adblock plus

இணையத்தைப் பயன்படுத்த மிக வேகமான பிரவுசர் எது தெரியுமா?  பயர்பாக்ஸ் தான்!  ‘ஸ்பீடு கிங்’ என்று பரவலாக அறியப்படும் பயர்பாக்ஸ் பிரவுசர் இனிமையாக இணையத்தில் உலாவ, பல்வேறு குறுஞ்செயலிகள் எனப்படும் ஆட்-ஆன்களைத் தருகிறது.  அவற்றுள் நமக்கு மிகவும் பயன்படும் சில குறுஞ்செயலிகள் இதோ! 

1.ஆட் பிளாக்கர் பிளஸ்

இணையத்தில் ஏதோ ஓர் இணையத்தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த இணையத்தளத்தில் இருக்கும் வீடியோ விளம்பரங்கள் உங்கள் அனுமதியை வாங்காமலேயே தன்னால் ஓடத் தொடங்கி விடுகின்றனவா?  யூடியூபில் இருக்கும் வீடியோக்களில் விளம்பரங்கள் வருகின்றனவா?  பேஸ்புக் விளம்பரங்கள் தொல்லையாக இருக்கின்றனவா?  இவற்றைத் தடுக்கும் குறுஞ்செயலி தான்.  உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இதை நிறுவிக் கொண்டால் போதும்.  இதன் பிறகு தேவையற்ற விளம்பரங்களை ஆட்பிளாக்கர் பிளஸ்சே பதம் பார்த்து விடும்.  நீங்கள் விளம்பரத் தொல்லையில்லாமல் இணையத்தில் உலவலாம். 

2. வீடியோ டவுன்லோடு ஹெல்பர்

இணையத்தில் ஆன்லைன் வீடியோக்கள் பார்க்கிறீர்கள்.  அவற்றை டவுன்லோடு செய்ய உதவும் எளிமையான குறுஞ்செயலி தான் வீடியோ டவுன்லோடு ஹெல்பர்.  யூடியூப், ஃபேஸ்புக் என்று எந்தத் தளமாக இருந்தாலும் அவற்றில் இருந்து எளிதாக வீடியோக்களை இந்தக் குறுஞ்செயலி மூலம் இறக்கிக் கொள்ளலாம்.

3. டவுன்தெம் ஆல்

முன்பு நாம் பார்த்தது வீடியோக்களுக்கு என்றால், இந்த டவுன் தெம் ஆல் குறுஞ்செயலி இணையத்தில் இருந்து எதை வேண்டுமானாலும் தரவிறக்குவதற்கு!  இந்தக் குறுஞ்செயலி, தரவிறக்கும் வேகத்தை 4 மடங்கு வரை அதிகப்படுத்துவதுடன், இடையில் இணையம் துண்டிக்கப்பட்டாலோ, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இணையம் இல்லாமல் போனாலோ மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தரவிறக்கத்தைத் தொடரும்.  தேவைப்பட்டால் டவுன்லோடு ஆவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வசதியும் இதில் உண்டு என்பது இன்னொரு கூடுதல் சிறப்பு. 

4. வெப் ஆஃப் டிரஸ்ட்

ஒவ்வொரு நாளும் எத்தனையோ இணையத்தளங்களைப் பார்க்கிறோம்.  எந்த இணையத்தளங்கள் நல்ல தளங்கள், எவை வைரஸ்களைப் பரப்பும் தளங்கள் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை – இல்லையா?  நல்ல தளங்களை அடையாளம் கண்டுபிடித்துத் தரும் ஒரு குறுஞ்செயலி தான் வெப் ஆஃப் டிரஸ்ட் ஆகும்.  உலகம் முழுக்க உள்ள இணைய வாசிகள் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஓர் இணையத்தளம் நல்ல தளமா சுமாரா, இல்லை மோசமான தளமா என்று பட்டியலிட்டுச் சொல்வது தான் வெப் ஆஃப் டிரஸ்டின் வேலை.  நல்ல தளம் என்றால் பச்சை, சுமார் என்றால் மஞ்சள், வைரஸ் பரப்பத் தக்க தளம் என்றால் சிவப்பு என்று சொல்லிவிடும் வெப் ஆஃப் டிரஸ்ட் குறுஞ்செயலி.           

dictionary com

5. லாஸ்ட் பாஸ்

ஜிமெயில் கணக்குக்கு ஒரு கடவுச்சொல், அலுவலகத்தில் இரண்டு மூன்று கடவுச்சொற்கள், பேஸ்புக் கடவுச்சொல், டிவிட்டர், லிங்க்டு இன் கடவுச்சொற்கள் என்று பல கடவுச்சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள கஷ்டப்படுகிறீர்களா?  இருக்கவே இருக்கிறது லாஸ்ட் பாஸ் குறுஞ்செயலி.  உங்கள் எல்லாக் கடவுச் சொற்களையும் இதில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.  அதன் பிறகு இந்தக் குறுஞ்செயலியின் கடவுச் சொல்லை மட்டும் நினைவில் கொண்டிருந்தால் போதும்.  மீதிக் கடவுச்சொற்கள் அத்தனையையும் லாஸ்ட் பாஸ் நினைவில் வைத்துக்கொள்ளும். 

6. டிக்சனரி

இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தால் போதும். டிக்சனரி குறுஞ்செயலி அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம், எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அனைத்து விவரங்களையும் பாப் அப் வடிவில் காட்டி விடும்.

- முத்துக்குட்டி

Pin It