 |
அ.ராமசாமி
ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்
மகாத்மாவுக்காகக் காத்திருத்தல் ஆர்.கே. நாராயணன் எழுதிய கதையின் பெயர். 10-10-1906 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு இந்த மாதத்தில் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் என்பதாக அறியப்பட்ட ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் பிறப்பால் தமிழர். ஆனால் வாழ்ந்தது கர்நாடகத்தில். அவரது பெரும்பாலான கதைகளின் களனாக இருக்கும் மால்குடி என்ற புனைவு நகரம் கூட கர்நாடகக் கிராமங்களின் சாயலையும் இந்திய நகரங்களின் பொதுத் தன்மையையும் கொண்டது என்றே சொல்லலாம். எளிய வாழ்க்கையை வாழும் இந்திய மனிதர்களின் ஆன்ம பலத்தையும், அறியாமையின் பலவீனத்தையும் ஆங்கிலத்தில் எழுதி உலகத்திற்குச் சொன்னவர். எளிய மனிதர்களை எழுதுவதற்கேற்ற எளிமையான ஆங்கிலத்தை தனது படைப்பு மொழியாகக் கொண்டார் என்பதுதான் அவரது பலம். 35 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுள்ள ஆர்.கே.நாராயணனைப் பலரும் பல கதைகளுக்காகப் பாராட்டுவார்கள். ஆனால் நான் அவரை நான் நினைத்துக் கொள்வது மகாத்மாவுக்காகக் காத்திருத்தல் (Waiting for Mahatma) என்ற தலைப்புக்காகவும் அப்புனைகதை எழுப்பிய விசாரணைகளுக்காகவும் தான்.
ஆர்.கே.நாராயணனின் மகாத்மாவுக்குக் காத்திருத்தல் என்ற தலைப்பும் நூலும் நினைவுக்கு வரும்போது கூடவே ஐரிஷ் நாடக ஆசிரியர் சாமுவேல் பெக்கட் எழுதிய கோதாவுக்குக் காத்திருத்தல் (Waiting for Godat) என்ற நாடகமும் நினைவுக்கு வரும். குழந்தைமைப் பருவத்தைக் கடந்தவுடன் ஒழுக்க விதிகளுக்குள் அகப்படும் மனிதன் ஒவ்வொரு நாளையும் கடப்பது கடவுள் தரப்போகும் கடைசித் தீர்ப்புக்காகத்தான் என்பதைக் குறியீடாகக் காட்டும் அந்த நாடகத்தை எழுதிய பெக்கட் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர். கடைசித் தீர்ப்பு நாள் அல்லது நியாயத் தீர்ப்பு நாள் என்பது கிறித்தவ மத நம்பிக்கை சார்ந்த ஒரு தொன்மம். ஒவ்வொரு கணத்தையும் நிமிடங்களையும் தனக்காக வாழ்வதாக நம்பும் மனிதன் அப்படி வாழ்வதாக நம்புவது ஒரு மாயைதான்; உண்மையில் ஒவ்வொரு நாளையும் மனிதன் கடவுள் வழங்கப் போகும் பரலோக ராஜ்ஜியம் என்னும் கொடை வாழ்வு அல்லது நரகமெனும் தண்டனை வாழ்வு என்பதை நினைத்து நினைத்துக் குற்றவுணர்ச்சிக்குள்ளும் பெருமித உணர்வுக்குள்ளூம் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நல்லன செய்தல் உங்களால் முடியாது என்றால் அல்லன செய்யாமல் இருங்கள் என்று வள்ளுவர் போன்றவர்கள் சொன்னது கூட கிடைக்கப் போகும் பேறு பற்றி நினைவூட்டத்தான்.
ஆர்.கே.நாராயணனையும் சாமுவேல் பெக்கட்டையும் இங்கே நினைத்துக் கொண்டது அவர்களின் தலைப்புக்காகத் தான். ‘கலைஞர்கள் சேர்ந்து கலைஞருக்கு நடத்தும் விழா’வைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது தோன்றிய வாக்கியம் தான் ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல் என்பது. எண்ணிக்கையில் ஒரு நூறுக்கும் மேலாக இருக்கும் தமிழ் நடிகர்களுக்குள் ஒரு கலைஞன் இருக்கக் கூடும் என்று காத்திருந்தன எனது கண்கள். ஆனால் எனது கண்களுக்குக் கிடைத்தன எல்லாம் அயர்ச்சி ஊட்டும் ஆட்டங்களும் அலுக்காத பாராட்டுரைகளும் தான். அவர்கள் வெளிப்படுத்தியனவற்றில் ஐந்து சதவீதப் புதுமைகளாவது இருந்ததா என்றால் அதுவும் இல்லை. எல்லாம் நகல்கள் தான். திரைப்படம் பார்க்கும் போதே மனப் பிறழ்ச்சிகளைத் தரவல்ல ஆட்டங்களைத் திரும்பவும் நகலெடுத்து தமிழ்நாட்டின் முதல்வர் முன்னிலையில் ஆடிக் காட்டினார்கள். எழுதிக் கொடுத்த வசனங்களையும் சொல்லிக் கொடுக்கும் பாவனைகளையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட நமது நடிகர்களிடம் படைப்பாக்க மனநிலையை எதிர்பார்ப்பதும், கலைஞனின் தார்மீக குணத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதும் அதிகப்படியான ஆசைதான். நடிகர்களை விட்டு விடலாம். எழுத்து சார்ந்த நபர்களுக்குள் ஒரு பொறுப்பான கலைஞன் இருப்பான் என எதிர்பார்ப்பது அதிகபட்ச எதிர்பார்ப்பு அல்லவே.
தனி மனித வாழ்வின் சிடுக்குகளையும், சமூக வெளியில் தனிமனிதர்கள் சந்திக்கும் தடைகளையும், தடைகளை உருவாக்கும் நிறுவனங்களே தொடர்ந்து இயங்க முடியாமல் கட்டிதட்டிப் போனவைகளாக அர்த்தமிழக்கும் காரணிகளையும் பேச வேண்டியவர்கள் அல்லவா எழுத்துக் கலைஞர்கள். தமிழ்த் திரைப்படத்துறைக்குள் இயக்குநர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள் என ஒரு நூறுக்கும் குறைவாக இருக்கும் எழுத்து சார்ந்த நபர்களில் ஒருவராவது ‘எனது ஆளுமை கலை சார்ந்தது’ என்று நிரூபிக்கும் விதமாக ஒரு படைப்பு மனநிலையை அந்த மேடையில் வெளிப்படுத்தக் கூடும் என எதிர்பார்த்த போது அத்தனை பேரும் தந்ததென்னவோ ஏமாற்றம் தான். பாராட்டுரை என்பதைத் துதி பாடுதல் என்பதாகத் தமிழ்த் திரையுலகம் மாற்றிக் கொண்டிருந்த வேலையில் இன்னொன்றும் நடந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதே திரையுலகம் எடுத்த பாராட்டுரைக் காட்சிகளும் பேச்சுக்களும் பார்க்கக் கிடைத்தன. ஆழ்ந்த யோசனைகளின் வெளிப்பாடாகவும், உணர்ச்சியுரைகளின் தொகுப்பாகவும், சிந்தித்து எழுதிய கவிதைத் தொடர்களாகவும், கச்சிதமாக வாசிக்கப்பட்ட வார்த்தைகளாகவும் மேடையேறிய திரையுலகப் பிரபலங்களின் ஆளுமைகளும், பட்டங்களும், சமூகப் பார்வைகளும், உண்டாக்கிக் காக்கப்பட்ட பிம்பங்களும் அந்தக் கணத்திலேயே அர்த்தங்களை இழந்து அபத்தங்களாக ஆகிக் கொண்டிருந்தன.
தன்னிலை உணர்வு, படைப்பாக்கத் திறன், சமூகப் பொறுப்பு, நம்பும் ஒன்றைச் சொல்லத் தயங்காத ஆன்மபலம், சொன்னதைத் தனது வாழ்வின் வெளிப்பாடாகக் கொள்ளுதல் என விரியும் கலைஞனின் அடையாளத்தைப் பணம், ஆடம்பர வாழ்க்கை, அதிகாரம் என அலையும் தமிழ்த் திரைப்பட உலகத்தினரிடம் எதிர்பார்ப்பது சரியில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான், யாராவது ஒருவர் தனது அடையாளம் கூட்டத்தின் அடையாளம் அல்ல; தனித்த அடையாளம்; அது கலைஞனின் அடையாளம் என வெளிப்படுத்தி விடுவார்கள் என எதிர்பார்ப்பதுதானே மனித வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது. எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கை அல்லவா? இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல வந்து நின்றது சாமுவேல் பெக்கட்டின் நாடகத்தலைப்பு. கோடாவுக்குக் காத்திருத்தல் என்ற தலைப்பையும் அந்த நாடகம் ஐரோப்பிய வாழ்க்கையில் உண்டாக்கிய தாக்கமும், தத்துவ விசாரணைகளும் காட்சிகளாக விரிந்து கொண்டிருந்த போது எளிய இந்திய மனிதர்களை எழுதிக் காட்டிய ஆர்.கே. நாராயணனும் வந்து சேர்ந்து கொண்டார், தனது மகாத்மாவுக்காகக் காத்திருத்தல் என்ற தலைப்புடன்.
தமிழக மக்களுக்குப் பொழுதுபோக்கு அம்சத்துடன் கலையுணர்வைத் தருகிறோம் என்ற பெயரில் அவர்களின் தன்னிலையை மறக்கச் செய்யும் போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது திரையுலகம். எளிய மனிதர்களின் உழைப்பில் கிடைக்கும் பணத்தை அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும்போதே திருடும் கூட்டமாக இருக்கிறோம் என்ற தன்னுணர்வின்றி கிடைப்பதெல்லாம் லாபம்; லாபமெல்லாம் எங்கள் உழைப்பின் பலன் எனக் கருதுவது நமது திரையுலகம். அதற்குள் இருக்கும் ஒவ்வொரு நபரும் இந்த எண்ணத்தோடு தான் இயங்குகிறார்கள். விதி விலக்குகள் உண்டா என்று தேடுவதும், கலைஞன் என ஒருவன் அதற்குள் இருக்கிறானா எனத் தேடுவதும் ஒன்றுதான்.
தாங்கள் செய்வது சுரண்டுதலின் இன்னொரு வடிவம் என்பதை உணர்ந்து கொண்ட ஒரு மனிதன் திரைப்பட உலகத்தில் இருந்தால் முதலில் அதனை ஒத்துக் கொண்டு வெளி வர வேண்டும். நாங்கள் படம் தயாரிக்கிறோம்; அதற்குத் தமிழில் பெயரிடுவது எனது சொந்த அடையாளத்தின் வெளிப்பாடு; அதற்காகச் சலுகை அளிப்பதும், அதனைப் பெறுவதும் எனக்கு உவப்பானதல்ல என்று சொல்லவாவது செய்ய வேண்டும்; அதுதான் குறைந்த பட்ச நேர்மையாக இருக்கும். ஏற்பதற்குக் காட்டும் விருப்பத்தைப் போல, நிராகரிப்பதற்கும் தயாராக இருப்பதுதான் கலைஞனின் வெளிப்பாடு. உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசை - இந்திய அளவில் மதிப்புடைய பத்ம விருதுகளை - மறுத்தவர்களையும், திருப்பி அனுப்பியவர்களையும் வரலாறு தனது பக்கங்களில் எழுதி வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கலைஞனைத் தமிழ் உலகம் எப்பொழுது உருவாக்கித் தரும்..?
முன்னாள் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவிலும் இந்நாள் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளாத நடிகர்களும் இயக்குநர்களும் பிரபலங்களும் பலர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்தது தான். அப்படிக் கலந்து கொள்ளவில்லை என்று ஒதுங்கி இருப்பதுவே கலைஞனின் அடையாளம் ஆகிவிடாது. மௌனம் என்பது சகிப்பின் அடையாளமாகவும் இருக்கக் கூடும். ஏற்பதைவிடச் சகித்துக் கொள்வதே அதிக ஆபத்தானது.
|