 |
ஞாநி
கண்ணாலே நான் கண்ட கனவு.....
நான் கண்ணாடி போட ஆரம்பித்ததன் பொன்விழாவை இன்னும் ஏழாண்டுகளில் கொண்டாட இருக்கிறேன். ஒன்பது வயதில் கண்ணாடி அணியவேண்டி வந்தபோது எங்கள் பள்ளிக் கூடத்திலேயே கண்ணாடி அணிந்த ஒரே சிறுவன் நான்தான். அதற்காக சலுகையாக என்னை மாடியில் இருந்த செக்ஷனிலிருந்து தரைத் தள வகுப்புக்கு மாற்றினார்கள்.
ஆரம்பத்திலேயே என் கண்ணாடி அசல் சோடா புட்டிதான். மைனஸ் ஒன்பது. ஒரு சில வருடங்கள் கழித்து குடும்பச் சிக்கல்களினால் புதுக் கண்ணாடி வாங்க முடியவில்லை. சுமார் இரண்டு வருடங்கள் கண்ணாடி இல்லாமல் இருந்தேன். பார்வை இன்னும் சிக்கலானது. பின்னர் கண்ணாடி அணிந்தும் கூட சரியாகத் தெரியாமல், என்னை மாடு முட்டுவதற்கு பதில் நான் அதைப் போய் முட்டியிருக்கிறேன். அது எனக்கு பயந்து விலகியதால் காயங்கள் இல்லாமல் தப்பித்தேன். கல்லூரி முடிக்கும் சமயத்தில் கண்ணாடியின் தடிமன் மைனஸ்13ஐத் தாண்டிவிட்டது. பத்திரிகையாளனாகப் பணியாற்றிய முதல் சில வருடங்களிலேயே மைனஸ் 16ஐத் தொட்டது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் ஏற்படும் கண் மாற்றங்களினால் இப்போது மீண்டும் மைனஸ் 13ல் இருக்கிறேன். இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியினால் என் கண்ணாடி சோடா புட்டி மாதிரி இல்லாமல் பெப்சி புட்டி மாதிரி மெல்லியதாக ஆகியிருக்கிறது.
மாலை நேரங்களில், வெளிச்சம் குறைவான சென்னை, மும்பைத் தெருக்களில் என் கால்களே கண்களாக இயங்குகின்றன. உச்சி வெயில் நேரத்திலும் மூன்றடிக்கு அப்பால் இருக்கும் முப்பது வருட காலப் பழக்கமுள்ளவரைக் கூட எனக்கு அடையாளம் தெரியாது. நிழல் உருவங்களாக வாட்டர் கலர் ஓவியங்களாகவே தெரிவார்கள். ஓயாமல் படிப்பதையும் கம்ப்யூட்டரில் எழுதுவதையும் நிறுத்திக் கொள்ளாவிட்டால் பார்வை இன்னும் வேகமாகக் குறைந்து விடும் என்று ஒரு மருத்துவர் சில மாதங்கள் முன்பு எச்சரித்தார். எழுதுவதை நிறுத்திவிட்டால் அதைக் கொண்டாடி ஓ போட பலர் காத்திருக்கிறார்கள். படிப்பதை எப்படி நிறுத்த முடியும் ? படித்த பிறகு தோன்றுவதை எழுதாமல் எப்படி இருக்க முடியும் ?
முழுப் பார்வையும் போய்விட்டால் எப்படிப் படிப்பது என்ற கவலை எனக்கு எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. படித்துக் காட்டுவதற்கு இன்னொருவரை ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி எனக்கு இல்லை. ஒருவேளை பார்வை முற்றிலுமாகப் போய்விட்டால், நானாவது ஐம்பது ஆண்டுகள் படித்த சந்தோஷத்தில் எஞ்சிய நாட்களை இசையின் உதவியுடன் கழித்துவிடலாம் என்று சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆரம்பத்திலிருந்தே பார்வை இல்லாமல், படிக்கிற வாய்ப்பை இழந்திருந்தால் ? யோசிக்கவே பயமாக இருக்கிறது.
அப்படி இழந்தவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். உலகத்திலேயே பார்வையற்றவர்கள் மிக அதிகமாக இருக்கும் நாடு நமது நாடுதான். உலகத்தின் மொத்த நான்கு கோடி பார்வையற்றோரில் ஒரு கோடி பேர் இந்தியர்கள். இதில் 25 லட்சம் பேர் மாற்றுக் கார்னியா பொருத்தப்பட்டால் பார்வை பெறும் நிலையில் இருப்பவர்கள். பார்வைக் குறைவோ இன்மையோ ஏற்படாமல் தடுக்க வறுமையையும் சத்துப் பற்றாக்குறையையும் ஒழித்தாக வேண்டும். ஆனால் நவீன அறிவியலின் வளர்ச்சியால் 25 லட்சம் பேருக்கு பார்வை தரமுடியும் என்றால் அதை செய்யமுடியாமல் தடுப்பது என்ன ?
கண் தானம் செய்ய இந்தியர்கள் அதிகமாக முன்வராத ஒரே காரணம்தான். இனவெறியில் சிக்கியிருக்கும் ஸ்ரீலங்காவில் கண் தானம் பிரும்மாண்டமாக நடக்கிறது. தங்கள் தேசத் தேவையைப் போல பத்து மடங்கு கண்களை அவர்கள் இதர நாடுகளுக்கு தானமாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள். தானங்களிலேயே மிகவும் சுலபமான தானம் கண் தானம். ஏனென்றால் நம் வாழ்க்கை முடிந்தபிறகு மட்டுமே செய்யக்கூடிய தானம் அது. தானம் செய்ததால் நம் வாழ்க்கை துளியும் பாதிக்கப்படமுடியாத தானம் அது. ஆனாலும் ஏன் இங்கே கண் தானம் அதிகம் நிகழவில்லை ? இரண்டு காரணங்கள் உள்ளன.
முதல் காரணம் மிகவும் சோகமானது. பலரும் கண் தானம் தருவதாக சொல்லிவிட்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்களே தவிர, இறந்தபிறகு இருந்து தாங்களே அதைச் செய்யமுடியாத நிலை இருப்பதுதான் சோகம். வாரிசுகளுக்கும் உறவினர்களுக்கும் இது பற்றி சொல்லி வைத்திருப்பது அவசியம். என்னைக் கேட்டால், 'நான் இறந்த பிறகு உடனடியாக என் கண்களை மருத்துவமனைக்கு அளிப்பது வாரிசின் பொறுப்பு. அதைச் செய்யத் தவறினால், வாரிசு உரிமையே ரத்தாகிவிடும்' என்று எழுதி வைத்து விடலாம்.
இரண்டாவது காரணம் மதமான பேய் நம்மைப் பிடித்திருப்பதுதான். அண்மையில் கூட சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் என்பவர் சக்தி விகடன் ஆன்மிக இதழில் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருந்த பதிலைப் படித்துவிட்டு என் ரத்தம் கொதித்தது.
''ஒருவரின் உடலுறுப்பை இன்னொருவருக்குப் பயன்படுத்துவது நமது சாஸ்திரத்துக்கு விரோதமானது.'' என்கிறார் இந்த சாஸ்திர 'அறிஞர்'. அவரே மருத்துவ அறிஞர் போல, '' கண்ணை வாங்கியவர் அவரது இயல்பான பார்வையைப் பெறமுடியும் என்பது பொய்'' என்கிறார்.
இப்படிப்பட்ட அர்த்தமற்ற நம்பிக்கைகள் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால், மெத்தப் படித்தவர்கள் மனங்களிலும் தொடர்ந்து ஆழமாக விதைக்கப்பட்டிருப்பதுதான் கண் தானம் இங்கே பரவாமல் இருப்பதற்குக் காரணம். சாஸ்திர விரோதம் என்று எதையெடுத்தாலும் சொல்லுபவர்கள் எல்லா காலங்களிலும் இருப்பார்கள். அப்படித்தான் ஒரு காலத்தில் கடல் கடந்து போவது சாஸ்திர விரோதம் என்றார்கள். ஆனால் கடல் கடந்து போன காந்தி வந்துதான் நம்மை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேன்டி வந்தது. கடல் கடந்து சென்று டாலர் சம்பாதிக்க, இன்று எந்த சாஸ்திரிகளும் தங்கள் பிள்ளைகளைத் தடுப்பதில்லை. கடல் கடந்து சென்று படித்த டாக்டர்கள்தான் பரமாச்சாரியார்களுக்கே கண் ஆபரேஷன் செய்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.
ஒரு சக மனிதனின் துயரத்தைத் துடைக்க விடாமல் ஒரு சாஸ்திரம் தடுக்குமானால், அந்த சாஸ்திரத்தைத்தான் மாற்றி எழுத வேண்டுமே தவிர, மனித நேயத்தை அல்ல. அதனால்தான் ஸ்மிருதிகள் பற்றி தன் கவிதையிலே பாரதி சொன்னான் -''மன்னும் இயல்பின அல்ல. இவை மாறிப் பயிலும் இயல்பின ஆகும். காலத்திற்கேற்ற வகைகள் அவ்வக் காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாம். எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை ! ''
ஆனால் எந்த நாளும் நிலைத்திடும் மனித நேயப் பார்வை இருக்க முடியும். ஊனப் பார்வை, ஞானப் பார்வை என்று பார்வையை இரு வகைப்படுத்தியிருக்கிறது நமது தத்துவ மரபு. புறக் கண்ணால் காண்பது ஊனப் பார்வை. அகக்கண்ணால் அறிவதே ஞானம். அதை ஏற்படுத்தவே மதமும் ஆன்மிகமும் மனிதனால் உருவாக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் மனித மனத்தை ஞானப்படுத்தாமல் ஊனப்படுத்தும் குருமார்கள் கையிலே மதங்கள் சிக்கிக் கொண்டன. நமக்குத் தேவை மதம் அல்ல. மானுடம். ''வாடுகிற பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய'' வள்ளலார் மனம். அந்த மனம் நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாருக்கும் ஏற்படுமானால் , என் கண்ணாடியின் பொன்விழாவின்போது, கண் தானம் பற்றிப் பேச வேண்டிய தேவையில்லாமல் போய்விடும். உலக முழுமைக்கும் நம் மூளைகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நாம், ஸ்ரீலங்கா போல நம் பார்வையை அன்று ஏற்றுமதி செய்வோம்.
(ஈரோடு லயன்ஸ் சங்க வெளியீட்டான பாப் கார்ன் - நவம்பர் 2006.)
|