வாட்சப் இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை எனலாம்.  அந்த அளவுக்கு வாட்சப்பின் பயன்பாடு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.  குறுஞ்சேதி அனுப்புவதில் தொடங்கி இணையத்தைப் பயன்படுத்தி எந்த நாட்டில் இருப்பவரையும் தொடர்பு கொண்டு பேசுவது வரை வாட்சப் நுழையாத இடம் இல்லை. என்ன தான் வாட்சப் எல்லோரும் பயன்படுத்தும் மிகப்பெரிய செயலி என்றாலும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டல்லவா?  

telegramகட்டற்ற மென்பொருளான டெலிகிராம் பயனர் எண்ணிக்கையில் வாட்சப் அளவு இல்லை என்றாலும் தொழில்நுட்ப ரீதியாகவும் பயன்பாட்டு ரீதியாகவும் மெல்ல வாட்சப்பை முந்தி வருகிறது.  அப்படி வாட்சப்பையே முந்தும் அளவு டெலிகிராமில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

இரகசிய அரட்டை

நீங்கள் அரட்டையில் விவாதிக்கும் முக்கியமான விசயங்களை உங்களுடன் அரட்டையில் இருப்பவர் வேறு யாருக்கும் ஃபார்வர்டு செய்யக்கூடாது என்று விரும்பினால் இந்த இரகசிய அரட்டை ("சீக்ரெட் சாட்") முறையில் அரட்டை அடிக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அரட்டை தானாகவே அழிந்து விடுமாறு வைக்கவும் இந்த இரகசிய அரட்டையில் முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 

பெரிய ஃபைல்களையும் அனுப்பலாம்

கொஞ்ச நாளைக்கு முன்பு தான் பிடிஎப் கோப்புகளை அனுப்பும் முறையை வாட்சப் கொண்டுவந்தது.  அதுவும் 160 எம்பி அளவு வரை உள்ள கோப்புகளைத் தான் உங்களால் அனுப்ப முடியும்.  ஆனால் டெலிகிராமில் 1.5 ஜிபி வரை கோப்புகளை அனுப்ப முடியும்.  

மொபைல் டூ லேப்டாப்

நீங்கள் உங்கள் அலைபேசியில் டெலிகிராமை நிறுவி அரட்டையில் இருக்கிறீர்கள்.  திடீரென அலைபேசி சார்ஜ் இறங்கிவிட்டது.  இப்போது நீங்கள் வேறு ஏதாவது ஒரு மடிக்கணினியிலோ அலைபேசியிலோ டெலிகிராமை நிறுவி அரட்டையைத் தொடரலாம்.  டெலிகிராமில் மேகக் கணினி முறையில் உங்களுடைய அரட்டைகள் கோத்து வைக்கப்படுகின்றன.  இந்த நுட்பத்தால் ஒரு கருவியில் இருந்து இன்னொரு கருவியில் அரட்டையைத் தொடரும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.  

சூப்பர் குரூப்கள்

5000 பேர் வரை உள்ள சூப்பர் குரூப்களை டெலிகிராமில் உருவாக்கிக்கொள்ளலாம்.  நீங்கள் வாட்சப் குரூப்பில் இருந்தால் உங்களை யார் என்றே தெரியாத குழு உறுப்பினர் யார் வேண்டுமானாலும் உங்கள் மொபைல் நம்பரை எடுத்து விடலாம் இல்லையா?  இங்கு டெலிகிராமில் அந்த வேலை எல்லாம் செய்ய முடியாது.  உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, உங்கள் எண்ணைத் தெரிந்து கொள்ள முடியாது.  அதே போல், குரூப்பில் எத்தனை உறுப்பினர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று பார்க்கும் வசதியும் டெலிகிராமில் உண்டு.  இந்த குரூப்கள் தவிர்த்து, சேனல்களும் உள்ளன. எண்ணிலடங்கா உறுப்பினர்களை சேனல்களில் சேர்த்துக் கொள்வதோடு வேண்டுமானால் அவற்றை 'பப்ளிக்' ஆகவும் வைத்துக் கொள்ளலாம்.  'பப்ளிக் சேனல்'களை அவற்றின் பெயர் கொண்டு யார் வேண்டுமானாலும் தேடி வந்து சேர்ந்து கொள்ளலாம்.  

சாட்பாட்கள்

‘சாட்’ என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். முகநூல் மெசெஞ்சர், கூகுள் ஹேங்கவுட், வாட்சப், டெலிகிராம்’ போன்ற செயலிகள் மூலம் நண்பர்களுடன் உரையாடுவதைத் தான் ‘சாட்’ என்கிறார்கள். இப்போது ‘பாட்’ டிற்கு வருவோம். ரோபோ(ட்) (“RoBot”) என்பதில் இருந்து ‘பாட்’ (“Bot”) என்பதை எடுத்து இங்கே ஒட்டியிருக்கிறார்கள். இப்போது ‘பாட்’ என்றால் என்ன என்று ஓரளவு புரிந்திருக்குமே! ரோபோ(ட்) எப்படி எந்திர மனிதனாக இருந்து நமக்கு உதவுமோ, அதே போல, இந்த ‘சாட்பாட்’ தொழில்நுட்பத் துணைவனாக நம்முடைய ‘சாட்’களில் பயன்படும்.

டெலிகிராம் செயலி இருந்தால் யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றைத் தேட யூடியூப் செயலியோ, கூகுள் குரோம் போன்ற பிரெளசர் செயலியோ உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் டெலிகிராம் கணக்கில் இருந்து ஒரே ஒரு முறை யூடியூப் கணக்கில் (அதாவது, உங்கள் ஜிமெயில் கணக்கை) லாக் இன் செய்தால் போதும்! அதன் பிறகு ஒவ்வொரு முறை யூடியூப் லிங்கைத் தேடவும் ‘@youtube’ என்று தட்டி நீங்கள் தேடும் வீடியோ பெயரைக் கொடுத்தால் போதும். (எ.கா. நீங்கள் சென்னையைப் பற்றிய வீடியோ ஒன்றைத் தேட வேண்டும் என்றால் ‘@youtube ­chennai’ என்று உங்கள் டெலிகிராம் மெசெஞ்சரில் கொடுத்தால் போதும். சென்னையைப் பற்றிய வீடியோக்கள் யூடியூப் தளத்தில் இருந்து வரிசையாகக் காட்டப்படும்.)

இதே போல், @sticker (ஸ்டிக்கர்கள் மூலம் சாட் செய்ய), @music(இசையை இணையத்தில் தேட), @ImageBot (இணையத்தில் படங்கள் தேட), @PollBot (மெசெஞ்சர் குழுவில் கருத்துக்கணிப்புகளை நடத்த) எனப் பல்வேறு ‘சாட்பாட்’டுகளைக் கொடுத்து தொழில்நுட்பத்தின் அடுத்த கதவைத் திறக்கும் வழியைப் பார்த்திருக்கிறது டெலிகிராம்.

லாஸ்ட் சீன்

வாட்சப்பில் கடைசியாக நீங்கள் எப்போது இருந்தீர்கள் என்பதைப் பார்க்கும் 'லாஸ்ட் சீன்' (last seen) இருக்கும்.  இதே 'லாஸ்ட் சீன்' முறையைக் கொண்டிருக்கும் டெலிகிராமில், வேண்டும் ஆட்களுக்கு மட்டும் 'லாஸ்ட் சீன்' தெரியாமல் செய்து விடும் வசதி உள்ளது.  இதே போல் அரட்டைகளுக்குப் பூட்டு போட்டுப் பாதுகாப்பது போன்ற பல வசதிகளுடன் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது டெலிகிராம்.  

இத்தனை வசதிகள் இருந்தும் வாட்சப்பில் இருப்பது போல் 'அழைக்கும் வசதி' டெலிகிராமில் இல்லை என்பது சின்ன குறைதான்!  அந்த வசதியும் வந்து விட்டால் கட்டற்ற மென்பொருளாகிய டெலிகிராம், வாட்சப்பை முந்தி எல்லோர் அலைபேசியிலும் உட்காரும் நாள் வெகுதொலைவில் இல்லை. 

- முத்துக்குட்டி

Pin It