கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
இணையத்தைப் பயன்படுத்த மிக வேகமான பிரவுசர் எது தெரியுமா? பயர்பாக்ஸ் தான்! ‘ஸ்பீடு கிங்’ என்று பரவலாக அறியப்படும் பயர்பாக்ஸ் பிரவுசர் இனிமையாக இணையத்தில் உலாவ, பல்வேறு குறுஞ்செயலிகள் எனப்படும் ஆட்-ஆன்களைத் தருகிறது. அவற்றுள் நமக்கு மிகவும் பயன்படும் சில குறுஞ்செயலிகள் இதோ!
1.ஆட் பிளாக்கர் பிளஸ்
இணையத்தில் ஏதோ ஓர் இணையத்தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த இணையத்தளத்தில் இருக்கும் வீடியோ விளம்பரங்கள் உங்கள் அனுமதியை வாங்காமலேயே தன்னால் ஓடத் தொடங்கி விடுகின்றனவா? யூடியூபில் இருக்கும் வீடியோக்களில் விளம்பரங்கள் வருகின்றனவா? பேஸ்புக் விளம்பரங்கள் தொல்லையாக இருக்கின்றனவா? இவற்றைத் தடுக்கும் குறுஞ்செயலி தான். உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இதை நிறுவிக் கொண்டால் போதும். இதன் பிறகு தேவையற்ற விளம்பரங்களை ஆட்பிளாக்கர் பிளஸ்சே பதம் பார்த்து விடும். நீங்கள் விளம்பரத் தொல்லையில்லாமல் இணையத்தில் உலவலாம்.
2. வீடியோ டவுன்லோடு ஹெல்பர்
இணையத்தில் ஆன்லைன் வீடியோக்கள் பார்க்கிறீர்கள். அவற்றை டவுன்லோடு செய்ய உதவும் எளிமையான குறுஞ்செயலி தான் வீடியோ டவுன்லோடு ஹெல்பர். யூடியூப், ஃபேஸ்புக் என்று எந்தத் தளமாக இருந்தாலும் அவற்றில் இருந்து எளிதாக வீடியோக்களை இந்தக் குறுஞ்செயலி மூலம் இறக்கிக் கொள்ளலாம்.
3. டவுன்தெம் ஆல்
முன்பு நாம் பார்த்தது வீடியோக்களுக்கு என்றால், இந்த டவுன் தெம் ஆல் குறுஞ்செயலி இணையத்தில் இருந்து எதை வேண்டுமானாலும் தரவிறக்குவதற்கு! இந்தக் குறுஞ்செயலி, தரவிறக்கும் வேகத்தை 4 மடங்கு வரை அதிகப்படுத்துவதுடன், இடையில் இணையம் துண்டிக்கப்பட்டாலோ, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இணையம் இல்லாமல் போனாலோ மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தரவிறக்கத்தைத் தொடரும். தேவைப்பட்டால் டவுன்லோடு ஆவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வசதியும் இதில் உண்டு என்பது இன்னொரு கூடுதல் சிறப்பு.
4. வெப் ஆஃப் டிரஸ்ட்
ஒவ்வொரு நாளும் எத்தனையோ இணையத்தளங்களைப் பார்க்கிறோம். எந்த இணையத்தளங்கள் நல்ல தளங்கள், எவை வைரஸ்களைப் பரப்பும் தளங்கள் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை – இல்லையா? நல்ல தளங்களை அடையாளம் கண்டுபிடித்துத் தரும் ஒரு குறுஞ்செயலி தான் வெப் ஆஃப் டிரஸ்ட் ஆகும். உலகம் முழுக்க உள்ள இணைய வாசிகள் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஓர் இணையத்தளம் நல்ல தளமா சுமாரா, இல்லை மோசமான தளமா என்று பட்டியலிட்டுச் சொல்வது தான் வெப் ஆஃப் டிரஸ்டின் வேலை. நல்ல தளம் என்றால் பச்சை, சுமார் என்றால் மஞ்சள், வைரஸ் பரப்பத் தக்க தளம் என்றால் சிவப்பு என்று சொல்லிவிடும் வெப் ஆஃப் டிரஸ்ட் குறுஞ்செயலி.
5. லாஸ்ட் பாஸ்
ஜிமெயில் கணக்குக்கு ஒரு கடவுச்சொல், அலுவலகத்தில் இரண்டு மூன்று கடவுச்சொற்கள், பேஸ்புக் கடவுச்சொல், டிவிட்டர், லிங்க்டு இன் கடவுச்சொற்கள் என்று பல கடவுச்சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள கஷ்டப்படுகிறீர்களா? இருக்கவே இருக்கிறது லாஸ்ட் பாஸ் குறுஞ்செயலி. உங்கள் எல்லாக் கடவுச் சொற்களையும் இதில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்தக் குறுஞ்செயலியின் கடவுச் சொல்லை மட்டும் நினைவில் கொண்டிருந்தால் போதும். மீதிக் கடவுச்சொற்கள் அத்தனையையும் லாஸ்ட் பாஸ் நினைவில் வைத்துக்கொள்ளும்.
6. டிக்சனரி
இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தால் போதும். டிக்சனரி குறுஞ்செயலி அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம், எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அனைத்து விவரங்களையும் பாப் அப் வடிவில் காட்டி விடும்.
- முத்துக்குட்டி
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
வண்டியில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றிற்கு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். எதிர்பாராமல் வண்டி பஞ்சராகி நின்று விடுகிறது. அடடா! இது என்ன சோதனை என்று நினைத்த படி, பக்கத்தில் உள்ள பஞ்சர் பார்க்கும் கடைக்கு வண்டியைக் கொண்டு போய் விடுகிறீர்கள். திடீரென ஒரு கை உங்கள் கையைப் பற்றுகிறது. 'சார்! என் பெயர் குமார். நீங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் வண்டியைத் தயாரித்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வண்டி வாங்கி விட்டு வேறு ஒருவரிடம் பஞ்சர் பார்க்க விட முடியாது. பாருங்கள் - இந்தக் கடை ஊழியரால் எங்கள் வண்டி டயரைக் கழற்றவே முடியாது' என்கிறார். நீங்கள் திரும்பிப் பார்க்கிறீர்கள். அவர் சொன்னது போலவே, கழற்ற முடியவில்லை.
'இதென்ன அநியாயம்? காசு கொடுத்து வண்டி வாங்கிய பிறகு, அந்த வண்டியைக் கழற்ற எனக்கு உரிமை கிடையாதா?' என்று கேட்பீர்கள் இல்லையா? 'ஆமாம் சார்! உங்கள் வண்டியை நாங்கள் மட்டும் தான் சரி பார்க்க முடியும். அதற்கும் நீங்கள் தனியாக வருடத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று பணம் கட்டினால் மட்டும் தான் வண்டியைத் தொட்டே பார்ப்போம் – இல்லாவிட்டால் நீங்கள் ஓட்டை வண்டியோடு உலாவ வேண்டியது தான்! பாருங்கள், நீங்கள் இதற்கெல்லாம் சம்மதம் சொல்லித் தான் வண்டி வாங்கியிருக்கிறீர்கள்' என்று ஓர் ஆவணத்தைக் காட்டுகிறார் குமார்.
இது ஒரு கற்பனை தான்! வண்டி மட்டுமல்ல, டிவி, செல்போன், பேன், மிக்சி, கிரைண்டர் என்று எந்தப் பொருளானாலும் சரி, வாங்கிய பிறகு அதன் முழு உரிமையும் வாடிக்கையாளருக்குத் தான்! அதை மாற்றுவதற்கு, திருத்துவதற்கு, என்று என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதை எல்லாம் செய்வதற்கு பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் அனுமதியெல்லாம் தேவை இல்லை.
ஆனால் இந்த உரிமை நீங்கள் வாங்கும் புரோபரைட்டரி சாப்ட்வேருக்குக் கிடையாது. புரோபரைட்டரி சாப்ட்வேரா – அப்படி என்றால் என்று குழம்ப வேண்டாம். இந்த உரிமையை உங்களுக்குக் கொடுக்காத எல்லா சாப்ட்வேரும் புரோபரைட்டரி சாப்ட்வேர் தான்! எ.கா. உங்களுக்கு நன்கு தெரிந்த விண்டோஸ். விண்டோசில் இயங்கும் உங்கள் கணினியின் ஓஎஸ் பழுதாகி விட்டால், விண்டோசில் என்ன பிரச்சினை என்று பார்க்கவே முடியாது - விண்டோசை நடத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் கட்டியிருந்தால் ஒழிய! விண்டோசுக்கு மட்டுமல்ல, புரோபரைட்டரி சாப்ட்வேர் எனப்படும் பல்வேறு மென்பொருட்களுக்கும் இதே கதை தான்! இது என்ன அக்கிரமமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க வந்த நாயகன் தான் ஓப்பன் சோர்ஸ்!
அதென்ன ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறீர்களா? ஓப்பன் சோர்ஸ் கதைக்கு முன்னால் - சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா? கிட்டத்தட்ட இதே கதை தான்! ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா? அப்படித் தெரிந்து கொள்ள அனுமதிக்கும் மென்பொருட்களை ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறார்கள். தமிழில் திறந்தமூல மென்பொருள். அதாவது, ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு, அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறது என்பதை எல்லோர் பார்வைக்கும் படும்படி கொடுத்து விடுவது!
இதென்ன புதுக்கதை? நான் ஒரு டிவியோ வண்டியோ வாங்கினால் கூட, உள்ளே என்னென்ன இருக்கின்றன என்று பார்க்கும் உரிமை எனக்கு இருக்கத்தான் செய்கிறது. அதே போல் தானே மென்பொருளுக்கும்! ஒரு மென்பொருளை விலை கொடுத்து வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருக்குத் தானே சொந்தம்? அவரால் அப்படி எல்லா மென்பொருட்களையும் திறந்து பார்க்க முடியாதா என்றால் முடியாது என்பது தான் உண்மை. என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கிய பிறகு அதில் என்னென்ன இருக்கிறது என்று வாடிக்கையாளர் பார்க்கக் கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும்? இதைக் கேள்வி கேட்க யாருமே இல்லையா? இதுவரை இதைக் கேள்வி கேட்ட ஒருவரும் இல்லையா? என் மென்பொருள் - என் உரிமை என்று உரிமைப் போராட்டத்திற்குத் தயாராகிறீர்களா?
கொஞ்சம் உங்கள் போராட்டத்தை ஒத்தி வையுங்கள். மென்பொருளில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கும் உரிமை எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தலைமுறைக்கு முன்னரே போராடத் தொடங்கிவிட்டார்கள். அப்படிப் போராடத் தொடங்கியவர்களுள் முக்கியமானவர் தான் ரிச்சர்டு ஸ்டால்மேன். ஒரு புத்தகம் வாங்குகிறீர்கள், படித்த பின் நன்றாக இருக்கிறதே என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் படிக்கக் கொடுக்கிறீர்கள். திரைப்பட சிடி ஒன்று வாங்குகிறீர்கள் - பார்த்து விட்டு நண்பர் ஒருவருக்குக் கொடுக்கிறீர்கள். இதே போல் விண்டோஸ் போன்ற மென்பொருள் சிடி ஒன்றை வாங்குகிறீர்கள். உங்கள் கணினியில் நிறுவிய பிறகு 'நன்றாக இருக்கிறதே! நண்பருக்கும் கொடுக்கலாமே!' என்று நினைத்தால் அது முடியாது. உங்கள் கணினியில் (அதுவும் ஒரு முறை தான்) பயன்படுத்த முடியும். இது அநியாயமாக அல்லவா தெரிகிறது என்று குரல் கொடுத்துப் போராடி வருபவர் தான் அவர். 'ஒரு மென்பொருளை வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருடையது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மென்பொருள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தீர்மானிக்கும் உரிமை வாடிக்கையாளருக்குத் தான் உண்டே தவிர, மென்பொருளை உருவாக்கிய நிறுவனத்திற்கு அல்ல' என்பது அவருடைய வாதம்.
ஒருவர் கையில் பணம் இருந்தாலே அது நல்ல பணம் தான்! அதைப் பணம் என்று சொன்னாலே போதும். 'வெள்ளைப் பணம்' 'வெள்ளைப் பணம்' என்று சொல்ல வேண்டிய தேவையில்லை அல்லவா? வருமான வரி கட்டப்படாமல் சேர்க்கப்படும் பணத்தை வேண்டுமானால் கருப்புப் பணம் என்று சொல்லலாம். அதே போல், உருவாக்கப்படும் எல்லா மென்பொருட்களுமே 'ஓப்பன் சோர்சாக'த் தான் இருக்க வேண்டும். எனவே, ஓப்பன் சோர்ஸ் ஓப்பன் சோர்ஸ் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. ஓப்பன் சோர்சாக மென்பொருளை உருவாக்க மாட்டேன் என்று சொல்லும் கணினி வல்லுநர்களை வேண்டுமானால் தவறு செய்பவர்கள் என்று சொல்லலாம் என்று பார்க்கிறார் ரிச்சர்டு ஸ்டால்மேன். அவர் சொல்வதும் சரியாகத் தானே தெரிகிறது.
இதனால் தான், அவர் 'ஓப்பன் சோர்ஸ்' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் 'ஃப்ரீ சாப்ட்வேர்' என்று சொல்கிறார். அதென்ன 'ஃப்ரீ'? விலையில்லா மிக்சி, விலையில்லா கிரைண்டர் என்று நம்மூரில் இருப்பது போல, விலையில்லா மென்பொருள் என்று நினைத்து விடாதீர்கள். இங்கு 'ஃப்ரீ' என்பது இலவசம் என்னும் அர்த்தத்தில் இல்லை. 'ஃபிரீ' என்பது 'ஃபிரீடம்' என்னும் 'கட்டற்ற சுதந்திரத்தின்' சுருக்கம். அதாவது ஒரு மென்பொருளை வாங்கிய பிறகு, அந்த மென்பொருளைத் திறந்து அதன் மூல நிரலைப் பார்க்கும் உரிமை, திருத்தும் உரிமை, மாற்றும் உரிமை ஆகிய கட்டற்ற உரிமைகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கொடுக்கப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு மென்பொருளும் 'ஃபிரீ சாப்ட்வேராக' இருக்க வேண்டும் என்கிறார் அவர். அட! இதுவும் சரிதானே! என்று தோன்றுகிறதா?
அனைவருக்கும் பயன்படும் சில கட்டற்ற மென்பொருட்கள்
1) மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசர்
2) லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
3) லிபர் ஆபீஸ் (மைக்ரோசாப்ட் ஆபிசுக்கு மாற்று)
4) விஎல்சி மீடியா பிளேயர்
5) கிம்ப் (போட்டோஷாப்பிற்கு மாற்று)
6) கோப்புகளை அனுப்பப் பயன்படும் ஃபைல்சில்லா
7) தண்டர்பேர்டு (அவுட்லுக்கு மாற்று)
8) ஒலிப்பதிவுக்குப் பயன்படும் அடாசிட்டி
இப்படிப்பட்ட சரியான வாதங்களை முன்வைத்து அவர் தொடங்கியது தான் 'ஃபிரீ சாப்ட்வேர் பவுண்டேஷன்' என்னும் அமைப்பு. 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு இப்போது உலகம் முழுக்கக் கிளைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளையிலும் ஃபிரீ சாப்ட்வேர் எனப்படும் கட்டற்ற மென்பொருளுக்கு ஏராளமான கணினி வல்லுநர்கள் இலவசமாக உழைத்து வருகிறார்கள்.
இப்படி உலகம் முழுக்க கட்டற்ற மென்பொருளுக்கு உழைக்கும் கணினி வல்லுநர்கள் மூலம் தான் கணிப்பொறியில் படம் பார்க்க உதவும் விஎல்சி மீடியா பிளேயர், இணையத்தில் உலாவ உதவும் பயர்பாக்ஸ் பிரெளசர், விண்டோசுக்குப் போட்டியாகத் திகழும் லினக்ஸ், இளைஞர்கள் பலர் வேலை தேடப் படிக்கும் ஜாவா, பைத்தான் – என்று பல்வேறு மென்பொருட்கள் இலவசமாகவும் கட்டற்ற வகையிலும் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டிலும் இதற்காக நிறைய ஐ.டி. வல்லுநர்கள் பாடுபட்டு வருகிறார்கள். https://fsftn.org/, http://www.kaniyam.com/ ஆகிய இணையத் தளங்கள் மூலம் எளிய தமிழில் கணினி சார்ந்த கட்டுரைகள், மின் நூல்கள் ஆகியவற்றை இலவசமாக வெளியிடுவது, கல்லூரிகளில் இலவசக் கருத்தரங்கங்கள் நடத்துவது எனப் பல்வேறு கணினி சார்ந்த விழிப்புணர்வு வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்கள். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் அவர்களுடன் இணைந்து கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்திற்கும் வலு சேர்க்கலாம் - கன்னித் தமிழையும் கணினித் தமிழாக்கலாம்.
(கட்டுரை - புதிய வாழ்வியல் மலர் செப். 1-15 2016 இதழில் வெளியானது)
- முத்துக்குட்டி
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
வாட்சப் இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை எனலாம். அந்த அளவுக்கு வாட்சப்பின் பயன்பாடு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. குறுஞ்சேதி அனுப்புவதில் தொடங்கி இணையத்தைப் பயன்படுத்தி எந்த நாட்டில் இருப்பவரையும் தொடர்பு கொண்டு பேசுவது வரை வாட்சப் நுழையாத இடம் இல்லை. என்ன தான் வாட்சப் எல்லோரும் பயன்படுத்தும் மிகப்பெரிய செயலி என்றாலும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டல்லவா?
கட்டற்ற மென்பொருளான டெலிகிராம் பயனர் எண்ணிக்கையில் வாட்சப் அளவு இல்லை என்றாலும் தொழில்நுட்ப ரீதியாகவும் பயன்பாட்டு ரீதியாகவும் மெல்ல வாட்சப்பை முந்தி வருகிறது. அப்படி வாட்சப்பையே முந்தும் அளவு டெலிகிராமில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?
இரகசிய அரட்டை
நீங்கள் அரட்டையில் விவாதிக்கும் முக்கியமான விசயங்களை உங்களுடன் அரட்டையில் இருப்பவர் வேறு யாருக்கும் ஃபார்வர்டு செய்யக்கூடாது என்று விரும்பினால் இந்த இரகசிய அரட்டை ("சீக்ரெட் சாட்") முறையில் அரட்டை அடிக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அரட்டை தானாகவே அழிந்து விடுமாறு வைக்கவும் இந்த இரகசிய அரட்டையில் முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
பெரிய ஃபைல்களையும் அனுப்பலாம்
கொஞ்ச நாளைக்கு முன்பு தான் பிடிஎப் கோப்புகளை அனுப்பும் முறையை வாட்சப் கொண்டுவந்தது. அதுவும் 160 எம்பி அளவு வரை உள்ள கோப்புகளைத் தான் உங்களால் அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 1.5 ஜிபி வரை கோப்புகளை அனுப்ப முடியும்.
மொபைல் டூ லேப்டாப்
நீங்கள் உங்கள் அலைபேசியில் டெலிகிராமை நிறுவி அரட்டையில் இருக்கிறீர்கள். திடீரென அலைபேசி சார்ஜ் இறங்கிவிட்டது. இப்போது நீங்கள் வேறு ஏதாவது ஒரு மடிக்கணினியிலோ அலைபேசியிலோ டெலிகிராமை நிறுவி அரட்டையைத் தொடரலாம். டெலிகிராமில் மேகக் கணினி முறையில் உங்களுடைய அரட்டைகள் கோத்து வைக்கப்படுகின்றன. இந்த நுட்பத்தால் ஒரு கருவியில் இருந்து இன்னொரு கருவியில் அரட்டையைத் தொடரும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
சூப்பர் குரூப்கள்
5000 பேர் வரை உள்ள சூப்பர் குரூப்களை டெலிகிராமில் உருவாக்கிக்கொள்ளலாம். நீங்கள் வாட்சப் குரூப்பில் இருந்தால் உங்களை யார் என்றே தெரியாத குழு உறுப்பினர் யார் வேண்டுமானாலும் உங்கள் மொபைல் நம்பரை எடுத்து விடலாம் இல்லையா? இங்கு டெலிகிராமில் அந்த வேலை எல்லாம் செய்ய முடியாது. உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, உங்கள் எண்ணைத் தெரிந்து கொள்ள முடியாது. அதே போல், குரூப்பில் எத்தனை உறுப்பினர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று பார்க்கும் வசதியும் டெலிகிராமில் உண்டு. இந்த குரூப்கள் தவிர்த்து, சேனல்களும் உள்ளன. எண்ணிலடங்கா உறுப்பினர்களை சேனல்களில் சேர்த்துக் கொள்வதோடு வேண்டுமானால் அவற்றை 'பப்ளிக்' ஆகவும் வைத்துக் கொள்ளலாம். 'பப்ளிக் சேனல்'களை அவற்றின் பெயர் கொண்டு யார் வேண்டுமானாலும் தேடி வந்து சேர்ந்து கொள்ளலாம்.
சாட்பாட்கள்
‘சாட்’ என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். முகநூல் மெசெஞ்சர், கூகுள் ஹேங்கவுட், வாட்சப், டெலிகிராம்’ போன்ற செயலிகள் மூலம் நண்பர்களுடன் உரையாடுவதைத் தான் ‘சாட்’ என்கிறார்கள். இப்போது ‘பாட்’ டிற்கு வருவோம். ரோபோ(ட்) (“RoBot”) என்பதில் இருந்து ‘பாட்’ (“Bot”) என்பதை எடுத்து இங்கே ஒட்டியிருக்கிறார்கள். இப்போது ‘பாட்’ என்றால் என்ன என்று ஓரளவு புரிந்திருக்குமே! ரோபோ(ட்) எப்படி எந்திர மனிதனாக இருந்து நமக்கு உதவுமோ, அதே போல, இந்த ‘சாட்பாட்’ தொழில்நுட்பத் துணைவனாக நம்முடைய ‘சாட்’களில் பயன்படும்.
டெலிகிராம் செயலி இருந்தால் யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றைத் தேட யூடியூப் செயலியோ, கூகுள் குரோம் போன்ற பிரெளசர் செயலியோ உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் டெலிகிராம் கணக்கில் இருந்து ஒரே ஒரு முறை யூடியூப் கணக்கில் (அதாவது, உங்கள் ஜிமெயில் கணக்கை) லாக் இன் செய்தால் போதும்! அதன் பிறகு ஒவ்வொரு முறை யூடியூப் லிங்கைத் தேடவும் ‘@youtube’ என்று தட்டி நீங்கள் தேடும் வீடியோ பெயரைக் கொடுத்தால் போதும். (எ.கா. நீங்கள் சென்னையைப் பற்றிய வீடியோ ஒன்றைத் தேட வேண்டும் என்றால் ‘@youtube chennai’ என்று உங்கள் டெலிகிராம் மெசெஞ்சரில் கொடுத்தால் போதும். சென்னையைப் பற்றிய வீடியோக்கள் யூடியூப் தளத்தில் இருந்து வரிசையாகக் காட்டப்படும்.)
இதே போல், @sticker (ஸ்டிக்கர்கள் மூலம் சாட் செய்ய), @music(இசையை இணையத்தில் தேட), @ImageBot (இணையத்தில் படங்கள் தேட), @PollBot (மெசெஞ்சர் குழுவில் கருத்துக்கணிப்புகளை நடத்த) எனப் பல்வேறு ‘சாட்பாட்’டுகளைக் கொடுத்து தொழில்நுட்பத்தின் அடுத்த கதவைத் திறக்கும் வழியைப் பார்த்திருக்கிறது டெலிகிராம்.
லாஸ்ட் சீன்
வாட்சப்பில் கடைசியாக நீங்கள் எப்போது இருந்தீர்கள் என்பதைப் பார்க்கும் 'லாஸ்ட் சீன்' (last seen) இருக்கும். இதே 'லாஸ்ட் சீன்' முறையைக் கொண்டிருக்கும் டெலிகிராமில், வேண்டும் ஆட்களுக்கு மட்டும் 'லாஸ்ட் சீன்' தெரியாமல் செய்து விடும் வசதி உள்ளது. இதே போல் அரட்டைகளுக்குப் பூட்டு போட்டுப் பாதுகாப்பது போன்ற பல வசதிகளுடன் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது டெலிகிராம்.
இத்தனை வசதிகள் இருந்தும் வாட்சப்பில் இருப்பது போல் 'அழைக்கும் வசதி' டெலிகிராமில் இல்லை என்பது சின்ன குறைதான்! அந்த வசதியும் வந்து விட்டால் கட்டற்ற மென்பொருளாகிய டெலிகிராம், வாட்சப்பை முந்தி எல்லோர் அலைபேசியிலும் உட்காரும் நாள் வெகுதொலைவில் இல்லை.
- முத்துக்குட்டி
- விவரங்கள்
- ஷேக் அப்துல் காதர்
- பிரிவு: தொழில்நுட்பம்
Compression என்பது வாகன Engineல் Piston, engine cylinderல் மேல்நோக்கி செல்லும் போது அதன் கொள்ளளவு (Volume) குறையும். அப்போது காற்று அல்லது காற்று - எரிபொருள் கலவையானது தன்னுடைய கொள்ளவை விடக் குறைவான கொள்ளளவு நிலைக்குச் செல்லும். அப்போது அதன் மீது செயல்படும் விசையானது அதிலுள்ள மூலக்கூறுகளை ஒன்றோடு ஒன்றாக அழுத்தி, அதிக அழுத்தம் (Pressure) உண்டாகும். இதுவே Compression ஆகும்.
Petrol engine ஐப் பொருத்தமட்டில் இந்த அழுத்தத்தின் அளவு 140 - 160 psi ஆகும். சில வகையான Petrol engine ல் 220 psi வரை அழுத்தம் இருக்கும். அது அதனுடைய அளவு மற்றும் பயன்பாட்டை பொருத்தது. petrol engine ல் அழுத்தம் இந்த குறிப்பிட்ட அழுத்தத்தை விட அதிகமாக இருந்தால் petrol engineல் Preignition பிரச்சினை ஏற்படும். அதனால் Engine உள் இருக்கும் பாகங்கள் பாதிப்படையும். ஆனால், Diesel engine ஐப் பொருத்தமட்டில் அழுத்தமானது 350 psi கும் அதிகமாக இருக்கும். காரணம் Petrol engineல் Petrol ஐ எரிய வைக்க spark plug பயன்படுத்தப்படுகிறது. ஆனால் Diesel engineல் அதிக அழுத்தத்தினால் ஏற்படும் வெப்பத்தின் மூலம் Diesel எரியூட்டப்படும். எனவே தான் diesel engine அளவில் பெரியதாக உள்ளது. இந்த அழுத்தப்பட்ட காற்று அல்லது காற்று - எரிபொருள் கலவையை எரியூட்டுவதன் மூலம் பெறப்படும் ஆற்றலின் மூலம் தான் அனைத்து வகை தானியங்கிகளும் இயக்கம் பெறுகின்றன.
எப்போது ஒரு வாகனத்திற்கு Compression Test தேவைப்படுகிறது?
பொதுவாக சொன்னால் இந்த testஐ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக Engine இயக்கத்தில் வசதியின்மை (Roughness) அல்லது ஆற்றல் குறைபாடு (Power lacking) ஆகியவை இருந்தால் இந்த Test செய்துபார்க்க வேண்டும்.
Compression Test எப்படி செய்யப்படுகிறது?
Compression Test ஆனது பல வகையான வாகனங்களுக்கு பல வழிகளில் செய்யப்படுகிறது, இந்தப் பதிவில் Petrol engineல் நடைபெறும் Compression test ஐப் பற்றி பார்ப்போம்.
Petrol engineல் Compression test ஆனது இரு வழிகளில் செய்யப்படுகிறது.
முதல் வகையில் Compression test சாதாரணமாக Compression gauge மூலம் செய்யப்படுகிறது.
செய்முறை
முதலில் Engine ஐ சிறிது நேரம் ஓட விட்டு சூடுபடுத்தவும். அதே நேரத்தில் Oil ம் சற்று சூடாகும். குளிர்ச்சியாக இருந்தால் சரியான அளவீடு கிடைக்காது.
Ignition coil ஐ Disconnect செய்யவும்.
Spark plug ஐ கழட்டி அந்த இடத்தில் Compression tester ஐ மாட்டவும்.
Accelerator ஐ Full ஆக வைக்கவும். அப்போது தான் Engine cylinder-குள் போதுமான அளவு காற்று செல்லும்.
இப்போது தொடர்ச்சியாக Engineஐ 5லிருந்து 10 முறை சுழற்றவும். அப்போது தான் Compression testerல் சரியான அளவீடு பதிவாகும்.
இவ்வாறு எத்தனை Cylinder-கள் உள்ளனவோ அத்தனை Cylinder-களுக்கும் செய்து Engine cylinder-ன் அழுத்தத்தை அறியலாம்.
இப்போது ஒவ்வொரு Cylinder-ன் அழுத்த மதிப்பின் வேறுபாடு 10%க்கும் குறைவாக இருந்தால் அழுத்தமானது போதுமான அளவில் உள்ளதாக எடுத்துக்கொள்ளப்படும். ஒரு வேளை 10% அதிகமாக இருந்தால் ஒன்று அல்லது அதற்கு அதிகமான Cylinderகளில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எனவே அவை வேறு சில TEST மூலம் கண்டறியப்படும்.
இரண்டாவது முறையில் ஒரு Electronic Engine Analyzer-ஐப் பயன்படுத்தி ஒவ்வொரு Cylinder யும் சோதனை செய்து இது Engine வேகம் RPM எந்த அளவு குறைகிறது என்பதைக் கணக்கிட்டு எந்த Cylinderல் அழுத்தம் அதிகமாக உள்ளது, எந்த Cylinder-ல் அழுத்தம் குறைவாக உள்ளது என்பதை எளிதாக அறியலாம். முதல் வழியுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது வழி எளிமையானது ஆகும்.
- ஷேக் அப்துல் காதர்
- இணையத் திருவிழா
- ஸ்மார்ட் போனில் தகவல்களை ஸ்மார்ட்டாக வைத்திருக்க 8 கட்டளைகள்
- ஜெட் இன்ஜின் - மனிதனை பறக்க வைத்த இயந்திரம்
- ஸ்மார்ட் போன் வாங்கப் போகிறீர்களா?
- காரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம்
- கியர் எப்படி வேலை செய்கிறது?
- சாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்
- கிளட்ச் (Clutch) - பயன்பாடும், செயல்முறையும்
- விமானம் பறப்பது எப்படி?
- நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்
- இரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா?
- ஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்?
- ஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்
- இலவசத் தளங்கள் இணையச் சமநிலையைப் பாதிக்குமா?
- Facebook’இன் அடுத்த நாடகம்
- அதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்?
- Genetically Modified சோளமும் கேன்சரும் - ஆய்வு கட்டுரையை திரும்ப பெற்ற பத்திரிக்கை!
- வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம்
- அணுசக்தி மனித குலத்திற்குத் தேவையா?
- ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள்