கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
காடுகளைக் கண்காணிக்க லைடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஸ்காட்லாந்து திட்டமிட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கும் மிதமான மழைக்காடுகள் முதல் கேம்கோங்ம்ஸ் (Cairngorms) பகுதியில் இருக்கும் புல்வெளிப் பிரதேசங்கள், இயற்கை நில அமைப்பு ஆகியவற்றின் முப்பரிணாமப் படமெடுத்து ஆராயப்படும்.
இதன் மூலம் நாட்டின் நில அமைப்பு மற்றும் சூழல் மண்டலங்களின் ஆரோக்கிய நிலை பற்றிய துல்லியமான தகவல்களை ஆண்டு முழுவதும் பெற முடியும். இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்டுத்தீ சம்பவங்கள் நிகழக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள், காட்டு மரங்களின் ஆரோக்கிய நிலை, அவற்றின் அளவு போன்றவை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெறலாம்.
லைடார் என்னும் லேசர் தொழில்நுட்பம்
லைடார் (Lidar) (Light Detection and Ranging) என்பது லேசர் கதிர்களைப் பயன்படுத்தி தொலை உணரி முறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை முப்பரிமாண ரீதியில் படமெடுத்து ஆராயும் முறை. இது காலநிலை, உயிர்ப் பன்மயத்தன்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தல், காடுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கார்பன் சந்தை (Carbon marketing) பற்றி உயர் தொழில்நுட்ப தரவுகளைப் பெறுதல், புவி வெப்ப உயர்வினால் சூழல் மண்டலங்களில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும். இந்த தொழில்நுட்பம் துல்லியமான தகவல்களைத் தருகிறது.
வெவ்வேறு உயரத்தில் வளர்ந்திருக்கும் காட்டு மரங்கள் ஒவ்வொன்றின் உயரம், ஆரோக்கியம் பற்றியும் ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி, மரங்களின் வரிசைகளுக்கு இடையில் இருக்கும் காட்டுப் பாதைகளின் நிலை பற்றியும் லைடார் விவரங்களை வழங்குகிறது. சூழலில் நேர்மறையான பலன்கள் ஏற்பட இந்த தொழில்நுட்பம் அவசியமானது என்று தேசியப் பூங்காவின் இயற்கை மீட்பு குழுவின் கேம்கோர்ம் இணைப்பு (Cairngorm Connect) என்ற அமைப்பின் திட்ட அறிவியலாளர் பிலிப்பா கலிட் (Philippa Gullett) கூறுகிறார்.
(லைடார் படம்)
காட்டின் உண்மை நிலையறிய
லைடார் கருவிகள் பொருத்தப்படும்போது சூழல் மண்டலங்கள் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கும். இத்தொழில்நுட்பம் ஏற்கனவே நார்வே, ஸ்வீடன் மற்றும் யு எஸ் ஆகிய நாடுகளில் முழுமையாக நடைமுறையில் உள்ளது. காடுகளின் அமைப்பை அறிய லைடார் படங்கள் உலகளவில் துல்லிய தரமுடைய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.
லேசர்கள் மரங்களின் உயரம், அடர்த்தியை கணக்கெடுக்க உதவுகிறது. கிடைக்கப் பெறும் தரவுகள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆராய்வதால் கிடைக்கும் அதே பலன்களைத் தருகிறது. கார்பன் சந்தையில் கிடைக்கும் நிதியை இயற்கை மீட்புத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப் பயன்படுத்த உலக நாடுகளுக்கு இது உதவும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக (UCLA) பேராசிரியர் சாசன் சாச்சை (Sassan Saatchi) கூறுகிறார்.
காடுகளும் கார்பனும்
காடுகள் உறிஞ்சும் அல்லது உமிழும் கார்பனின் அளவுகள் துல்லியமானதாக இருக்க வேண்டும். லைடார் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி எடுக்கப்படும் படங்கள் ஒரு நாட்டின் சூழல் ஆரோக்கியம் பற்றிய உண்மையான நிலையை எடுத்துக் கூறுகிறது. புல்வெளி நிலப்பரப்பு மற்றும் காடுகளில் இருக்கும் உயிர்ப்பொருள் (biomass) கார்பன் பற்றியும் இதன் மூலம் மதிப்பிட முடியும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சூழல் மண்டல ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் யட்வேந்தர்சிங் மால்ஹை (Yadvinder Singh Malhi) கூறுகிறார்.
லைடார் தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சிறிய அளவில் தனியாரால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காடுகள் பற்றிய நிலையைத் துல்லியமாக அறிய முடிவதில்லை. ஸ்காட்லாந்து போல உலக நாடுகள் அனைத்தும் இயற்கை மீட்பிற்கும், சூழல் பாதுகாப்பிற்கும் இத்தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஸ்காட்லாந்தை மற்ற நாடுகள் இதற்கு முன்மாதிரியாகக் கொண்டு செயல்படவேண்டும் என்று சூழல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேற்கோள்கள்:
&
https://towardsdatascience.com/applications-of-lidar-in-forestry-13686e1b15a7
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அடிப்படையில் ஒரே பொருளாக இருக்கும் வலிமையற்ற மண்ணை அதாவது களிமண்ணை கட்டிடத்தைத் தாங்கும் செங்கல்லாக மாற்ற முடியும். வெறும் மண் என்று நாம் நினைக்கும் களிமண் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்துகிறது. இந்த மந்திரஜாலத்தின் பெயர்தான் பீங்கான் தொழில்நுட்பம். எதிர்காலப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கப் போவது இந்த மண்தான் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். நமக்குத் தெரிந்த பீங்கான் பொருள்கள், கோப்பைகள், பொம்மைகள் தவிர பீங்கானுக்குப் பின்னால் ஒரு பெரிய பயன்பாட்டுப் பட்டியல் அடங்கியிருக்கிறது.
ஒரு குயவன் பானையாகச் செய்தபோது உடைந்த களிமண்ணைச் சுட்டுப் பயன்படுத்தத் தொடங்கியபோது அது இறுகி உறுதித்தன்மை அதிகமாகி மனிதனுக்குப் பலவிதங்களிலும் பயன்பட ஆரம்பித்தது. சாதாரணமாக ஒரு குயவன் செய்யும் பானையில் வான்டர்வால்ஸ் விசை என்ற ஒரு விசை மண் துகள்களுக்கு இடையே செயல்படுகிறது. இதே பொருளைச் சுட்டுப் பயன்படுத்தும்போது வான்டர்வால்ஸ் விசை மாறி சகபிணைப்பு அல்லது அயனிப் பிணைப்பு (covalent bonding அல்லது ionic bonding) உருவாகி அதன் கடினத் தன்மை அதிகரிக்கிறது. சாதாரண உப்பான சோடியம் குளோரைடு என்ற சேர்மம் அயணிப் பிணைப்பாலேயே உருவானது ஆகும். சோடியம் அணுவில் வழங்கப்படுவதற்கான ஒரு எலக்ட்ரான் இருக்கும்போது அதைத் தேவையாகக் கொண்டுள்ள குளோரின் அணு சோடியத்துடன் இணைந்து அயணிப் பிணைப்பை ஏற்படுத்துகிறது. சிலிகானில் இருக்கும் 4 எலக்ட்ரான்கள் மற்றொரு சிலிகானுடன் சேரும்போது 8 எலக்ட்ரான்களுடன் சேர்ந்து உறுதியான பிணைப்பை ஏற்படுத்துகிறது. களிமண்ணில் உள்ள ஒரு அலுமினா மூலக்கூறும், நான்கு சிலிகன் டை ஆக்சைடு மூலக்கூறுகளும், நீரும் சேர்ந்து சாதாரண பீங்கானை உருவாக்குகிறது. இது பீங்கான் அல்லது அலுமினியம் சிலிகேட். முன்பு செங்கற்களை விட வலிமையான பீங்கான் கற்கள் கட்டிடங்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. இதே பீங்கான் இன்று தரைக்கு செர்ராமிக் டைல்ஸ் என்று பயன்படுகிறது.சிலிகானுடன் கார்பன் அல்லது கரி சேர்ந்து சிலிகான் கார்பைடு உருவாக்கப்படுகிறது. இரு கடினமான உலோகத்தை ஒரு சிறந்த பண்புடையதாக்க அதனுடன் ஒரு வலுவூட்டும் பொருளை (abrasive material) சேர்க்க வேண்டும். அப்போது அந்த உலோகத்தை ஒரு குறிப்பிட்ட வடிவமும், உருவமும் உடையதாக மாற்ற முடியும். சிலிகன் கார்பைடு இதற்குப் பயன்படுகிறது. சிலிகன் கார்பைடு தொழிற்சாலைகளில் உயர் வெப்பநிலையில் உலோகங்களை உருக்கும் வெப்பமூட்டியாகவும் (heating element) பயன்படுகிறது. வீடுகளில் சாதாரணமாக ஒரு இரும்புப் பொருளிற்கு வண்ணப்பூச்சுப் பூசுவதற்கு முன்னால் ஒரு காகிதம் பயன்படுத்தப்படும். இந்த காகிதம் சிலிகன் கார்பைடு வெவ்வேறு அளவுகளில் அமைந்த துகள்களால் ஆனது.
பீங்கான் பொருள்களில் நீர்மூலக் கூறுகள் இருப்பதால் அது உயர் வெப்பநிலைக்குக் கொண்டு செல்லப்படும்போது நீர்மூலக் கூறுகள் ஆவியாகிறது. இதனால் பீங்கானின் அடர்த்தி 1% குறைகிறது. பீங்கான் அல்லது சிலிகனுடன் கோபால்ட்டைச் சேர்க்கும்போது அது நிறத்தைக் கொடுப்பதுடன் அடர்த்தி குறையாமலும் இருக்க உதவுகிறது. பீங்கான் மின்கடத்தாப் பொருளாகவும் குறைக் கடத்தியாகவும் பயன்படுகிறது. ஒரு மின்சாதனத்தை வடிவமைக்கும்போது அதன் அளவை பூஜ்யத்தில் இருந்து 5 கனசெ.மீ அளவுக்கு அதிகரிக்கும்போது அதில் எலக்ட்ரான்களின் மாற்றம் அதிகமாக நிகழும். இதே நிகழ்வின்போது ஒரு உலோகக் கடத்தியில் ஒரே சமயத்தில் எலக்ட்ரான்கள் அணைத்தும் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதனால் பீங்கான் பொருட்கள் மின் கடத்தாக் காப்புப் பொருட்களாகப் பயன்படுகின்றன. உயர் மின் அழுத்தக் கம்பங்களில் கம்பிகளை இழுத்துப் பிடிப்பதற்கு பீங்கான் ஒரு முக்கிய பகுதிப் பொருளாகப் (forcelein) பயன்படுகிறது.
அலுமினா அல்லது அலுமினியம் ஆக்சைடின் உதவியுடன் ஒரு அச்சுப்பிரதி மின்சுற்றை (printed circuit) தயாரிக்கும்போது அங்கு சிலிகான் பயன்படுத்தப்படுகிறது. கணினியில் சிலிகான் படிவடிவத்தில் மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அலுமினாவின் மீது சிலிகானைப் படருமாறு செய்து அதைக் கொண்டு தேவையான மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த வகையில் செராமிக் பயன்பாட்டுடன் கூடிய மின்னணு சுற்றுகள் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இதில் பீங்கான் முக்கிய பங்கு வகிக்கிறது.
செராமிக் பண்புகளை வைத்து பல சாதனங்களும் உருவாக்கப்படுகின்றன. மீள்கடத்தும் திறன் (super conductivity) பற்றி உலகம் முழுவதும் ஆய்வுகள் நடைபெறுகிறது. விண்வெளிக்குச் செல்லும்போது, திரும்பி வரும்போது இப்பொருட்கள் மிக உயர் வெப்பத்தைத் தாங்கி எரிந்துவிடாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவுகிறது. இதற்கு மாலிப்டினம் டை சல்பைடு மற்றும் செராமிக் பயன்படுகிறது. பொதுவாக செராமிக் என்பது அலுமினியம் ஆக்சைடு, சிலிகன் ஆக்சைடு போன்ற ஆக்சைடுகளே. தற்போது ஜிர்கோனியம் ஆக்சைடு என்ற பொருள் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றைக் கொண்டு உயர் மின்கடத்திகள் உருவாக்கப்பட்டன. சுவிட்சர்லாந்தில் ஐ.பி.எம் ஆய்வகத்தில் 1988ல் உயர் கடத்துத் திறன் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 77 கெல்வின் வெப்பநிலையில் கால்நடைகளின் விந்தணுக்கள் பாதுகாக்கப்படுகிறது. ஏறக்குறைய 120 டிகிரி கெல்வின் வெப்பநிலையில் உயர் கடத்தும் திறன் இந்த ஆக்சைடுகளுக்கு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது. இதற்கு முக்கிய காரணியாக விளங்கியது யுட்ரியம் பேரியம் காப்பர் ஆக்சைடு (YVCo) என்ற பொருளே ஆகும். இது ஒரு செராமிக் என்பது அப்போது அறியப்பட்டது. வளர்ந்த நாடுகளில் மெல்லிய இழை வடிவத்தில் செராமிக் பொருள்களை மாற்றியமைத்து உயர் மின்கடத்தும் திறனை அதிகரித்து, அதன் மூலம் மின்னாற்றல் பெறப்படுகிறது.
வெறும் களிமண் என்று நாம் நினைக்கும் இந்த செராமிக் பொருட்கள் அறிவியலின் பல மர்மக் கதவுகளைத் திறக்க உதவியுள்ளது. விண்வெளி சார்ந்த தொழில்நுட்பம், அணுக்கரு தொழில்நுட்பம் போன்றவற்றில் செராமிக்ஸ் எனப்படும் பீங்கான் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உள்ளது. குறிப்பிட்ட ஒரு தனிமத்துடன் கோபால்ட் தனிமத்தை சேர்த்தால் அது செர்மெட் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பொருள் கண்ணாடியின் பண்போடு (glassy nature) இருந்தாலும் இதில் கோபால்ட் கலந்திருப்பதால் இதன் கடினத் தன்மை மிக அதிகமாக இருக்கும். நாம் அதன் மீது அமர்ந்துகூட செல்லும் அளவுக்குக் கடினமானது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களிலும் டான்டலம் கலந்திருக்கிறது. உதாரணமாக கைக் கடிகாரத்தில் பளபளப்பான தங்கமுலாம் போல ஒன்று பூசப்பட்டிருக்கும். இது உண்மையில் தங்கமுலாம் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏனென்றால் தங்கமுலாம் பூசுவது அதிக செலவு பிடிக்கக்கூடிய ஒன்று. துருப்பிடிக்கக் கூடிய இத்தகைய பொருட்கள், (உலோகக் கைப்பிடி உள்ள கதவுகள் போன்றவற்றில்) டான்டலம் கார்பைடு அல்லது சிலிகன் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது. நைட்ரஜனின் அளவு, அதன் அடர்த்தியைப் பொறுத்து, சிலிகன் நைட்ரேட்டின் நிறமும் மாறும். செராமிக் நிலையில் இவை நடத்தப்படுகிறது. பிளாஸ்மாசிஸ் பூச்சு (plasmosis coating), மெல்லிய படலப் பூச்சு (thin flim deposition) போன்றவை சிலவகைப் பூச்சுகள். இந்தப் பூச்சுத் தொழில்நுட்பம் செராமிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. பொருட்களின் பண்புகளை மாற்ற இப்பூச்சுகள் பயன்படுகின்றன.
மண்ணில் இருந்த உலோகங்களை காடுகளை அழித்து பெற்று வருகிறோம். மறுசுழற்சியின் மூலமும் உலோகங்கள் மறுபயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்றன. இதற்குப் பதிலாக இப்போது செராமிக் பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகன உற்பத்தி தொழிலில் ஒரு காலத்தில் உலோகங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்று 30 முதல் 40% வரை உலோகமே இல்லாத கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு செராமிக் தொழில்நுட்பமே காரணம். செராமிக் கூட்டுப்பொருள்கள் உயர் வெப்பநிலையைத் தாங்கக் கூடியவை. அதனால் என்ஜின் உற்பத்தி போன்றவற்றிலும் இதன் கூட்டுப்பொருட்கள் பயன்படுகின்றன. முப்பரிமான அச்சுத் தொழில்நுட்பம் (3d printing) மூலம் உலோகத்தின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. 5 கிராம் உலோகம் ஒரு இன்ஞின் உதிரிப்பாகம் செய்யத் தேவைப்படுகிறது என்றால் செராமிக் தொழில்நுட்பத்தால் இதை 5 மில்லிகிராம் அளவுக்குக் குறைத்துப் பயன்படுத்த முடியும். மீதம் செராமிக் பொருளால் ஆக்கப்படுகிறது. உலோகங்களின் பயன்பாடு உலகளவில் அதிகம் தேவைப்படுவதால் இவ்வாறு செய்யப்படுகிறது.
மின்னணுச் சுற்றுகளும், மின்னணு சாதனங்களும் செராமிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே இன்று மேற்கொள்ளப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும், அறுக்கும் இயந்திரத் தொழிலிலும் (cutting meachine tools industry) செராமிக் பயன்படுகிறது. மனித உடலின் ஒரு பாகமாகவும் செராமிக் பொருள்கள் இருக்கின்றன. எலும்பு, பற்கள், மண்டையோடு ஆகியவை செராமிக் பொருள்களால் ஆக்கப்பட்டவையே. பற்களில் ஹைடிராக்சி ஹெப்படைடு என்ற பொருள் சார்ந்த செராமிக் அடங்கியுள்ளது. இதை ஆய்வுக்கூடங்களில் தயாரித்துப் பக்குவப்படுத்தி மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.
நம் விரலில் இருக்கும் ஒரு எலும்பின் கடினத் தன்மையும், முதுகெலும்பில் இருக்கும் எலும்பின் கடினத் தன்மையும், பற்களின் கடினத் தன்மையும், மண்டையோட்டின் கடினத் தன்மையும் மாறுபட்டது. சுண்டுவிரலின் நுனியில் இருக்கும் எலும்பின் கடினத் தன்மையும், அது உள்ளங்கையில் இணையும் இடத்தில் இருக்கும் எலும்பின் கடினத் தன்மையும் மாறுபட்டது. ஹைடிராக்சி ஹெப்படைடில் இருக்கும் அடர்வு வேறுபாடு (concentration ratio difference) காரணமாக இந்தக் கடினத் தன்மையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்கேற்ப அந்தந்த இடங்களில் இருக்கும் எலும்புகளின் பயன்பாடும் அமைகிறது. 20 வருடங்களுக்கு முன்பு வரை வயதானவர்கள் மூட்டுவலியால் அவதிப்பட்டால் அவர்களுக்கு உலோகத் தகடுகளே பொருத்தப்பட்டு வந்தன. ஆனால், இப்போது டான்ட்டலம் அல்லது டைட்டானியம் அடிப்படையில் அமைந்த பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. செராமிக் மற்ற உலோகங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டப் பொருட்களே கூட்டுப்பொருள்கள் (composits) என்று அழைக்கப்படுகின்றன. இதனால் உலோகத் தகடுகளால் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. மருத்துவத் துறையிலும் செராமிக் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகமுள்ளது.
கார்போரேன்டம் யூயென்சில்ஸ் என்பது சென்னையில் உள்ள முருகப்பா கம்பெனியின் செராமிக் தயாரிப்பு. கிராம்ட்டன் வீல்ஸ் என்ற கம்பெனி சிலிகன் கார்பைடு என்ற வெப்பமூட்டியைத் (heating element) தயாரிக்கிறது. இதுபோல ஏராளமான செராமிக் அடிப்படையான தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. ஒரு குயவன் செய்த மண்பாண்டங்களில் இருந்து போர்சலீன் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இன்று பல பொருள்களும் கண்ணாடி நிலைக்குக் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்மா பூச்சு என்ற எளிமையான தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகிறது. இந்தப் பூச்சுக்கு அடிப்படையாக டான்ட்டலம் கார்பைடு அல்லது சிலிகன் நைட்ரேட் என்ற செராமிக் சார்ந்த பொருட்கள் உள்ளன. செயற்கை வைரங்கள் சிர்கோனியம் என்பதை க்யூபிக் சிர்கோனியமாக மாற்றி தயாரிக்கப்படுகின்றன. இதனால்தான் இன்று செயற்கை வைரங்கள் விலை மலிவாகக் கிடைக்கின்றன. ஒரு தேநீர்க் கோப்பையில் தொடங்கி விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் வரை பீங்கான் தொழில்நுட்பம் இன்று கற்பனைக்கு எட்டாத விதத்தில் நமக்குப் பயன்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
பூமியின் வளங்களைப் புகைப்படங்கள் மூலம் அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் இன்று வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம், பூமியைப் பற்றிய விவரங்களின் சேகரிப்பு, பூமியின் நில வரைபடங்கள் தயாரிக்கப்பட்டது போன்றவை பூமியைப் பற்றி மேலும் அறிய நமக்கு உதவின. செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டதும், நவீனக் கணினிகளில் ஏற்பட்ட மென்பொருள் வளர்ச்சி இத்துறையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
19ம் நூற்றாண்டில் வரைபடங்கள் வரைய ஆரம்பிக்கப்பட்ட பிறகு, தகவல் சேகரிப்புத் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பலூன்கள், விமானங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உயரமான இடங்களில் இருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 1960ல் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி தகவல் சேகரிப்பு தொடங்கியது. கேமராக்களுடன் சேர்த்து தகவல்களைத் திரட்ட பலவிதமான ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்படி ஒரு பொருள் அல்லது ஒரு பிரதேசத்தைக் குறித்த விவரங்கள் கருவிகளின் உதவியுடன் சேகரிக்கப்படத் தொடங்கின. இத்தகைய தொடர்பின் மூலம் விவரங்களைச் சேகரிக்கும் முறைக்கு உணரிகள், கேமராக்கள், ஸ்கேனர்கள், மின்காந்த கதிரியக்கம் (electro magnetic radiation) பயன்பட்டன.
சூரிய ஒளியின் உதவியால் தொலைத்தகவல் சேகரித்தல் தொடங்கியது. விவரங்கள் சேகரிப்பதற்காக கேமராக்களும், உணரிகளும் பொருத்தப்பட்டுள்ள தளமே ப்ளாட்பார்ம் (platform) என்று அழைக்கப்படுகிறது. பலூன்கள், விமானங்கள், செயற்கைக் கோள்களில் உணரிகள் போல கருவிகளைப் பொருத்தலாம். இவற்றைக் கொண்டு தொலைத்தகவல் திரட்டுதலை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பூமியில் இருந்து குறைவான உயரத்தில் இருந்து எடுக்கப்படும் முறை, ஆகாயத்தில் இருந்து எடுக்கப்படும் முறை மற்றும் செயற்கைக் கோள்களில் எடுக்கப்படும் முறை என இது மூன்று வகைப்படும். இத்தகையவற்றில் கேமராக்கள் மற்றும் உணரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருட்களின் மீது விழுந்து பிரதிபலிக்கும் ஒளியையே கேமரா படமாக எடுக்கிறது. இது தவிர மின்காந்தப் புலத்தை புகைப்படமாக ஸ்கேனர்கள் புகைப்படம் எடுக்கின்றன. பூமியில் இருந்து அல்லது பூமியின் உயரமான இடத்தில் இருந்து பூமியின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுக்கும் முறை இதில் முக்கியமானது. கேமராக்களைப் பயன்படுத்திப் புகைப்படங்களை எடுப்பது இதற்கு உதாரணம். பலூன்கள் அல்லது விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் ஆகாயத்தில் இருந்து பூமியின் புகைப்படங்களை எடுப்பது மற்றுமொரு முறை. சற்றேறக் குறைய பரப்பு குறைவாக உள்ள இடங்களின் புகைப்படங்களை எடுக்க இது பயன்படுகிறது. விமானம் கடந்து செல்லும் பிரதேசங்களின் தொடர்ச்சியான புகைப்படங்கள் இதன் மூலம் கிடைக்கிறது. எடுக்கப்படும் ஒவ்வொருப் புகைப்படத்திலும் அதற்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ளப் புகைப்படத்தின் 60%ம் சேர்த்தே எடுக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இருக்க நிறமாலைமானியின் (stereoscope) உதவியுடன் இறுதி செய்யப்படுகிறது. எடுக்கப்படும் புகைப்படங்களின் முப்பரிமான படங்கள் கிடைக்க இது உதவுகிறது. இது, இம்மாதிரி படங்களின் ஓவர்லேப் (over lap) என்று அழைக்கப்படுகிறது.
படங்களில் இருந்து முப்பரிமான வடிவம் கிடைக்க உதவும் உபகரணமே ஸ்டீரியோஸ்கோப். ஒரு பிரதேசத்தை ஒன்று சேர்ந்து பார்ப்பதற்கும், பூமியின் மேற்பரப்பில் மேடு பள்ளங்களைப் பிரித்து அறிவதற்கும் இந்தக் கருவி பெரிதும் பயன்படுகிறது.
செயற்கைக் கோள்கள் வர ஆரம்பித்தபின் இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன. செயற்கைக் கோள்கள் நடைதளங்களாக (platform) பயன்படத் தொடங்கியதுடன் தொலைத்தகவல் மேலும் திறம்பட்டது. செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ள உணரிகளின் மூலம் தகவல்களை சேகரித்துப் பரிமாறும் முறை வந்தது.
செயற்கைக் கோள்களை புவி சுற்றுவட்டப்பாதை செயற்கைக் கோள்கள், சூரிய சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். பூமியின் சுழற்சியுடன் சுழலும் செயற்கைக் கோள்கள் புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்கள். இவற்றின் சுற்றுவட்டப் பாதை பூமியில் இருந்து ஏறக்குறைய 36,000 கி.மீ உயரத்தில் அமைந்திருக்கும். இவை பூமியின் மூன்றின் ஒரு பகுதியைக் கண்காணித்து, தகவல்களை அனுப்பும் திறன் பெற்றது. புவி சுழற்சியின் வேகத்துடன் சம வேகத்தில் சுற்றுவதால் இவை எல்லா சமயங்களிலும் பூமியின் ஒரே பிரதேசத்தை நோக்கி நிலைநிறுத்தப்படுகின்றன. ஒரு பிரதேசத்தின் நிலையான தகவல்களைத் திரட்ட இவை பெரிதும் பயன்படுகின்றன. இவை தகவல் தொடர்பு, அன்றாடப் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
துருவங்களுக்கு மேற்பகுதியில் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கோள்களே சூரிய வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக் கோள்கள். இவை புவி வட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோள்களை விடக் குறைவான உயரத்திலேயே சுற்றுகின்றன. இவற்றின் சுற்றுவட்டப் பாதை பூமியின் மேற்பரப்பில் இருந்து ஏறக்குறைய 1000 கி.மீக்கும் குறைவாகவே இருக்கும். புவி வட்டப் பாதையில் சுழலும் செயற்கைக் கோள்களைக் காட்டிலும் குறைவான பரப்பையே இவை கண்காணிக்கின்றன. ஒரு சிறிய பகுதியைப் பற்றிய தகவல்களுக்கு இவை உதவுகின்றன. இயற்கை வளங்கள், நிலப்பரப்பு, இதர வளங்கள், நிலத்தடி நீர் போன்றவை பற்றி தகவல்களைச் சேகரிக்க இவை உதவுகின்றன.
இந்தியா ஏவிய இன்சாட் வரிசை செயற்கைக் கோள்கள் புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்களாகும். ஐ. ஆர்.என்.எஸ் வரிசை செயற்கைக் கோள்கள் சூரிய வட்டப்பாதை செயற்கைக் கோள்கள்.
பொருட்கள் வெளியிடும் அல்லது பிரதிபலிக்கும் மின்காந்தக் கதிர்கள் வெவ்வேறு அளவுகளில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பொருளும் பிரதிபலிக்கும் ஆற்றலின் அளவே அப்பொருளின் ஸ்பெக்ட்ரல் கையொப்பம் (spectral signature) என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு மண்ணின் ஸ்பெக்ட்ரல் கையொப்பம் தாவரங்களின் கையொப்பத்தில் இருந்து வேறுபட்டது. மின்காந்த நிறமாலையில் வெவ்வேறு அம்சங்களைப் பிரித்தறிய உதவும் வெவ்வேறு வகையான ஸ்கேனர்கள் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு பொருட்களை ஸ்பெக்ட்ரல் கையொப்பத்தின் அடிப்படையில் பகுத்தறிந்து விவரங்களை சமிஞ்ஞைகள் வடிவத்தில் பூமியில் உள்ள மையங்களுக்கு எண்களாக அனுப்புகின்றன. இவை கணினிகளின் உதவியுடன் விரிவாக ஆராயப்பட்டு படங்கள் வடிவத்தில் மாற்றப்படுகின்றன. இவையே செயற்கைக்கோள் படங்கள் (satellite pictures).
செயற்கைக் கோள்களில் உள்ள உணரிகளால் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் பகுத்தது அறிய முடிவதில்லை. ஓர் உணரியால் பிரித்து அடையாளம் காணக்கூடிய பூமியின் மேற்பரப்பில் உள்ள மிக மிகச் சிறிய பொருளே அதன் சிறப்பு நேர்வுகள் (special resolution). காலநிலை கணிப்பு, கடல் வானிலை அறிவிப்பு, நில வளங்களைப் புரிதல், வறட்சி, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கண்டறிதல், அடர்ந்த உட் காடுகளில் காட்டுத் தீயைக் கண்டுபிடிக்க, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, பயிர்களின் பரப்பு, பூச்சிகள் தாக்குதல் போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் சேகரிக்க, எண்ணெய், நிலத்தடி நீர் வளம் உள்ள பகுதிகளின் கண்டுபிடிப்பு போன்ற பல வகைகளில் இவை பயன்படுகின்றன.
தொலைத்தகவல் செய்திகள் மற்றும் இதர ஆய்வுகளை ஒன்றிணைத்து நில வரைபடங்கள் தயாரிக்க, அவற்றில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்த, அவற்றின் விரிவாக்கத்திற்கு மென்பொருட்கள் பயன்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கே உரிய அமைவிடம் (position) உள்ளது. அதனால் ஒரு பிரதேசத்தின் நில வரைபடம் இந்த அடிப்படையில் தயாரிக்கப்படும்போது அது அமைந்திருக்கும் சரியான அட்சரேகை, கடகரேகை போன்ற விவரங்களையும் எடுத்துக்கூறவேண்டும். இந்தத் தகவல்களை மென்பொருட்கள் உதவியுடன் பெறலாம். ரயில்வே, நதிகள் போன்றவை தொடர்பான திட்டங்களுக்கு இவை பயன்படுகின்றன. இதன் மூலம் மிகக் குறைவாக உள்ள பயணப்பாதை, சுங்கச்சாவடி இல்லாத பாதை, போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள பாதை, உணவகம், மருத்துவமனை போன்றவற்றைக் கண்டுபிடிக்க இந்தப் படங்கள் உதவுகின்றன. ஒரு பிரதேசத்தில் உள்ள பொருட்களுக்கு இடையில் உள்ள தொடர்புகள் பற்றி, காலம்காலமாக அவற்றுக்கு இடையே இருந்துவரும் தொடர்பு பற்றியும் இந்தப் படங்கள் மூலம் அறியலாம். பயிர்களின் விளைச்சலில் ஏற்படும் மாற்றங்கள், காலநிலை மாற்றங்களுக்கேற்ப பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி அறிய இவை உதவுகின்றன.
பல இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் விவரங்கள் ஒன்று சேர்க்கப்பட, விரிவாக்கப்பட, இவற்றின் விளக்கப் படங்களை உருவாக்க, இவற்றின் விளைவுகள் பற்றிய மாதிரிப் படங்களைத் தயாரிக்க, நில வரைபடங்கள், வரைபடங்கள், அட்டவணைகள் போன்றவை தயாரிக்க இவை பெரிதும் பயன்படுகின்றன.
இருப்பிடம் அறியும் தொழில்நுட்பத்திற்கு இச்செயற்கைக் கோள்களின் படங்கள் உதவுகின்றன. நில அமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கு இந்த இருப்பிடமறியும் வசதி அவசியம். அமெரிக்காவில் இதற்காக ‘உலக இருப்பிடமறியும் வசதி’ Global Positioning System GPS உள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருக்கும் பொருட்களின் அட்சரேகை, தீர்க்கரேகை இடங்கள், உயரம், நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் இந்த வசதியே இத்தகையவற்றில் மிக முக்கியமானது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 20,000 முதல் 20,200 கி.மீ உயரம் வரை உள்ள சுற்றுவட்டப் பாதைகளில் 6 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றி வரும் 24 செயற்கைக் கோள்களின் கூட்டமைப்பே இது. இவற்றின் மூலமே இருப்பிடம் அறியும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. செயற்கைக் கோள்களில் இருந்து வரும் சமிஞ்ஞைகள் நம் கையில் உள்ள ஏற்பியில் கிடைத்தால் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். மிகக் குறைந்த அளவில் குறைந்தபட்சம் 4 செயற்கைக் கோள்களில் இருந்து வரும் சமிஞ்ஞைகள் கிடைக்கும்போது இந்த வசதியில் இருந்து நமக்கு விவரங்கள் கிடைக்கின்றன. இருப்பிடத்தை மேலும் துல்லியமாக அறிய உதவியாக இந்த செயற்கைக்கோள்களின் கட்டமைப்பில் இப்போது மேலும் கூடுதலாக செயற்கைக் கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இராணுவத் தேவைகளுக்காகத் அமெரிக்கா இந்த கட்டமைப்பைத் தொடங்கியது என்றாலும், 1980 முதல் இது மக்களுக்கு கிடைக்கிறது. இந்திய இருப்பிடம் அறியும் செயற்கைக்கோள் கட்டமைப்பு (Indian Regional Navigation Satellite System – IRNSS) அமெரிக்காவின் இருப்பிடம் அறியும் வசதிக்குப் பதிலாக இந்தியா சுயசார்புடன் நிறுவிய ஒன்று. இந்தியா தவிர பாகிஸ்தான், சீனா, இந்தியப் பெருங்கடல் உட்பட 1500 கி.மீ சுற்றளவு வரை இதன் கண்காணிப்பு உள்ளது. ரஷ்யாவின் க்ளாஸ்மாஸ், ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் கலிலியோ போன்றவை மற்ற நாடுகளின் இருப்பிடம் அறிய உதவும் இவ்வகைக் கட்டமைப்புகள்.
மனிதனின் அடங்காத தேடல் ஆர்வத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றமே இதற்கு அடிப்படை. புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வாழ்வை மேம்படுத்தியுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
இணையதள அச்சுறுத்தல்களைத் தவிர்க்க, பாதுகாப்பான இணையதள இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க இரண்டு அடுக்கு கொண்ட கடவுச்சொல் (Password) அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது என்று கூறலாம். அதிலும் குறிப்பாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு இணையதளங்கள், மருத்துவ தகவல்கள்/காப்பீடுகள் என்று நமக்கென தனியாக பக்கங்கள்/கணக்குகளை பார்த்துக் கொள்ள இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை Two factor authentication என்று அழைப்போம். பொதுவாக நமக்கு இது தெரிந்தது தான் நம்முடைய முதல் கடவுச்சொல்லை கொடுத்த பிறகு, பயனரின் திறன்பேசிக்கு குறுஞ்செய்தியாக அல்லது மின்னஞ்சல் வாயிலாக நான்கு அல்லது ஆறு இலக்க எண்ணை அனுப்பி சரியான வாடிக்கையாளரை உறுதி செய்ய அந்த எண்ணை உடனடியாக உள்ளீடு செய்ய வேண்டும். கடவு எண்கள் சரியானது என்று தெரிந்ததும் நம்முடைய பக்கம் திறந்து விடும். இணையதளப் பயன்பாட்டை தரும் நிறுவனத்திற்கு உடனடியாகத் தெரிந்துவிடும், ஆம் இவர் நம்முடைய வாடிக்கையாளர் தான் என்று.
2FA முறையில் பழக்கப்பட்டவர்கள் எளிதாக இதனைச் செய்து விடுவார்கள். புதியவர்களுக்கு சிறிய தலைவலி பிடித்த வேலை தான். "Two factor authentication is better than nothing" என்ற ஒரு சொல்லாடல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குள் உண்டு.
ஒருவகையில் இது ஒரு பாதுகாப்பான முறை என்றே பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகிறார்கள். பல முன்னேறிய நாடுகளில் பரவலாக அனைத்து அன்றாடப் பயன்பாட்டிலும் மக்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கொடுத்து வருகிறார்கள்.
Cyber security பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இதன் பயன்பாடு வரும் நாட்களில் உயரக் கூடும்.கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய நேரம் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தன. அலுவலகத்தில் இருந்தால் Firewall உள்ள இணைய தொடர்பில் வேலை செய்வதால் வெளி உலகில் இருந்து வரும் தாக்குதல் தடுக்கப்படும். பணியாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள இணையதளம் (Internet provider) மூலம் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து கொள்ள VPN (Virtual Private Network) மூலம் தொடர்பு செய்து இணைந்து கொள்வார்கள். வேலை பாதுகாப்பான முறையில் நடந்து கொண்டிருந்தது. இந்த பாதுகாப்புக்குப் பின்னணியில் அதாவது அந் நிறுவனங்கள் cyber security க்காக பெரிய கட்டமைப்பில் virus, Malware, spyware போன்றவற்றைத் தடுக்க வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வழக்கம் போல ஒரு நாள் காலையில் மின் அஞ்சல் தளத்தை திறக்க முயன்றேன். முடியவில்லை. பல நிறுவனங்கள் மைக்ரோசாப்ட் அவுட்லுக் வைத்திருப்பார்கள். எங்கள் நிறுவனமும் அதை வைத்திருந்தது. "Password protected, Enter your two step verification. Send verification code?" என்று வந்தது. பிறகு உடனடியாக அதனைப் பெற்று உள்ளே நுழைந்தேன். Cyber security பற்றி பக்கம் பக்கமாக பாடம் எடுத்துக் கொண்டு இருந்தது எங்கள் நிறுவனம். எங்களுக்கு ஏற்கனவே தனியாக VPN இருக்கிறது. VPN தொடர்பு செய்தவுடன் எங்களுடைய நிறுவனப் பணியாளர்கள் எங்களது இணையதளத்திற்குச் செல்ல முடியும். இதுவும் தற்போது மாறி விட்டது என்று தகவல்கள் வந்தன. VPN - Connect செய்ய தனியாக verification code அனுப்பும் செயலியை ஒவ்வொரு பணியாளரும் தங்கள் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து அதில் வரும் எண்ணை முப்பது நொடிக்குள் கடவுச்சொல் போல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் கூறப்பட்டது. சிறப்பான பாதுகாப்பு. நிறுவனத்தைக் கடந்து வேறு எவரும் உள்ளே நுழைந்து விட முடியாது.
இவ்வாறான இணையதள பாதுகாப்பு முறைமைகளை பல நிறுவனங்கள், அரசு அமைப்புகள் கொண்டு வர இணைய அபகரிப்பாளர்கள் (Hacker) தான் காரணம். இவர்களது வாடிக்கையாளர்கள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஆகும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும் தப்பவில்லை. ஒன்றிய அரசின் இணையதளங்களை இணையதள திருட்டு அபகரிப்பாளர்கள் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டார்கள் என்று செய்தி படித்திருப்போம்.
ஹேக்கர்களின் கனவு உலகமான அமெரிக்காவில், ஒருமுறை பெட்ரோல், டீசலை பகிர்ந்து கொடுக்கும் Colonial pipeline நிறுவனத்தின் இணையக் கட்டமைப்பில் நுழைந்து தகவல் கட்டமைப்பை தங்கள் வசம் (Ransomware attack) செய்து ஒருவாரம் காலம் அமெரிக்காவை ஆட்டம் காண வைத்தார்கள் ஹேக்கர்கள். இந்த நிறுவனம் 4.4 மில்லியன் டாலர்கள் பிட்காயின் மூலம் ஹோக்கர்களுக்கு கொடுத்தது. அடுத்து யாரை குறி வைப்பார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு ஒருமுறை இறைச்சிப் பொட்டலம் (Tyson meat factory) செய்யும் நிறுவனத்தை முடக்கி விட்டார்கள். இவ்வாறான தாக்குதல் நடத்திய மூல இடத்தை தேடிய அமெரிக்க உளவுத்துறை அதெல்லாம் ரஷ்யாவில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று அறிக்கை வெளியிட்டது. அதனை மீட்டெடுக்க பிட்காயினை மீட்டெடுக்கும் பணமாக கொடுத்தது அமெரிக்கா.
ஹேக்கர்கள் பெரும் நிறுவனங்களில் எப்படி நுழைய முடியும்? ஏதேனும் ஒரு பொறியை வைத்து உள்ளே நுழைந்து விடுவார்கள். அந்த பொறியில் சிக்குவது அலுவலக மின்னஞ்சல் பெரிய காரணம்.
கடந்த ஓராண்டாகவே பல நிறுவனங்கள் தங்களின் மின்னஞ்சல் முறைக்கு இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை பரவலாகக் கொண்டு வந்து விட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் தங்கள் நிறுவனங்களைத் தாண்டி வேறு இடங்களில் இருந்து மின்னஞ்சல் வந்தால் அதனை மேற்கோள் கொடி காட்டி நமக்கு எச்சரிக்கை விடுக்கும். தெரிந்த ஆட்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதை உறுதி செய்து நாம் படிக்க வேண்டும்.
சரி, நாம் சமூக வலைத்தளங்களுக்கு வந்து விடுவோம். இன்றைய காலகட்டத்தில் அரசியல் மேடைகளுக்கும், அரசின் அறிவிப்புகளுக்கும், பிரபலங்களின் இருப்பிடத்தைக் காண்பதற்கும், செய்தி நிறுவனங்களின் செய்திப் பகிர்வுக்கும் முதன்மையான ஓரிடம் இருக்கிறது என்றால் அது சமூக வலைத்தளங்களில் தான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். மேலே குறிப்பிட்ட எல்லோரும் ஒரு நிறுவனம் சார்ந்து இயங்குபவர்கள். அதனால் அவர்களை எளிதாக சமூக வலைத்தள நிறுவனங்கள் சரிபார்ப்பு செய்துவிட முடியும். அவர்கள் பெயரில் வேறொருவர் போலி கணக்குகள் தொடங்க முடியாது. தொடங்கினாலும் அது போலி என்று தெரிந்துவிடும். பொதுமக்கள் எல்லோரும் இங்கு பயனாளர்களாக இருக்கும் தளத்தில் அனைவரையும் எப்படி நம்பத் தகுந்தவர்களாக சமூக வலைத்தள நிறுவனங்கள் பார்க்கும்?
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற பெரும் சமூக வலைத்தளங்கள் தங்கள் உட்கட்டமைப்பில் ஹேக்கர்கள் நுழையாமல் இருக்க பல அடுக்கு எதிர்ப்பு நிரல்கள் வைத்திருக்கும். இது அனைத்தும் பயனாளர்கள் பக்கத்திற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட, சரிபார்க்கப்பட்ட (verified account) பயனாளர்கள் இதிலிருந்து தப்பித்து விடலாம் என்றாலும் சில ஹேக்கர்கள் அதையும் தூக்கி விடுவார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுடைய டிவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி விட்டார்கள். ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் அந்தப் பக்கத்தை மீட்டெடுத்தது அரசு. ஹேக்கர்கள் தான் முடக்கி விட்டார்கள் என்று அவரே தெரிவித்து இருந்தார். நல்லவேளை அணில் இதில் எந்த இடையூறும் செய்யவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையைப் பயன்படுத்தி வந்தாரா என்று நமக்குத் தெரியாது.
அவர் மட்டுமா… விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் பக்கத்தையும் ஹேக்கர்கள் பதம் பார்த்து விட்டார்கள். இவருடைய டிவிட்டர் பக்கம் டிவிட்டரால் சரிபார்க்கப்படாத பக்கம். தனிநபர் தகவல்களை உடனடியாக திருடப்படும் வாய்ப்புகள் இதனால் மிக மிக அதிகம். என்னுடைய டிவிட்டர் பக்கம் களவாடப்படுள்ளது என்று அவரே ஃபேஸ்புக் மூலம் தெரிவித்தார். உடனடியாக அவரே அவருடைய பெயரில் மற்றொரு கணக்கைத் தொடங்கி இதில் என்னைப் பின் தொடருங்கள் என்றார். பிறகு இவரது கணக்கும் திரும்ப கிடைக்கப் பெற்றது.
பேஸ்புக் கணக்குகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை டிசம்பர் 2021ல் முதலில் அமெரிக்காவில் கொண்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே 2018ல் இதன் சோதனை ஓட்டம் தொடங்கி விட்டது. ஆனால் 2022ல் தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பு பயனை அளிக்க முன்வந்தது பேஸ்புக். அதுவும் யாருடைய கணக்குகள்/பக்கங்கள் முடக்கப்படும் என்று தெரிந்து அவர்களை வகைப்படுத்தி அவர்களுக்காக செய்து கொடுத்தது. கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கணக்குகள் இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையில் இருப்பதாக தெரிவிக்கிறது பேஸ்புக்.
டிவிட்டர் நிறுவனமும் இதுபோன்ற இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை 2021ல் கொண்டு வந்தது. டிவிட்டரை ஈலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு வரை 2.6% சுறுசுறுப்பான பயனாளர்கள் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதே வேளையில் 76% பயனாளர்கள் குறுஞ்செய்தி வாயிலாக இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் இதை ஈலான் மஸ்க் நம்பவில்லை. அவர் அறிவு உயிர் நாடி ஆச்சே. தொலைபேசி இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்கள் போலியாக இப்படி குறுஞ்செய்தி அனுப்புகிறது என்றார்.
அவர் டிவிட்டரை வாங்கும் வேளையில் 5% போலி கணக்குகள் இருக்கிறது, இதனை நீக்கினால் மட்டுமே டிவிட்டரை வாங்குவேன், இல்லையெனில் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என்று மிரட்டினார். ஆனால் அந்த மிரட்டல், வேலைக்கு ஆகவில்லை. நீதிமன்றம் சென்றது அப்போதைய டிவிட்டர். பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்றார். ஆம், டிவிட்டரில் போலி Bot Account இதனை நீக்க அவர் படாத பாடு படுகிறார். அதற்காக ஒருமுறை அவரே தனது டிவிட்டர் பக்கத்தை தனிப்பட்ட முறையில் (private lock) பூட்டி வைத்தார்.
ஈலான் மஸ்க் அவர்களுக்கு இருக்கும் அறிவியல் அறிவோடு வணிக அறிவும் அதிகம். டிவிட்டரில் (Verified account) சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் பாகுபாடு பார்ப்பதாகக் கருதினார். அதென்ன பத்திரிக்கையாளர் வெளியிடும் செய்தி மட்டும் தான் உண்மையா. அவர்கள் பேசுவது எல்லாமே சரியா? பொது மக்களுக்கும் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் வழங்கப்பட வேண்டும் என்றார். இதைக் கேட்ட நமக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆமா அதுல பாகுபாடு இருக்கிறது என்று பலர் நினைத்தார்கள். "Free speech for everyone" என்று தொடங்கிய அவர் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகளுக்கு மாதா மாதம் சந்தா செலுத்த வேண்டும். ஏற்கனவே உங்கள் கணக்குகள் சரிபார்ப்பு செய்யப்பட்டது என்றால், நீங்களும் சந்தா சொலுத்துவது கட்டாயம் என்றார். இதைக் கேட்ட பல பத்திரிக்கையாளர்கள் கொதித்து எழுந்தார்கள். பிரபல டிவிட்டர் பத்திரிக்கையாளர் ராஜகுமாரி "ஒரு சல்லி பைசா தர மாட்டேன்" என்றார்.
டிவிட்டரில் ப்ளு டிக் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்கு என்றால், அது ஒரு தன்மானப் பிரச்சினை என்றே பலரும் கருதுகின்றனர். இதனை முதலீடாக நினைக்கிறது டிவிட்டர். அதன் ஒரு முன்னோட்டம் தான் இனிமேல் இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். யாரெல்லாம் பணம் செலுத்தி சரிபார்ப்பு செய்யப்பட்டது போல் மாற்றி இருக்கிறார்களோ, அவர்களுடைய கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். ஏற்கனவே நீங்கள் "டிவிட்டர் ப்ளு" இல்லாமல் இரண்டு அடுக்கு சரிபார்ப்பு கடவுச்சொல் முறையைப் பயன்படுத்தி வந்தால், இனி உங்களுக்கு வழங்கப்படாது என்று அறிவித்தது டிவிட்டர்.
டிவிட்டரின் அறிவிப்பைத் தொடர்ந்து பேஸ்புக் மெட்டா நிறுவனமும் கட்டணம் செலுத்தும் சந்தா முறையை அறிமுகம் செய்யவிருக்கிறது. சோதனை ஓட்டமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் "Meta Verified" என்ற பெயரில் தொடங்கும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டு சமூக வலைத்தளங்களிலும் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் வேண்டும் என்றால் மாதம் $11.99 (for website), $14.98 iOS Android app களுக்கும் என்று தெரிவித்து இருக்கிறது. எல்லையற்ற தேடல், பரந்து விரிந்த பார்வை பரிமாற்றம், குறிப்பாக வாடிக்கையாளர் நிலையத்தில் சந்தாதாரர்கள் நேரடியாகப் பேசலாம்.
நாம் கவனித்து இருப்போம் சமூக வலைத்தளங்களுக்கு வாடிக்கையாளர் நிலையம் கிடையாது. பயனாளர்களுடன் தொலைபேசி உரையாடல் நடத்தும் ஒரு கட்டமைப்பு எந்த சமூக வலைத்தளங்களிலும் கிடையாது. இனிமேல் கட்டணம் செலுத்தி பேஸ்புக் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்காக மாற்றினால் அது நடக்கும்!
பல பில்லியன் டாலர்கள் வருமானமாக ஈட்டும் சமூக வலைத்தளங்களில் கூடுதலாக சந்தாதாரர்கள் முறையைக் கொண்டு வருகிறது. பேஸ்புக் கடந்த சில ஆண்டுகளில் $600 பில்லியன் டாலர்கள் பங்குச்சந்தையில் இழந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
OTT தளங்களில் தொடக்கக் கட்டணம் கூட பேஸ்புக் இனிமேல் வாங்க இருக்கும் கட்டணத்தை விட குறைவு. பதினான்கு டாலர்கள் செலுத்துவதால் நமக்கு என்ன கிடைக்கும் என்று தோன்றுகிறதா? புகழ்பெற்ற மனிதர்களுக்கு புகழ். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அதே வேடிக்கை. ஆனால் கூடுதல் பாதுகாப்பு.
அப்படியென்றால், இனிமேல் பேஸ்புக்கில் இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறைக்கும் இந்தக் கட்டணம் கட்டாயம் என்று விரைவில் அறிவிக்கும்.
இணையதள பாதுகாப்பு, கட்டணம் இல்லாமல் எளிதாக கிடைக்காது. முதலில் பயனாளர்களை பழக்கப்படுத்தி விட்டு, பின்னாட்களில் அதற்கு கட்டணம் என்ற கட்டமைப்பே கார்ப்பரேட் நிறுவனங்களின் செய்வினை விளையாட்டு.
- பாண்டி
- தேடல் இயந்திரத்தின் செயற்கை நுண்ணறிவு
- மெட்டாவெர்ஸ் - இணையத்தின் எதிர்கால வடிவம்
- உங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம்
- மரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு
- போயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன?
- பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்
- ஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்?
- Facial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்
- ஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு
- 'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம்
- தகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்
- எதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers
- அறிவியல் பிரச்சாரம் செய்வோம்...!
- இது யாரு பண்டிகூட்டா? - டிஜிட்டல் பெருச்சாளி
- நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்
- நுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி
- சூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்
- நீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி
- கிலோகிராமின் வரையறை மாறுகிறது