 |
ஞாநி
சர்ச்சைக்குரிய உறவுகள்!
ஒரே விஷயம் பற்றிய 3 கேள்விகள் இந்த வாரம்...
கேள்வி 1: இந்தியன் பீனல் கோட் செக்ஷன் 377-ஐ உடனே நீக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிக்கை வெளியிட்டிருக்கிறாராமே... அது என்ன செக்ஷன் 377..?
கேள்வி 2:- நான் ஒரு ஆண். திருமணம் செய்துகொள்ளும்படி அம்மா என்னை வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார். ஆனால், எனக்குப் பெண்களிடம் ஈடுபாடு இல்லை. எப்படி என்னைப் பற்றி அம்மாவிடம் சொல்லுவது?
கேள்வி 3: 'வேட்டையாடு விளையாடு' படத்தில், பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரை ஹோமோசெக்சுவலாகவும் காட்டியுள்ளார்களே.., இது சரியா?
முதல் கேள்வியிலிருந்தே தொடங்குவோம். அமர்த்தியா சென் மட்டுமல்ல, இன்னும் 150 பேர் ஒன்றாகக் கையெழுத்திட்டு அந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். நேதாஜியின் ராணுவத் தளபதியாக இருந்த கேப்டன் லட்சுமி, இயக்குநர்கள் ஷியாம் பெனகல், கிரீஷ் கர்னாட், இந்துஸ்தானி பாடகி சுபாமுத்கல், எழுத்தாளர்கள் விக்ரம் சேத், அருந்ததி ராய், பத்திரிகையாளர்கள் குல்தீப் நய்யார், பி.ஜி.வர்கீஸ், தெஹல்கா தருண் தேஜ்பால், வீர்சங்வி, டி.வி. செய்தியாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத், நடிகை - இயக்குநர் அபர்ணா சென் என்று பலரும் எதிர்க்கும் இந்த செக்ஷன் 377 -- செக்ஸ் சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவு.
'ஓரினப் பாலுறவு' எனப்படும் ஹோமோ செக்ஷ§வாலிட்டியை தண்டனைக்குரிய குற்றமாக இந்தியன் பீனல் கோட் சொல்கிறது. அதாவது, இரண்டு ஆண்கள் தங்களுக்குள் விருப்பப்பட்டு உறவுகொண்டாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சட்டப் பிரிவில் உள்ள வாசகங்களின் குழப்பத்தால், தன்னின உறவுகொள்ளும் லெஸ்பியன் பெண்களை இதன் கீழ் தண்டிக்க முடியாது. 1861-ல், மகாராணி விக்டோரியா காலத்தில் போடப்பட்ட சட்டம் இது. இப்போது பிரிட்டனிலேயே இந்தச் சட்டம் எடுக்கப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல, தன்னின விழைவு என்பதை ஒரு நோயாக அறிவித்துவந்த உலக சுகாதார நிறுவனமும் தன் கருத்தை மாற்றிக்கொண்டு பல வருடம் ஆகிவிட்டது. ஆண்களோ, பெண்களோ, எப்படிப்பட்ட பாலுறவைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்பது அவரவர் தனி வாழ்க்கை தொடர்பான உரிமை என்பதை இன்று உலக அளவில் மனித உரிமையாளர்கள் வற்புறுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தான் இந்தப் பிரபலங்கள் இந்தியாவிலும் 377-ஐ நீக்கக் கோரியுள்ளனர். இப்போதைக்கு இந்தப் பிரிவு, போலீசுக்கு வசூல் பிரிவு. அரவாணிகள், ஏழைத் தொழிலாளர்கள் பலரை மிரட்ட, இது பயன்படுத்தப்படுகிறது.
இன்று இந்தியாவில் மட்டும் மொத்தம் 5 கோடி ஆண்கள் தன்னினப் பாலுறவு வாழ்க்கை முறையில் இருப்பதாக, அத்தகையவர்களின் கூட்டமைப்பு கணக்கிட்டிருக்கிறது. இந்தித் திரையுலகில் மூன்று டாப் இயக்குநர்கள், பெரும் தொழிலதிபர் குடும்பங்களில் ஆறு பேர், அரசியலில் உச்சமான பதவிகளில் இருக்கும் சிலர், விஞ்ஞானிகள் எனப் பலர் இத்தகைய வாழ்க்கை முறையில் இருந்தாலும், பகிரங்கமாக அதைத் தெரிவிக்கத் தயங்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று செக்ஷன் 377. இன்னொரு காரணம், நமது குடும்ப அமைப்பு முறை.
இரண்டாவது கேள்வி எழுப்பும் பிரச்னை, குடும்ப அமைப்புடனும் செக்ஸ் பற்றிய நமது பார்வையுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. நம்முடைய விருப்பு வெறுப்புகளை வீட்டிலேயே சொல்லத் தயங்கினால், அப்புறம் தொடர்ந்து சிக்கல்தான். செக்ஸ் உறவு என்பதை இனப்பெருக்கத்துக்கும், வம்சம் தழைப்பதற்குமான ஒரு கருவியாக மட்டுமே நம் குடும்பங்கள் கருதுகின்றன. அதனால்தான் ஆண்- பெண் உறவு மட்டுமே நியாயமான உறவாக நினைக்கப்படுகிறது. அதனால்தான், திருமணமான சில மாதங்களிலேயே 'இன்னும் கர்ப்பமாக வில்லையா?' என்ற கேள்வி பெண்களை நோக்கி நாசூக்காகவும், நாசூக்கு இல்லாமலும் வீசப்படுகிறது.
எழுத்தாளர் விக்ரம் சேத்தன் அம்மா, சிநேகிதி கேப்ரியல் ஆகியோருடன் தனது 30-வது பிறந்த நாளன்று சீனாவுக்கு பிக்னிக் போயிருந்தார். அன்றிரவு ஒரே அறையில் அவரும் கேப்ரியலும் படுக்கக்கூடாது என்று அம்மா சொன்னார். 'ஒரே அறையில் இன்னொரு ஆணுடன் நான் படுத்தால், உனக்கு அதைப் பற்றிக் கவலை இருக்காது, இல்லையா?' என்று கேட்டார் விக்ரம். இப்படித்தான் பேசத் தொடங்கி, தன்னைப் பற்றி அம்மாவுக்குத் தெரிவித்ததோடு, தன் ஆண் துணைவரையும் அறிமுகம் செய்துவைத்தார் விக்ரம்.
டீன் ஏஜ் வயதில் ஆணோ பெண்ணோ தங்களுக்கு ஏற்படும் ஈர்ப்புகள், செக்ஸ் பற்றிய குழப்பங்கள் இவற்றையெல்லாம் பேசித் தெளிவுபடுத்திக்கொள்ள நம் சமூகத்தில் போதுமான வழிமுறைகள் இல்லை. பள்ளிக்கூடங்களில் நம்பிக்கைக்குரிய ஆசிரியர்களும், நம்பிக்கைக்குரிய உறவினர்களும் வழிகாட்டலாம். மனத்தடை இன்றி விவாதிக்க உதவும் விதத்தில் டெலிபோன் கவுன்சிலிங்கை விரிவாகத் தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஹோமோ செக்சுவல்களை வக்கிரமான ரேப்பிஸ்ட்டுகளாகவும் கொலைகாரர்களாகவும் மட்டும் 'வேட்டையாடு விளையாடு' படம் சித்திரிக்கவில்லை; அவர்களுக்கு அமுதன், இளமாறன் என்று தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டி, தமிழ் ஆர்வலர்களையும் கொச்சைப்படுத்த முயன்றிருக்கிறது. பாலுறவுகளைப் பொறுத்தமட்டில், சில ஆண்கள் ஒரே சமயத்தில் தன்னினப் பிரியர்களாகவும், பெண் உறவையும் விரும்புகிறவர்களாகவும் இருக்கும் வாய்ப்பு உண்டு. பெண்களும் அப்படியே! ஆனால், இவை எதுவும் பொது விதிகள் அல்ல. ஹோமோக்களும் லெஸ்பியன்களும் குற்றம் செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள் என்ற சித்திரிப்பு உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல; அத்தகையவர்களை இழிவானவர்களாக நம் சமூகம் கருதுவதன் இன்னொரு அடையாளமே ஆகும். தமிழ் சினிமா நம் சமூகத்தின் வக்கிரங்களைக்களைவதைவிட, அவற்றுக்கு உபரி தீனி அளிப்பதையே வழக்கமாகக்கொண்டு இருக்கிறது. எனவே, சட்டத்திருத்தமும் மனமாற்றமும் இங்கே அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இதுவரையில் இந்தப் பிரச்னை குறித்துப் பெரும் எழுத்தாளர்களும், படைப்பாளிகளும், அறிஞர்களும் இப்போது வெளியிட்டது போலக் கூட்டறிக்கை வெளியிட்டதில்லை என்ற நிலையில், இப்போதாவது பேசுகிறார்கள் என்பது நல்ல மாற்றம்தான். 27 வருடங்களுக்கு முன்பு இளமைத் துடிப்பில், 'பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்' என்று எங்கள் நாடகக் குழுவுக்காக ஹோமோ செக்சுவாலிட்டி பற்றி 'ஏன்?' என்ற தலைப்பில் நாடகம் எழுதி, இயக்கியிருக்கிறேன். அதே ஆண்டு, ஓரின உறவாளரான ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டு அவதிப்படுவது பற்றிய என் சிறுகதையும் பிரபல இதழில் வெளியானது. அவற்றை இப்போது திரும்பிப் பார்க்கையில், ஓரின உறவுகளை அனுதாபப் பார்வையுடன் பார்க்கவேண்டும் என்ற எளிய அணுகுமுறையே அன்றைக்குப் 'புரட்சி'கரமானதாகத் தெரிந்திருக்கிறது!
இந்த வார புதிர்:
ராணுவமே வைத்துக் கொள்ளாத நாடுகளும் உலகில் உண்டு. பரவலாகத் தெரிந்த நாடு ஸ்விட்சர்லாந்து. இந்திய வம்சாவளியினர் அதிகமாக உள்ள ஒரு நாட்டிலும் ராணுவம் கிடையாது. எந்த நாடு?
1. தென் ஆப்பிரிக்கா
2. மொரீஷியஸ்
3. மலேஷியா
மொரீஷியஸ் தீவுகளில் ராணுவம் கிடையாது. இங்குள்ள மக்கள் தொகையில் 68 சதவிகிதம் பேர் இந்திய வம்சாவளியினர். இந்தியா வில் ஆண்டுதோறும் ராணுவத்துக்குச் செலவிடப்படும் தொகை 80,000 கோடி ரூபாய்!
(ஆனந்தவிகடன் 15-10-2006)
|