 |
ஞாநி
அன்றே சொன்னார் அண்ணா!
மதக் கலவரங்களைத் தூண்டி விடுவது யார்?
மதத்தை அரசியலுக்காகப் பயன்படுத்த நினைப்போர் எல்லா மதங்களிலும் உண்டு. அவர்கள்தான் தூண்டிவிடுபவர்கள்; சூழலைப் பயன்படுத்திக் கொள்பவர்கள். உதாரணமாக, பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் மலேகாவ்ன் நகர குண்டு வெடிப்புக்குப் பிறகு, உடனடியாக சிவசேனையின் 'சாம்னா' இதழில், முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் போட்ட தலைப்பு என்ன தெரியுமா? 'அவர்கள் விதைத்ததை, அவர்கள் அறுவடை செய்கிறார்கள்!' 'பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது என்பதை இப்போதாவது முஸ்லிம்கள் உணர்ந்து, தேசத்துக்கு விசுவாசமாக இனி இருக்க வேண்டும்' என்று அறிக்கை விடுகிறார் உதவ் தாக்கரே. இப்படிப்பட்ட அறிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை.
வன்முறையும் பயங்கரவாதமும் மத அடிப்படையில் நடத்தப்பட்டாலும், மதத்தின் பெயரால் நடத்தப்பட்டாலும், அதை எதிர்கொள்வது சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். வன்முறையிலும் பயங்கரவாதச் செயலிலும் ஈடுபட்டவர் எந்த மதம் என்பது முக்கியமல்ல, அவர் ஒரு கிரிமினல் குற்றவாளி என்கிற அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.
உண்மையில் எந்த மதக் கலவரமும் மத அடிப்படையில் தூண்டப்பட்டாலும், அசல் நோக்கம் மதத்தின் மேம்பாடோ, வளர்ச்சியோ அல்ல. பல உள்ளூர் பொருளாதார, சமூகக் காரணங்கள் கலந்தே இருக்கின்றன. இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில், மதக் கலவரங்கள் கிராமங்களில் நடக்கவில்லை. வளர்ந்து வரும் நகரங்கள், டவுன்கள், வியாபார நகரங்களில்தான் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றை ஆய்வு செய்தவர்கள், உள்ளூர் வணிகர்களிடையே இருக்கும் வர்த்தகப் போட்டியில் மதமும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள்.
மராட்டியத்தில், மசூதி தொழுகை சமயத்தில் குண்டுகள் வெடித்துப் பலரை பலி கொண்ட மலேகாவ்ன் நகரில் 80 சதவிகித மக்கள் முஸ்லிம்கள். பெரும்பாலோர் நெசவுத் தொழிலாளர்கள். ஆனால், சொந்தத் தறிகள் இல்லாதவர்கள். தறி உரிமையாளர்கள் பெரும்பாலும் இந்துக்கள். வறுமையும், அடிப்படை வசதிகளும் வேலை வாய்ப்பும் இல்லாத நிலைமையும் மலேகாவ்ன் போன்ற ஊர்களில் இரு மதத்து இளைஞர்களையும் திசை திருப்புகின்றன. 'சாலையோரம் வேலையற்றதுகள். வேலையற்றதுகள் நெஞ்சில் விபரீத எண்ணங்கள்' என்று அண்ணா எழுதுவார். அதே நிலைதான்! 8 லட்சம் பேர் வாழும் ஊரில் இரண்டே பொது மருத்துவமனைகள். ஒவ்வொன்றிலும் வெறும் 30 படுக்கைகள். குண்டு வெடிப்பின்போது பலர் உடனடியாக சிகிச்சை கிடைக்காததால், ரத்தம் அதிகம் வெளியேறி இறந்தார்கள்.
வறுமையில் திசை தெரியாமல் தடுமாறும் மக்களுக்கு இருக்கும் ஒரே வலி நிவாரண மருந்து சினிமாதான். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுள்ள பல சாமான்ய மனிதர்களைக்கொண்டு படு லோ பட்ஜெட்டில் படங்கள் தயாரித்து வெளியிட்ட ஒரே இந்திய நகரம், இப்போது குண்டு வெடித்திருக்கும் மலேகாவ்ன்தான். ரங்கீலா, கரன் அர்ஜுன், லகான், ஷோலே ஆகிய ஹிட் படங்களின் கதையை லேசாக மாற்றி, மலேகாவ்ன் கே கரன் அர்ஜுன், மலேகாவ்ன் கா ரங்கீலா என்று பெயர் சூட்டப்பட்டது. படத் தயாரிப்பாளர், மின்சார வாரியத்தின் லைன்மேன். ஒளிப்பதிவாளர் உள்ளூர் கல்யாண வீடியோ எடுப்பவர். நடிகர்கள்? படத் தயாரிப்புக்குப் பணம் தரும் யாரும் நடிக்கலாம். மொத்த பட்ஜெட் 30 ஆயிரம் ரூபாய் தான்! ஆளுக்கு ஆயிரம் கொடுத்து பல தினக்கூலி நெசவுத் தொழிலாளர்கள்கூட அமிதாப், அமீர்கான் பாத்திரங்களில் நடித்தார்கள். பாலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட துணை நடிகைகள் கதாநாயகிகள் ஆனார்கள். ஒளிப்பதிவாளருக்கு கிரேன், டிராலி போன்ற சாதனங்கள் எதுவும் கிடையாது. உள்ளூர் மாட்டுவண்டியே கிரேன். சைக்கிள்தான் டிராலி.
இந்தப் படங்கள் உள்ளூரில் இருந்த வீடியோ பார்லர்களில் ரெகுலர் காட்சிகளாகத் திரையிடப்பட்டு, அவை பெரும் வெற்றியும் அடைந்தன. வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடந்த மலேகாவ்ன் திரை உலகம், சமீபத்தில் மூடப்பட்டு விட்டது. காரணம், வீடியோ தியேட்டர்களுக்கு அரசாங்கம் தடை விதித்ததுதான். மலேகாவ்ன் சினிமாக்களில் மத வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. இந்து, முஸ்லிம் இருசாராரும் இந்தப் படங்களில் பங்கேற்றார்கள்!
'வந்தே மாதரம்' பாட்டு ஏன் சர்ச்சையாக்கப்பட்டது?
தாய்நாட்டுக்கு வணக்கம் கூறும் விதமாக 'வந்தே மாதரம்' என்று தொடங்கும் இந்தப் பாடல் அடிப்படை யில் மதச்சார்பற்ற பாடல் அல்ல என்பதுதான் எல்லா சர்ச்சைகளுக்கும் காரணம்.
வங்க எழுத்தாளர் பங்கிம்சந்திரர் 1881-ல் எழுதிய 'ஆனந்த மடம்' தொடர்கதையில், முதலில் இடம்பெற்ற பாடல் இது. முஸ்லிம் ஆட்சியிலிருந்து தாய்நாடான வங்கத்தை விடுவிக்கப் போராடும் இந்துச் சாமியார்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட நாவல் இது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், 1896ல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இதை முதலில் பாடினார். பாடலின் கடைசி மூன்று கண்ணிகளில், இந்துக் கடவுள்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் தாய்நாடும் ஒரே உருவமாகப் போற்றப்படுகிறார்கள். 'ஆலயந்தோறும் அணி பெற விளங்கும் தெய்விகச் சிலையெலாம், தேவி, இங்கு உனதே' என்று வரும் பாடலை உருவ வழிபாட்டிலும், பல தெய்வ வழிபாட்டிலும் நம்பிக்கையற்ற முஸ்லிம்கள் பாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறானது. இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, தாயை எவ்வளவு மதித்தாலும் தொழ முடியாது. தொழுவது என்பது உருவமற்ற ஒற்றை இறைவனுக்கு மட்டுமே உரித்தானது.
விடுதலைப் போராட்டத்தின்போது 'வந்தே மாதரம்' எழுச்சிமிக்க கோஷமாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அப்போதும் அது இந்து விடுதலை வீரர்களின் கோஷம் தான். முஸ்லிம் விடுதலை வீரர்கள் மத்தியில் 'இன்குலாப் ஜிந்தாபாத்'தும், 'அல்லா ஹூ அக்பரு'ம்தான் முக்கியமாக இருந்தன.
நம் விடுதலைப் போராட்ட வரலாற்றில், நாம் வசதியாக மறந்துவிடும் முக்கிய விஷயம் ஒன்று உண்டு. ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுந்த ஆரம்பப் போராட்டங்கள் எல்லாம் இந்து அல்லது முஸ்லிம் மத உணர்ச்சியின் அடிப்படையில் தொடங்கியவைதான். 1806-ன் வேலூர் புரட்சியும் சரி, 1857-ன் வட இந்திய சிப்பாய் கிளர்ச்சியும் சரி... முஸ்லிம், இந்து மத நம்பிக்கைகளை அந்நியரும் வேற்று மதத்தினருமான ஆங்கிலேயர்கள் இழிவுபடுத்துவதாக ஏற்பட்ட கோபத்தில்தான் தொடங்கின. தனித்தனியே ஆங்கிலேயருக்கு எதிராக இருந்த இந்து, முஸ்லிம் உணர்வுகளை ஒன்றிணைப்பதை காந்திஜிதான் சாதித்தார். ஆனால், அவரும் விடுதலைப் போராட்டத்திலிருந்து மத உணர்ச்சிகளை முற்றாக நீக்கவில்லை. மதத்தை அரசியலிலிருந்து விலக்கி வைப்பது என்ற பார்வைக்கு ஓரளவேனும் அடித்தளமாக அமைந்தது காங்கிரசுக்குள் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் நேரு, அம்பேத்கர் ஆகியோரின் அணுகுமுறைகள் தான். இன்றைய சூழலில் மத உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களை இணைக்கக்கூடிய புதிய கோஷங்களைத்தான் உருவாக்க வேண்டுமே தவிர, எந்தப் பழைய கோஷமும் கூடவே பழைய விரோதங்களையும் சேர்த்தேதான் அழைத்து வரும்!
இந்த வார புதிர்:
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பணி புரியும் ராஜேந்திரா என்கிற ஒரு ஊழியரின் சிகிச்சைக்காகக் கர்நாடக அரசு இதுவரை 13 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறது.
யார் அந்த ஊழியர்?
1. தலைமை அர்ச்சகர்
2. நாகஸ்வர வித்வான்
3. கோயில் நந்தவனத் தோட்டக்காரர்
மூவரும் அல்ல! ராஜேந்திரா ஒரு யானை. 21 வருடங்களுக்கு முன், மூன்று வருட குட்டியாக கொல்லூர் கோயிலுக்கு வந்த ராஜேந்திரா, சில வருடங்களாக மதம் பிடித்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. காட்டு முகாமுக்கு அழைத்துச் சென்று இதுவரை 13 லட்ச ரூபாய் செலவழித்தும், ராஜேந்திராவைக் குணப்படுத்த முடியவில்லை.
(ஆனந்தவிகடன் 24-9-2006)
|