 |
(மனிதன் பதில்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று தளமேற்றப்படுகிறது. மனிதனின் மின்னஞ்சல் முகவரி: [email protected])
இந்த வாரக் கேள்விகள்: சந்திரன், பாஸ்கர்.
பா.ம.க-தி.மு.க மோதல் பற்றி?
வியாபார பார்ட்னர்களுக்குள் கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் அடிதடி போன்றது. பார்ட்னர்ஷிப்பையே இப்போது முறித்துக் கொண்டால் இருவருக்கும் நஷ்டம் என்ற நிலையில் வசவுகளோடு நிறுத்திக் கொண்டார்கள். அவ்வளவுதான்.
மறைந்த கன்ஷிராம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அரசியல் அதிகாரத்தில் அண்மைக்காலத்தில் தலித்துகளுக்கு ஓரளவேனும் பங்கு அதிகரித்து வருவதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் அவர்தான். பிற்படுத்தப்பட்டவர்-தலித் கூட்டணியின் வாயிலாகவோ, மேல்சாதியினர்-தலித் கூட்டணியின் வாயிலாகவோ எப்படியேனும் தலித்துகள் அதிகாரத்தில் பங்கு பெற வழி வகுக்கவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படும் உத்திகளை அவர் வடிவமைத்ததால், சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. இந்தியாவில் தேர்தல் அரசியல் என்பதே சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வதும் உருவானவற்றைப் பயன்படுத்திக் கொள்வதும்தான். அவையெல்லாம் சுயநலத்துக்கா, குடும்ப நலத்துக்கா, பொது நலத்துக்கா என்று பார்த்தால், கன்ஷிராம் நிச்சயம் சுயநல, குடும்ப நலவாதியாக இருக்கவில்லை என்பதே அவருக்குரிய பெருமை. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை இருக்கும் தேர்தலில்தான் தலித்துகள் அசல் அதிகாரத்தை அடையமுடியும். அதுவரை கன்ஷிராம் போன்றவர்களின் தலைமையும் உத்திகளும் மிக அவசியமானவை.
69 சத விகித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு எப்படி?
இட ஒதுக்கீட்டு முறையால் இழப்பை சந்திக்கும் மேல் சாதியினர் சார்பில் அவ்வப்போது இப்படிப்பட்ட வழக்குகள் எழுப்பப்படுவதில் ஆச்சரியமில்லை. இட ஒதுக்கீட்டு முறையில் இருக்கும் குறைகள் களையப்படலாமே தவிர ஒட்டு மொத்தமாக அதை தூக்கி எறியச் சொல்வது சமூக அநீதியாகவே கருதப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டின் பயன்களை அதிகரிக்க ஒவ்வொரு கட்டமாக சில நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. முதலில் முறையான சாதிக் கணக்கீடு எடுக்கப்பட வேண்டும். அப்போது 69 சதவிகிதம் என்பதே குறைவானதுதான் என்று தெரியவந்தால், அதை அதிகரிக்கத் தயங்கலாகாது. அடுத்த கட்டமாக க்ரீமி லேயர் எனப்படும் மேட்டுக் குடியினரை அந்தந்த சாதிக்கான இட ஒதுக்கீட்டில் பின்தள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்தும்போது, அது ஒதுக்கீட்டு சாதிகளுக்கு மட்டுமல்லாமால், ஓபன் கோட்டா எனப்படும் பொது இடங்களுக்கும் சேர்த்து பின்பற்றப்படவேண்டும். ஒதுக்கீட்டில் மட்டும் க்ரீமி லேயர் என்பது தவறானது. இன்னொரு கட்டமாக, சாதிச் சான்றிதழ்களில் தனி சாதிகள், உட்பிரிவுகள் பெயர்களைக் கைவிடும் கட்டம் வரவேண்டும். அதாவது முற்பட்டோர், பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்ற குறிப்புகள் மட்டுமே இடம் பெற வேண்டும். சாதி ஒழிப்பை நோக்கி இட ஒதுக்கீட்டை நகர்த்திச் செல்ல இது தேவை. இவை எல்லாம் உடனடியாக அல்ல, படிப்படியாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள். உடனடி நடவடிக்கையாக சாதிக் கணக்கெடுப்பும் அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு விகிதாசாரமும் நிர்னயிக்கப்படுவதும் மேற்கொள்ளப்படவேண்டும்.
பொதுத் தேர்வு மதிப்பெண்களைத் தெரிவிக்க யூ.பி.எஸ்.சி மறுத்து வருவது நியாயமா?
அநியாயமானது. எந்தத்தேர்விலும் விடைத்தாள் திருத்தப்பட்ட முறையும் மதிப்பெண்ணும் பகிரங்கபடுத்தப்பட்டே ஆகவேண்டும்.
சமச்சீர் கல்வி திட்டம் சரிப்பட்டு வருமா?
அரசு உயர் அதிகாரிகள், எல்லா அரசு ஊழியர்கள் ஆகியோரின் குழந்தைகள் எல்லாம் கட்டாயமாக அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்கப்படவேண்டும் என்ற சட்டம் வந்தால் ஒழிய எந்த சமச்சீர் கல்வி முறையும் இங்கே ஏட்டளவில் மட்டுமே கிடக்கும்.
முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றி?
முதலில் இரு மாநிலங்களிலும் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பி.ஜே.பி போன்ற அனைத்திந்திய கட்சிகளின் தலைவர்கள் அவரவர் கட்சிக்குள் உட்கார்ந்து இது பற்றிப் பேசத் தொடங்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியும். இது காவிரிக்கும் பொருந்தும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் பின்னணியில் இருக்கும் காங்கிரசார் யார்?
ஒரே ஒருவர்தான். சோனியா காந்தி. தொண்டு நிறுவனங்களில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஒரு சில அறிவுஜீவி களப் பணியாளர்களுக்கு சோனியாவுடன் நல்லுறவு இருப்பதனாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது.
தி.மு.க-இடதுசாரிகள் கூட்டணியை உடைக்கும் சதி திட்டத்துடன்தான் நீங்கள் தோழர் ஜீவா பற்றிய திரைப்பட முயற்சியில் இறங்கியிருப்பதாக தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடலில் இளவேனில் எழுதியிருக்கிறாரே?
எழுத்துக் கொத்தடிமையான அவர் நம்மை தொடர்ந்து அவதூறு செய்து வருபவர். வேறு எப்படி எழுதுவார்? தி.மு.கவும் இடதுசாரிகளும் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கும் முன்பாகவே, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்திலேயே, கருணாநிதி ஆட்சிக்கு வந்து பெரியார் படத்துக்கு அரசு நிதி உதவி அளிப்பார் என்றெல்லாம் யாருமே எதிர்பார்த்திருக்க முடியாத காலத்திலேயே, தோழர் ஜீவா பற்றிய படத்தை உருவாக்குவதற்கு நான் முயற்சிகளைத் தொடங்கினேன் என்பது தோழர் தா.பாண்டியனுக்கும் இன்னும் சில தோழர்களுக்கும் தெரி�� செய்பவர்களுக்கு உண்மைகள் தேவையில்லை. கற்பனைகள் போதுமானவை. தி.மு.க- இடதுசாரிகள் கூட்டணி உடைந்தால் அதற்கு கறுப்பு பேண்ட்- வெள்ளை சட்டை அணிந்த வாக்குச் சாவடி ரவுடிகளும் அவர்களை ஏவிவிட்டவர்களும்தான் காரனமாக இருக்கக் கூடுமே தவிர நான் அல்ல.
மக்களவை தேர்தலா, சட்டப்பேரவை தேர்தலா? உள்ளாட்சித் தேர்தலா? எது சுவையாக இருந்தது? ஏன்?
இதில் சுவை என்ன கிடக்கிறது? ஒரே சுவை அவலச் சுவைதான். மக்களவை தேர்தல் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது - மத்தியில் இந்துத்துவ ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டதால். சட்டப்பேரவை தேர்தல் வருத்தத்தை ஏற்படுத்தியது எந்தக் கொள்கையுமற்று அமைக்கப்பட்ட கூட்டணிகள் களத்தில் பிரதானமாக மோதிக் கொண்டதால். உள்ளாட்சித் தேர்தல் கவலையை ஏற்படுத்தியது அடிப்படை ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்படுத்தப்பட்டதால்.
கருணாநிதி ஜெயலலிதா இருவரில் ஒருவரைத்தான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் உங்கள் ஓட்டு யாருக்கு? நடுநிலை வகிக்க முடியாது.
49 ஓ என்பது நடுநிலையல்ல. இருவரையும் நிராகரிப்பதாகும். இவர்கள் இருவர் மட்டுமே பிரதானமாக நிற்கும் எந்தத் தேர்தலிலும் என் ஓட்டு 49 ஓதான்.
வைகோவுக்கு தமிழக அரசியலில் எதிர்காலம் இருக்கிறதா?
கூட்டணி பலத்தில் மட்டுமே அதிகாரத்தைப் பிடிக்க முடியும் என்ற சூழல் நிலவும்வரை வைகோ போன்ற சக்திகளுக்கும் களத்தில் நிச்சயம் இடம் உண்டு. டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் அந்த இடம் இருந்திருக்க வேண்டும். அவரே அதைத் தன் அரசியல் தவறுகளால் கெடுத்துக் கொண்டார். அதுபோல வைகோவும் கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது. வைகோவின் அரசியல் எதிர்காலம் உண்மையில் கலைஞரின் மறைவுக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும்.
மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் அண்மையில் சென்னை வந்தபோது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் இன்னலுக்கு ஆளானார்கள். இதற்குத் தீர்வு இல்லையா?
மக்களிடமிருந்து ஆள்பவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் என்ற பய-நிலையை நமது அரசியல் அடைந்து நீண்ட காலமாகிவிட்டது. பயங்கரவாதம் உலக அளவில் பெருகி வரும் நிலையில் இது இன்னும் கடுமையாகிவிட்டது. ஒரு வழி - தலைவர்கள் ஹெலிகாப்டர்களை மட்டும் பயன்படுத்துவதுதான். இன்னொரு வழி அலுவலக அறைக்குள் இருந்து கொண்டே கல்வெட்டுக்களை மட்டும் திறந்து வைப்பது. மூன்றாவது வழி, தலைவர்கள் தங்களை எளிமையானவர்களாக ஆக்கிக் கொண்டு சகஜமாக மக்களுடன் உறவாட முயற்சிப்பது. இது சில பயங்கரவாதிகளுக்கு வசதியாக போகும் என்றாலும், தொலைநோக்கில் மக்களே தலைவர்களைப் பாதுகாப்பவர்களாக அமையவும் வழி வகுக்கும். சுகமான கனவுதான். ஆனால் இப்போதைக்கு டிராஃபிக் ஜாம்தான் நிஜம்.
தங்களது கேள்விகளை மனிதனுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|