கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- வெற்றிச் செல்வன்.மா.செ.
- பிரிவு: தொழில்நுட்பம்
அரபு நாடுகளில் அபுதாபி, மஸ்கட் போன்ற இடங்களில் இருக்கும் வானூர்தி நிலையங்களில் (ஏர்போர்ட்) கழிவறைக்கு அருகிலேயே, அதை சுத்தம் செய்யும் தொழிலாளிகள் இருப்பார்கள். அவர்களின் தலையாய பணி, குறிப்பிட்ட இடைவெளியில் கழிவறைகளை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். பன்னாட்டு விமான நிலையம் என்பதாலும், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வருவார்கள் என்பதாலும், எவ்வளவு வேலை பளு மற்றும் அழுத்தம் இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இந்தப் பணிச்சுமையை கூட தாங்கிவிடலாம், கழிவறைகளின் துர்நாற்றத்தில் நாள் முழுக்க இருக்க வேண்டும், என்ற உளவியல் ரீதியான தாக்குதலையும், ஏளனப் பார்வைகளையும் சமாளிக்க வேண்டும்.
ஆனால், ஆண்கள் சிறுநீர் கழிக்கும் தொட்டிகளை (urinals) இனிமேல் இப்படி மணிக்கு ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் துர்நாற்றத்தை தாங்கிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டியதில்லை. இனி அந்த வேலையை ஒரு “பாக்டீரியா” செய்து விடும். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், தோழர்களே. மும்பை சத்ரபதி விமான நிலையத்தின் சிறுநீர் தொட்டிகளை கடந்த மே-2017லிருந்து பாக்டீரியா தான் சுத்தம் செய்கிறது. தினமும் லெட்சம் பேர் வந்து செல்லும் பன்னாட்டு விமான நிலையமும் துர்நாற்றம் இல்லாமல் இருக்கிறது.
பசுமை ரசாயனங்கள் எனப்படும் என்சைம்கள் மற்றும் பாக்டீரிய கலவை (mix of enzymes and bacteria) , யுரினல் எனப்படும் சிறுநீர் தொட்டியில் போடப்படும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும், சிறுநீரில் இருக்கும் அம்மோனியாவை, நைட்ரஜனாக இந்த பாக்டீரியக் கலவை மாற்றிவிடும். எனவே, துர்நாற்றம் எனபது அறவே இருக்காது. மேலும், சுத்தம் செய்ய தேவைப்படும் தண்ணீரையும் சேமிக்க முடியும். தரைத்தளங்களை சுத்தம் செய்யவும், இதே பாக்டீரியாக கலவையை மும்மை விமான நிலைய நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதன் மூலம், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒர் லெட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், அதாவது 30,000 பேர் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க முடியும்.
இந்த முறையை நாடு முழுவதும் உள்ள பொது இடங்களில் நடைமுறைப்படுத்தும் போது, இந்தத் தொழிலை செய்யத் தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, இந்தத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலையையும் வழங்க வேண்டியது, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கடமை. இன்னும் எத்தனை தலைமுறைகள், கழிவறைகளில் காலத்தைத் தொலைக்க வேண்டும்?
- வெற்றிச் செல்வன்.மா.செ.
- விவரங்கள்
- சூறாவளி
- பிரிவு: தொழில்நுட்பம்
கடந்த பகுதியில் நெடுவாசல் போராட்டத்தின் உலகளாவிய, உள்ளூர் அரசியல் குறித்து விரிவாக கண்ணோட்டத்தைப் பார்த்தோம். நெடுவாசல், வடகாடு, கோட்டைகாடு மக்கள் மத்திய, மாநில அமைச்சர்களின் வாக்குறுதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ‘மக்களின் விருப்பத்தை மீறி திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்’, என்ற வாக்குறுதியை ஏற்று, தாங்கள் நடத்திய போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முன்னிலையில் நெடுவாசல் உட்பட இந்திய முழுக்க 31 இடங்களில் எரிபொருள் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 27.03.2017 அன்று டெல்லியில் செய்து கொண்டுள்ளனர். இதன் மூலம் தாங்கள் எந்த அளவிற்கு நேர்மையற்றவர்கள், மக்கள் விரோதிகள் என்பதை நிரூபித்துள்ளனர். மக்களாகிய நாம் நமது வாழ்வை பாதுகாத்துக் கொள்ள ஒருங்கிணைந்து போராடுவது ஒன்றே வழி என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவாகியுள்ளது. நாம் நமது போராட்டத்தை மேலும் வலிமையாக்குவதற்கு இத்திட்டம் பற்றிய அறிவியல்பூர்வமான நமது புரிதல் மட்டத்தை உயர்த்திக் கொள்வதற்கு, எரிபொருள் அறிவியல் குறித்து விரிவாக காண்போம்.
மக்களிடம் உள்ள எரிபொருட்கள் குறித்த அறியாமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மீத்தேன் திட்டம், இயற்கை எரிவாயுத் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் என வெவ்வேறு பெயர்களைச் சொல்லி ஏமாற்றி செயல்படுத்தப் பார்க்கிறார்கள். எந்தப் பெயரில், என்ன வகையான எரிபொருளை உற்பத்தி செய்தாலும், அங்கு ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும். அது, அங்கு விவசாயத்தை நம்பி வாழும் தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் என்பதை நடைமுறை சாத்தியமாக உணர்ந்து தன்னெழுச்சியாகப் போராடி மக்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்து தஞ்சை மாவட்ட விவசாயி திரு.பி.ஆர்.பாண்டியன் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், ONGC நிறுவனம் தாக்கல் செய்த பதில்மனுவில், நாங்கள்காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் பணி எதிலும் ஈடுபடவில்லை, மரபான எண்ணெய், எரிவாயு (conventional petroleum and natural gas) எடுப்பதற்கான சோதனையில்தான் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறியது. ஆனால் எரிபொருளுக்கான தலைமை நிர்வாக இயக்குனர் (Directorate General of Hydrocarbons) பக்கத்தில் காவேரிப் படுகையில் ஷேல் எண்ணெய், எரிவாயுப் பணிகள் நடைபெறுவதாக அறிவித்திருக்கிறது.1 மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீத்தேன் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வெளியிட்ட ONGC அறிக்கையில், ஹைட்ரோகார்பன்கள் மிகுந்த மூலப்பாறைகள் (source rocks or shale) இருப்பதையும், வெற்றிகரமாக நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி, மரபான (conventional) முறையிலல்லாமல், தூண்டப்பட்ட முறையில் (unconventional) இயற்கை எரிவாயுவான மீத்தேனையும், எண்ணையையும் வர்த்தக ரீதியில் பயனளிக்கும் அளவு வெளியேற செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது. அப்படியானால், மரபான முறைக்கும், தூண்டப்பட்ட முறைக்கும் என்ன வேறுபாடு? எந்த முறையைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை எவ்வாறு கண்டறிவது?
மேலும் ஷேல் காஸ் எடுக்கப் போகிறோம் என முதலில் கூறினார்கள். அதனை எடுக்க நீரியல் விரிசல் முறை (hydraulic fracturing method) மட்டுமே தற்போது உள்ளது. அது நிலடுக்கம், வறட்சி, நிலத்தடிநீர் மாசுபடுதல், பயன்படுத்தப்படும் வேதிப்போருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மீத்தேன் கசிவினால் காற்று மாசுபடுதல், 60௦௦ மீட்டர்களுக்கு கீழே துளையிடுவதால் கதிரியக்கத் தனிமமான ரேடான் வெளியேறுதல், உடல்நலக் கேடுகள் ஆகிய பிரச்சனைகளைக் கொண்டு வரும் என எதிர்ப்பு கிளம்பியதால், இல்லையில்லை நாங்கள் நிலக்கரி படிம மீத்தேன் தான் எடுக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள். உண்மையில் இவர்கள் குறிப்பிடுவது போல எல்லாம் வெவ்வேறு எரிபொருளை எடுக்கும் வெவ்வேறு திட்டங்களா?என்ன வகையான மீத்தேனை எடுக்கப் போகிறார்கள் என்பதை எவ்வாறு கண்டுகொள்வது? உண்மையில் மேற்சொன்ன பிரச்சனைகள் வரும் என்பது ஊகமா? அல்லது உண்மையா? ஆதாரம் என்ன?
ஹைட்ரோகார்பன்கள் (அ) கரிமச் சேர்மங்கள்
கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய இரு தனிமங்களால் ஆன வேதிப்பொருட்கள் கரிமச் சேர்மங்கள் (அ) ஹைட்ரோகார்பன்கள் (Hydrocarbons) எனப்படுகின்றன. இந்த ஹைட்ரோகார்பன்களில், கார்பன் எண்ணிக்கை 1 முதல் 4 வரை கொண்டவை வாயுநிலையிலும், 5 முதல் 16 கார்பன் எண்ணிக்கை கொண்டவை நீர்ம நிலையிலும், 17 கார்பன் எண்ணிக்கைக்கு மேல் கொண்டவை திட நிலையிலும் இருக்கும்.
ஹைட்ரோகார்பன்கள் உருவாதல்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் புதையுண்ட உயிரினங்கள், பல்வேறு வேதிமாற்றங்களுக்கு உட்பட்டு, புதையுண்ட உயிரினங்களை பொருத்தும், நிலவும் வெப்பம் மற்றும் அழுத்தத்தைப் பொருத்தும், குறைந்த கார்பன் எண்ணிக்கை கொண்ட வாயுவாகவும், அதிக கார்பன் எண்ணிக்கை கொண்ட திரவ நிலை எண்ணையாகவும், மிக அதிக கார்பன் எண்ணிக்கை கொண்ட நிலக்கரியாகவும் மாற்றமடைகிறது.
இயற்கை எரிவாயு
பூமிக்கடியில் அவ்வாறு உருவாகும் இயற்கை எரிவாயு என்பது தொண்ணூறு சதவீதத்திற்கு மேல் ஒரு கார்பன் எண்ணிக்கை கொண்ட வாயுநிலை ஹைட்ரோகார்பனான மீத்தேனையும்(CH4), குறைந்த அளவு ஒன்றிற்கும் மேற்பட்ட கார்பன் எண்ணிக்கை கொண்ட ஹைட்ரோகார்பன்களையும், நைட்ரஜன்(N2), கார்பன்டைஆக்சைடு(CO2), ஹைட்ரஜன் சல்பைடு(H2S) ஆகிய வாயுக்களை உள்ளடக்கியதாகும். ஆக மீத்தேனும், இயற்கை எரிவாயுவும் வேறுவேறு அல்ல, ஒன்றே. ஒரே எரிபொருளுக்கு வெவ்வேறு பெயரிட்டு செயல்படுத்த முனைவதுதான் பெரும் பித்தலாட்டமின்றி வேறில்லை.
மீத்தேன் | CH4 | 70-90% |
ஈத்தேன் | C2H6 | 0-20% |
புரப்பேன் | C3H8 | |
புயூட்டேன் | C4H10 | |
கார்பன்டைஆக்சைடு | CO2 | 0-8% |
ஆக்ஸிஜென் | O2 | 0-0.2% |
நைட்ரஜன் | N2 | 0-5% |
ஹைட்ரஜன் சல்பைடு | H2S | 0-5% |
மந்த வாயுக்கள் | Ar, He, Ne, Xe | Trace |
எரிபொருட்களின் வகைகள்
- நிலக்கரி (Coal)
- பெட்ரோலிய-எண்ணெய் (Petroleum)
- இயற்கை எரிவாயு-மீத்தேன் (Natural Gas-Methane)
இயற்கை எரிவாயுக்களின் வகைகள்
மேற்சொன்னவாறு உருவாகும் இயற்கை எரிவாயுக்கள் நான்கு வகைப்படும்.
- நிலக்கரி படிம மீத்தேன் (Coal Bed Methane CBM)
- பனிப்பாறைமீத்தேன் (Methane Hydrate)
- கடினப்பாறை மீத்தேன் (Tight Gas)
- பாறை-எரிவாயு மீத்தேன் (Shale Gas)
நிலக்கரி மற்றும் நிலக்கரி படிம மீத்தேன் (Coal and Coal Bed Methane-CBM)2
பூமியுள் புதையுண்டபெரும் தாவரங்கள் நிலக்கரியாக மாற்றம் அடையும் போது, அதனோடு மீத்தேன் வாயுவும் உருவாகி நிலக்கரி படிமங்களுக்குள் தங்கி இருக்கும். அந்த மீத்தேனே நிலக்கரி படிம மீத்தேன் என அழைக்கப்படுகிறது. இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 1,000 முதல் 10,000 அடிகளுக்குள்ளாக இருக்கும்.
Source: Reference 2
பனிப்பாறை மீத்தேன் (Methane Hydrate)
ஆர்டிக் பனிப்பிரதேசத்திலும், கடலுக்கடியிலும் பனிக்கட்டிகளின் படிகங்களுக்குள்(crystals) சிக்கியிருக்கும் மீத்தேன் பனிப்பாறை மீத்தேன் ஆகும்.
ஷேல் பாறை (Shale Rock) அல்லது மூலப்பாறை
கடலின் அடிமட்டத்தில், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மண் போன்ற மற்ற படிமங்களோடு புதையுண்ட பாசியினங்கள் (algaes), நுண்ணுயிர்கள் (microscopic organisms) மேற்சொன்ன வேதிமாற்றங்களுக்கு உட்பட்டு முதலில் கெரோஜென் (Kerogen) என்ற பொருளாகவும், பின்பு வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக எண்ணையாகவும், எரிவாயுவாகவும் மாற்றமடைகிறது. இவ்வாறு எண்ணெய், எரிவாயுவை தன்னகத்தே கொண்ட வண்டல், கரிசல் மண்ணாலான இந்த பாறை ஷேல் பாறை (Shale Rock) அல்லது எரிபொருளின் மூலப்பாறை எனப்படுகிறது.இது புவிபரப்பிற்கு 3000 முதல் 16,000 அடிகளுக்கு கீழே காணப்படும்.
Source: Uncoverenergy.com
எண்ணெய், எரிவாயு தேக்கங்கள் (reservoirs) உருவாதல்
மேற்சொன்னவாறு மூலப்பாறைகளில் உருவாகும் எண்ணை மற்றும் எரிவாயு குறைந்த அடர்த்தி (density) காரணமாக மேல்நோக்கி இடம்பெயர்ந்து கடினமான பாறைகளுக்கு (caprock) கீழே அதிக நுண்துளைகள் (pores) கொண்ட மணற்பாறைகளின் (sandstone) தேங்கியிருக்கும் (reservoir).
கடினப்பாறை மீத்தேன் (Tight Gas)
ஷேல் பாறை(அ) மூலப்பாறையில் இருந்து வெளியேறி அடர்த்தியான நுண்துளைகளற்ற குறைவான மணல், சுண்ணாம்பு களிமண் தாதுக்களினால் ஆன பாறைகளில் சிக்கியிருக்கும், குறைவான பாய்வுத்திறன் கொண்டமீத்தேன் கடினப்பாறை மீத்தேன் ஆகும்.
Source: USGS, www.energy.usgs.gov
ஷேல் எண்ணெய் எரிவாயு (பாறை-எரிவாயு மீத்தேன்) (Shale oil & Gas)
ஷேல் பாறை(அ) மூலப்பாறையில் இருந்து வெளியேறாமல் அதிலேயே சிக்கியிருக்கும் மீத்தேன் இந்த வகையைச் சார்ந்தது. இந்த பாறைகளின் நுண்துளைகள் குறைவானதாகவும், ஒன்றோடொன்று இணைக்கப்படாமலும் இருக்கும். ஆதலால் அதிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பாய்வுத்திறன் மிகக் குறைவானதாக இருக்கும்.
Source: Fuel Journal, 2015, 153, 231
மரபான (conventional) எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி
நிலக்கரி படிமங்களுக்கு உள்ளாக தங்கியிருக்கும் மீத்தேனை செங்குத்தாக துளையிட்டு, எரிவாயுவை வெளிவராமல் அழுத்திக் கொண்டிருக்கும் நீரை வெளியேற்றி, தானாக மேல் எழும்பி வரச்செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் நீர் உப்புகள், பல்வேறு வேதிப்பொருட்கள், உலோகங்கள், கதிரியக்கத் தனிமங்கள் கொண்டது. அது நிலத்தினை மாசுபடுத்தும், மனிதர்களுக்கு நோய் விளைவிக்கும் தன்மை கொண்டதாகையால், சுத்திகரிக்கப்பட்டு வெளியற்றப்படும் அல்லது மீண்டும் பூமியில் செலுத்தப்படும்.
Source: Reference 2
இதனைப் போன்றே, கடின பாறைகளுக்கு கீழ் தேங்கியிருக்கும் (reservoir) எண்ணெய் மற்றும் எரிவாயுவை செங்குத்தாக துளையிட்டு தானாக மேலெழும்பி வரச்செய்து எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு நிலக்கரியினுள்ளும், மணற்பாறைகளினுள்ளும் தங்கியிருக்கும் மீத்தேனின் அதன் அதிக பாய்வுத்திறன் (permeability) காரணமாக எந்தத் தூண்டுதலும் இல்லாமல் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்தல் மரபான (conventional) உற்பத்தி ஆகும்.
தூண்டப்பட்ட (unconventional) எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி
குறைவான பாய்வுத்திறனை கொண்ட கடினப்பாறை மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எண்ணெய் ஆகியவற்றைசெங்குத்தாக துளையிட்டு வெளிக்கொண்டு வர இயலாது. மிக குறைவான அளவே துளையிட்ட இடத்திலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு தானாக மேலெழும்பி வரும். அது வர்த்தக ரீதியில் பலனளிக்கூடியது அல்ல. அதே போல, நிலக்கரி படிமங்களுக்கு உள்ளாக தங்கியிருக்கும் மீத்தேன் குறைவான பாய்வுத்திறனை கொண்டிருந்தாலும் மரபான முறையில் எரிவாயுவை உற்பத்தி செய்ய இயலாது. இதுபோன்ற இயல்பாக மேலெழும்பி வரும் அளவு பாய்வுத்திறன் கொண்டிராத எரிபொருட்களை வெளிக்கொண்டு வர புதிதாக கண்டறியப்பட்ட தொழில்நுட்பமே தூண்டப்பட்ட முறை (unconventional) என அழைக்கப்படும் நீரியல் விரிசல் முறை ஆகும்.
இம்முறையில் முதலில் மரபான முறையைப் போன்று செங்குத்தாக எரிபொருள் இருக்கும் 3000 முதல் 16,000 அடிகள் வரை தோண்டி பின்பு கிடைமட்டமாக எரிபொருள் பாறையுனுள் 1000 முதல் 26000 அடிகள் வரை துளையிட்டு, மணல், மண், வேதிப்பொருட்கள் நீர் ஆகியவற்றை அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்யப்படுகிறது. இவ்வாறு வெடிக்கச் செய்வதன் மூலம் பாறையுனுள் சிக்கியிருக்கும் எண்ணெய் மற்றும் மீத்தேனை தூண்டப்பட்ட முறையில் வெளியேறச் செய்வது புதிய நீரியல் விரிசல் முறையாகும் (hydraulic fracturing). இவ்வாறு கிடைமட்டத்தில் தோண்டி வெடிக்கச் செய்வதன் மூலம் குறைவான பாய்வுத்திறன் கொண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு வெளயேற வழி ஏற்படுத்தித் தரப்படுகிறது. அது வர்த்தக ரீதியில் பலனளிக்கும் அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு வெளியேறுகிறது.
Source: energyindustryphotos.com
மொத்த எரிபொருள் வளங்கள், அவற்றின்அமைவிடங்களை குறிக்கும் படம். (Source: German Advisory Council on the Environment)
தொடரும்......
References
- http://www.dghindia.org/index.php/page?pageId=37
- https://pubs.usgs.gov/fs/fs123-00/fs123-00.pdf
- https://www.slb.com/~/media/Files/resources/mearr/wer16/rel_pub_mewer16_1.pdf
- சூறாவளி
- விவரங்கள்
- ஜோசப் பிரபாகர்
- பிரிவு: தொழில்நுட்பம்
எங்கள் ஊர் அரியலூர் மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறிய கிராமம். விவசாயம் தான் எங்கள் மக்களின் தொழில். ஆறுகள் ஏதும் எங்கள் ஊர் வழியாக பாயாததால் முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமி. விவசாயம் முழுக்க ஏரிகளையும், கிணறுகளையும் நம்பித்தான் இருக்கிறது. எங்கள் முன்னோர்கள் ஊருக்கு நாலைந்து ஏரிகளையும், எக்கச்சக்கமான கிணறுகளையும் வெட்டி வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட முப்பது அடிக்கு ஒரு கிணறு இருக்கும். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது இரண்டு கிணறு இருக்கும். வீட்டிற்கு அருகில் ஒன்று குடிதண்ணீர் பயன்பாட்டுக்காக. கொல்லையில் ஒன்று விவசாயப் பயன்பாட்டிற்காக. எங்கள் ஊர் பக்கம் விவசாய நிலத்தை ‘கொல்லை’ என்றும், கிணறை “கேணி” என்றும்தான் அழைப்பார்கள்.
முப்பது வருடங்களுக்கு முன்பு ஆண்டு முழுவதும் இந்தக் கேணிகளில் தண்ணீர் இருக்கும். அதுவும் மழைக் காலங்களில் கைக்கெட்டும் தூரத்தில் தண்ணீர் மேலேயே கிடக்கும். வெயில் காலங்களில் அரைக் கேணிக்கும் கீழே கிடக்கும். என் சிறு வயதில் கிணற்றை எட்டிப்பார்ப்பது என்பது சாகசச்செயல். எட்டிப் பார்க்கும் போது அடிமனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உணர்வும், பய உணர்வும் ஒரு சேர வந்து மறையும். தூரத்தில் என் தாத்தா “டேய். கெணத்த எட்டிப் பாக்காத. உள்ள உழுந்துருவ” என்று துரத்துவார். அவருக்கு பயந்து கொண்டே சில நொடிகள் மட்டும் எட்டிப் பார்த்து விட்டு வேண்டா வெறுப்போடு தூர ஓடுவேன். தூர ஓடினாலும் கேணியைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பேன். ”இந்தக் கேணி எவ்வளவு ஆழம் இருக்கும்? தண்ணிக்கு அடியில் ஏதாவது வித்தியாசமான உயிரினங்கள் இருக்குமோ? அடி ஆழத்தில் ஏதாவது மரகதக் கல் கிடக்குமா?” இப்படி பல எண்ணங்கள் என் மனதில் ஓடும்.
கேணி என்பது எங்கள் கிராமத்து வாழ்க்கையின் ஓர் அங்கம். இன்னும் சொல்லப்போனால் கேணி என்பது எங்களைப் பொறுத்தவரை கொல்லையில் வாழும் ஒரு ஜீவன். என் தாத்தாவிடம் அடிக்கடி கேட்பேன் ”தாத்தா. இந்தக் கேணி எவ்வளவு ஆழம் இருக்கும்?”. “பதினாறு கஜம் இருக்குண்டா” என்று சில நேரங்களில் சொல்லுவார். சில நேரங்களில் “நாற்பது அடி இருக்கும்” என்று சொல்லுவார். ஆனால் எனக்கு இது புரிந்ததில்லை. பள்ளிகளில் “மீட்டர்” பற்றித்தான் சொல்லிக் கொடுப்பார்கள். கஜம் பற்றியோ அடி பற்றியோ பயன்பாட்டு ரீதியாக சொல்லிக் கொடுத்ததில்லை. எங்கள் ஊரில் கேணிகள் சில ஆயிரமாவது இருக்கும். எந்தக் கேணியின் அருகிலும் அது எவ்வளவு ஆழம் என்று எழுதி வைக்கப் பட்டது இல்லை. ஒரு வேளை எங்கள் முன்னோர்களுக்கு அது முக்கியத்துவம் இல்லாத விசயமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் எங்கள் பருவத்தில் இருக்கும் பசங்களுக்கு அது மிக முக்கிய விஷயம்.
பசங்களைப் பொறுத்தவரை அவர்களின் பாட்டன், முப்பாட்டனின் பலத்தை அவர்கள் வெட்டிய கேணியின் ஆழம்தான் தீர்மானிப்பதாக நினைத்துக்கொள்வோம். என் நண்பர்கள் பயங்கரமாக கதை விடுவார்கள். “டேய். எங்க கொல்லையில் இருக்கும் கேணி உங்க கேணிய விட செம ஆழம்” என்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டுக் கொள்வோம். ஆனாலும் யாருக்கும் உண்மையான ஆழம் தெரியாது. பல கிணறுகள் எந்தக் காலத்திலோ வெட்டிய கிணறுகள். புதர் மண்டி கிடக்கும். எங்கள் கொல்லையில் இருக்கும் கேணியின் ஆழம் கூட எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. அதை விட அதை எப்படி அளவிடுவது என்றும் யோசித்துப் பார்த்ததில்லை. தினந்தோறும் பள்ளிக்கு போவோம். பாடம் நடத்துவார்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவோம். விளையாடுவோம். பள்ளியில் நடத்தும் பாடங்களுக்கும் எங்கள் கிராமத்து வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. இப்படியே பத்தாம் வகுப்பு வரை கழிந்தது.
பதினொன்றாம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் நியூட்டனின் விதிகள் பற்றிய பாடம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் பதினொன்றாம் வகுப்பு பாடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் அரைகுறையாக நடத்தப்படுகின்றன. அல்லது நடத்தப்படுவதே இல்லை. ஒரு வேளை நியூட்டனின் விதிகள் எனக்கு புரிந்திருந்தால் எங்கள் வீட்டு கிணற்றின் ஆழத்திற்கும் நியூட்டனின் விதிகளுக்கும் சம்பந்தமுண்டு என்று அப்போதே எனக்கு விளங்கியிருக்கும். நியூட்டனின் விதிகளை மனப்பாடம் செய்தோமே தவிர உணர வில்லை. நியூட்டனின் விதிகள் இயற்கையைப் பற்றிய பேருண்மைகள் என்று நான் புரிந்து கொள்ள வில்லை. அல்லது புரிய வைக்கப்பட வில்லை. இன்றைக்கு இருக்கும் கல்வி முறையின் பிரச்சினையே இதுதான். இந்தக் கல்வி முறை மாணவர்களின் மனதை விட்டு வெகு தூரம் விலகி இருக்கிறது. ஒரு வழியாக பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் இயற்பியல்தான் சேர்ந்தேன். எப்போதாவது ஊருக்குச் செல்லும் போது கிணற்றைப் பார்க்கும் சமயத்தில் அந்த பால்ய கால கேள்வி மனதில் எழும். “இந்தக் கேணி எவ்வளவு ஆழம் இருக்கும்?”
கல்லூரி படிப்பும் முடிந்தது. இயற்பியல் ஆசிரியரானேன். கடைசியில் நானே எனது மாணவர்களுக்கு நியுட்டனின் விதிகளை சொல்லிக்கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் புரிந்தது நியூட்டனின் விதிகளுக்கும் கிணற்றின் ஆழத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆம். நியூட்டனின் விதிகளைப் பயன்படுத்தி ஐந்தே நிமிடத்தில் கிணற்றின் ஆழத்தை கிட்டத்தட்ட துல்லியமாக அளவிடலாம். பதினொன்றாம் வகுப்பில் புரிய வேண்டிய விசயம் பத்து வருடம் கழித்துதான் புரிந்தது. ஒருவேளை ராணுவத்தை விட கல்விக்கு அதிகமாக செலவிடும் நாட்டில் நான் படித்திருந்தால் பதினொன்றாம் வகுப்பிலேயே இது எனக்கு புரிந்திருக்குமோ என்னமோ? பதினொன்றாம் வகுப்பில் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை மட்டும் நடத்த வேண்டும் என்று கடுமையான விதிகளைப் போடும் அரசாங்கம் இருந்திருந்தால் எனக்கு இது பதினொன்றாம் வகுப்பிலேயே புரிந்திருக்குமோ என்னவோ?
சரி விஷயத்துக்கு வருவோம். நியுட்டனின் இரண்டாம் விதி என்ன சொல்கிறது. “ஒரு பொருளின் நிறையையும்(mass)அந்த பொருளின் முடுக்கத்தையும் பெருக்கினால் நாம் அந்த பொருளின் மீது செயல்படும் விசையின் அளவைக் கண்டறியலாம். முடுக்கம் எந்த திசையில் இருக்கிறதோ அதே திசையில்தான் விசையும் இருக்கும்”. இதை இயற்பியலில் பின்வரும் சமன்பாட்டால் குறிப்பார்கள். “F = ma”. இங்கு ‘m’ என்பது பொருளின் நிறையைக் குறிக்கிறது. ‘a’ என்பது அந்தப் பொருளின் முடுக்கத்தை குறிக்கிறது. ‘F’ என்பது அந்த பொருளின் மீது செயல்படும் விசையின் அளவைக் குறிக்கிறது.
இது இயற்பியலில் மிக முக்கியமான விதி. இது வெறுமனே கணித சமன்பாடு அல்ல. இந்த நவீன அறிவியல் சிந்தனையின் தொடக்கப் புள்ளி. இன்னும் சொல்லப் போனால் நாம் இன்று அடைந்திருக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்த விதிதான் வித்திட்டது. இந்த விதியின் பயன்பாடுகள் எண்ணற்றவை.
இந்த விதியை நாம் பயன்படுத்தி ஒரு பொருள் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு தூரம் கடந்திருக்கிறது அல்லது எங்கே இருக்கிறது என்பதை கண்டறியலாம். எடுத்துக் காட்டாக ஒரு பொருளை நாம் மேலே தூக்கி எறிந்தால் அது எவ்வளவு தூரம் போகும், அந்தத் தூரம் போக எடுத்துக்கொள்ளும் காலம் போன்றவற்றை எளிதாக கணக்கிடலாம். தொகைக்கெழு(integration) மூலம் நியூட்டனின் இரண்டாம் விதியை பின்வரும் வடிவத்தில் எழுதலாம்.
“S = ut + ½ at2”
இது நியூட்டனின் இயக்கச் சமன்பாடு எனப்படுகிறது. எப்போதெல்லாம் ஒரு பொருள் மீது மாறா விசை(constant force) செயல்படுகிறதோ அப்போதெல்லாம் மேலே குறிப்பிட்ட இயக்க சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த பொருளின் இயக்கத்தை, குறிப்பிட்ட நேரத்தில் அந்த பொருள் கடந்த தொலைவை எளிதாக கணக்கிடலாம்.
இந்த s = ut + ½ at2என்ற சமன்பாடு பதினொன்றாம் வகுப்பு இயற்பியல் பாடப் புத்தகத்திலேயே இருக்கிறது.
“s” என்பது ஒரு குறிப்பிட்ட நேர இடைவேளியில் பொருள் நகர்ந்த தொலைவு(distance).
“t” என்பது அந்த குறிப்பிட்ட நேர இடைவெளி(time interval). இது பத்து வினாடிகளாகவும் இருக்கலாம் பத்து மணி நேரமாகவும் கூட இருக்கலாம்.
‘u’ என்பது அந்த பொருளின் ஆரம்பவேகம்(initial speed ).
“a” என்பது அந்த பொருளின் மாறா முடுக்கம்(constant acceleration).
இப்போது நாம் கிணற்றின் கதைக்கு வருவோம். ஒரு சிறு கல்லை கிணற்றின் மேலே இருந்து விட்டால் அது கிணற்றின் அடித்தரைக்கு சென்று மோதும். அது செல்வதற்கு காரணம் பூமியின் ஈர்ப்பு விசை. இந்த ஈர்ப்பு விசையினால் அந்த பொருள் முடுக்கம்(a) அடைகிறது. இந்த முடுக்கத்தை புவிஈர்ப்பு முடுக்கம் (acceleration due to gravity) என்று அழைக்கலாம். இதை இயற்பியலில் “g” என்ற எழுத்தால் குறிப்பர். அதன் அளவு
g= 9. 8 மீட்டர்/வினாடி2. இந்த புவிஈர்ப்பு முடுக்கம்(g) பூமியின் மேற்பரப்பில் மாறாத அளவைக்கொண்டது(constant acceleration). இந்த முடுக்கம்தான் நமது எடைக்கும்(weight) காரணம். கிணற்றின் ஆழத்திலும் இந்த முடுக்கம் கிட்டத்தட்ட மாறாது. இந்த மாறாத தன்மைதான் நாம் மேலே குறிப்பிட்ட சமன்பாட்டை பயன்படுத்த வழிவகுக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் நாம் அந்தக் கல்லை கிணற்றில் எறிய வில்லை. மாறாக கையில் எடுத்து அப்படியே விடுகிறோம். நாம் கல்லை எறியாததால் அதன் ஆரம்ப வேகம் “u” பூஜ்ஜியம்(initial speed “u” is zero). ஆரம்ப வேகம் இல்லாததால்(u=0) நியுட்டனின் இயக்க சமன்பாட்டில் உள்ள “ut” பூஜ்ஜியமாகி விடும். எனவே இந்த பரிசோதனைக்கு நமக்கு தேவையான சமன்பாடு S = ½ gt2. கல் நம் கையிலிருந்து விடுபட்ட கணத்திலிருந்து கிணற்றின் அடித்தரையைத் தொட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். இன்று எல்லோர் கைகளிலும் செல்போன் இருக்கிறது. அதிலுள்ள நிறுத்து கடிகாரத்தின் (stop watch) துணையுடன் இதை நாம் அளவிடலாம். எங்கள் வீட்டுக் கிணற்றில் நான் இதைச் பல முறை செய்து பார்த்தேன். கிணற்றின் அடித்தரையைத் தொட கல் சராசரியாக 2.37 நொடிகள் எடுத்துக் கொண்டது. அப்படி என்றால் அந்தக் கல் இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் கடந்த தொலைவு “s” தான் கிணற்றின் ஆழம்.
s = 1/2 * 9. 8 * (2. 37)2. நமக்கு கிடைக்கும் விடை 27. 52மீட்டர். எங்கள் வீட்டுக் கேணியின் ஆழம் இருபத்தியேழரை மீட்டர். அல்லது எண்பத்திரண்டு அடி. சிறு வயதில் எழுந்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்து விட்டது. எங்கள் தாத்தா கிணற்றை வெட்டினார். நியூட்டன் தாத்தா அதன் ஆழத்தை அளக்க உதவினார். இப்போது நான் உரக்க சொல்லுவேன் எங்கள் வீட்டுக் கேணிக்கும் நியூட்டனுக்கும் சம்பந்தமுண்டு என்று. இது ஒரு எளிய இயற்பியல் பரிசோதனைதான். நீங்களும் செய்து பாருங்கள். இதைச் செய்து பார்ப்பதற்கு இயற்பியல் மாணவனாக இருக்க வேண்டியதில்லை. சாதாரமாண கூட்டல் கழித்தல் தெரிந்தாலே போதும்
எந்த இயற்பியல் பரிசோதனையிலும் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. இந்த பரிசோதனையில் என்னென்ன தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்று பார்ப்போம். முதலாவது கல் கிணற்றின் அடித்தரையைத் தொடும் அந்த நொடியை இரண்டு வகையில் நாம் கண்டறியலாம். அந்தக் கல் தரையைத் தொடும்போது எழும் சத்தத்தை கேட்டவுடனே நாம் நிறுத்துக் கடிகாரத்தை நிறுத்தலாம். அல்லது அந்தக் கல் தரையைத் தொடுவதை நம் கண்ணால் பார்த்த உடனே நிறுத்து கடிகாரத்தை நாம் நிறுத்தலாம். இதில் கண்ணால் கண்டதும் நிறுத்தும் போதுதான் தவறு மிகக் குறையும். காதால் கேட்டு நிறுத்துக் கடிகாரத்தை நிறுத்தும்போது கணக்கிடும் நேரம் முன்னதை விட சிறிது அதிகமாக இருக்கும். ஏனென்றால் கல் தரையில் மோதும் சத்தம் அந்த நொடியிலேயே நம் காதுகளை வந்தடையாது. சத்தம் கிணற்றின் அடித்தரையிலிருந்து மேலே நம் காதுகளை வந்தடைய சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது (காற்றின் ஒலியின் வேகம் நொடிக்கு 331 மீட்டர். ஆனால் ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்). அப்படிஎன்றால் நாம் கணக்கிடும் நேரம் என்பது இதையும் சேர்த்துதான். இதனால் நாம் கணக்கிடும் கிணற்றின் ஆழத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு தவறு நிகழும். கிராமங்களில் சில பாழடைந்த கிணறுகள் புதர் மண்டி இருக்கும். அடித்தரை கண்ணுக்கு தெரியாது. அந்த மாதிரி கிணறுகளில் நாம் காதால் கேட்கும் சத்தத்தை வைத்துதான் கல் கிணற்றின் அடித்தரையை தொட்டதை கண்டறிய இயலும்.
அடுத்த முக்கியமான விஷயம் நாம் எடுத்துக் கொள்ளும் கல்லின் அளவு எலுமிச்சை காய் அளவுக்கு மிகாமல் இருந்தால் நல்லது. ஏனென்றால் கல்லின் நிறை அதிகமாக அதிகமாக காற்றின் உராய்வு விசையும் அதிகமாகும். உராய்வு விசை அதிகமானால் நாம் S = ½ gt2 என்ற சமன்பாட்டை பயன்படுத்த முடியாது. உராய்வு விசையினால் கல்லின் மீது ஏற்படும் முடுக்கத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அது சற்றுக் கடினமானது. அதனால் நிறை(mass) குறைந்த கல்லை பயன்படுத்துதல் தவறை குறைக்கும். அதைப் போல இன்னொமொறு தவறு நம் கையிலிருந்து கல் விடுபட்ட அந்த நொடியே நம்மால் நிறுத்துக் கடிகாரத்தை தொடங்கி விட முடியாது. ஏனென்றால் கல் நம் கையில் விடுபட்ட உடனே அந்தத் தகவல் நம் மூளைக்கு சென்று மூளை உடனே நிறுத்துக் கடிகாரம் உள்ள கைவிரல்களுக்கு தகவல் அனுப்பி நம் கை விரல்கள் நிறுத்துக் கடிகாரத்தை தொடங்குவதற்குஒரு நொடியோ இரு நொடியோ ஆகலாம். அதற்குள் கல் சில அடிகளாவது கிணற்றின் உள்ளே போயிருக்கும். அதைப்போல கல் கிணற்றின் அடித் தரையைத் தொட்டவுடனே வரும் தகவலும் நம் மூளைக்கு போய் மறுபடியும் நம் கை விரல்களுக்கு வந்து நம் கை விரல் நிறுத்து கடிகாரத்தை நிறுத்துவதற்குள் ஓரிரு நொடிகள் ஆகலாம். இதுவும் நம்மால் குறைக்க முடியாத தவறுதான். ஆனால் இந்த இரண்டு தவறும் ஒன்றை ஒன்று சமன் படுத்திக்(cancel each other) கொள்ளும்.
இந்த பரிசோதனையில் திருப்தியான விஷயம் என்னவென்றால் பதினொன்றாம் வகுப்பு முடித்து பத்து வருடம் கழித்து நான் தெரிந்து கொண்டதை என் மாணவர்களுக்கு அப்போதே சொல்லிக் கொடுத்தேன். அவர்கள் ஏன் பத்து வருடம் வீணாக்க வேண்டும்?. இயற்பியலின் விதிகளை நாம் கற்றுக் கொள்ளும்போது அதை எந்திரத்தனமாக மனனம் செய்தல் கூடாது. அது அறிவியலின் நோக்கத்தையே சிதைத்து விடும். மாறாக ஒவ்வொரு இயற்பியல் விதிகளையும் நாம் மனதில் இருத்தி அதை சிந்தித்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு இயற்பியல் சமன்பாட்டையும் கவிதையை வாசிப்பதைப் போல அனுபவித்து வாசிக்க வேண்டும். அந்த அனுபவித்தல்தான் நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் என்பதற்கான அடையாளம்.
பின்குறிப்பு:
நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் எப்போதுமே இருக்கும். ஆனால் தற்போது எல்லாக் கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. அதனால்தான் கிணற்றின் ஆழத்தை என்னால் அளவிட முடிந்தது. ஒரு வேளை தண்ணீர் உள்ள கேணியாக இருந்தால் இதே பரிசோதனையை வைத்து கிணற்றின் அடித்தரை வரை உள்ள ஆழத்தை அளவிட முடியாது. கிணற்றின் மேலிருந்து தண்ணீர் இருக்கும் வரை உள்ள ஆழத்தை அளவிடலாம். இந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஏரி, குளங்களை, ஆறுகளை, கிணறுகளை தண்ணீர் இல்லாமல் வற்ற வைத்து எனது பரிசோதனைக்கு உதவிய இந்த அரசாங்கங்களுக்கு மிக்க நன்றி.
- விவரங்கள்
- வெற்றிச்செல்வன்.மா.செ.
- பிரிவு: தொழில்நுட்பம்
“மாற்றம் ஒன்று தான் மாறாதது” என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அறிவியலுக்கு நன்றாகப் பொருந்துகிறது. முன்னர், நெதர்லாந்து நாட்டில் அமைக்கப்பெற்ற சோலார் மிதிவண்டிச் சாலையை குறித்துப் பார்த்தோம். இந்தச் சாலையின் மூலம், ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்தில் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தற்போது, பிரான்ஸ் நாட்டில், இன்னும் ஒரு படி மேலே சென்று சோலார் தகடுகளைப் பயன்படுத்தி சாலையை அமைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளின் கோடை காலங்களில் சராசரியாக அதிகபட்ச வெட்பநிலையே 20 டிகிரி செண்டிகிரேட் என்பது தான்.
(சமீபத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட சாலை)
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரெச்சே என்ற சிற்றூருக்கு 1 கிலோமீட்டர் அளவுக்கு சோலார் தகடுகளைப் பயன்படுத்தி 2800 சதுர மீட்டரில் சாலையை அமைத்துள்ளனர். இதில் செல்லும் மகிழுந்து (கார்) பயணத்தின் மூலம், 5,000 பேர் வசிக்கும் சிற்றூரின் தெருவிளக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். சிறிய அளவு அடத்தியுள்ள போட்டோவோல்டிக் (photovoltaic cells) செல்களை சாலையில் பதித்து இந்தச் சாலையை உருவாக்கியுள்ளனர். இந்தச் செல்கள் பாலிமர் மற்றும் ரெசின்களால் (Polymer and resins) பாதுகாக்கப்பட்டிருக்கும். இதன் மேற்புறம் சாதாரண சாலைகளில் செல்வதைப் போல இருப்பதற்கு ஏதுவாக வழவழப்புத் தன்மையை நீக்கி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
(சாலையின் சிறப்புகளை விளக்கும் படம்)
சிறிய அளவில் இப்போது துவங்கப்பட்டிருக்கும் சோலர் சாலையை, சுமார் 1,000 கிலோ மீட்டருக்கு விரிவுபடுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. ஆம், நீங்கள் கேட்பது புரிகிறது, அணு உலை எல்லாம் நமக்குதான்.
காற்றாலை மரம் (Wind Tree) – பாரிஸ், பிரான்ஸ்
மறுபடியும், பிரான்ஸ். ஆம், பாரிஸ் நகரில் “காற்றாலை மரத்தை” (Wind Tree) அமைத்துள்ளார், வின்ட் டிரீ (Wind Tree) என்ற நிறுவனத்தைச் சேந்த ஜெரோம் லாரிவிர். சுமார், 26 அடி உயரம் உள்ள இந்த காற்றாலை மரத்தில், இலைகளுக்கு இடையே சிறிய அளவிலான காற்றாலைத் தகடுகள் இருக்கும். காற்று அடிக்கும் போது இந்தச் சிறிய தகடுகள் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்யும். காற்றின் வேகம் மணிக்கு 4.5 கி.மீ இருந்தால் கூட இதனால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
(காற்றாலை மரத்துடன் அதன் நிறுவனர் ஜேரோம்)
பெரிய பெரிய காற்றாலைகளின் செலவுகளைப் பார்க்கும் போது, இதற்கு ஆகும் செலவு குறைவுதான். இந்தக் காற்றாலை மரத்தின் மூலம், 15 தெருவிளக்குகளுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான மின்சாரத்தையோ அல்லது ஒரு பேட்டரி கார் 1360 கி.மீ செல்லத் தேவையான மின்சாரத்தையோ கொடுக்க முடியும்.
இறுதியாக, சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதிக்கும் நிலக்கரி, பொது மக்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் நாசகார அணு உலைகளுக்கு முடிவு கட்டிவிட்டு, ஆரம்பச் செலவுகள் அதிகம் இருந்தாலும் யாருக்கும் பாதிப்பில்லாத நீர், காற்று மற்றும் சோலார் போன்ற இயற்க்கை சார்ந்த மின்சாரத்தை (Alternative Green Energy) நோக்கி பயணிப்போம். அதுவே, நம் வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் சிறந்த பரிசாக இருக்கும்.
- வெற்றிச் செல்வன்.மா.செ.
- பயர்பாக்ஸ் தரும் பயனுள்ள குறுஞ்செயலிகள்
- ஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்
- வாட்சப்பை முந்தும் டெலிகிராம்
- Compression Test என்றால் என்ன? அது எப்படி செய்யப்படுகிறது?
- இணையத் திருவிழா
- ஸ்மார்ட் போனில் தகவல்களை ஸ்மார்ட்டாக வைத்திருக்க 8 கட்டளைகள்
- ஜெட் இன்ஜின் - மனிதனை பறக்க வைத்த இயந்திரம்
- ஸ்மார்ட் போன் வாங்கப் போகிறீர்களா?
- காரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம்
- கியர் எப்படி வேலை செய்கிறது?
- சாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்
- கிளட்ச் (Clutch) - பயன்பாடும், செயல்முறையும்
- விமானம் பறப்பது எப்படி?
- நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்
- இரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா?
- ஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்?
- ஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்
- இலவசத் தளங்கள் இணையச் சமநிலையைப் பாதிக்குமா?
- Facebook’இன் அடுத்த நாடகம்
- அதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்?