கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
இன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு வெளியே நாம் எந்த திசையில் திரும்பிப் பார்த்தாலும் சரி, CCTV camera -கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். பெருவாரியாக மக்கள் கூடும் இடங்கள் தொடங்கி வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அலுவலகங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் இப்படி CCTV camera பொருத்தப் பட்டிருக்கும் இடங்களை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
சில வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வீட்டுக்கு வெளியேயும் இதுபோல் கேமராக்கள் வைத்திருக்கிறார்கள். அதேவேளையில் காவல் துறையினரின் ஆடையிலும் body camera பொருத்தப்பட்டிருக்கும் நிலை அங்கு இருக்கிறது. இது தொடர்ச்சியாக மக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். இதில் பதிவாகும் தகவல்கள் DVR -ல் (digital video recorder) சேமித்து வைக்கப்படும். இது அவர்களின் அலுவலகத்தில் இருக்கலாம் அல்லது 'கிளவுட்' -ல் பல ஆயிரம் மைல்கள் கடந்து எங்கோ ஓரிடத்தில் சேமிக்கப்படலாம்.
ஏதாவது சந்தேகத்திற்குரிய குற்றச் சம்பவங்கள் நடந்திருக்கும் பட்சத்தில் அதில் பதியப்பட்ட தகவல்களை எடுத்து, எந்த நேரத்தில்? எந்த இடத்தில்? யார் வந்தது? என்பதை அவர்களிடம் இருக்கும் tool -களை வைத்து ஆய்வுகள் செய்வார்கள். இந்த ஆய்வுகளை மேற்கொள்ள கால நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அதிலும் சற்று தெளிவாக இல்லாத படங்கள் வரும் சமயத்தில் ஒரு முடிவினை எடுப்பதற்கு இன்னும் இது அதிகமாகும். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே 'facial recognition' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.
CCTV -கள் மூலம் பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தையும் facial recognition தொழில் நுட்பத்துடன் இணைத்து விட்டால். கேமராக்களில் பதியப்பட்ட காட்சியில் தெரியும் நபரின் கண், மூக்கு, காது, தாடை, உயரம் எல்லாவற்றையும் அளவிட்டு இவர் இன்னார்தான் என்று நொடிப் பொழுதில் காட்டிவிடும். ஏனெனில் அவர்களுடைய database -ல் மில்லியன் கணக்கில் புகைப்படங்கள் இருக்கிறது. அவை எல்லாவற்றையும் algorithm கணக்கீடுகள் மூலம் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
இது 100% சரியான முடிவைத் தரும் என்று கூற முடியாது. இதிலும் பிழைகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஒருபுறம் இதன் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மறுபுறம் இதில் தனிநபர் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறல்கள் இருக்கிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் வர்த்தகம் 2022ஆம் ஆண்டில் 7.7 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எப்படி செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம்?
Facial recognition தொழில்நுட்பத்திற்கு CCTV camera மட்டும் தான் என்றில்லை. நமது கையில் இருக்கும் கைபேசியின் கேமராவே போதுமானது. சமூக வலைத்தளங்களிலோ அல்லது வேறு எங்கோ நம்மால் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் எல்லாம், எங்கோ ஓரிடத்தில் டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டு அதில் டிஜிட்டல் தகவல்களாக மாற்றப்பட்டு இருக்கும்.
உதாரணத்திற்கு பிரபல சமூக வலைத்தளம் பேஸ்புக்-ஐ எடுத்துக் கொள்வோம். 2011ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'tag suggestions' மூலம் புகைப்படங்களை பதிவேற்றுவது பெரும் வரவேற்பைப் பெற்றது. நாம் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தைப் பார்த்து, படத்தில் இருப்பவர்கள் யார்? என்பதைப் பெயருடன் வரும் சேவையை facial recognition தொழில்நுட்பத்துடன் ஆரம்பித்தது. இந்தத் தொழில்நுட்பம் நமது புகைப்படத்தையோ அல்லது காணொலிக் கட்சிகளையோ பதிவேற்றம் செய்யும்போது, நாம் இருக்கும் இடத்தையும் டேக் செய்து பதிவேற்றும். இப்போது அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் facial recognition நமது படத்தின் மேலிருந்து கீழ் வரை (algorithm) கணிதச் சமன்பாடுகள் மூலம் இவர் இப்படி தான் இருக்கிறார், இவரின் நீளம், உயரம், நிறம், எல்லாவற்றையும் துல்லியமாகப் பதிவு செய்து விடும். இதே போல் நமது நண்பர்களும் செய்திருக்கலாம். இப்போது நண்பரின் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. நமது நண்பரின் நண்பர் அந்த புகைப்படங்களைப் பார்க்கிறார். இவர் இன்னார் தான் என்று அதிலுள்ள (மென்பொருள்) செயற்கை நுண்ணறிவு கண்டறிந்து புகைப்படத்தின் கீழே நமது பெயரும் வந்துவிடும். நாமும் அதை விரும்பி 'லைக்ஸ்' செய்வோம். இதனால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆகஸ்ட் 8, 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று பேஸ்புக்கின் 'facial recognition' தொழில்நுட்பத்திற்கு எதிராக, தனிநபர் சுதந்திரம் பாதிக்கும் பட்சத்தில் அதன் பயனாளிகள் வழக்கு தொடரலாம் என்றது. (நன்றி: npr news).
அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சில பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகள் check in செய்யும் போது, பயணம் செய்யும் நபரின் முகத்தை வைத்து நுழைவுச் சீட்டை தந்துவிடும் அங்கிருக்கும் தானியங்கி இயந்திரங்கள். எப்படி? நமது பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் அரசாங்கத்திடம் இருக்கிறது. இதனை விமானங்கள் இயக்கும் நிறுவனங்களும் பகிர்ந்து கொள்கின்றன. Facial recognition தொழில்நுட்பத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் இயந்திரங்கள் முகத்தைப் பார்த்து இவர் இன்னார் தான் என்று திரையில் காண்பிக்கிறது. இது எல்லா பயணிகளுக்கும் கட்டாயம் இல்லை. யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். வரிசையில் நிற்கும் நேர்த்தைக் குறைப்பதற்கு இந்த சேவை இருக்கிறது. சில நாடுகளில் இந்த சேவைகள் பயன்பாட்டில் இருந்தாலும், இதனால் சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை.
இன்றைய நவீன மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன்களும் கூட இந்த தொழில்நுட்பத்தில் தான் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக நாம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் இல்லாமல், நமது முகத்தை வைத்து செல்போனில் உள்ளே நுழையும் பாதுகாப்பு வழிமுறைகள் வந்து விட்டன.
இதுவே சில டேட்டா சென்டர்களில் (தகவல்கள் சேமிக்கும் நிலையங்கள்) அதன் பணியாளர்கள் உள்ளே நுழைவதற்கு பல அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தாலும், தற்போது முகம் அறிந்து செயல்படும் facial recognition தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பணியாளர்களின் புகைப்படம் ஏற்கனவே தொழில்நுட்பத்துடன் பதியப்பட்டிருக்கும். பணியாளர்கள் கேமராவுக்கு முன்பு நிற்கும்போது, அவரின் முக அடையாளங்களை வைத்து உள்ளே நுழைவதற்கான அனுமதி தருகிறது.
மனித உரிமைகள் அமைப்பின் கோரிக்கையும் மென்பொருள் நிறுவனங்களின் மனமாற்றமும்:
கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த facial recognition தொழில்நுட்பத்தை, தற்போது காவல் துறையினர் பயன்படுத்துவதற்கு ஓராண்டுக்கு தடை விதித்திருக்கிறது மென்பொருள் நிறுவனமான அமேசான். அமேசானின் வெப் சர்வீஸில் உள்ள Rekognition என்ற பிரிவு, பிரத்தியேகமாக facial recognition என்ற தொழில் நுட்ப சேவையை பல வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அமெரிக்க காவல்துறை இவர்களின் தொழில்நுட்பத்தை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு பயன்படுத்தி வந்தார்கள். ஜுன் 10ஆம் தேதி அமேசான் வெப் சர்வீஸ் தளத்தின் blog -ல் "தங்களது தொழில் நுட்பம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான ஒழுங்கு, வழிமுறைகள் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் வரை ஓராண்டு காலத்திற்கு இந்த சேவையை வழங்குவதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் மனிதர்களை வதை செய்வது போன்ற செயல்களுக்கு எதிராக தொடர்ந்து இச்சேவை வழங்கப்படும்" என்று தங்களது அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள்.
பொது மக்களிடமிருந்தும் மனித உரிமை ஆர்வலர்களிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்கள். அமேசானின் இந்த நடவடிக்கையை ALCU (American Civil Liberties Union) என்ற அமைப்பு வரவேற்றுள்ளது. இந்த அமைப்பில் உள்ள தொழில்நுட்ப தலைவர் Nicole Ozer, "முகம் அறியும் தொழில்நுட்பத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். அமேசான் நிறுவனம் தற்போது தான் இந்த தொழில்நுட்பத்தின் மற்றொரு முகத்தைக் கண்டறிந்துள்ளது. முகம் அறியும் தொழில்நுட்பம் வழக்கத்திற்கு மாறான அதிகாரத்தை அரசாங்கத்திற்குத் தருகிறது. இதனைப் பயன்படுத்தி சாதாரண குடிமக்களைக் கூட அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் பின்னாடியே சென்று உளவு பார்ப்பது போல் பார்க்கிறது" என்றார். (தரவு: https://www.npr.org/2020/06/10/874418013/amazon-halts-police-use-of-its-facial-recognition-technology)
கடந்த சில ஆண்டுகளாக இதில் ஆராய்ச்சி செய்து வரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுவதும், 'இது தவறான முறையில் பயன்படுத்தப் படுகிறது' என்பதுதான். இந்த தொழில்நுட்பம் கருப்பு நிறமுடைய மக்களை அடையாளப்படுத்துவதில் பெரும்பாலும் தவறான முடிவையே வெளியிட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் ஓர் ஆய்வினை மேற்கொண்ட MIT (Massachusetts Institute of technology) இலகுவான தோல் உடைய ஆண்களை எப்போதாவது ஒருமுறை சரியான முறையில் அடையாளப்படுத்தி இருக்கிறது. அதே வேளையில் இலகுவான தோல் உடைய 7% பெண்களை தவறான முறையில் அடையாளப்படுத்தி இருக்கின்றது. இதையே கறுப்பின மக்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டதில் 35% பெண்களை தவறாக அடையாளப்படுத்தி இருக்கிறது.
அமேசான் நிறுவனம் இந்த முடிவை எடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மற்றொரு தகவல் தொழில்நுட்ப ஜாம்பவானான ஐபிஎம் நிறுவனம் 'காவல்துறைக்கு தமது சேவைகளை அளிப்பதில்லை' என்று முடிவெடுத்திருந்தார்கள்.
ஜூன் 8 ஆம் தேதி ஐபிஎம் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி அரவிந்த் கிருஷ்ணா, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கடிதம் மூலம் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். "ஐபிஎம் நிறுவனத்தின் பொது பயன்பாடு facial recognition தொழில்நுட்பத்தை சட்டம் ஒழுங்கைக் காக்கும் துறைக்கு அளிப்பதில்லை. பெருவாரியான மக்களைக் கண்காணிப்பது, நிறப் பாகுபாடு, வன்முறைகள், மனித உரிமைகளை மீறும் செயல்களுக்கு பயன்படுத்த விடமாட்டோம். செயற்கை நுண்ணறிவு என்பது மிகவும் வலிமையான சாதனம். மக்களுக்கு பாதுகாப்பை அளிப்பது தான் இதன் முக்கிய நோக்கம். ஆனால், இது அவ்வாறு பயன்படுத்தப் படவில்லை" என்று கடிதம் ஒன்றை எழுதினார். (தரவுகள்: https://www.ibm.com/blogs/policy/facial-recognition-susset-racial-justice-reforms/)
உலகில் பல்வேறு நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு சீனாவில் மட்டும் 300 மில்லியன் CCTV camera -களை வெவ்வேறு நகரங்களில் அரசு செலவில் பொருத்தி இருக்கிறார்கள். இவை அனைத்துமே facial recognition தொழில்நுட்பத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. தோராயமாக நான்கு நபர்களுக்கு ஒரு கேமரா என்ற விகிதத்தில் கண்காணிக்கப் படுகிறது. அமெரிக்காவில் 70 மில்லியன் கேமராக்கள் கண்காணிப்புக்காக உபயோகிக்கப் படுகிறது.
இதனால் குற்றச்செயல் குறைந்திருக்கிறது என்று அரசாங்கம் கூறினாலும், மனித உரிமை மீறல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனித உரிமைகளை, உயிர்களை, மாண்புகளைக் காக்க வேண்டுமே தவிர மரணத்தை ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு இருப்பின் அவைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஜார்ஜ் பிளாய்டின் மரணம் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் கொள்கை மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து இத்தகைய சேவைகளை வழங்க மாட்டோம் என்று கூறி இருப்பது வரவேற்கத் தக்கது. இன்னும் சில முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் facial recognition தொழில்நுட்ப பயன்பாடு குறித்து தங்களது முடிவினை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
கொரோனா பாதிப்பினால் கல்விக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுவதற்கான காலம் நெருங்கி விட்டது. இப்போது தேர்வுகளை நடத்துவதிலும் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளது. சில நாடுகளில் பள்ளிகளுக்கான இறுதித் தேர்வை நடத்தாமல் அவர்களுக்கு ஒரு பொதுவான 'கிரேட்' என்பதைக் கொடுத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருக்கிறார்கள். அதே வேளையில் கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் இருக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த சில பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் தேர்வு முறையைக் கையாண்டு வருகின்றனர்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்களைக் கண்காணிக்க, தேர்வினை நடத்தும் ஆசிரியர்கள் இருப்பார்கள். அதெல்லாம் ஆன்லைன் தேர்வுகளில் இருக்காது. தேர்வுகளை எழுத கல்லூரி வளாகத்திற்குச் செல்லாமல், மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்தே தேர்வு எழுதுவார்கள்.
இந்த ஆன்லைன் தேர்வுகளை எழுதுவதற்குத் தான் Proctoring சேவைகள் வழங்கும் மென்பொருள் பல்கலைக் கழகங்களால் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இதிலிருக்கும் பாதுகாப்பு, தனிநபர் சுதந்திரம் போன்ற குறைகளை சுட்டிக்காட்டி ஆங்காங்கே கேள்விகளும், இதனைத் தடை செய்யக் கோரி புகார்களும் எழுந்துள்ளன.
இந்தியாவில் இந்த மென்பொருள் சேவை அதிகளவில் இல்லை என்றாலும். தற்சமயம் Indian Institute of Management Kasikpur -ல் முதன் முதலாக மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தி இருக்கிறார்கள். மேலும் சில சிறிய பல்கலைக் கழகங்கள் நுழைவுத் தேர்வுகளை இதனடிப்படையில் நடத்தலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பெருவாரியான பல்கலைக் கழகங்களில் இதன் சேவைகளைப் பயன்படுத்தற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
எப்படி இயங்குகிறது Proctoring மென்பொருள்?
இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல் மற்றும் முகம் கண்டறிதல் மூலம் (Artificial intelligence, Mechine language, and facial recognition) வடிவமைக்கப்பட்ட மென்பொருள். இதில் பரிமாற்றம் செய்யும் தகவல்கள் 'Zero - knowledge encryption' என்ற வடிவமைப்பில் இருக்கிறது. அதாவது, இதனைப் பயன்படுத்தும் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இதனை வடிவமைத்த நிறுவனத்திற்குத் தெரியாது என்கிறது.
பல்கலைக் கழகங்களால் வடிவமைக்கப்பட்ட தேர்வுத்தாள் இந்த மென்பொருளுடன் பதிவேற்றம் செய்யப்படும். இதனுடைய ஒரு link தேர்வெழுதும் மாணவருக்கு அனுப்பப்படும். தேர்வு எழுதும் மாணவர்களும் தேர்வைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளரும் இதனைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களது சொந்த மடிக்கணினியில் அல்லது வீட்டுக் கணினியில் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் USB cable வழியே Speaking and recording device மற்றும் webcam இவைகளை மடிக்கணினியில்/கணினியில் இணைக்க வேண்டும். இவைகளை இணைத்து விட்டு மாணவர்கள் வீட்டில் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டால், நீங்கள் தேர்வு எழுத ஆயத்தமாகி விட்டீர்கள்.
மாணவர்களின் முகத்தைப் பார்த்து இந்த மாணவர் தான் தேர்வு எழுதுகிறார் என்பதை முதலில் இது உறுதி செய்யும். தேர்வு எழுதி முடிக்கும் வரையில் உங்களை Proctoring மென்பொருள் கண்காணித்துக் கொண்டு இருக்கும். இது தேர்வு எழுதும் மாணவர்களின் கண்களுக்குத் தெரியாத எந்திரன்.
இந்த நவீன மென்பொருளைப் பயன்படுத்தி தேர்வு எழுதத் தொடங்கியவுடன், தேர்வு எழுதும் நேரம் முடியும் வரையில் மாணவர்கள் பேசுவது, அசைவது, சுவற்றில் இருக்கும் கடிகாரத்தைப் பார்ப்பது - எல்லாவற்றையும் இதில் பொருத்தியிருக்கும் வெப்கேமரா பதிவு செய்து கொண்டே வரும். ஒரு நிமிடத்திற்கு மேல் மாணவர் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்தால் கூட கணினியில் 'red flag' தோன்றி விடும்.
கணினியின் திரையில் மாணவர்கள் வேறு ஏதாவது கூகிளில் தேடினால் கூட 'red flag' வந்துவிடும். தேர்வு எழுதும் மாணவரின் குரலைத் தவிர வேறு யாராவது குரலைக் கேட்டாலும் 'red flag' வந்துவிடும். 'red flag' என்பதன் பொருள் மாணவர்களுக்கு வேற யாரோ உதவுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படும். அதாவது காப்பி அடிக்கிறார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்து விடும் (Suspected). இன்னும் இதில் இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால் மாணவர்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் தடைப்பட்டால் அந்தத் தேர்வு ஏற்றுக் கொள்ளப்படாது.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் University of Queensland மற்றும் University of Sydney இந்த இரண்டு பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் தேர்வுகளை எழுத Proctoria, ProctorU என்ற இரண்டு அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருந்தார்கள். தேர்வுகளை எழுதிய மாணவர்கள் எதிர்கொண்ட இன்னல்களை அடிப்படையாகக் கொண்டு, அவ்விரு நிறுவனங்களுக்கு எதிராக 4000க்கும் மேற்பட்ட மக்கள், புகார் கடிதத்தில் கையொப்பமிட்டு இருக்கிறார்கள். அதாவது மாணவர்களின் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூறினார்கள்.
மேலும் தேர்வு எழுதும் மாணவர்களின் தகவல்களை எங்கு சேமித்து வைக்கிறார்கள் என்றும். 'பல்கலைக்கழகங்கள் இது போன்ற ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதற்கு முன்னர் அவர்கள் கையாளும் மென்பொருள் குறித்து நாட்டின் 'privacy commission' அமைப்பிடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே தேர்வெழுத அனுமதித்திருக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்கள் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்பினர்.
இத்தகைய சேவைகளை வழங்கும் மென்பொருள் நிறுவனத்தினர் கூறும் செய்தி என்னவென்றால். 'ஏற்கனவே பல்கலைக் கழகங்களில் இருந்து அனுமதி பெற்ற பின்தான் எங்களது மென்பொருள்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். வீட்டிலிருந்து தேர்வு எழுதும் போது மாணவர்கள் ஏமாற்றி தேர்வு எழுதலாம் (காப்பி அடித்து) என்பதற்காகவே இவ்வாறு வடிவமைத்திருக்கிறோம். தேர்வெழுதும் மாணவர்களின் தகவல்களை நாங்களே பார்க்க முடியாது, அது எல்லாம் கிளவுட் சர்வீசில் சேமித்து வைக்கப்படுகிறது. மூன்றாவது நிறுவனம் இதில் புகுந்து எந்த தகவல்களையும் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் எந்தெந்த நாடுகளில் எங்களது மென்பொருள் பயன்படுத்தப் படுகிறதோ அந்தந்த நாடுகளிலுள்ள 'தனிநபர் கட்டுப்பாடுகள்' போன்ற அனுமதிகள் வாங்கிய பின்னரே பயன்பாட்டுக்கு வருகிறது' என்கிறார்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பெருவாரியான பல்கலைக் கழகங்கள் இத்தகைய மென்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். இங்கும் தேர்வெழுதிய மாணவர்கள் சிலர் இந்த மென்பொருள்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். பல்கலைக் கழகங்களும் சரி, இதனை வடிவமைத்திருக்கும் நிறுவனங்களும் சரி மாணவர்கள் தேர்வினை ஏமாற்றாமல் இருப்பதற்காகவே இவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் 58% மாணவர்கள் 'plagiarism' செய்கிறார்கள் (அதாவது, இணையதளத்தில் இருந்து மற்றொருவர் எழுதிய பதிலை அப்படியே ஒரு வரி விடாமல் காப்பி செய்து, தனது தேர்வுத் தாளில் தானே எழுதியதாக மாற்றுவது. இது பத்திரிகை/எழுத்துத் துறைக்கும் பொருந்தும்) என்றும், இதையே 36% கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செய்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாகக் கூறுகிறார்கள். இதுபோன்ற தரவுகளை வைத்து, மாணவர்கள் 'Manipulation' செய்யக்கூடாது என்பதற்காக தங்களது மென்பொருள்களை அதற்கேற்ப வடிவமைப்பு செய்கிறார்கள்.
ஆண்டு இறுதித் தேர்வுகளில் நடைபெறும் ஆள் மாறாட்டம், காப்பி அடித்தல் போன்றவற்றைத் தவிர்க்க இந்த மென்பொருள்கள் பயன்பட்டு வந்தாலும். தனிநபர் சுதந்திரம் குறித்து அதிக கேள்விகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. அதே வேளையில் சரியான இணையத்தளக் கட்டமைப்பு இல்லாத நாடுகளில் இதனைப் பயன்படுத்துவது மிகவும் சிரமம். குறிப்பாக வசதி வாய்ப்புகள் அற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு இத்தகைய வடிவமைப்பில் தேர்வுகள் எழுத பல்கலைக் கழகங்கள் நிர்பந்தம் செய்யும் பட்சத்தில், அது, மேலும் தேர்ச்சி விழுக்காட்டை குறைக்கத் தான் செய்யும்.
ஆங்கிலம் முதன்மை மொழியாக இருக்கும் நாடுகளுக்கு கல்வி கற்பதற்காகவோ அல்லது வேலைக்காகவோ செல்லும்போது 'TOEFL' (Test of English as a foreign language) என்ற தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வகையான தேர்வுகளும் biometric centre-களில் நடைபெறும். இந்தத் தேர்வுகளுக்கு செல்லும்போது நாம் அவர்களது தேர்வு நிலையங்களுக்குச் சென்று அவர்களிடம் இருக்கும் கணினியில் எழுதுவது, பேசுவது, கேட்பது போன்ற தேர்வுகளைக் கொடுப்போம். இதில் கணினியில் இருக்கும் கேமரா நம்மை கண்காணிக்காது. அவர்கள் அறையில் இருக்கும் கேமரா தான் நம்மை கண்காணிக்கும். இந்த வகையான தேர்வுகளுக்கும் ஆன்லைன் proctoring தேர்வுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
எந்திரன் படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். மருத்துவ மாணவி ஐஸ்வர்யா ராய் படிக்காமல் தேர்வெழுதச் சென்றிருப்பார். சிட்டி ரோபோ கட்டிடத்தின் மேலே ஏறி அவரது கண்களின் வழியாகப் பதிலை ஐஸ்வர்யா ராய்க்கு காட்டிக் கொண்டிருப்பார். ஐஸ்வர்யா ராயும் அதைப் பார்த்து தேர்வினை எழுதி தேர்ச்சியும் பெற்று விடுவார். ஒருவேளை இத்தகைய சம்பவங்கள் கூட மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒரு சான்றாக இருந்திருக்கலாம்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், தேர்வு எழுதும் போது (இறுதித் தேர்வு அல்ல) எங்கள் துறையின் தலைவர் வேடிக்கையாக ஒன்றைக் கூறுவார் "புக்க பார்த்தாவது பேப்பர்ல எழுதுங்கப்பா, அப்பவாவது நீங்க எழுதுறது மனசுல பதியும்" என்பார். அவர் கூறியது காப்பி அடிப்பதற்காக அல்ல... மாறாக எழுதும் போது மனதில் பதிய வேண்டும் என்பதற்காக.
எது எப்படியோ மாணவர்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுடன் கண்களுக்குத் தெரியாத எந்திரன்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தனிநபரின் சுதந்திரம் பாதிக்கும் பட்சத்தில் இவை ஆபத்தானவை.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் பயனாளிகளின் தேவைக்கேற்ப தொழில்நுட்பமும் தன்னை வடிவமைத்துக் கொள்ளும். அப்படி உருவாகியது தான் 'Zoom' எனும் ரிமோட் வீடியோ கான்பரன்சிங் இணையதளம். 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த இணையதளம் மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இப்போது இப்போது தான் அதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. அதே வேளையில் அந்த இணையதளத்தின் பாதுகாப்பும் தனிநபர் தகவல்களின் நம்பகத் தன்மையும் இப்போது அதிகம் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகிறது.
வீடியோ கான்பரன்சிங் பயன்பாடுகளுக்கு உதாரணமாக, ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், அந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் ஆரம்பக் கட்ட வடிவமைப்பு தொடங்கி அது விற்பனை ஆகும் வரையில் பல்வேறு நிபுணர்களை சந்தித்து உரையாடும் நிலை இருக்கும். பெரும்பாலும் அவர்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் ஒரு நாட்டிலும், முதற்கட்ட வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள் வேறு ஒரு நாட்டிலும் இருக்கும். பொருட்கள் உற்பத்தி ஆவதற்கும் சரி, அது விற்பனையாவதற்கும் சரி அவர்களுக்கிடையே நடத்தப்படும் ஒப்பந்தங்கள், உரையாடல்கள் இவற்றிற்கு மின்னஞ்சல்களைப் பயன்படுத்தினாலும், அந்நிறுவனத்தின் பணியாளர்களை சந்திக்க வேண்டிய நிலை இருப்பது இன்றியமையாதது. இவ்வாறு ஒரு பொருளின் முதல்கட்ட வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்காக பல்வேறு நிறுவனங்களின் முக்கிய நபர்களை சந்திப்பதற்கு செலவிடப்படும் தொகையை மிச்சப் படுத்துவதற்காகவே அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட்டங்களை நடத்துவார்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையை எடுத்துக் கொண்டால், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மூச்சுக்கு முன்னூறு முறை வாடிக்கையாளர்களை (clients) சந்திக்க வேண்டியதிருக்கும். இதற்காகவே இந்தியாவிலிருந்து மெத்தப் படித்த மேதாவிகள் ஆன்சைட் எனப்படும் வாடிக்கையாளர்கள் அருகிலேயே அமர்ந்து மேலை நாடுகளில் வேலை செய்வார்கள். இப்படி வாடிக்கையாளர்களுக்கு அருகிலேயே செல்ல முடியாத நிலை வரும்போதுதான் ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள். ஏறத்தாழ தகவல் தொழில்நுட்பத் துறையை மையப்படுத்தியே zoom என்ற இணையதளம் வடிவமைக்கப் பட்டாலும், இன்றைய காலத்தில் பல்வேறு தரப்பட்ட மக்கள் அதைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் மீட்டிங் இவற்றை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே நடத்துவது கிடையாது. இப்போது கல்வித் துறையிலும் 'distance education' எனப்படும் தொலைதூரக் கல்வியின் விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடங்களை நடத்துவதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் 'tele commuting' எனப்படும் வீடுகளில் இருந்து வேலை செய்வது, அலுவலகம் மற்றும் விற்பனைப் பொருட்கள் வைத்திருக்கும் இடம் (warehouse) இவற்றிற்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இந்த இணையதளங்கள் பெரிதும் பயன்படுகின்றன. அரசாங்கம் சார்ந்த ஒப்பந்தங்களுக்கு சிக்கனத்தை கவனத்தில் கொண்டு ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் நடத்த வேண்டும் என்பதையும் கண்டிருக்கிறோம்.
இன்று கொரோனா வைரஸின் கொடூரமான தாக்குதல் உலகத்தையே முடக்கி வைத்துள்ளது. உற்பத்தி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், ஏன் கடவுளின் ஆலயங்கள் கூட மூடப்பட்டு விட்டன. அவர்கள் எல்லோரும் வீடுகளில் இருந்து வேலை செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் zoom என்ற இணையதளம் மக்களிடையே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரவேற்பைப் பெற்றது. ஒரே நேரத்தில் 100 பேர்கள் ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இணைந்து கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு. அந்த நூறு பேர்கள் add-ons மூலம் ஐந்து பேர்களை இணைத்துக் கொள்ளலாம்.
கடந்த 2019 டிசம்பர் மாதம் ஒரு நாளைக்கு 10 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த இந்த இணையதளம், கடந்த மார்ச் மாதம் முதல் ஒரு நாளைக்கு 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் வரை உயர்ந்து இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல பேர் இணைந்து கொள்வதால், இதைப் பயன்படுத்துபவர்களுக்கு எந்த அளவில் பாதுகாப்பு இருக்கிறது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இதைப் பயன்படுத்தும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்தார்கள். என்னவென்றால் "அரசு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இதைப் பயன்படுத்தி மீட்டிங் நடத்த வேண்டாம். மேலும் பள்ளிகள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டாம், இந்த இணைய தளங்களின் மூலமாக தனிநபர் வெறுப்பு, ஆபாசப் படங்கள் (pornography) சார்ந்த காணொலிகள் பதிவேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றார்கள். அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் உள்ள கல்வி மாவட்டங்கள் இதனை கருத்தில் கொண்டு zoom போன்று வீடியோ கான்பரன்சிங் சேவையைத் தரும் Microsoft teams, Google Hangouts போன்றவற்றிற்கு மாறிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கல்விக்கூடங்கள் மட்டுமின்றி வெவ்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த இணையதளத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றார்கள். குறிப்பாக கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்களை இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்து கொள்ள வேண்டாம், இது பாதுகாப்பானது அல்ல என்றார்கள். கூகுள் போன்ற பெரிய அண்ணாச்சிகளே இந்த இணையதளத்தை தங்கள் ஊழியர்கள் பயன்படுத்த வேண்டாம் எனக் கூறுவது 'பாம்பின் கால் பாம்பு அறியும்' என்ற பழமொழியோடு நமக்கும் சிறிய அச்சத்தைத் தான் ஏற்படுத்துகிறது.
சரி, இந்த இணையதளத்தில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என மக்களும் பல நிறுவனங்களும் சிந்திக்கக் காரணம் என்ன?
இதைப் பயன்படுத்தும் மூன்றாவது நபர் ஏற்படுத்தும் ஹரஸ்மெண்ட், இன ரீதியாக துன்புறுத்துவது, மதரீதியாக வெறுப்பினை உமிழ்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது தான் காரணம். இதைத்தான் Zoombombing என்றார்கள் அமெரிக்காவிலுள்ள சமூக ஆர்வலர்கள் (நமது டிவி விவாதங்களில் வரும் சமூக ஆர்வலர்கள் இல்லை, இவர்கள் உண்மையான சமூக ஆர்வலர்கள்). மேலும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இதில் இருந்து தேவையில்லாத தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும். தங்கள் நிறுவனம் 'end-to-end encrypted' என்ற வடிவமைப்பில் இருக்கிறது என்று முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய இணையதள வடிவமைப்பு end-to-end encrypted-ல் இல்லை என்பதுதான் உண்மை. இந்த முறையில் தான் நம்முடைய தகவல்களை அவர்கள் கண்காணிப்பது, எந்த ஒரு அப்ளிகேஷன் என்றாலும் நாம் டவுன்லோட் செய்யும் போது கண்ணை மூடிக்கொண்டு 'I agree' என்று சொல்கிறோமே அதில் இதுவும் அடக்கம்.
பொதுவாக இணையதள சேவைகள் மூலம் இயங்கும் செயலிகள் (வாட்ஸ்அப்) மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சர்வர்கள், அதை பயன்படுத்தப்படும் கணினி அல்லது வேறு டிவைஸ்களுக்கும் இடையே 'end-to-end encrypted' என்ற வடிவமைப்பில் நாம் பரிமாறும் தகவல்களை மூன்றாவது நிறுவனம்/நபர் அதை மாற்றி அமைக்க முடியாது. அதேபோல் நமது தகவல்களை அவர்கள் எடுத்துக் கொள்ள முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் சில நிறுவனங்கள் நம்முடைய தகவல்களை எடுத்துக் கொள்வார்கள் என்பது வேறு விடயம். zoom இணையதளத்தில் இந்த 'end-to-end encrypted' இருக்கிறது ஆனால் இல்லை என்கிற என்கிற விதத்தில் அவர்களுடைய blogs-ல் அதற்கான விளக்கத்தை அளித்திருந்தார்கள். “we want to start by apologizing for the confusion we have caused by incorrectly suggesting that Zoom meetings were capable of using end-to-end encryption” இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பும் கோரினார்கள். “நாங்கள் தொடர்ந்து சிறப்பான சேவை வழங்கத் திட்டமிட்டு பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப் படுத்த செயலாற்றி வருகிறோம்” என்றார் அதன் நிறுவனர் Eric Yuan. (மூலம்: https://www.npr.org/sections/coronavirus-live-updates/2020/04/02/826224938/video-meeting-platform-zoom-addresses-criticisms-as-it-sees-explosive-growth-in)
எந்த ஓர் இணைய தளத்தில் நம்பகத்தன்மையும், மக்கள் தொடர்ந்து அதிக அளவில் அதை பயன்படுத்தும் போது தான் அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் என்னென்ன என்பதும் தெரிய வரும். இப்போது zoom என்ற வீடியோ கான்பரன்சிங் இணையதளத்திற்கு நிகழ்ந்ததும் அதுவேதான். அவர்களுக்குத் தொடர்ந்து மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது தான் அவர்களும் அதிலிருந்து பாடங்கள் கற்கிறார்கள். மக்களிடம் மன்னிப்பும் கோரினார்கள்.
சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் ஓர் எச்சரிக்கை விடுத்தார்கள். என்னவென்றால் “மக்கள் வீடுகளில் அடைபட்டிருக்கும் போது அதிகளவில் இணையதள சேவையைப் பயன்படுத்துகிறார்கள், இதனால் ஹேக்கர்கள் உள்ளே புகுந்து நம்முடைய தகவல்களை திருடிச் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது” என்றார்கள்.
நாம் ஒரு நிறுவனம் சார்ந்த காணொளி - ஒலி கூடலில் (வீடியோ கான்பரன்சிங் மீட்டிங்) இணைந்து கொண்டாலும் சரி, அல்லது தனிநபர் சார்ந்த காணொளி ஒலிக் கூடலில் இணைந்து கொண்டாலும் சரி, நம்மால் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் மிகவும் ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக நிறுவனங்கள் சார்ந்த ஆன்லைன் மீட்டிங்கில் நம்முடைய பிரசெண்டேஷன்களை பெரிய திரையில் காண்பிக்கும்போது வெளி நபர்களால் பதிவேற்றப்படும் ஆபாச படங்கள் திரையில் வருவதாலும் பாதுகாப்பு சார்ந்த கேள்விகள் எழுகிறது. இதேபோல் நாம் கலந்துரையாடும் தகவல்கள் மூன்றாவது நபருக்கு கிடைப்பதால் சிக்கல் ஆரம்பிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டே இவ்வகை இணையதளங்களை ஒரு சில நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசாங்கங்கள் தடை செய்திருக்கிறார்கள். ஒரு வகையில் இந்தத் தடை சரியானதுதான். பொதுவாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இத்தகைய சிக்கல்கள் வரும்போது இதேபோல் வீடியோ கான்பரன்சிங் சேவைகளை அளிக்கும் Cisco Webx, Microsoft Teams போன்ற அதிக பாதுகாப்பான செயலிகளுக்கு மாறி விடுவார்கள். உலகளவில் இவர்களின் சேவைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியவுடன் Zoom இணையதள நிர்வாகிகளும் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர். ஆனால் பல வாடிக்கையாளர்கள் இதன் நம்பகத் தன்மையை இழந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.
இதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், மீட்டிங் ஒருங்கிணைப்பாளர் (Host) எத்தனை பேர் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அவர் வைத்துக் கொள்ள வேண்டும். மீட்டிங்கில் இணைந்தவர்களுக்கு வேறு ஒரு நபரை இணைத்துக் கொள்ளும் உரிமையை கொடுக்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் மீட்டிங்கில் இணையும்போது அதில் random meeting ID-கள் உருவாக்கப்பட்டு பின்னர் இணைந்து கொள்ளும் வசதி இணையதளத்தில் இருக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு கணக்குகளுக்கும் தனித்தனி password-கள் வைத்துக் கொள்ளும் வசதி இருக்க வேண்டும். பொதுவாக ஒரே பாஸ்வேர்டை எல்லா இணையதளத்திலும் பயன்படுத்துவதை தவிர்த்தால் நல்லது. பெரிய பெரிய கோப்புகளை ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்தலும் நல்லது. உதாரணமாக Drob box, Box, One drive, Google drive இவற்றைப் பயன்படுத்தி கோப்புகளைப் பரிமாறிக் கொள்வது.
தனிநபர் சார்ந்த குழுக்களுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைக்கும் இணையதளங்கள் அல்லது செயலிகளைப் பயன்படுத்துவது நல்லது.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
எப்பொழுதும் மின்சாரப் பசியோடு இயங்கிக் கொண்டிருக்கும் டேட்டா சென்டர்கள் இந்த மாதம் அசுர பசியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. வணிகம், வங்கிகள், மென்பொருள், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளின் தகவல்கள் சேமித்து வைக்க உலகளவில் பல்வேறு டேட்டா சென்டர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்குத் தேவைப்படும் மின்சாரத்தைக் கணக்கிட்டால் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகளின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியுமாம். இன்றைய காலகட்டத்தில் அவைகள் எவ்வாறு இயங்குகின்றன, அவற்றின் இன்றியமையாத தேவைகள் மற்றும் பயன்பாடு என்ன என்பதைப் பார்ப்போம்.
இப்போது உலகெங்கும் பெரிதும் பேசப்படுவது கொரோனா வைரஸ் Pandemic. நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க அரசாங்கம் மக்களை வீட்டில் தனித்து இருக்கும் படி கூறுகிறது. 'Social distancing' என்று அழைக்கப்படும் சமூக விலக்கல் கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறது. அத்தியாவசிய வேலைகளைத் தவிர்த்து மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம், வீட்டுக்குள் இருங்கள் என்கிறது. சமீபத்தில் தோழர் தியாகு ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதியிருந்தார் "ஆலைகள் இயங்கினால்தான் அலுவலகங்கள் இயங்க முடியும்" என்ற கூற்றின்படி, இன்று 'டேட்டா சென்டர்கள்' என்றழைக்கப்படும் தகவல் சேமிப்பு நிலையங்கள் இயங்கினால் தான் நாம் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் (Work from home), பொழுதுபோக்குகள், சமூக ஊடகங்கள் போன்றவைகளைப் பயன்படுத்த முடியும்.
கைபேசியில் ஒரு விரல் புரட்சியால் அச்சு ஊடகங்களின் இணையதள சேவையைப் பயன்படுத்தி செய்தித்தாள்களை வாசிக்கிறோம். இணையதள இதழ்களை வாசிக்கிறோம், ஏன் மின்நூல்களைக் கூட வாசிக்கிறோம். காட்சி ஊடகங்களின் செய்திகளை அவர்களின் யூடியூப் சேனல்கள் மூலமாக மடிக்கணினியிலோ அல்லது கைபேசியிலோ காண்கிறோம். இதற்கெல்லாம் பெரிதும் உதவியாக இருப்பது அந்நிறுவனத்தின் இணையம். இணையதள சேவை மற்றும் அதில் பதிவேற்றப்படும் தகவல்கள் தடைபடாமல் நமக்குக் கிடைத்தால் தான் இவைகள் எல்லாம் நம் வீட்டிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். சமீபத்தில் செய்தி ஒன்று இவ்வாறு வாசித்தேன் 'அச்சு ஊடகங்கள் அவர்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்கள்' என்று. காரணம் அச்சு ஊடகத்தில் வேலை செய்யும் நபர்கள் யாரும் வேலைக்குத் திரும்பாதது. மற்றொரு புறம் 'செய்தித்தாள்கள் மூலம் இந்த வைரஸ் பரவக் கூடும்' என்று வாட்ஸ்அப் மூலமாகப் பரவிய வதந்திகளால் மக்கள் நாளிதழ்களை வாங்குவதில் அச்சம் ஏற்பட்டது.
இன்று இணையதள சேவைகள் உச்சத்தில் இருக்கும் காலத்தில் நாம் வசிக்கிறோம். சாதாரண தொலைக்காட்சிகளில் படம், நாடகங்கள், பாடல்களைக் கேட்ட காலம் மாறி, தற்போது 24 மணி நேரமும் யூடியூப், நெட்பிளிக்ஸ், அமேசான் டிவி, ஹார்ட் ஸ்டார் போன்ற விளம்பரம் இல்லா நிகழ்ச்சிகள் பார்க்கும் streaming இணையதளங்கள் வந்து விட்டது. இதுமட்டுமா? நாம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் தகவல்கள் மற்றும் எம்மோஜிகள் வடிவில் இருக்கும் முகபாவனைகள் இவையெல்லாம் எங்கே சேமித்து வைக்கப்படும் என்றால், 6000 மைல்கள் தொலைவில் இருக்கும் அவர்களது Data centers-களில். டேட்டா சென்டர்கள் 24 மணி நேரமும் மின்சார தடையின்றி குளிரூட்டப்பட்ட சரியான தட்பவெப்ப நிலையில் தொடர்ந்து இயங்க வேண்டும்.
உலகிலேயே அதிகப்படியான டேட்டா சென்டர்கள் இருக்கும் இடம் எது தெரியுமா? அது அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் 'Ashburn' என்ற நகரம். இதனை "Loudoun county, 'Data centers Alley' is the World's largest concentration of data centers" என்று அழைக்கிறார்கள். இங்கு 13.5 மில்லியன் சதுர அடியில் வெவ்வேறு நிறுவனங்களின் டேட்டா சென்டர்கள் இயங்குகின்றன. உலகளவில் 70% இன்டர்நெட் டிராபிக் ஆனது இங்கிருந்துதான் கடந்து செல்கிறது. கூகுள், ஐபிஎம், மைக்ரோசாப்ட், ஆப்பிள், பேஸ்புக், அமேசான், போன்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் டேட்டா சென்டர்கள் இங்கு தான் இயங்குகின்றன. இதேபோல் 3,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் டேட்டா சென்டர்களும் இங்கே தான் இருக்கிறது. இந்த ஒரு நகரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் டேட்டா சென்டர்களின் மின் தேவையானது 4.5 ஜிகாவாட் ஆகும். இந்த மின்சாரம் அனைத்தும் புதைபடிவ எரிபொருள் மூலம் இயங்கும் மின் நிலையங்களில் இருந்துதான் பெறப்படுகிறது. இதில் சில நிறுவனங்கள் 100% renewable energy மூலம் அவர்களது டேட்டா சென்டர்களை இயக்குகிறார்கள்.
(தரவுகள்: https://www.greenpeace.org/usa/reports/click-clean-virginia)
மின்சார மேலாண்மை
டேட்டா சென்டர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையின் இதயம் போன்றது. அவைகள் தங்குதடையின்றி இயங்க ஆற்றல் சேமிப்பு என்பது (Energy storage) இன்றியமையாதது. இன்று நாம் பயன்படுத்தும் மின்சாரம் புதைபடி எரிபொருள் (Fossils fuel), அணுஉலை (Nuclear power plant,) சூரிய ஒளி மின்சாரம் (Solar power), காற்றாலை மின்சாரம் (Wind power), நீர்நிலைகள் மின்சாரம் (hydro plant) போன்ற வெவ்வேறு தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்து துனை மின்நிலையங்கள் மூலம் நமது வீடுகளில், அலுவலகத்தில், தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறோம்.
தொடர்ந்து மின்சாரம் அளிக்கும் பிரத்தியேக துணை மின்நிலையங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலும் அல்லது தடைபட்டாலும் இந்த டேட்டா சென்டர்கள் இயங்க வேண்டும். டேட்டா சென்டர்கள் இருக்கும் Servers, Telecommunication devices, routers போன்றவற்றிற்கு conditioned power தேவை. இதற்காகவே பிரத்தியேக மின்சாரம் வழங்கும் ஆற்றல் சேமிப்புகள் தேவைப்படுகின்றன.
ஆற்றல் சேமிப்புகளை மூன்று வகைகளில் பிரிக்கலாம். Power stability, Power bridging, Energy management.
Power stability: துனை மின் நிலையங்களில் இருந்து டேட்டா சென்டர்க்கு வரும் மின்சாரம் ஒரே சீராக இருப்பதில்லை. மின்சாரப் பயன்பாட்டு சாதனங்களில் (Load) ஏற்படும் திடீர் மாற்றங்கள், மின் அழுத்தத்தை (Voltage drop) மாற்றிவிடும், அல்லது மின்னழுத்த இடைவெளியை அதிகரித்து விடும். அதனால் grid-ல் இருந்து வரும் மின்சாரத்தை நேரடியாக Critical Equipments -களுக்குப் பயன்படுத்துவது இல்லை. Grid மின்சாரத்தை நிலையான மின்சாரமாக/ஆற்றலாக மாற்றிய பின்னர் டேட்டா சென்டர்க்குள் அனுப்பப்படும்.
Power bridging: துனை மின்நிலையங்களிலிருந்தது வரும் அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம் தடைபடும் போது, ஜெனரேட்டர்கள் உடனே இயங்கத் தொடங்கும். ஜெனரேட்டர் சீரான வேகத்தில் இயங்குவதற்கு இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகலாம். பின்னர் Transfer switch -கள் மூலம் ஜெனரேட்டர் மின்சாரத்தைக் கொண்டு டேட்டா சென்டர் முழுவதற்கும் மின்சாரம் அனுப்பப்படும்.
இந்த மாற்றம் நிகழும்போது ஒரு சில நிமிடங்களுக்குத் தடை ஏற்படும். குளிரூட்டும் சாதனங்களுக்கு இரண்டு மூன்று நிமிடம் தடை அவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் சர்வர்கள், டெலிகம்யூனிகேஷன் சாதனங்கள் இந்த மின் தடையிலும் இயங்க வேண்டும். இந்தத் தடையை நிவர்த்தி செய்ய UPS (uninterrupted power supply) என்று அழைக்கப்படும் இயந்திரம் பெரிதும் பயன்படுகிறது. UPS -களில் இணைக்கப்பட்டிருக்கும் Batteries நேரடி மின்சார (Direct current) ஆற்றலை சேமித்து பின்னர் UPS மூலம் மாறுதிசை மின்னோட்டம் (Alternative current) ஆக மாற்றி தொடர்ந்து டேட்டா சென்டர்கள் தடையின்றி இயங்க இணைப்புப் பாலமாக செயல்படுகிறது.
Energy management: மின்சார ஆற்றல் சேமிப்பு என்பது சாதாரணமானதல்ல. மின்சார ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றி சேமித்து வைக்கப்படும் இது, விலை உயர்ந்தது கூட. அதேபோல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத அளவில் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக எந்த வகையான ஆற்றல் சேமிப்பு உபகரணங்கள் பயன்படுத்துவது போன்றவற்றிற்கு ஆற்றல் மேலாண்மைவியல் பங்கு வகிக்கிறது.
சரி, இத்தனை ஆண்டுகளாக டேட்டா சென்டர்களில் எந்த வகையான ஆற்றல் சேமிப்பு உபகரணங்கள் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.
ஆற்றல் சேமிப்பு மூன்று வகையான தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய உபகரணங்கள் மூலம் டேட்டா சென்டரில் பயன்படுத்தி வருகின்றனர்.
1. மின்கலன்கள் (Batteries)
2. இயக்க ஆற்றலை சேமிக்கும் இயந்திரம் (Fly wheels).
3. பெரிய அளவிலான மின்தேக்கிகள் (Ultra capacitors).
உலக அளவில் அதிகமாக ஆற்றல் சேமிக்கப் பயன்படுத்தப்படுவது மின்கலங்கள் ஆகும். ஏனெனில் இது குறைவான மூலக் கூறுகள் அடங்கிய பொருட்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் எளிதில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
டேட்டா சென்டர்களின் தட்பவெப்ப நிலை
எந்த ஒரு வெளி தட்பவெப்ப நிலையிலும் டேட்டா சென்டர்கள் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட குளிர்ந்த வெப்பநிலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். டேட்டாக்களை சேமித்து வைக்கும் சர்வர் (Servers) எப்பொழுதும் அதிகபடியான வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருக்கும். காரணம், அதனுள்ளே இருக்கும் சாலிட் ஸ்டேட் டிவைசஸ் (SSD). சர்வர்களிலிருந்து அதிகப்படியான வெப்பம் வெளியேறுவதால் இங்கு கட்டுப்படுத்தப்பட்ட குளிரூட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். 'HVAC' (Heating Ventilation Air Conditioning) என்ற குளிரூட்டும் இயந்திரம் தொடர்ச்சியாக உள் தட்பவெப்ப நிலையை கண்காணித்து சீரான முறையில் வைக்கும். அதேவேளையில் குளிர்ந்த காற்றின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தவும் இது பயன்படுகிறது. டேட்டா சென்டர்கள் உள்ளே 70°F அல்லது 20℃ என்ற வெப்பநிலையில் சீரான ஒப்ப ஈரப்பதத்தை (Relative humidity) கொண்ட குளிரூட்டப்பட்ட இடமாக மாற்றப்பட வேண்டும். பெரும்பான்மையான டேட்டா சென்டர்கள் நீரைப் பயன்படுத்தியே குளிரூட்டப்படுகின்றன.
உலகில் மிகப் பெரிய இணையதள நிறுவனமான கூகுள் அதன் டேட்டா சென்டர்களில் குளிரூட்ட நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் கேலன்ஸ் (3785411.78 லிட்டர்) நீரைப் பயன்படுத்துகின்றனர். கூகுள் நிறுவனத்திடம் மட்டும் தற்போது 21 டேட்டா சென்டர்கள் வெவ்வேறு இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர, டேட்டா சென்டர்களின் உள்ளே Architects/Interior Design, Data Center Fire Suppression, electronic locking systems, telephone connection போன்றவைகளும் தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்படும்.
நாம் வீடுகளில் இருந்தாலும் இணையதள சேவைகள் மற்றும் அந்நிறுவனத்தின் தகவல்களைப் பெற இவைகள் இடைவிடாது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்த முறை நாம் பேஸ்புக், ட்விட்டரில், யூடியூப் சேனல்களில் லைக்ஸ் போடும் போது அது, பல ஆயிரம் மைல்கள் தாண்டி ஓரிடத்தில் சேமிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தத் தகவல் சேமிப்புக்கு தேவைப்படும் ஆற்றலுக்கு அதிகப்படியான மின்சாரமும், குளிர்சாதனங்கள் அமைக்க பல கோடி லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது என்பதையும் சேர்த்து நினைவில் கொள்ளவும்.
- பாண்டி
- எதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers
- அறிவியல் பிரச்சாரம் செய்வோம்...!
- இது யாரு பண்டிகூட்டா? - டிஜிட்டல் பெருச்சாளி
- நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்
- நுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி
- சூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்
- நீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி
- கிலோகிராமின் வரையறை மாறுகிறது
- பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்
- பால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஓர் அறிமுகம்
- பாலில் ஆக்ஸிடோசின் வர வாய்ப்புள்ளதா?
- ஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017
- கசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி
- பித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்
- பாக்டீரியாக்கள் – கழிவறைகள் – தொழிலாளர்கள்
- எரிபொருள் அறிவியல் அறிவோம்! ஏமாளிகளாக ஆகாமல் இருப்போம்!!
- நியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்
- சூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ்