கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ராசிக்
- பிரிவு: புவி அறிவியல்
காதல் வயப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பொதுவாகப் பிடித்த ஒன்று தான் இந்த நிலா. பல கவிஞர்களை வாழ வைத்த நிலா. நிலவைக் காட்டிச் சோறூட்டிய என் அம்மா முதல் என் பிள்ளைக்காக நிலவைத் தேடும் என் மனைவி வரை அனைவருக்கும் அழகாக் காட்சி அளிக்கும் இந்த நிலவின் ரகசியங்கள் சிலவற்றை பார்க்கலாம்...
சில அறிவியல் குறிப்புகள்:
-
நிலவில் வளி மண்டலம் கிடையாது.
-
காற்றோ வானிலை மற்றமோ அங்கில்லை.
-
2009 தில் தான் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
-
நிலவிற்குச் சென்றவர்களின் காலடித்தடங்கள் 10 மில்லியன் வருடங்கள் அழியாமல் இருக்குமாம்.இதற்குக் காரணம் நிலவில் மண் அரிப்போ காற்றோ இல்லை என்பவைகளாகும்.
-
நிலவின் ஒரு முகத்தை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், பார்க்கவும் முடியும். நிலவின் மறு முகத்தை செய்ற்கைகோல்கள் மட்டும் தான் இதுவரை படம் பிடித்துள்ளன.
-
பூமியிலிருந்து சுமார் 250,000 மையில்கள் (384,400 கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. இந்த தூரத்தை நாம் உணர்ந்துகொள்ள இப்படி எடுத்துக் கொள்ளலாம். ஒரு காரில் 125 கிமி/மணி வேகத்தில் சென்றால் 130 நாள்களில் நாம் நிலவைச் சென்றடையலாம். ராக்கட்டில் 13 மணி நேரத்திலும், ஒளி வேகத்தில் 1.52 நொடிகளிலும் நிலவைச் சென்றடையலாம்.
-
சராசரியாக, சந்திரன் பூமியை 2,288 மைல்கள்/மணி (3,683 கிமீ/மணி) வேகத்தில் சுற்றி வருகின்றது.
-
ஒரே ஆங்கில மாதத்தில் ஏற்படும் இரண்டு பௌர்ணமி நிலவுகளை நீலநிலா என்றழைக்கின்றனர். கடந்த 2012 ஆகஸ்து மாதம் நீல நிலவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றி வரும் சந்திரன்:
ஒவ்வொரு நாளும் 12.2 டிகிரிகள் கிழக்கே நகர்ந்து கொண்டு, ஒரு சந்திர மாதத்தில் 29.5 நாள்கள் x 12.2 டிகிரிகள் = 360 டிகிரிகள் சுற்றி வந்து ஒரு மாதத்தினை நிறைவு செய்யும்.
நிலவின் படிநிலைகள் பற்றியச் சில குறிப்புகள்:
அம்மாவாசையிலிருந்து வளரும் நிலா ஏழாவது நாளில் சுற்றின் முதல் கால்பகுதியில் (அரைவட்ட நிலாவாக) இருக்கும். பதினைந்தாவது நாளில் முழு பெளர்ணமியாகும். பின் தேயத் துவங்கும். இருபத்தி மூன்றாவது நாளில் இறுதிக் கால்பகுதியில் (அரைவட்ட நிலவாக) இருக்கும். மீண்டும் ஒரு அம்மாவாசையில் ஒளியிழந்து அடுத்தச் சுற்றிற்காக ஆயத்தமாகும்.
சூரியனைப் போல் சந்திரனும் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். உதிக்கும் மற்றும் மறையும் நேரம் மட்டும் நாளுக்கு நாள் மாறுபடும்.
அம்மாவாசை அன்று சூரியன் உதிக்கும் அதே நேரத்தில் சந்திரனும் உதித்து, சூரியன் மறையும் அதே நேரத்தில் மறைந்து விடும்.அடுத்த நாள் சூரியனை விட சற்று தாமதமாக உதித்து சற்று தாமதமாக மறையும். அதனால் தான் முதல் பிறையை மேற்கு வானில் மறையும் பொழுது சற்று நேரம் பார்க்க முடிகிறது. இரண்டாவது நாள் இன்னும் சற்று தாமதமாகி மீண்டும் மேற்கு வானில் மறையும் நேரத்தில் பார்க்க முடியும்.
முதல் அரைவட்ட நிலா (ஒரு சுற்றின் முதல் கால்பகுதிக் காலச் சந்திரன்- First Quarter Moon) நன்பகலில் உதித்து நல்லிரவில் மறையும். ஆகையால், சூரியன் மறையும் நேரத்தில் நிலா உச்சியில் இருப்பத்திப் பார்க்கலாம். வேறுவிதமாக, சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது நிலவு உதிக்கும் என்றும் சொல்லாம்.
பெளர்ணமி அன்று சூரியன் மறையும் நேரத்தில் முழு நிலவு (பெளர்ணமி நிலவு) உதித்து, அடுத்த நாள் காலை சூரியன் உதிக்கும் நேரத்தில் மறையும். ஆகையல் முழு நிலவை இரவு முழுவதும் பார்த்து ரசிக்கலாம்.
படத்தில், சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது நிலவு எதிர்திசையில் இருப்பதைப் பார்க்கலாம்.
இறுதி அரைவட்ட நிலா (ஒரு சுற்றின் இறுதிக் கால்பகுதி நிலவு- Last Quarter Moon) நல்லிரவில் உதித்து நன்பகலில் மறையும். சந்திர மாதத்தின் கடைசி நாள்கள் வர வர நிலவு உதிக்கும் நேரம் நல்லிரவையும் தாண்டியிருப்பதால் அந்த நாள்களில் நாம் நிலவை பார்க்க வேண்டுமென்றால் இரவில் கண் விழிக்க வேண்டும். பெளர்ணமிக்குப் பின் வரும் நாள்களில், நிலவு உதிக்கும் நேரம் சூரியன் மறைந்த நேரத்திலிருந்து சற்று தாமதமாகி தாமதமாகி இறுதிக் கால்பகுதிக்குப் பின் சூரியன் உதிக்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் தான் நிலவைப் பார்க்க முடியும்.
இவ்வாறு தாமதமாக உதித்து வரும் சந்திரன் அம்மாவாசை அன்று மீண்டும் அடுத்த சுற்றிற்காக தயாராகிவிடும். அதாவது நிலவின் உதயம் மற்றும் மறையும் நேரம் சூரியனை ஒத்திருக்கும்.
ஞாயிற்று வழிமாதம்: (Synodic Month)
ஒரு அம்மாவாசையிலிருந்து மறு அம்மாவாசை வரை கணக்கிடப்படும் சந்திரனின் ஒரு முழுச் சுற்று ஞாயிற்று வழிமாதம் அல்லது சந்திர மாதம் எனப்படும். இதற்காக ஆகும் காலம் 29.5 நாள்கள். துல்லியமாகச் சொல்லப் போனால், 29 நாள்கள், 12 மணிகள், 43 நிமிடங்கள், 11.6 நொடிகள் ஆகும்.
வானக மாதம்: (Sidereal Month)
பூமியைச் சுற்றி வர, சுற்றைத் துவங்கிய இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு 27 நாள்கள் (27 நாள்கள், 7 மணிகள், 43 நிமிடங்கள், 11.6 நொடிகள்) எடுத்துக் கொள்கிறது. இது வானக மாதம் (Sidereal Month) எனப்படுகிறது.
இதுபோக....:
தினந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வரும் நிலவினால் பூமியில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. நிலவின் ஈர்ப்பினால் தான் கடல் மட்டத்தில் அவ்வப்பொழுது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நிலவின் படித்தளங்களினால் மனித உடலிலும் சில மாறுதல்கள் ஏற்படும். இதற்காகத் தனியே சந்திர முறை கருத்தரிப்புக் கால அட்டவனைகளைச் (Lunar Fertility Calendar) சில மருத்துவர்கள் பயன்படுத்தி வருவது கூடுதல் தகவல்.
முற்றிலுமாகச் சூரியனின் உதவியாலேயே வெளிச்சம் தருகின்ற இரவு நேரத்து விளக்கு. சூரிய ஒளியில் இயங்கும் முதல் சாதனம் இதுவாகத்தான் இருக்கும்.
அறிவியலோடு நிலவை ரசித்தால் இன்னமும் சுவாரசியமாக இருக்கும் என்பதற்கான சிறிய முயற்சியே இந்த ஆக்கம்.
- ராசிக்
- விவரங்கள்
- ராசிக்
- பிரிவு: புவி அறிவியல்
இன்றைய நாளில், நேரத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. எதில் எடுத்தாலும் துல்லியமாகச் செயல்படும் மனிதர்களையும் அவன் மூலையின் குழந்தையான கணினிகளையும், GPS வழிகாட்டிச் சாதணங்களையும், இயந்திர மனிதர்களையும் இன்ன பிற கருவிகளையும் இன்று நம் கண் முன்னே பார்க்கத்தான் செய்கிறோம். இந்த நிலையை உருவாக்கியதன் பின்னனி என்னவாக இருக்க முடியும்?? தேவைதான்..!
அன்றைய தேவை நேரநிர்ணயம். அதாவது பிரிட்டன் ஆண்டுவந்த பகுதிகளையும், தன்னுடைய சொந்த பகுதிகளையும் நேரத்தை வைத்து ஒருங்கிணைக்க வேண்டும். வான இயற்பியல் மற்றும் கடல் பயணங்களின் தேவைகளின் ஊடே நேரத்தையும் அதன் கட்டுப்பாட்டையும் உணர்ந்த அன்றைய பிரிட்டன் அரசாங்கம் நேர நிர்ணயத்திற்காகப் பல உலகளாவிய மாநாடுகளை நடத்தியது. பல ஆய்வுக்கூடங்களைத் திறந்தது. உலகளாவிய பல அறிவியல் அறிஞர்களின் துணைக் கொண்டு வகுக்கப்பட்ட நேரக்கணக்கினையும் அதன் நிர்ணயத்தையும் இறுதியில் நடைமுறைப்படுத்திக் காட்டியது. இதன் விளைவாகக் கிடைத்தது தான் இந்த GMT, UT, UTC களெல்லாம்.
GMT, UT, UTC ஆகியவைகளை நாம் பல இடங்களில் படித்ததுண்டு. படித்துவிட்டு குழம்பியதும் உண்டு. GMT என்றால் என்ன? UT அல்லது UTC என்றால் என்ன? என்ற தெளிவில்லாமல் பல இடங்களில் அறிவியல் சம்பந்தமான நேர கணக்குகளின் புரிதல்கள் தடைப்பட்டிருக்கலாம். இவற்றை பற்றி இங்கு காண்போம்....
-
RGO- Royal Greenwich Observatory (ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம்)
-
GMT- Greenwich Mean Time (கிரீன்விச் இடைநிலை நேரம்)
-
UT- Universal Time (உலகளாவிய நேரம்)
-
UTC- Universal Time Coordinated (ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்)
ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greenwich Observatory):
முன்னதாக 1928 முதல், லண்டனில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தில் இயங்கி வந்த வான் ஆய்வு மையமே ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greewich Observatory- RGO) என்று அழைக்கப்பட்டது. 1948 ல், இந்த ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (RGO), சசெக்ஸில் உள்ள Herstmonceux Castle என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது. (இடம் மாற்றப்பட்டாலும் இதுவும் ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் என்றே அழைக்கப்பட்டது).
இதன் வரலாற்று கட்டிடங்கள் மற்றும் ஆய்வுக் கருவிகள் அனைத்தும் தேசிய கடல்சார் அருங்காட்சியத்துடன் (National Maritime Museum) இணைக்கப்பட்டு, இதன் பெயர் புராண கிரீன்விச் வானாய்வுக் கூடம் (Old Royal Greenwich Observatory- ORGO) என்றானது.
மீண்டும், 1998ல் சசெக்ஸில் இருந்த RGO வின் இயக்கம் நிறைவு பெற்றதைத் தொடந்து, முன்னர் கிரீன்விச்சில் இருந்த புராண ஆய்வுக்கூடம் (ORGO) மீண்டும் செயல்படத் துவங்கியது. இந்த முறை இதன் பெயர் Royal Obervatory Greenwich (ROG) என்றானது.
கிரீன்விச் இடைநிலை நேரம் (Greenwich Mean Time- GMT):
கிரீன்விச் இடைநிலை நேரம் - GMT என்பது கிரீன்விச் ஆய்வுக்கூடத்தை அடிப்படையாக கொண்டு போடப்பட்டுள்ள தீர்க்கரேகையை (Zero degree Longitude) பொறுத்து அமையப்பெற்ற சூரிய ஓட்டத்தின் அடிப்படையிலான ஒரு கால அளவு ஆகும்.
அதாவது நடுமட்ட சூரியன் (Mean Sun) சரியாக இந்த ஆய்வுக்கூடத்தின் தீர்க்கரேகையை (Zero degree) ஒத்திருக்கும் பொழுது மணி 12:00 GMT ஆகும். (பூமியின் சுழல் அச்சு 23.5 degree சாய்ந்துள்ளதால், சில நேரம் மெதுவாகவும் சில நேரம் வேகமாகவும் சூரியன் நகர்வது போல் இருக்கும். இதை சரி செய்யவும், ஒரே சீரான சூரிய ஓட்டத்தை அளவிட்டு நேரத்தை குறிப்பதற்காகவே 'நடுமட்ட சூரியனின்' ஓட்டம் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.)
இந்த வகையான நேர அளவே அக்காலத்தில் சிவில் மற்றும் கடல் சார்ந்த பயண பயன்பாட்டிற்கு வகுக்கப்பட்டிருந்தது.
உலகளாவிய நேரம் (Universal Time):
1928 ஆம் ஆண்டில் சர்வதேச வானியல் சங்கம் பரிந்துரைத்ததின் படி அன்றிருந்த கிரீன்விச் சிவில் நேரமே (GMT) உலகளாவிய நேரம் (UT) என குறிப்பிடப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் தான் "உலகளாவிய நேரம் (Universal Time)" மற்றும் "உலகளாவிய நாள் (Universal Day)" அறிமுகமானது.
குறிப்பிட்ட வான் ஆய்வுக்கூடத்தில் வகுக்கப்பட்ட நேரத்தை UT0 ("UT-பூஜ்யம்") என்றனர். பூமியின் சுழட்சியினால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்யும் பொருட்டு, UT0 உடன் அதற்குரிய நாழிகையில் திருத்தங்கள் (லீப் நொடிகள்) சேர்க்கப்பட்டு UT1 அறிமுகப்படுத்தப்பட்டது. UT0 வின் புதுப்பிகப்பட்ட வெளியீடு UT1 எனலாம்.
எனினும் பூமியில் ஏற்படும் பருவ மாற்றம், கடல் சீற்றம்போன்றவற்றால் ஏற்படும் விசையேறுதலுக்காக (Momentum changes) UT1னுடன், சில ஈடேற்றம் செய்யப்பட்டு UT2 உருவாகியது. UT1 ன் புதுப்பிகப்பட்ட வெளியீடு UT2 எனலாம்.
இந்த UT2 நேர அளவிலும் கூட, ஓத உராய்வு (Tidal Friction), மற்றும் அதிவேக ஓத மற்றும் புயல்கள் (High Tides and Winds) போன்ற அதிபயங்கர மாற்றங்களினால் பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தை தன்னகத்தே உட்கொள்ள முடியவில்லை.எனவே, இந்தச் சூரிய அளவு முறையிலும் நேர நிர்ணயத்தின் துல்லியம் எட்டப்படவில்லை. இந்த வகையான நேர நிர்ணயங்கள், சிவில் பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்புடையதாக இருந்தது.
சூரியனை வைத்தும், சீரற்ற பூமியின் சுழற்ச்சியை வைத்தும் ஒரு துல்லியமான நேர அளவை குறிப்பிட முடியாத காரணத்தால் அறிவியல் விஞ்ஞானிகள் மாற்று வழியை அறிமுகப்படுத்தினர். அது தான், அட்டாமிக் டைம் (Atomic Time) - அணு நேரம்.
ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC (Coordinated Universal Time):
சீசியம் (Cesium) அணுக்கதிர்களின் நிலையான அதிர்வலைகளின் உதவியால் நேர அளவீடு கருவி ஒன்றின் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. இது அணு நேரம் (அட்டாமிக் டைம்) என்றும் இதன் அளவு அணு நொடிகள் (அட்டாமிக் செகண்ஸ்) என்றும் அழைக்கப்படுகிறது. இது முற்றிலுமாக ஒரு அறிவியல் சாதனமாகும். ஒரு நாளின் அளவாக 86,400 விநாடிகள் கொண்டு ஒரு நாளின் நேரம் கணக்கிடப்படுகிறது. கணக்கிடப்பட்ட நேரத்திற்கும் சூரியனின் ஓட்டத்திற்கும் (Actual Time based on Sun) எந்த தொடர்புமிருக்காது.
ஆயினும், விண்ணில் அமைக்கப்பட்டுள்ள International Earth Rotation and Reference Systems Service (IRES) பூமியின் ஓட்டதை கண்கானித்து, தேவைப்படும் பொழுது UTC யுடன் லீப் நொடிகளை சேர்க்கவும் பரிந்துரைக்கும். அதாவது, கணக்கிடப்பட்ட நேரத்தோடு அதற்குரிய திருத்தங்களும் இடம்பெறும். (இங்கு லீப் நொடிகள் என்பது பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை/ பின்னடைவுகளை உள்ளடக்கி, கூட்டவோ குறைக்கவோ செய்யப்படும் மணித்துளிகளின் அளவு ஆகும்).
இவ்வாறு பூமியின் சுழற்சிற்கேற்ப கணக்கிடப்பட்ட நேரம் அவ்வப்பொழுது ஒத்தியக்கப்படுவதால் இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC (Universal Time- Coordinated) எனப்படுகிறது.
அணு நேரம் UTC, சூரிய நேரமான UT1 ஐ ஒத்து அதிகபட்சமாக 0.9 நொடிகள் வரையில் தான் வித்தியாசத்தில் இருக்க முடியும். இரண்டிற்கும் அதிகபட்சம் 0.9 நொடிகள் வரையில் வித்தியாசம் இருக்கும் என்பதால் மிகத்துல்லியமான GPS, வானியல் கணக்கு போன்ற பயன்பாட்டிற்கு UTC மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். வானியற்பியல் கணக்கிற்காக நாம் பயன்படுத்து UTC நேர கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, GMT ---> UT0 ---> UT1 ---> UT2. தற்பொழுது உள்ள GMT ---> UT2 ஆகும்.
UTC கணக்கிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நேர நிர்ணயம் ஆகும்
சுருங்கச் சொன்னால், GMT அடைந்த பரிணாம வளர்ச்சியே UTC எனலாம் ! அளவீடு முறை மட்டும் வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம்.
- ராசிக்
- விவரங்கள்
- அண்ணா.நாகரத்தினம்
- பிரிவு: புவி அறிவியல்
விஞ்ஞானம் என்பது என்ன? விஞ்ஞான அறிவு எவ்வாறு பெறப்படுகின்றது? என்பது விஞ்ஞானத்தின் மீதும் விஞ்ஞான தத்துவத்தின் மீதும் கேட்கப்படும் அடிப்படையான கேள்விகளாகும். விஞ்ஞான அறிவு என்பது விவரங்களிலிருந்தும், தரவுகளிலிருந்தும், பொருண்மைகளிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் பெறப்படும் அறிவாகும். விஞ்ஞானம் என்பது அனுபவ உண்மைகளிலிருந்து பெறப்படும் அறிவாகும் என்பது அறிவியல் தத்துவம் குறித்த பொதுவாக எல்லோராலும் கோட்பாடாகும். இது விஞ்ஞான துறையைச் சார்ந்த அறிஞர்களும் கூட இவ்வாறுதான் விளக்கம் கொடுப்பார்கள்.
நாம் புற உலகத்தை கண்ணால் பார்க்கின்றோம்; காதால் கேட்கின்றோம்; வாயால் சுவைக்கின்றோம்; மூக்கால் நுகர்கின்றோம்; உடலால் உணர்கின்றோம். இந்த அனைத்தும், பொருட்கள் புலன்களைப் பாதித்து நமது மூளையால் உணரும் அனுபவங்களாகும். ஆக புறவுலக பொருட்கள் குறித்த அறிவைப் பெறவேண்டுமானால் அவற்றின் நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நாம் உணரவேண்டும். அவ்வாறின்றி பொருட்கள் குறித்த அறிவைப் பெறவியலாது என்பதைதான் மேற்குறித்த விஞ்ஞான கண்ணோட்டம் உணர்த்துகின்றது. நேரடியாக பார்ப்பது, கேட்பது, தொடுவது போன்ற அனுபவங்களை மட்டும் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் கற்பனைகளையும், யூகங்களையும் விஞ்ஞானம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஆக விஞ்ஞான அறிவு என்பது பொருட்கள் குறித்த பொருண்மைகள், நிகழ்வுகள், அனுபவங்கள் மீது கட்டப்படும் கட்டிடம் ஆகும். இன்றளவும் இத்தகையக் கோட்பாடுதான் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆனால் பண்டைய கால விஞ்ஞானத்தின் அணுகுமுறை, கோட்பாடு என்பவை முற்றிலும் வேறானவையாக இருந்தது.
பண்டைய விஞ்ஞானத்தின் அடிப்படை
கிரேக்கர்கள் தங்களது சிந்தனைக்கான வடிவமைப்புகளை சில அடிப்படையாக கோட்பாடுகளிலிருந்தோ அல்லது கொள்கைகளிலிருந்தோ பகுத்தாராய்வதன் மூலம் பெற்றார்கள்; தொகுத்தாராயும் முறை என்பது அவர்களுக்கு அறியாத ஒன்றாக இருந்தது எனலாம். பகுத்தாராய்வதும், தர்க்கஅறிவும் கொண்டதுதான் கிரேக்கத் தத்துவத்தின் சாரமாகத் திகழ்ந்தன.
இத்தகைய பகுத்தாய்வு முறைமைக்கு வித்திட்டவர் பண்டைய கிரேக்க விஞ்ஞானியும் தத்துவ அறிஞருமான அரிஸ்டாடில் ஆவர். இவரது காலம் தொட்டு 17 ஆம் நூற்றாண்டுவரை பகுத்தாய்வு முறைமைதான் அனைத்து விஞ்ஞான துறைகளிலும் பெரும் செல்வாக்குச் செலுத்திவந்தன. பண்டைய விஞ்ஞானம் என்பது பகுப்பாய்வு முறையின் மீது எழுப்பப்பட்டது என்றால் அது மிகையாகாது.
மரபு விஞ்ஞானத்தின் அடிப்படைகள்
பருப்பொருட்களுக்கிடையே செயல்படும் விசையைப் பற்றிய துல்லியமான வரையறை செய்தவர் நியூட்டன் ஆவர். இந்த விசையானது, இருபொருட்களுக்கும் இடையே உள்ள தூரத்திற்கும் அவற்றின் நிறைக்கும் உள்ள சமன்பாடாகும். அதுதான் ஈர்ப்புவிசை எனப்படுகின்றது.
பெளதீக நிகழ்வுகள் அனைத்தும், பொருட்களின் பரஸ்பர ஈர்ப்பினால் இயங்குகின்ற இயக்கமாக சுருக்கப்பட்டன. அதாவது ஈர்ப்பு விசையினால் நிறைப்புள்ளி மீதான விசையின் விளைவை துல்லியமான கணிதவியல் வடிவத்தில் வடிக்கும் பொருட்டு, நியூட்டன் முற்றிலும் புதிய கருத்தாக்கங்களையும் கணிதவியல் நுட்பங்களையும் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. அவை வகைநுண் கணிதம் எனப்பட்டது.
பருப்பொருட்களும் அவற்றிற்கிடையில் செயல்படும் விசையும் இறைவனால் உருவாக்கப்பட்டதாக கருதப்பட்டன. நியூட்டனும் இவ்வாறே நம்பினார். முதல் முடுக்கம் பெற்றப்பின் ஒழுங்குமுறையில் பிரபஞ்சம் இயங்கும். இத்தகைய ஒழுங்குமுறைக்குட்பட்ட இயக்கம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதே நியூட்டனின் பிரபஞ்சம் பற்றிய கருத்துரையாகும்.
நியூட்டனின் இயந்திரவியல் கொள்கை
துவக்கத்தில் பிரபஞ்சமானது இயக்கம் ஏதுமின்றி ஓய்வுநிலையில் இருந்தது. எல்லாப் பொருட்களும் இயக்கமற்றுதான் இருந்தன. முதல் முடுக்கம் பெற்றப்பின் பிரபஞ்சம் தானே சுயமாக இயங்கத் துவங்கியது. அதன் பிறகு எந்த தலையீடும் தேவையில்லை. இந்த நியூட்டனின் இயந்திரவியல் கொள்கைதான் மரபுவழி இயற்பியலுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் வரைக்கும் இயற்கையியல் தத்துவங்களுக்கு ஓர் உறுதியான அடிப்படையைத் தந்தது.
நியூட்டனின் கருத்துப்படி, கடவுள் முதலில் பருப்பொருட்களையும் அவற்றிற்கிடையேயான விசைகளையும் அடிப்படை இயக்க விதிகளையும் படைத்தார். பிறகு, ஒட்டுமொத்த பிரபஞ்சமும், ஓர் இயந்திரம்போல, மாறாத விதிகளால் தீர்மானிக்கப்பட்டு, இயங்கப்பட்டது. இன்னமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றது.
இயற்கை பற்றிய இயந்திரவியல் கண்ணோட்டத்தின்படி, இயற்கையின் இயக்கம் என்பது காரணகாரிய உடையதாகவும், கறாராகத் தீர்மானிக்கக் கூடிய தன்மையாக இருந்தது. இந்த வகையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரியுமானால் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை முழுமையான உறுதியுடன் முன்கூட்டியே சொல்லிவிடலாம் என்று முழுமையாக நம்பப்பட்டது.
நியூட்டனின் கொள்கைப்படி வெளியானது (Space) எப்பொழுதும் மாற்றமில்லாதது; நிரந்தரமானது. காலம் (Time) என்பது சார்பற்றது; சுயேச்சையானது. அவை இயற்கையோடும் உலகத்தோடும் எத்தகைய சார்பையோ அல்லது ஒட்டுறவையோ பெற்றிருக்கவில்லை என்பது இவரது தீர்மானகரமானக் கருத்து.
நியூட்டனின் இயந்திரவியல் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தது. பிரபஞ்சம் என்பதே நியூட்டனின் இயக்கவிதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிவருகின்றது என்று முழுமையாக நம்பப்பட்டது. இதையே முடிவான கொள்கைகளாகக் கொள்ளப்பட்டன. நியூட்டனின் இயக்கவியல் சமன்பாடுகள் மரபு வழி இயந்திரவியலுக்கு ஆதாரமானவை. அவை நிலைநிறுத்தப்பட்ட விதிகளாக கருதப்பட்டன.
நியூட்டனிய உலகக் கண்ணோட்டத்தின் பிரதான கருத்தாக்கங்களாக விளங்கியவை: 1.சார்பற்ற வெளியும் காலமும், 2. அழிக்கவொண்ணா சிறிய திடமான துகள்கள், 3. கடுமையான காரண காரியங்களுடன் கூடிய இயற்கை நிகழ்வுகள், 4.இயற்கையை ஆய்வதற்கான புறநிலையான அணுகுமுறை ஆகியனவாகும்.
மைக்கேல் பாரடே தாமிரக் கம்பிச் சுருளுக்கருகில் காந்தத் துண்டை நகரச் செய்தார். இதன்மூலம் மின்னோட்டத்தை ஏற்படுத்தினார். காந்த துண்டை நகரசெய்வது என்ற இயந்திரவியல் வேலையை மின்னாற்றாலாக மாற்றிய செயல் விஞ்ஞானத்திலும் தொழிற்நுட்பத்திலும் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மின்சாரம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகளை நியூட்டனின் கொள்கைகளால் விளக்க முடியாமல் போனது.
மைக்கேல் பாரடே மின்சாரம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகளை நடைமுறையில் ஆராய்ந்து கொண்டிருந்த அதேவேளையில், இவருக்கு துணையாகவும் இணையாகவும் கோட்பாட்டு ரீதியில் ஒரேதிசையில் பயணித்தவர் கிளார்க் மாக்ஸ்வெல் ஆவர். இவரது கொள்கை அடிப்படையாக வைத்து, இறுதியில் முழுமையான மின்காந்தவியல் கொள்கை உருவாக்கப்பட்டது.
நியூட்டனின் கண்ணோட்டத்தில் விசைகள் தாம் செயல்படுகின்ற பொருட்களோடு மட்டுமே தொடர்பு கொண்டனவாக இருந்தன. தற்போது ‘விசை’ என்கிற கருத்தாக்கம் இருந்த இடத்தில் ‘விசைப்புலம்’ என்ற ஆழமான கருத்தாக்கம் இடம் பிடித்துக்கொண்டது. இக்கொள்கையின் வளர்ச்சிதான் ‘மின்சார இயக்கவியல்’ எனப்பட்டது. அதன்படி ஒளி என்பது விரைவாக மாறிக் கொண்டிருக்கின்ற, அலைவடிவங்களில் பயணிக்கின்ற ஒரு மின்காந்தப் புலம் மட்டுமே என்று உணர்ந்தறியப் பட்டது. இதன் மூலம் இவர்கள் நியூட்டனின் இயற்பியலைக் கடந்து சென்றனர்.
ஆனாலும் நியூட்டனின் இயந்திரவியல், இயற்பியலின் ஆதாரம் என்கிற தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டது என்பதையும் மறுக்க வியலாது. மேக்ஸ்வெல் தன்னுடைய முடிவுகளை இயந்திரவியல் வழியே விளக்குவதற்கு முற்பட்டார் என்பது உண்மைதான். இருந்த போதிலும் தன்னுடைய கொள்கையின் அடிப்படைக் கூறுகள் புலங்கள்தாம் என்பதையும் இயந்திரவியல் அமைப்புகள் அல்ல என்பதையும் உள்ளுணர்வாகக் கொண்டிருந்தார். இந்த உண்மையை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐன்ஸ்டீன் தெளிவாகக் கண்டறிந்தார்.
நவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களும்
19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூட்டனின் இயற்பியல் உலகம் ஆட்டம் காணத் தொடங்கியது என்று கூறலாம். இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் இயற்பியல் ஒட்டுமொத்தமாக தீவிரமான மாற்றத்திற்குள்ளானது. நியூட்டனிய உலகக் கண்ணோட்டத்தின் பிரதான கருத்தாக்கங்களான சார்பற்ற வெளியும் காலமும், அடிப்படைத் துகள்கள், கடுமையான காரண காரியங்களுடன் கூடிய இயற்கை நிகழ்வுகள், இயற்கையை ஆய்வதற்கான புறநிலையான அணுகுமுறை போன்ற அனைத்து கோட்பாடுகளையும் தகர்த்தன என்று கூறப்படுகின்றது. இன்றைய விஞ்ஞானத் தத்துவமானது, குவாண்டம் சார்பியலின் தத்துவ அடித்தளத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்டது என்றால் அது மிகையாது.
இயற்கையின் உட்பொதிந்த ஒழுக்கமைப்பின்பால் ஐன்ஸ்டீன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இயற்பியலுக்கு ஒருங்கிணைந்த அடித்தளம் ஒன்றைக் கண்டுபிடிப்பதே அவருடைய அறிவியல் வாழ்க்கை முழுவதிலும் ஆழ்ந்ததோர் அக்கறையாக இருந்தது. மரபுவழி இயற்பியலில் இரண்டு தனித்தனிக் கொள்கைகளாக மின் இயக்கவியலும் இயந்திரவியலும் இருந்து வந்தன. இவற்றிற்கிடையே ஒரு பொதுவானதொரு ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். இந்தக் கட்டமைப்புதான் சார்பியல் சிறப்புக் கொள்கை என்றழைக்கப் படுகின்றது. இது மரபு வழி இயற்பியலின் வடிவமைப்பினை ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தியது எனலாம். அதே சமயத்தில், வெளி, காலம் பற்றிய மரபுவழி கருத்தாங்களுக்கும் ஒரு தீர்க்கமான மாற்றத்தினை ஏற்படுத்தினார்.
1905 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் வெளியிட்ட இரு கட்டுரைகள், அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தின. ஒன்று அவருடைய சார்பியல் சிறப்புக் கொள்கைகளாகும்; மற்றொன்று மின்காந்தக் கதிர்களைப் புதியதொரு கோணத்தில் ஆய்வதற்கு வழிவகுத்தது. அதுவே பின்னர், அணுவியல் நிகழ்வுகளை விளக்கும் கொள்கையான குவாண்டம் கொள்கையின் சிறப்பம்சமாக ஆனது என்று கூறுவது மிகப் பொருத்தமாக அமையும்.
1915 இல் ஐன்ஸ்டீன் சார்பியல் பொதுக் கொள்கைகளை முன்மொழிந்தார். இதை அவருடைய சிறப்புக் கொள்கையின் கட்டமைப்பு ஈர்ப்பு சக்தியை, பருப்பொருள் தம்மை பரஸ்பரம் ஈர்த்துக் கொள்ளும் சக்தியை, உள்ளடக்கும்படி விரிவாக்கப்பட்டது. சிறப்பு கொள்கைகள் எண்ணற்ற பரிசோதனைகளால் உறுதிப் படுத்தப்பட்ட போதிலும் பொதுகொள்கை தீர்மானகரமாக உறுதிபடுத்தப் படவில்லை என்றே சொல்லலாம்.
சார்பியல் கொள்கைப்படி வெளி என்பது முப்பரிமாணம் கொண்டதாகவோ காலம் தனித்துவமான ஒன்றாகவோ இல்லை. இவை இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட 'வெளி - காலம்' என்னும் நாற்பரிமாணத் தொடர் அமைப்பாகும். சார்பியல் கொள்கையின்படி காலத்தைத் தொடர்பு படுத்தாமல் வெளியைப் பற்றியோ, வெளியைத் தொடர்புபடுத்தாமல் காலத்தைப் பற்றியோ இயலாது.
பார்க்கக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்துகொண்டிருக்கும் வெவ்வேறு பார்வையாளர்கள் அந்நிகழ்வுகளை வெவ்வேறு காலக் கிரமப்படி வரிசைப் படுத்துவார்கள். ஒரே சமயத்தில் நிகழ்ந்தனவாக ஒரு பார்வையாளரின் கண்களுக்குட் பட்ட இரு நிகழ்வுகள் வேறு பார்வையாளர்களுக்கு வெவ்வேறு காலக் கிரமங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளாகத் தோன்றலாம்.
பொருண்மை என்பது ஆற்றலின் வடிவம் மட்டுமே என்பது உணரப்பட்டது. ஆற்றலுக்கும் பொருண்மையின் நிறைக்கும் உள்ள தொடர்பு E=mc2 என்கிற புகழ்பெற்ற சூத்திரத்தில் வரையறுக்கப்படுகிறது. இங்கு ஒளியின் வேகம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒளியின் வேகத்தை ஒட்டிய திசை வேகத்தைக் கொண்ட இயற்கை நிகழ்வுகளை விவரிக்க வேண்டுமானால் சார்பியல் கொள்கையின் துணையுடன் தான் செய்யவேண்டும்.
பருப்பொருளின் இரட்டைப் பண்பு
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொதுவாக இரண்டு நிலைகளில் உள்ளன. 1) பொருள் 2) ஆற்றல் ஆகியனவாகும். பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது. ஒரு பொருளைப் பிளந்து கொண்டே சென்றால் கடைசியில் மிஞ்சக் கூடியது அணு மட்டுமே. அணுவைப் பிளக்க முடியாது என்று முதலில் அறிவியல் கண்டுபிடித்தது.
அணுவையும் பிளக்க முடியும். அதனுள்ளே உள்ள நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவைதாம் கடைசியான துகள்கள் என்று அந்த விதி மற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டது. நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவை எல்லாம் சரிதான். ஆனால் அவையும் இறுதியான துகள்கள் அல்ல. அவற்றுக்குள்ளும் நுண் துகள்கள் உள்ளன என்று அந்த விதி மேலும் வளர்க்கப்பட்டு செழுமைப் படுத்தப்பட்டது.
இந்த விதியும் குவாண்டம் கொள்கையால் மேலும் மேம்படுத்தப்பட்டது. அதாவது குவாண்டம் கொள்கையானது ஒளியை, அலைப்பண்புடைய துகள்களாக, பொருளாக விளக்குகின்றது. குவாண்டம் கொள்கையின்படி மிகச்சிறிய துகள்கள் எனப்படுபவை திடப்பொருட்களாக இருக்கவில்லை. பருப்பொருளின் நுண்ணணுவியல் அலகுகள் மிகவும் சூக்குமமான அமைப்புகளாகவும் இரட்டைத் தன்மை கொண்டனவாகவும் உள்ளன. நாம் அவற்றை பார்க்கின்ற பார்வையைப் பொறுத்து சில சமயங்களில் துகள்களாகவும் சில சமயங்களில் அலைகளாகவும் தோன்றுகின்றன. இதே இரட்டைத்தன்மை மின்காந்த அலைகளாகவும் துகள்களாகவும் வடிவெடுக்கின்ற ஒளியினாலும் வெளிக்காட்டப் படுகின்றது.
பருப்பொருளின் இந்த இரட்டைப் பண்பு இதுவரை இயற்பியல் அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே ஒரே சமயத்தில் துகள்களாகவும் அலைகளாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும் ஒன்றாக இருப்பது இயற்பியல் துறைக்கு புதுமையாக இருந்தது. இந்த முரண்பாடுகள் கொவான் போன்ற புதிர்கள் எழுவதற்கு வழிவகுத்தன. இறுதியாக குவாண்டம் கொள்கையை வடிவமைப்பதில் நிறைவுற்றன. இது மேக்ஸ் பிளான்க் என்கிற விஞ்ஞானியின் கண்டுபிடிப்பால் சாத்தியமானது. அவர் வெப்ப ஆற்றல் தொடர்ச்சியாக வெளிப்படுவதில்லை என்றும் ஆற்றல் பொட்டலங்களாகவே வெளிப்படுகின்றன என்றும் கண்டறிந்தார். இத்தகைய ஆற்றல் பொட்டலங்களையே குவாண்டங்கள் என்றழைக்கப்பட்டன.
பருப்பொருள் ஒரு சமயத்தில் துகள்களாகவும், அலைகளாகவும் மாறிமாறி இயங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கு பருப்பொருள் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கின்றது என்ற பாரம்பரிய நம்பிக்கை கேள்விகுறியானது. இது ஒரு நிச்சயமற்ற தன்மையைக் காட்டியது. அவ்வாறு பருப்பொருளானது துகள்களாக இருப்பதற்கும் அலைகளாக இருப்பதற்கும் சாத்தியக்கூறுகள் மட்டுமே இருந்தன. ஆகவேதான் அவை ஒரே சமயத்தில் அலைகளாகவும் துகள்களாகவும் இருக்கின்றன. இவை கணித நிகழ்திறன் என்ற விதியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கின்றன என்று உணரப்பட்டன.
விஞ்ஞானத்தின் புதிய கருத்தோட்டங்கள்:
1. மரபுவழி இயந்திரவியல் விஞ்ஞானக் கருத்தோட்டத்தின்படி, முழுமையைப் பற்றிய இயக்கவியல் அமைப்பினைப் புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், அதன் பகுதிகளின் பண்புகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பகுதிகளைப் பற்றிய அடிப்படைப் பண்புகள், அவை செயல்படக்கூடிய யுக்திகள் பற்றி தெரிந்து கொண்டால் முழுமையின் இயக்கவியலை வகுத்துவிடலாம் என்பது அதன் கருத்தாகும்.
புதிய கருத்தோட்டத்தின்படி முழுமையின் இயக்கவியல் மூலமாகத்தான் பகுதிகளின் பண்புகளை முழுமையையாகப் புரிந்து கொள்ள இயலும். முழுமையினுடைய இயக்கவியலைப் புரிந்து கொண்டுவிட்டால் பின்னர் அதன் பகுதிகளின் பண்புகளையும் செயல்பாட்டு படிவங்களையும் வகுக்க இயலும். முழுமைக்கும் அங்கங்களுக்கும் இடையே விஞ்ஞன ரீதியான இந்த உறவுமுறையில் ஏற்பட்ட மாற்றமானது இயற்பியலில் குவாண்டம் கொள்கை உருவானபோது ஏற்பட்டதாகும்.
2. மரபு இயற்பியலின்படி பேரண்டமானது ஓர் இயந்திரமாக உருவகம் செய்து வந்ததுள்ளதைப் பார்த்தோம். இத்தகைய இயந்திரக் கண்ணோட்டமானது, பேரண்டத்தினை பகுதிகளாகப் பிரிக்கின்றது. பகுதிகளை தனிப்பட்ட முறையில் வரையறுக்கின்றது. அதன் இயக்கத்தை தனிமைப்படுத்திவிடுகின்றது. பேரண்ட முழுமையின் உள்ளார்ந்து இணைக்கப்பட்டுள்ள உறவுகளைத் துண்டிக்கின்றது. இத்தகைய பகுதிகளைத்தான் பருப்பொருட்கள் என்று கருதிக் கொள்கிறோம்.
ஆனால் புதிய இயற்பியலானது இந்தக் கண்ணோட்டத்தை மாற்றி யமைத்தது. இதன்படி பிரபஞ்சம் என்பது உள்ளார்ந்து இணைக்கப்பட்டதோர் இயக்கபூர்வமான முழுமை என்கிற உருவகமாகக் காணப்படுகிறது. அதனுடைய அங்கங்கள் எல்லாம் உள்ளார்ந்த சார்புதன்மை கொண்டவையாகும் என புதிய இயற்பியல் கொள்கைக் கூறுகின்றது.
3. பழைய கருத்தோட்டத்தின்படி அடிப்படையான வடிவமைப்புகள் இருப்பதை கருதி அவை தமக்குள் செயல்படுவதற்கான விசைகளும் யுக்திகளும் வகுத்து அதன் வழி செயல்முறை என்கிற கருத்தாக்கம் எழுந்தது. புதிய கருத்தோட்டத்தின்படி செயல்முறை தலையாயது என்றும் ஒவ்வொரு வடிவமைப்பும் உள்ளார்ந்ததொரு செயல்முறையின் வெளிப்பாடே என்றும் எண்ணுகிறோம்.
விஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை
விஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை; பலமுறை மாறியுள்ளது; தலையாய விஞ்ஞானப் புரட்சிகள் நிகழ்ந்த போதெல்லாம் விஞ்ஞானத்தின் அடித்தளம் சரிந்து வந்துள்ளது. விஞ்ஞான வரலாறு முழுமையுமே மீண்டும் மீண்டும் அறிவினுடைய அடித்தளம் மாறிக்கொண்டே வந்துள்ளது. சில சமயங்களில் முற்றாக நொறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தின் தற்போதைய புதிய கருத்தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அத்தகையதொரு உணர்வையே ஏற்படுத்துகின்றது.
இயற்கையானது மனிதப் பார்வையாளனையும் ஒருங்கிணைந்ததோர் உட்கூறாக உள்ளடக்கிய உள்ளார்ந்த இணைப்புக் கொண்ட உறவுகளின் இயக்கப் பூர்வமான வலைப் பின்னல் என்று கருதப்படுகிறது. இந்த வலைப்பின்னலின் ஒவ்வொரு அங்கமும் ஏனைய அங்கங்களைப் போலவே உறுதியான வடிவங்கள்; இக்கருத்தின்படி இயற்கை நிகழ்வுகள் எந்த ஓர் அங்கத்திற்கும் ஏனைய அங்கங்களைக் காட்டிலும் அடிப்படையானது என்கிற கருத்திற்கு இடமளிக்காத வகையில் கருத்தாக்கங்களின் வலைப்பின்னல் என்கிற அடிப்படையில் விவரிக்கப்படுகின்றன.
விஞ்ஞானத்தின் முற்றமுடிந்த உண்மை என்று ஒன்று உண்டா?
விஞ்ஞானத்தில் முற்றும் முடிந்த உண்மை என்று எதுவும் இல்லை. விஞ்ஞான விதிகள் எல்லாம் குறைபாடுடையனவாகவும், தோராயமானவையாகவுமே இருக்கின்றன. இத்தகைய தோராயமான விளக்கங்கள் அடுத்தடுத்த முயற்சிகளில் காணப்படும் அடுத்தடுத்த முன்னேற்றங்களால் செழுமைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் அந்த மாதிரி முன்னேற்றங்கள் பாரதூரமான மாற்றங்களைக் கொண்டுவருவதில்லை.
ஒவ்வொரு புதிய கொள்கையும் முந்தைய கொள்கையோடு நன்கு வரையறுக்கப்பட்ட விதத்தில்தான் தொடர்புறுத்தப்படுகின்றது. புதிய கொள்கை பழையக் கொள்கையை முற்றிலும் மறுத்தலிப்பதில்லை. அதில் நிலவும் தோராயத்தன்மைச் சற்றே செழுமைப் படுத்தப்படுகின்றது. அவ்வளவுதான். எடுத்துக்காட்டாக குவாண்டம் இயந்திரவியல், நியூட்டனின் இயந்திரவியலை முழுமையாகத் தவறென்று நிரூபித்துவிடவில்லை. நியூட்டன் கால இயற்பியலோர் எல்லைக்குட்பட்டது என்று மட்டுமே நிறுவியுள்ளது.
நியூட்டனின் கண்டுபிடிப்பு பேரண்டத்தின் சீரான ஒழுங்கமைப்பைப் பற்றி கூறுகின்றது. இந்த அடிப்படையைக் குவாண்டம் இயந்திரவியலிலோ சார்பியல் கொள்கையிலோ மறுதலித்து விடவில்லை. மாறாக உறுதிப்படுத்தப் பட்டு புதிய கொள்கைகளாக வளர்த்தெடுக்கப்படுகின்றன.
பேரண்டத்தின் அடிப்படையான ஒற்றை நிலை மற்றும் உள்ளார்ந்த சார்புத் தன்மை, அதனுடைய இயற்கை நிகழ்வுகளின் உள்ளார்ந்த இயக்கப் பூர்வமானதன்மை ஆகிய நவீன இயற்பியலின் இவ்விரு மாபெரும் மையக் கருத்துக்கள் எதிர்கால ஆய்வுகளால் என்றுமே மறுத்தலிக்கப்பட மாட்டா.
திடப்பொருள் குறித்த மரபுரீதியான கருத்தாக்கம் உடைந்ததா?
குவாண்டம் கொள்கையானது திடப்பொருள் குறித்த மரபுரீதியான கருத்தாக்கங்களை உடைத்தெறிந்தது. மரபுவழியான இயற்பியல் 'திடமான பருப்பொருள்' என்ற தீர்மானகரமான கொள்கையை வரையறுத்தது. ஆனால் நவீன இயற்பியல் 'சாத்தியக் கூறுகளுள்ள அலை' போன்ற கொள்கையை உருவாக்கியுள்ளது. உலகம் என்பது தனித்துவமான 'அடிப்படைக் கட்டுமானக் கற்'களால் ஆனது என்பதை இது மறுக்கின்றது.
அணுகருவிற்குள் செய்யப்பட்ட பரிசோதனைகளின் விளைவாக ஏராளமான நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது அணுவின் அடிப்படைத்துகள் என்ற கொள்கையை நீர்த்துப் போகவைத்தது. இதை தொடர்ந்து அணுக்கரு நிகழ்வுகளை ஆராய குவாண்டம் கொள்கை போதுமானதாக இல்லை என்று உணர்ந்த விஞ்ஞானிகள், சார்பியல் கொள்கையை துணைக்கழைத்தனர்.
குவாண்டம் கொள்கையானது அணுக்கருவின் வடிவமைப்பைப் பற்றியும் அணுக்கருவிலுள்ள துகள்களுக்கிடையேயான உள்வினைகள் குறித்து ஆராயப் பயன்பட்டது. அதே போல அணுக்கரு விசையின் தன்மையைப் பற்றியும் அதன் சிக்கல் மிகுந்த வடிவத்தைப் பற்றியும் ஆராய சார்பியல் கொள்கை பயன்பட்டது. இவ்வாறாக குவாண்டம் கொள்கையும் சார்பியல் கொள்கையும் சேர்ந்து துகள்கள் குறித்து ஒரு முழுமையான கொள்கையாக உருவாக்கப்பட்டுள்ளன.
பிரபஞ்சம் முழுமையுமே பிரிக்க வோண்ணா ஆற்றல் படிவங்களாலான இயக்க பூர்வமானதொரு வலைபோல காட்சியளிக்கிறது. அவை அனைத்தும் பருப்பொருளின் அடிப்படையான ஒற்றை நிலையையும் உள்ளார்ந்த இயக்கவியல் பண்பையும் பிரபலிக்கின்றன. எனவே துகள்களை தனித்துவமான தொரு அமைப்பாக காணமுடியாது. முழுமையோடு ஒருங்கிணக்கப் பட்டதொரு பகுதியாகவே புரிந்து கொள்ளக் கூடும்.
இயற்கையை புறநிலையாக மட்டும் விளக்குவது இனி சாத்தியமா?
புறநிலையில் நிகழும் ஒரு நிகழ்வை அல்லது இருக்கும் பொருளை நோக்கும் வேறுபட்ட தனிநபர்கள் வெவ்வேறாகப் பார்க்கின்றோம், உணர்கின்றோம். புறநிலை என்பது ஒன்றுதான். புறநிகழ்வு என்பது ஒன்றுதான். ஆனால் அதை உற்று நோக்கும் எல்லோரும் ஒரே மாதிரியாக அந்த ஒன்றாக அப்படியே உணர்வதில்லை. உள்வாங்கிக் கொள்வதில்லை. இதற்கான காரணம் என்னவென்றால் அவர்களின் நோக்கம், விருப்பம், கவனம், திறன் ஆகிய அகநிலை அம்சங்கள் வேறுபட்டிருப்பதுதான். ஆக வேறுபட்ட அகநிலை அம்சங்கள் உடைய மனிதர்கள் புறநிலையை ஒரே மாதிரியாக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதிலிருந்து புலனாகின்றது.
அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் சில நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். ஒருவரது உணர்ந்தறியும் தன்மையானது அப்பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நாம் அனைவரும் வெவ்வேறு வகையில் நம்பிக்கைகள் கொண்டிருப்பதால் நமக்கு இவையாவும் வெவ்வேறாக உணர்ந்தறியப் படுகின்றன. சான்றாக, கற்கால மனிதன் ஒரு மரத்தைப் பார்ப்பதாக கற்பனைச் செய்துகொள்வோம்; அவரோடு உங்களது உணர்வை ஒப்பிட்டுப் பாருங்கள்; மேலும் ஒரு பயிற்சி பெற்ற தாவரவியல் அல்லது உயிரியல் விஞ்ஞானி உணர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும்.
நிச்சயமாக, இம்மூன்று நபர்களும் மூன்று விதமாக விவரிப்பதை எளிதில் அறியமுடியும். இத்தகைய வேறுபாடுகள் ஒருவேளை உணர்தலில் உள்ள வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றன; ஒருவரின் உணர்வுகள் அவர் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கையின் பாற்பட்டதாகும். அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பின்னணியில் அவரது உணர்வுகள் வடிவமைக்கப்படுகின்றன என்றால் அது மிகையாகாது. ஆக, அனைவரது உணர்வுகள் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய கருத்துரையானது, புறநிலையாக நின்று ஆராயும் அறிவியல் அணுகுமுறையை முற்றிலும் புறந்தள்ளிவிடுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
குவாண்டம் இயற்பியலின்படி பார்ப்போனையும் பார்க்கப்படும் பொருளையும் பிரிக்கமுடியாது; இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆக குவாண்டம் இயற்பியலானது அகநிலையும் புறநிலையும் இணைத்து விடுகின்றது. இவ்வாறாக ஆய்வாளன் என்பவன் ஆராய்ச்சிச் செயல்முறைகள் என்கிற சங்கிலித் தொடரிலிருந்து பிரித்தெடுக்க இயலாவண்ணம் இறுதிப் பிணைப்பாக இணைந்துவிடுகின்றான்.
இயற்கையை புறநிலையில் மட்டும் நின்று விவரிப்பதும் விளக்குவதும் இனி இயலாத காரியமாகிவிட்டது. இதுவரை ஆராய்ச்சியாளனுக்கும் ஆராயப்படுகிற உலகினுக்கும் இடையே ஒரு இணைக்கமுடியாத பிரிவினையைக் கடைபிடிக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை குவாண்டம் அணுவியல் ஆய்வுகளில் இனி கையாளவியலாது என்று கூறப்படுகின்றது. இவ்வாறாக விஞ்ஞான ஆராய்ச்சியில் அகநிலையும் புறநிலையும் இணைந்து நிற்கின்றன.
- விவரங்கள்
- சி.மதிவாணன்
- பிரிவு: புவி அறிவியல்
மதிவாணனின் குறிப்பு:
அன்பானவர்களே!
சில நாட்களுக்கு முன்பு கூட்டமொன்றில் அமர்ந்திருந்தபோது, ‘…’ இனம் வந்ததுதான் நமக்குப் பிரச்சனை என்று நண்பர் ஒருவர் சொன்னார். அவர் நன்கு படிப்பவர்தான். எந்தவித குறுகிய பார்வையையும் வைத்துக்கொள்ளக் கூடியவர் அல்ல.
அப்போதுதான் யோசித்தேன். மனித குலம் தோற்றம், பரவல் பற்றிய சமீபத்திய அறிவியல் செய்திகள் தமிழில் பரவலாகச் சென்று சேரவில்லை. இன்னும் வழக்கொழிந்த கருத்தாக்கங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்பது புரிந்தது.
எனவே, மனித குலத் தோற்றம் மற்றும் வளர்ச்சி பரவல் பற்றிய செய்திகளை மீண்டும் ஒரு முறை படிக்க ஆரம்பித்தேன்.
அவற்றில் சற்று வாசிக்க எளிமையான ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்களில் மாறுபடும் வேறுபல கட்டுரைகளும் உள்ளன. ஆனாலும், இக்கட்டுரையின் அடிப்படையை மறுப்பதற்கில்லை.
இந்தியாவிலும் மரபணு தேடல் நிகழ்ந்தது. உசிலம்பட்டியில் வாழும் மனிதர்களிடம் அந்த மரபணு கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி இந்தியாவில் நடைபெற்ற மரபணு தேடல் பற்றிய செய்திகளையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். நேரம், வாய்ப்பு கிடைத்தால் அதுபற்றியும் பின்னர் எழுதுவேன்.
100 ஆண்டுகளுக்கு முந்தைய ‘வந்தேறிகள்’ போன்ற கருத்துக்களை விட்டு விலகிப் பயணித்து சமீபத்து அறிவியலின் கண்டுபிடிப்புகளை தமிழகத்தில் பரப்ப இந்தக் கட்டுரை உதவும் என்று நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரையை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. தழுவல் என்றும் சொல்ல முடியாது. ஆசிரியர் சொல்ல நினைத்ததைத் தமிழில் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறு இருந்தால் மன்னியுங்கள்.
ஆசிரியரின் ஆங்கிலக் கட்டுரையைப் பார்க்க: http://www.raceandhistory.com/cgi-bin/forum/webbbs_config.pl/noframes/read/662
***
மனித இனம் அன்று துவங்கிய மாபெரும் பயணம் பல பதிலில்லாத கேள்விகளை விட்டுச் சென்றது: நமது இனம் எவ்வாறு தோன்றியது? உலகம் முழுவதும் எவ்வாறு பரவியது? இந்த கிரகத்தினைத் தன் செல்வாக்குக்குள் வைத்திருக்கும் உயிரினமாக மாறியது எவ்வாறு?
இதற்கான சில பதில்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு கிடைத்தன. அறிவியலாளர்கள் அளித்த பதில்கள் அனைவரையும் அதிர வைத்தன. மரபணு ஆய்வின்படி, ‘150,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பெண்ணொருத்தியின் வாரிசுகள்தான் நாங்கள்’, என்று இன்று பிழைத்திருக்கும் அனைத்து மனிதர்களும் சொல்லிக்கொள்ள முடியும். அந்தப் பெண்ணுக்கு ஏவாள் (Eve) என்று பெயரிட்டார்கள். அதைவிடப் பொருத்தமான பெயர் வேறு என்ன இருக்க முடியும்?
மனித குலம் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற கருத்தாக்கம் அறிவியலாளர் சமூகம் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி கண்டது. ஆனபோதும் ஏவாளின் வழித் தோன்றல்கள் உலகம் முழுவதும் எப்படிப் பரவினார்கள் என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லாதிருந்தது.
தற்போது அறிவியலாளர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பண்டைய பருவநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு, தொல்லியல் ஆய்வு, பற்பல ஆயிரம் ஆண்டுகளில் மனித இனம் எவ்வாறு கிளைவிட்டு பரந்து விரிந்தது என்பது பற்றிய புதிய, மேலும் தெளிவான மரபணு ஆய்வு ஆகியவற்றைக் கொண்டு மனித குலம் எவ்வாறு உலகம் முழுவதும் எந்த வழித்தடங்களில் பரவியது என்பது பற்றிய விவரங்களை துண்டு துண்டாக சேகரித்து ஒன்று சேர்க்க முடிந்திருக்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
பட்டினியிலிருந்தும், பனியுகத்திலிருந்தும், எரிமலை வெடிப்புகளிலிருந்தும் தப்பித்து, சுறாக்கள் நிறைந்த கடலில், அற்பமான படகுளைக்கொண்டு பயணம் செய்து தப்பித்துப் பிழைத்த வீர காவியமது. எல்லா நல்ல கதைகளையும் போல எதிர்பாராத முடிவும் அந்தக் கதையில் உண்டு: நாம் நிறுவப்பட்ட கருத்தாக்கம் என்று நினைத்தது தவறு என்று வீர காவியத்தின் இறுதி காட்டுகிறது. எல்லோரும் கருதியது போல அல்லாமல், ஆப்பிரிக்காவில் இருந்து சற்றே தெற்கு நோக்கிய பாதையில் பயணப்பட்டு, செங்கடலின் குறுக்கே கிழக்கு நோக்கிச் சென்று, இப்போது ஏமன் என்று அறியப்படுகிற பகுதியை அடைந்து, பின்னர் இந்தியாவின் வழியே ஆஸ்திரேலியாவையும் அதற்கு முன்னதாக ஐரோப்பாவையும் மனித குலம் சென்றடைந்திருக்கிறது.
“ஆப்பிரிக்காவில் இருந்து ஒரே ஒரு புலப்பெயர்வுதான் நடந்திருக்கிறது”, என்கிறார் ஸ்டீபன் ஆப்பன்ஹைமேர் (Stephen Oppenheimer) . இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். நமது இனத்தின் ஒப்பிட முடியாத பெரும் பயணம் பற்றிய புதிய கருத்தாக்கத்தை மிகவும் வலுவாக பிரச்சாரம் செய்யும் அறிவியலாளர். "அவர்கள் வடக்கே போக முடியவில்லையா? அந்தப் பாதை பாலைவனத்தால் தடுக்கப்பட்டிருந்ததா? எனவே, அவர்கள் சற்றே தெற்கே விலகி நகரும்படியானது" என்கிறார் அவர்.
மனித குலத்தின் மாபெரும் பயணத்தை கட்டம் கட்டமாக கண்டறிந்து ஒன்று சேர்த்து முன்வைக்கும் ஸ்டீபன் ஆப்பன்ஹைமேரின் பணியில் முக்கியமான அம்சமாக மார்ட்டின் ரிச்சர்ட்டின் (Martin Richards) பங்களிப்பு அமைந்திருக்கிறது. ரிச்சர்ட் ஹட்டர்பீல்டு பல்கலைக்கழகத்தின் (Huddersfield University) மரபணுவியலாளர் ஆவார். அவரும் அவருடைய சகாக்களும் செய்த ஆய்வு ஓர் உண்மையை நிறுவியது. இன்றைய உலகத்தின் முழு மக்கள் தொகையும் ஆப்பிரிக்காவில் வேர் கொண்டு உலகம் முழுவதும் கிளைத்துப் பரவிய ஓர் குடும்பத்தினரே என்பதுதான் அவர்களின் கண்டுபிடிப்பு.
அவர்கள், உலகம் முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மரபணு மாதிரிகளை ஆய்வு செய்தார்கள். அதன் அடிப்படையில் ரிச்சர்ட் உருவாக்கிய வரைபடம் மனித குலத்தையும் அதன் பல்வேறு கிளைகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது.
மரபணுக்கள் வழியே தேடிச்சென்று…
அறிவியலாளர்கள், மரபணுக்களை ஆய்வு செய்வதன் மூலம் மனிதர்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க கடந்த இருபதாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார்கள். மரபணுவில் உள்ள மைட்கான்டரியா (mitochondria) என்ற DNA கட்டமைப்பில்தான் இத்தகவல்கள் உள்ளன என்று நடத்தப்பட்ட ஆய்வை ரிச்சர்ட் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். மற்ற மனித செல்களில் நடப்பது போலவே மைட்கான்டரியா உயிருக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்கிறது. அது பிரதான செல்லின் கருவில் உள்ள DNA விலிருந்து சுதந்திரமாக இருக்கும் தனக்கான DNAவைக் கொண்டுள்ளது. மைட்கான்டரியா ஒரு விசேஷமான குணாம்சம் கொண்டுள்ளது. அதன் காரணமாகத்தான் மனித குல வரலாற்றைப் படிக்க இதனைப் பயன்படுத்த முடிகிறது.
கருவுருவாகும்போது தாயின் DNA க்களில் பாதியும் ஆணின் DNA க்களில் பாதியும் இணைந்து புதிய உயிரின் DNA வடிவெடுக்கிறது. ஆனால், ஆணின் விந்துவில் உள்ள மைட்கான்டரியா, விந்திலேயே இறந்து போகிறது, அல்லது உதிர்ந்துபோகிறது. அதனால், தாயின் முட்டையில் உள்ள மைட்கான்டரியா அப்படியே புதிய உயிரில் பதியப்படுகிறது. இப்படியாக, மைட்கான்டரியா தாயிடமிருந்து தாயிக்கு, அதற்கு முன்பு தாயிடமிருந்து தாயிக்கு, அதற்கும் முன்பு தாயிடமிருந்து தாயுக்கு என்று எண்ணிக்கையற்ற தலைமுறைகளாக மாறாதிருக்கிறது.
மரபணு ஆய்வில் ‘ஏறக்குறைய அதே போல’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். அதுதான் மனித குலத் தோற்றம் பற்றிய புதிரை விடுவிக்கப் பயனாயிற்று. மற்ற DNAக்கள் போல மைட்கான்டரியாவுக்கும், வெகு நீண்ட காலப்போக்கில், தன்போக்கிலான திரிபு (Random Mutations) அடைவது நடக்கும். அவ்வாறான திரிபு அப்படியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதால், மனித குடும்பத்தின் கிளை எங்கே பிரிந்தது என்பதை கண்டுபிடிப்பது சுலபம்.
இரண்டு மரபணு மாதிரிகளில் மைட்கான்டரியா ஒரே மாதிரியான திரிபைக் காட்டுகிறது என்றால், அந்த மாதிரிகளின் சொந்தக்காரர்கள் தங்களுக்குப் பொதுவான எள்ளுப் பாட்டியின் எள்ளுப் பாட்டிக்கு எள்ளுப் பாட்டியை… அல்லது இன்னும் கொஞ்சம் அதிகமான எள்ளுப் பாட்டிகள் தாண்டி… எள்ளுப் பாட்டியைப் பொதுவாகக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். மரபணு திரிபு ஏறக்குறைய ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தோன்றுகிறது என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், இரண்டு மரபணு மாதிரிகள் எந்த இடத்தில் திரிபில் ஒத்துப்போகின்றன அல்லது போகவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் வரலாற்றுக்கு முந்தைய காலத்து முன்னோர்கள் எங்கே வெவ்வேறு கிளைகளாகப் பிரிந்தார்கள் என்று கண்டுணர முடியும்.
இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, அனைத்து மனிதர்களும் தங்களுக்குப் பொதுவான மைட்கான்டரியாவைக் கொண்ட, 150,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஏவாளைத் தங்களின் பொது மூதாதையாகக் கொண்டிருக்கிறார்கள் என்று நிரூபிக்க முடியும் என்று ஆராய்சியாளர் ரிபாக்கா கேண் (Rebecca Cann) உறுதிப்படுத்தினார்.
ஆனால், ஏவாள்தான் இன்று உலகில் இருக்கும் மனிதர்களின் அனைத்து மரபணுக்களின் தோற்றுவாய் என்பதில்லை. ஒவ்வொருவரும், பற்பலத் தலைமுறைகளாக தங்களின் வெவ்வேறு மூதாதையரிடமிருந்து பெற்ற பற்பலமுறை மாற்றம் செய்யப்பட்ட 30,000 மரபணுக்களின் சேர்க்கையையும் கொண்டுள்ளார். ஆனால், ஒவ்வொருவரின் மைட்கான்டரியா DNA வும் ஒரே ஒரு மூதாதையிடம் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. அதாவது, தாயிடமிருந்து தாயிக்கு என்று ஓர் நேரடி நேர்கோடு முந்தைய ஒரு தாயை இணைப்பதாக உள்ளது. அது போல, நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் என்ற அளவுக்கு மக்கள் தொகையுள்ள ஒரு குழுவுடன் மைட்கான்டரியா நம் அனைவரையும் இணைக்கிறது. நம்மையும் அந்த ஆதி காலத்து ஆப்பிரிக்க மக்களை இணைக்கும் கோட்டைக் காட்டும் தடயமாக மைட்கான்டரியா DNA இருக்கிறது.
பருவநிலையின் பாத்திரம்
பண்டைய மனித குலத்தின் ஒரு பிரிவினர்தான் ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்து உலகம் முழுவதும் உள்ள தற்போதைய மக்களினங்களுக்கு பாதை சமைத்தார்கள் என்று ரிச்சர்டின் ஆராய்ச்சி காட்டும்போது, அந்த இடப்பெயர்ச்சி எப்போது நடந்திருக்கும் என்பதை பண்டைய பருவநிலை பற்றி ஆராய்ச்சி துல்லியமாகக் காட்டுகிறது என்று வாதிடுகிறார் ஆப்பன்ஹைமேர். ஏறக்குறைய 80,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தின் வெப்பநிலை குறைய ஆரம்பித்து பனியுகம் ஒன்று நிகழ்ந்தது. துருவத்தில் உள்ள பனிப்பரப்பு விரிவடைந்து ஐரோப்பா வரை வந்தது. நீரெல்லாம் பனியானதால் கடல் நீர் குறைந்து கடல் மட்டம் மிகவும் தாழ்ந்து போனது. ஆப்பிரிக்கா பாலைவனமானது. இந்த பருவநிலை மாறுதல் ஏற்பட்ட, ஏறக்குறைய, அதேகாலத்தில்தான் மனித இனத்தின் கிளையொன்று அரேபியாவைக் கடந்து பின்னர் இந்தியாவுக்கும், பின்னர் கிழக்காசியாவுக்கும் சென்றதை மரபணுத் தடயங்கள் காட்டுகின்றன. மனிதர்களால் செய்யப்பட்ட 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருவிகள் மலேசியா வரை காணக்கிடைக்கின்றன என்று ஆப்பன்ஹைமர் குறிப்பிடுகிறார். அதன் பின், மனித இனம் அங்கிருந்து சுறாக்கள் நிறைந்த கடல்களைத் தாண்டி ஆஸ்த்திரேலியாவுக்குப் பயணப்பட்டிருக்கிறது. அங்கே அவர்கள் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைத்த கலைப்படைப்புகள் காணக்கிடைக்கின்றன.
ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனமொன்று இடம்பெயர்ந்தது இதற்கு முன்பும் நடந்திருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 100,000 முதல் 120,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடலின் மிச்சங்கள் இப்போது இஸ்ரேல் என்றழைக்கப்படும் பகுதியில் கிடைத்துள்ளன. இருந்த போதும் அந்த மனித இனத்தின் மரபணுக் கூறுகள் ஏதும் தற்போதைய மனித இனத்தில் காணப்படவில்லை. 80,000 வருங்களுக்கு முன்பு பனியுகம் துவங்கியபோது ஆப்பிரிக்காவில் இருந்து கிழக்கே போவதற்கான பாதை சகாரா பாலைவனத்தினால் மறிக்கப்பட்டதால், அவர்கள் தெற்கே தள்ளியுள்ள பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது என்கிறார் ஆப்பன்ஹைமர்.
50,000 ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வலுவான பருவமழை துவங்கிய பின்னர், பாலைவனமாக இருந்தது வளமிக்க பூமியாக, ‘வளமான வளர்பிறை’(Fertile Crescent) யாக மாற்றம் கண்டது. அது அரேபிய வளைகுடா துவங்கி துருக்கி வரை நீண்டது. அப்போதுதான், மனிதர்கள் தற்போது ஐரோப்பா என்றறியப்படும் பகுதிக்குள் நுழைந்தார்கள். அப்போது, அப்பகுதியில் நியாண்டாதால் மனிதர்கள் (Neanderthals) வசித்து வந்தார்கள். அவர்கள் (நியாண்டாதால் மனிதர்கள் ) அப்பகுதிக்கு பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து தங்கியிருந்தனர்.
இந்த இரண்டு மனித இனப் பிரிவுகளும் அந்தப் பகுதியில் 10,000 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மத்தியில் இனக்கலப்பு ஏற்படவில்லை என்பதை நியாண்டர்தால் மனிதர்களின் மிச்சங்களிலிருந்து கிடைத்த DNAக்கள் காட்டுகின்றன. அவர்களின் உடலில் தற்போதைய மனித உடலில் காணப்படும் மைட்கான்டரியா என்ற தடயம் இல்லை. அனைத்து ஐரோப்பியர்களும், அதன் நீட்சியாக அமெரிக்கர்களும் நான்கு வழிபட்ட / வகைப்பட்ட மைட்கான்டரியா DNA தடயங்களைத்தான் கொண்டுள்ளார்கள். இந்த தடயங்கள் 10,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவிலிருந்து துவங்குகின்றன.
ஈடுஇணையில்லாத பயணம்
மனிதப் பெரும் பயணத்தின் இறுதிக் கட்டமும் கூட பருவநிலை மாற்றத்தால்தான் நிகழ்ந்தது. 20,000 முதல் 25,000 வருடங்களுக்கு முன்பு துருவப் பகுதிகளில் பனி அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் காரணமாக கடல் பின்வாங்க ஆரம்பித்தது. இப்போது சைபீரியா என்றும் அலாஸ்கா என்றும் இருக்கின்ற நிலப் பரப்புகளுக்கு இடையிலான கடல் வற்றிப் போனது. இப்போது கடலின் கீழே இருக்கும் அந்த நிலப்பரப்பின் வழியே சைபீரியாவிலிருந்து அலாஸ்காவிற்கு மனிதர்கள் இடம் பெயர்ந்தார்கள் என்று சொல்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பீட்டர் போர்ஸ்ட்டர். அவர்கள் கொண்டுவந்த மைட்கான்டரியா DNA தடயம் சைபீரியாவிலும் ஆசியாவிலும் காணக் கிடைக்கிறது. இந்த தொன்மை மனிதர்கள், பின்னர் துவங்கிய பனியுகத்தின் காரணமாக அமெரிக்கா முழுமைக்கும் பரவினார்கள். 16,000 வருடங்களில் அவர்கள் விட்டுச்சென்ற கற்கால ஆயுதங்கள் இன்றைய பெனில்சில்வேனியாவில் கிடைக்கின்றன. இத்துடன் பூமியை மனித குலம் நிரப்பியது நிறைவு பெற்றது.
‘ஏவாளு’க்குப் பின்னர் 7 ஆயிரம் தலைமுறைகள் கடந்துவிட்டன. மிகப் பிரம்மாண்டமான புலப்பெயர்ச்சி மற்றும் கிளை விடுதலின் விளைவாக, மனித இனம் இன்று உலகம் முழுவதும் பரவிநிற்கிறது. இந்த வரலாறு அனைத்து மனிதர்களுக்கும் மிக நெருக்கமான ஒன்று. உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இடையில் மிகக்குறைவான மரபணு வேறுபாடுதான் இருக்கிறது என்ற இந்த ஆய்வு காட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நமக்கு நெருக்கமான ஓர் உறவினரும் இருக்கிறார். அவரின் பெயர் சிம்பன்சி.
தனது முன்னோரின் குடும்ப உறவுகளைத் தேடும் ஒருவர், தனக்கு அருகாமையில் மட்டுமல்ல உலகம் முழுவதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. "எங்கிருந்து வந்தோம்? நமது பந்தங்கள் யார்? என்ற கேள்வி நமக்கெல்லாம் இருக்கிறது.." என்று சொல்லும் ஆப்னிமெர், "இந்தக் கேள்வி நமக்குத் தரும் பதில்… நாம் உண்மையிலேயே மிகப் பெரும் ஒரே குடும்பம்.. மிக நெருக்கமான குடும்பம்" என்று முடிக்கிறார்.
உண்மைதான். மனிதம் மாபெரும் குடும்பம்.
- உலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித இரத்தமும்
- புவி அமைப்பின் சில உச்சங்கள்
- கடல் - புவியின் தோல்!
- கண்டம் வாரியாக உயர்ந்த பகுதிகள்
- உலகின் ஆழமான ஏரிகள், குகைகள், எரிமலைகள்
- உலகின் முக்கிய கடல்கள்
- உலகின் முக்கிய சிகரங்கள்
- உலகின் மிக நீளமான ஆறுகள்
- உலகின் முக்கிய ஏரிகள்
- உலகின் புகழ் பெற்ற அருவிகள்
- தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணம் எது?
- அரோரா - அசையும் துருவ ஒளி
- தென்கோடி உலகம் - அண்டார்க்டிகா
- துருவ உலகின் சொந்தக்காரர்கள்!
- துருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், 24 மணி நேர பகலும்
- அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி
- பழுப்பு நிறக்கண்கள் உண்டாவதேன்?
- மூலக்கூறும் மின்னணுக்களும்
- நுண்ணுயிரிகளை முதலாவதாகக் கண்டறிந்தவர் யார்?
- மூளை - நம்பிக்கைகளின் மூலம்