 |
ஞாநி
தலைவர்களே பதில் சொல்லுங்கள்!
முதலில் ஜெயலலிதாவுக்கு நன்றி. பொதுவாழ்க்கையில் இருப்பவர்களின் தனி மனித ஒழுக்கத்தை விவாதப் பொருள் ஆக்கியிருப்பதற்காக. இந்த விவாதம் தொடரவேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. 'விஜய்காந்த் எப்போதும் குடி போதையில் மிதந்து கொண்டி ருப்பவர்' என்று ஜெயலலிதாவும், 'குளுகுளு அறையில் உட்கார்ந்து குடிப்பவர் ஜெயலலிதா' என்று விஜயகாந்தும் தற்போது நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.
மதுவிலக்கு அமலில் இல்லாத தற்போதைய தமிழகச் சூழலில், யார் மது குடித்தாலும் அது சட்டப்படி குற்றம் அல்ல! டாக்டர், இன்ஜினீயர், வழக்கறிஞர், ஆடிட்டர், விஞ்ஞானி, நீதிபதி, மாணவர், பத்திரிகையாளர், நடிகர், விவசாயி எல்லாரும் மது குடிக்கலாம் என்றால், அரசியல்வாதி மட்டும் மது குடிக்கக் கூடாதா என்ன? சட்டப்படி எந்தத் தடையும் இல்லை. குடித்துவிட்டு பொது ஒழுங்குக்கு விரோதமாக நடந்துகொண்டால் மட்டுமே தண்டிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.
குடித்துவிட்டு வண்டி ஓட்ட வேண்டாம்; குடித்துவிட்டு தொழிற்சாலைக்கு வரவேண்டாம்; அதுபோல குடித்துவிட்டு சட்டமன்றத்துக்குச் செல்ல வேண்டாம் என்று ஜெயலலிதா சொன்னால், அதை யாரும் ஆட்சேபிக்க முடியாது. குடிக்கவே வேண்டாம் என்று அவர் அறிக்கையில் சொன்னதாகத் தெரியவில்லை.
குடிப்பது சட்டப்படி தவறு அல்ல என்று தமிழ்நாட்டில் ஆக்கியவர்தான் இப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். எழுபதுகள் வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. தன் வழக்கமான மொழி ஜாலத்தில் தமிழகத்தைச் சுற்றிலும் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் எங்கும் மதுவிலக்கு இல்லாததைச் சுட்டிக்காட்டி, 'நெருப்பு வளையத்துக்கு நடுவே கற்பூரம்' போல தமிழகம் இருப்பதாக அன்று சொன்னார் கருணாநிதி. தமிழகக் கற்பூரமும் போதை ஜோதியில் கலந்து எரிந்து போகட்டுமே என்று மதுவிலக்கை நீக்கி, மது என்றால் என்னவென்றே ஒரு தலைமுறையாகத் தெரியாதிருந்த தமிழகத்தில் அதைப் பரவலாக்கியவர் அவர். அண்ணா பெயரை உச்சரித்தபோதும், அவரை விட அதிகமாக கருணாநிதியின் வழிகளையே பின்பற்றி வந்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளில் மது வியாபாரிகளும் ஆலை அதிபர்களும் மேலும் தழைத்தார்கள் என்பது வரலாறு.
இவற்றின் விளைவால் இன்று தமிழ்நாடெங்கும் அடுத்த தலைமுறைக்கு குடிப்பழக்கம் சர்வ சாதாரண விஷயமாக மாறிக் கொண்டிருக்கிறது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அ.கி.வேங்கடசுப்பிரமணியன் தொகுத்த ஒரு புள்ளிவிவரத்தைப் பார்த்தால் மேற்படி வாக்கியம் மென்மையானதாகவே தோன்றும். இந்தியா முழுவதும் கோகோ கோலா, பெப்சி இரண்டின் எல்லா வகைக் குளிர் பானங்களின் மொத்த விற்பனைத் தொகை 7,000 கோடி ரூபாய்தான். மது விற்பனையோ தமிழகத்தில் மட்டுமே 7,335 கோடி ரூபாய் (வெளிக் கடைகளோடு ஒப்பிடும்போது பார்களில் விற்பனையாகும் குளிர்பானங்களின் விற்பனை எவ்வளவு என்று ஒரு கணக்கெடுத்தால் அது இன்னொரு புயலைக் கிளப்பும்!). தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி விற்பனை அளவுகூட சுமார் 700 கோடி ரூபாய்தான்!
மது விற்பனைத் தொகையான 7,335 கோடி ரூபாயில் தமிழக அரசுக்கு வருவாயாகக் கிடைப்பது மட்டும் 6,087 கோடி ரூபாய். பெரும்பாலும் ஏழை மக்களின் குடிப்பழக்கத்திலிருந்து அரசுக்குக் கிடைக்கும் இந்த வருவாய் பற்றிப் பேச எந்த அரசியல் கட்சிக்கும் அக்கறையில்லை. காரணம் என்ன? ஏழைகளைக் கடுமையாகப் பாதிக்கும் விஷயங்களில் அவை அக்கறை காட்டத் தயாராக இல்லை. அதேசமயம் போலியான ஒழுக்கவாதிகளாக தங்களை சித்திரித்துக் கொள்ளவும் தவறுவதில்லை.
அரசியலில் தனி நபர் ஒழுக்கத்துக்கான இடம்தான் என்ன? குடிப்பது, பல பெண்கள் (அல்லது ஆண்கள்) தொடர்பு வைத்திருப்பது போன்றவை மட்டுமே தனி வாழ்க்கையின் பெரும் ஒழுக்க மீறல்களாக இங்கே கருதப்படுகின்றன. ஒரு தனி நபரின் லஞ்சம் வாங்கும் ஆவல், அதற்காக ஊழல் செய்யும் புத்திசாலித்தனம், எதிர்ப்போரை சமாளிக்க கையாளும் ரவுடித்தனம் எல்லாம் அந்த அளவு ஒழுக்க மீறல்களாக இன்னமும் கருதப்படவில்லை. குடியும் பாலுறவுமே பெரும் ஒழுக்கக் கேடுகளாக நினைக்கிறது தமிழ் மனம்.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் நிலவும் ஜனநாயக அமைப்பில் எத்தனையோ கோளாறுகள் இருந்தாலும், பெரும் பதவிகளில் இருப்பவர்களின் தனி நடத்தை தொடர்ந்து விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். பதவியில் இருப்பவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் ஏன் அப்படி, என்ன நோய் என்பது கூட இங்கே நமக்குத் தெரியாது; தெரிவிக்கப்படுவதில்லை. ஆனால் அங்கே சிறிய அறுவை சிகிச்சைக்கு சென்றால் கூட விவரமான மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
பில் கிளின்ட்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜனாதிபதி மாளிகையின் கீழ்மட்ட தற்காலிக ஊழியரான மோனிகாவுடன் கொண்ட உறவு பற்றிய சர்ச்சை, இம்பீச்மென்ட் முயற்சி வரை சென்றது. இத்தனைக்கும் அப்போது மோனிகாவுக்கு அரசு வேலையிலோ, கான்ட்ராக்ட்டிலோ முறைகேடாகச் சலுகை காட்டி, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக கிளின்ட்டன் மீது ஒரு குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே அங்கே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இங்கேயோ அத்தகைய எதிர்பார்ப்பு மட்டும் மக்களிடம் அவ்வப்போது தலைதூக்குகிறது. ஆனால், அதற்கான நடைமுறைகள் இல்லை. எடுத்துக்காட்டாக தற்போது சர்ச்சையில் இருக்கும் மதுப் பழக்கத்தையே எடுத்துக் கொள்வோம்.
குடிப்பது சட்டப்படி சரி என்ற நிலையை தமிழக அரசு எடுத்துள்ள சூழலில், அந்த அரசை தம் வசப்படுத்த விரும்பும் அரசியல் தலைவர்கள் குடிப் பழக்கத்தைப் பற்றி என்ன பார்வை கொண்டிருக்கிறார்கள்?
கீழ்வரும் ஆறே ஆறு கேள்விகளுக்கு நேர்மையான பதில்களை நமது அரசியல் தலைவர்கள் தருவார்களா? ஒழுக்கப் பிரச்னைகளிலேயே மிகவும் மென்மையானது மது விஷயம். இதற்குப் பதில் சொன்னீர்களென்றால், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக கற்பு, பாலுறவு, திருமணம் பற்றிய விவாதங்களுக் கெல்லாம் அரசியல் களத்தைத் தயார் செய்ய நகர்த்திக் கொண்டு போகலாம்-
இதோ அந்தக் கேள்விகள் :
உங்களுக்கு மதுப் பழக்கம் உண்டா ?
ஆம் எனில், சராசரியாக ஒரு மாதத்தில் எத்தனை முறை குடிப்பீர்கள்? எவ்வளவு பணம் செலவிடுகிறீர்கள்?
ஆம் எனில், மதுப் பழக்கத்தினால் உங்கள் உடல் நலத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உங்கள் மருத்துவர்கள் தெரிவித்தது உண்டா?
குடிப்பது இல்லை எனில், மற்றவர்கள் குறிப்பாக தமிழகத்தின் பெருவாரியான ஏழை மக்கள் குடிப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
விஸ்கி, பிராந்தி போன்ற உயர்விலை மதுவகைகளுக்கு மட்டும் அனுமதி தந்துவிட்டு கள், சாராயம் போன்ற மலிவு விலை வகைகளை தடை செய்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பூரண மதுவிலக்கை ஆதரிப்பீர்களா? அல்லது பூரண மதுத் திறப்பை ஆதரிப்பீர்களா?
தமிழ்ச் சமூகத்தின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அரசியல் தலைவர்களே, உங்களுடைய நேர்மையான பதில்களுக்காக தமிழகமே காத்திருக்கிறது.
(ஜூனியர் விகடன் 1-11-2006)
|