 |
ஞாநி
கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...
1. மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப் பணத்தில், தமிழக அரசு இலவச கலர் டி.வி. வழங்குவது சரியா?
காதலிலும் யுத்தத்திலும் ஜெயிக்க எது செய்தாலும் சரிதான் என்பது போல, தேர்தல் அரசியலுக்கும் இப்போது ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் இன்னும் 90 லட்சம் குடும்பங்களுக்குக் கழிப்பறைகள் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலின்போது, யாராவது அதை வாக்குறுதியாக வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
2. கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதலமைச்சர் பதவிக்கு வரும் சமயங்களில், சினிமா துறை சார்பில் பிரமாண்டமான பாராட்டு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடத்துவது ஏன்?
மிகவும் அருவருப்பான தமிழக அரசியல் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. பாராட்டு விழாவின்போது, கலை நிகழ்ச்சி என்ற பெயரில், ஆபாசமான அசைவுகளுடன் நடன நிகழ்ச்சிகளையும், காது கூசும் அளவுக்குப் பொய்யான புகழுரைகளைச் சிலர் மனப்பாடம் செய்து வந்து ஒப்பிப்பதையும் மூன்று, நான்கு மணி நேரம் உட்கார்ந்த இடத்தில் ஆடாமல், அசையாமல் பார்வையாளராக இருந்து பார்க்கிறார்கள் நமது முதலமைச்சர்கள். இதே போல அத்தனை மணி நேரம் ஒரு கல்வியாளரோ, ஒரு விஞ்ஞானியோ... அட்லீஸ்ட் ஒரு குடிமகனே(ள) மனம் விட்டுச் சொல்வதைக் கேட்க முதலமைச்சர்கள் தயாராக இருந்தால், தமிழகமே வாழும் சொர்க்கமாக மாறிவிடும்.
சினிமாக்காரர்களில்கூட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கொட்டகையாளர்கள் ஆகியோர்தான் கேளிக்கை வரி, மான்யம், படப்பிடிப்புக் கட்டணம் போன்ற அரசு சலுகைகளை எதிர்பார்த்து, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். பல நடிகர், நடிகைகள் விருப்பம் இல்லாமல் கட்டாயத்தின் பேரில்தான் இதில் பங்கேற்கிறார்கள்.
மக்களிடம் தங்களைவிடப் பிரபலமாக இருக்கும் சினிமா முகங்கள், தங்களைப் பாராட்டுவது தமது மக்கள் செல்வாக்கை உயர்த்தும் அல்லது சரியவிடாமல் தடுக்கும் என்றெல்லாம் அரசியல்வாதிகள் நம்பிக் கொண்டு இருந்தால், ரொம்பப் பரிதாபம்தான்! அடுத்து வரும் ஆட்சி மாற்றங்களே இதற்கு நல்ல சாட்சி!
இந்தத் தடவை, சினிமா உலக முக்கியஸ்தர்கள் கலைஞரைப் புகழும் நிகழ்ச்சியை சன் டி.வி. ஒளிபரப்பிய பிறகு, சென்ற முறை ஜெயலலிதா முதல்வரானபோது இதே முக்கியஸ்தர்கள் புகழ்ந்ததை ஜெயா டி.வி. மறு ஒளிபரப்பு செய்து உதவ வேண்டும் என்றும்... அதற்கடுத்த நாளே, இதற்கு முந்தைய தடவை கலைஞர் முதல்வரானபோது போடப்பட்ட ஜால்ராக்களை சன் டி.வி. மறு ஒளிபரப்பு செய்து நம்மையெல்லாம் உய்விக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
3. கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயின்கள் ஏன் 'குடும்பப் பெண்கள்' ஆகிவிடுகிறார்கள்? நடிப்பதை ஏன் நிறுத்திவிடுகிறார்கள்? தொடர்ந்து நடித்தால் என்ன?
கல்யாணம் வரை நடிகைகள் 'கனவுக் கன்னி'களாக இங்கே ஆக்கப்பட்டு இருப்பதுதான் இந்த அபத்தத்துக்குக் காரணம். இந்த விசித்திரம் வேறு எந்தத் துறையிலும் இந்த அளவுக்கு இல்லை. கம்ப்யூட்டர் இன்ஜினீயர் மாலதியோ, பயோ டெக்னோகிராட் ஆயிஷாவோ, ஐ.பி.எஸ். அதிகாரி எலிசபெத்தோ, கணக்கு டீச்சர் மலர்விழியோ திருமணத்துக்குப் பின் வேலையை ராஜினாமா செய்வதில்லை. ஆனால், ஹீரோயின்கள் ராஜினாமாவில் கையெழுத்து போட்ட பின்னர் தான், கழுத்தில் தாலி ஏறுகிறது.
நடிப்பையும் ஒரு வேலையாக, ஆபீசுக்குப் போகிற விஷயமாகப் பெண்கள் விஷயத்தில் மட்டும் நம் சமூகம் இன்னும் பார்க்கக் கற்றுக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம், சினிமாவை வணிக ரீதியில் ஜெயிக்க வைப்பதற்காகக் காலம்காலமாக நடிகைகளைக் கனவுக் கன்னிகளாக ரசிகர்கள் மனதில் பதியவைக்கும் உத்தியை சினிமா உலகம் தீவிரமாகப் பின்பற்றி வருவதுதான். திருமணமாகி விட்டால் ரசிகர்களிடம் இந்தக் கவர்ச்சி போய்விடும், மார்க்கெட் சரிந்துவிடும், வசூல் குறைந்துவிடும் என்ற சூழலையும் சினிமா உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
இரண்டாவது காரணம், பெண்ணுடைய உடலை அவளுக்குச் சொந்த மானதாகப் பார்க்காமல், இன்னமும் ஆணுக்குச் சொந்தமான பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வை! நடிப்புத் தொழிலில் உடலைத் தொட்டு நடிக்க வேண்டிய சூழல் இருப்பதால், திருமணத்துக்குப் பின் தனக்குச் சொந்தமான மனைவியின் உடலை வேறு ஆண் நடிப்புக்காகக்கூடத் தொட்டுவிடக் கூடாது என்ற உடைமையாளர் மனோநிலை இங்கே நிலவுகிறது. நர்ஸைப் போல நடிகையையும் கருதும் பக்குவம் வரவில்லை.
அதே சமயம், பெண்ணின் உடல் தான் ஆணுக்குச் சொந்தமானது; ஆணின் உடல் பெண்ணுக்குச் சொந்தமானது அல்ல. அது அவனுக்கே சொந்தமானது. அதனால்தான், திருமணத்துக்குப் பின் எந்த ஹீரோவும் நடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று சொல்லும் உரிமை ஹீரோக்களின் மனைவிகளுக்கு இல்லை.
நடித்தது போதும், இனி குடும்பப் பொறுப்புதான் என்று சில பெண்கள் தாமாகவே முடிவு செய்யவும் காரணங்கள் உண்டு. படிப்பு, அலுவலகம் போன்ற சராசரி வாழ்க்கை இல்லாமல் மிகச் சிறிய வயதிலேயே கவர்ச்சி உலகத்தில் தள்ளப்பட்டதால் ஏற்படும் அலுப்பு ஒரு காரணம். அதைவிட முக்கியமானது, குடும்பம் என்பது பெண்ணின் பொறுப்பு என்ற கருத்து வேரூன்றியிருப்பது. திருமணத்துக்குப் பின் உன் வேலையை என்ன செய்யப் போகிறாய்? என்ற கேள்வியை எந்த ஆணிடம் நம் சமூகத்தில் கேட்டாலும், அது அபத்தமாகக் கருதப்படும். அதே கேள்வியை வேலைக்குச் செல்லும் பெண்ணிடம் கேட்காமல் விட்டால் தான் தப்பு என்கிற நிலைமையும் இங்கு உண்டு.
காரணம், குடும்பத்துக்குப் பொறுப்பு பெண்தான் என்று நினைப்பதே ஆகும். அதனால்தான் ரிசர்வ் வங்கி கவர்னராக ஒரு மைதிலி வந்தால்கூட, அவரிடம் பத்திரிகை பேட்டியில் 'எப்படி வீட்டுப் பொறுப்பையும் சேர்த்துச் சமாளிக்கிறீர்கள்?' என்ற கேள்வி தவறாமல் கேட்கப்படுகிறது. 'இப்போதும் என் கணவருக்கும், என் குழந்தைகளுக்கும் என் கையால் சமைத்த வெண்டைக்காய் பொரியல்தான் பிடிக்கும்' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் மைதிலியும் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னராக வரும் ரங்கராஜன்கள் வெண்டைக்காய் பொரியல் பற்றிப் பேசத் தேவையில்லை. இந்த ஆண் சார்ந்த அணுகுமுறையில் மிக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சினிமா உலகின் கனவுக் கன்னிகள், அவ்வளவுதான்!
இந்த வார புதிர்:
வேலை வாய்ப்பு தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களில் மிக அதிகமானவர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எந்த மாநிலத்திலிருந்து அதிகம் செல்கிறார்கள்?
1. தமிழ்நாடு
2. கேரளா
3. ஆந்திரப் பிரதேசம்
பதிலை எளிதாக யூகித்திருப்பீர்கள், கேரளாதான் என்று! ஆனால், கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்... முதல் இடத்தில் இருக்கும் கேரளாவுக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எண்ணிக்கை வித்தியாசம் வெறும் 8,000 பேர்தான். கேரளா - 1 லட்சத்து 25 ஆயிரம் பேர். தமிழ்நாடு - 1 லட்சத்து 17 ஆயிரம் பேர்.
(ஆனந்தவிகடன் 1-10-2006)
|