்சரிவில் மீட்கும் போது ஏற்படும் பாதிப்புகள்? மண் சரிவிற்கு பின்பான புணர்வாழ்வு, மண்சரிவில் இருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை கொண்டு தவறுகளை சரி செய்தல் போன்றவை நடை பெறுகின்றனவா எனில்.. இல்லை என்பதே பதில்..
இன்றைய இணைய உலகில் கருத்துக்கள் விரைவில் மக்களை சென்றடையும் என்பதால் வெள்ளத்தை எதிர்கொள்வதை பற்றிய இக்கட்டுரையும் ஓர் சிறு முயற்சியே... இக்கட்டுரை வெள்ளத்தின் பொழுது மக்கள் பாதுக்காப்பாக இருப்பதை மைய்ப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டுரைக்கு செல்வோம்,
வெள்ள பாதுகாப்பு பற்றி செல்வதற்கு முன்பு வெள்ள எச்சரிக்கை பற்றி சிலவற்றை பார்ப்போம்..
Flash Flood Warning (F.F.W) - திடீர் வெள்ளம் :
F.F.W என்பது திடீர் வெள்ளத்தை குறிப்பதாகும்.. இவ்வகையான அறிவிப்பு விடுக்கும் பொழுது மக்கள் தாழ்வான வெள்ள அபாயகர பகுதிகளிலுருந்து உயரமான பாதுக்காப்பான நோக்கி உடனடியாக நகர வேண்டும்.
பொதுவாக இவ்வகை வெள்ளம் சில மணிநேரங்களில் நடைபெறும்
இவ்வகை வெள்ளம் மழை பெய்யா இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது..
Flood Warning (F.W) - வெள்ள அபாயம்:
சாதாரண மழையினால் ஏற்படும் வெள்ளத்தை குறிக்கும் அபாய எச்சரிக்கை.. குறிப்பாய் மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பின் தரப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை இது..
Flood Watch:
வெள்ளம் ஏற்படுவதற்கான சூழல் சாதகமாக இருப்பதை குறிக்கும் சொல். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் வெள்ளம் வராமலும் இருக்கலாம்.
Flood Advisory:
வெள்ளம் நிகழும் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட காலத்தில் என குறிப்பிட்டு கூற உதவும் சொல். இவ்வகை அபாயத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளவில்லையெனில் உயிர்சேதம் , பொருட்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்...
வெள்ள பாதுகாப்பு என்பது மூன்று வகைகளாக மேற்கொள்ளப்படுகிறது.
1)வெள்ளத்திற்கு முன் (Before Flood)
2)வெள்ளத்தின் பொழுது (During Flood)
3)வெள்ளத்திற்கு பின் (After Flood)
வெள்ளத்திற்கு முன்:
சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு முன்பாகவே கணிக்க படலாம். ஆதலால் வெள்ளத்தினை எதிர்கொள்ள நமக்கு சிறிதுநேரம் கிடைக்கும். இந்த வெள்ளத்தினை எதிர்கொள்ளும் திட்டம் சரியாக இருப்பின் பல நேரங்களில் உயிர் சேதம்,பொருட் சேதம் தவிர்க்க உதவிகரமாய் இருக்கும்..
Communication Plan :
வெள்ளம் பற்றிய நிலைமையினை தொடர்ச்சியாய் அறிந்து கொள்ள ஓர் நபரிடம் தொடர்பில் இருப்பது அவசியம்.. பாதுகாப்பான இடம், வெள்ளம்பற்றிய பாதிப்புகள் பற்றி அறிய இவை முக்கிய பங்காற்றுகின்றன.
Emergency Kit:
அவசரகால தேவைகளான உணவு பொருட்கள் , தண்ணீர் , மருந்துகள் போன்றவை ந்தபட்சம் மூன்று நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர்த்து டார்ச், முதலுதவி பெட்டி, ரப்பர் காலனி,கையுறை,வானொலி என தேவையானவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Risky Area:
ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும் பொழுது எது பாதுகாப்பான வழி, பயண முற, பயணிக்கும் இடம் என அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
Notification:
அரசு தரும் தொடர்ச்சியான வெள்ள நிலைமைகள் பற்றிய செய்திகளுடன் தொடர்பில் இருத்தல் அவசியம்..
Preparing Home :
மணற்பைகள் மூலம் நீர் உட்புகா வண்ணம் அடுக்கலாம். ஆனால் இதற்கு நாம் எதிர்பார்க்கும் நேரத்தை விட கூடுதல் நேரம் பிடிக்கும்
மழைநீர் சாக்கடையுடன் கலப்பதை தவிர்த்தல் நலம்.
Flood Insurance வீடுகளுக்கு போடுதல்
வளர்ப்பு பிராணிகள் மேல் அக்கறையுடன் கவனித்தல்.
Charge Electronics :
செல்போன்,ரேடியோ இவை முழுமையாக சார்ஜ் செய்யுங்கள்.
கூடுதல் பேட்டரிகளை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.
Leave:
வெள்ளம் உங்கள் வீட்டை சூழும் என தெரிந்தால் விரைவில் வெளியேறுங்கள்.
During Flood :
தண்ணீர் அளவும், வேகமும் அனைத்து சூழலையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது. ஆதலால் வெள்ளத்தால் சிக்கினால் வானொலி , தொலைக்காட்சி மூலம் வெளியேறுவதற்கான தகவலை பெறுங்கள்.
Get to Higher Ground :
வீட்டின் உயரமான பகுதியில் தங்குங்கள். வெள்ளம் ஓடும் இடத்தில் நிற்பதை தவிருங்கள்.
Obey Evacuate Orders:
வெளியேறுவதற்கான திட்டம் அறிவிக்கபட்டால் அதை முறையாய் பின்பற்றுங்கள்.
Electrical Safety :
மின்சார பெட்டி தண்ணீரில் மீழ்கி இருந்து spark, cracking sound , popping போன்ற ஒலிகள் கேட்டால் உடனே வெளியேறுங்கள்...
Avoid Flood Water:
6 inch தண்ணீர் போதுமானது உங்களை வீழ்த்த ...
வெள்ளம் ஓடும் நீரில் வண்டிகளை ஓட்டாதீர். வண்டியினை சிறிதாக திருப்பினும் அடித்து செல்லப்படுவீர்.
நீருக்கு அடியில் பல அபாயங்கள் இருப்பதால் போதுமான பாதுகாப்பு இல்லாமல் இறங்காதீர்கள்.
After Flood :
சண்டையில் கிழியாத சட்டை போல , வெள்ளத்தால் பாதிப்படையா வீடுகள் இல்லை. புணர்வாழ்வு (Rehabilitation) என்பது முக்கியமான விடயம்.
Stay Informed:
வெள்ளத்திற்கு பின் நிலைமைகள் அறிந்து பயணியுங்கள்..
நீரினை கொதிக்க வைத்து குடியுங்கள்..
மின்சார கசிவு , எரிவாயு சிலிண்டர் கசிவு ஆகியவை பற்றி ஆய்வு செய்து பின் வீட்டினில் பயணிங்கள்..
Avoid Flood waters :
வெள்ளத்தால் தேங்கிய நீரில் நிற்பது பல ஆபத்துக்களை உள்ளடக்கியது.. விசப்பூச்சிகள் முதல் மின்சார பாதிப்பு, நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு வரை உள்ளது.
Avoid Disaster Area:
பாதிக்கப்பட்ட இடத்தில் அனுமதி இல்லாமல் நுழையாதீர்..
Signs:
விழிப்புணர்வு அட்டைகள் இருப்பின் அதனை மதியுங்கள்..
Wait for all clear:
தங்குவதற்காக இடம் மாற்றி அமைக்கப்பட்டால் அங்கேயே அதிகாரிகள் கூறும் வரை தங்குங்கள்..
இவ்வாறு வெள்ளத்தின் பாதிப்பினை பலவகையான முறையில் கையாள வேண்டும். ஆனால் கடலூர் வெள்ளமோ சென்னை மழையினால் ஏற்பட்ட வெள்ளமோ இந்த மேல் குறிப்பிட்ட செயல்கள் செய்யப்பட்டதா என்பதை சிந்திப்பது அவசியமாகிறது. ஊழல் , லஞ்சம் போன்றவற்றால் பதவி பெற்ற அதிகாரிகளால் நிரம்பியுள்ள இவ்வகையான துறைகளில் வெள்ளப்பாதுகாப்பு பற்றி அறிவு குறைவாகவே இருக்கும். சுற்றுச்சூழல் துறை இது போன்ற துறைக்கு மற்றுமொர் எடுத்துக்காட்டு. ஆக இந்நிர்வாகத்தின் செயல்பாடுகளை நாம் கேள்விக்கு உட்படுத்தும் பட்சத்தில் நிர்வாகம் எவ்வாறு மக்கள் நலன் என்பதில் இருந்து விலகி மக்கள் விரோதமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
- விவரங்கள்
- அருண் நெடுஞ்செழியன்
- பிரிவு: புவி அறிவியல்
(நியூட்ரினோ எதிர் கருத்துக்கள் விவாதத்தில் தோழர் த.வி வெங்கடேஸ்வரன் முன்வைத்த வாதத்திற்கான மறுப்பு)
நியூட்ரினோ திட்டம் தொடர்பாக இரு வேறு எதிர்நிலைப்பாட்டினைக் கொண்டுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(ஆதரவு) மற்றும் பூவுலகின் நண்பர்கள்(எதிர்ப்பு), விவசாயிகள் விடுதலை முன்னணி (எதிர்ப்பு) யினர் தங்களின் நிலைப்பாட்டிற்கான நியாயப்பாட்டினை ஒரே மேடையில் மக்கள் மன்றத்தில் முன்வைப்பது என்ற நோக்கத்தின் அடிப்படையில் தோழர் ஞானியால் முன்னெடுக்கப்பட்ட கருத்தியல் விவாதக் கூட்டமொன்று நேற்று (மே 7, 2015) சென்னையில் நடைபெற்று முடிந்தது.
மேற்சொன்ன விவாதத்தின் சாரம்சத்தை பார்த்தோமானால்- இத்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப அறிவியலை முதன்மைப்படுத்தி நியூட்ரினோ ஆதரவு அணியினரும், இத்திட்டத்தின் சமூகப் பொருளியில் நலன், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை, திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற காரணிகளை மையப்படுத்தி நியூட்ரினோ எதிர் அணியினரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக பார்வையாளர்கள் துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுத்த கேள்விகளுக்கு இரு தரப்பினரும் பதிலுரைத்தனர்.
இத்திட்டம் தொடர்பான சாதக பாதக அனுமானங்கள் மற்றும் ஆய்வுகளுக்குள் நாம் இங்கு செல்லப் போவதில்லை. மேலும் நேற்றைய நிகழ்வு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்திருக்கும் ஒரு சார்பான பார்ப்பனத்துவ பாணியிலான கட்டுரை குறித்தும் இங்கு அலசப் போவதில்லை. திட்டத்தை ஆதரிக்கும் விதமாக பேசியவர்களும் அதை நியாயப்படுத்தி எதிர்ப்பவர்களிடம் எழுப்பப்பட்ட இரு குறிப்பான கேள்விகளை அடியொற்றி இங்கு நமது விவாதத்தை சுருக்கமாக முன் வைக்கிறோம்
கேள்விகள்:
அறிவியலை ஏன் அரசியலோடு இணைக்கிறீர்கள்?
அடிப்படை அறிவியல் ஆராய்சி அனைத்திற்கும் சமூகப் பொருளியில் நலன் இருந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியம் என்ன?
அறிவியல் – தொழில்துறை இணைவு:
அறிவியலானது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஓர் அங்கமாகும். அறிவியல், சமூகப் பயன்பாடு எனும் சமூகப்பணியை ஆற்றும்பொருட்டு சமூக வரலாற்றின் ஒவ்வொரு வளர்சிக்கட்டங்களிலும் முன்னேறி வருகிறது.
கண்டுபிடிப்புகளின் நூற்றாண்டு என்று அழைக்கப்பட்ட 16 ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட முக்கிய மூன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்றைய முதலாளித்துவ அரசுகளின் உருவாக்கத்திற்கும் அதன் அதிகாரப் பரவலுக்கும் அடித்தளம் அமைத்துகொடுத்தது எனலாம். அக்கண்டுப்பிடிப்புகள், அச்சு, வெடிமருந்து மற்றும் காந்தம். இவை மூன்றும் முறையே இலக்கியம், போர் மற்றும் கப்பல் வழித்தடத்திற்கு வித்திட்டு ஐரோப்பியர்களின் காலனியாதிக்கப் பரவலை சாத்தியப்படுத்தியது. கொலம்பஸ் சென்று திரும்பிய தீவுகளில் எல்லாம் பூர்வ குடி மக்கள் தங்கத்திற்காகவும் பிற பணப்பயிர்களை பயிரிடுவதற்காகவும் வேட்டையாடப்பட்டனர். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புனல் ஆற்றல் மற்றும் மின்சார ஆற்றல் தொடர்பான அடிப்படை கருத்துருக்கள் உருவாக்கப்பட்டன. இங்கிலாந்தில் துவங்கப்பட்ட ராயல் கழகம் அறிவியல் கோட்ப்பாடுகளையும் நடைமுறையையும் ஒன்றிணைப்பதில் மிக்கிய பங்களிப்பு செய்தது.
காலனியாதிக்கத்திற்கான போராட்டத்தில் போர்ச்சுகீசு, டச்சு, பிரஞ்சு அரசுகளை வென்று இங்கிலாந்து அரசு வலுவாக இந்திய துணைக் கண்டத்தில் கால்பதித்திருந்தது. தனது காலனியாதிக்க காலகட்டத்தில் பொருளாதார நலனைக் கருதி வேகமான தொழில் முனைப்புகளில் இங்கிலாந்து அரசு தீவிரம் காட்டியது. மேற்குலகில் நிகழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் வேகமாக தொழிற்துறையின் வளர்ச்சிக்காக சந்தைப்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுச்சி பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும் தொழிற்துறையுடனான அதன் உறவும் மேற்சொன்ன இந்தியத் துணைக்கண்டத்தின் சமூக நிலைமைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தின. ஆனால், நிலவிய சமூக அடுக்கை அது முற்றாக தகர்க்கவில்லை. அதேவேளையில், நிலவிய வருணசாதி பண்பாட்டை இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடாக ஏற்றுக்கொண்டிருந்த காலனியாதிக்க அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாய்ப்பு வசதிகளை உயர் சாதியினருக்கே வழங்கியது. சர் சி.வி ராமன், சகதீசு சந்திர போசு, ராமுனுஜன் போன்ற உயர் சாதி அறிவியலாளர்களே இந்தியத் துணைக்கண்டத்தின் அறிவியல் துறையை ஏகபோகமாக குத்தகைக்கு எடுத்தனர், இன்று வரை எடுத்தும் வருகின்றனர். இந்தியா தன்னளவில் வர்ண நிலப்பிரபுத்துவ சமூகமாகவும், புதிதாக எழுச்சி பெற்ற தொழிற்துறையின் விளைவாக உருவான குட்டி தொழில் முதலாளிகளின் அரசியல் அதிகார மேலாதிக்கமென, இரு சக்திகளின் இணைப்பாக, அரைக் காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாக புதிய பரிமாணம் பெற்றது. இதை இந்திய பிரத்யேகம் என்றே மொழியெலாம்.
மேற்குலக அறிவியலுக்கும் தொழில்துறைக்குமான இணைப்பு யுகத்தில் தொழில் நிறுவனங்களின் சேவகனாக, தொழிற்துறை முதலாளிகளின் அடிமையாக அறிவியல் மாறியது. லாபத்தை குவிக்கிற உற்பத்தி முறைக்காக அறிவியல் சக்திகளும் கண்டுபிடிப்புகளும் வீணடிக்கப்பட்டன. தொழிற்துறை உபரியில் மேற்குலகில் முதலாளி வர்க்கம் எனும் புதிய சமூக அடுக்கு தோற்றம் பெற அறிவியல் வளர்ச்சி வித்திட்டது. தனியுடமையும் லாபமும் இவ்வமைப்பின் ஆன்மாவாகும். உலகின் புதிய அதிகார அடுக்குகள் பொருளாதார சந்தை வாய்ப்பைப் பெற நவீன ஆயுத உற்பத்தியும் ஆய்வும் அவசியப்பட்டன. அறிவியல் ஆய்வுகள் வீணான அழிவு வேலைக்கு திருப்பப்பட்டது. செர்மனி, அமெரிக்கா இதில் முன்னோடி நாடுகள். வேதியல் நச்சு ஆயுதங்கள், அணு குண்டுகள், ஏவுகணைகள் என அறிவியல் முனைப்புகள் சமூக பயன்பாட்டிலிருந்து வீணான அழிவு பயன்பாட்டிற்கு திருப்பப்பட்டன.
மார்க்சிய அறிஞரும் தேர்ந்த இயற்கை அறிவியலாளருமான ஜே. டி பெர்னல் தனது புகழ்பெற்ற “மார்க்சும் அறிவியலும்” நூலில் முதலாளித்துவ அறிவியல் குறித்து இவ்வாறு கூறுகிறார்.
“முதலாளித்துவ நாடுகளில் அறிவியலாளர்கள் இப்போதெல்லாம் நேராடியாக அரசாலும் அல்லது ஏகபோக நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், அது விசித்திரமான அருவெறுப்பான முறையில் நடைபெறுகிறது. ”
இன்று நிலைமையில் பெரிதாக மாற்றமில்லை என்றாலும் நவீன தாரலமயமாக்கள் சூழலில் அறிவியல் ஆய்வுகளையும் அதையொட்டி உருவாக்கப்பட்ட சரக்குக்குகளுக்கான சந்தைக்காகவும் அறிவியல் வரலாறு வேறு வகையில் வேகமாக திசை மாற்றமடைந்தது.
இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் அறிவியல் ஆய்வு முயற்சிகள் அனைத்தும் வர்த்தக நோக்கங்களுக்காகவும் அதிகாரத்தை கைப்பற்ற அல்லது மேலாண்மையை தக்க வைக்கப்பதற்கான வாய்ப்பிற்காக மட்டுமே வளர்த்தெடுக்கப்படுகிறது. அனைத்து அறிவியல் வளர்ச்சிகளும் ஆய்வு முடிவுகளும் பெரும் தொழில்நிறுவனங்களுக்கு சேவை செய்கிற நோக்கத்தோடு இணைக்கப்படுகிறது. .
அறிவியலானது தொழில் துறையுடன் இணைக்கப்பட்ட உற்பத்தி அறிவியல் என்ற நிலையில் அது பெரு முதலாளிகளின் தனியுடைமை சொத்தாக மாற்றப்படுகிறது. நுகர்வு நிலையில் விற்பனைக்கான போட்டியின் காரணமாக சமூக தளத்தில் குறைவான விலையில் அறிவியல் தொழில்நுட்பம் மக்களிடம் சேர்கிறது. உதாரணமாக கைபேசி தொழில்துறை, அதனுடன் தொடர்புடைய/அடிப்படையான அறிவியல் ஆய்வுகள், உற்பத்தியை மையப்படுத்தி பெரு நிறுவனங்களால் வளர்க்கப்படுகிறது. நுகர்வு மட்டத்தில், போட்டியின் காரணமாக மலிவான விலைக்கு மக்களுக்கு பயனளிக்கிற விதமாக சென்று சேர்க்கிறது. இது அனைத்து அறிவியல் உற்பத்திக்கும் பொருந்தாது. உதாரணமாக, பில் கேட்ஸ் உரிமையாகக் கொண்டுள்ள மைக்ரோ சாப்ட் தொழில் நுட்பம் அல்லது சரக்கிற்கு போட்டியாளரே கிடையாது. சொல்வதுதான் விலை...
அறிவியல் இன்று முதலாளிய சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் லாபகரமான விற்பனைக்கும், விற்பனைக்கான போட்டியில் முன்னேறி லாபம் ஈட்டவும் அறிவியல் ஆய்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அறிவியல் கோட்பாடுகள், அறிவியல் ஆய்வுகள் போன்றவற்றில் அது ஆர்வம் செலுத்துகிறது. உற்பத்தி விரிவாக்கத்திற்கும் லாபத்திற்கும் அறிவியல் ஆய்வுகள் முன் நிபந்தனையாக இருக்கிறது.
அறிவியலின் வரலாற்றில் இன்றைய எதார்த்தத்தில் நடைபெற்றுக்கொண்டுள்ள இம்மாற்றங்களை கணக்கில் கொள்ளாமல் அறிவியலை அரசியலுடன் இணைப்பது முறையல்ல என்பதும், அறிவியல் ஆராய்சி அனைத்திற்கும் சமூகப் பொருளியில் நலன் அவசியமில்லை என்கிற வாதங்கள் ஒரு பக்க சார்பான முதலாளிகளுக்கு ஆதரவான வாதமாகும். மேலும் “அறிவியலுக்காக அறிவியல்” என்ற வாதம் அடிப்படையில் பிற்போக்கானது. அப்படியொன்று இருக்கவே முடியாது. அப்படி ஒரு வேலை, சமூகப் பயன்பாடு இல்லாத அல்ல அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யாத அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வதென்பது வீணான பிற்போக்கு முயற்சியாகும். ”அறிவியலின் சமூகப்பணி வெறுமென ஆழ்ந்த ஆராய்ச்சியின் பாற்பட்டதாக மட்டுமல்லாமல் தீவிர செயல் வடிவம் கொண்டதாக இருக்கவேண்டும்” என்கிற ஜே.டி பெர்னலின் கருத்தை நமது அறிவியலாளர்கள் கணக்கில் கொள்வதாக தெரியவில்லை.
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: புவி அறிவியல்
இந்த உலகில் உயிரினங்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வரும், அமெரிக்க நாட்டில் உள்ள ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் (Stanford University) பணி புரியும், பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ (Rodolfo Dirzo) என்பவர் தனது ஆய்வின் முடிவை 26.7.2014 அன்று வாஷிங்டன் நகரில் வெளியிட்டார்.
உலகில் உயிரினங்கள் தோன்றிய பிறகு, நிலச் சரிவு (Land slide), ஆழிப் பேரலை (Tsunami), விண்கற்கள் (Asteroid) மோதல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் காரணமாக இது வரையில் ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன என்றும், இப்பேரிடர்களின் காரணமாக டினோசார், மாபெரும் யானைகள் (Mammoth) போன்ற 320 உயிரினங்கள் சுவடே இல்லாமல் அழிந்து போய் விட்டன என்றும் அவர் கூறினார். இப்பேரழிவுகளில் இருந்து அழியாமல் தாக்குப் பிடித்த மற்ற உயிரினங்களில் 25% காலப் போக்கில் இயற்கை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மறைந்து விட்டன என்றும் அவர் கூறினார்.
இவை எல்லாம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் நிகழ்ந்த பேரழிவுகள் என்று கூறிய அவர், இப்பொழுது மனிதன் புவியின் இயற்கை வளங்களை அளவுக்கு மீறிப் பிழிவதன் காரணமாக, தடுத்து நிறுத்த முடியக் கூடிய, ஆறாவது பேரழிவு (Sixth Mass Extinction) ஒன்று நம்மை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்
இதனால் யானைகள், காண்டா மிருகங்கள், துருவக் கரடிகள் மற்றும் மிகப் பல உயிரினங்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்து வருவதாக இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டு அதன் விளைவாக (எலி, பெருச்சாளி, மூஞ்சுறு போன்ற) எலியினங்களின் (Rodents) எண்ணிக்கை இருமடங்காகப் பெருகி உள்ளது என்பதும் இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. எலியினங்கள் நோய் பரப்பும் புற ஒட்டுண்ணிகளைத் தாங்கி வளர்ப்பதால். மக்களை நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 35 ஆண்டுகளில் மக்கள் தொகை இருமடங்காகி உள்ளது என்றும், மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள், கொசுக்களை உணவாகக் கொள்ளும் சிலந்திகள், குடியானவனின் நண்பன் எனக் கூறப்படும் மண் புழுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை 45% குறைந்த உள்ளது என்றும் கூறிய பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ, இப்பொழுது நேரிட்டுக் கொண்டு இருக்கும் அழிவுப் போக்கிற்கு இயற்கைப் பேரிடர்கள் காரணமல்ல என்றும், மனிதன் உருவாக்கி உள்ள புவி வெப்ப உயர்வு, சூழ்நிலைக் கேடுகள், பருவ நிலை மாற்றம் ஆகியவையே காரணம் என்றும் கூறினார்; இப்பேரழிவுகள் நம் வாழ்க்கையை மெது மெதுவாகப் பதம் பார்த்துக் கொண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது அனைத்து உயிரினங்களின் முழுமையான அழிவில் கொண்டு போய்விடும் என்றும்அவர் கூறினார்.
இறுதியாக, மக்கள் தொகையையும் இயற்கை மூலாதாரங்களைப் பிழியும் வேகத்தையும் வெகுவாகக் குறைப்பதன் மூலம் வரவிருக்கும் பேரழிவைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார்.
வரவிருக்கும் பேரிடரைப் பற்றியும், அதனால் உலகில் உயிரினங்கள் முழுமையாக அழியவிருப்பது பற்றியும், அதிலிருந்து மீள்வதற்தான தீர்வைப் பற்றியும் அவர் தெளிவாகக் கூறி உள்ளார். அவர் கூறி உள்ள தீர்வை நடைமுறைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
தீர்வின் முதல் அம்சமான மக்கள் தொகைக் குறைப்பைப் பற்றிப் பார்ப்போம். மக்கள் தொகையை வெகுவாகக் குறைக்க முடியுமா? சீனா சமதர்மப் பாதையில் சென்று கொண்டு இருந்த பொழுது பெரு நகரங்களில் உள்ளவர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மேல் பெறக் கூடாது என்ற விதியை மக்கள் முறையாகக் கடைப்பிடித்துக் கொண்டு இருந்தனர். அதனால் சீன நாட்டின் மக்கள் தொகை ஒரு கட்டுக்குள் இருந்தது. சமதர்மப் பாதையை விட்டு விலகி முதலாளித்துவப் பாதைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு இக்கொள்கை வலுவில் தளர்த்தப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் அதிகரித்து உள்ளது. சீனா குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைளை ஏன் வலுவில் தளர்த்தியது? முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குப் பண்டங்களை வாங்கும் மக்கள் மிகவும் முக்கியம். ஆகவே மக்கள் தொகைப் பெருக்கத்தை இன்றைய சீன முதலாளித்துவ அரசு ஆதரிக்கத் தொடங்கி உள்ளது.
தீர்வின் இரண்டாவது அம்சம் இயற்கை மூலாதாரங்களைப் பிழிவது வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும். இது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் முடியுமா? இன்று முதலாளித்துவப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் நெருக்கடி என்றால் ஏதோ மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை அல்ல; முதலாளிகள் தங்களிடம் உள்ள மூலதனத்தை இலாபகரமாக முதலீடு செய்ய வழி கிடைக்காமல் தவிப்பது தான் பொருளாதார நெருக்கடி என்று கூறப்படுகிறது. இத்தகையை நெருக்கடி தலைவிரித்து ஆடும் பொழுது இயற்கை மூலாதாரங்களைப் பிழிவதை வெகுவாகக் குறைப்பது என்பது நெருக்கடியைப் பல மடங்கு அதிகரிப்பது ஆகும் என்பது மட்டும் அல்ல; முதலாளித்துவப் பொருளாதார முறையையே அடியோடு காவு கொடுப்பது ஆகும்; சமூகத்தைச் சமதர்மப் பாதைக்கு நகர்த்துவதும் ஆகும். இதை ஒரு முதலாளித்துவ அரசு ஒரு போதும் செய்யாது.
அப்படி என்றால் அறிவியல் அறிஞர் பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ கூறியுள்ள தீர்வைச் செயல்படுத்தி உலகில் உயிரினங்கள் அழியாமல் காக்க வேண்டும் என்றால் முதலாளித்துவ முறையை அடியோடு காவு கொடுத்து, சமதர்ம முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைச் சராசரி அறிவிற்கும் குறைவான அறிவு உடையவர்களாலும் புரிந்து கொள்ள முடியும். நாம் என்ன செய்யப் போகிறோம்? உலகில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக முதலாளித்துவத்தைக் காவு கொடுத்து விட்டு, சமதர்ம முறையை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அல்லது நம் சந்ததிகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்; நமக்கு நம் அயோக்கியத்தனமான மவுடீகம் (சோம்பேறித்தனம்) தான் முக்கியம் என்று இருக்கப் போகிறோமா?
- இராமியா
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.8.2014 இதழில் வெளி வந்துள்ளது)
- இந்தியாவில் மழைப்பொழிவு
- நீர்வள மேலாண்மை
- மனித நாகரிகத்தின் முழுமையான அழிவைத் தவிர்ப்பது கடினமே
- இயற்கையின் ஆக்கமும், அழித்தலும் - எரிமலைகள்
- பரிணாம மையப்புள்ளி இடம்பெயர்கிறது !?
- நிலவை ரசிக்கலாம் வாங்க....
- RGO, GMT, UT, UTC என்றால் என்ன?
- நவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களும்
- மனிதம் - மாபெரும் குடும்பம்
- உலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித இரத்தமும்
- புவி அமைப்பின் சில உச்சங்கள்
- கடல் - புவியின் தோல்!
- கண்டம் வாரியாக உயர்ந்த பகுதிகள்
- உலகின் ஆழமான ஏரிகள், குகைகள், எரிமலைகள்
- உலகின் முக்கிய கடல்கள்
- உலகின் முக்கிய சிகரங்கள்
- உலகின் மிக நீளமான ஆறுகள்
- உலகின் முக்கிய ஏரிகள்
- உலகின் புகழ் பெற்ற அருவிகள்
- தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணம் எது?