 |
ஞாநி
விண்ணிலிருந்து மண்ணுக்கு - நட்சத்திரங்களும் யதார்த்தமும்
ஸ்ரீவித்யாவின் ரசிகன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள விரும்பினாலும், அப்படிச் சொல்லச் சற்றே கூச்சப்படும் அளவுக்கு ரசிகன் என்ற சொல்லைத் தமிழ் சினிமா ஹீரோக்கள் கொச்சைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ரசனை, கலை ரச்னை என்பவை மனிதனை மேம்படுத்துகிற அம்சங்கள். ரசனையற்ற மனிதர்கள் மிருகங்களுக்குக் கெட்ட பெயரைத் தேடித் தருபவர்கள்.
கலைரசனை உடைய எந்த தமிழனும் ஸ்ரீவித்யாவின் நடிப்பைப் ரசிக்காதவராக இருக்க முடியாது. கண்களின் அழகோ தோற்றப் பொலிவோ மட்டுமே ஒரு நல்ல ரசிகனுக்குப் போதுமானவை அல்ல. தமிழ், இந்திய சினிமாவில் பல பேரழகிகள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால் நடிப்பாற்றல் இல்லாததால் அவர்கள் வெறும் பொம்மைகளாக முடிந்து போனார்கள். ஆனால் ஸ்ரீவித்யா தோற்ற அழகுடன் நடிப்பாற்றலும் நிரம்பியவர்.
இளம் வயதில் இருந்ததை விட நடு வயதில் அவருடைய நடிப்பு மெருகேறியிருந்தது. ஆண்டுதோறும் அவர் ஏற்ற ஒவ்வொரு பாத்திரத்திலும் அவருடைய நடிப்பு இதற்கு மேல் இதில் செய்ய ஏதுமில்லை என்கிற மாதிரி கச்சிதமாகவும் நிறைவாகவும் இருந்தது. அபூர்வ ராகம் முதல் ஆஹா, காதலுக்கு மரியாதை , அபூர்வ சகோதர்கள் என்று எப்படிப்பட்ட பாத்திரத்திலும் ஸ்ரீவித்யா தன்னை வெகு பாந்தமாகப் பொருத்திக் கொண்டவர்.
தமிழ்ச் சமூகத்தில் அவருடைய நடிப்பாற்றலுக்கு உரிய கவனமும் பாராட்டும் , இதர பல நடிகைகளுக்கு கிடைத்ததைப் போல ஸ்ரீவித்யாவுக்குக் கிடைக்காமல் போனது ஏன் ? அதற்கு தமிழ் சினிமா சூழலின் பெருவாரியான செயற்கைத் தன்மையே காரணம். தமிழ் சினிமாவில் நிரம்பித் ததும்பி வழியும் மிகைப்படுத்தப்பட்ட கதை, மிகைப்படுத்தப்பட பாத்திரங்கள், மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்கள், மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு இவற்றுக்கு நடுவே யதார்த்தமான நடிப்பு புறக்கணிக்கப்படுவதில் வியப்பில்லை.
இந்த அம்சத்தினால்தான் தமிழகத்தை விட கேரளத்தில் ஸ்ரீவித்யா போன்ற நடிகைகள் அதிகம் மதிக்கப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. சத்யஜித் ரே, ஷியாம் பெனகல் போன்ற இயக்குநர்கள் படங்களில் ஸ்ரீவித்யா பணியாற்றியிருந்தால், அவர் ஸ்மிதா பட்டீல், ஷபனா ஆஸ்மி எட்டிய கலை உயரங்களை எளிதாக எட்டியிருப்பார்.
ஸ்ரீவித்யாவுடன் ஒரே ஒரு முறை பணிபுரியும் வாய்ப்பு எனக்கு 16 வருடங்கள் முன்னால் கிடைத்தது. (மறைந்த) எழுத்தாளத் தோழர் அறந்தை நாராயணனின் நாவலை சென்னைத் தொலைக்காட்சியின் இரண்டாம் சேனலின் முதல் டி.வி தொடராக 'விண்ணிலிருந்து மண்ணுக்கு' என்ற தலைப்பில் நான் அப்போது உருவாக்கினேன். தொடர் ஆரம்பத்தில் அதை அறிமுகம் செய்து பேசும்படி ஸ்ரீவித்யாவைக் கேட்டுக் கொண்டேன்.
காரணம் அந்தத் தொடர் ஒரு நடிகையின் வாழ்க்கை பற்றியது. ஓரளவு சாவித்திரியின் வாழ்க்கைக் கசப்புகளை அடிப்படையாகக் கொண்டது. வெளியில் கவர்ச்சிகரமான வாழ்க்கையாகத் தெரியும் கலைஞர்களின், குறிப்பாக பெண் கலைஞர்களின் வாழ்க்கை எவ்வளவு வலிகள் நிறைந்தது என்பதை அறந்தை நாராயணன் நாவலில் எழுதியிருந்தார். சினிமா உலகின் கசப்பான பக்கங்களை அறுபதுகளின் இறுதியிலிருந்தே தொடர்ந்து பதிவு செய்து வந்த ஒரே சினிமா பத்திரிகையாளர் அவர்தான்.
ஸ்ரீவித்யாவிடம் கதையை சுருக்கமாகச் சொல்லி என் அறிமுக உரையைப் படித்துக் காட்டியதும் உடனே ஒப்புக் கொண்டார். மறுநாளே அவர் வீட்டில் படப்பிடிப்பு. அவர் சொன்னபடி நான் பிராம்ப்ட் செய்யச் செய்ய, அவர் பேசினார். மறு நாளே ஒரே டேக்கில் டப்பிங் பேசினார்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் டெலிவிஷனில் தோன்றுவதற்கே சம்பளம் கேட்கும் பழக்கம் திரைப்பட நடிகர்களுக்கு இருந்தது. ஆனால் ஸ்ரீவித்யா எங்களிடம் ஒரு காசு கூடக் கேட்கவும் இல்லை. வாங்கவும் இல்லை. ஒரு தொலைக்காட்சித் தொடரை அறிமுகம் செய்து ஸ்ரீவித்யா அந்தத் தொடரின் ஆரம்பத்தில் பேசியது அதுவே முதல் முறையும் கடைசி முறையுமாகும்.
புகழின் உச்சத்தில் இருந்து திருமண வாழ்க்கையின் தோல்வியால் உடைந்து தனிமையில் வாடித் தன்னைத் தானே மெல்ல மெல்ல அழித்துக் கொள்ளும் ஒரு நடிகையின் கதையைத்தான் அவர் அன்று அறிமுகம் செய்துப் பேசினார். கதை முடிவில் சமூக அக்கறையுள்ள ஒரு வீதி நாடகக் குழு இளைஞர்களின் நட்பால் அந்த நடிகை மீண்டும் வாழ்க்கை மீது நம்பிக்கை கொள்வதாக அமைத்திருந்தது போல அசல் வாழ்க்கையில் சாவித்திரிக்கு வாய்க்கவில்லை.
ஸ்ரீவித்யாவை திருமண வாழ்க்கையின் தோல்வி முடக்கிப் போட்டாலும் சாவித்திரியைப் போல முறித்துப் போடவில்லை. கடந்த பத்தாண்டு காலமாக நடித்த படங்களில் அவருடைய கலையுணர்ச்சியை அவரும் அவரை அதுவும் காப்பாற்றி வந்திருப்பதை உணரலாம். அவரைப் புற்று நோய் முறித்துப் போட்டபோது, நிச்சயம் தனிமை, அந்த வலியைப் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் சினிமா உலகத்தில் எல்லா கலைஞர்களுக்கும் நிறையவே நண்பர்கள் இருக்கிறார்கள்; நட்பு இல்லை. 'நட்சத்திர வாழ்க்கையிலே மின்னல்களே மிச்சம். ஊரெல்லாம் புகழ்ந்தாலும் தனிமையே தினம்' என்பது என் டி.வி தொடரின் டைட்டில் சாங்.
ஸ்ரீவித்யாவின் கடைசி நாட்களில் அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கக் கூடிய மிகச் சில கேரள, தமிழகக் கலைஞர்களுக்கும் அசல் நண்பர்களுக்கும் ஸ்ரீவித்யாவின் ரசிகர்கள் எல்லாரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நன்றி.
(ஆனந்தவிகடன் 8-11-2006)
|