Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. அன்றே சொன்னார் அண்ணா!

2. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...

3. தாதா கண்ணில் காந்தி!

4. சர்ச்சைக்குரிய உறவுகள்!

5. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை?

6. அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

7. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்?

8. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்!

9. தலைவர்களே பதில் சொல்லுங்கள்!

10. சில மத மாற்றங்கள்...

11. நட்சத்திரங்களும் யதார்த்தமும்

12. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்

13. கண்ணாலே நான் கண்ட கனவு...

14. சதாம் ஹுசேனும் நாமும்!

மனிதன் கேள்வி - பதில்கள்

***********

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!: ச. தமிழ்ச்செல்வன்

கதையல்ல நிஜம்: பாஸ்கர் சக்தி

வரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்:
அ. ராமசாமி


பண்பாடு - கலாச்சாரம்:
கு.சித்ரா


‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’:
தா.சந்திரன்


ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்:
அ. ராமசாமி


விநாயகர் அகவல்:
கு.சித்ரா


‘தி, போஸ்ட்மேன்’ இத்தாலிய திரைப்படம் ஓர் அறிமுகம்:
தா.சந்திரன்


ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com
கட்டுரை
ஞாநி

ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்!

வார்டு கவுன்சிலர் பதவிக்கு வரலாறு காணாத வன்முறை ஒரு பக்கம்... சொந்தமாக வழக்கறிஞர்கூட வைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடிய 'பயங்கரவாதி' அஃப்சலைத் தூக்கிலிட்டாலொழிய சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியும் திருப்தியடையாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கும் விசித்திரம் இன்னொரு பக்கம். நம்மைச் சுற்றி ஏன் இப்படி ஒரு வன்முறைச் சூழல் நிலவுகிறது என்ற ஆதங்கத்தைத் தொலைபேசியில் பகிர்ந்துகொண்டபோது, 'இதற்கு நடுவிலேதானே அமிஷ்களும் இருக்கிறார்கள்' என்றார் அமெரிக்க வாசகர் அருளாளன். இந்த மாதம் அமிஷ்கள் செய்த காரியத்தை அறிந்தபோது, மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அது என்ன என்று சொல்வதற்கு முன்னால், அமிஷ்கள் யார் என்று பார்ப்போம்.

'மின்சாரத்தை உபயோகிக்க மாட்டோம்; கார், பஸ், டெலிபோன், டெலிவிஷன் எதுவும் வேண்டாம்; பழைய குதிரை வண்டியே போதும்; ஆடம்பர உடைகள் கூடாது; அரசாங்கத்திடமிருந்து எந்த நிதி உதவியும் பெற மாட்டோம்; இயற்கைக்கு எதிராகப் போராடும் இன்ஷூரன்ஸ் கூடத் தேவையில்லை; ராணுவத்திலோ, போலீஸிலோ, அரசு உத்தியோகங்களிலோ சேரவே மாட்டோம்; விவசாயமும், கைவினைப் பொருள்கள் தயாரிப்பதும் எங்களுக்குப் போதும்...' என்றெல்லாம் இந்த 2006-லும் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டு, அதன்படியே வாழ்ந்து வருபவர்கள் அமிஷ்கள். அதுவும், அல்ட்ரா மாடர்ன் அமெரிக்காவில்!

ஜெர்மனியில் உதயமாகி, அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த ஒரு மைனாரிட்டி கிறிஸ்துவப் பிரிவின் பெயர்தான் அமிஷ். 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த இந்த அமிஷ் கிறிஸ்துவர்களின் மதக் கோட்பாடு- எளிமை! அடக்கத்தையும், சரணாகதியையும் பின்பற்றுவதுதான் அமிஷ் கிறிஸ்துவம். எல்லாமே கடவுள் விருப்பப்படிதான் நடக்க வேண்டும்; அதை மீறியவர்கள் அல்ல நாம் என்பதே இவர்களுடைய சரணாகதிக் கோட்பாடு!

மனிதர்கள் ஒருவரோடொருவர் போட்டியிடக் கூடாது என்பதால், இவர்கள் தங்கள் குழந்தைகளை 'ரெகுலர்' பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. கல்வி என்பது ஒவ்வொரு மனிதரும் இன்னொருவரைச் சார்ந்தும் ஒத்துழைத்தும் வாழ வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். எனவே, இவர்கள் தமக்குள் நடத்திக் கொள்ளும் பள்ளிகளில் குழந்தைகளுக்குத் தனிநபர் போட்டிகள் கிடையாது. ஒவ்வொரு குழுவும் தன் குழுவின் முந்தைய சாதனையைத் தானே முறியடிக்க மட்டுமே போட்டியிடும். இன்னொரு குழுவுடன் கூடப் போட்டி இல்லை.

அமெரிக்காவின் 21 மாநிலங்களில், மொத்தமாக சுமார் 2 லட்சம் அமிஷ் கிறிஸ்துவர்கள் வாழ்கிறார்கள். எல்லாருமே கிராம வாழ்க்கைதான். பின்னல் வேலைப்பாடுகள், மெத்தை நெய்வது, விவசாயம் செய்வது மட்டுமே இவர்களுடைய தொழில்கள். இதர அமெரிக்கர்களுடன் சகஜமாக உறவாடினாலும், தங்கள் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் மேற்கொள்ளக்கூடிய வர்த்தகங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள்.

திருமணங்கள்கூட எளிமையானவை. மோதிரம் மாற்றுவதுகூட இல்லை. காரணம், நகைகள் ஆடம்பரமானவை என்ற கருத்துதான். அணியும் உடைகள் மங்கலான வண்ணங்களில் இருக்கும். உடைகளில் ஆடம்பர தையல் வேலைப்பாடுகள் செய்துகொள்வதில்லை. பட்டன்கள்கூட ஆடம்பரமாகக் கருதப்படும். ஆண்கள் மீசை வைப்பது இல்லை. காரணம், அது ராணுவத் தொழிலின் அடையாளமாம்.

மதத்தில் ஞானஸ்நானம் செய்வதுகூடக் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. பெரியவனான பிறகு, அவர் விருப்பத்தின் பேரில் தான் ஞானஸ்நானம் செய்விக்கப்படும். மத குருமார்களைச் சமூகம் ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுக்கும். தேர்வானவர் அவரது வாழ்நாள் முழுவதும் மத குருவாக பணியாற்றலாம்.

குழந்தைகளின் கல்வி என்பது ஓரளவுதான் ஏட்டுப்படிப்பு; கைவேலைகள் கற்றுத் தருவதும் சேர்த்தே நடக்கும். நவீன தொழில் நுட்பங்களை அதிகம் பயன்படுத்துவது இல்லை. உழுவதற்கு டிராக்டர் கிடையாது; ஏர் பூட்டிய குதிரைகள் தான். குடும்பக் கட்டுப்பாட்டுமுறைகள் கடவுளின் விருப்பத்துக்கு எதிரானவை என்பதால் பின்பற்றப்படுவதில்லை.

கிராமத்தில் யாரேனும் தவறோ குற்றமோ செய்தால், முதலில் அவரிடம் இரண்டு பெரியவர்கள் சென்று அறிவுரை சொல்வார்கள். அடுத்த கட்டமாக, ஊர் முன்னால் வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். திருந்தாவிட்டால், ஊர் அவர்களைச் சில வாரங்களுக்குத் தள்ளி வைத்துவிடும். இதுவே மிகக் கடுமையான தண்டனை. அமிஷ் வாழ்க்கைச் சூழலைப் பின்னணியாகக்கொண்டு உருவாக்கப்பட்ட பல திரைப்படங்களில் ஒன்றான 'விட்னஸ்' ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.

இப்படித் தீவு போல தங்களைப் பிரித்துக்கொண்டு அமைதியாக வாழும் அமிஷ் கிராமம் ஒன்றில், இந்த மாத ஆரம்பத்தில் ஒரு கொடிய வன்முறை நிகழ்ச்சி நடந்தது. வன்முறை செய்தது அமிஷ் அல்ல; அதற்கு இரையானவர்கள் அமிஷ் சிறுமிகள். பென்சில்வேனியா மாநிலத்தில், நிக்கல்மைன்ஸ் என்ற அமிஷ் கிறிஸ்துவ கிராமத்துக்குப் பக்கத்து ஊரில் வசிக்கும் பால் வண்டி டிரைவரான சார்லஸ் கார்ல் ராபர்ட்ஸ் என்பவன் கிராமப் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் பத்து சிறுமிகளைப் பிணைக் கைதிகளாக்கினான். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். பள்ளிக் கூடம் என்பது ஒரே ஒரு அறைதான். அறைக்குள் தாழிட்டுக்கொண்ட ராபர்ட்ஸ், அங்கிருந்து தன் மனைவியுடன் போனிலும் பேசினான். சிறுமிகளை பாலியல் வன்முறை செய்யப் போவதாகச் சொன்னான் (ஆனால், செய்யவில்லை). பள்ளி ஆசிரியை போலீஸில் தெரிவித்ததும், போலீஸ் வந்தது. ராபர்ட்ஸை வெளியே வரும்படி எச்சரித்தது.

எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு ராபர்ட்ஸ் பத்து சிறுமிகளை (6 முதல் 13 வயது வரை) பின்னந்தலையில் சுட்டான். ஐந்து பேர் இறந்தார்கள். ராபர்ட்ஸ் தன்னையும் சுட்டுக் கொண்டு செத்தான். கொலை செய்ய வருவதற்கு முன்பு, ராபர்ட்ஸ் தன் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டுத்தான் வந்திருக்கிறான். வீட்டில் தற்கொலைக் கடிதங்களும் வைத்துவிட்டு வந்திருக்கிறான். பல வருடங்களுக்கு முன் இரு குழந்தைகளை தான் பாலியல் வன்முறை செய்தது தன்னை உறுத்துவதாக அதில் சொல்லியிருக்கிறான். ஆனால், அமிஷ் சிறுமிகளை ஏன் கொன்றான் என்று புரியவில்லை. இந்தக் கொடூரமான நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த அமிஷ் சிறுமிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட அந்தக் கிராமவாசிகள் என்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம்.

ராபர்ட்ஸை மன்னிப்பதாகச் சொன்னார்கள்! அவனுடைய இறுதிச்சடங்கில் வந்து கலந்துகொள்ளலாமா என்று அவன் மனைவியிடம் கேட்டு அனுப்பினார்கள். நிராதரவாகிவிட்ட அவளுக்கும், அவளது குழந்தைகளுக்கும் உதவுவதற்காக நிதி திரட்டத் தொடங்கினார்கள். ராபர்ட்ஸின் இறுதிச் சடங்கில் 40 அமிஷ்கள் பங்கேற்றார்கள்.

அமிஷ்களுடைய மதப் பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், வறட்டுத்தனமும் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். நம்முடைய வன்முறை வாழ்க்கை முறையில் அவர்களுக்கும் உடன்பாடு இல்லை என்பதை நிக்கல்மைன்ஸ் நிகழ்ச்சி மௌனமாக, ஆனால், உறுதியாகச் சொல்கிறது. புஷ்ஷுக்குக் கிறிஸ்துவைத் தெரியவில்லை; அமிஷ்களுக்குத் தெரிந்திருக்கிறது. அமிஷ்களுக்கு காந்தியைத் தெரியாது; நமக்குத் தெரியும்.

காந்தி சொன்ன வாசகம் என் முன்னே கம்ப்யூட்டர் திரையில் ஸ்க்ரீன் சேவராக ஒளிர்கிறது... பழிக்குப் பழியாக ஒரு கண்ணுக்கு மறு கண்ணைப் பிடுங்கினால், மொத்த உலகமும் குருடாவதுதான் மிச்சம். இது வெறும் ஸ்க்ரீன் 'சேவர்' மட்டுமல்ல!

இந்த வாரப் பூச்செண்டு!

தன் 60-வது வயதில் முதல் படத்தை இயக்கி இருக்கும் சித்ரா பலேகருக்கு, நடிகர் அமோல் பலேகரின் முன்னாள் மனைவியான சித்ரா, எழுத்தாளர் மகாஸ்வேத தேவியின் சிறுகதையை மராத்தியில் 'மாட்டி மாய்' என்ற தலைப்பில் இயக்கியிருக்கிறார். கதாநாயகி நந்திதா தாஸ்.

இந்த வார குட்டு!

இன்னமும் தங்கள் கட்-அவுட்டுக்கு பால், பீர் அபிஷேகங்கள் செய்துகொண்டு இருக்கும் மனவளர்ச்சியற்ற ரசிகர்களை மௌனமாக ஆதரித்துக்கொண்டு இருக்கும் நடிகர்களுக்கும், இதில் குளிர்காயும் தயாரிப்பாளர்களுக்கும்!

இந்த வாரப் புதிர்!

குடித்துவிட்டு ஆண்களைக் கிண்டல் செய்யும் சில பெண்களைப் பிடிப்பதற்காக எந்த நகரத்தில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு இருக்கிறது?

1.ஜெய்ப்பூர்
2.கொல்கத்தா
3.மும்பை
4.பெங்களூர்

மேற்கு வங்கத் தலைநகரமான கொல்கத்தாவில்தான்! அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்த நவராத்திரி விழாவின்போது, பல இடங்களில் சில பெண்கள் குடித்துவிட்டு ஆண்களிடம் வம்பு செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கொல்கத்தா போலீஸின் மகளிர் பிரிவு துணை கமிஷனர் சுப்ராஷீல் தெரிவித்துள்ளார்.

(ஆனந்தவிகடன் 1-11-2006)Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com