கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
விசிறியுடன் கூடிய ஆடைகள் (the fan jacket) என்ற ஜப்பானிய கண்டுபிடிப்பு வெயில் காலத்தில் மக்களை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகரித்துவரும் நிலையில், பாரம்பரிய ஆடைகள் உடலுடன் ஒட்டிக்கொண்டு உடற்சூட்டை அதிகப்படுத்தும்போது, வெளியில் வேலை செய்பவர்கள் ஃபேன் ஜாக்கிட்டோ (Fan-jakketo) என்று அழைக்கப்படும் இந்த குளிரூட்டும் ஆடைகளை நாடுகின்றனர்.
இந்த ஆண்டு வெளிவந்துள்ள டெரிகூர் ஜாக்கெட் (De rigueur jacket) உடலின் பின் பகுதியில் இரண்டு மின்விசிறிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாகவே ஜப்பானில் கோடையில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்த ஆடைகள், அணிந்து கொள்பவர்களின் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. கோடையின் கொடுமையில் இருந்து பாதுகாப்பு தருகிறது.
குளிர்ச்சியான காற்று ஆடைக்குள் வீசியபடி இந்த விசிறிகள் அணிபவருக்கென்று ஒரு நுண் சூழலை உருவாக்குகிறது. இதன் மூலம் அணிபவர்கள் வெளிப்புறத்தில் கடுமையான வெப்பமும் மோசமான ஈரப்பதமும் நிலவும்போது உள்ளுக்குள் குளிர்ச்சியை அனுபவிக்கிறார்கள். சோனி நிறுவனத்தின் முன்னாள் பொறியியலாளர் ஹிரோசி இக்கிகயா (Hiroshi Ichigaya) 1988ல் தென்கிழக்கு ஆசியா வழியாக பயணம் செய்தபோது மனதில் உருவான கருத்தின் அடிப்படையில் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்ற பின் இந்த ஆடைகளைக் கண்டுபிடித்து உருவாக்கத் தொடங்கினார்.ஒவ்வொரு பிரதேசத்திலும் நகரங்கள் துரிதமாக வளர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் குளிர்சாதன வசதிகள் எல்லா புதிய கட்டிடங்களிலும் பொருத்தப்படுகின்றன. இது மிகப் பிரம்மாண்டமான ஆற்றல் பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது. இதனால் புவியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பதை அவர் உணர்ந்தார். இதற்குத் தீர்வாக ஆற்றல் திறனுள்ள குளிரூட்டும் ஆடைகளை உருவாக்கினார்.
இவற்றை 2004ல் அவர் புதிதாகத் தோற்றுவித்த குளிரூட்டப்பட்ட ஆடைகள் (air conditioning clothes) என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும் கூச்சஹூக்கூ (Kuchofuku) என்ற நிறுவனத்தின் மூலம் சந்தைப்படுத்தத் தொடங்கினார். வியர்வை பெருக்கெடுத்து ஓடும் கோடையில், இதற்கு முன்பு வந்த இதே வசதியுடைய ஆடைகளில் பொருத்தப்பட்ட மின்கலங்கள் (battery) நீண்ட நேரத்திற்கு ஆற்றலை சேமித்து வைக்க முடியவில்லை. வேறு சில குறைபாடுகளும் அதில் இருந்தன.
மேம்படுத்தப்பட்ட ஆடைகள் மீண்டும் 2009ல் வெளிவந்தபோது பெரும்பாலோரின் வரவேற்பைப் பெற்றது. 2015ல் மக்கீட்டா (Makita) என்ற நிறுவனம் இதே போன்ற புதிய வசதிகளுடன் கூடிய குளிரூட்டும் ஆடைகளை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் கட்டிட வேலை செய்பவர்கள், விவசாயிகள், வெளிப்புற வெய்யிலில் வேறு பல வேலைகளைச் செய்பவர்களே.
இவர்களுக்கு இந்த ஆடைகள் பேருதவியாக அமைந்திருக்கின்றன என்று கருவிகளை உருவாக்குவதில் அனுபவம் மிக்க இந்நிறுவனத்தின் பொதுவிவகாரங்கள் பிரிவு மேலாளர் டெசூக் சேக்கி (Daisuke Seiki) கூறுகிறார். தனிப்பட்ட கருவிகளின் விற்பனை பற்றிய விவரங்களை இந்த நிறுவனம் வெளியிடுவதில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக அதிக வெப்பம் நிலவுவதால் இந்த வகை ஆடைகளுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது என்று சேக்கி கூறுகிறார்.
குளிரூட்டும் ஆடைகள் பலவிதம்
சந்தையில் இந்த நிறுவனம் இப்போது பல மாடல் ஆடைகளை விற்பனை செய்கிறது. இவற்றில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுடைய சிறப்பு வடிவமைப்புடன் கூடிய 60 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் மின் கலங்கள் பொருத்தப்பட்ட ஆடைகளும் அடங்கும்.
உயர் வடிவமைப்புடன் கூடிய (hivis jacket), ஃபேன் வெஸ்ட் (fan vest) ஆடைகள், தலையைச் சுற்றி காற்று வரும் வசதியுடையவை (hooded jacket), கால்சட்டையில் விசிறிகள் பொருத்தப்பட்ட முழு உடலையும் மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், வேலைக்குச் செல்லாதபோது அணியும் நாகரீக ஆடைகள் போன்றவை இவற்றில் சில.
இந்நிறுவனம் ஆடையில் காற்றோட்ட வசதியை அதிகப்படுத்துவதற்காக துணியின் வடிவமைப்பில் lining) குளிரூட்டும் பைகளை (cold packs) பொருத்தி தைத்து வெளியிடுகிறது. பல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த வகை ஆடைகள் போதுமான அளவிற்கு சந்தையில் கிடைக்கிறது என்று யாஹு ஜப்பான் நிறுவனம் கூறுகிறது. ரியான் பாக்கெட் (Reon pocket) என்பது மிக உயர்ந்த வெப்பத்தை முறியடிக்க ஜப்பான் கண்டுபிடித்துள்ள கையில் எடுத்துச் செல்லக்கூடிய குளிர்சாதன வசதியுடைய மற்றொரு தொழில்நுட்பம்.
அணிந்து கொண்டிருக்கும் ஆடைக்குள் கழுத்தைச் சுற்றி பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சோனி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இந்த ஆடையின் முதல் மாதிரி 2019ல் வெளிவந்தது. ரியான் பாக்கெட்4 என்பது இதன் மிகப்புதிய மாதிரி. ஜப்பானில் இப்போது இவை மிக அதிக அளவில் விற்பனையாகின்றன.
இதில் சிறிய உணரியுடன் கூடிய குளிரூட்டும் வசதியை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம் (cool mode) உள்ளது. இந்த உணரிகள் பொருத்திக் கொண்டுள்ளவர்களின் நடத்தல் போன்ற செயல்பாடுகளை உணர்ந்து அதற்கேற்ப தங்கள் குளிரூட்டும் நிலையை (cooling leval) தானியங்கி முறையில் மாற்றிக் கொள்கின்றன. இது அணிபவருக்கு மேம்பட்ட சௌகரியத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் மின் கலத்தின் ஆயுள் கூடுகிறது.
இந்த நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு, வெயிலை சமாளிக்க ஜப்பானியர்களுக்கு கோடையில் பேய்க்கதைகள் சொல்லிக் கேட்கும் வழக்கம் இருந்து. இது வெப்பத்தில் இருந்து தப்ப உதவும். பேய்க் கதைகளைக் கேட்கும்போது பயம் தோன்றினால் இரத்தத்தை உடல் உள்ளுறுப்புகளுக்கு வேகமாக செலுத்தும்.
இந்த இரத்தம் அதிக அளவுக்கு தோலுக்கு அருகில் இருக்கும் இரத்தக்குழாய்களில் பாயும். இதனால் உடல் முழுவதும் வியர்வை பெருகும். இது உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும் என்று ஆய்வாளரும் விரிவுரையாளரும் பல்வேறு பருவநிலைகளில் ஜப்பான் மக்களின் கலாசாரம் பற்றி எழுதும் நிபுணருமான யசூகோ மியுரா (Yasuko Miura) கூறுகிறார்.
ஆபன் (Obon) என்ற கோடைகால புத்த மதத் திருவிழாவின்போது இரத்தத்தை உறைய வைக்கும் பேய்க் கதைகள் சொல்லப்படுவது வழக்கம். அந்தந்த பிராந்தியத்திற்கு ஏற்ப இத்திருவிழா ஜூலை அல்லது ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஜப்பான் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாங்கள் வாழ்ந்த மண்ணிற்கு வருவதாகக் கருதப்படும் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
ஈடோ வம்ச ஆட்சியில் தொடங்கிய பாரம்பரியம்
பல கதைகள் நிம்மதியில்லாமல் அலையும் ஆவிகளைப் பற்றியே கூறுகிறது. வரவேற்க, உபசரிக்க இந்த ஆவிகளுக்கு சொந்தபந்தங்களோ குடும்பமோ கிடையாது என்பதால் இத்திருவிழாவின்போது அவை வரவேற்கப்படுகின்றன, உபசரிக்கப்படுகின்றன. 1603-1867 காலகட்டத்தில் ஜப்பானை ஆண்ட ஈடோ (Edo) வம்ச ஆட்சியின்போது கோடையில் பேய்க் கதை சொல்லும் இந்த பாரம்பரிய விழா தொடங்கி இப்போதும் நடைபெறுகிறது.
இன்றும் பல இளம் வயதினர் இதன்படி இத்திருவிழாவை கடைபிடிக்கின்றனர். தங்கள் துணிச்சலை சுயமாக பரிசோதிப்பதற்காக சிலர் வெப்பம் மிகுந்த கோடைகால இரவில் கல்லறைகளுக்கு விஜயம் செய்கின்றனர்.
ஒரு பக்கம் கதை கேட்கும் விழா நடந்தாலும் உயர்ந்துவரும் வெப்பநிலையை சமாளிக்க நவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு உதவும் என்பதற்கு இந்த குளிரூட்டும் ஆடைகள் சிறந்த எடுத்துக்காட்டு.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்துடன் செல்லக்கூடிய சூப்பர்சானிக் விமானத்தை நாசா வடிவமைத்துள்ளது. அதிக ஓசையில்லாமல் பறக்கும் இந்த விமானத்தின் மூலம் வணிகரீதியிலான விமானப் போக்குவரத்தில் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நாசா ஆய்வாளர்கள் நம்புகின்றனர். லாக்ஹீட் மார்ட்டின்ஸ் கங்க் வொர்க்ஸ் (Lockheed Martin Skunk Works) என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து X-59 (X-59) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தை நாசா வடிவமைத்துத் தயாரித்துள்ளது.
இந்த விமானம் முதல்முறையாக சமீபத்தில் கலிபோர்னியா பாம்டேல் (Palmdale) என்ற இடத்தில் நடந்த நிகழ்வின்போது காட்சிப்படுத்தப்பட்டது. X-59 பரிசோதனை விமானம் ஒலியின் வேகத்தை விட 1.4 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும். இது 99.7 அடி அல்லது 30.4 மீட்டர் நீளம் உடையது. அகலம் 29.5 அடி. தட்டையாக்கப்பட்ட இதன் மூக்குப்பகுதி லேசானது. விமானத்தின் மொத்த நீளத்தில் இது மூன்றில் ஒரு பங்கு.இந்த வகை சூப்பர்சானிக் விமானங்கள் பறக்கும்போது பேரிரைச்சல் (supersonic boom) ஏற்படுவதால் உருவாகும் அதிர்வலைகளை சிதறடிக்கவே இந்த விமானம் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் சூப்பர்சானிக் பண்புகளை மேலும் மேம்படுத்த விமானிகள் அறை (cockpit) ஏறக்குறைய விமானத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற விமானங்களில் காணப்படுவது போல விமான முகப்பகுதியில் இருக்கும் சாளரங்கள் இதில் இல்லை.
“விமானத்தில் இருந்து எழும்பும் ஓசையைக் குறைக்கவே இவ்வாறு வடிவமைக்கப்பட்டது. வளர்ந்து வரும் விமானப் பொறியியல் துறையில் இது ஒரு மைல் கல். விமானிகள் அறையில் குறைவான காட்சிப்புலன் வசதியே இருக்கும் என்பதால் உயர் தர கேமராக்கள் பொருத்தப்பட்ட அதி நவீன திரைவசதியுடன் கூடிய வெளிப்புறக் காட்சிகளை துல்லியமாகக் காண உதவும் செயல்முறை (External Vision System) வசதி இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை இப்போது விமானங்களில் அவற்றின் முகப்பகுதியில் இருக்கும் சாளரங்களால் ஏற்படும் குறைபாடுகலை நீக்க உதவும். வருங்கால விமான வடிவமைப்பில் இது ஒரு முன் மாதிரியாகத் திகழும்” என்று விமானக் கட்டமைப்பில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி நாசாவின் துணை நிர்வாகி ஃபாம் மெல்ராய் (Pam Melroy) கூறினார்.
தலைக்கு மேல் பொருத்தப்பட்டுள்ள என்ஜின்
பறக்கும்போது அதன் பின்பக்கம் பெரும் சத்தத்தை எழுப்பக் காரணமாக இருக்கும் அதிர்வுகளைத் தடுக்க மென்மையான அடிப்பகுதியுடன் கூடிய என்ஜின் விமானத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது.
2024 இறுதியில் X-59 தன் சோதனை ஓட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. பிறகு இந்த விமானம் அமெரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மீது பறந்து செல்லும். அப்போது உருவாகும் ஒலி பற்றிய மக்கள் கருத்துகள் கேட்டறியப்படும். பல மைல்களுக்கு அப்பால் இருந்தே இவை பறக்கும்போது வெளிவிடும் பேரோசையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மக்கள் கவலை அடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஐம்பதாண்டுகளாக வணிகரீதியிலான சூப்பர்சானிக் விமானங்கள் அமெரிக்க நிலப்பரப்பின் மீது பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“X-59ன் ஆய்வகப் பரிசோதனைகள் அதிக ஓசை எழுப்பாத சூப்பர்சானிக் விமானத்தை வடிவமைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. என்றாலும் அன்றாடம் பறக்கும்போது நிலப்பகுதியில் இது எழுப்பும் ஒலியை மக்கள் கேட்டு தெரிவிக்கும் கருத்துகளைப் பொறுத்தே இதன் நிஜமான வெற்றி அமையும். மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அமெரிக்க அரசு மற்றும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பிடம் கூறப்படும். இதன் மூலம் இவை பறக்க உள்ள தடை விரைவில் அகலும்” என்று நாசா விமானப்பிரிவு ஆய்வுத்திட்ட இணை நிர்வாகி பாஃப் பியர்ஸ் (Bob Pearce) கூறுகிறார்.
“இதன் சோதனைப் பறத்தல் 2024 வசந்த காலம் அல்லது கோடையில் தொடங்கும். வடிவமைப்பில் பழுதுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை சரி செய்யப்படும். விமானத்தின் பகுதிகள் ஏதேனும் இயங்கவில்லை என்றால் அவை மாற்றப்படும். புதியவை பொருத்தப்படும். அதன் மூலம் விமானத்தின் நம்பகத் தன்மை, பாதுகாப்பு மற்றும் இது பறத்தலிற்கு உகந்தது என்பது உறுதி செய்யப்பட்டு பிறகு இதன் முதல் ஓட்டம் நடத்தப்படும்” என்று லாக்ஹீட் மார்ட்டின்ஸ் X-59 விமான ஆய்வுத் திட்ட இயக்குனர் டேவிட் ரிச்சர்ட்சன் (David Richardson) கூறுகிறார்.
இந்த முயற்சிகள் வெற்றி அடையும்போது அது விமானப் போக்குவரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இறந்தவர் உடலை நீர் வழி எரியூட்டும் முறை (Aquamation/ water cremation) உலகம் முழுவதும் இப்போது பிரபலமாகி வருகிறது. இறந்த பின் தன் உடல் எரிக்கப்படுவதை அல்லது பூச்சிகளால் அரிக்கப்படும் கல்லறைக்குள் புதைக்கப்படுவதை விரும்பாதவர்களுக்கு இந்த நீர் வழி சவ அடக்கமுறை ஒரு மாற்று வழியாக அமையும் என்று நம்பப்படுகிறது.
ஒரு காரக்கரைசல் மூலம் வேதியியல் முறையில் மாற்றப்பட்ட, 160 டிகிரி வெப்பநிலையில் சூடாக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி இறந்த உடலை ஒரு பையில் வைத்து கரைக்கும் செயல்முறை இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இப்போது நடைமுறையில் உள்ளது. இது பைக்குள் எரியூட்டுதல் முறை (Boil in the bag) என்று அழைக்கப்படுகிறது. சடலங்களை அகற்றுவதற்கான திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள், கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. 2022ல் காலமான தென்னாப்பிரிக்காவின் ஆர்ச் பிஷப் டெஸ்மன் டூட்டூ (Archbishop Desmond Tutu) அவர்கள் தான் இறந்த பிறகு தன் உடல், சூழலிற்கு நட்புடைய விதத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கேற்ப, அவரது இறுதிச்சடங்கின்போது இந்த முறை உலகில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.
(An aquamation facility in Pretoria, South Africa)
என்றாலும் சடங்கின் முடிவில் உருவாகும் நீர்க்கரைசல் கழிவுநீருடன் கலக்க பாதுகாப்பானதா என்பதை அறிவதற்காக பரிசோதனைகள் நடத்தப்படும் சில இடங்களில் மட்டுமே இந்த முறை இப்போது நடைமுறையில் உள்ளது. இம்முறையில் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் மூலம் கார்பன் உமிழ்வினால் ஏற்படும் கார்பன் கால்தடத்தை (Carbon footprint) விட 50% குறைவு. முடிவில் இறந்தவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சுகின்றன.
சூழலிற்கு உகந்தது
சாதாரண முறையில் எரிக்கப்படும்போது கிடைக்கும் சாம்பலைப் போல இதிலும் அடக்கம் முடிந்தபின் மிச்சமிருக்கும் எலும்புகள் பொடியாக்கப்பட்டு கிடைக்கும் சாம்பல் இறந்தவருடைய குடும்பத்தாரிடம் கொடுக்கப்படுகிறது. இது இறந்த உடலிற்கும், சூழலிற்கும் உகந்தது (gentler on the body & kinder on the environment) என்று சூழலியலாளர்களால் வர்ணிக்கப்படுகிறது. வட கிழக்கு இங்கிலாந்தில் ஜூலியன் அட்கின்சன் (Julian Atkinson) என்ற முன்னாள் காஃபின் தயாரிப்பாளரால் இதற்கு உரிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் இம்முறையை இறுதிச் சடங்குகளுக்கான கோ-ஆப் (Co-op Funeral care) என்ற நிறுவனம் செயல்படுத்துகிறது. அப்பகுதியில் இருக்கும் நார்த்தம்ப்ரியன் (Northumbrian) நீர் மேலாண்மை அமைப்பு இந்த முறையின் முடிவில் உருவாகும் நீரை கழிவுநீருடன் கலக்க அனுமதி அளித்துள்ளது. அங்கு தொழிற்சாலைகளில் வணிகரீதியில் உருவாகும் கழிவுநீரை அகற்றுவதற்காக கொடுக்கப்படுவது போன்ற அனுமதியே இதற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் உருவாகும் கழிவுநீர் சாதாரண கழிவுநீரின் சுத்திகரிப்பை பாதிக்கவில்லை. இங்கிலாந்து மக்களிடையில் இந்த முறை பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது இதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இருந்து தெரியவந்தது. ஆனால் இம்முறையின் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டபோது மக்களில் மூன்றில் ஒருவர் அதாவது 29% பேர் இதற்கு ஆதரவளித்தனர்.
பரவலாகும்போது இந்த முறையில் தங்கள் உடல் அடக்கத்தை நடத்த விரும்புவதாக பலர் கூறினர். இந்த முறை நீர் வழி உடல் அடக்கம் (resomation/ aquamation) அல்லது காரக்கரைசல் வழி நீராற்பகுப்பு முறை (alkaline hydrolysis) என்று அழைக்கப்படுகிறது. பலர் மரணத்திற்குப் பிறகும் கார்பன் உமிழ்வைக் குறைக்க விரும்புகின்றனர். அதனால் இந்த முறை விரைவில் எல்லா இடங்களிலும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது நடைமுறையில் பின்பற்றப்படும் எரியூட்டல் முறையில் ஒருவரின் உடல் எரிக்கப்படும்போது 245 கிலோகிராம் கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது. இதன் வருடாந்திர அளவு இங்கிலாந்தில் ஆண்டிற்கு 115,150 டன். இது 65,000 வீடுகளுக்கு வழங்கத் தேவையான மின்னாற்றலிற்கு சமமான அளவு என்று சி டி எஸ் (CDS group) என்ற எரியூட்டல் தொடர்பான நிறுவனம் கூறுகிறது. சாதாரண முறையில் நடைபெறுவது போலவே இந்த முறையிலும் தொடக்கத்தில் சடங்குகள் சவப்பெட்டியில் வைத்து நடத்தப்படுகின்றன.
ஆனால் நீர் வழி அடக்கத்தில் சடலம் ஒரு கம்பளிப் போர்வையால் மூடப்பட்டு சோள ஸ்டார்ச்சில் இருந்து தயாரிக்கப்பட்ட மக்கக்கூடிய ஒரு பையில் (bio pouch) வைக்கப்படுகிறது. இது பிறகு 95% நீர் மற்றும் 5% பொட்டாசியம் ஹைட்ராக்சைடு நிரம்பிய அறையில் வைக்கப்பட்டு 160 டிகிரிக்கு சூடுபடுத்தப்படுகிறது. நான்கு மணி நேரம் கழித்து எலும்புகள் தவிர மற்ற பாகங்கள் இருந்த இடம் தெரியாமல் கரைந்திருக்கும். எல்லாம் முடிந்து கடைசியில் கிடைக்கும் கரைசலின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
இதில் டி என் ஏக்கள் எதுவுமில்லை என்பதும், கழிவுநீர் அகற்றும் இடங்களில் இதை கலப்பதால் பாதிப்பில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. பொட்டாசியம் கரைசல் இயற்கையான நீர்சுழற்சியுடன் கலக்கப்படுவதற்கு முன் அதன் பி ஹெச் (pH) சமநிலை மாற்றியமைக்கப்படுகிறது.
"சடலங்களை ஆரோக்கியம், நடைமுறை சாத்தியம், மனிதாபிமான முறையில் அகற்ற உதவும் முறைகளைக் கண்டறிய பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. இதில் இந்த முறை குறிப்பிடத்தக்கது” என்று டரம் (Durham) பல்கலைக்கழக இறையியல் மற்றும் மதம் தொடர்பான துறைகளின் பேராசிரியர் டக்லஸ் டேவிஸ் (Prof Douglas Davies) கூறுகிறார்.
1960களில் உடலை அடக்கம் செய்யும் முறை பிரபலமாக இருந்தது. இது இருபதாம் நூற்றாண்டில் மாறியது. எரியூட்டல் முறை பலராலும் விரும்பப்பட்டது. நீர் வழி அடக்கம் நடைபெறும் இடத்தின் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டிய ரஸல் டி டேவிஸின் (Russell T Davies) “ஆண்டுகள் கணக்கில்” (Years and years) என்ற 2019 பி பி சி குறுந்தொடருக்குப் பின் இந்த முறை மேலும் புகழ் பெறத் தொடங்கியது. மரணமடைந்த பிறகு இந்த முறையில் இறந்தவரின் உடலுக்கு சம்பவிக்கும் நிகழ்வுகளை இறுதிவரைக் காண முடியும். உடல் தசைகளும் மற்ற பகுதிகளும் ஒன்றும் இல்லாமல் கரைவதை பையில் நடக்கும் இந்த உடல் அடக்கம் காட்டுகிறது.
வாழ்ந்து முடிந்த பின்னரும் மனிதன் சூழலைப் பாதுகாக்க எவ்வாறு உதவலாம் என்பதை இந்த முறை உணர்த்துகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
கணினி சிப் - அல்லது செமிகண்டக்டர் - வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான சீனாவின் தேசிய சாம்பியன்களான HiSilicon மற்றும் Semiconductor Manufacturing International Corporation (SMIC), வாஷிங்டனில் தாக்கங்களை உருவாக்குகின்றன. SMIC நீண்ட காலமாக பின்தங்கியதாகக் கருதப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து சீன அரசாங்கத்திடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்ற போதிலும், அது தொழில்நுட்ப எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. ஆனால் அந்த கருத்து - மற்றும் அது அமெரிக்காவிற்கு அளித்த தன்னம்பிக்கை - மாறி வருகிறது.
ஆகஸ்ட் 2023 இல், Huawei அதன் உயர்நிலை Huawei Mate 60 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் படி (வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு அமெரிக்க சிந்தனைக் குழு), ஹைசிலிகானின் குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் SMIC இன் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் இருந்த ஒரு ஆபத்தான வேகம், சீனா தன்னிறைவு இருப்பதைக் காட்டிய இந்த வெளியீடு "அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தியது"
Huawei மற்றும் SMIC ஆகியவை புதிய ஷாங்காய் உற்பத்தி வசதிகளில் 5-நானோமீட்டர் செயலி சில்லுகள் என்று அழைக்கப்படுபவைகளை பெருமளவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன என்ற சமீபத்திய செய்திகள், அவர்களின் அடுத்த தலைமுறையின் வலிமையில் பாய்ச்சலைப் பற்றிய மேலும் அச்சத்தைத் தூண்டியுள்ளது. இந்த சில்லுகள் தற்போதைய அதிநவீன சில்லுகளை விட ஒரு தலைமுறை பின்தங்கிய நிலையில் உள்ளன; ஆனால் அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இன்னும் மேம்பட்ட சில்லுகளை உருவாக்கும் சீனாவின் நடவடிக்கை நன்றாக உள்ளது என்பதை அவை காட்டுகின்றன.சிப் வடிவமைப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்கா தனது தெளிவான நிலைப்பாட்டை நீண்ட காலமாகத் தக்க வைத்துக் கொண்டது. மேலும் அதிநவீன சில்லுகளின் உற்பத்தியில் நெருங்கிய கூட்டாளிகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் இப்போது அது சீனாவிடமிருந்து வலிமையான போட்டியை எதிர்கொள்கிறது. அதன் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆழ்ந்த பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு தாக்கங்களைக் கொண்டுள்ளது.
குறைக்கடத்திகள் ஒரு பெரிய வணிகமாகும்:
பல பத்தாண்டுகளாக , சிப்மேக்கர்கள் இன்னும் சிறிய தயாரிப்புகளை உருவாக்க முயன்றனர். சிறிய டிரான்சிஸ்டர்கள் குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் வேகமான செயலாக்க வேகத்தில் விளைகின்ற. எனவே மைக்ரோசிப்பின் செயல்திறனை பெருமளவில் மேம்படுத்துகிறது.
மூரி(Moore) ன் விதி - மைக்ரோசிப்பில் உள்ள டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இரட்டிப்பாகும் என்ற எதிர்பார்ப்பு - நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட மற்றும் கொரியா மற்றும் தைவானில் தயாரிக்கப்பட்ட சிப்களில் செல்லுபடியாகும். எனவே சீன தொழில்நுட்பம் பல ஆண்டுகள் பின்தங்கியே உள்ளது. உலகின் எல்லையானது 3-நானோமீட்டர் சில்லுகளுக்கு மாறியுள்ள நிலையில், Huawei இல் தயாரிக்கப்பட்ட சிப் 7 நானோமீட்டரில் உள்ளது.
பொருளாதார மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தூரத்தை பராமரிப்பது முக்கியமானது. குறைக்கடத்திகள் நவீன பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அவை தொலைத்தொடர்பு, பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியமானவை.
"அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட" குறைக்கடத்திகளுக்கான அமெரிக்க உந்துதல் இந்த முறையான முக்கியத்துவத்துடன் தொடர்புடையது. சிப் பற்றாக்குறை உலகளாவிய உற்பத்தியில் அழிவை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவை சமகால வாழ்க்கையை வரையறுக்கும் பல தயாரிப்புகளுக்கு சக்தி அளிக்கின்றன.
இன்றைய இராணுவ வலிமை நேரடியாக சிப்களை நம்பியுள்ளது. உண்மையில், மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின்படி, "அனைத்து முக்கிய அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தளங்கள் குறைக்கடத்திகளை நம்பியுள்ளன."
சீனாவில் தயாரிக்கப்பட்ட சில்லுகளை நம்பியிருப்பதும் - பின்கதவுகள் வழியான வியாபாரம் மற்றும் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடு ஆகியவை வாஷிங்டனுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
சீனாவின் சிப் தொழில்துறையை முடக்குவது
1980களில் இருந்து, தென் கொரியா மற்றும் தைவான் ஆதிக்கம் செலுத்தும் சிப் உற்பத்தியின் விநியோகத்தை நிறுவவும் பராமரிக்கவும் அமெரிக்கா உதவியது. ஆனால் அமெரிக்கா சமீபகாலமாக தனது சொந்த உற்பத்தித் திறனை உயர்த்தி அதன் தொழில்நுட்ப மேலாதிக்கத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க முயன்றது.
பெரிய அளவிலான தொழில்துறை கொள்கையின் மூலம், அரிசோனாவில் உள்ள பல பில்லியன் டாலர் ஆலை உட்பட, அமெரிக்க சிப் உற்பத்தி வசதிகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் கொட்டப்படுகின்றன.
இரண்டாவது முக்கிய நடவடிக்கை விலக்கி வைப்பது. அமெரிக்க வெளிநாட்டு முதலீட்டிற்கான குழு பல முதலீடு மற்றும் கையகப்படுத்தல் ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்ய உட்படுத்தியுள்ளது. இறுதியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் சிலவற்றையும் தடுக்கிறது. பிராட்காம் அதன் சீனா இணைப்புகள் காரணமாக 2018 இல் Qualcomm ஐ வாங்குவதற்கான முயற்சியின் உயர்மட்ட வழக்கும் இதில் அடங்கும்.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கம் சீனாவிற்கு மேம்பட்ட குறைக்கடத்தி உற்பத்தி உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் ஒரு நிர்வாக ஆணையை வெளியிட்டது. கடுமையான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், முக்கியமான கூறுகளுக்கு சீனாவின் அணுகலைத் தடுப்பதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது.
HiSilicon மற்றும் SMIC ஆகியவை எல்லையில் தன்னிறைவை அடைய முயற்சிக்கும் போது தடுமாறும் என்பது கருதுகோள். சீனாவுக்கான சிப் ஏற்றுமதியைத் தவிர்த்து, ஒரு ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க அமெரிக்க அரசாங்கம் தனது நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒரு முன்னணி டச்சு வடிவமைப்பாளரான ASML, அமெரிக்காவின் கொள்கையின் காரணமாக சீனாவிற்கு தனது ஹைடெக் சிப்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன், சீன செமிகண்டக்டர் தொழிலுக்கு திறன் படைத்தவர்கள் நகர்வதை தடுத்துக் கொண்டுள்ளது. ஜப்பான், கொரியா மற்றும் தைவானில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் "காட்ஃபாதர்கள்" கூட சீன சிப்மேக்கர்களுக்காக வேலை செய்தனர் - அவர்களின் அறிவு மற்றும் தொடர்புகளை எடுத்துக்கொள்வதன் மூலம் திறமைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் உந்துதல் பெற்றன.
இதுவும், அமெரிக்காவில் அதிகமான செமிகண்டக்டர் திறமையின் தேவை பற்றிய தொடர்ச்சியான தலைப்புச் செய்திகளும், அமெரிக்கத் திறமைகளின் வெளிச்செல்லும் தடையைத் தூண்டிவிட்டன.
இறுதியாக, அமெரிக்க அரசாங்கம் சீனாவின் தேசிய சாம்பியன் நிறுவனங்களான Huawei மற்றும் SMIC ஆகியவற்றை வெளிப்படையாக குறிவைத்துள்ளது. இது 2019 இல் Huawei இலிருந்து உபகரணங்களின் விற்பனை மற்றும் இறக்குமதியைத் தடைசெய்தது. மற்றும் 2020 முதல் SMIC மீது தடைகளை விதித்துள்ளது.
எது ஆபத்தில் உள்ளது?
"சிப் போர்" என்பது பொருளாதார மற்றும் பாதுகாப்பு மேலாதிக்கம் பற்றியது. தொழில்நுட்ப எல்லைக்கு பெய்ஜிங்கின் ஏற்றம் என்பது சீனாவிற்கு பொருளாதார ஏற்றம் மற்றும் அமெரிக்காவிற்கு பேரழிவைக் குறிக்கும். மேலும் இது ஆழ்ந்த பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தும்.
பொருளாதார ரீதியாக, ஒரு பெரிய குறைக்கடத்தி வீரராக சீனாவின் தோற்றம், தற்போதுள்ள விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, உலகளாவிய மின்னணுவியல் துறையில் தொழிலாளர் பிரிவினை மற்றும் மனித மூலதனத்தின் விநியோகத்தை மறுவடிவமைக்கலாம். பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், சீனாவின் எழுச்சியானது, முக்கியமான உள்கட்டமைப்பில் சமரசம் செய்ய அல்லது இணைய உளவுப் பணியை நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சீனத் தயாரிக்கப்பட்ட சிப்களில் உள்ள பாதிப்புகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் சீன தன்னிறைவு தைவானின்"சிலிக்கான் கவசத்தின் மதிப்பினை குறைக்கும். செமிகண்டக்டர்களின் முன்னணி உற்பத்தியாளராக தைவானின் அந்தஸ்து, அதனை தாக்குவதற்கு சக்தியைப் பயன்படுத்துவதிலிருந்து இதுவரை சீனாவைத் தடுத்துள்ளது.
சீனா தனது குறைக்கடத்தி திறன்களை மேம்படுத்தி வருகிறது. பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு தாக்கங்கள் ஆழமானதாகவும், தொலைநோக்கு உடையதாகவும் இருக்கும். இரண்டு வல்லரசுகளும் எதிர்கொள்ளும் பாத்திரத்தினை பொறுத்தவரை, வாஷிங்டன் எளிதில் பணியவும் செய்யாது அல்லது பெய்ஜிங்கும் கைவிடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க முடியும்.
நன்றி: The Conversation, பிப்ரவரி 13, 2024
தமிழில்: இரா.ஆறுமுகம்
- காடுகளைக் காக்க லைடார் தொழில்நுட்பம்
- பீங்கான் தொழில்நுட்பம்
- ஆகாயத்தின் கண்களும் அறிவின் தேடலும்
- சமூக வலைத்தளங்களில் 2FA (Two - Factor Authentication) பாதுகாப்பா? வணிகமா?
- தேடல் இயந்திரத்தின் செயற்கை நுண்ணறிவு
- மெட்டாவெர்ஸ் - இணையத்தின் எதிர்கால வடிவம்
- உங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம்
- மரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு
- போயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன?
- பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்
- ஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்?
- Facial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்
- ஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு
- 'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம்
- தகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்
- எதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers
- அறிவியல் பிரச்சாரம் செய்வோம்...!
- இது யாரு பண்டிகூட்டா? - டிஜிட்டல் பெருச்சாளி
- நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்