 |
கு.சித்ரா
பண்பாடு - கலாச்சாரம்
சமீபத்தில் நேஷனல் ஜியாகரபி சானலில் NO BORDER (எல்லைகளற்ற) என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அமெரிக்க - தாலிபன் படைகளுக்கிடையே ஏற்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிய குடிமக்களின் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் அது.
சண்டைக்கு பயந்து, தாங்கள் காலங்காலமாய் வசித்து வந்த குடியிருப்பைத் துறந்து, பாமீர் மலைகளிலுள்ள மிகப் பழமை வாய்ந்த குகைகளில் தங்கியிருக்கும் பாவப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வை மீர் என்ற 8 வயது சிறுவனின் பார்வையிலிருந்து கூறியிருந்தார்கள்.
உலகின் மிகப் பழமை வாய்ந்த, தாலிபன்களால் தகர்த்தெறியப்பட்ட பாமீர் மலைப்பகுதியின் புத்தர் சிலைகளையும், அதையொட்டி அமைந்திருக்கும் சரித்திர புகழ் வாய்ந்த குகைகளையும், உயிருக்கு பயந்து அதில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை கழிக்க படும் சிரமங்களையும், துயரங்களையும், மிக அற்புதமாக, இயற்கையாக, படம் பிடித்திருந்தனர்.
போரில், தன் 15 வயது மகளைத் தவிர அனைத்தையும் பறிகொடுத்த ஒரு கிழவர் (60 வயது இருக்கலாம்) ஆயின். வாழ்சூழல் அவரை மிகவும் முதுமைப்படுத்தியிருந்தது. அதே போல், தன் தாயைத்தவிர அனைத்தையும் இழந்த ஒரு இளைஞன் (23 இருக்கலாம்) தாய்க்கு 50 / 55 இருக்கலாம். இவரும் தன் பெரும்பாலான பற்களையெல்லாம் இழந்து, பொக்கைவாயுடன் மிகவும், தளர்ந்து காணப்பட்டார். அவரது முக்காடிடப்பட்ட முகத்திலிருந்து, குழிவிழுந்த கண்களையும், பொக்கைவாயையும் தான் அதிகம் காணமுடிந்தது. 15 வயது மகளின் முகத்தை காணவே முடியவில்லை.
ஒரு காட்சியில் அந்த பெரியவர், இளைஞனிடம் சொல்கிறார் “இழப்பதற்கு இனி என்னிடம் எதுவுமில்லை. உன் நிலையும் அதுதான். ஆயின், உனக்கு கொடுப்பதற்கென்று எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். எனக்கு கொடுப்பதற்கென்று உனக்கு ஒரு தாய் இருக்கிறாள். என்ன சொல்கிறாய்? இளைஞன் சம்மதிக்கிறான். அவருடைய 15 வயது மகளை, இளைஞன் மணந்து கொள்கிறான். அவனுடைய தாயை இந்த பெரியவர் மணந்து கொள்கிறார். மணம் என்றால், மேளம், தாளம், தாலி, விருந்து இவற்றுடன் அல்ல. அப்படி அப்படியே ஜோடி சேர்ந்து, ஒரே குகையில் வசிக்கத் தொடங்குகின்றனர். இந்த இளஞ்ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை (8 மாத அளவில்) வயதான ஜோடிக்கு பிறந்தவன் தான் இந்த ஆவணப் படத்தின் நாயகன் மீர் (8 வயது). இந்த பெண்தானம் இருதரப்பிலும் எப்போது நடந்ததோ, . ஆனால், படத்தில், இந்த வயதளவில்தான் அனைவரும் காணப்பட்டனர்.
இது ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம், கலாச்சாரசீரழிவு, பண்பாட்டு பேரழிவு, அது, இது. இவையல்ல நான் சொல்ல வருவது. இவர்கள் நால்வருக்கும், பின்வரும் தலைமுறையினருக்கும் இடையேயான உறவுமுறை எப்படிப்பட்டதாக இருக்கும்? K.பாலச்சந்தரின் ஒரு பழைய படத்தில் வரும், “என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ” விடுகதை போன்ற முடிச்சு அது.
முடிந்த முடிவான பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. மாற்றம் ஒன்றுதான் நிலையானது. இவர்களின் உறவு நியாயமா, நியாயமற்றதா என்பதல்ல கேள்வி. ஒருவரின் வாழ்சூழல், தேவை, சந்தர்ப்பம், இவையெல்லாம் தான் மேற்சொன்ன கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தீர்மானிக்கிறது.
ஒரு சொட்டு தண்ணீருக்காகவும், ஒரு பிடி உணவுக்காகவும், எலும்பையும் முறுக்கும் குளிரிலிருந்து தப்பிக்க ஒரு போர்வைக்காகவும், உறைய வைக்கும் பனியில், உடல் விரைத்து, ரத்த ஓட்டம் தடைப்பட்டு வீங்கி வெடித்து அழுகும் கால் விரல்களை காத்துக் கொள்வதற்காக, இடிபாடிகளுக்கிடையில் தங்கள் கால்களுக்கு பொருத்தமான காலணி கிடைக்குமா என்று, பிணங்களை சர்வசாதரணமாக புரட்டி பார்க்கும் பாவப்பட்ட மனிதர்களிடம் எந்தப் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றை நாம் எடுத்து சொல்ல முடியும்? அதில் எதைத்தான் அவர்களால் ஏற்று செயல்படுத்த முடியும்?
நமக்கு சரியானதாகவும், புனிதமானதாகவும், நேர்மையாகவும் இருக்கும் எந்தவொன்றும், மற்றவர்களுக்கும் அவ்வாறே இருக்க வேண்டிய அவசியமில்லை. அதை தீர்மானிக்க வேண்டியது அவரவருடைய வாழ் சூழல் மட்டும்தான்.
- கு.சித்ரா ([email protected])
|